Loading

காலம் தாண்டிய பயணம் 29

 

அடுத்த நாள் காலைப் பொழுது அவர்கள் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்த, ஆரவாரம் இல்லாமல் புலர்ந்திருந்தது.

 

அங்கே பைரவன் கோயிலில் சம்மந்தப்பட்ட நால்வருடன் சேர்ந்து துயிலன், பூவிழியென மொத்தமாய் ஆறு பேர் நின்றிருக்க, வான்மீகி, இளவேந்தன்  இருவரும் தியானத்தில் கையில் ஓலைச்சுவடியுடன் அமர்ந்திருந்தனர்.

 

சிறிது நேரத்தில் கண் திறந்த வான்மீகியோ “திரும்பும் காலம் கனிந்து விட்டது மித்ரா! மார்த்தாண்டன் அழிந்து, அதன் பின்னர் வரும் பௌர்ணமி அன்று, அல்லது அவன் அழிந்த பின்னர் வரும் அமாவாசை நாளுக்கு எட்டு நாள் கடந்து வரும் காலாஷ்டமி அன்று, உங்கள் பயணம் நிகழும் என்பது விதி. இதோ இன்று அந்த பௌர்ணமி நாள். இதோ இன்னும் சில நாளிகைகளுக்குள் தங்கள் காலத்துக்கே சென்று விடலாம்” என்றார்.

 

இளவேந்தனோ நேரம் சரியாக வந்துவிட்டது என்பதை வான்மீகிக்கு உணர்த்த, அவரும் இவர்கள் நால்வரையும் பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தார்.

 

யாழினி பூவிழியிடன் சென்று அவளை அணைத்து விடுவித்தவள் “போய்ட்டு வரேன் பூவிழி” என்றாள்.

 

பூவிழியும் புன்னகையுடன் “மகிழ்வுடன் சென்று வா யாழினி, உன் காதல் உன்னிடமே சேர்ந்து விட்டது” என்று ஆனந்தமாய் புன்னகைத்தாள்.

 

அடுத்து துயிலன் அந்த முத்துமாலையை இப்போது மித்ரனின் கரத்தில் வைத்தான்.

 

மார்த்தாண்டனின் அழிவுக்குப் பின் வாளாக உறுமாறிய மாலை மீண்டும் அதன் உருவத்தைப் பெற்றுக்கொண்டிருந்தது.

 

இதோ மித்ரனின் குருதியுடன் மகிழின் குருதியும் கலக்க, மாலை காலம் கடக்கும் ஆயுதமாய் மாறிக் கரும்புகையூடு காலம் கடக்கும் பாதையை உருவாக்கி இருந்தது.

 

நால்வரும் மாறி மாறிப் பார்வையையும் நன்றியையும் அங்கிருந்தவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டவர்களோ முன்னேற ஆண்கள் இருவரும் முதலில் பெண்களை முன்னிறுத்தி அவர்கள் பின்னே  ஆரணாய் நின்றிருந்தனர்.

 

கால்களை எடுத்து உள்ளே வைக்க முன்னே ஒரு நொடி சட்டெனப் பூவிழி மீது பார்வையைப் பதித்த மகிழோ அவசரமாக வான்மீகியிடம் “சாமி அப்போ என் அம்மா அப்பா சாக மாட்டாங்கல்ல, மார்த்தாண்டனால தான அவங்க இறந்தாங்க, அவன் சம்மந்தப்பட்ட விஷயம் மாறும்னா, அவங்க உயிரோட இருப்பாங்கல்ல” என்று ஆர்வத்துடன் கேட்க, அவரோ இடம் வலமாகத் தலையசைத்தார்.

 

அதில் அவன் கண்களில் ‘ஏன்’ என்ற கேள்வி கவலையுடன் பிரதிபலித்தது.

 

“இறந்தவர்கள் மீண்டும் வருவது சாத்தியம் இல்லை மகனே! அது விதியில் மாற்ற முடியாது. உன் தாய் தந்தையும் சரி, மித்ரன் யாழினி கருவில் உருவான உன் பாதி ஆத்மாவும் சரி மீண்டும் உயிர்பெறாது. சம்பவங்களே மாற்றம் பெரும், ஒருவரின் விதி முடிந்து விட்டதெனில் மீண்டும் வர வாய்ப்புக்கள் இல்லை” என்றதும் அவன் முகம் சட்டெனச் சோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

 

தன் வயிற்றில் கை வத்திருந்த யாழினி தேவ்வைப் பார்க்க அவனோ கண்களை மூடி அவளுக்கு தைரியமூட்டினான்.

