Loading

காலம் தாண்டிய பயணம் 34

 

 

அவனது குரலில் அப்படியே தோட்டத்தில் நின்றிருந்தவரின் அருகில் வந்தான் மித்ரன்.

 

“ம்ம்ம்க்கும்” என்று தொண்டையை செருமி அவன் வரவை உணர்த்தியவனோ “நான் சொன்னதப் பத்தி என்ன யோசிச்சு இருக்கீங்க” என்று கேட்டான்.

 

அவனைத் திரும்பி முறைத்தவரோ “தகவல் சொல்லுறது போலத்தான சொன்ன நீ, இதுல நான் என்ன நினைக்கிறேன்னு கேள்வி வேற, நிச்சயம் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். ஊர் பேர் தெரியாதவன் எல்லாம் இந்தக் காசிநாதன்  மருமகனா? உன்னையே இந்தக் குடும்பத்துக்கு ஏன் அந்த அடங்கா பிடரி கொண்டு வந்தான்னு யோசிச்சிட்டு இருக்கேன். இதுல நீ எங்க இருந்தோ கூட்டிட்டு வந்து புள்ளைன்னு சொல்லிச் சீராட்டிட்டு இருக்குற அவனுக்கு என் பொண்ணக் குடுக்கணுமா?” என்று ஏகத்தாளமாய் பேசியவரின் பேச்சில் தோன்றிய கோபத்தை கரத்தை இறுகப் பற்றி அடக்கியனான் தேவ் மித்ரன்.

 

“இங்க பாருங்க, உங்களுக்கு ஒவ்வொரு முறையும் சொல்லிட்டு இருக்க முடியாது. அவன் என் பையன் என்னோட யாழ், இன்னொரு வாட்டி அவனை இப்படி பேசுனீங்க” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவனின் முகம் ரௌத்திரத்தை தத்தெடுத்திருந்தது.

 

அதில் அவர் சற்று மிரண்டு தான் போனார்.

 

அவன் எப்போதும் இவர்களிடம் ஒரு ஒதுக்கத்துடன் தான் நடப்பான்.

 

இவர்களுடன் தான் ஏன் பேச வேண்டும் என்ற ஒரு ஒதுக்கம் தான். அவர்கள் குணத்திலும் கருத்திலும் சிறிதும் அவனுக்கு உடன்பாடு இல்லை என்னும் போது அவர்களுடன் பேசினால் என்ன பேசவிட்டால் என்ன என்ற எண்ணம் தான் அவனுக்கு…

 

ஆனால் இதோ அவன் மகனுகாக  இந்த ஒரு விடயம் தான் அவன் அவரிடம் கேட்டது, இல்லை இல்லை தகவல் சொன்னது.

 

அவனுக்கு மகன் என்று வருகையில் கோப தாபம் எல்லாம் இரண்டாம் பட்சம் தானே!

 

யாழினியின் விருப்பத்துக்காகவும் இனியாவிற்காகவும் தான் அவன் இங்கே வருவதும் கூட…

 

அதனால் அவனை அவர் சாதாரணம் போல் எண்ணி விட்டார் போலும், இந்தக் கோபத்தில் கொஞ்சம் அரண்டு விட்டார் தான்.

 

ஆனாலும் விடாமல் “என்னது உன் மகனா? கல்யாணம் முடிச்ச அன்னைக்கே எங்கயோ அடிபட்டுக் கிடந்தான்னு கூட்டிட்டு வந்த சரி, அதோட விடாம கூடயே வெச்சிருந்து மகன்னு சொல்லுற, பன்னெண்டு வயசுல திடீர்னு எங்க இருந்து குதிச்சானாம் புள்ள, இதுல அந்த வெட்கம் கேட்டவளும் கூடச் சேர்ந்துட்டு மகன்னு சீராட்டுறா, தராதரம் தெரியாத ஆளுங்கனா இப்படித்தான்” என்று அவர் வெறுப்பை உமிழ்ந்தார்.

