
அத்தியாயம் 31
விடிந்தும் விடியாத புலர் காலை பொழுது அது… பறவைகளின் கீச்சிடும் சத்தத்தில் கண் விழித்தார் சீதா. இளையவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சத்தம் வராமல் எழுந்தவர் காலை கடன்களை முடித்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்தமர்ந்தார்…
அக்கணம் மாடியிலிருந்து யாரோ வரும் அரவம் கேட்டது. புருவங்கள் சுருங்க மாடிப்படியை பார்த்தார். அங்கே வந்து கொண்டிருந்த மகனைக் கண்டதும் “என்னப்பா இந்த நேரத்துல அங்கிருந்து வர? என்னாச்சு?எதுவும் பிரச்சனை இல்லையே” எனக் கேட்டார்..
“அது ஒன்னுமில்லை மா, நைட்டு தூக்கம் வரலைன்னு மாடிக்கு போனேன்” என்றவன் மனமோ ‘நாளைக்கு காலையில நேரமா எழுந்து பசங்களை எழுப்பி விட்டு அவங்களுக்கு யோகா சொல்லிக் கொடுங்க’ என்ற ஆனந்தியின் பேச்சை நினைவுப் படுத்தியது..
நீண்ட பெருமூச்சுடன் “பசங்க எழுந்துட்டங்களா மா” எனக் கேட்டான்.
“தூங்கிட்டு இருக்காங்க தம்பி” என்றதும் சுவற்று கடிகாரத்தை பார்த்தான். ஆறு மணியாக இன்னும் கால் மணிநேரம் இருந்தது…
“எத்தனை மணிக்கு எழுவாங்க” எனக் கேட்டுக் கொண்டே தாயின் அறையை நோக்கி நடந்தான்.
மகனின் பின்னாலயே நடந்தபடி“எப்பவும் ஆறு மணிக்கு எழுந்துடுவாங்க ப்பா” என்றார்.
“ம்ம் சரிம்மா” என்றவன் அறை கதவைத் திறக்கவும் “அம்மா” என்ற சிணுங்களோடு சோழன் எழவும் சரியாக இருந்தது.
“என்னன்னு தெரியல இரண்டு நாளா அம்மா அம்மான்னு சிணுங்கிட்டே இருக்கான் ” சலிப்போடு கூறிய தாயிடம் “நான் பார்த்துக்கிறேன் மா” என்றவன் மெல்லிய புன்னகையோடு மகனை நெருங்கினான்…
பாதி உறக்கத்திலிருந்த குழந்தை தந்தையை கண்டதும் மேலும் சிணுங்கி அவனிடம் வர பார்க்க, சட்டென மகனை நெருங்கி அவனைத் தூக்கிக் கொண்டான் அபி.
“அச்சோ… கையில காயம் இருக்கே ப்பா வலிக்க போகுது” எனக் கூறிக் கொண்டே சோழனை வாங்க முயன்ற சீதாவை வேண்டாமென்று தடுத்தவன், கட்டிலில் சரிந்து மகனை மார்பில் போட்டுக் கொள்ள, அந்த பக்கம் படுத்திருந்த குந்தவியும் தகப்பனின் மீது காலைப் போட்டுக் கொண்டாள்.
மெல்லிய புன்னகையோடு மூவரையும் பார்த்த சீதா, மெல்ல அங்கிருந்து நகந்தார்.
பிள்ளைகளோடு படுத்த அடுத்த நிமிடம் நித்திரை அவனை ஆட்கொள்ள, அவர்களோடு இவனும் உறங்கி போனான்.
மீண்டும் அவன் விழிக்கும் போது பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர்…
அதற்கு பின் அவனுமே வீட்டில் இருக்கவில்லை அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு அலுவலகம் சென்றதால் தவிர்க்க முடியாத வேலைகள் அவனை இழுத்துக் கொண்டன.
