Loading

 

அத்தியாயம் 35

 

கருமை வானில் ஆங்காங்கே மிதந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விண்மீன்களை பார்த்தவாறே, திருமண அரங்கின் பால்கனி பகுதிக்கு வந்து நின்றாள், லாவண்யா. 

 

கீழே குனிந்து பார்த்தால் மண்டபத்தின் முகப்பு தெரியும். அருகே ஶ்ரீசரண், மௌனிகா என்று மணமக்களின் பெயர்கள், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

 

மெலிதான பெருமூச்சு ஒன்று வந்தது அவளிடம் இருந்து. உண்மையில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு சினம் வந்திருக்க வேண்டும். ஆனால் அதுபோல் எவ்வித உணர்வும் உண்டாகவில்லை.

 

லாவண்யாவும், அன்னை அர்ச்சனாவைப் போல் தான். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவள். தனக்குத் தேவையானது கிடைத்தால் போதும். அதில் அன்பு, பரிவு, கனிவு போன்ற உணர்வுகள் எல்லாம் கலந்திருக்க வேண்டும் என அவசியமில்லை.

 

அதனால் தான், சரண் அவளிடம் இயல்பாய் பழகாத போதும்.. திருமணம் செய்வதில் தயக்கம் எதுவும் கொள்ளவில்லை. அவன் வேண்டான் என மறுத்த பொழுதும் கூட, வருத்தம் என்று துளியும் இல்லை. 

 

‘இவன் இல்லாது போனால் வேறு ஒருவன். மாப்பிள்ளைக்கா பஞ்சம்!’ என்பது தான் அவளின் எண்ணமாக இருந்தது.

 

எனினும் அதுநாள் வரை தனக்குக் கிடைத்த மரியாதையும் முக்கியத்துவமும் சட்டென்று மறைந்து மௌனிகாவிற்கு இடம்பெயர்ந்திட, இல்லாமையினால் உண்டான உணர்வின் காரணமாக, சினமாய் அதனை வீட்டுக்கு வந்த விமலிடம் காட்டி விட்டாள். அதனின் நீட்சி தான், நிச்சயதார்த்த உடையைச் சரிசெய்து விட்டு வந்த தினத்தன்று இரவில் நடந்த நிகழ்வுகள் யாவும்.

 

நாட்கள் செல்ல செல்ல திருமண ஏற்பாடுகளைப் பற்றிய செய்தி செவியினில் விழும் பொழுது எல்லாம், தன்னை மெல்ல அவ்விடத்தில் இருந்தே விலக்கிக் கொள்ள தொடங்கினாள். இதோ, தற்போதும் அதையே செய்து தள்ளி வந்து நிற்கிறாள்.

 

“ஒருநாள் தான? சமாளிக்க முடியாதா உங்களால? நாளைக்குக் கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வந்திடுறேன்!” என திடீரென கேட்ட ஆண் குரலில் திடுக்கிட்டவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, எதிர்பாராத விதமாய் கால்கள் எதிலோ இடறியது. 

 

அடுத்த நொடி பிடிமானத்தைத் தேடி அனிச்சையாய் அவளின் வலது கரம் அருகே அலங்காரத்திற்காக சுற்றப்பட்டு இருந்த வண்ணத்துணியை பற்றியது.

 

அதில் அதன் முடிச்சு அவிழ்ந்திட, அந்த நீளத்துணி நழுவி பாவையின் மேலேயே விழுந்தது. எதிர்பாராது நடந்த நிகழ்வால் தடுமாறியவளின் வயிறு பால்கனியின் கைப்பிடிச் சுவற்றில் அழுந்திட, உடல் முன்னோக்கி சரிந்தது.

 

சரியாக சொல்ல வேண்டுமானால், திருமண அரங்கின் முதல் மாடியில் இருந்து தவறி விழ இருந்தாள் லாவண்யா.

 

இதயத்துடிப்பு உட்சத்தில் இருக்க, உடல் நடுங்கியது.

 

‘அவ்வளவு தான் தனது வாழ்க்கை!’ என எண்ணியவளின் நா, அதிர்ச்சியால் குரல் எழுப்ப மறுக்க, அச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

 

அடுத்த நொடி அவளின் கையைப் பற்றி யாரோ இழுத்திட, கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் மரண தேவனின் கரத்தில் இரூந்து நழுவி இருந்தாள் பாவை.

