
பூகம்பம் – 43
திருவிழாவிற்கு தம்பதிகளாக ரூபனும் ஆதிராவும் வந்திருந்தனர்.. ரூபனின் சித்தப்பாவின் வீட்டிற்கும் செல்லவில்லை.. சிவாவின் வீட்டிற்கும் செல்லவில்லை.. ரூபனின் பாட்டி இருந்த வீட்டை சுத்தம் செய்து அங்கேயே தங்கி விட்டனர் மூவரும்.
சிவாவின் தந்தை கோவில் பொறுப்புகளை மகனிடமும் ரூபனிடமும் ஒப்படைத்திட, ரூபனோ “வேணாம் பெரிப்பா.. சிவா அண்ணாவே பார்த்துக்கட்டும்” என்ற அவனின் கூற்றை அவர் காதில் வாங்கவே இல்லை.
வேறு விழியின்றி குடும்பத்துடன் நான்கு நாட்களுக்கு முன்பே வந்து விட்டிருந்தான்.. இன்னும் இரண்டு நாட்களில் துருவினியும் காவ்யாவும் வருவதாக கூறி இருந்தனர்.. அழையா விருந்தாளியாக ரஞ்சித்தும் ஒட்டிக் கொள்ள, அன்னையை பார்க்க வந்திருந்த அசோக்கை வர கூறி ஆதிரா வற்புறுத்திட, ஒரு மனதாக அவனும் சம்மதித்து இருந்தான்.
கோவில் வேலையென சிவா தான் ரூபனின் வீட்டிற்கு வந்திருந்தான்.. “வாங்க மாமா..” என்று சேரை இழுத்து அவனின் முன்பு போட்டு “உட்காருங்க.. காஃபி வெச்சுட்டு இருக்கேன்.. குடிச்சுட்டு அப்பறம் போலாம்” என்று விட்டு உள்ளே ஓடினாள்.
அடுப்பில் பால் பொங்கி கொண்டிருந்தது.. அடுப்பை அணைத்து நால்வருக்கும் காஃபி கலந்தவள் முதலில் சிவாவுக்கும் ரூபனுக்கும் குடுத்து விட்டு பின்பு மாமியாரிடம் டம்ளரை நீட்டினாள்.
“ஆதிரா வீட்டுக்கு வரலாம்ல.? அப்பா கேட்டுட்டே இருந்தாரு..”
“இருக்கட்டும் மாமா.. கண்டிப்பா ஒரு நாள் வர்றோம்..”
“ஏன் இப்ப வந்தா என்னவாமா.?”
“இப்ப நீங்க டவுனுக்கு போக ரூபனை கூப்பிட தானே வந்தீங்க.? கூட்டிட்டு கிளம்புங்க..”
“ஆதிரா என்னது இது.? வீட்டுக்கு வந்தவனை கிளம்ப சொல்ற.?” என்று ரூபனின் அன்னை மருமகளை அதட்ட, “சாரிங்க அத்தை.. நான் என் மாமா கிட்ட எப்பவும் இப்படித்தான் பேசுவேன்.. என்னால மாத்திக்க முடியல..” என்று ‘தன் இயல்பு இது தான்’ என்று நேராகவே கூறி விட்டாள்.
மங்கைக்கு மருமகளிடம் பிடிக்காதது இது மட்டும் தான்.. யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் மனதில் பட்டதை பட்டென்று பேசி அவரை சினமாக்கி விடுவாள்.. இதை பற்றி மகனிடம் முறையிட, அவனோ ‘அவளோட இயல்பு இது தான்மா’ என்று விட்டு அன்னையின் திட்டுகளையும் வாங்கி கொள்வான்.
தன்னவளிடம் ‘கொஞ்சம் யோசிச்சு பேசு ஆதி’ என்று கூற, அவளோ ‘என்னோட குணத்தை மாத்திக்க முடியாது அபி..’ என்று மறுத்திட, தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் ரூபன்.
ஆதிரா வேலைக்கு சென்று விடுவதால் ரூபன் தப்பித்து விட்டான்.. இல்லையென்றால் தாய்க்கும் மனைவிக்கும் இடையில் மாட்டி கொண்டு திண்டாடி இருப்பான்..
இருவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருந்தாலும் பெண்ணவளுக்கு கரு தங்காமலே போக, வீட்டில் இருந்தால் தேவையில்லாத சிந்தனைகள் தன்னை அலைக்கழித்திடும் என்று வேலைக்கு செல்ல துவங்கி இருந்தாள்.
