
பூகம்பம் – 44
ஒரு வாரம் கழித்து பெங்களூருக்கு கிளம்ப தயாராக இருந்தனர் புதுமண தம்பதிகள். பெண்ணவளை பேச வைக்க எவ்வளவோ முயன்று விட்டான்.. ஆனால் காவ்யாவோ பேசவே மாட்டேன் என்ற ரீதியில் அமைதியை கடைப்பிடிக்கிறாள். அது மட்டுமின்றி அவனை அருகில் வரவும் அனுமதிக்கவில்லை.
கடைசி வாய்ப்பாக காலிலும் விழுந்து எழுந்திருக்க, அப்போதும் அது என்னை பாதிக்கவில்லை என்ற ரீதியில் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாலும் உள்ளுக்குள் கமுக்கமாக சிரித்தாள்.
என்னைய இதைய விட படுத்தி எடுத்த தானே.? ஒரு வாரம் எல்லாம் உனக்கு பத்தாது.. இன்னும் உன்னைய சுத்த விடணும்.. அப்பதான் என் மனசு அடங்கும் என்று கருவி கொண்டாள்.
அவனிடம் பேச தான் இல்லை.. ஆனால் அவனுக்கு அனைத்தும் செய்வது அவளே.!! அவனை கெஞ்ச விட்டு ரசிப்பதில் இவளுக்கு ஒரு ஆனந்தம்.!
திருமணத்திற்கு முன்பே காவ்யா வேலையை விட்டிருந்ததால் கணவனுடனே கிளம்ப தயாராக இருந்தாள். அவர்களுடன் அசோக்கின் அன்னையையும் அழைத்து செல்வதாக முடிவு.
இது தான் சமயமென்று அவனின் பெரிய தமக்கையோ “அதான் அம்மாவை உன் கூட கூட்டிட்டு போறீயே.? இந்த வீட்டுல நாங்க வந்து இருந்துருக்கறோம்” என்று பேச்சை துவங்க, அவளின் எண்ணம் என்ன என்பதை அறிந்த காவ்யா பேச வந்த கணவனின் கையை அழுத்தி பிடித்து அவளே “ஏன் அண்ணி உங்களுக்கு வீடு இல்லையா.?” என்று கேட்டாள்.
“இந்த வீட்டுல எங்களுக்கும் உரிமை இருக்கு.. நாங்க இருக்க கூடாதா என்ன.? ஏய் சொல்லுடி” என்று தங்கையையும் துணைக்கு அழைத்தாள். ஆனால் அவளின் தங்கையோ “எனக்கு என் கணவன் வீடே போதும்க்கா.. இந்த வீடு தம்பிக்கு தான் சொந்தம்.. அவன் என்ன முடிவு பண்ணுனாலும் எனக்கு சந்தோஷம்..” என்று கூறி பின்வாங்கி விட்டாள்.
அவளின் கணவனும் “ஆமாங்க.. அக்கா தங்கச்சிக்கு செய்ய வேண்டிய எல்லாமே அசோக் செஞ்சுட்டான்.. இனியும் அவனை கஷ்டப்படுத்த விரும்பல.. அவனுக்கான வாழ்க்கையை அவன் வாழணும்.. அவனை நம்பி இப்ப ஒரு பொண்ணு வந்துருக்கா.. அவன் குடும்பத்தை அவன் பார்க்கணும்ல.?
இன்னும் எத்தனை நாளைக்கு அக்கா, தங்கச்சகயையே பார்த்துட்டு இருக்க முடியும்.? என் மனைவிக்கு என்னால எல்லாம் செய்ய முடியும்ங்க.. உங்க கணவனால முடியாதா.? இன்னும் மனைவியோட தம்பியை எதிர்பார்த்து தான் இருக்கணுமா.?” என்று நெற்றியடியாய் கேட்டு விட்டான்.