என்னதான் ராமன் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டாலும் அபிகென்று வேலைகள் வரிசைக்கட்டி நின்றன… அதனை இன்றே முடிக்க வேண்டுமென்று நினைக்கவில்லை என்றாலும் பாதி அளவிற்காவது முடித்துவிட வேண்டுமென்று நினைத்தான். நேரம் சென்றதே தவிர வேலைகள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே தான் இருந்தது.
உண்மையை சொல்லப்போனால்இந்த வேலைகள் எல்லாம் அவனுக்கு ஒரு வேலையே இல்லை…சில மணி நேரத்தில் முடியும் வேலைகள் தான். ஆனால் இன்றைக்கு இத்தனை இழுத்தடிக்கிறது. இடது கையை மட்டும் வைத்துக் கொண்டு அவனால் எந்த வேலையும் முடிக்க முடியவில்லை.
நேரம் இறக்கை இல்லாமல் பறக்க “சார்” என்றழைத்தபடி உள்ளே நுழைந்தான் ராம்…
“என்ன?” என்பதை போல் புருவத்தை உயர்த்தி பார்த்தான்.
“கிளம்பறேன் சார்?”
“ம்ம்” என்பதோடு மடிக்கணினியில் பார்வையை திருப்ப, ராமோ தயங்கி நின்றான்.
அவனது தயக்கத்தில் “என்னாச்சு?” எனக் கேட்டான்.
“சாரி சார், அன்னைக்கு ஏதோதோ நடந்து போச்சு… அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார்” என்றவனை ஆழ்ந்த பார்த்தான் அபிநயன்..
அதே நேரம் மேலும் தொடர்ந்தான் ராமன் “அன்னைக்கே இதைப்பத்தி உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன் சார். அப்போதைய சூழ்நிலையில உங்ககிட்டயே என்னால பேச முடியல… அடுத்த நாள் உங்க வீட்டுக்கு வரலாம்னு கூட நினைச்சேன். ஆனால் எந்த முகத்தை வைச்சுட்டு உங்களை பார்க்கறதுன்னு தெரியல… அன்னைக்கு நடந்த எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார்… என்னை மன்னிச்சிடுங்க” கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்க, பதில் பேசாமல் அமைதியாக பார்த்தான் அபி..
உண்மையில் அன்றைய நாளைப் பற்றி பேச துளியும் விரும்பமில்லை அபிக்கு. அதுவும் செண்பகத்தின் பேச்சையும், செயலையும் இப்பொழுது நினைத்தாலும் கோபம் வருகிறது… கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே “இதை பத்தி பேச எனக்கு துளியும் விருப்பமில்லை ராம்… கொஞ்ச நாள் போகட்டும் பொறுமையா பேசுவோம்” என்றதும்
‘எதிர்பார்த்தது தான்’ என்பதை போல் பெருமூச்சு விட்டவன் “சரிங்க சார், நான் கிளம்பறேன்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
ராமன் அங்கிருந்து நகர்ந்ததும் இவனும் எழுந்து கொண்டான்… நைட்டு ஷிஃப்ட்டிற்கு வந்திருந்த மேனேஜரிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு வர, பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்…
காலையில் பிள்ளைகள் இருவரும் தன்னை அணைத்துக் கொண்டு படுத்திருந்த காட்சி கண்களுக்குள் விரிய, மெல்லிய புன்னகையோடு தனது அறைக்குள் நுழைந்தான். அடுத்த சில நிமிடங்களில் குளித்துவிட்டு உடை மாற்றி விட்டு பிள்ளைகளின் அறையை நோக்கி நடந்தான்…
அங்கே பிள்ளைகளை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஆனந்தியை கண்டதும் வந்த வழியிலேயே திரும்பி விட்டான். .