 

வான்மீகி மகிழின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்கவுமே யாழினியின் முகத்தில் ஒரு ஆர்வம் வந்து போனதைப் பார்த்த வான்மீகி அவளுக்கான பதிலையும் சேர்த்தே கொடுத்திருந்தார்.

 

மகிழோ பார்வையைப் பூவிழியிடமிருந்து திருப்பிக் கொள்ள வெகுவாய் சிரமப்பட்டுப் போனான்.

 

அதனை உணர்ந்து அவன் அருகில் வந்தவளோ “இப்போது என்னை அணைத்துக்கொள்ள என் மகனுக்கு ஆசை தோன்றவில்லையா?” என்று கேட்டுப் புன்னகைக்க, சந்தோசமாய் துளிர்த்து விட்ட கண்ணீருடன் அவளை அணைக்க வந்த மகிழோ “குருவாளால் பரிசு கொடுத்து விட மாட்டீங்களே?” என்ற கேள்வியுடன் ஆதூரமாய் அவளை அணைத்துக் கொண்டான்.

 

ஆத்மார்த்தமான அணைப்பு அது, நேரம் செல்வதை உணர்ந்தவன் அவளை விடுவித்து ‘உங்களோட இந்த ஞாபகம் என்ன விட்டுப் போகாம இருந்தா சந்தோசப்படுவேன் மா’ என்று மனதினுள் எண்ணிக்கொள்ள, அந்த நேரம் சரியாக அவன் தலையில் கைவைத்த பூவிழியோ “உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் மகிழ், உன் தாயாக இல்லாவிட்டாலும்  உன் வாழ்க்கையில் உன்னோடு  வருவேன்” என்றாள்.

 

மகிழ் மனதில் எண்ணிய நொடி, பூவிழியும் அவன் ஆசைக்கு  ஏற்ப ஆசி கொடுத்திருக்க,

 

வான்மீகியோ ‘அவரசப்பட்டுவிட்டாயே’ மகனே என்று மனதினுள் எண்ணிக் கொண்டார்.

 

அதற்குப் பின் எங்கேயும் தடங்கல் இருக்கவில்லை.

 

நால்வரும் அந்தப் பாதையினுள் நுழைந்த அடுத்த நொடி அந்தப் பாதை தன்னால் மூடிக்கொள்ள, வான்மீகியின் உடல் சிறிது சிறிதாகக் காற்றில் கலந்து விமோட்சனம் அடைந்திருந்தது.

 

_________________________

 

வருடம் இரண்டாயிரத்து இருபத்தி நான்கு

 

காரிருளில் கண்களை எத்தனை முயற்சி செய்தும் திறக்க முடியாமல் போக, உடலை யாரோ அழுத்தும் உணர்வு…

 

மூச்சுக்கு வெகுவாய் போராட வேண்டியிருக்க, இதோ அதோவென்று மூச்சு நின்று விடும் போலிருக்க, உடலை அப்படியும் இப்படியும் அசைக்கப் போராடியவனின் முயற்சி அத்தனையும் முயற்சியாகவே கழிந்து விட, கரங்களோ பிடிபட்ட பிடிமானத்தை விடாமல் பற்றிக்கொண்டது.

 

அடுத்த நொடி சட்டென எதிலோ மோதிய உணர்வில், எதிலிருந்தோ விடுபட்ட உணர்வுடன் பட்டெனக் கண்களைத் திறந்து கொண்டான் மகிழ்…

 

கண்களைச் சுற்றிச் சூழல விட்டவனுக்கு சில நாளிகைகள் கழிந்தே அது தன்னறை என்ற சுயம் வந்தது.

 

அவனறையில் மெத்தையை கரங்களுக்குப் பிடிமானமாக இறுக்கிப் பிடித்தபடி படுத்துக்கிடந்தான் அவன்…

 

நிலைமை உணர்ந்து எழுந்தமர்ந்தவனுக்கு நடந்தவை அத்தனையும் ஒன்று விடாமல் நினைவில் இருந்தது.

