
காலம் தாண்டிய பயணம் 28
நாள் ஒன்று கடந்து இதோ விடிந்தால் அந்த பௌர்ணமி நாள் என்கிற நிலை…
இருள் சூழ்ந்து அந்த ஊரே அமைதியாக இருக்க, என்றும் இல்லாமல் அந்த மக்கள் இருளின் ரம்யத்தை வானை பார்த்து உணர்ந்து கொண்டிருந்தனர்.
தீய சக்தி ராம்ராச்சியமே பூஜ்ஜியம் ஆகி இருந்ததில் பயம் எல்லாம் அவன் ஒருவன் அழிவில் தொலைந்து மறைந்து போயிருக்க, மக்கள் மனதில் நிம்மதி பெருமூச்சு…
இழந்தைவைகளை எண்ணி கவலை இருந்தாலும் இனி வரும் காலங்களின் நிம்மதியான உறக்கம் கண்ணைத் தழுவும் என்ற ஆசுவாசம் அவர்களுக்குள்…
அங்கே வெளியே அனைவரும் அமர்ந்திருக்க, இனியாவைப் பார்வையால் துளைத்தபடி அவள் எதிரில் அமர்ந்திருந்தான் மகிழ்…
வான்மீகி சித்தரும் மற்றவர்களும் நாளைக் காலை நடக்கவிருக்கும் பூஜைக்கான பேச்சுவார்த்தையில் இருந்தனர்.
வான்மீகி, “காலைப் பொழுது புலர்ந்ததும் தங்களுக்கான நேரம் வந்துவிடும் மித்ரா தயாராக இருந்து கொள்ளுங்கள்” என்றார்.
மித்ரனோ “சாமி, நாங்க போறதா இருந்தா எப்போ எந்த நிகழ்வுக்குப் போக முடியும்? அப்படியே போனா இந்த ஞாபகம் எல்லாம் இருக்கும் தானே?” என்று தன் சந்தேகங்களை வினவினான்.
புன்னகைத்த வான்மீகியோ “நீங்கள் தற்போது செய்யவிருப்பது காலப் பயணம் அல்ல மகனே” என்று அவர் சொல்ல, அங்கிருந்தவர்களோ அவரைப் புரியாமல் பார்த்தனர்.
அவரே மீண்டும் “நீங்கள் செல்ல விருப்பது உங்களது புதிய வாழ்க்கைக்கு, எந்த நாளன்று, அந்த முத்து மாலை தங்களை இங்கே அழைத்து வந்ததோ? அதே நாளுக்கே மீண்டும் அழைத்துச் செல்லும், கூடவே கடந்து வந்த பாதையில் காலப் பயணத்துக்காகவே தங்கள் வாழக்கையில் நடந்த நிகழ்வுகள் சந்திப்புகள் எதுவும், புதிதாய் தொடரும் தங்கள் வாழ்வில் இருக்காது” என்றார்.
அப்போதும் அவர் கூறியது அங்கிருந்தவர்களுக்கு தெளிவாகப் புரியாமல் போக, அவர்களது பார்வையில் அதனை உணர்ந்து கொண்டவர்,
மீண்டும் “இப்போது தாங்கள் செல்லவிருப்பது புதிய மாற்றங்களுடனான தங்களது புதிய வாழ்க்கைக்கு, நிச்சயம் அதில் இந்தக் காலப்பயாணத்தை ஒட்டிய நிகழ்வுகள் இருக்காது. மாறிய புதிய விடயங்கள் மட்டுமே உங்கள் நினைவில் இருக்கும். இங்கே நடந்தது எதுவும் தங்கள் நினைவுகளில் இருக்காது”
“தெளிவாகச் சொல்வதென்றால் அந்த முத்து மாலை உங்கள் கையில் கிடைத்த நிகழ்வு எதுவும் மீண்டும் மாறிய உங்கள் வாழ்க்கையில் நடைபெறாது. அதுபோலவே ஒவ்வொரு விடயமும். யாழினி இங்கே வந்தது, தாங்கள் அவளைத் தேடி இங்க வந்தது என எதுவும் நிகழாது. சரியாகச் சொல்வதென்றால் உண்மையில் நீங்கள் வாழ வேண்டிய வாழ்வையே இனி புதிதாக மாறப் போகும் வாழ்வில் வாழ விதிக்கப்படுவீர்கள். இன்ன மாற்றம் என்று சொல்ல முடியாது ஆனால் இந்த ரணங்களின் வடு எங்கேயும் இருக்காது” என்றார் தெளிவாக.
