Loading

அத்தியாயம் 34

 

 

கைகளைக் கட்டிக்கொண்டு தன் முன்னே விடைக்காக நின்றவளிற்கு ‘என்ன சமாதானம் உரைப்பது?’ என புரியாமல் விழித்தான் அருண்.

 

“அண்ணா அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று மீண்டும் வினவினாள் ரோகிணி.

 

“இதைச் சொல்லலாமானு தெரியலயே ம்மா.?”

 

“அப்படி சொல்லக் கூடாத அளவுக்கு என்ன விஷயம்?”

 

“திருப்பியும் கேட்கிற பார்த்தியா?” என அவன் பாவமாய் பார்க்க, “யார்கிட்டயும் சொல்லக் கூடாதுங்கிறது சரண் அண்ணாவோட ஆர்டர்!” என்றான் தமையனின் அருகே நின்றிருந்த திவாகர்.

 

அவள் குழப்பத்துடன் நோக்க.. கணியன், பாகீரதி மற்றும் வசந்தியுடன் உரையாடிக் கொண்டிருப்பதை கவனித்த அருண், “நடந்த விஷயத்தை பத்தி நீ வீட்டுல எதுவும் சொன்னியா ரோகிணிமா.?” எனக் கேட்டான்.

 

அவனின் கண்கள் சென்ற இடத்தைப் பின்தொடர்ந்தவள், “இல்ல!”

 

“இதைப்பத்தி இனிப் பேச வோணாம்.”

 

“ஆனா அண்ணா.?”

 

“சென்னையில் என்ன நடந்துச்சுனு சரண் யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்லிட்டான். சோ, நிச்சயம் நானும் திவாவும் சொல்ல மாட்டோம். ஆனா இதை தவிர்த்து, நான் ஒரு விஷயம் சொல்லுறேன். தப்பு செஞ்சவன் எல்லாம், தப்பானவன் இல்ல. நானும் ஒன்னு ரெண்டு தப்பு செஞ்சிருக்கேன். நம்மளை மீறி ஒரு சில விஷயங்கள் நடந்துடும். இன்னைக்கு கணியன் செஞ்சதும் அப்படியான ஒன்னுதான். இதை இப்படியே விட்டுடு.” என்றவனின் சொற்களில் பாவையின் மனம் சமாதானம் அடைய மறுக்க, எதுவும் பேசாது அங்கிருந்து நகர்ந்தாள்.

 

கீழே இருந்தவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு மெல்ல மணமேடைக்கு ஏறினான் கணியன்.

 

அவனின் வருகைக்காகவே காத்திருந்த மௌனிகா, “என்ன ஆச்சு? நெத்தியில எப்படி அடிபட்டுச்சு?” எனக் காயத்தைத் தொட்டுப் பார்த்து, “இவன் உங்கக்கூட இருக்கிறதா தான, விமல் எனக்கு கால் பண்ணி சொன்னான்? நாம மேடைக்கு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு? நீங்க எதுவும் சொல்லல.?” என்று கணியனிடம் தொடங்கிய வினாக்களை சரணிடம் முடித்திட, ஆடவன் மறுமொழி உரைக்க இயலாது தவித்தான்.

 

“வர்ற வழியில சின்னதா ஒரு ஆக்ஸிடெண்ட் அக்கா. அதான் இந்த காயம்!” என மாமனிற்கு உதவிட முன் வந்தான் இளையவன்.

 

சரணின் புறம் அவள் திரும்பிப் பார்த்த பார்வையில், ‘ஏன் என்னிடம் சொல்லவில்லை?’ என்ற கேள்வி தொக்கி நிற்க, “ஆக்ஸிடெண்ட் பண்ணது நான்தான்!” என கணியனின் வழியிலேயே சென்று, ‘தன்மீது தான் தவறு!’ என்பதை ஒப்புக் கொண்டான் அவன்.

 

அவள் அடுத்து எதுவும் கேட்கும் முன்னர், “அக்கா அது அன்எக்ஸ்பெட்டடா நடந்திடுச்சு. பாருங்க, எனக்குத்தான் ஒன்னும் ஆகலயே? நல்லாதான இருக்கேன். இப்ப, உடனே இதைப்பத்திப் பேசணுமா என்ன?” என முந்திக் கொண்டு, விசாரணைக்குத் தற்காலிகமாய் முற்றுப்புள்ளி வைத்தான் கணியன். 

 

“ஸாரி மோனி!” என்று சரண் பாவையின் காதோரம் சரிந்து உரைத்திட, “அதை எதுக்கு என்கிட்ட சொல்லுறீங்க..?” என உடன்பிறவா தம்பியைக் கண்களால் காட்டினாள்.