 

தலை வலி உயிர் போக, தலையைக் கையால் தாங்கியபடி சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டான்.

 

“எனக்கு எப்படி எல்லாமே ஞாபகம் இருக்கு, ஒரு வேளை எல்லாமே கனவா? இவ்வளவு நீளமான கனவு கூட வருமா? இதுல எல்லாம் எது கனவு எது நிஜம்” என்று தனக்குத் தானே குழப்பதில் பிதற்றியவன் எதுவோ தோன்ற, நாட்காட்டியில் பார்வை பதித்தான்.

 

அதுவோ, சரியாக அவன் காலப் பயணம் செய்த நாளைக் காட்டி நின்றது.

 

கூடவே வான்மீகி சொன்னதும் ஞாபகத்தில் வந்தது.

 

“இந்த நாளுக்கே வருவோம்னு தானே சாமி சொன்னாரு அப்போ சாமி சொன்னது அங்க நடந்தது எல்லாமே உண்மையா?” என்று அவனுக்குள்ளே உலன்று கொண்டிருக்க, அவன் கதவு தட்டப்படும் ஓசை…

 

அவனுக்கோ உள்ளே திக் திக் நிமிடங்கள் தான்.

 

மெல்ல எழுந்து கதவைத் திறக்க யாருமே இல்லை…

 

மீண்டும் குழப்பதில் நின்றிருந்தவனின் முன்னே சட்டென ஒரு உருவம் குதிக்க, உண்மையில் பயந்தே தான் போனான் மகிழ் யாழன்.

 

“ஐய்யா ஜாலி, பயந்தியா?  நல்லா பயந்தியா? நான் வர்றன்னு சொல்லியும் ஏர்போர்ட் வரலல நீ, அது கூடப் பரவாயில்லை. நான் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் வெளிய வராம உனக்குத் தூக்கம் வேற கேக்குதா மகி அத்தான்… அதான் குட்டி பனிஷ்மென்ட்” என்று சிரித்தபடி அவன் முன்னே நின்றாள் கவிலயா.

 

மித்ரனின் அக்கா மாலதியின் மகள் அவள்…

 

“கவிக்குட்டி” என்று அழைத்தவனோ  பேசமுடியாமல் நிற்க,  அங்கு வந்த மித்ரனின் தமக்கை மாலதியோ மகளின் முதுகில் ஒரு அடி வைத்து “வன் வீக் முன்னவே வரணும்னு அடம்பிடிச்சு வந்துட்டு அவனைக் குறை சொல்லாம போடி அங்கிட்டு, அங்க உன் அத்தை காஃபி போட்டிருக்காங்க போய்க் குடி” என்று மகளை விரட்டியவர்,

 

மகிழிடம் “நீ ஃபிரஷ் ஆகிட்டு வா மகி, அவ லூசு, நீ வேலை முடிஞ்சி மார்னிங் தான் தூங்குனியாமே யாழினி சொன்னா, வேணும்னா இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன், முகமே வாடிப் போய் இருக்கு” என்றார் மகளின் செயலில் கவலை கொண்டு…

 

“அச்சோ அத்தை, பரவாயில்லை எழுந்துக்குற நேரம் தானே, நான் ஃபிரஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்க அவரும் தலையசைத்துக் கிளம்பி விட்டார்.

 

மீண்டும் உள்ளே நுழைந்து கொண்டவனுக்கோ தலை வலி உயிர் போனது…

 

குளியலறைக்குள் நுழைந்தவனோ கண்ணாடி முன்னே நின்று அவன் உருவத்தையே பார்த்திருந்தான்.

 

அவன் தோற்றத்தில் சிறிது வேறுபாடு, புதிதாய் தாடி மீசையுடன் கூடிய ஒரு தோற்றம், சற்று கம்பீரமாகவே தோன்றியது.

 

எப்போதும் அவன் தாடி வைத்துக்கொண்டதில்லையே! இன்று அப்படிப்பார்க்க, அவனுக்கே ஒரு வேறுபாடு தோன்றியது.

 

தாடியை தடவியபடியே “யாழினி மா இங்க இருக்காங்களா? மார்னிங் தான் தூங்கினேனா? ஏன் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை, புதுசா மாறின எதுவும் என் நினைவுல இல்லையோ? என் நினைவுல இருக்குறது உண்மையிலேயே நடந்திச்சா?” இப்படி பல குழப்பம் அவனுள், வாய்விட்டுத் தன்னை தானே கேட்டும் கொண்டான்.