 

பயத்தின் காரணமாக மூடியிருந்த இமைகளை தற்போது திறந்திட, பார்வையை நிறைத்தபடி எதிரே நின்று இருந்தான் திவாகர்.

 

“எங்க, எதுல விளையாடுறதுனு விவஸ்தை இல்லையா? நீ பாட்டுக்குத் துணியைப் பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்க? இந்நேரம் கீழ விழுந்து உயிர் போயிருக்கும். அது போனா போயிட்டுப் போகுது. ஆனா, கல்யாணத்துல செத்துத் தொலைஞ்சிடாத! பாவம் வாழ வேண்டியவங்க. வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, முடிவுரையை எழுதி விட்டுடுவ போல இருக்கு!” என்றவன் அங்கிருந்து செல்ல, ஆடவன் பேசி சென்றதன் பொருள் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றாள் லாவண்யா.

 

“என்ன சொல்லீட்டுப் போறான்? நான் ஸ்கீரீனைப் பிடிச்சு விளையாடுறேன்னு நினைச்சிட்டானா.?” எனத் தனக்குத்தானே சிரித்துக் கொண்டவளிற்கு, அந்த குரல் வியப்பையும் சினத்தையும் ஒருசேர தந்தது.

 

“பாவி! திடீர்னு எங்க இருந்தோ வந்து பேசி பயமுறுத்தி, நான் கீழ விழப் போனதே இவனால தான். ஏதோ ஆயுசு கெட்டியா இருக்க போயி, உயிர் தப்பிச்சிடுச்சு. இதுல எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான். அது அட்வைஸ் கூட இல்ல, இங்க சாகாம வேற எங்கேயாவது போய் சாகுனு சொல்லிட்டுப் போறான். இவனை!” எனப் பல்லைக் கடித்தவள், அதைப் பற்றி உடனே பேசித் தீர்ப்பதற்காக பின்தொடர்ந்து சென்றாள்.

 

ஆனால் ஆடவனோ அடுத்த இரண்டாம் நொடியே பார்வையில் இருந்து மறைந்திருந்தான்.

 

“மிஸ் ஆகிட்டான்? எப்படினாலும் காலையில மேரேஜ்ல கலந்துப்பான்ல? அப்ப, பேசிக்கிறேன் அவனை!” என்று எண்ணியபடியே ஈன்றவர்களைக் காணச் சென்றாள்.

 

சேகரனும் அர்ச்சனாவும் பேசி, ‘அவர் மட்டும் இரவு அங்கேயே தங்குவது!’ என முடிவு எடுத்திருக்க, அன்னை மற்றும் தங்கையுடன் இல்லத்திற்குக் கிளம்பினாள்.

 

மண்டபத்தில் இருந்த அனைவரும் அவரவரிற்கான அறையில் தஞ்சமடைய, சரணின் அறையில் அவனோடு இருந்தான் கணியன்.

 

படுக்கையில் படுத்தபடி, “ஸாரி மாம்ஸ்.” என்று மன்னிப்பு வேண்டிய மச்சினனைப் புரியாது நோக்கியவன், “நீ எதுக்குடா ஸாரி கேட்கிற.?’

 

“அவங்க உங்க தங்கச்சினு எனக்கு தெரியாது.”

 

“அதுசரி!”

 

“நிஜமாவே என்மேல உங்களுக்கு கோபம் இல்லையா மாம்ஸ்.?”

 

சரண் புன்னகைக்க, “இப்ப சொல்லுறீங்களா இல்லையா?”

 

“உன்னோட இடத்துல வேற எவனாவது இருந்திருந்தா, நிச்சயமா ஃபோட்டோ எடுத்த கையை உடைச்சு விட்டிருப்பேன்.”

 

“அப்ப.. என்னை மட்டும் ஏன் எதுவும் செய்யாம விட்டுட்டீங்க? மௌனி அக்காக்காகவா?’

 

“மௌனிக்காக அவ்வளவு தூரம் போயிருக்க. உன்னோட நோக்கம் தப்பா இருக்காதுன்ற நம்பிக்கையினால விட்டேன். உன்னோட அக்காக்காக எல்லாம் இல்ல, புரிஞ்சிச்சா.?”

 

“ம்ம்.. இப்படி உடனே யாரையும் அக்யூஸ்ட் பண்ணதீங்க மாமஸ். என்ன ஏதுனு முதல்ல விசாரிங்க.”

