
அத்தியாயம் 28
ஒலி கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே ஓடி வந்த சந்துருவின் அன்னை, “ஏய்! என்னப்பா? என்ன நடக்குது இங்க? ஏதோ ஃப்ரெண்ட்ஸ், கல்யாணத்துக்குக் கூப்பிட வந்திருக்கோம்னு சொன்னீங்க? இப்ப என்னனா என் பிள்ளையை போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க?” எனப் பதறிய படி வினவ, “சரண் போதும்! இதை பெரிய இஸ்யூவா ஆக்க வேண்டாம்.” என்றாள் மௌனிகா.
“அண்ணி, இன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்லையே? நீங்க என்ன அதுக்குள்ள போதும்னு சொல்லுறீங்க.?” என திவாகர் கேட்டிட, இரு பெண்களும் அதிர்ச்சியுடன் நோக்கினர்.
“பொண்ணுங்கக்கிட்ட எப்படி மரியாதையா பேசணும்னு தெரியல. உனக்கு எல்லாம் லவ் ஒரு கேடு!” என்று திவா இன்னொரு அறை விட, வலியில் கன்னத்தில் கரம் பதித்து கீழே சரிந்தான் சந்துரு.
“என்ன அண்ணே? மூனு அறைக்கே சுருண்டுட்டான்.?” எனச் சரணிடம் வினவ, “என்னோட மச்சான்காரனும் நல்லா கவனிச்சு விட்டிருப்பான் போல இருக்கு. அதான் பட்டுனு விழுந்துட்டான்!”
திவா சிரிக்க, “ஐயோ! என் பிள்ள! வீட்டுக்குள்ள நுழைஞ்சு ரவுடித்தனம் செய்யிறீங்களா? நான் போலீஸுக்கு ஃபோன் போடுறேன் பாருங்க!” என்று மிரட்டலாய் மொழிந்து கைப்பேசியை எடுத்தார், சந்துருவின் அன்னை.
“ரவுடித்தனமா?” என்று மேலும் சிரித்த திவா, “இந்த ஏரியா ஸ்டேஷன் நம்பர் தெரியுமா? இல்ல, நான் தரவா?”
அவர் திகைப்புடன் பார்க்க, “என்ன ஏதுனு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு போலீஸ்க்கு கால் பண்ணுங்கமா, அப்பதான் கம்பிளைன்ட் கொடுக்க வசதியா இருக்கும்!” என நிதானமாய் உரைத்தான் சரண்.
அவர் அவன் பக்கம் திரும்பிட, “எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க.”
‘என்ன?’ என்பது போல் நோக்கினார்.
“உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, அவளை நல்லபடியா வளர்த்து, படிக்க வச்சு ஆளாக்குறீங்க. அந்த பொண்ணும் பொறுப்பா படிச்சு, நல்ல உத்தியோகத்துக்குப் போயி, கை நிறைய சம்பாதிச்சு, உங்க சொல் பேச்சு கேட்டு நடந்துக்கிறா. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து, ரெண்டு பக்கமும் பிடிச்சுப் போயி நிச்சயம் நடக்குது. இதைக் கேட்கும் போதே, அழகான படம் மாதிரி எவ்வளவு நல்லா இருக்கு? இப்படி ஒரு பொண்ணு, நமக்கும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது இல்ல?”
ஆடவனின் சொற்களில் மௌனியின் விழிகள் கசிந்திட, முகத்தை வேறு புறம் திருப்பி மறைத்தாள். தோழியைக் கண்டு கொண்ட ரஞ்சனி ஆதரவாய் கரத்தைப் பற்றிக் கொள்ள, தொடர்ந்து ஒலித்த சரணின் குரலில் இருவரின் கவனமும் திரும்பியது.
“இந்த டைம்ல, அந்தப் பொண்ணை காதலிக்கிறேன்னு ஒருத்தன் வர்றான். அவளை ஃபாலோ பண்ணி, ஏதாவது தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்கான். தம்பி முறையில இருக்கிற ஒரு பையன்கூடப் பழகுறதைப் பார்த்துட்டு, அசிங்கமா பேசுறான். பொது இடத்துல வச்சு, அவளோட கேரக்டரை தப்பு சொல்லுறான். ஒரு கட்டத்துல அடிக்கவும் செஞ்சிடுறான். இன்னும் இருபது நாள்ல அந்த பொண்ணுக்குக் கல்யாணம், இந்த சூழ்நிலையில அம்மாவா நீங்க செய்வீங்க?”