 

“இது சரி வராது மகி வெளிய போய் என்ன ஏதுனு பார்த்துடு” என்று சொல்லிக்கொண்டவன் அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாம், குளித்துத் தயாராகி சாதாரண உடை ஒன்றுடன் வெளியே வந்தான்.

 

“என்ன மகி வேலைக்கு ரெடி ஆகலையா? ஏதோ முக்கியமான கேஸ் ஒன்னு இருக்கு, ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னியே?” என்று கேட்டபடி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் யாழினி…

 

அவளையே அவன் விடாமல் பார்த்துக்கொண்டிருக்க, “தலையக் கூட நல்லாத் துவட்ட மாட்டியா மகி, உக்காரு இப்படி” என்று அவனுக்கு இருக்கையைக் காட்டி அமரச் செய்தவள், தன் புடவை முந்தானை கொண்டு அவன் தலையைத் துவட்டினாள்.

 

‘இவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா?’ என்று அந்த அதிர்ச்சியில் இருந்தே அவன் மீளாதபோது, இன்னும் அவனை அதிர வைக்கப் பக்கத்து அறையிலிருந்து வெள்ளை நிற சுடிதாரில் தேவதையாய் வெளியே வந்தாள் இனியாள்.

 

அவன் பார்வை இப்போது அவளிடம் தாவி இருந்தது.

 

“ஏன் அத்தை உன் மகனுக்கு இன்னுமா பட்டி டிங்கரின் பண்ணி முடிக்கல நீ, நானே தயாராகி வந்துட்டேன், இனிமேல் எப்போ உன் மகன் வந்து எப்போ என்னைக் காலேஜ்ல  விடுறது. இன்னைக்கு நேரத்துக்கே போகணும்னு சொன்னேன்ல, இதுக்கு தான்  என் டார்லிங் கூடவே போய்க்கிறேன்னு சொன்னேன் யார் கேட்டா” என்றவள் அவனைப் பார்த்து முறைத்தபடி சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.

 

மகிழின் மனசாட்சியோ ‘அம்மாடியோ என் ஸ்பைசி உண்மையிலேயே ஸ்பைசியா மாறி நிக்கிறாளே! முன்ன எல்லாம் பேசுனா காத்து தானே வரும், இப்போ முறைச்சே ஆளக் கொல்லுறாளே!’ என்று உள்ளுக்குள் சுகமாய் அதிர்ந்தது.

 

யாழினியோ “அப்படி ஒன்னும் லேட்டாகிடலடி வாயாடி, இதோ இப்போ வந்துடுவான் என் புள்ள, பூக்குட்டியும் ஸ்கூல் போகணும்ல இனிக்குட்டி, இரண்டு பேரையும் அவனே விட்டுடுவான். முதல்ல சாப்புடு நீ, மாமா இன்னைக்கு பிசினு தானே மகி கூடப் போன்னு நைட்டே சொன்னாங்க. நான் வேற ஊருக்குப் போகணும்னு காலேஜ் லீவ் போட்டுட்டேன் இல்லனா நானே உன்ன விட்டிருப்பேன்” என்றவள் மகனின் தலையை உள்ளர்த்தி முடித்து, இனியாவுக்கு உணவை எடுத்து வைத்தாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையை உணர்ந்த இனியாவோ “என்ன சார் காத்து இந்தப் பக்கம் வீசுது” என்று கேலி பேச, அவள் இப்படி நேரடியாகப் பேசுவாள் என்று எண்ணியிராதவனுக்கு புதையேறியது.

 

அப்போது சரியாக அங்கே வந்த கவிலயாவோ “பார்த்துப் பார்த்து மகி அத்தான், தண்ணி குடி” என்று நீரை எடுத்துக் கொடுக்க, இனியாவின் பார்வை அவர்கள் இருவரையும் சுட்டெரித்தது.

 

இனியாவோ “பார்த்துப் பார்த்து மகி அத்தான்” என்று கவிலயா  போலவே  பழிப்பு காட்டியப்படி, கோபமாய் உணவை விழுங்கிக் கொண்டாள்.