 

“இது உண்மைதான். இனி, கொஞ்சம் நிதானத்தை இழுத்துப் பிடிச்சு வைக்கணும். இல்லேனா, முதலுக்கே மோசம் ஆகிடும்.”

 

“இங்க முதல் யாரு? அக்காவா.?”

 

“அப்படித்தான் வச்சுக்கோயேன். அவ ஹர்ட் ஆகுற மாதிரி எதையும் என்னால செய்ய முடியாது!”

 

சின்னதாய்ச் சிரித்த கணியன், “ஏன் அப்படி?”

 

“ஏன்னா? அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். ஒரு ஹஸ்பெண்டோட கடமை இது!”

 

“ஹஸ்பெண்ட் டியூட்டி ரொம்ப கஷ்டம் இல்ல?”

 

அவன் சிரித்திட, “ஆனா மாம்ஸ், உங்க சிஸ்டர் இன்னும் என்மேல கோபமா தான் இருக்காங்கனு நினைக்கிறேன்.”

 

“அவளுக்கு உன்னைப் பத்தின உண்மை தெரியாதுல?”

 

“சரி, எப்படி அவங்களைச் சமாளிக்கப் போறீங்க?”

 

“ரோகி, நான் சொன்னா கேட்டுப்பா.”

 

“ஓ.. ரொம்ப கோபக்காரங்களோ.?”

 

“தேவை இல்லாம கோபப்படுற ஆள் இல்ல அவ.”

 

“ம்ம்.. பரியிது மாம்ஸ்.”

 

“அது இருக்கட்டும்! இப்ப எதுக்கு நீ விசாரணை நடத்திக்கிட்டு இருக்க.?”

 

“எங்க அக்காவைக் கட்டிக் கொடுக்கப் போறோம் உங்களுக்கு. தெரிஞ்சிக்கணும்ல நான், நாத்தனார் கொடுமை, கொழுந்தனார் கொடுமை எதுவும் இருக்கானு?”

 

‘என்ன மாமியார் கொடுமையை விட்டுட்ட?”

 

“சேச்சே.. நான் அத்தைக்கிட்ட பேசுனேன், ஷீ இஸ் ஸுவீட் பர்சன். ஆனா மத்த ரெண்டு பேரும் தான் கொஞ்சம் அடாவடியா தெரியிறாங்க. ஒருத்தன் பேசிட்டு இருக்கும் போதே நங்குனு மிதிச்சு தள்ளி விடுறான். பொண்ணு என்னனா, பட்டுனு கேமராவைப் பிடுங்குது? சோ.”. 

 

“அடடா! தூங்கலயா நீ? டைம்பாஸ் பண்ண நான் தான் கிடைச்சேனா உனக்கு?”

 

“நான் கேட்கிறதுக்கு எல்லாம் உட்கார்ந்து, பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க பாருங்க. உங்களை என்ன சொல்றது.?”

 

“அடப்பாவி!”

 

“தூங்குங்க மாம்ஸ். நீங்கதான் கல்யாண மாப்பிள்ளை. நான் இல்ல!”

 

“உன்கிட்ட உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன் பாரு. என்னைச் சொல்லணும்!”

 

“சொல்லிக்கோங்க மாம்ஸ்..”

 

“போடா!” என்ற சரண் படுக்கையில் உடலைச் சாய்க்க, அதுவரை தூரமாய் சென்றிருந்த எண்ணங்கள் யாவும் ஓடிவந்து சிந்தையில் ஒட்டிக் கொண்டன.

 

அதில் எழுந்த முதல் வினா, ‘மௌனியிடம் எப்படி, எப்பொழுது உண்மை உரைப்பது?’ என்பது தான்.

 

மெலிதான பெருமூச்சு ஒன்றை விட்டு அவன் இமைகளை மூடிக்கொள்ள, புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தான் கணியன்.

 

சற்று முன்னர் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அரங்கம், தற்பொழுது அமைதியின் வசம் தஞ்சம் அடைந்து இருந்தது.

 

இது போன்ற தருணங்களில் எல்லாம் அவன் முதலில் தேடுவது தனது புகைப்படக் கருவியைத் தான். இந்நொடியில் அது இல்லாமல் போக, ஏதோ கையை இழந்தது போல் உணர்ந்தான்.

 

இன்னும் கருவியானது விமலிடமே இருப்பது நினைவிற்கு வர, இளையவனைத் தேடிச் சென்றான்.

 

திருமண நாள் அழகாய் விடிந்தது. 