முதலிலே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை ரூபனிடம் இவள் கூறிய போது ஓரடியாக மறுத்து விட்டிருந்தான் ‘இப்போதைக்கு நீ வீட்டில் இரு’ என்று.!! பின்பு அவள் கூறிய காரணத்தை கேட்ட போதும் ஒரு மனதாக சரியென்றிருந்தான்.
இப்போதும் அவனின் அன்னை இவனை முறைத்திட, அவனோ பாவமாக மனையாளை பார்த்து விட்டு கெஞ்சல் நிறைந்த பார்வையை அவன் அன்னையிடமே வீசினான்.
இதற்கும் அவரிடம் முறைப்பு மட்டுமே.!! “சிவாண்ணா நேரமாகிருச்சு பாருங்க.. அபிஷேகத்துக்கு எல்லாம் வாங்கி குடுக்கணும்ல.?” என்று பேச்சை மாற்றினான்.
“ஆமாடா.. சீக்கிரம் கிளம்பலாம்.. அப்ப தான் டைமுக்கு வர முடியும்..” என்று கூறி ரூபனை காப்பாற்றிய சிவா சிரிப்பை அடக்கிக் கொண்டு புறப்பட்டான்.
செல்லும் போது “என்னடா ரொம்ப நொந்துட்ட போல.?” என்று கேலியுடன் சிவா வினவிட, நீங்க வேற அண்ணே.. அதைய ஞாபகப்படுத்தாதீங்க.. மீ பாவம்” என்றான் சோகத்துடன்.!
“ஆதிராவை சமாளிக்க முடியலயா.?”
“இல்லண்ணா என் அம்மாவை தான் சமாளிக்க முடியல..”
“ஏன்டா.?”
“அம்மாவா இருக்கறப்ப எல்லாரும் நல்லா தான் இருக்காங்க.. மாமியார் போஸ்ட்டிங்கு போய்ட்டா உடனே மாறிருவாங்க போல.?”
“என்னடா உளரிட்டு இருக்க.?”
“ப்ச் அண்ணா.. என் அம்மா எனக்கு அம்மாவா மட்டும் இருக்கறப்ப நல்லா தான் இருந்தாங்க.. இப்ப மாமியாரா மாறுனதும் என்னைய போட்டு பாடாப்படுத்தறாங்க..”
“ஆதிரா அடங்க மாட்டிங்கறாளா.?”
“அதெல்லாம் இல்லண்ணா.. அவ அவளா தான் இருக்கா.. ஆனா என் அமமா குத்தம் கண்டுபிடிச்சுட்டு இருக்காங்க.. இந்த காலத்து பொண்ணுக எப்படி இருப்பாங்கனு இன்னும் என் அம்மாக்கு தெரியல போல.?”
“விடுடா போக போக சரியாகிரும்.. ஒரு நாள் உன் அம்மாக்கே சலிச்சு போய் எக்கேடோ கெட்டு தொலைங்கனு அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சுருவாங்க..” என்று அனுபவஸ்தானாக சிவா கூறியதும் ஙே வென முழித்தான் ரூபன்.
“காவு நீ வந்தே ஆகணும்.. இல்லனா ஆதிரானு ஒருத்தி இருந்ததை நீ மறந்துரு..” என்று காவ்யாவை போனில் மிரட்டினாள் ஆதிரா.
“ப்ச் நான் வரலனா என்ன.?”
“நீ வந்தா தான் கோவில் திருவிழாவே ஸ்டார்ட் பண்ணுவாங்க..”
“கிழிப்பாங்க.. என் இம்சை பண்ற.?”
“அசோக் அண்ணா வர்றாங்கனு தான் நீ வர யோசிக்கறீயா.?” என்று சரியாக கேட்டதுமே போனை அவளிடம் பேரமைதி.. அதிலே அது தான் காரணமென்று இவள் உணர்ந்து விட “அவங்க வந்தா வந்துட்டு போறாங்க.. நீ வந்து தான் ஆகணும்..” என்று கட்டளையுடன் கூறியவள் போனை வைத்தாள்.