 

“நான் என் அத்தான் கூடப் பேசுனா உனக்கு என்ன காண்டு இனியா” என்று கேலியாய் கவிலயா ஆரம்பிக்க,

 

அடுத்து இனியா ஏதோ சூடாகக் கொடுக்க வாய் எடுப்பதற்குள் யாழினி “போதும் கதை அடிச்சது சீக்கிரம் சாப்புடுங்க ரெண்டு பெரும்” என்று ஒரு சண்டையை தடுத்து நிறுத்தி இருந்தாள்.

 

அத்தையின் பேச்சில் அமைதியாக உண்டாலும் இனியா, தன் முன்னே மகிழுடன் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் கவிலயாவை முறைக்கத் தவரவில்லை…

 

அவளும் இவள் முறைப்பை எல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை, அவளுக்கு அவன் அத்தானிடம் பேச்சு கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது.

 

இதில் மாட்டிக்கொண்டு முழித்தது என்னவோ மகிழ் தான். ஆதியும் புரியாமல் அந்தமும் புரியாமல் அவனும் என்ன தான் செய்வான்???

 

இப்போதைக்கு பேசாமல் உண்ணுவது தான் சரியென உணவில் கவனமாகினான்.

 

எதாவது பேசி மாட்டிக்கொள்ள அவன் தாயராக இல்லை… நடந்த அனைத்தும் தெரியும் வரை அமைதி தான், அவனுக்கு வினா, விடை என எல்லாம்.

 

அடுத்து அவர்கள் அமைதியாக உண்ண, பக்கத்து அறையில் இருந்து பள்ளி உடையில் வெளியே வந்த பத்து வயது குட்டிப் பெண் ஒருத்தி மகிழின் அருகில் இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து “மா… எனக்குச் சாக்லேட் சப்பாத்தி வேணும்” என்றொரு குரலைச் சமையலறைப் பக்கம் கொடுத்தாள்.

 

அவளைப் பார்த்த மகிழுக்கு மீண்டும் அதிர்வு… ‘டேய் மகி இன்னைக்கு நீ அதிர்ச்சி ஆகியே செத்துடுவ போலயே’ என்று எண்ணியவனுக்கு இறுதியாய் பூவிழி சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது…

 

‘உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் மகிழ், உன் தாயாக இல்லாவிட்டாலும்  உன் வாழ்க்கையில் உன்னோடு  வருவேன்’

 

‘அவங்களோட வார்த்தை தான் எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்க காரணமோ? அப்போ அங்க நடந்து எல்லாம் உண்மை தான். சொன்ன மாதிரியே என் கூடவே இருக்குறத்துக்கு தேங்க்ஸ்மா’ என்று எண்ணியபடி பூவிழி ஜாடையில் தன்னருகே அமர்ந்திருந்த குட்டிப் பெண்ணைப் பார்த்திருந்தான்.

 

“டேய் அண்ணா எனக்குச் சின்றெல்லா டோல் வேணும்னு கேட்டிருந்தேன்ல, எப்போ தான்டா வாங்கி தருவ?” என்று கேட்டு அவனைப் பார்த்தவளுக்கு புன்னகையை பரிசாய் கொடுத்தவன் “இன்னைக்கே வாங்கி தரேன், நீ ஸ்கூல் விட்டு வந்ததும் கடைக்குப் போகலாம்” என்று சொல்ல அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தாள் அச்சிறுபெண்.

 

அவள் பார்வை எதுக்கென்றே புரியாமல் முழித்தவன் அவளிடமே “என்னாச்சுடா ஏன் அப்படி பார்க்குற?” என்று கேட்டு வைத்தான்.

 

அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்து “அத நான் கேக்கணும் உனக்கு என்னாச்சுடா அண்ணா? எப்போ பாரு நீ சின்னப் புள்ள இல்லை பூ, பெரிய பொண்ணு டோல் எல்லாம் வெச்சி விளையாடக் கூடாதுனு பாட்டு படிப்ப, இப்போ வாங்கி தரேங்கிற” என்று அதிசயமாய் அவனைப் பார்த்தபடி  பூவிழி கேட்க, இப்போது அவனோ முழித்து வைத்தான்.