“தூங்க வைச்சுட்டு உன் ரூமுக்கு போன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கிறது இல்லை” முனகி கொண்டே படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் என்பது வரவேயில்லை…
புரண்டு புரண்டு படுத்தவன் மணியைப் பார்த்தான் பதினொரு மணியை தாண்டி சென்று கொண்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பெருமூச்சுடன் மீண்டும் குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான்.
****
கதவு திறக்கும் சத்தத்தில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த ஆனந்தி திடுக்கிட்டு எழுந்தாள்.
அக்கணம், அறைக்குள் நுழைந்தவனைக் கண்டதும் சட்டென தொற்றிக் கொண்டது ஓர் பயம்… மனதின் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “என்னாச்சு சார்? கை வலிக்குதா” கரகரத்த குரலில் கேட்டாள்.
மங்கையின் கேள்வியில் முகம் கனிய “ம்ம் இல்லை, மாத்திரை போட்டதில இப்ப வலியில்லை” என்றவன் நொடி நேர அமைதிக்கு பிறகு “ நான் பசங்க கூட தூங்கலாம்னு வந்தேன்…” என்றான் அடர்ந்த குரலில்.
“பசங்களோட இவன் தூங்கும் போதெல்லாம் நல்லா ஆழ்ந்து தூங்கிடறான் மா. ஆனால் பசங்களோட ஒட்டிக்க மாட்டேங்குறான். முன்னாடியெல்லாம் இப்படி இல்லை. அனிதா இறந்ததுக்கு அப்பறம் தான் மொத்தமா மாறி போயிட்டான்…” என்ற சீதாவின் பேச்சு இப்பொழுது நினைவிற்கு வந்தது…
“மிஸ் குளோரி” என்ற அபியின் குரலில் தன்னிலைக்கு வந்தவள்
“நீங்க படுங்க சார்…நான் என் ரூமுக்கு போறேன்” என்றவள் உடனே கிளம்பி விட, செல்லும் பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு பிள்ளைகள் இருவரையும் அணைத்தபடி படுத்துவிட்டான்.
இத்தனை நேரம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்த உறக்கம் உடனே ஆடவனைத் தழுவிக் கொள்ள, ஆழ்ந்து உறங்கி போனான்.
அதே நேரம் இங்கு தனது அறைக்கு வந்த ஆனந்திக்கு தான் உறக்கம் வர மறுத்தது…
பெரிதாக காரணம் ஒன்றுமில்லை பாதி இரவில் விழித்தால் மீண்டும் உறக்கம் வர பல மணி நேரமாகும் அவளுக்கு..
இதோ அபியின் புண்ணியத்தால் இரவு முழுக்க விழித்திருந்து விடியற்காலையில் உறங்க ஆரம்பித்திருந்தாள். அதன் விளைவு அவளது கவனிப்பு இல்லாமலேயே பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர்…
*****
அந்த அழகிய காலைப் பொழுது சோழா, குந்தவியின் ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இல்லாமல் விடிந்தது…
உள்ளங்கையில் முகத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தை பார்த்தார் சீதா…
எப்பொழுதும் கேட்கும் பிள்ளைகளின் சத்தமும், கூச்சலும் இல்லாமலிருக்க,இன்னும் எழவில்லையோ என்று நினைத்தப்படி காலைக் கடன்களை முடித்துவிட்டு பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்தார்.
அங்கே, இளையவர்களை அணைத்தபடி படுத்திருந்த மகனைக் கண்டதும் மெல்லிய புன்னகையோடு திரும்பி நடந்தார்.
அவரது மனம் அத்தனை ஆனந்தத்தில் திளைத்தது… பின்னே இருக்காத! மகன், மருமகளின் நினைவில், பேர பிள்ளைகளை கண்டுக் கொள்ளவில்லை என்பது தானே அவரது ஆதீத வருத்தத்திற்கு காரணமாக இருந்தது…
கடந்த சில நாட்களாக பாயிண்ட் பாயிண்ட்டாக குறைந்திருந்த வருத்தம் இன்றைக்கு மிச்சம் மீதியில்லாமல் குறைந்திருந்தது.
