Loading

அத்தியாயம் 29

 

இதோ அபர்ஜித் வீட்டை விட்டு ஆஸ்திரேலியா சென்று இரண்டு நாட்கள் முடிந்து இருந்தது.

 

ஒரு வேலை பீச் ஹவுஸில் அவன் இருந்திருந்தால், தன்னால்தானோ என்று பார்கவி நினைக்க கூடும் என்று தான், வேலை விடயமாக ஆஸ்திரேலியா செல்வதாக அவளிடம் தகவலை கடத்த சொல்லி இருந்தான் அஸ்வந்தின் மூலம் .

 

அது அவளுக்கு தெரிய வந்த பின்னர் சற்று இயல்பாகவே இருந்தாள் பார்கவி. ஆனாலும் அஸ்வந்திடமோ செவ்வந்தியிடமோ பேசவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்தாள்.

 

அதே நேரம் பாடசாலை செல்லவும் இல்லை. இரண்டு நாட்கள் அவள் போக்கிற்கு விட்டுப் பிடித்த அஸ்வந்,

 

அன்று மாலை அவள் எப்போதும் போல் பால்கனியில் அமர்ந்திருக்க, சாதாரண டீ ஷர்ட்டும், ட்ராக் பேண்டுமாக வீட்டில் போடும் உடையுடன், கையில் ஃபோனை எடுத்துக் கொண்டு, பார்கவியை அவன் நெருங்க,

 

எப்போதும் அவள் தனிமையில் இருக்கும்போது, ஆறுதலாக துணைக்கு நிற்கின்றேன் என்று அவள் அருகில் நின்று கொள்வான்.

 

அதேபோன்று நிற்க போகின்றான் என்று அவள் அமர்ந்திருக்க “அடியே கொஞ்சம் எந்திரி…” என்று அவன் சொல்ல

 

பார்கவி அவனை முறைதுப் பார்த்து “எதுக்கு?..” என்று கேட்க

 

“ஹா, நான் தோட்டத்துக்கு போகணும்…”

 

“தோட்டத்துக்கு போகணும்னா வெளிய போகணும்.. இங்க இருந்து குதிக்க போறயா?…” என்று கேட்க

 

“அது எல்லாருக்குமான தோட்டம்.. இது எனக்கான தோட்டம்…” என்று அவன் சொல்ல

 

” என்ன உழர்ற.. இந்த நாலு செடியா?..” என்று அங்கு இருந்த தொட்டி செடிகளை காட்டி அவள் கேட்க

 

“மண்டு.. மூளை தான் ஒழுங்கா வேலை செய்யலைன்னா, கண்ணும் ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குதா?…” என்று அவன் கேட்க

 

“இப்ப எதுக்கு தேவை இல்லாம என்கிட்ட வம்பு பண்ற?…” என்று அவள் கோபத்தில் எகிற

 

அவள் உச்சந் தலையில் வலது கையை வைத்து, பால்கனியின் ஒரு அகல பக்கத்தினை காட்டியவன் “இங்க ஸ்டெப்ஸ் இருக்கே நீ பாக்கலயா?…” என்று கேட்க

 

அப்போது தான் எட்டி பார்த்தாள் இரும்புக் கிரில் கம்பி இருந்தாலும் அதோடு சேர்த்து கீழே இறங்க படிகள் இருந்தன.

 

மூன்று அடி அகலத்தில், ஒரு ஓடை போன்று, மேற்புறம் கண்ணாடியால் மறைக்கப்பட்டு, மழை பொழியும் நேரங்களில் கூட நனையாமல் அந்த வழியாக சென்று அஸ்வந் தனக்காக பிரத்தியேகமாக அமைத்துக் கொண்ட தோட்டத்தை அடைய முடியும்.

 

பால்கனியில் இருந்து சற்று எட்டிப் பார்க்கும்போது இறக்கை முளைத்த பூக்களை கண்ணாடி கூண்டில் அடைத்ததை போன்று வகை வகையாக, கலர் கலராக, கண்ணை பறித்தது அந்த தோட்டம்.