மித்ரனோ “அப்படினா நான் முத்துமாலைய எடுக்கத்தானே யாழ் ஊருக்குப் போனேன். அங்க தான் இவளப் பார்த்துப் பழகிக் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன், அங்க தானே எனக்கு என் யாழும் மகனா கிடைச்சான். அப்போ இது எதுவுமே நடக்காதா?” என்று பதற்றத்துடனும் பயத்துடனும் கேட்டான்.
“நடக்கலாம் ஆனால் அவ்வாறு தான் நடக்கும் என்று எதுவும் இல்லை. அது காலம் போடும் கணக்கு, விளைவு சரியாய் வந்து சேரும். பயம் வேண்டாம் மகனே” என்றார்.
“என்ன சாமி சொல்லுறீங்க, நடக்காம இருக்கலாம்னா என்ன அர்த்தம். அப்போ நான் இவள சேர முடியாதா, மகிழ் என் பையனா என்கூடவே இருக்க மாட்டானா, டோல் என்ன பண்ணுவா? எனக்கு உறுதியா முடிவு வேணும். இவங்க எனக்கு கிடைக்க ஒரு வீதம் வாய்ப்பு கம்மியா இருந்தாலும் நாங்க இங்க இருந்து போக விரும்பல சாமி” என்று உறுதியாக மொழிந்தான்.
மீண்டும் அவர்கள் அவனுக்கு கிடைக்காமல் போக சிறிது வாய்ப்பு இருந்தாலும், அதற்கான வழியை அவன் உருவாக்க விரும்பவில்லை…
அவரோ புன்னகையுடன் “உன் பயம் நியாயமானது தான் மகனே, ஆனால் நிச்சயமாக ஒரு உறுதி மாத்திரம் என்னால் வழங்க முடியும், இனி தங்களை பிரிக்கும் வகையில் காலம் எந்த அசம்பாவிதத்தையும் தங்கள் வாழ்வில் நிகழ்த்தாது. நம்பிக்கையுடன் செல்லுங்கள், உனக்கு இவள் தான் உற்றவள் அது எங்கேயும் எப்போதும் மாறாது. அதே போலவே உன் உறவுகளும்… காலப்பயணம் தொடர்பான விடையங்களில் மாத்திரமே மாறுபாடு நிகழ்ந்திருக்கும். இங்கேயே தாங்கள் இருப்பது என்பது சாத்தியம் இல்லை மகனே! தங்கள் காலத்துக்கு திரும்பி சென்றே ஆக வேண்டும்” என்றார்.
அவனோ அவர் வார்த்தையில் சற்று நம்பிக்கையுடன் அருகில் இருந்த யாழினியின் கரத்தைப் பற்றியவனோ “எனக்கு என்ன சொல்றதுனு தெரியல சாமி. நம்பவும் முடியல, தவிர்க்கவும் முடியல. எதிர்பார்க்காத ஏதேதோ எங்க வாழ்க்கைல நடந்து முடிஞ்சிடிச்சு, இதோ இப்போ இவ என்கூட இருக்கா, எல்லாம் விதிப்படி தான் நடக்குதுனா இதையும் நம்புறோம், எங்க கூடவே இருந்து எங்கள வழிநடத்துறதுக்கு மிக்க நன்றி சாமி” என்றான்.
அவரோ “என் விதிப்பயனே இது தானே மித்ரா, என் பிறவிக்கு விமோட்ஷனம் கிடைக்கப் போவதும் தங்களை நல்ல முறையில் இங்கிருந்து அனுப்பி வைப்பதில் தான். சென்று உறங்குங்கள் பொழுது புலர்ந்ததும் சந்திக்கலாம்” என்க, ஒவ்வொருவராய் அங்கிருந்து அகன்றனர்.
அவர்களுடன் உள்ளே செல்லவிருந்த இனியாவின் கரத்தைப் பற்றிய மகிழ், அங்கே குடிசை ஒன்றின் பின்னே அவளை அழைத்துச் சென்றான்.
“என்ன பண்றீங்க விடுங்க” என்று படபடத்தவளோ கரத்தை விடுவிக்கப் போக, அவனாகவே அவள் கரத்தை விட்டவன், அவனது கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டியப்படி “இப்போ என்ன பண்ணாங்க உன்ன?” என்றான் விஷமப் புன்னகையுடன்…
அவளோ “தள்ளுங்க நான் போகணும்” என்று முன்னே நிற்கும் அவனைப் பார்க்காமல் குனிந்தபடியே சொல்ல,
“போகலாம் என்ன அவசரம், முதல்ல என்ன பாரு ஸ்பைசி” என்றவன் அவளையே குறுகுறுவெனப் பார்த்தான்.
