
காலம் தாண்டிய பயணம் 30
அங்கே அலுவலகத்தில் தன் உயர் அதிகாரி முன்னே அமர்ந்திருந்தான் தேவ் மித்ரன்.
அவன் பார்வையில் அத்தனை தீட்சண்யம்…
எதிரே இருந்த குமரவேலுக்கு விடயத்தைச் சொல்லவே சற்று பயம் இருந்தது என்னவோ உண்மைதான். இருந்தும் சமாளித்து விடலாம் என்றே எண்ணி இருந்தார்.
ஆனால் சாதாரணம் போல் அமர்ந்திருந்தவனின் பார்வை அப்படி இல்லையோ என்ற விம்பத்தை அவருக்குக் கொடுக்க, சற்று நடுங்கித் தான் போனார் மனிதர்.
‘நான் பாஸ்ஸா இவன் பாஸ்ஸான்னே புரியல, போயும் போயும் தங்க சிலை இவன் கிட்டயா மாட்டணும், வேற யாரையும் அனுப்பி இருக்கலாம் புதுசா இருக்கானே நமக்குக் கட்டுப்படுவானேனு அனுப்பி வெச்சது நம்ம பிழை தான்’ என்று மனதில் அவனை அர்ச்சித்தவரோ,
வெளியே புன்னகையை சிந்தியபடி “மிஸ்டர் மித்ரன், நமக்குக் கிடைச்ச தங்க சிலை மொத்தமுமே ப்யோர் கோல்ட், கிட்டத் தட்ட அதோட பெறுமதி கோடிக்கணக்குல வரும், அப்படி இருக்குறத அரசாங்கத்துக்குத் தூக்கி கொடுத்தா, மிஞ்சி மிஞ்சிப் போனா நாலு மெடல் வேணும்னா தருவாங்க, அப்பறம் இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச நமக்கு எதுவுமே இல்லை” என்று ஓரளவுக்கு அவனிடம் விடயத்தைச் சொல்லி அவன் முகத்தை ஆராய்ந்தார்.
ஆனால் அந்தோ பரிதாபம் அவன் முகத்தில் அவரால் எத்தனையுமே கண்டுபிடிக்க முடியவில்லை…
அவனோ “எவ்வளவு கஷ்டப்படீங்க சார், சொன்னீங்கனா நானும் கொஞ்சம் தெரிஞ்சிப்பேன்ல?” என்று கேட்டவனின் கேள்வியில் திகைத்தவர் ‘எவ்வளவு பேசியும் எத பிடிச்சிருக்கான் பாரு திமிரு பிடிச்சவன்’ என்று எண்ணியவரோ “பதிமூணு வருசமா உங்களுக்கு அனுமதி தந்து வெயிட் பண்ணேன்லே மித்ரன்” என்றார்.
“அடடே ரொம்ப பெரிய கஷ்டம் தான் சார், வெயிட் பண்ணுறதுக்கும் ஒரு மனசு வேணும் நிச்சயமா. ஆனா என்ன பன்றது சார், இட்ஸ் டைம் கன்சியூமிங் ஒர்க், அந்த ஓலைச்சுவடில உள்ளத வெச்சு அங்க பைரவன் கோட்டைல எங்க தங்க சிலை இருக்குனு கண்டுபிடிக்க இத்தனை வருஷம் ஆகிடிச்சு” என்றான்.
அவரோ இப்போது தான் இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று முழித்தார்.
அவரோ எதையோ பேச அழைத்திருக்க, இவனோ எதிலோ கொண்டு வந்து நிறுத்தி இருந்தானே!
சிறிது நேரத்தின் பின் அவரே குரலைச் செருமியபடி, “அந்த ஓலைச்சுவடில உள்ளது உண்மையா இருக்கும்னு உங்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது நான் தானே மிஸ்டர் மித்ரன் உங்கள அங்க நம்பிக்கையா அனுப்பி வெச்சேன். அப்போ கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச நமக்குத் தானே இது சொந்தம்” என்றவர் நிறுத்த,
மித்ரனோ “மேல சொல்லுங்க சார்” என்று ஊக்கப்படுத்தினான்.