 

“இங்கப் பாருங்க, உங்கள மாதிரி ஆட்களுக்கு எல்லாம் உறவுகளோட புரிதலையும்  உணர்வுகளோட  அருமையையும் எப்போவுமே  சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதெல்லாம் உங்களுக்குப் புரியப் போறதும் இல்லை… எங்களோட பிணைப்பு எப்படிப்பட்டதுனு உங்களுக்கு ப்ரூப் பண்ண வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனக்கும் என் யாழுக்கும் அவன் மூத்த மகன், பொண்ணோட தகப்பனா நிச்சயத்துக்கு உங்களுக்குத் தகவல் சொல்ல வேண்டியது என்னோட கடமை, வர்றதும் வராம போறதும் உங்க விருப்பம், ஆனால் இத நிறுத்த ஏதாச்சும் தகிடுதித்தம் பண்ணீங்க அப்பறம் என்ன நடக்கும்னு நான் சொல்லணும்னு இல்லை” என்று சிறிது இடைவெளி விட்டவன்,

 

“எதுக்கும் இப்போவே ஒன்னு ரெண்டு மூனுனு எண்ணிப்பழகுங்க… தேவப்படும்” என்று நக்கலாய்ச் சொல்லி அங்கிருந்து சென்றிருந்தான்.

 

காசிநாதனின் நிலையோ பல்லு பிடிங்கப்பட்ட பாம்பின் நிலைதான்…

 

ஊரில் அத்தனை மதிப்போடு வாழ்ந்தவருக்கு இந்தச் சில ஆண்டுகளாக எந்த மதிப்பும் கிடைப்பதில்லை…

 

அவருக்குப் பின் வால் பிடித்தபடி ‘மானம்டா, மரியாதைடா’ என்று சுற்றிய கூட்டம் எல்லாம் இப்போது அவர்கள் வேலையைப் பார்த்துக் கடந்து விட்டனர்.

 

‘சும்மா இருந்தால் தானே வாய் அது பாட்டுக்குக் கண்டதை பேசும்’ என்று யாழினி அவரவருக்கு ஏற்ற வேலை சிலதை பட்டணத்தில் பார்த்துக் கொடுத்திருக்க, அதில் சற்று பணத்தைப் பார்த்தவர்கள் கொஞ்சம் மாறித்தான் போயினர்.

 

‘முற்றாக மாறி விட்டனாரா?’ என்று கேட்டால் இல்லை தான், ஆனாலும் சிறிதளவிலேயேனும் மாறி இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியே!

 

அவர்களது சேர்க்கையை ஒழித்தால் ஓரளவுக்கு அவர்களாவது முன்னேறுவர் என்பது அவள் எண்ணம்.

 

தந்தை முயன்று முடியாமல் போனதை தான் ஒரு சிறு துளி அளவேனும் அடைந்திருக்கிறோமே!

 

இது அவளது தந்தைக்காக அவள் செய்வது. அந்த வகையில்  அவளுக்கு சற்று மன நிம்மதியும் கூட,

 

___________

 

 

மித்ரன் அங்கே தங்கி இருந்த அவர்களது பண்ணை வீட்டை இன்னும் சற்று பெரிதுபடுத்தி அவன் குடும்பம் அங்கே தங்கும் வகையில் தான் மித்ரன் விரிவு படுத்தி இருந்தான்.

 

எப்போது இங்கே வந்தாலும் அவர்கள் இரவு தூங்குவதற்கு இங்கே வந்து விடுவார்கள், இன்றும் அப்படித்தான்…

 

இரவு உணவு அங்கே விஜயாவின் அம்மாவின் கைப்பக்குவத்தில் உண்டுவிட்டு இங்கே வந்திருந்தனர்.