 

ஆனால் அதன் முழுமையான அழகைக் காண வேண்டும் என்றால் அருகில் செல்ல வேண்டும். பார்கவி தானாக விலகி நிற்க, உதட்டிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த இரும்பு கம்பியால் ஆன கேட்டை திறந்து கொண்டு படிகளில் இறங்கினான் அஸ்வந்.

 

அவன் அழைக்காமல் அங்கு செல்வதாக வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கியவளை, திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவுதான். அழைக்கவில்லை.

 

அவன் முன்னேற அவனை தானாக பின் தொடர்ந்தன பாவையின் பாதங்கள். 20 படிகள் இறங்கி, 15 அடி நடந்து அந்த கண்ணாடி மலர் கூடாரத்தினுள் நுழைந்தனர் இருவரும்.

 

அங்கு நிறைந்திருந்த கொள்ளை அழகை கூற கம்பனும் வார்த்தை தேடுவான் போலும்.

 

சுற்றிலும் ரோஜா, மல்லிகை, டேஹ்லியா , ஹிபிஸ்கஸ், ஜாபிலி, ஓர்கிட் என பற்பல மணம் வீசும், கண்ணைப் பறிக்கும் பூக்கள்.

 

மூன்று புறம் கண்ணாடியினாலும், ஒரு பக்கம் வலையினாலும் மறைத்து இருக்க, கூரை கூட கண்ணாடி தான்.

 

வெயிலோளி கண்ணாடி வழி உள்ளே விழ, (நாண் மலர்கள் தம்மை தாமே கண்டருளும் மாய உலகம் அது). ஆம் ஒவ்வொரு பூக்களும் இரு முறை மலர்ந்தது போன்று பிரதிபலித்தது அந்த கண்ணாடி மலர் கூண்டு.

 

அங்கு நிலவிய அந்த மந்தகாஷ வாசனையை விவரிக்க முடியாது. கந்தர்வனம் என்று கேள்விப் பட்டிருப்போம். அது இதுதானோ! இது போன்ற வாசனை தான் அங்கு நிலவுமோ என்று தோன்றியது.

 

செடிகள் நேர்த்தியான முறையில் இல்லை. எல்லா வகையான செடிகளும் கலந்து மேலும் கீழுமாக அடுக்கப்பட்டு இருந்தது. அதுதான் அந்த இடத்தை மலர்வனமாக காட்டியது.

 

அது போதாது என்று அந்த தோட்டத்தின் ஓரத்தில் ஒரு ஊஞ்சல். மூன்று அடி அகலத்தில், ஆறு அடி நீளத்தில், மூன்று பக்கம் கதிரையின் அமைப்பு போன்று அலங்கார தடுப்புக் கொண்ட மர ஊஞ்சல். அதில் வைன் சிவப்பு நிற மெல்லிய மென் விரிக்கை விரித்து, இரண்டு குட்டி தலையணைகள் இருந்தது.

 

அந்த இடத்தை மலைத்துப் போய் பார்கவி பார்த்துக் கொண்டிருக்க, அவளை அங்கு அழைத்து வருவதற்காகவே வந்த அஸ்வந் செடிகளை பரிசோதிப்பது போல் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க,

 

கண்களின் பிரமிப்பு மாறாமல் “இந்த தோட்டத்த இப்பதான் பாக்கிறேன்.. யார் இத செட் பண்ணுனா? அத்தையா?…” என்று கேட்க

 

அவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன் “ஏன் தோட்டம் வைக்கணும்னா பொண்ணுங்க தான் வைக்கணுமா?.. இது நான் எனக்காக அமைச்சிக்கிட்டது..வெளி தோட்டத்து வழியாவும் இங்க வரலாம்.. மேடம் தோட்டத்த சுத்தி பாக்கிற மனநிலையிலயா இருந்தீங்க.. இத பாக்க…” என்று கேட்க