 

‘அடேய் மகிழ் என்னடா ஒரு டோல்க்கு போய் அம்மாவ ஏங்க விட்டிருக்க’ என்று அவனைத் திட்டிய மனசாட்சிக்கு பதில் வழங்காதவன் பூவிழியிடம் “இல்லை நீயும் டெய்லி கேக்குறல்ல அதான் வாங்கித் தரலாமேனு யோசிச்சேன், வேணாம்னா விடு” என்றவன் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான்.

 

அவளோ பற்கள் அத்தனையும் காட்டி இளித்தபடி “ஸ்கூல் விட்டு வரும்போது வாங்கிட்டே வந்துடலாம் அண்ணா” என்றாள் பவ்யமாய்…

 

அடுத்து மீண்டும் அமைதி. மகிழின் பார்வை, மிதரனின் அறையைத் தொட்டுத் தொட்டு மீண்டது.

 

அதனைக் கண்ட யாழினியோ “உன் மித்து காலைல நேரத்துக்கே போய்ட்டாங்க மகி, புதுசா ஏதோ ஒரு தங்க சிலை ஒன்னு ஆய்வுல கிடைச்சிருக்காம். அதுல அவர் உயர் அதிகரிக்கும் தேவ்க்கும் ஏதோ முட்டிக்கிச்சு போல, அந்த மீட்டிங்காகத் தான் சீக்கிரமே போய்ட்டாங்க. ஈவினிங் சீக்கிரமே வந்துடுவாங்க, அதனால நாம ஊருக்குப் போறது லேட்டாகாது” என்று சொல்ல, அவனுக்கு ஓரளவுக்குப் புரிந்தது,

 

ஆனால் ‘ஊருக்கு என்றால் பைரவன் கோட்டைக்கா அங்கே எதற்கு?’ என்ற கேள்வியும் உள்ளே வந்து உட்காந்து கொண்டது.

 

அவனை மேலும் யோசிக்க விடாமல் “வரும்போது நகைகடைல நம்ம கிருஷ் குட்டிக்கு ஒரு தங்க செயினும் ஒரு மோதிரமும் வாங்கி வந்துடு மகி, இன்னைக்கு தான் நல்ல நாள்னு இன்னைக்கே எடுத்துக்கலாம்னு வாங்காம காத்திருந்தேன். விஜயாகிட்ட கேட்டுட்டேன் குட்டியோட சைஸ் அனுப்பி இருக்கா, உனக்கு அனுப்பி வைக்கிறேன் பார்த்து எடுத்துடு” என்றாள் யாழினி.

 

இப்போது ‘யார் அந்தக் கிருஷ்குட்டி’ என்ற எண்ணம் கேள்வியாய் அவன் மனதில்…

 

‘எப்பா சாமி, ஒவ்வொரு கேள்விக்குப் பதில் கிடைக்கிறது முன்னவே இன்னொரு கேள்வி வருதே! கடவுளே ஹெல்ப் மீ’ என்று அலறியவன் இனியும் தாங்காது என்பது போல விரைவாக உணவை முடித்து அறைக்குள் ஓடியே விட்டான்.

 

அதன் பின் அவன் தயாராகி வர, இனியா, பூவிழி இருவருடனும் அவன் பயணம் ஆரம்பம் ஆனது.

 

‘நானும் வருகிறேன்’ என்று அடம்பிடித்த கவிலயாவை மாலதி தான் அடக்கி இருந்தார்.

 

முதலில் பூவிழியைப் பள்ளியில் விட்டவனை முறைத்த பூவிழியோ “என் ஸ்கூலுக்கு வழி கூட மறந்துட்டல்ல, இரு அப்பாகிட்ட போட்டுக் கொடுக்குறேன்” என்று கோபமாய் கதவை அடைத்தவள் அங்கிருந்து சென்றிருந்தாள்.

 

அடுத்து பின்னே அமர்ந்திருந்தவள் கண்ணாடியூடு இவனை முறைக்க, அதுவோ ‘அடுத்து என் கல்லூரி எங்கே என்று கேட்டு விடுவாயா?’  என்று மிரட்டியது அவனை…

 

‘ஐயோ எப்படி வந்து சிக்கி இருக்கேன், பழசு ஞாபகம் இருக்குற மாதிரி மாறின புதுசும் ஞாபகத்துல இருந்து தொலைச்சிருக்கலாம்’ என்று அலறியது அவன் மனம்…

 

காதலை அணைக்கும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்