அவர் ஒன்றும் புரியாது திகைத்துப் பார்க்க, “என்னம்மா? எதுவும் சொல்லாம அமைதியா நிக்கிறீங்க? அதுசரி, நீங்க பொண்ணைப் பெத்து இருந்தா தான? ஆனா, என் வீட்டுல ஒரு பொண்ணு இருக்கா. என்னோட ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும்!”
“தம்பி..” என அவர் தவிப்புடன் அழைக்க, “பாதிக்கப்பட்ட அந்தப் பொண்ணு, தான் கட்டிக்கப் போறவன்கிட்ட எதுவும் சொல்லாம, அவனை ஃபேஸ் பண்ண யோசிச்சுக்கிட்டு தயங்கி அமைதியா இருந்தா, அந்த மாப்பிள்ளை குடும்பம் அவளைப் பத்தி என்ன நினைப்பாங்க?”
அவர் மறுமொழி உரைக்க திடம் இல்லாது அமைதியாய் இருக்க, “அந்தப் பொண்ணு, இதோ!” என்று தன் அருகே இருந்த மௌனியை கைகாட்டியவன், “நான்தான் அவளுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை. என்னோட மனைவிக்கு உங்க மகன் செஞ்ச அநீதிக்கு நியாயம் கேட்டு வந்திருக்கேன். என்ன பதில் சொல்லப் போறீங்க.?” என வினவி, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான் சரண்.
அவ்விடத்தை ஒரு ஆழ்ந்த நிசப்தம் ஆட்கொண்டது.
“எதுக்கு ரெண்டு பேரும் நிக்கிறீங்க?” என்று அவன் மௌனியின் கரத்தைப் பற்ற, பெண்ணவளோ திருதிருவென விழித்தாள்.
“உட்காரு மோனி! எவ்வளவு நேரம் நிப்ப, கால் வலி வரப் போகுது!” எனப் புன்னகைத்திட, அவனின் அருகே தோழியை அமர வைத்துவிட்டு, சற்று இடைவெளி விட்டு தானும் அமர்ந்தாள் ரஞ்சனி.
“நீங்க சொல்லுறது எல்லாம்.?” என்று சரணின் அன்னைக் கேள்வியாய் நிறுத்த, “பிராஸ்ட்டியூட்டாவே இருந்தாலும் ஒரு பொண்ணு நோனு சொன்னா, அது நோ தான். அவளைத் தொடுறது மட்டும் இல்ல, பார்க்கிறது கூட தப்புதான். தான் நேசிக்கிற பொண்ணோட உணர்வுகளை மதிக்கத் தெரியாதவன், எப்படி ஒரு நல்ல ஆம்பளையா இருக்க முடியும்? நீங்க பெத்து, வளர்த்து, ஆளாக்கின உங்க பையன், நல்ல ஆம்பளை இல்லம்மா. இதுல யாரைத் தப்பு சொல்லுறது? தப்பா வளர்ந்த அவனையா? இல்ல, சரி தப்பை நல்ல முறையில சொல்லிக் கொடுக்காத உங்களையா?”
ஓர் அன்னையாகவும் பெண்ணாகவும்.. சரணின் வினாவில் ஆடிப் போனார் அவர்.
எதுவும் சொல்ல வழியில்லாது தலை குனிந்து நிற்க, “இனி, மோனியோட லைன்ல கிராஸ் பண்ணுற வேலையை வச்சுக்காத! என்னோட வார்த்தையையும் மீறி ஏதாவது செஞ்ச, எதுவும் நடக்கலாம். திடீர்னு ஆக்ஸிடெண்ட் நடக்கலாம். அதுல.. கையோ, காலோ, ஏன் உயிரோ கூட போகலாம்!” எனச் சந்துருவை நேரடியாகவே எச்சரித்தான்.
“இதெல்லாம் போலீஸ்கிட்ட சொன்னா, என்ன நடக்கும்னு தெரியுமா?” என்று அவன் விடாது உரைக்க, “என்னை, என்னனு நினைச்ச? அரைமணி நேரத்துல உன்னோட வீட்டு அட்ரஸைக் கண்டுபிடிச்சு கண் முன்னாடி வந்து நிக்கத் தெரிஞ்ச எனக்கு, இந்த விஷயத்தை எல்லாம் எப்படி டீல் பண்ணணும்னு தெரியாதா என்ன?