இதில் பெரிய தமக்கையின் கணவனுக்கு கோவம் எழுந்ததில் மனைவியை கடுமையாக முறைத்து “ஏய் வாயை வெச்சுட்டு கம்முனு இருக்க முடியாதா.?” என்று கத்த, இவனின் மனைவியும் தங்கையின் கணவனிடம் “வீடு சும்மா கிடக்குமே அதான் நாங்க வந்து இருந்துக்கலாம்னு நினைச்சு கேட்டது ஒரு தப்பா.? உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க..” என்று சமாளித்தாள்.
ஆனால் காவ்யாவோ “நாங்க ஏன் அண்ணி இந்த வீட்டை சும்மா விடணும்.? வாடகைக்கு விடலாம்னு தான் நினைச்சுட்டு இருக்கோம்..”
“வாடகைக்கு விட போறீங்களா.? என்னடா அசோக் இதெல்லாம்.?”
“ஏன்க்கா வாடகைக்கு விட்டா என்ன.? அதுல வர்ற பணத்தை வெச்சாவது உனக்கு கடனா வாங்கி குடுத்த பணத்தை அடைக்கறேன்.. நீயும் அந்த பணத்தை குடுக்குற மாதிரி தெரியல.? என்னால எத்தனை தான் சமாளிக்க முடியும்.?” என்று கேட்டு விட்டான்.
இதில் அவளின் முகம் கறுத்து விட்டது.. நான்கு வருடங்களுக்கு முன்பு ஏதோ அத்தியாவசிய தேவைக்காக தம்பியிடம் பணத்தை கேட்க, அவனோ தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கடன் தான் வாங்கி தந்திருந்தான். அந்த பணத்தில் இருந்து பத்து ரூபாய் கூட அவர்கள் தரவில்லை.. இப்போது வரை அவன் தான் அந்த கடனை கட்டி கொண்டிருக்கிறான்.
இப்படி இவனிடம் வாங்கிய பணம் எல்லாம் ஏராளம். அவனின் அன்னையும் ‘அக்கா பாவம்டா.. நம்மளைய விட்டா அவளுக்கு யாரு இருக்கா.?’ என்று கூறி கூறி அவனின் தலையை பாரத்தை அழுத்தி வைத்து விட்டார். இப்போது அவன் தான் கடனை கட்ட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறான்.
“இப்படி சொல்லி காட்டுவேனு நான் நினைக்கல.?” என்ற தமக்கையிடம் “நான் எங்க சொல்லி காட்டுனேன்.? நிதர்சனத்தை தான் சொல்றேன்..” என்று அசோக்கும் கூறிட, இருவருக்கும் சண்டை வந்து விடுமோ.? என்ற பயத்தில் அவர்களின் அன்னையோ “அக்கா தானேப்பா இங்க வந்து இருந்துட்டு போகட்டுமே.?” என்று மகளுக்கு ஆதரவாக பேசிட, காவ்யாவே அவரை எரிச்சலுடன் பார்த்தாள்.
அசோக் பதிலுரைக்கும் முன்பே “உங்க பையனுக்கு என்ன சேர்த்து வெச்சுருக்கீங்க.?” என்று காவ்யாவே மாமியாரிடம் கேட்டிட, மருமகளிடம் இக்கேள்வியை எதிர்பார்க்காதவர் அதிர்ந்து முழித்தார்.
மகளுக்கு துணையாக அவளின் தந்தையும் “என்னம்மா நினைச்சுட்டு இருக்கீங்க.? உங்க பையனுக்கு இருக்கறது இந்த வீடு மட்டும் தான்.. அதையும் உங்க பொண்ணை வந்து இருந்துக்க சொல்றீங்க.? உங்க பொண்ணு உங்க வீட்டுல இருக்கற மாதிரி நானும் என் பொண்ணையும் மாப்பிள்ளையையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா.?
பொண்ணு தான் உசத்தியா போய்ட்டாளா.? உங்க பையனை நம்பி என் பொண்ணை குடுத்துருக்கேன்.. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா.? கூட பிறந்தவங்களுக்கு செய்ய வேண்டிய அத்தனையும் செஞ்சுட்டான்ல.? இதுக்கு அப்பறமும் உங்க பையன் தலைலயே எல்லாத்தையும் ஏத்தி வெக்கறது நல்லாவா இருக்கு.?” என்று எகிறினார்.