போனை வெறித்து பார்த்த காவ்யா இயலாமையுடன் கண்ணீர் வடித்தாள்.. அன்று கடைசியாக அவளிடம் அசோக் பேசி விட்டு சென்றது தான்.. அதோடு அவளின் எண்ணையும் ப்ளாக் செய்து விட, இவள் வேறு எண்ணிலிருந்து அழைத்தாலும் இவளென்று தெரிந்ததும் அந்த நம்பரையும் ப்ளாக் செய்து விடுகிறான்.
நாளாக நாளாக இவளின் நம்பிக்கை தளர்ந்து ‘என் காதல் அவ்ளோதானோ.?’ என்று யோசிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க, எப்போதும் உற்சாகமாக வலம் வருபவள் இப்போது எல்லாம் அமைதியை கடைப்பிடித்து ஓரிடத்திலே இருந்து விடுகிறாள்.
சொல்லபோனால் அவள் அவளாகவே இல்லை.. அனைத்தையும் வெறுத்து விடும் நிலைமை தான்.. அவளின் பெற்றோரும் மகளுக்கு வயதாகி கொண்டு போய்கிறது.. விரைவில் திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைத்து மும்முரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தில் இருக்கின்றனர்.. இது எதுவும் அவள் அறியவில்லை.. அவர்களும் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.
ஊருக்கு வரவே காவ்யாவிற்கு பிடிக்கவும் இல்லை.. அன்னையின் வற்புறுத்தலுகிணங்க வந்தவள் இப்போது ஆதிராவின் வற்புறுத்தலின் காரணமாக திருவிழாவிற்கும் துருவினியுடன் கிளம்பினாள்.
திருவிழா களைக்கட்ட தொடங்கி இருக்க, சிவாவின் தந்தை தான் ஆதிரா வீட்டிற்கு வரவே இல்லை என்று குறைப்பட்டு புலம்பி கொண்டிருக்கிறார்.
சிவாவிடம் “மாமா சாத்விக்கை மட்டும் கூட்டிட்டு வந்து என்கிட்ட விடறீங்களா.? அவன்கூட விளையாண்டு ரொம்ப மாசமாச்சு” என்றாள் கெஞ்சல் நிறைந்த மொழியில்.!
“உரிமையா போய் தூக்கறதை விட்டுட்டு இப்படி கெஞ்சிட்டு இருக்க.? இது ஆதிரா இல்லயே.?” என்று அவனின் கூற்றிற்கு சிரித்து மழுப்பி விட்டாள் பெண்ணவள்.
நிவேதாவின் கடுஞ்சொற்களை நேரடியாக கேட்ட பின்பு அவரை காணவே இவள் விரும்பவில்லை.. அவரின் சந்தோசத்திற்காக நான் ஏன் என் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டும்.? என்ற வீம்பில் நிவேதாவை காட்டிலும் இவள் தான் முகத்தை திருப்பி கொண்டு திரிகிறாள்.
மகனை கணவன் வாங்கியபோதே “உங்க அத்தை புள்ளைகிட்ட என் பையனை குடுத்தீங்க அப்பறம் பாருங்க” என்று மிரட்டலையும் விட, அவளை கூர்ந்து பார்த்து “ஆதிராகிட்ட தான் குடுக்க போறேன்.. அதுக்கு என்ன இப்ப.?” என்றான் அசட்டையாக.!
“ஒன்னும் தேவையில்லை.. என் மகனை அவகிட்ட குடுக்க கூடாது” என்று சற்று குரலை உயர்த்தி நிவேதா கத்த, “இவன் எனக்கும் பையன் தான்” என்ற ஆடவனின் அழுத்தமான வார்த்தையில் நிவேதாவின் வாய் சட்டென்று அடங்கியது.
“ஆதிரா கிட்ட சாத்விக்கை குடுத்தா என்னவாமா.? தேவையில்லாத உன் வீம்புக்கு நானும் என் பையனும் ஊறுகாயா.? ஆதிராவை நீ எத்தனை தடவை நேர்ல பார்த்துருப்ப.? ஒரு மூனு நாலு தடவை தானே.? அவளுக்காக நீ எனத்தை கிழிச்சுருக்க.?
உனக்காக அவ ஏன் அவ வாழ்க்கையை பணயம் வெக்கணும்.? அறிவில்ல.? உன்னோட வீண்பிடிவாதத்தை என்கிட்டயும் காட்டுன சப்புனு அப்பிருவேன்.. என் பையனை யாருகிட்ட குடுக்கணும் குடுக்க கூடாதுனு எனக்கு தெரியும்.. பெரிய இவ மாதிரி பேச வந்துட்டா” என்று மனைவியை கடிந்தவன் பின்பு முறைத்தபடி நகர்ந்தான்.