அவருக்கோ அதில் அவன் ஒப்புக்கொண்டு விடுவானோ என்று புன்னகை மலர, “நம்ம அரசாங்கத்துகிட்ட கொடுக்குறது வேஸ்ட் மித்ரன், என் கிளைண்ட் ஒருத்தர் அமெரிக்கால இருக்காரு அவர்கிட்ட இத கொடுத்தோம்னா கோடிக்கணக்குல லாபம் மட்டுமே பார்க்கலாம், ரொம்ப நம்பிக்கையானவரு இதுக்கு முதல் பல டீல் அவர் கூட முடிச்சிருக்கேன். போன வருசம் கண்டுபிடிச்ச பாதிப்பொருள் அங்க தான் போச்சு, சும்மா அரசாங்கத்துகிட்ட கண்துடைப்புக்கு ஒன்னு இரண்டு பொருளைக் காட்டிட்டு மத்தத இப்படி கொடுத்துத் தான் லாபம் பாக்குறோம் நாம. இதுவரை நீங்க ஒத்துக்க மாட்டேங்கிலோன்னு தான் உங்களுக்கு பங்கு வரல, இனிமேல் சேர்ந்து பண்ணுவோம் உங்களுக்கும் வீட்டுக்கே வந்து சேரும். நீங்க என்ன சொல்லுறீங்க?” என்றவர் ஆர்வமாய்ப் பார்த்தார்.
அவனோ “நான் என்னத்த சார் சொல்றது அதான் நீங்க எல்லாத்தையும் சொல்லிடீங்களே! நீங்க சொன்ன எல்லாம் உண்மையா சார்? பலே கில்லாடி சார் நீங்க, உங்களப் போல ஒரு ஆஃபிசர் தான் நம்ம நாட்டுக்குத் தேவை. பணம்னா யாரு வேணான்னு சொல்லுவா? இத முன்னவே நீங்க என்கிட்ட பேசி இருக்கலாம். ஆனா சொல்லாம தப்பு பண்ணிடீங்களே” என்றவனின் பேச்சில் நம்பிக்கை வர,
“அதுக்கென்ன மித்ரன் இனிமேல் சொல்லிட்டா போச்சு” என்றார் புன்னகை முகமாக,
“சூப்பர் சார், அப்பறம் இதுக்கு முதல் எப்படி சார் அரசாங்கத்துக்கு தெரியாம பண்ணீங்க” என்று அவன் ஆர்வம் போல் கேட்க, தன் பெருமை பேச அவருக்கு கசக்குமா என்ன? அத்தனையும் புட்டுப் புட்டு வைத்தார்.
அவர் அனைத்தையும் சொல்லி முடித்ததும் “சும்மா சொல்ல கூடாது சார், நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல, நீங்க எல்லாம் மாமியார் வீட்டுல இருக்க வேண்டிய ஆள்” என்றவனது வார்த்தை இறுதியில் கேலியும் அழுத்தமுமாய் வர, அவருக்கு ஏதோ நெருடலாய் இருந்தது.
அவரோ ஏனென்று புரியாமல் பார்த்திருக்க, அடுத்து அந்த அறைக்குள் நுழைந்த காவல் அதிகாரியைப் பார்த்த குமரவேலுக்கு எல்லாம் புரிந்து போனது.
இருந்தும் வெளிறிய முகத்தை மறைத்தவரோ உள்ளே வந்த காவல் அதிகாரியைப் பார்த்து மரியாதையாய் எழுந்து நிற்க, மித்ரன் வந்திருந்த காவலரோடு கை குலுக்கிக் கொண்டவனோ “உக்காருங்க சார்” என்க,
அவனோ “செழியன்னே கூப்பிடுங்க மித்ரன்” என்று புன்னகைத்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் காவலதிகாரி இளஞ்செழியன்.
செழியனோ “குட் ஜாப் மிஸ்டர் மித்ரன்” என்றபடி குமரவேல் மீது பார்வையைத் திருப்ப, அவரோ “வாங்க சார், என்ன விஷயமா வந்தீங்க?” என்று தன் பதற்றத்தை மறைத்தபடி வினவினார்.
“என்ன மிஸ்டர் குமரவேல் எதுக்கு வந்தேன்னு கூடவே தெரியல, எவ்வளவு அழகா பிளான் எல்லாம் போடுறீங்க, உங்களப் போல ஒரு ஆளுதான் எங்க போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கு தேவைப்படுது நீங்க என்ன பண்றீங்க உங்க வேலைய ரிசைன் பண்ணிட்டு வாங்களேன் மாமியார் வீட்டுக்குப் போகலாம்” என்றான் கேலி நிரம்பிய குரலில்….