கணவன் தவறாக நினைத்து கொள்வானோ.? என்று பயந்து காவ்யா அவளவனை காண, அவனோ சாதாரணமாக “உங்க பொண்ணு தான் உங்களுக்கு உசத்தினா அவங்க கூடவே போய் இருந்துக்கங்க.. இதுக்கு மேல என்னால பாரத்தை சுமக்க முடியாது.. தாய்மாமனா செய்ய வேண்டியதை சரியா செய்வேன்.. அவ்ளோ தான் என்னால முடியும்” என்றான் அசோக்கும் தெள்ளந்தெளிவுடன்.!
அவனும் எவ்வளவு தான் சமாளிப்பான்.? அவனுக்கென்று ஒரு வாழ்வை வாழ அவன் ஆசைப்படவே கூடாதா என்ன.? அவன் அன்னையை நினைக்க நினைக்க எரிச்சல் தான் எழுந்தது அவனுக்கு.!
தம்பியின் கூற்றில் “ம்மா இப்ப அவனுக்கு நம்ம எல்லாம் தேவைப்படாது.. மத்தவங்கள பேச விட்டு வேடிக்கை பார்ப்பேன்.. நீ பேசி ஏன் உன்னைய தாழ்த்திக்கற.?” என்றவளை கண்டு கொள்ளாமல் “நீ திருந்தவே மாட்டியாமா.? இவளை மட்டும் தான் நீ பெத்தீயா.? என்னையும் தம்பியையும் வேற எங்கையாவது இருந்து எடுத்துட்டு வந்தீயா.?
எப்ப பார்த்தாலும் அவளுக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருக்க.? இவன் வாழவே வேணாமா.? பேசாம நீ அவ கூடவே போய்ரு.. நீ அவளுக்காக தான் யோசிப்ப.. ஆனா உன்னைய இவன் பார்க்கணுமா.? உன் அருமை மகளே பார்த்துக்கட்டும்” என்று இளைய மகளும் அன்னையிடம் எகிறினாள்.
“அக்கா என்ன பேசற நீ.?” என்று அசோக் பதற, “நீ சும்மா இருடா.. நானும் பலதடவை சொல்லிட்டேன்.. ஆனா அம்மா திரும்ப திரும்ப அந்த தப்பை தான் பண்ணுது.. அவ கிட்ட இருந்து படட்டும்.. அப்ப தான் உன் அருமை புரியும்” என்று தம்பியை அடக்கினாள்.
பின்பு காவ்யாவின் தந்தையிடம் “மாமா நீங்களே இந்த வீட்டை வாடகைக்கு விடற வேலையை பார்த்துக்கங்க.. இது வரைக்கும் அசோக் எங்களுக்கு செஞ்சது போதும் மாமா.. இனி அவன் வாழ்க்கையை பார்ப்பான் மாமா.. அம்மா பேசுனதுக்கு மன்னிச்சுருங்க” என்று தம்பியின் மாமனாரிடமும் மன்னிப்பு கேட்டாள்.
“அம்மாடி நான் உங்களுக்கு செய்யறதை எல்லாம் எதுவும் சொல்லலமா.. உங்க அம்மா அப்படி சொன்னதும் பட்டுனு கோவம் வந்துருச்சு” என்று அவரும் கூற, “அது தப்புத்தான் மாமா.. தம்பி கிளம்புனதும் அம்மாவும் அவகூடவே கிளம்பிருவாங்க.. அப்பறம் வீட்டை வாடகைக்கு விட்டுருங்க.. பணத்தையும் அவன்கிட்டவே குடுத்துருங்க..
என் அம்மாவை நம்பி எதையும் குடுத்தராதீங்க.. பெரிய மகளுக்கு அத்தனையும் தாரைவார்த்து குடுத்துட்டு வந்துரும்” என்றவளின் பார்வை அன்னையை பொசுக்கவே செய்தது.