அக்கணம், அறைக்கதவை நோக்கி நடந்தவரின் காதில் “என்னாச்சும்மா” என்ற அபியின் குரல் கேட்க, சட்டென திரும்பி மகனைப் பார்த்தார்.
“ஒன்னுமில்லை ப்பா, ஏழு மணி ஆகியும் பசங்க எழவே இல்லையேன்னு எழுப்ப வந்தேன்…”
“ஓ, இருங்க நான் எழுப்பறேன்” என்றவனிடம் அவசரமாக மறுத்தார்.
“இல்லை ப்பா வேண்டாம். அவங்க தூங்கட்டும்ம்… நீயும் கொஞ்ச நேரம் தூங்கு கண்ணெல்லாம் சிவந்திருக்கு பாரு” என்றார் மென்மையாக.
“நைட்டு ரொம்ப நேரம் தூக்கமே வரலை.இங்க வந்து பசங்களோட படுத்ததும் தான் தூக்கமே வந்துச்சு” என்றான் கண்ணைத் தேய்த்துக் கொண்டே…
“அப்படியா? அதான் கண்ணு சிவந்து இருக்கு போல” என்றவர் மகனை நெருங்கி இருந்தார்..
“பசங்களோட படுத்தா தான் தூக்கம் வருதுன்னா… இனிமே இவங்கக்கூடவே தூங்கு அபி…”
“ம்ம் நானும் அதான் யோசிச்சேன் மா” என்றவனின் கேசத்தை கலைத்து விட்டு “தூங்கு தம்பி” என்றார் கனிவாக..
தாயின் கனிவில் மெல்ல சிரித்தவன் கண்களை மூடி படுத்துக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.
அபி உறங்கிய சில நிமிடங்களிலேயே சோழாவும், குந்தவியும் எழுந்திருந்தனர்… அதற்கு பின்னான நேரம் முழுவதும் பிள்ளைகளோடு சென்றது அவருக்கு…
****
அடிவானிலிருந்து தங்க பந்தாய் வெளிவந்த பகலவன் மெல்ல நடு வானை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் ஆனந்தியின் கதவை தட்டினார் சீதா…
“ஆனந்தி… ஆனந்தி” என்ற குரலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்…
முற்றும் முழுதாக உறக்கம் களைய நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு. அதற்குள் பலமுறை அழைத்திருந்தார் சீதா…
“வரேன் மேம்” என்று குரல் கொடுத்தவள் கதவைத் திறக்க, அவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு “ உடம்புக்கு முடியலையாமா?” மெல்லிய பதட்டத்தோடு கேட்டவரிடம் இல்லையென்று தலையாட்டினாள்.
“பதினொரு மணியாகியும் நீ வெளிய வரலையா..அதான் உடம்புக்கு முடியலையோ என்னவோன்னு நினைச்சிட்டேன்…”
“இல்லைங்க மேம் நல்லா தான் இருக்கேன்…” என்றவள் இரவு நடந்ததை கூறினாள்.
“சரி மா” என்றவர் “ஃப்ரெஷ் ஆயிட்டு சாப்பிட வா” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
செல்லும் அவரையே ஒரு பார்வை பார்த்தவள் கேசத்தை அள்ளி கொண்டையிட்டுக் கொண்டே குளியலறையை நோக்கி நடந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் தன் அறையிலிருந்து வெளிவந்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் அபிநயன்..
“தலைவரு இன்னைக்கு வேலைக்கு போகல போலயே?” என நினைத்துக் கொண்டே உணவருந்தும் அறைக்கு சென்றவள் வயிற்றை நன்றாக கவனித்துவிட்டு வெளியில் வந்தாள்.
இப்பொழுது அவளையும் மீறி அவளது பார்வை அபியின் மீது படிந்தது.