என்ன செய்தாலும் கணவன் அமைதியாக இருந்ததால் தான் நிவேதாவின் வார்த்தைகள் கடுஞ்சொற்களாக விழுந்தது. இப்போது சிவா வாயை திறந்து விட்டதால் நிவேதாவின் இதழ்கள் அமைதியாக ஒட்டி கொண்டது. இனி பேச யோசிப்பாளோ என்னவோ.?
ரஞ்சித்தும் வந்திருப்பதை கண்டு “நீ எப்படா வந்த.? வீட்டுக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்க.?” என்று நிவே கடிந்திட, “என்னமோ என்னைய நீ கூப்பிட்ட மாதிரி வீட்டுக்கு வரலயானு கேட்கற.? என்னைய இங்க கூப்பிட்டது ஆதிரா தான்.. சோ அவங்க வீட்டுக்கு தானே போக முடியும்” என்றான் நியாயமான வினாவில்.!
எதுவும் பேசாமல் அவனை முறைத்து விட்டு நிவேதா சென்று விட, “அவங்ககிட்ட ஏன் ரஞ்சித் இப்படி பேசுனீங்க.?” என்று அசோக் வினவினான்.
“அவ ஒரு லூசு அசோக்.. சொல்றதை புரிஞ்சுக்காம பேசிட்டு இருப்பா.. அதான் நானும் அவ பாணியிலே பதில் சொன்னேன்.. அப்ப தான் கொஞ்சம் அமைதியா இருப்பா..”
“இருந்தாலும்…”
“இதுல ஒன்னுமில்ல விடுங்க.. வாங்க ரூபன் சகல கிட்ட போவோம்.. அங்க தான் சிவா பையனும் இருக்கான்..”
இருவரும் அவர்களிடம் வந்ததும் துருவினியுடன் அமர்ந்திருந்த காவ்யா இவனை வெறித்து விட்டு அமைதியாகிட, ரஞ்சித்தோ தன்னவளை கண்களால் விழுங்கினான்.
ஆதிராவின் பெற்றவர்கள் வராமல் போனது நல்லதே.!! ரூபனின் அன்னை இவர்களை கண்டு கொள்ளாமல் சொந்தபந்தங்கள் வீட்டிற்கு சென்று விட, சிறுபிள்ளைகளாக மாறி ஓடிபிடித்து விளையாடினார்கள் வீட்டினுள்.!!
காவ்யாவும் கவலைகளை மறந்து அச்சூழ்நிலையினுள் ஒன்றி விட, மனம் விட்டு சிரித்து ஒருவரை ஒருவர் கேலி செய்து மற்றவர்களை வாரினர். சமைக்கும் வேலையும் இல்லாததால் கடைவீதியை விடாமல் சுற்றி வேணுமென்றதை வாங்கி உண்டு புதுவித அனுபவங்களையும் சேகரித்தனர்.
திருவிழாவும் இனிதே நிறைவடைய, கிளம்பும் போது சிவாவின் தந்தை அனைவரையும் வீட்டிற்கு அழைக்க, “இன்னொரு நாள் வர்றோம் மாமா.. இப்ப கிளம்பறோம்” என்று ஆதிராவே பதிலுரைத்தாள்.
“ஏய் கழுதை.. இப்படி சொல்லி தப்பிக்க பார்க்கறீயா.?” என்று தங்கையின் மகளை அதட்டிட, “ப்ச் அப்படியில்ல மாமா.. இப்ப வந்தா நீங்க காஃபி மட்டும் தான் குடுப்பீங்க.. இன்னொரு நாள் வந்தா விருந்தே போடுவீங்கல்ல.? அதுக்கு தான்” என்று விளையாட்டாய் அவரை சமாளித்து கிளம்பியும் விட்டனர்.
தமக்கை வராமல் துருவினியும் வர மாட்டேன் என்று விட்டாள். அதுவும் நிவேதாவிடம் பேச அவள் விரும்பவில்லை. அதனால் தமக்கையின் கூற்றை ஆமோதித்து ‘அம்மா கூட வர்றேன் மாமா’ என்று தப்பித்து விட்டாள்.