இளைய மகளின் பேச்சில் பெற்றவளின் மனம் காயப்பட்டு போனது. மகளையே குற்றம் சுமர்த்தும் பார்வை பார்த்திட, அதற்குள் அவரின் பெரிய மருமகனோ “ஏய் நீ எதையும் கேட்டு கிழிக்க வேணாம்.. முதல்ல கிளம்பு” என்று மனைவியை அதட்டி அப்போதே இழுத்தும் சென்றார். இல்லையென்றால் மாமியாரை தன் தலையில் கட்டி விடுவார்களோ.? என்ற பயத்தில்.!
மருமகனின் செயலில் இவர் விக்கித்து நிற்க, ‘பார்த்துக்கோ’ என்பதை போல் முறைப்பை குடுத்த இளைய மகளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை தாழ்த்திட, “நீ பேச வேண்டிய இடத்துல பேசி அமைதியா இருக்க வேண்டிய இடத்துல அமைதியா இருந்தா கண்டிப்பா காவ்யா உன்னைய நல்லா பார்த்துப்பா..
இப்படி உன் பெரிய புள்ள தான் உசத்திங்கற மாதிரி பேசிட்டு இருந்த கடைசி வரைக்கும் நீ தனியா தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. இன்னும் இவன் என்ன தான்மா அவளுக்கு செய்யணும்.? அவளுக்காக வாங்கி குடுத்த கடனை நீ அடைச்சுட்டா இருக்க.? இவன் தான் பாடப்பட்டுட்டு இருக்கான்.. அது உனக்கு புரியலயா.?” என்று தாயை கடிந்தாள்.
அவளின் கணவனும் “மாப்ளை நான் வேணா கல்யாணத்துக்கு வாங்குன கடனை அடைச்சரட்டுமா.?” என்று கேட்டு அசோக்கை சங்கடத்தில் ஆழ்த்திட, “அய்யோ வேணாம்ங்க.. நான் பார்த்துக்கறேன்.. என் அக்காவுக்குனு செஞ்சது அது ஒன்னு தான்.. ப்ளீஸ்” என்றதோடு அப்பேச்சை முடித்து விட்டான்.
அதன் பிறகு அசோக்கின் அன்னை வாயை திறக்கவில்லை.. மகனுடனும் மருமகளுடனும் கிளம்பி விட்டார்.. காவ்யாவின் பெற்றோரும் மகளுக்கு பிரியாவிடை குடுத்து தலையசைத்தனர்.
சில வருடங்களுக்கு பிறகு..
“ப்ச் சின்ன புள்ள மாதிரி ஓடியாடிட்டு இருக்காத” என்று இளைய மகளை ஆதிரா அதட்டிட, “மாம் நான் சின்ன பொண்ணு தான்.. வேணும்னா டாடிகிட்ட கேட்டு பாருங்க” என்று கூறி பலிப்பு காட்டி சிரிக்க, ஆதிரா தான் பல்லை கடித்தாள்.
மகளிடம் பேச முடியாது என்று கணவனுக்கு அழைத்து “அபி உன் பொண்ணை அங்கயும் இங்கயும் ஆடாம இருக்க சொல்லு.. ஊருக்குள்ள ஒரு மாதிரி பேசறாங்க..” என்று ஒரு அன்னையாய் கவலை கொள்ள, “எங்க இருக்கீங்க.? இரு நான் வர்றேன்” என்று அவர்களை தேடி சென்றான் ரூபனும்.
ரூபனை கண்டதும் “உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டங்களா.? உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலயாப்பா.. போயும் போயும் இந்த அம்மாவை கல்யாணம் பண்ணிருக்க.?” என்று குறைப்பட்டு கொண்டவளின் தலையில் நங்கென்று கொட்டி “பிச்சுருவேன்” என்று மிரட்டினாள் ஆதிரா.