முன்பு எப்படி அமர்ந்திருந்தானோ அப்படி தான் இப்பொழுதும் அமர்ந்திருந்தான். ஆனால் முன்பு தெரியாத வலியின் சாயல் இப்பொழுது அவனது முகத்தில் தெரிந்தது.
கன்னக் கதுப்பை கடித்தப்படி ‘கை வலிக்குதான்னு கேட்போமா?’ என நினைத்த கணம் ‘ஆணியே புடுங்க வேண்டாம். உன் வேலை என்னவோ அதைப் பார்… சும்மாவே உன்னால தான் கை போச்சு, கண்ணு போச்சுன்னு சொல்லிட்டு இருக்கான். இதுல நான் ஹெல்ப் பண்ணவான்னு கேட்டு அதுக்கு வாங்கி கட்டப் போறியா?” அவசரமாக இடையிட்டது மங்கையின் மனம். மனதின் பேச்சில் ஒரு நிமிடம் தயங்கி பின் அவனை நோக்கி நடந்தாள்.
‘அந்த ஒரு நிமிச தயக்கம் தான் எனக்கு நீ குடுக்கிற மரியாதை இல்லையா?‘ சிலிர்த்துக் கொண்டு கோபமாகக் கேட்ட மனதினை கண்டுக் கொள்ளாமல் அபியின் முன் சென்று நின்றாள்.
மடிக்கணினியோடு போராடிக் கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான். அவன் பார்க்கவே காத்திருந்தவள் போல “ஏதாவது ஹெல்ப் வேணுமா சார்” என்று கேட்டாள்.
“வேண்டாம்”என்று சொல்லி விடத் தான் நினைத்தான் ஆனால் இடது கையை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியவில்லை… வேலைகள் வேறு வரிசைக் கட்டி நின்றது. நீண்ட நெடிய பெருமூச்சுடன் “நீ ஃப்ரீயா இருக்கியா?” எனக் கேட்க,
“ம்ம்…” என்று நாலாபுறமும் தலையாட்டி வைத்தாள்.
“இந்த கொட்டேசன் செக் பண்ணி மையில் அனுப்ப வேணும்… நான் உன் பக்கத்தில் இருந்து எப்படி பண்றதுன்னு சொல்றேன்.. செய்யறயா?” எனக் கேட்டவன் சற்று தள்ளி அமர, மெல்லிய தயக்கத்தோடு அவனருகில் அமர்ந்தவள் அவன் சொல்ல சொல்ல அனைத்து வேலைகளையும் செய்தாள்…
“ஓனரா இருந்தா வேலை இருக்காதுன்னு சொல்லுவாங்க… இவரு என்ன மாங்கு மாங்குன்னு வேலை செய்யறாரு” மனதில் நினைத்தது வாய் வார்த்தைகளாக வந்து விட, அருகில் அமர்ந்தவனுக்கு அவளது முனகல் தெளிவாக கேட்டது.
சட்டென திரும்பி ஆனந்தியை முறைத்தான்… “அச்சோ” மனம் பதற, “ஹிஹிஹி சும்மா சார், நானே அப்படி நினைச்சுக்கிட்டேன்… ஆனால் ஓனரா இருக்கிறது தலைவலி புடிச்ச வேலைன்னு இன்னைக்கு தான் தெரியுது”
அசடு வழிய சிரித்தவளை முறைக்க முயன்று தோற்றவன் மெல்ல இதழ் பிரித்து சிரித்தான்.
அவனது சிரிப்பையே இமைக்காமல் பார்த்தாள் பெண்… அவளது விடாத பார்வையில் புருவத்தை உயர்த்தி என்ன என்பதை போல் கேட்க, சட்டென தன்னிலைக்கு வந்தவள் மானசீகமாக தலையில் அடித்தபடி மடிக்கணினியில் பார்வையை திருப்ப, அவளது செயலில் தலையாட்டி சிரித்துக் கொண்டான் அபிநயன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1