தமக்கைகளுக்கு திருமணம் முடிந்து விட்டதால் அன்னை மட்டும் தனியாக இருக்கிறார்களே.? என்று வருந்திய அசோக் அவரையும் தன்னுடன் அழைக்க, தனிமையை விரும்பாத அவரும் மகனுடன் செல்ல சம்மதித்தார்.
இங்கிருக்கும் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு பிறகு அன்னையை தன்னுடன் அழைத்து சென்று விடலாம் என்ற முடிவில் சென்றான்.
காவ்யாவும் விடுமுறை இல்லாததால் கிளம்பிட, கிளம்பும் போது “உன் போக்கு சரியில்லடி.. எங்க தலைல இடியை இறக்கிராத” என்று காவ்யாவின் அன்னை மகளிடம் கூறிட, பதிலுரைக்காமல் கிளம்பினாள்.
நேரில் எதையும் கூறாமல் சென்னைக்கு சென்றதும் தந்தையிடம் அலைப்பேசி வாயிலாக தன் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டி விட, கேட்டவருக்கு தான் நெஞ்சே வெடிப்பது போலானது.
பாவம் மகள் கூறியதை தாங்க முடியாமல் உடைந்தவர் “உன்கிட்ட இதைய எதிர்பார்க்கல காவ்யா” என்று தன் அதிருப்தியையும் வெளியிட்டு “அதான் அசோக் முடிவா சொல்லிட்டான்ல? முடியாதுனு சொல்றவனை வற்புறுத்தி கல்யாணம் பண்றது நல்லாவா இருக்கும்.?
உனக்காக நான் மாப்பிள்ளை பார்த்திருக்கேன்.. காதல் கீதல்னு அத்தனையும் தூக்கி வீசிட்டு அவன் கூட கல்யாணத்துக்கு தயாராகற வழியை பாரு” என்று காட்டத்துடன் கூறினார்.
காதலிப்பவனே நீ வேண்டாம் என்று விடாப்பிடியாக கூறும்போது முடியவே முடியாதென இவள் எங்ஙனம் மறுப்பை தெரிவிப்பாள்.?
பதிலின்றி போனை வைத்து விட்டாள். மவுனமாய் கண்ணீர் சிந்தினாள்.
இவளின் கண்ணீருக்கானவனோ இவளின் நினைப்பு சிறிதுமின்றி அவனின் வேலையில் லயித்திருந்தான்.
பூகம்பம் – 52
திருமண கோலத்தில் அமர்ந்திருந்தாள் காவ்யா.. அவளின் முகத்தில் ரவுத்திரத்திற்கான அறிகுறிகள் நன்றாகவே தென்பட்டது. அடிக்கடி மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருக்கும் ஆடவனை முறைக்கவும் தவறவில்லை.
அவனால் அவளை பார்க்கவும் முடியவில்லை.. பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்திருப்பதை போல் தத்தளித்தான்.
முகத்தை பாவமாக மாற்றி பின்பு சிரித்தபடியும் வைத்திட, “மூஞ்சியை நல்லா தான் வெய்யேன்டா” என்று ரூபன் இடித்தது வேறு யாருமில்லை நம்ம அசோக்கை தான்.
ஆம் இன்று அசோக் – காவ்யாவின் திருமணம்.. அவளின் தந்தை பார்த்த மாப்பிள்ளையே அசோக் தான்.. வேறு பக்கம் மகளை திருமணம் செய்து குடுத்து பிரிந்திருப்பதை விட நன்றாக அறிந்த அசோக்கிற்கே திருமணம் செய்து விடலாம் என்றெண்ணம் எழுந்ததும் அவரின் மனைவியிடமும் கூறிட, அவரோ அவர்களின் வசதி வாய்ப்பை பார்த்து வேணாமென்று தான் கூறினார்.
“காசு பணம் வரும் போகும்.. நமக்கு இருக்கறது ஒரு பொண்ணு தான்.. கடைசி காலத்துல அவ மட்டும் தான் நமக்கு துணை.. வர்றவன் நம்மளைய பார்க்க விடலனா நம்மளால தாங்க முடியுமா.? இதுவே அசோக்கா இருந்தா பிரச்சனை இல்லயே.? நம்மகிட்ட இருக்கறது எல்லாம் நம்ம பொண்ணுக்கு தானே.?
அப்பறம் என்ன யோசனை.? அவளுக்கும் வயசாகிட்டே போகுது.. எனக்கு இதுதான் சரினு தோணுது.. நம்ம பொண்ணு வேணாம்னு சொன்னா விட்டரலாம்..” என்று கூறி மனைவியை யோசிக்க வைத்தார்.