“தங்கம் திருவிழா முடியற வரைக்கும் அம்மா சொல்றதை கேளுங்க செல்லம்.. அம்மா உங்களுக்கு நல்லது தானே சொல்றாங்க.? அப்பறம் நான் பெங்களூர் கிளம்பிரலாம்..” என்று இளைய மகளிடம் அதட்டல் இல்லாத கெஞ்சல் தோணியில் கூறிய ரூபன் மனைவியிடமும் “அவ அமைதியா தான் இருப்பா.. நீ திட்டிட்டே இருக்காத” என்று கூறி விட்டும் நகர்ந்தான்.
‘ஆமா நான் திட்டிட்டே இருக்கேன் பாரு.. இவனை..?’ என்று பல்லை கடித்து இளைய மகளை பார்க்க, அவளோ வாயை மூடி கமுக்கமாக சிரித்தாள்.
ஆறு வருடங்கள் இவர்களை தவிப்பாய் தவிக்க விட்டு பின்பு தான் இரண்டு மகாலட்சுமிகள் இவர்களை வந்தடைந்தது. பெரிய மகள் அப்படியே ரூபனின் சாயல். அவனை போலவே பேரமைதி.. பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் அடியெடுத்து வைக்க தயாராக இருக்கிறாள்.
இளைய மகள் ஆதிராவின் குணத்தை போலவே.. இல்லை இல்லை ஆதிராவை விட ஒருபடி மேல் என்றே கூறலாம்.. அவள் அடங்கும் ஒரே ஆள் என்றால் அது ரூபனிடம் மட்டும் தான்.. பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்க காத்திருக்கிறாள்.
யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காமல் நான் இப்படித்தான் என்று அலட்டி கொள்ளாமல் இருப்பாள். ஆனால் அவளின் தந்தை கூறினால் மட்டும் ஒரே வார்த்தையில் சரியென்று தலையை அசைத்து விடுவாள் அந்த குட்டி இளவரசி.
ரூபன் அடிக்கடி ஆதிராவிடம் கூறும் வார்த்தையே ‘இப்ப தெரியுதா நாங்க எவ்ளோ பாவம்னு’ என்பது தான்.. இளைய மகளினால் ஆதிராவே அடங்கி விட்டாள் என்றால் பாருங்களேன் அவளின் மகள் அவளை என்ன பாடுபடுத்துகிறாள் என்று.!
இப்போதும் அன்னையை கடுப்பேற்றி தந்தையின் ஒற்றை வார்த்தைக்காக அமைதியாக தாயுடன் இருக்கிறாள்.
இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்ததும் கிராமத்தில் வீடு கட்டி குடியேறி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர் இருவரும்..
மகளிடம் “உன் அக்கா எங்கடி.?” என்று ஆதிரா வினவ, “ஏன் அவ உனக்கு புள்ளை இல்லையா.?” என்று எடக்குமடக்குடன் அவளின் மகளும் எதிர்வினாவை தொடுக்க, “தெய்வமே.. சரி என் பெரிய புள்ள எங்க.?” என்று அவளின் வழிக்கு வந்தே கேட்டாள்.
“அவ சிவா பெரிப்பா கூட தாத்தா வீட்டுக்கு போறேனு போனா.. ஆனா அங்க தான் போய்ருக்காளானு எனக்கு தெரியாது” என்று கூறிட, “உன் சித்தி இன்னும் வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்கா.?” என்று தங்கையை பற்றியும் கேட்டாள்.
“ம்மா” என்று பல்லை கடித்து “உன் தங்கச்சி அவங்க பையனோட மல்லுக்கட்டிட்டு இருக்கும்.. சித்தப்பா ரெண்டு பேரையும் கன்னத்துல கை வெச்சு பார்த்துட்டு இருப்பாரு.. அப்பறம் அசோக் மாமா அப்பா கூட இருக்காங்க.. காவ்யா அத்தை அவங்க பையனுக கூட சேர்ந்து கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்காங்க போதுமா.?