அந்தப் பார்வையின் தீட்சண்யம் அவளை ஏதோ செய்ய, அப்போதும் நிமிர்ந்தாளில்லை
“தனியாவே அழுது முடிக்கணும்னு ஆசைப்படுறியா? கூடச் சேர்ந்து அழ நான் வேண்டாமா” என்றவனின் குரலில், நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள் பெண்ணவள்.
கலங்கி இருந்த அவள் விழிகள் அவனுக்குப் பல கதை சொல்ல, அவள் முகத்தைக் கையில் ஏந்திக் கொண்டவனோ “என்ன சேர்ந்து அழலாமா? இப்போ நீ காரணம் மட்டும் சொல்லு எப்படி கண்ணீர் அருவியா கொட்டுதுனு மட்டும் பாரு” என்றவனின் பேச்சில், அவளிடம் புன்னகை லேசாய் எட்டிப்பார்த்தது.
“இதோ இந்தப் புன்னகை உனக்கு இவ்வளவு அழகா இருக்கும் போது எதுக்கு அழுத?” என்றான்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாதவளோ “நீங்க எப்போ பார்த்தீங்க?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“பேச ஆரம்பிச்சதுல இருந்து ஐயாவோட போகஸ் பூரா உன் மேலதான், அழுதா தெரியாமப் போகுமா? சொல்லு எதுக்கு உன் கண் கலங்கிச்சு?” என்றான் அவன்.
“இங்க இருந்து போனா எல்லாத்தையும் மறந்துடுவோமாமே! உங்களை நான் மறந்துடுவேனா? என் ஞாபகம் உங்களுக்கும் இருக்காதா?” என்று அதே கலக்கத்துடன் கேட்டாள்.
அவன் மனமும் அவர் சொல்லும்போது இதனை எண்ணி சுனங்கத்தானே செய்தது.
ஆனாலும் அவளைத் தேற்ற எண்ணியவன் “அதெல்லாம் உன்ன மறப்பேனா ஸ்பைசி பேபி, உனக்கே தெரியாம ரெண்டு வருசமா உன்னையே நினைச்சிட்டு இருந்தவன் நான், உன்ன எப்படி மறப்பேன் சொல்லு, அதோட சித்தர் என்ன சொன்னாரு, காலப்பயணத்தோட தொடர்பு பட்ட விஷயம் தானே மாறும், அப்படி பார்த்தா உன்ன நான் பார்த்துக் காதலிச்சது எதுவுமே அதுக்கு சம்மந்தம் இல்லையே, அப்போ நான் உன்ன எப்படியும் பார்த்துப் பிடிச்சுபோய் காதலிப்பேன்டா, அதே போல உன்னையும் காதலிக்க வைப்பேன் சரியா? இப்போ மனசப் போட்டுக் குழப்பிக்காம என்னோட ஸ்பைசி பேபி அவளோட ஸ்மைல்ல நினைச்சிட்டே ஸ்மைல் பண்ணுவீங்களாம்” என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச, அதில் தானாக அவள் இதழ் விரிந்தது.
அவள் மனநிலை சீராகி விட்டதை உணர்ந்தவனுக்கோ குறும்பு மேலிட, “அதுசரி என் ஸ்பைசி இன்னும் அவங்க காதல என்கிட்ட சொல்லலையே அப்பறம் எப்படி நான் அவங்களுக்கு என்னை பிடிக்கும்னு தெரிஞ்சிக்கிறதாம்” என்று உல்லாசமான குரலில் வினவினான்.
“அதான் அப்போ சொன்னேனே” என்று ஆரம்பித்தவளுக்கு, அன்றைய நிகழ்வை அவனுக்கு ஞாபகப்படுத்தி விட்டோமே என்று புரிந்து மௌனமாகினாள்.
இந்த நான்கு நாளாய், அவன் செய்ததற்கு வருந்தி ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.
செய்தது ஆத்ரீகன் தான் என்று மித்ரன் அத்தனை எடுத்துச் சொன்னாலும், அதனை ஏற்க முடியாமல் உள்ளே மகிழின் மனம் வருந்தவே செய்தது.