யோசித்ததில் அவரும் ஒரு மனதாக சரியென்றார்.. ஆனால் அசோக்கின் இரண்டு தமக்கைகளை பற்றி நினைத்ததில் மனது முரண்டு பிடிக்க, ஒருவாறாக அவரை பேசி சரி கட்டி இருந்தார் காவ்யாவின் தந்தை.
மகளிடம் மாப்பிள்ளை யாரென்று கூறாமல் திருமணத்தை பற்றி மட்டும் இவர் கூறிட, அந்த பைத்தியமோ அத்தனையும் அவரிடம் ஒப்பித்து விட்டதே.!! தன்னை மீறி தன் மகள் எதுவும் செய்ய மாட்டாள் என்று நம்பி இருந்தவரின் நம்பிக்கை பொய்யானதில் வந்த கோவம் தான் அவரை அப்படி பேச வைத்தது.
பின்பு யோசித்ததில் அசோக்கை நினைத்து பெருமை கொண்டவர் அவனின் அன்னையிடமும் பேசினார். அவரோ தயங்கி “எனக்கு என்ன சொல்றதுனு தெரியலண்ணா” என்றிட, பின்பு அசோக்கிடமும் பேசினார்.
அவனோ அதிர்ந்து முழித்து “மாமா” என்று திணற, “காவ்யா எல்லாம் சொன்னா மாப்பிள்ளை.. என் கோவம் அவ மேல தான்.. உங்க மேல இல்ல.. என் பொண்ணை பிடிச்சுருந்தா சரினு சொல்லுங்க இல்லனா விட்டரலாம்.. கட்டாயப்படுத்த மாட்டேன்” என்று தெளிவாக பேசி விட்டார்.
அவனின் அன்னையும் வாடாமல் நச்சரித்ததில் சரியென்று விட, அதன் பிறகே இவ்விடயம் காவ்யாவுக்கு சென்றது. ‘பைத்தியமா நானு.? மாப்பிள்ளை யாருனு கேட்டுட்டு அப்பறம் பேசிருக்கலாம்’ என்று நொந்து தந்தையிடம் மன்னிப்பை வேண்ட, அவரோ இப்போது வரை மகளிடம் பேசாமல் அவளை தவிர்த்து வருகிறார்.
மகள் காதலித்தது தெரிந்ததில் இருந்து காவ்யாவின் மேல் ஆதிராவின் அன்னைக்கு கோவம்.. அவளும் கூட்டு களவாணி என்று.!
இப்போது காவ்யா காதலிப்பதை அறிந்ததும் அவளின் அன்னையும் ஆதிராவின் மேல் கோவம் கொண்டார்.
இருவரின் அன்னையும் கோவிலில் சந்தித்து கொள்ள, முதலில் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்றவர்கள் பின்பு அவரவர்களின் மகள்களை பற்றி அவரவர்களுக்கு தெரியுமே.? அவர்களால் நாங்கள் ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து இருவரும் ஒரு நேரத்தில் “ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல” என்று கூறி சிரித்தனர்.
அசோக் தன்னவளிடம் பேச முயன்றான்.. ஆனால் அவளோ இப்போது வரை அவனிடம் பேசாமல் அவனை தவிக்க விட்டு வருகிறாள்.. பின்பு அவளுக்கு கோவம் இருக்காதா என்ன.?
கணக்கின்றி எத்தனை முறை அவனிடம் காதலை கூறி பின்னால் சுற்றி இருக்கிறாள்.. அப்போதெல்லாம் சிடுசிடுத்து விட்டு இப்போது கொஞ்சினால் இவள் மசிந்து விடுவாளா என்ன.? பின்னால் சுற்ற விட்டு தான் ரசிப்பாள்.
ஒரு வழியாக காவ்யாவின் கழுத்தில் மங்கல நாணும் ஏறிட, அவளவனின் மேல் கோவமிருந்தாலும் அந்நொடிதனில் கலங்கிய கண்களுடன் ஆடவனின் கரத்தை இறுக்க பற்றினாள். இத்தருணத்திற்காக தான் அவள் எத்தனை வருடங்கள் ஏங்கி இருக்கிறாள்.?