 

“அத்தை அம்மாக்கு நீதான் அத்த சரி, பேசும்போது எப்படி வாயடைச்சு நின்னுச்சு பாரேன், ஊர்ல உள்ள எல்லாரையும் குறை பேசியே காலத்த ஓட்டிட்டு இருந்திச்சு இப்போ பாரு வாய திறக்கவே பாடு படுது, நீ மாஸ் அத்தை” என்றவள் உணவு உண்ணும் நேரம் வள்ளி பேச முடியாமல் முழித்தபடி நின்ற நிலையை எண்ணி எண்ணி சத்தமாய் சிரித்தாள்…

 

 

 

 

சற்று முன் வீட்டில் பெரிய விருந்தையே விஜயாவின் தாய் கோமதி ஏற்பாடு செய்திருக்க, உள்ளே கடுகடு என்று தான் வள்ளி அமர்ந்திருந்தார்.

 

இத்தனைக்கும் அவர் சொந்த செலவில் தான் கோழி அடித்துக் குழம்பு வைத்திருந்தார் கோமதி.

 

அந்த வீட்டில் தன் மகளைச் சக மனிஷியாக நன்றாகப் பார்த்துக்கொள்ளும் யாழினியின் மீதி அவருக்குச் சற்று பாசம் அதிகம் தான், அதனை இப்படி அவள் ஊருக்கு வரும் நேரங்களின் காட்டி விடுவார்.

 

சாப்பாடு பரிமாற முன்னே வள்ளியை சாப்பிட அழைக்கச் சென்றவரைத் தடுத்த யாழினியோ “அட என்னக்கா நீங்க, எங்க அண்ணி எப்பேர்ப்பட்டவங்க அவங்கள போய்ச் சாப்பிட கூப்பிடுறீங்களே, உங்க வீட்டுல எங்க வாரிசையே இருக்க வேணாம்னு இங்க கொண்டு வந்து ராஜாவாட்டம் வெச்சிருக்காங்க, அப்படி இருக்கும்போது உங்க வீட்டு தண்ணிய குடிச்சு அங்கேயே சாப்பிட்டு வளர்ந்த அந்தக் கோழிய கையாள தொடுவாங்களா? சாப்பிடக் கூப்பிட்டு சங்கடப் படுத்தாம வந்து எங்களுக்குச் சாப்பாடு போடுங்க” என்றாள் படு நக்கலாக…

 

வள்ளி அருகே அமர்ந்திருந்த இளைய மருமகள் சுபாஷினியோ “பார்த்தீங்களா அத்தை அவங்களுக்கு இருக்க கொழுப்ப, அவ குழந்தையை நீங்க இங்க கூட்டிட்டு வந்தத எப்படி வத்த வெச்சிருக்கா பாருங்க, அவளைச் சும்மா விடாதீங்க அத்தை, இவங்க சப்போர்ட் இருக்குனு கொஞ்சம் ஓவரா தான் ஆடுறா” என்று அந்த நேரத்திலும் விஜயாவைக் குத்தம் சொல்லி மாமியாரை ஏற்றி விட்டாள்.

 

“என்ன சின்ன மகளே அங்க என்ன சத்தம்?  உன் மாமியா  சாப்பிடாம நீயும் சாப்பிட மாட்டியோ? அப்போ பாசம் தான், நீ என்ன பண்ணுற போய் எங்களுக்கு நல்லதா பார்த்து வாழை இலை நாலு பறிச்சிட்டு வா” என்க, அவள் சொல்வதை செய்ய விருப்பம் இல்லை என்றாலும் அவள் கால்கள் தன்னால் நகர்ந்தது.

 

பின்னே அவள் கணவன் கிரிதரன் ஏதோ வியாபாரம் செய்கிறேன் பேர்வழி என்று யாரிடமோ பணத்தை கொடுத்து ஏமாந்திருக்க, அதனைக் கொடுத்து உதவியவள் அவள் அல்லவா?

 

கொடுத்தவள் ஒன்றும் சும்மா கொடுக்க வில்லையே தவணை முறையில் பணத்தை தர வேண்டும் என்று எழுதி வேறு வாங்கி இருந்தாள், அதில் இரண்டு தவணைப்பணம் வேறு இன்னும் கட்டி இருக்கவில்லை.