ரைஸ்மில் நடத்துறவன்னு சாதாரணமா நினைச்சிட்டியா? ரேஷன் கடை வாசல்ல.. படி பத்து ரூபானு அரிசியை வாங்கிட்டுப் போற லேடீஸ்ல இருந்து மூட்டை மூட்டையா அடுத்த ஸ்டேட்டுக்குக் கடத்திக் கொண்டு போற கிரிமினல்ஸ் வரைக்கும் அத்தனை பேரையும் தெரியும். ஊர் பக்கம் இருக்கிறவனால, தலைநகரத்தை ஹேண்டில் பண்ண முடியாதா? நம்ம ஸ்டேட்டோட ரைஸ் மில் ஓனர் அஸோஸியேஷனோட செக்கரட்ரி, நான். நாங்க மனசு வச்சாதான், மொத்த ஸ்டேட்டுமே சாப்பாட்டுல கை வைக்க முடியும்!”
சந்துரு அதிர்ந்து நோக்க.. நிதானமாய் எழுந்து நின்று, “நாளைக்குள்ள என் மச்சான் மேல கொடுத்து இருக்க கம்பிளைண்டைட் வாபஸ் வாங்கிட்டு, உன்னோட திமிர் தனத்தை எல்லாம் ஓரங்கட்டிட்டு அமைதியா இருந்துக்கணும்.!” என்று எச்சரித்து, “இவன் மேல ஒரு கண்ணு வச்சுக்க, திவா. ஏடா கூடமா ஏதாவது செஞ்சா, என்கிட்ட சொல்லணும்னு கூட அவசியம் இல்ல. என்ன செய்யணுமோ, நீயே பார்த்து செஞ்சிடு. உங்க மகன் பத்திரம் ம்மா. இனிமேலாவது கொஞ்சம் சரி தப்பைச் சொல்லி கொடுங்க!” என உரைத்தவன் மௌனியை நோக்கி கை நீட்ட, தயக்கத்துடன் அதனைப் பற்றி எழுந்தாள் அவள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் நால்வரும் வெளியே வந்திருக்க, “உன்னோட நம்பரை மாத்திட்டியா என்ன? கால் பண்ணா போகவே இல்ல? அருண் மூலமா உன்னைப் பிடிக்க வேண்டியதா போச்சு!” என்று திவாகரிம் வினவினான் சரண்.
“அதே நம்பர்தான் அண்ணே! மாத்த எல்லாம் இல்ல. அப்படியே மாத்துனாலும் உங்கக்கிட்ட சொல்லாம இருப்பேனா? ஸ்கிரீன் போயிடுச்சு. சரி, இன்னைக்கு காலையில புதுசு வாங்கிட்டு சிம்மை மாத்திடலாம்னு நினைச்சா, அதுக்குள்ள நீங்க ஃபோனைப் போட்டுட்டீங்க!”
மெலிதாய்ச் சிரித்தவன், “சரி, மோனி இவனோட நம்பர் தர்றேன். வச்சிக்கோ. எதுனாலும் சரி, கால் பண்ணு. உடனே வந்துடுவான்.” என்றிட, தலை அசைத்தாள் அவள்.
“அப்ப, நான் கிளம்புறேன் அண்ணே! அப்பா கால் பண்ணுறதுக்குள்ள போயாகணும்!”
“ஆமா.. நீ, பாக்ஸிங்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்கியே? அப்ப, கடையை யார் பார்த்துக்கிறது?”
“அதெல்லாம் ஆளை வச்சுப் பார்த்துக்கலாம் அண்ணே!”
“பார்த்துடா! கோல்ட் ரேட் ஜெட் வேகத்துல போகுது. உள்ள இருந்து ரெண்டு பாரை உருவுனா கூட, செட்டில் ஆகிடலாம்!”
“அப்படி ஆளையா வேலைக்குப் போடுவேன்? எல்லா பிரான்ச்லயும் வேலை பார்க்கிறவங்களை வாட்ச் பண்ணுறதுக்குனே பசங்களை நிறுத்தி வச்சிருக்கேன். சிசிடிவியைக் கூட ஏமாத்திடலாம். ஆனா பசங்களை முடியாது!”