அவனது உடல் தானே அவர்களை அத்தனை வருத்தியது என்ற கவலை அவனுள்…
அவள் விழிகளில் தவறு செய்து விட்ட பதற்றம் புரிய, அவன் முகத்தில் புன்னகை…
அப்போதும் அவனை பற்றி அவன் மனநிலை பற்றி யோசிக்கும் அவள் மீது காதல் தான் பெறுகியது அவனுக்கு…
“அதெல்லாம் இன்னொருக்கா சொல்லலாம். இப்போ எனக்கு கேக்கணும் போல இருக்கே! எங்க ‘ஸ்மைல், ஐ லவ் யூனு’ சொல்லு பார்ப்போம்” என்று அவன் கண்ணடித்துச் சொல்ல, அவன் முகத்தில் கலக்கம் இல்லாமல் காதல் பிறந்ததில் அவள் முகமும் பிரகசித்தது.
அவனோ அவனையே பார்த்திருக்க, “அப்போ கிஸ் பண்ணிட்டு தான் சொல்லுவியா? எனக்கு டபுல் ஓகேப்பா” என்றவனது முகம் இப்போது அவள் முகத்துக்கு மிக அருகில் இருந்தது.
‘தான் எங்கே பேசினோம்?’ என அவளோ புரியாமல் விழிக்க, அடுத்து அவனது கேலிச் சிரிப்பில், அவன் விளையாடுகிறான் என்பது புரிந்தது.
முறைக்க முயன்று தோன்றவள், அவன் பார்வை தந்த வெட்கம் தாளாமல் அங்கிருந்து ஓடப்பார்க்க, இப்போது அவள் மனதை போல அவளது கரமும் அவனிடம் சிக்கிக்கொண்டது.
ஒரே இழுவையில் அவளைத் தன் நெஞ்சில் மோத வைத்தவனோ “சொல்லாம போனா எப்படி பேபி, பிடிக்குமா பிடிக்காதா? கிஸ் தருவியா மாட்டியா?” என்றான் உள்ளே போன மயக்கமான குரலில்…
அந்தக் குரலே அவளை ஏதோ செய்ய, அவன் அண்மையில் அவளுக்கு வார்த்தையே வரவில்லை…
“மௌனம் சம்மதம்னு சொல்லுவாங்களே அப்படி எடுத்துக்கட்டுமாடி?” என்று கேட்டவனது உள்ளங்கை அவள் உள்ளங்கையுடன் பிணைந்து கொள்ள, அவள் தலையோ அவளையும் மீறிச் சம்மதமாய் அசைந்தது.
அந்தப் பாவனையில் அவளை முத்தமிட வேண்டும் என்ற ஆவல் ஆடவனைப் படுத்த, மூளையோ ‘சின்னப்பொண்ணுடா அவ’ என்று அவனைத் திட்டித் தீர்த்தது.
இன்னொரு மனமோ ‘உன் மித்து எவ்வழியோ நீயும் அவ்வழி தானே’ என்று அவள் மீதுள்ள காதலில் முத்தமிட காரணம் எடுத்துக் கொடுத்தது.
தன் எண்ணம் செல்லும் திசையில், எங்கே தன் காதலுக்கு சம்மதம் சொல்லி, தன்னை நெருங்கி நிற்பவளை ‘முத்தமிட்டு விடுவோமோ?’ என்று பயந்து விலகப்பார்க்க, அதுவோ முடிந்தால் தானே!
தன் சட்டையை இறுக்கமாய் பற்றியபடி நின்றவளைக் கண்டு ‘எப்பா சாமி கொல்லுறாளே, விளைவு மோசமாக முதல் விலகிக்கோடா மகிழ்’ என்று எண்ணியவனோ அவள் காதோரம் குனிந்து “என்ன விட்டா தானே போக முடியும் ஸ்பைசி. நீ நிக்குறதப் பார்த்தா கிஸ் வேணும் போலயே” என்று இதழைக் குவித்து அவளை நோக்கி விளையாட்டாய் நெருங்க,
அதில் சுயம் பெற்றவளோ தன் கரத்தை விடுவித்து விலகி ஓடியவள் சட்டென நின்று அவனை நோக்கித் திரும்பி “போகட்டுமா?” என்று அவனிடமே சம்மதம் கேட்டு, ஆடவன் நெஞ்சில் பூகம்பத்தையே உருவாக்கினாள்.
அவனும் பேச்சு வராமல் தலையைச் சம்மதமாய் அசைக்க, அங்கிருந்து சென்று விட்டாள்.
போகும் அவளையே பார்த்தவனது மனதோ காதலில் நழுவி அவள் பின்னே ஓடியது.
காதலை அணைக்கும்…
ஆஷா சாரா…