ஹான் அப்பறம் உன் அம்மா, அப்பா நாளைக்கு காலைல கோவிலுக்கு வந்துருக்கறேனு சொல்லிட்டு இப்ப தூங்கிட்டு இருப்பாங்க.. இனி ஏதாவது கேட்டா உன்னைய தனியா விட்டுட்டு நான் ஓடி போய்ருவேன்” என்று மிரட்டினாள்.
வீட்டில் “என்னால முடியாது.. அப்பா நீ சொல்ல மாட்டியா.?” என்று துருவினி – ரஞ்சித்தின் ஒரே மகன் கத்தி கொண்டிருந்தான்.. கோவில் திருவிழாகளில் எல்லாம் அவனுக்கு விருப்பமே இல்லை. பெரியம்மாவின் வற்புறுத்தலில் தான் இங்கு வந்திருந்தான். கோவிலுக்கு கிளம்ப சொல்லி வற்புறுத்திய தாயின் மேல் அவனுக்கு பெரும் கடுப்பு.
“துரு விடுமா.. ரொம்ப வற்புறுத்துனா அது எரிச்சலா மாறிரும்.. அவனுக்கு வரணும்னு தோணுனா வரட்டும்” என்று மனைவியை அழைத்து கொண்டு சென்றான் ரஞ்சித்.
இவர்களின் திருமணம் தான் எந்தவித தடையும் இல்லாமல் நடந்தேறியது. அவ்வப்போது தந்தை தான் ஆதிராவிடம் ‘இவ ஒன்னும் உன்னைய மாதிரி இல்ல.. நாங்க சொல்ற பையனுக்கு சரினு சொல்லிருக்கா’ என்று குத்திக்காட்டி பேச, ஆதிராவோ கமுக்கமாக சிரிப்பாள் ஆனால் துருவினிக்கு தான் தர்மசங்கடத்துடன் இருக்கும்.
ஆதிராவிடமே “அக்கா நான் லவ் பண்றதை அப்பாகிட்ட சொல்லிரட்டுமா.?” என்று கேட்டிட, “வேணாம் விடு.. நீயாவது அவங்க சொன்ன பையனுக்கு தான் ஓக்கே சொல்லிருக்கேனு நிம்மதியா இருந்துட்டு போகட்டும்” என்று கூறி அவளின் வாயை அடைத்து இருந்தாள்.
தங்கையை பார்த்ததும் “எங்கடி உன் பையன்.?” என்று ஆதிரா கேட்க, “அவன் வர மாட்டிங்கறான் திரா..” என்று பதிலுரைத்து “ஏய் வாலு நீ ஏன் அமைதியா நிற்கற.? வா நம்மளும் கடைக்கு போகலாம்” என்று தமக்கையின் மகளை அழைத்து கொண்டு சென்றாள் துருவினி.
காவ்யா தான் இரண்டு மகன்களையும் சமாளிக்க முடியாமல் ஆளுக்கு இரண்டு அடியை வைத்து “இன்னும் சின்ன புள்ளைகனு நினைப்பாடா உங்களுக்கு.? ஏன்டா இங்கையும் அடிச்சுட்டு சாகறீங்க.? பார்க்கறவங்க என்னடா நினைப்பாங்க.?” என்று மகன்களை திட்டினாள்.
முதலில் அசோக்கை நன்றாக சுத்த விட்டு பின்பு தான் போனால் போகுதென்று மன்னித்தாள்.. அவர்களின் காதலுக்கு சாட்சி தான் அவர்களின் இரண்டு மகன்களும். முதலாமானவன் கல்லூரியின் இறுதி வருடமும் இரண்டாமானவன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கவும் இருக்கிறான்.
எப்போதும் இருவருக்கும் அடிதடி தான்.. எங்கு இருக்கிறோம் என்று எல்லாம் பார்க்க மாட்டார்கள்.. கோவம் வந்து விட்டால் சுற்றுப்புறத்தை மறந்து அடித்து கொள்வார்கள்.. அதனால் தான் இருவரையும் தனியாக விடாமல் காவ்யாவும் அவர்களுடனே சுற்றுவாள்.