 

இந்த விடயம் இங்கே யாருக்கும் தெரியாமல்  இருக்க, இப்போது போய் அவளிடம் சண்டைக்கு நிற்க அவளுக்கு என்ன பைத்தியமா?  அடங்கித்தான் போக வேண்டிய நிலை, இருந்தாலும் மாமியாருக்கு மணி கட்டும் வேலையை மட்டும் சரியாகச் செய்தாள்.

 

தான் குறுக்கே பேசப் போய்ப் பணத்தை கேட்டு நின்றால் என்ன செய்வது? அப்படி மட்டும் நடந்தால் கிரிதரன் அவளே கொன்றே விடுவான்.  இப்போதெல்லாம் அத்தனை பணக் கஷ்டம். ஊரெல்லாம் கடன் வேறு. இருக்கும் நிலையில் வீணாக எந்த வேலையும் இழுத்து விடாமல் தப்பிக்கொள்ளவே பார்த்தாள்.

 

அதனாலேயே யாழினி சொன்ன வேலையைச் செய்து வந்திருந்தாள்.

 

ஒருபக்கம் இந்த நிலையில் தன்னை நிறுத்திய கணவன்மேல் கோபமாய் வந்தது அவளுக்கு…

 

தலை வாழை இலை போட்டு ஒரு விருந்தே உண்டு விட்டாள் யாழினி, இடையிடையே சப்புக்கொட்டுவதும்  ‘ஆஹா ஓஹோ’ என்று சமையலை புகழ்வதும் இன்னும் இன்னும் கேட்டு வாங்கி உண்பதும் என அவள் செய்த அட்டூழியங்களின் அங்கிருந்தவர்களுக்கு புன்னகை தான்…

 

அதிலும் மித்ரன் அவளைக் கண்களால் நிறுத்தும் படி செல்லமாய் மிரட்ட வேறு செய்ய, எதையும் கண்டுகொண்டாளில்லை…

 

மகிழுக்கோ அத்தனை மகிழ்வு, முன்பு அவனுடைய ஸ்பைசியை இவர்கள் படுத்திய பாட்டைச் சிறிதளவு என்றாலும் அவள் வாயினாலே கேட்டிருக்கிறானே!

 

அதிலும் நாட்பது வயதுக் காரனோடு அவளுக்குத் திருமணம் வேறு பேசி இருந்ததவர்கள் ஆகிற்றே, இன்று புதியாய் மாற்றம் பெற்றவைகளில் அந்த நிகழ்வுகள் ஏதும் நிகழவில்லை என்றாலும், முன்பு செய்ததற்கு இப்படியாவது  அவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில் உள்ளுக்குள் கொண்டாட்டம் தான்.

 

இவர்களுக்கே இப்படி என்றால், இனியாவை சொல்லவே வேண்டாம் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடியே அமர்ந்திருந்தாள்.

 

__________

 

அங்கே அடக்கி இருந்த புன்னகை தான் இங்கே பண்ணை வீடு வந்ததும் வெடித்திருந்தது.

 

இன்னும் சிரிப்பை முடித்தபாடில்லை…

 

வெளியே வீட்டின் திண்ணையில் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

 

அவளது புன்னகையைப் பார்த்த மித்ரன் “போதும்டா டோல், பாரு சிரிச்சு சிரிச்சு கண்ணால தண்ணி கூட வந்துடிச்சு போ, போய்த் தூங்கு காலைல கோயிலுக்குப் போகணும்ல” என்று அவள் தலையில் கை வைத்தபடியே சொன்னவன் உள்ளே சென்று விட்டான்.