 

வியப்பாக அவனைப் பார்த்தவள் “உண்மையாவே நீ தான் இதெல்லாம் உருவாக்கி மெயிண்டன் பண்றியா?…” என்று ஆச்சரியமாக கேட்க

 

“அடியே இது மட்டும் இல்ல.. வெளித்தோட்டத்துல இருக்கிற ஒவ்வொரு செடியுமே நான்தான் வாங்கி வச்சது.. அத அம்மா மெயின்டைன் பண்ணுவாங்க.. இத நான் மட்டும்தான் மெயின்டைன் பண்ணுவேன்.. வேற யாரையும் நான் உள்ள விடுறதில்ல.. இது எனக்கே எனக்கான சொர்க்கம்…” என்று அவன் சிலாகித்து சொல்ல

 

அவனை விழி அகலாமல் ஆச்சரியமாக பார்த்தாள் பார்கவி. தனக்காக சொர்க்கத்தை அமைத்துக் கொண்டேன் என்று கூறும் போது அவன் முகத்தில் எத்தனை பாவனைகள்.

 

இந்த அஸ்வந் அவளுக்கு புதிதாக தெரிந்தான். அவளைப் பொறுத்தவரை அசம்மந்தமாக, எதையும் புரிந்து கொள்ளாத, தான் போக்கிற்கு நடப்பவன் தானே அவன்.

 

ஆனால் அஸ்வந் என்பவன் வேறு.அதன் ஒரு வடிவம் தான் இந்த மென்மையான மலர் தோட்டத்தின் மன்னவன்.

 

அவனிலிருந்து பார்வையை திருப்பிவள் “பரவாயில்லையே உனக்குள்ளேயும் ஒரு ரசனையாளன் இருக்கான்…” என்று சொன்னவள் கண்கள் ஊஞ்சலில் படிய, அதில் அமர்ந்து கொள்ள ஆசை பிறந்தது.

 

இருந்தும் சற்று தயக்கமாக இருக்க, அவள் பூக்களை பார்த்தபடி நகர, அவள் எண்ணம் புரிந்தவன் போல், தானே ஃபோனில் ரிங்டோனை ஒலிக்கவிட்டு, வராத அழைப்பு வந்தது போல் ஃபோனை காதில் வைத்துக் கொண்டு அஸ்வந் தோட்டத்தை விட்டு வெளியேற,

 

அவன் சென்று விட்டான் என்பதை கடைக்கண்ணால் பார்த்து உறுதி செய்தவள் வேகமாக சென்று அந்த மர ஊஞ்சலின் அருகில் நின்றாள்.

 

ஏனோ சிறுபிள்ளை போல் மனது துள்ளி குதித்தது. அஸ்வந் சென்ற திசையை ஒரு முறை திரும்பி பார்த்தவள், அந்த ஊஞ்சலில் மெதுவாக அமர்ந்து கொண்டாள்.

 

மெதுவாக கால்களை உந்தி தள்ளினாள். காற்றின் கைகள் ஊஞ்சலோடு சேர்த்து அவளை தாலாட்ட, தலையை நிமிர்த்தி வானை பார்த்தவாறு, மூச்சுக்காற்றை ஆழ்ந்து சுவாசித்து, கைகள் இரண்டையும் சங்கிலியோடு பிணைத்துக் கொண்டாள்.

 

மலர்களின் சொர்க்கத்தில் தான் மட்டும் ரெக்கை முளைத்த தேவதையாக மிதப்பது போன்ற பிரம்மை பார்கவிக்கு. அங்கு மலர்ந்திருந்த மலர்களை விட மெலிதாக மனது இலக, இதழ்களில் அழகிய புன்னகை. வெகு நாட்கள் கழித்து அவளையும் அறியாமல் மனதார புன்னகைத்தாள்.

 

அதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்தான் அவளவன்.அஸ்வந்திற்கு பார்கவியை பார்க்க அத்தனை இதமாக இருந்தது.