“என்ன சார் விளையாடுறீங்களா?” என்று குமரவேல் அப்போதும் விடாமல் பேச,
அவனோ “என்னது விளையாடுறேனா! என்ன மிஸ்டர் குமரவேல், நீங்க தான் நம்ம நாட்டு அரசங்கத்தோட விளையாடுறீங்க, இப்போ என்னடா நான் விளையாடுறேன்னு சொல்லுறீங்க இதெல்லாம் நியாயமா?” என்றான் அவனும் விடாமல்…
குமரவேலுக்கோ இதயம் அடித்துக் கொண்டது. வசமாய் சிக்கிய உணர்வு அவருக்கு, வந்திருக்கும் காவலரின் நேர்மை அவர் அறிந்தது தான்.
கரை படியாத மனிதன் அவன். அவனிடம் பேரம் பேசவும் முடியாது, ஏசிபி இளஞ்செழியன் என்றால் அங்கே தப்பு செய்பவர்களிடம் சற்று நடுக்கம் இருக்கவே செய்யும்…
என்ன செய்வதென்று புரியாமல் தவித்தவரோ “சார் அவனை நம்பாதீங்க அவன் சொன்னது எல்லாம் போய், என் பதவி மேல உள்ள ஆசைல உங்ககிட்ட தப்பு தப்பா என்னபத்தி சொல்லி இருப்பான்” என்றார் மித்ரனைப் பார்த்து…
குரலைச் செருமிய செழியன் “அப்படியா? அவரு தான் சொன்னாரா? மிஸ்டர் மித்ரன் அப்படி என்ன சொன்னாருனு நீங்களே சொல்லிடுங்களேன்” என்று கேலி குரலில் சொன்னவனோ,
மீண்டும் கம்பீரமான குரலில் “அவர் சொல்லல மிஸ்டர் குமரவேலு நீங்க தான் எல்லாம் சொன்னீங்க” என்று நிறுத்தி “என்ன புரியலையா? மித்ரன் என்ன மீட் பண்ண காலைலயே வந்தாரு மிஸ்டர் குமரவேலு, நான் அவருக்குக் கொடுத்த கேமராவுல நீங்க பேசி வாக்குமூலம் கொடுத்தது எல்லாமே ரெகார்ட் ஆகி இருக்கே! நீங்க என்ன பண்றீங்க மாமியார் வீட்டுக்கு வந்துடுங்க நாம அதப்பத்தி சாவகாசமா பேசலாம்” என்று முடிக்க, குமரவேலின் முகத்தில் ஈஈஈ ஆடவில்லை…
மித்ரன் பற்றித் தெரிந்தும் இந்த விடையத்தைப் பேசிய அவர் மடத்தனத்தை எண்ணி நொந்து கொள்ளத்தான் குமரவேலுவினால் இப்போது முடிந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் எல்லாம் குமரவேலு கைதாகி இருக்க, செழியனோ ஊடகத்துக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்.
நிருபர் ஒருவரோ “திடீர்னு இப்படியொரு கைது நடக்க என்ன காரணம் சார்?” என்று கேள்வி எழுப்ப,
“கொஞ்ச நாளாவே நம்ம நாட்டுல கண்டுபிடிக்கப்படுற தொல்பொருட்கள் வெளிநாட்டுக்கு விற்கப்படுறதா எங்களுக்கு ரகசிய தகவல் வந்திச்சி, அந்த விசாரணையின் அடிப்படையில, மிஸ்டர் குமரவேல் மேல தான் எங்களோட சந்தேகம் உறுதியாச்சு ஆனா போதிய ஆதாரம் எதுவும் இல்லாம அவர கைது செய்ய முடியாம இருந்த நேரம் தான் மிஸ்டர் மித்ரன் எங்கள சந்திச்சு பேசுனாரு, இப்போ அவர் உதவியோட நம்ம நாட்டோட வளத்த துஷ்பிரயோகம் பண்ண தேச துரோகிய கையும் களவுமா பிடிக்க முடிஞ்சிது” என்றான் இளஞ்செழியன் மித்ரனை அவர்களுக்கு அறிமுகப் படுத்தியபடி…
அவனது பதிலில் அங்கிருந்த இன்னொரு நிருபரோ நக்கலாய் புன்னகைத்தபடி “என்ன சார் இது பழைய பொருள வெளிநாட்டுக்கு வித்தாருன்னு அவர தேச துரோகினு சொல்லுறீங்க, விட்டா திருடனக் கூடத் தேச துரோகினு சொல்லுவீங்க போல” என்று கேள்வியாய் நிறுத்தினான்.