 

இருவரையும் கவனித்த கணியன், “அதெல்லாம், மாம்ஸ் வேணும்கிற அளவுக்குச் சொல்லிட்டாரு. ஃப்ரீயா விடுங்க அக்கா!” என்று சூழலின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றான்.

 

முகத்தில் வியப்பு உருவெடுக்க, “ஹேய்.. அவரை என்னனு சொன்ன.?”

 

“அக்காவோட ஹஸ்பண்ட் மாமா இல்லையா? அதான், மாமாவை சுருக்கி மாம்ஸ் ஆக்கிட்டேன். நல்லா இருக்குல்ல.?” என வினவிட, சட்டென்று சிரித்தாள்.

 

பாவையின் சிரிப்பு அருகே இருந்த ஆடவனின் இதழ்களிலும் முறுவலை வர வைக்க, “ஹான்.. இப்ப எப்படி இருக்கு, பார்க்க? ரெண்டு பேரும் ஃபங்ஷன் முடியிற வரைக்கும் இந்த சிரிப்பை அப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க! நான் போயி ஃபேமிலி மெம்பர்ஸ் கூட ஜாயிண் ஆகிக்கிறேன்!” என்றுவிட்டு இறங்கிச் சென்றான்.

 

அதுவரை குற்ற உணர்வினால் சிரிக்கக்கூட மறந்திருந்த சரண், மௌனியிடம் முழுமையாய் இல்லாவிடினும், ‘கணியனின் காயத்திற்குத் தான்தான் காரணம்!’ என்ற பாதி உண்மையை உரைத்ததில் சற்றே மனம் லேசாகி இருந்தான்.

 

நடந்ததைக் குடும்பத்தார் அனைவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.

 

இருவரையும் சிரிக்க வைத்துவிட்டு வந்தவனை, கூர்ந்து நோக்கினாள் ரோகிணி. பெண்ணவளின் பார்வைத் தாக்கத்தால் கணியன் சட்டென்று அவள் இருந்த திசையில் திரும்பிப் பார்த்திட, அதில் ரோகிக்குத்தான் காரணம் இன்றி ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

சிறிது நேரத்தில் சேகரனின் குடும்பத்தாரும் வந்து சேர, விழா எவ்வித சலசலப்பும் இன்றி அமைதியாய் நடந்து முடிந்தது.

 

விருந்தினர்கள் யாவரும் உணவருந்தி முடித்ததை உறுதிசெய்து கொண்டு, குடும்பத்தார் உணவு கூடத்தில் வரிசையாய் அமர்ந்தனர்.

 

பரிமாறும் பொறுப்பை.. விமல், அருண், திவாகர் மூவரும் ஏற்று இருந்தனர்.

 

தனக்கு இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த ரோகிணியைக் கவனித்த மௌனி, அவளின் தோளில் லேசாய் தட்டிட, திரும்பிப் பார்த்தாள்.

 

“என்ன அண்ணி.?”

 

“என்னாச்சு ரோகிக்கு?”

 

“ஏன், ஒன்னும் ஆகலயே?”

 

“இல்லையே? நான் ஃபங்க்ஷன் ஹாலுக்கு வந்தப்ப, என்னை இன்வைட் பண்ண பொண்ணுக்கும்? இப்ப பக்கத்துல உட்கார்ந்து இருக்க பொண்ணுக்கும் நிறைய வித்தியாசம் தெரியிது.”

 

மெலிதாய்ப் புன்னகைத்தவள், “அப்படி என்ன வித்தியாசம் அண்ணி?”

 

“என் பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டு, நானா வாயை திறக்கற வரைக்கும், நீ பேசாம இருக்கியே? அதுவே பெரிய வித்தியாசம் இல்லையா.?””

 

ரோகிணி புன்னகைத்திட, வரிசையாய் உணவைப் பரிமாறிச் சென்றனர்.

 

அனைவரும் உண்பதில் கவனமாகி விட, சிறிதுநேரம் அமைதியானது அவ்விடம்.

 

“ஏண்டா நல்லவனே? பொண்ணு வீட்டு சார்பா நான்தான் ஃபோட்டோ எடுக்கப் போறேன். அப்படி இப்படினு சென்னையில இருக்கும் போது கதை அளந்துக்கிட்டு இருந்த? இப்ப என்னனா, வந்ததும் ஆக்ஸிடெண்ட்டுனு வலியை வாங்கி சேர்த்துக்கிட்டு, அதை மறந்துட்டியாக்கும்?” என ரஞ்சனி வினவிட, அவளின் குரல் சற்று அதிகப்படியாய் ஒலித்ததில் கூடி இருந்தவர்களின் கவனம் கணியனின் பக்கம் திரும்பியது.