 

அங்கிருந்த பூக்களை விட மென்மையானவள் அவள். இனிமேலாவது அவளை உள்ளங்கையில் வைத்து அன்பாக, காதலாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

 

அவன் நின்றிருந்த சுவரில் இருந்த ஒரு சுவிட்சை அழுத்த, அந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் மட்டும் மழை பொழிந்தது. அதை பார்த்தவள் புன்னகை இன்னும் விரிய, அந்த சாரலின் இசையை காதில் நிறைந்தவாறு வெகு நேரம் அங்கு இருந்தாள்.

 

இரவாகிய பின்னர் சாப்பிடுவதற்கு தான் வீட்டினுள் வந்தாள். அவள் முகத்திலிருந்த இறுக்கம் காணாமல் போயிருந்தது.

 

அடுத்த நாளில் இருந்து பாடசாலை செல்ல தொடங்கினாள்.

 

கண்மணி மாளவிகாவுடன் சாதாரணமாக பழகினாள்.

 

காலை மாலை அவளது பொழுதுகள் தோட்டத்தில் கழிந்தது.

 

அஸ்வந் மனதை ஒருநிலை படுத்த, மகிழ்விக்க அந்தத் தோட்டமே ஒரே மார்க்கம். தனது அலுவலக வேலைகளை கூட அங்கு இருந்துதான் சில நேரம் செய்வான்.

 

ஆனால் இப்போது எல்லாம் பார்கவி தோட்டத்திற்கு வந்தால் தன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்து விடுவான்.

 

தனிமையும், தலையசைத்து கதை பேசும் பூக்களும், நாசி நுழையும் நறுமணமும் இப்போதைக்கு அவளுக்கு போதுமானது என்று நினைத்தான்.

 

நாட்கள் கடந்தது மாதம் ஆனது. அபர்ஜித் சென்று முழுதாக ஒரு மாதம் முடிந்தது. பார்கவி இயல்பு நிலைக்கு மீண்டு இருந்தாள்.

 

அவளாகவே செவ்வந்தியிடம் சென்று பேசினாள். கண்மணி மாளவிகாவுடன் மேலும் நெருக்கமாக பழகினாள்.

 

ஆனால் அஸ்வந்துடன் மட்டும் நெருங்க முடியவில்லை. சிறு சிறு வார்த்தைகள், மெல்லிய புன்னகை என்ற மட்டில் தான் அவனுடனான உறவு இருந்தது.

 

திங்கட்கிழமை. மழை அடித்து பெய்து கொண்டிருக்க, பாடசாலை முடிந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தாள் பார்கவி.

 

எப்போதும் பாடசாலை முடிந்த பின், அவள் பஸ்ஸில் ஏறும் வரை பார்த்து இருந்து, அவள் வீடு வந்து சேரும் வரை அவளை பின் தொடர்வான் அஸ்வந்.

 

இன்றும் அவளை தன் காரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். “வாடினு கூப்பிட்டா வரமாட்டா..மழைற கணத்த பார்த்தா பஸ் வராது போல.. எவ்ளவு நேரம் குளிர்ல இப்படியே நிக்க போற…” என்று புலம்பியவன் அவள் முன்பு காரை கொண்டு வந்து நிறுத்தினான்.

 

அஸ்வந் தான் என்று தெரியும். இருந்தும் ஏதோ ஒரு வீம்பு காரில் ஏறத் தோன்றவில்லை. அவனும் வா என்று அழைக்கவில்லை. பஸ் வந்த பாடும் இல்லை.

 

“ச்சே..இன்னைக்குனு இந்த பஸ்ஸ காணோமே…” என்று நொந்து கொண்டவள், அதற்கு மேலும் காத்திருக்க பிடிக்காமல், அந்த வழியாக வந்த ஆட்டோவிற்கு கையை காட்டினாள். ஆனால் வண்டி நிற்கவில்லை.