 

மூன்று மணிக்கு எல்லாம் பெண்ணை எழுப்பி, தயாராக துவங்கி விட்டனர். 

 

சரண் இரவில் சிறிது நேரம் மட்டுமே ஓய்வு எடுத்தான். மணமேடை அலங்காரத்தில் இருந்து திருமண நாளிற்கான விருந்து ஏற்பாடு வரை அனைத்தையும் பார்வையிட்டபடியே துயில் தொலைத்து சுற்றிக்  கொண்டு இருந்தான்.

 

நான்கு மணிக்கு வந்து சேர்ந்த அருண் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு, “போயி, கொஞ்ச நேரம் தூங்கு. இல்லேனா மணமேடையில ஃபேஷ் டல்லா இருக்கும்!” என நண்பனை அனுப்பி விட்டான்.

 

விமல் அன்னைக்குத் துணையாய் இருந்து, அவர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருந்தான். 

 

முதல் நாள் நடந்த நிகழ்வினால் மருத்துவர் அளித்திருந்த சிகிச்சையின் காரணமாக, கணியன் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.

 

“ரெஸ்ட் எடுக்கட்டும். கோயிலுக்குக் கிளம்புறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி எழுப்பிக்கலாம். அந்த டைம் போதும்ல, அவன் ரெடியாக!” என மௌனிதான் உரைத்து இருந்தாள்.

 

அந்நேரத்தில் அவளின் கைப்பேசி ஒலிக்க எடுத்து செவியில் பொருத்தினாள். மறுபுறம் சரண்.

 

“ஹலோ..”

 

“எதுவும் தேவையா மோனி.?”

 

“இல்லப்பா.”

 

“சரி, ஏதாவது தேவைப்பட்டா அருணுக்குக் கால் பண்ணு. அவன் செஞ்சு தருவான்.”

 

“ம்ம்.. நீங்க.?”

 

“இப்பதான் ரூமுக்கே வந்தேன். அஞ்சரைக்குத் தான கோவிலுக்குப் போகணும்? அதுவரை ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு.”

 

அவளுமே இரவில் அவன் வேலை பார்த்ததை அறிவாள் என்பதால், “சரி, படுங்க. நான் அஞ்சு மணியைப் போல கால் பண்ணி எழுப்புறேன்.”

 

“ஓகேமா.” என்றவன் பேச்சை முடித்துவிட்டு பெயருக்கு என்று கண்களை மூட, உடல் அயற்ச்சி உடனே அவனைத் தூக்கத்தின் வசம் இழுத்துக் கொண்டது.

 

மணப்பெண் அறையின் கதவு தட்டப்பட, ரஞ்சனி திறந்து நோக்கினாள்.

 

வாயிலில் தேநீர் குவளைகள் அடுக்கிய தட்டோடு நின்று இருந்தான் அருண்.

 

முகம் மலர்ந்தவள், ‘தேங்க் காட். இப்பதான் டீ குடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். கரெக்டா கொண்டு வந்துட்டீங்க?”

 

“அதுசரி! வேலை மெனக்கெட்டு சமையல்காரர் கிட்ட போடச் சொல்லி, வாங்கிட்டு வந்தது நான். தேங்க்ஸ் மட்டும் காடுக்கா?”

 

சின்னதாய் சிரித்தவள், “ஓகே ஓகே.. தேங்க்ஸ் மிஸ்டர்… ஸாரி, நேம் மறந்திடுச்சு.”

 

“அருண்!” என தனது பெயரை உரைத்தான் ஆடவன்.

 

“தேங்க்ஸ் மிஸ்டர் அருண்!” என்று உரைத்து தேநீரை வாங்கிக் கொண்டவள், “நான்..”

 

“ரஞ்சனி! மௌனியோட ஃப்ரெண்ட்.” என அவளைப் பற்றியும் மொழிந்தான்.

 

“யா.. எப்பா, உங்களுக்கு நல்ல மெமரி பவர். பேரை எல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க.?”

 

பதிலிற்குச் சிரித்தவன் தலை அசைத்துச் செல்ல,  மணப்பெண்ணிற்கான அலங்கார பணிகள் துரித கதியில் நடந்தன.

 

சரியான நேரத்திற்கு சரண், கணியன் என ஒவ்வொருவரும் எழுந்து விட, மங்கல நாண் பூட்டும் நிகழ்விற்காக கோவிலிற்குச் செல்ல தயாராகினர்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
28
+1
4
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்