“சரி சரி!” எனச் சிரித்திட, ‘வர்றேன் அண்ணி, பாஸ் சிஸ்டர்!” என்று இரு பெண்களிடமும் விடைபெற்றுச் சென்றான் திவாகர்.
“அண்ணா, ரொம்ப பெரிய ஆளா இருக்கீங்களே? சொல்லவே இல்ல?” என ரஞ்சனி வியப்புடன் வினவ, “அதுக்கான நான் இன்னாருன்னு போர்டுல எழுதி கழுத்துல மாட்டிக்கிட்டு சுத்தவா முடியும்.?”
“அதெப்படி அண்ணா, சிரிக்காம இப்படி அசால்டா காமெடி பண்ணுறீங்க?”
“என்னை விட, நீ பெரிய ஆளா இருக்கியே? ஒரு செகண்ட்ல, என்னை காமெடியனா ஆக்கிட்ட?”
“அச்சச்சோ! இப்படி சாதாரணமா சொல்லுற வார்த்தையை எல்லாம், டிவிஸ்ட் பண்ணா என் நிலைமை என்ன ஆகிறது? உங்கக்கிட்ட பேசவே முடியாது போலயே?”
அவன் சிரித்து, “ஒன்னும் ஆகாது, இன்னும் கொஞ்க கூட அண்ணன்கிட்ட உரிமையா பேசலாம்!”
ரஞ்சனி புன்னகை முகமாய் தலை அசைக்க, “என்னாச்சு மோனிக்கு? ஏன் சைலண்டாவே இருக்க?” என அதுவரையிலான அவளின் அமைதியைக் கவனித்து வினவினான்.
“நீங்க அஸோஸியேஷன் செக்கரட்ரியா?”
“ம்ம்..”
“ஏன் இதுவரைக்கும் என்கிட்ட சொல்லல?”
“நீ ஏன், என்னைப் பத்தி எதுவும் கேட்கல?”
‘கேட்க வேண்டும் என்று தனக்கு தோன்றவில்லையே? அதை எப்படி அவனிடம் உரைப்பது?’ எனப் புரியாமல் அவள் அமைதியாய் இருக்க, “என்னால சந்துருவை ஹேண்டில் பண்ண முடியாதுனு நினைச்சியா? இல்ல, உன்னோட வார்த்தையை நம்ப மாட்டேன்னு யோசிச்சியா?”
“ரெண்டும் இல்ல. என்னாலயே இதைச் சமாளிக்க முடியும்னு தோணுச்சு. சோ..”
“அது ஓகேதான். ஆனா பாரு, இந்த அளவுக்கு வந்த பின்னாடியாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல?” என்று அவளது வீங்கிய கன்னத்தை வருடியபடி வினவினான்.
“தப்புதான். சொல்லி இருக்கணும். ஆனா..” என அவள் தயங்கி நிறுத்திட, “இதுவரைக்கும் ஆச்சி வருத்தப்படுவாங்கனு உன்னோட கஷ்டங்களை எல்லாம் ஷேர் பண்ணாம இருந்த, சரி. இப்பதான், நான் இருக்கேனே? உன்னைக் கட்டிக்கப் போறவன் சாதாரணமானவன் எல்லாம் இல்ல. அதுனால, நீ எதைப் பத்தியும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. இதுமாதிரி பிரச்சனை வந்தா, பின் விளைவைப் பத்தி எல்லாம் கால்குலேட் பண்ணாத. உனக்கு சரினு தோணுறதைத் தைரியமா செய். அதுக்கு அப்புறம் நடக்கிறதைப் பார்த்துக்குறதுக்கு நான் இருக்கேன், என்ன ஓகேவா.?”
அவள் சட்டென்று சிரித்திட, “ஏய், என்ன சிரிக்கிற?”
“ஒன்னும் இல்ல!” என்றவளின் சிரிப்பு மெல்ல அழுகைக்கு மாற.. அதனைக் கட்டுப்படுத்திய படி, கலங்கிய விழிகளுடன், “தேங்க்ஸ்..” என்றவாறே சரணின் தோளில் தலை சாய்த்தாள் மௌனிகா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பக்கா ஹீரோ மெட்டீரியல் சரண் 💞💞💞💞💞 லவ்லி அப்டேட் 👌👌👌👌