 

“கொழுப்ப பாத்தியா.. புருஷன் காரோட காத்திருக்க ஆட்டோக்கு கைய காட்டுறாள்…” என்று அவளைப் பார்த்துக் கொண்டே பொறும,

 

அவன் மனசாட்சியோ (‘நீ வாய திறந்து கூப்பிட வேண்டியதுதானே’) என்றது.

 

‘ஆமா கூப்பிட்டது மகாராணி மனம் இறங்கி வந்துட போறாங்க…’ என்று மனசாட்சியடன் நொடித்துக் கொண்டவன், “வேற வழியில்ல.. தேன் வேணும்னா தேனிக்கிட்ட கொட்டு வாங்க தான் வேணும்..இவள கரெக்ட் பண்ணனும்னா திட்டு வாங்கி தான் ஆகணும்…” என்று கூறியவாறு

 

காரை விட்டு இறங்கி, கையால் தலையை மறைத்தவாறு அவள் அருகில் வந்தவன் “இருநூறு ரூவா” என்றான்.

 

ஆட்டோ ஒன்று கூட நிற்காத எரிச்சலில் இருந்தவள் “என்ன?..” என்றாள் சீற்றமாக.

 

“இல்ல ஆட்டோல தானே போக போற.. இங்க இருந்து நம்ம வீட்டுக்கு போக இருநூறு ரூவா கேட்பாங்க.. அத எனக்கு குடு நானே கார்ல கொண்டு போய் விடுறேன்…” என்று சொல்ல

 

“ஓஹோ! எப்போ இருந்து டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்ச…?” என்று அவள் நக்கல் செய்ய,

 

அவன் முறைத்து பார்க்க, “முறைக்காத வண்டிய எடு…” என்றவள் ‘பொண்டாட்டி கிட்டயே காசு கேக்குறான் கஞ்சப்பையன்…’ என்று முனகியவாறு காரின் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள்.

 

இரண்டு பக்கமும் தலையை ஆட்டி குறும் புன்னகை பூத்தவன், காரை எடுத்தான்.

 

அவளுடனான இரண்டாவது பயணம். வெளியே மழை அடித்துப் பெய்ய, இதயத்தில் இதமாக சாரல் வீசியது.

 

கண்ணாடியினூடு பார்கவியை அவன் பார்க்க, குடைக்குள் நின்று இருந்தாலும் காற்றில் மிதந்து வந்த சாரல் துளிகள் அவள் முகத்தில் முத்தமிட்டு கொண்டிருக்க, முதல் முறையாக காதல் வேட்கை பிறந்தது அவனுள். கீழ் உதட்டை கடித்துக் கொண்டான்.

 

கள்ளத்தனமாக அவளை ரசித்தபடி, மெல்லிய வெட்கம் கலந்த புன்னகையுடன், மெதுவாக நகர்ந்தது அந்த பயணம்.

 

பார்கவி எதேச்சையாக அவனை கவனிக்க, அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். இருந்தும் அவன் அவளை பார்ப்பதை கண்டு கொண்டாள். ஆனால் அதை காட்டிக் கொள்ளவில்லை.

 

‘சொந்த பொண்டாட்டிய திருட்டுத்தனமா சைட் அடிக்கிறதும் ஜாலியாதான் இருக்குப்பா…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவனுள் நிரம்பி வழிந்த காதலின் கணம் தாங்காமல் ரேடியோவை போட்டான்.

 

(ஓரவிழி பார்வை தீபங்களை ஏற்றி வைத்ததோ நெஞ்சோடு இன்று…

தென்றல் என வந்து தொட்டுச் சென்ற காதல் கலந்ததோ மூச்சோடு இன்று…

காதல் என்னும் வார்த்தை, அது வார்த்தை அல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா… 

இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு…..) என்ற பாடல் ஒலிக்க, மலைச்சாரலில் இசை சாரலுடன் காதலுக்காக தூதாக அந்த பயணம்…

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்