முதலில் நடக்கும் என்று நம்பி இருந்தவள் பின்பு நடக்குமா.? என்ற யோசனையில் நடமாடி இறுதியில் நடக்கவே நடக்காது என்று உடைந்த நேரத்தில் இத்தருணம் உன் வாழ்வில் தான் இருக்கின்றது என்று நம்பிக்கையூட்டி இதோ அவனின் சரிபாதியாகவும் மாறி விட்டாள்.
காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் விளையாட்டாக அவனின் மேல் காதல் கொண்டாள்.. அவன் தான் என்னவன் என்ற ஆசையே ஆழமாகி விட, ‘மாமா மாமா’ என்று அவனின் பின்னால் சுற்றி திட்டுக்களையும் வாங்கி பின்பு வளர்ந்ததும் ‘உன்னைய தான்டா கல்யாணம் பண்ணுவேன்’ என்று விடாப்பிடியான முடிவிலும் நின்று இதோ அவனின் வாழ்விலும் வெற்றிக்கரமாக நுழைந்தும் விட்டாள்.
இந்நிமிடங்களை வெகுவாக ரசித்தாலும் வெளியில் அவள் கணவனை முறைத்து கொண்டே இருக்க, “கொஞ்சம் சிரிக்கலாமே.?” என்ற அசோக்கை கடுப்புடன் பார்த்தவள் “எனக்கு சிரிப்பு வரல” என்றாள் பட்டென்று.
இவளிடம் வாங்கி கட்டி கொள்வதை விட வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்து விடலாம் என்று நினைத்தானோ என்னமோ அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை.
கணவனுடன் நின்றிருந்த ஆதிராவை உறவுக்கார பெண்மணி ஒருவர் பிடித்து “என்ன புள்ள இன்னும் விஷேசமில்லையா.?” என்று அவள் கருவுறாததை சுட்டிக்காட்டி வினவ, அதுவரை நன்றாக இருந்தவளின் மனநிலை சட்டென்று மாறி போனது.
அவரை பார்க்க முடியாமல் விலகி சென்றவளின் விழிகள் தானாக கலங்கியது. முதலில் ஆறு மாதங்கள் வரை எதையும் நினைக்காமல் வேலைக்கு சென்றவள் அதன்பிறகு குழந்தையை எதிர்பார்க்க தொடங்கினாள்.. ஆனால் அவளின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்திலே முடிந்தது.
அவளின் மனநிலை அறிந்து ரூபனின் அன்னையும் இதைப்பற்றி கேட்டு கொள்ளவில்லை.. அவள் வேலைக்கு செல்லும் காரணத்தை மகனின் மூலம் அறிந்தவர் மருமகளை மெச்சி கொண்டார். ஓரிரு முறை இருவருக்கும் சண்டை வரும்.. அப்போதே சமாதானமும் ஆகி விடுவார்கள்.
கிராமத்தில் அவர்களுக்கான நிலத்தில் வீடு கட்டும் யோசனையில் இருக்கிறான் ரூபன்.. ஆனால் சில காலம் செல்லட்டும் பின்பு பார்த்து கொள்ளலாம் என்று ஆதிராவை தவிர வேறு யாரிடமும் கூறவில்லை.
வெளியில் செல்ல முயன்ற மனைவியை எட்டி பிடித்து தன்னருகில் நிற்க வைத்து அவளின் உறவுக்கார பெண்மணியிடம் “வர்றப்ப வரட்டும்ங்க.. அதுல எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. பதினைஞ்சு வருசமா குழந்தை இல்லாம இருக்கறவங்களும் இருக்காங்க.. இப்ப எங்களுக்கு என்ன வயசாகிருச்சு.? மெதுவா வரட்டும்ங்க” என்று தன்மையாகவே அவருக்கு பதிலளித்தான் ரூபன்.
இவனின் பதிலில் அந்த பெண்மணியும் தோளை குலுக்கி விட்டு செல்ல, அதை தூசு தட்டுவதை போல் தட்டி “என் ஆதி இப்படி இருக்க மாட்டாளே.?” என்று அவளின் கவனத்தை தன்புறம் திசை திருப்ப முயன்றான்.
ஆனால் முடியவில்லை. துருவினியும் வந்து பேசிட, அப்போதும் அவள் பிடி குடுக்காமல் அமைதியாகவே காணப்பட, துருவினியை தேடி வந்த ரஞ்சித்தும் விசயமதை அறிந்து என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமாக நின்றான்.