இப்போதும் அப்படித்தான் எதற்கு சண்டை வந்ததே என்றும் தெரியாமல் அடித்து கொள்ள, அன்னையின் அடியில் தான் இருவரும் விலகி நின்றனர்.
இறுதியாக நடந்த சண்டைக்கு பிறகு அசோக்கின் அன்னையும் அமைதியாகி விட, இப்போது இவர்களின் உறவு சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.. தாய்மாமனாக செய்ய வேண்டிய கடமைகளுக்கு காவ்யாவும் கைகுடுத்து அவனுடன் இணைந்து நிற்கிறாள்.
ஆனால் அவர்களின் குடும்ப பாரத்தை கணவனின் தலையில் ஏற்ற முயன்றால் பதிலடி குடுத்தும் விடுகிறாள். பெரிய தமக்கை காவ்யாவின் அதிரடியில் கொஞ்சம் மாறி இருக்க, இளைய தமக்கையும் அவளின் புகுந்த வீட்டினுடன் உறவுப்பாலத்தை நன்றாக பலப்படுத்தி கொண்டு கணவனுடன் மகிழ்ச்சியான.. நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
பூஜை தொடங்குவதாக அழைப்பு வந்ததும் அனைவரும் கோவிலுக்குள் சென்றனர்.. ரூபனுடன் தான் அவனின் பெரிய மகளும் இருந்தாள்.. கோவில் கணக்குவழக்குகளை சிவாவுடன் இணைந்து பார்த்து அவர்களுக்கு உதவியாக நின்றிருந்தாள்.
அனைவரும் உள்ளே செல்ல, தந்தையை கண்டதும் “ம்மா நான் அப்பாகிட்ட போறேன்” என்று ஆதிராவிடம் இருந்து தப்பித்து தந்தையுடன் இணைந்து கொண்டாள் அவளின் இளைய மகளும்.
அவர்களுக்கு எதிர்திசையில் நின்ற ஆதிரா கணவனை ஏறிட்டு பார்த்தாள். அப்பார்வையில் தான் எத்தனை எத்தனை மொழிகள்.! அவர்களின் முதல் சந்திப்பை அவளால் அத்தனை எளிதில் மறக்க இயலுமா என்ன.?
ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்கு வரும்போது அதனை நினைவு கூறமால் அவர்கள் சென்றதே இல்லை.. இப்போதும் அந்நிகழ்வு நினைவில் எழுந்திட, யாருமறியாமல் கணவனை பார்த்து கண்சிமிட்டினாள்.
அவனும் அதைய தான் நினைத்திருந்தான் போலும் மனைவி கண்சிமிட்டியதும் அவனை அறியாமல் குறும்புன்னகை உதிர்த்திட, அதை நன்றாகவே காட்டி குடுத்தது அவனின் கன்னத்தில் விழுந்த அந்த கன்னங்குழி.!
அந்த கன்னங்குழியில் தான் இவள் விழுந்தாளே.? இப்போதும் கன்னங்குழி சிரிப்பை ரசனையாக பார்த்திட, மனைவியின் விடாத பார்வையில் அவனை மீறி எழுந்த வெக்கச்சிரிப்பை மறைக்கவே கரத்தை வைத்து முகத்தை மறைத்தான்.
அதையும் ஒரு வித ரசனையுடன் பார்த்து கண்சிமிட்டி புன்னகையை படர விட்ட பெண்ணவளை பார்த்ததும் மீண்டும் அவனிடமே ஒட்டிக்கொண்டது விடாத கன்னங்கழி சிரிப்பு.!!
முதல் பார்வையில்
பூகம்பமாக தொடங்கிய
இவர்களி
ன் சந்திப்பு..
சாரலாய் இருவரையும்
இணைத்து
பின்பு தென்றலாய்
அவர்களின் வாழ்வில்
வீசத்தொடங்கி இருந்தது.!!!!!
முற்றும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
+1