 

அவளும் அவன் பேச்சுக்கிணங்கி உள்ளே சென்று விட, அவள் புன்னகையை ஆசைத்தீரப் பார்த்துக் கொண்டிருந்த மகிழோ ‘இந்த மித்துக்கு நேரம் காலம் இல்லாம குறுக்க வர்றதே வேலையா போயிடிச்சு, அவ்வளவு சிரிச்ச முகமா இருந்தாளே! அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கே, கண்ட்ரோல் மகி கண்ட்ரோல்’ என்று மனதில் புலம்பியவன் வெளியே திண்ணையிலேயே அமர்ந்து கொண்டான்.

 

அவன் மனக்குமுறலை கணித்தவன் போல, “என்னடா மச்சான் உள்ளுக்குள்ள உன் மித்துவுக்கு கடும் அர்ச்சனை பண்ணுற போல” என்று நக்கலாய் அசோக் கேட்க,

 

இவனோ இருக்கும் கடுப்பில்  ‘மூடு’ என்பதாய் சைகை செய்தான்.

 

அடுத்து அவன் ஏதோ பேச வர, மகிழ் “ஷில்பா, உன் புருஷன் நர்ஸ் கீதாவ பத்திக் கேக்குறான் என்னனு கேளு” என்று உள்ளே குரல் கொடுத்தான்.

 

அவன் வாயை பாய்ந்து மூடிய அசோக் “அடேய் போக சொன்னா நானே போகப்போறேன். ஏன் டா கோர்த்து விடுற, பழைய கோபத்தை கிளறி விடாதடா பக்கி. இவ என் பொண்டாட்டின்னு தெரியாம இவகிட்டயே எனக்கு லவ் லெட்டர் கொடுத்து விட்டிருக்காளே அந்த கீதாவ சொல்லணும்” என்று அசோக் அவன் பாட்டுக்குப் புலம்ப,

 

“அப்போ சாருக்கு என்கிட்ட கொடுக்காம வேற யார்கிட்டயும்  கொடுக்கலனு ரொம்ப வருத்தமோ” என்று அங்கே ஷில்பா வந்ததில், நண்பனை பார்த்து முறைத்தவனோ,

 

“இப்போ உனக்கு குளு குளுன்னு இருக்குமே!” என்று வார்த்தையைக் கடித்து துப்பியபடி மனைவியை சமாதானம் செய்ய அவளுடன் உள்ளே நுழைந்து இருந்தான்.

 

 

அதன்பின் அனைவரும் அவர் அவர் அறைக்குள் நுழைந்து கொள்ள, தூங்கும் பிள்ளைகளைப் பார்த்து வெளியே வந்த மித்ரனோ “என்ன சார் இங்க உக்காந்திருக்கீங்க?” என்று கேட்டபடி மகிழ் அருகே அமர்ந்தான்.

 

அவன் அமர்ந்ததும் தான் தாமதம், அவன் மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்ட மகிழோ மித்ரனின் கரத்தை எடுத்து அவன் கேசத்துக்குள் நுழைத்துக் கொண்டான்.

 

மித்ரனும் புன்னகையுடன் அவன் கேசத்தை கோதிக் கொடுத்தபடியே “என்ன யாழ், தூக்கம் வரலையா இங்கயே படுத்துட்ட?” என்று கேட்டான்.

 

“கொஞ்ச நேரம் பேசாதப்பா” என்று மித்ரனின் கரத்தைப் பிடித்துத் தனக்குள் வைத்துக் கொண்டான்.

 

மித்ரனும் புன்னகையுடன் மகனையே பார்த்திருந்தான்.

 

எப்போதும் அவர்கள் அப்படி தானே! அவர்கள் உலகில் அவர்களே!

 

மகனின் மனதை ஏதோ ஒன்று அரிக்கிறது என்று அவனுக்கும் புரிந்தது. ஆனால் காரணம் புரியவில்லை…

 

‘மகன் எப்படியும் தன்னிடம் சொல்லுவான்’ என்ற நம்பிக்கையுடன் அமைதியாய் அவனுக்கான நேரத்தைக் கொடுத்துக் கார்த்திருக்க தொடங்கினான் மித்ரன்…

 

 

காதலை அணைக்கும்…

 

ஆஷா சாரா…

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்