 

“நடந்த விஷயத்தால பிளாங்க் அவுட் ஆனது மாதிரி ஆகிடுச்சு. ஃபோட்டோ எடுக்கணும்னு தோணவே இல்ல. நாளைக்கு மேரேஜையும், அப்புறம் நடக்குற ஃபங்ஷன்ஸையும் எடுத்துடலாம். என்ன மாம்ஸ் ஓகேவா உங்களுக்கு? பர்மிஷன் உண்டா எனக்கு?” என சரணிடம் வினவ, புன்னகையில் பதிலளித்தான் அவன். 

 

“மாம்ஸ், ஓகே சொல்லியாச்சு. அத்தை, வசந்தி ஆன்ட்டி, விமல் நீங்க எல்லாம் என்ன சொல்லுறீங்க?”

 

“மௌனிக்குச் சரின்னா, எங்களுக்கும் சரிதான்! இதுல கேட்க என்ன இருக்கு.?” என பாகீரதி மற்றவர்களிற்ஙகும் சேர்த்தே சம்மதம் சொல்ல, “அதென்ன எல்லாரையும் கேட்டுட்டு, என்னோட நாத்தனாரை மட்டும் விட்டுட்ட?” என்று வினவினாள் மௌனி.

 

“நாத்தனாரா, அது யாரு.?”

 

அருகே இருந்தவளைக் கைக்காட்டி, “உனக்கு இண்ட்ரோ கொடுக்கல இல்ல? இது ரோகிணி, சரணோட சிஸ்டர்.” என அறிமுகம் செய்திட, உணவை விழுங்கி கொண்டு இருந்த ஆடவனிற்கு புரை ஏறியது.

 

இருமியபடி அவளைப் பார்த்தவன் சிறிது நீரை அருந்திவிட்டு, “மாம்ஸோட சிஸ்டரா? அப்ப.?” என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி அருணை நோக்கினான்.

 

“பார்த்து சாப்பிடுடா!” என அருகே இருந்த யாமினி தம்பியின் முதுகில் வருடி கொடுக்க, ரோகினியைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றான்.

 

‘அதனால தான் மாம்ஸுக்கு அவ்வளவு கோபம் வந்துச்சா? கட்டிக்க போற பொண்ணுக்காக சந்துருவோட வீட்டுக்கே போனவரு, கூடப் பிறந்த தங்கச்சிக்காக என்ன எல்லாம் செய்வாரு?’ என்று எண்ணிட, “கணி ஓகே தான?” என வினவினாள் மௌனி.

 

“ஓகேதான் அக்கா.” என்று உரைத்தவன், ‘ஃப்ரெண்டோட சிஸ்டர்னு சொன்னதுக்கு, ஏன் மூனு பேரும் அமைதியா இருந்தாங்க?’ என மனதோடு எண்ணியபடி சரணைப் பார்த்தான்.

 

மெலிதான புன்னகையுடன் அவன் உணவில் கவனமாய் இருக்க, “ரோகி, இவன் கணியன். என்னோட படி ரஞ்சனியோட அத்தைப் பையன். எனக்குத் தம்பி மாதிரி. மாதிரி என்ன, தம்பி தான். இவங்க ரெண்டு பேரும் கிடைச்சதுல இருந்து, நான் தனியா இருக்கேன்ற எண்ணம் வந்ததே இல்ல. எனக்காக எதுவும் செய்யிவாங்க. 

 

சரண் ஊருக்கு வந்திருந்தப்ப, ரஞ்சு அவரை கொஸ்டினா கேட்டுப் படுத்தி எடுத்துட்டா. கணி எனக்காக சண்டைப் போட்டு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்தான்!” என்று அவளிற்கு ஆடவனை அறிமுகம் செய்தாள்.

 

‘போலீஸ் ஸ்டேஷனுக்கா?’ எனத் தோன்றிட, சிந்தனையுடன் நோக்கினாள்.

 

உணவை முடித்து மெல்ல ஒவ்வொருவராய் எழுந்து சென்றனர்.

 

சேகரன், குடும்பத்தோடு ஒரு மூன்றாம் மனிதனைப் போல் வந்துவிட்டுக் கிளம்பத் தயாரானார்.

 

மகனது நடவடிக்கையைக் கவனித்த ரெங்கநாயகி, “இப்படியா செய்வீங்க புருஷனும் பொண்டாட்டியும்? பெத்தவங்க இல்லாத பிள்ள. நீங்கதான தாயா தந்தையா நின்னு எல்லாத்தையும் செய்யணும்? ஏதோ சொந்தக்காரங்க கணக்கா வந்து போறீங்க? 

 

சொல்லக்கூடாது தான், ஆனாலும் சொல்லுறேன். இதுவே லாவண்யா இந்த மாதிரி ஒரு நிலைமையில நின்னிருந்தா, உன்னோட அண்ணன் சங்கரன் சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்திருக்க மாட்டான்” என்றுவிட்டு செல்ல, சேகரன் எந்த எதிர்வினையும் செய்யாது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

 

கணவனை நோக்கிய அர்ச்சனா, “என்ன உட்கார்ந்துடீங்க?”