அவனைத் தீயாய் முறைத்த செழியனோ “படிச்ச உங்க மனநிலை இப்படி கீழ் தரமா இருக்குறதால தான் இப்படியான குற்றவாளிங்க ஈஸியா தப்பிக்கிறாங்க… தாய் நாட்டோட ரகசியத்தை அடுத்த நாட்டு ராணுவத்துகிட்ட சொல்றவன் மட்டுமில்ல தாய் நாட்டோட வளத்தை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்குறவனும் தேச துரோகி தான்… என்னப் பொறுத்த வரை இது தாயோட கற்ப விலை பேசுறதுக்கு சமம்” என்று பதிலடி கொடுத்திருந்தான்.
குமரவேல் கைதாகி எல்லாம் சரியாக முடிந்திருந்த அரைமணி நேரத்துக்கு எல்லாம் மித்ரன் வீட்டுக்கு வந்திருந்தான்.
வீட்டுக்குள் நுழைத்தவனை பின்னிருந்து ஆர்ப்பாட்டமாய் அணைத்துக்கொண்டது இரு கரங்கள்…
அந்தக் கரத்தின் சொந்தக்காரி யாரென்று அறிந்தவனும் “கவிக்குட்டி வந்தாச்சா” என்று அவளைத் தன் முன்னே கொண்டு வந்து அரவணைப்பாய் அணைத்திருந்தான்.
அங்கே மாலதியும் வந்துவிட “வாக்கா, பயணம் எல்லாம் சௌகரியமா இருந்திச்சா? மாமா எப்படி இருக்காரு?” என்று தமக்கையின் நலத்தை பார்வையால் வருடியபடியே வினவினான்.
மாலதியும் “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை மித்து, மாமா நல்லா இருக்காருடா அடுத்த வீக் அவரும் வந்துடுவாரு” என்று சொன்னார்.
அடுத்து சிறிது நேரம் அவர்களுடன் பேசியவன் அறைக்குள் நுழைய, பின்னால் யாழினியும் வந்தாள்.
அவளைச் சுவரஷ்யமாகப் பார்த்தவனோ “என்ன மேடம் வால் பிடிச்சிட்டு பின்னாடியே வர்றீங்க?” என்று வினவ, அவளோ “போங்க தேவ் விளையாடாதீங்க, நானே டென்ஷன்ல இருக்கேன்” என்க,
தன் அருகே நின்றவளின் தோளில் கரங்களைப் போட்டுக் கொண்டவனோ “அப்படி என்ன டென்ஷனாம் என் தங்கத்துக்கு?” என்றான் கேள்வியாய்…
அவன் கரத்தைத் தள்ளி விட்டவள் அவனை அணைத்துக்கொண்டு “போன விஷயம் என்ன ஆச்சு, அவன் எதுவும் பிரச்சனை பண்ணலையே?” என்றாள்.
“அடடே ஐடியா போட்டுக் கொடுத்த சண்டி ராணிக்கு டென்ஷனா நம்புற மாதிரி இல்லையே டீச்சரம்மா” என்று அவள் மூக்கை கடித்து வைத்தவன்,
“அதெல்லாம் பக்காவா முடிஞ்சிது, கொஞ்சம் பார்த்துப் பதமா ட்ரீட் பண்ணுங்கனு ஏசிபி செழியன் கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன்” என்று சொல்ல, கேள்வியாகப் பார்த்தவளின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ்களைப் பதித்தான் அவள் கணவன்.
“ஏனாம்?” என்று முறுக்கிக் கொண்ட மனைவியை இன்னும் அருகில் இழுத்தவன் “பின்ன இந்த அழகு ராணி எனக்கே எனக்கா கிடைக்க அவனும் ஒரு காரணம்ல, தங்க சிலையைத் தேடுன்னு என்ன உன் ஊருக்கு அவன் அவனுப்பலனா, இந்த ஐம்பது கிலோ தங்க சிலை எனக்குக் கிடைச்சிருக்குமா?” என்றவனின் கரம் அவள் வளைவுகளைச் சோதித்தது.