காவ்யா இவர்களை அழைக்க, “நீங்க போங்க.. நான் இவளை கூட்டிட்டு வர்றேன்” என்று அவர்களை அனுப்பி விட்டு “நீ படிச்ச பொண்ணு தானே.? இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுட்டு இருந்தா எப்படி.?” என்று அவளை கடிந்தான்.
“முடியல அபி.. இந்த ஒரு விசயம் தான் என்னைய ரொம்ப பலவீனமாக்குது.. நானும் வருத்தப்பட கூடாதுனு நினைக்கறேன்.. ஆனா யாராவது கேட்டுட்டா என் மனநிலை என்னனு எனக்கே புரியாம போய்ருது..” என்று தன் மனதிலிருப்பதை வெளிப்படையாக கூறினாள்.
அவளின் அன்னையிடம் மட்டும் அவ்வப்போது பேசுவாள்.. தந்தையை கண்டால் முகத்தை திருப்பி கொண்டு செல்வாள்.. அவரும் ‘பெரிய கழுதைக்கு கொழுப்பு கூடிருச்சு’ என்று மகளை கடிந்து விட்டு அமைதியாகி விடுவாரே தவிர அவளிடம் சென்று அவரே பேச மாட்டார். அவர் பேசாமல் நான் ஏன் பேச வேண்டும்.? என்று வீம்புடன் இருக்கிறாள் இவள்.
இப்போது இவர்களை அவர் தான் கவனித்து கொண்டிருக்கிறார்.. மகளின் சோர்ந்த முகம் அவரின் வீம்பை சுக்குநூறாக உடைத்திட, மகளிடம் சென்றவர் “ஏய் புள்ள எந்திரி.. காவ்யா புள்ள தான் விடாம கூப்பிட்டு இருக்கு பாரு.. போய் என்னனு கேளு” என்று கூறினார்.
நெடுநாட்களுக்கு பிறகு தன்னிடம் பேசிய தந்தையை விழியெடுக்காமல் பார்த்து அப்படியே பெண்ணவள் நிற்க, “அடுத்தவங்க ஆயிரம் பேசுவாங்க.. அதைய நினைச்சுட்டு இருந்தா வாழ முடியாது.. கட்டுனவன் உன்பக்கம் நிற்கறப்ப ஏன் கண்டதையும் போட்டு குழப்பிட்டு திரியற.? அங்க போங்கறேன்ல.?” என்று அதட்டி “கூட்டிட்டு போங்க” என்று மருமகனிடமும் கூறினார்.
அதன் பிறகு நன்றாக ஓடியாடி திரிந்தாள்.. இது தான் அந்த தகப்பனும் மகளிடம் எதிர்பார்த்ததே.!! மகள் நன்றாக வாழ்கிறாள் என்ற நிம்மதியே சிறிது சிறிதாக ரூபனின் மேல் மரியாதையை வரவழைத்து இப்போது முழுமனதுடன் மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். அதற்கான பிரதிபலிப்பு தான் இருவரையும் முகம் கொள்ளா புன்னகையுடன் பார்த்து ரசிப்பதே.!!
“பொண்ணு மாப்பிள்ளை கூட அவங்க வீட்டுக்கு போய்ட்டு நம்ம வீட்டுக்கு வந்து சேரு.. ஏதாவது காரணம் சொன்ன அடிச்சுருவேன்” என்று செல்லமாக மகளை அதட்டி விட்டு சென்றார் ஆதிராவின் அன்னை.
புதுமண தம்பதிகளுடன் வீட்டிற்கு சென்று அவர்களின் சடங்குகள் நிறைவு பெற்றதும் “காவு அண்ணனுக்கு கொஞ்சம் இரக்கத்தை காட்டுடி.. பாவம் அவரு” என்று கேலி செய்ய, “யாரு அவனா.?” என்று கேட்டு “அப்ப நான் என்னவாமா.?” என்று தோழியை முறைத்தாள்.
இனி அவனாவது அவன் மனைவியாவது.. நம்ம எதற்கு இடைல போய்ட்டு.? அவ கால்ல விழுந்தாவது பேச வெச்சுக்கட்டும்.. இனி அது அவன் பிரச்சனை.. ஆனா ஒன்னு இனி அவன் பாவம்.. இவகிட்ட மாட்டிக்கிட்டு முழியோ முழினு முழிக்க போறான்.. எப்படியோ நல்லா இருந்தா சரி!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