 

அவர் எதிர்பார்ப்புடன், “நாம, ராத்திரிக்கு இங்கேயே தங்கிப்போமே?”

 

“என்ன, அண்ணே பொண்ணு மேல திடீர்னு பாசம் கொட்டுது?”

 

“அந்தப் பிள்ளைக்காக இல்ல. அம்மாக்காக. ஏற்கனவே முடியாதவங்க, அவங்களை இங்க தனியா விட்டுட்டுப் போகணுமானு தான் யோசனை. என்ன இருந்தாலும் அண்ணனும் அண்ணியும் போனதுக்கு அப்புறம், அம்மாவுக்கும் உனக்கும் இடையில ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவங்களை இப்பவரைப் பார்க்கிறது நீதான?”

 

“என்ன செய்ய, பிடி இருக்கிறது அவங்க கையில இல்ல.? சொத்து மொத்தத்தையும் பொண்டாட்டிக்கிட்ட இல்ல கொடுத்துட்டுப் போயிட்டாரு உங்க அப்பா.?” எனப் பெருமூச்சு விட்டபடி அர்ச்சனாவும் இருக்கையில் அமர்ந்தார்.

 

‘ஈன்றவர்களின் பேச்சு இப்போதைக்கு முடியாது!’ எனத் தோன்றியதால், லாவண்யா அங்கிருந்து மெல்ல நகர, பிரீத்தியும் மணமேடை அலங்காரத்தை வேடிக்கைப் பார்க்க ஆர்வமாய் சென்றாள்.

 

உறவுகள் உண்டு முடித்துச் செல்ல, பரிமாறிய மூவரும் பந்தியில் அமர்ந்தனர். கணியன் தான் அவர்களிற்கு எடுத்து வைத்தான்.

 

விமல் உண்ணத் துவங்க, “ஏண்டா, ரோகிணி உனக்கு அக்காவா.?”

 

“ஆமா மாமா, ஏன் கேட்குறீங்க?”

 

“என்கிட்ட சொல்லவே இல்ல நீ.?”

 

சற்றே சிந்தித்தவன், “சொல்லலையா?” என்றுவிட்டு உணவில் கவனமாக, “இவனை!” எனப் பல்லைக் கடித்த கணி, அருகே இருந்தவனை அழைத்தான்.

 

“அண்ணா..”

 

அருண் கேள்வியாய் நோக்க, “நீங்களும் ஏன் சொல்லல?”

 

“அது அவ்வளவு பெரிய விஷயமா என்ன?”

 

“விளையாடாதீங்க. மாம்ஸும் விமலும் இருக்கும் போது, உங்களுக்கு ஏன் கால் பண்ணச்சு அந்த பொண்ணு?”

 

“ரெண்டு பேரும் கல்யாண வேலையில பிஸி. அவங்கக்கிட்ட சொல்லி பிரச்சனையைப் பெருசாக்க வேண்டாம்னு எனக்கு மெசேஜ் பண்ணா.”

 

“ஓ.. உங்களை முதல்ல கூப்பிடவும், நான் உங்க தங்கச்சினு நினைச்சிட்டேன்.”

 

“ரோகி எனக்கும் தங்கச்சி தாண்டா.”

 

“அதுசரி! எனக்கு ஒரு அக்கா மாதிரி, உங்களுக்கு ஒரு தங்கச்சி!”

 

மூவரும் சிரிக்க, “இவரு தான் திவாகரா? ரஞ்சனி சொன்னா, நடந்ததை!” என விசாரிக்க, “ஆமா. என்னோட சித்தப்பா பையன்!” என்று அறிமுகம் செய்தான் அருண்.

 

திவாவைப் பார்த்துப் புன்னகைத்தவன், “என்னைப் பத்தித் தெரிஞ்சா பின்னாடியாவது,, ரோகிணி யாருனு சொல்லி இருக்கலாம்ல அண்ணா?” என மீண்டும் மூத்தவனின் பக்கம் திரும்பினான்.

 

“சரணோட தங்கச்சினு தெரிஞ்சா, நீ எதுவும் வருத்தப் படுவியோனு தான் சொல்லல.” என்று விளக்கம் தர, “ம்ம்..” என்று எதைப் பற்றியோ சிந்தித்தவாறே பக்கவாட்டில் ஏதோ நிழலாடுவதை உணர்ந்து நோக்கினான்.

 

கைகளைக் கட்டியபடி நின்று, கணியனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ரோகிணி.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
25
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

    1. Author

      எஸ் மா. சென்னையில சந்துரு வீட்டுக்குப் போனப்ப சரணுக்கு ஹெல்ப் பண்ண ஒருத்தன் வந்தானே?