அவன் கரத்தைத் தட்டி விட்டவள் “பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுவானாம்” என்று சொல்ல,
அவனோ “அடிக்கள்ளி இன்னொரு புள்ள வேணும்னா நேரடியாகக் கேளுடி, நம்ம பூக்குட்டிக்கு தம்பி தங்கச்சி யாருன்னா ரெடி பண்ணுவோம், இரண்டும்னாலும் எனக்கு ஓகே தான்” என்று மீண்டும் அவள்மீது கரத்தைப் போட்டுக்கொண்டான்.
அவளோ, “புதுசா முளைச்ச நரை முடி நாலும் உங்க கண்ணுல படலையோ?” என்றவள்,
“பையனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிற வயசு வந்தும் இவருக்கு இப்போ கொஞ்சல்ஸ் கேக்குது” என்று எப்போதும் போல் வாய்க்குள் சீண்டலாய் முணுமுணுத்தாள்.
“ஹெலோ மேடம் ஐ எம் ஜஸ்ட் போர்ட்டி தான்… எனக்குச் சிக்ஸ்ட்டியே ஆனாலும் என் பொண்டாட்டி என் தங்கக்கட்டிய கொஞ்சிட்டே தான் இருப்பேனாம்” என்று அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தான்.
எப்போதும் போல் அவன் காதலில் மயங்கி நின்றிருந்த மனைவியைக் குறும்புடன் பார்த்தவன் “யாரோ சொன்னாங்க பையனுக்குக் கல்யாணம் பண்ணனும்னு இப்போ அவங்களே மாமா ஃபெர்ஃபோர்மன்ஸ்ல மயங்கி நிக்கிறாங்களே” என்று சீண்டினான்.
“நான் கல்யாணம் பண்ணிட்டு வயித்துல பிள்ளையை வெச்சிட்டுப் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன். அந்தக் கஷ்டம் இனிக்குட்டிக்கு வேண்டாம். அவ படிச்சு முடிஞ்சப்பறம் தான் கல்யாணம் பண்ணி வைப்பேன். அதுவரை மகி சிங்கிள் தான். அப்பறம் என் மகனுக்குப் பேர குழந்தையே வந்தாலும் என் தேவ் மேல நான் மயங்கிகிட்டே தான் இருப்பேன். என்ன யார் கேப்பா?” என்று கெத்தாய் சொல்லிக் கணவன் தோளில் கரங்களை மாலையாக்கினாள் மனைவி…
மனைவியின் மனம் அவன் அறியாததா???
“மயங்கலாம் தப்பில்லையே! ஆனா நீ தான் என்னை எப்பவும் மயக்குற மாயக்காரி” என்றவனும் விரும்பியே அவள் கையில் தன்னை கொடுத்து நின்றிருந்தான்.
“ஏன் சொல்லமாட்டீங்க, பதினெட்டு வயசுல என்னை அதையும் இதையும் காட்டி மயக்கி கூட்டிட்டு வந்துட்டு, நான் மாயக்காரியா?” என்று இதழை சுழிக்க,
“அடியேய் சென்சார் இல்லாம பேசிட்டு இருக்க நீ, உனக்கு அப்படி என்னத்த காட்டிட்டேனாம் நான்” என்று வெடித்து சிரித்தவன் அவள் காதில் ஏதோ ரகசியம் சொல்லி, அவள் நெற்றில் முட்டிச் சிரிக்க,
சென்சார் பற்றி பேசியவனது சென்சார் இல்லாத பேச்சில் வந்த வெட்கத்தை மறைத்தவள் “யோசனைய பாரு, உங்கள நம்பி பேசுனேன் பாருங்க என்ன சொல்லணும். போங்க போய் வேலை இருந்தா பாருங்க” என்று அவனை விட்டு நகர்ந்து மடித்து மெத்தையில் வைத்திருந்த சட்டையை மீண்டும் மடிக்கத் தொடங்கினாள்.
அதில் அவள் வெட்கம் புரிந்தவன், பின்னிருந்து அவளை அணைத்து “என்னவாம் என்னை கிழவன்னு சொல்லிட்டு என் பியூட்டி பாட்டி இப்போ வெட்கப்படுறாங்க?” என்று சீண்ட, திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள் அவள்.
காதலை அணைக்கும்…
ஆஷா சாரா…

