Loading

காலம் தாண்டிய பயணம் 26 

 

 

அந்த நேரம் இனியாவோ மீண்டும் “இன்னைக்குத் தான் நீங்க என்கிட்ட உங்க காதல சொன்னீங்கன்னு தோணவே இல்லை மகிழ். ஏதோ ரொம்ப நாள் நாம சேர்ந்து வாழ்தோம்ங்கிற உணர்வு தான் எனக்குள்ள, நீங்க எனக்கு ஸ்பைசினு செல்லமா பெயர் வெச்சீங்கல்ல நானும் உங்களுக்கு அப்படி ஒன்னு வெச்சிருக்கேன். இப்போன்னு இல்லை நீங்க என் பெயருக்கு விளக்கம் சொன்னீங்கல்ல அப்போவே தோணிச்சு. அத்தை மட்டுமில்ல நானும் லக்கி தான ஸ்மைல்” என்றாள்.

 

கரத்தில் இருந்த வாள் கீழே விழ, கண்களைத் திறந்து அவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களோ சாதாரணமாய் இருக்க, இனியாவின் விழிகள் இப்போது ஆனந்தமாய் கண்ணீருடன் புன்னகைத்தது.

 

மற்றவர்கள் நடந்தது என்னவென்றே புரியாமல் அதிசயமாய்ப் பார்க்க, அனைத்தையும் கண்ணாரக் கண்ட வான்மீகியோ பைரவனுக்கு மனதார நன்றியைக் கூறிக்கொண்டார்.

 

மித்ரனுக்கோ சற்று முன்னர் நடந்த எதுவும் நினைவில் இல்லை, அதனை எண்ணும் நிலையிலும் அவன் இல்லை. தன் மகன் வந்துவிட்டான் அது ஒன்றே அவன் மூளையில்…

 

மார்த்தாண்டனோ நடப்பவை புரிந்து “ஆத்ரீகா” என்று எத்தனை சத்தமிட்டு அழைத்தும் அவனிடம் பதில் இல்லை…

 

பதில் சொல்ல அவன் இருந்தால் தானே!

 

நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்து பூஜையிலிருந்து எழப் போனவனை தடுத்தாள் அவன் மனைவி மோகினி…

 

அவளுக்கு அவள் உடல்மீது தீரா ஆசை… எத்தனை ஆண்டு தவம், இப்போது வெறுமனே தீப்பற்றிக்கொள்ள விடுவாளா???

 

“வளவா வேண்டாம் என் உடல் அழிந்துவிடும்” என்று அவள் அலற, அவனால் எழ முடியாமல் போனது.

 

அவள்மீது அவன் கொண்ட காதலும் அதிகமாகிற்றே!

 

இதனை எதனையும் உணராத மகிழின் “ஸ்மைல்லா?” என்ற குரலின் மென்மை இப்போது இனியாவிடம் ஏதோ சொல்ல, அவனை வெளியே கொண்டுவரவென்று மனதில் உள்ள அத்தனையும் பேசியவளுக்கு இப்போது புன்னகையுடன் வெட்கமும் தொற்றிக் கொண்டது.

 

எங்கே பதில் சொல்லாவிட்டால் மீண்டும் மாறி விடுவானோ என்று பயம் கொண்டவளோ “ஆமா ஸ்மைல் தான்… என்னோட சந்தோசம் நீங்க எனக்கே எனக்கான சந்தோசம் நீங்க… இதுவரை என் வாழ்க்கைல இல்லாத அந்தச் சந்தோசம் இனிமேல் நீங்களா மட்டுமே என் வாழ்க்கைல இருப்பீங்க… சோ என்னோட மகிழ் என்னோட மகிழ்ச்சி அதான் ஸ்மைல்” என்றாள் சொல்லி முடித்திடும் வேகத்தோடு…

 

அவள் வெட்கத்தை ஆழ்ந்து அனுபவிக்க முடியாமல் இன்னும் முடியாத பிரச்சனை அணிவகுக்க, திரும்பியவனின் கண்ணில் மித்ரனின் முறைத்த பார்வை…

 

‘அடடே இவர மறந்துட்டேனே’ என்று எண்ணியவன் எழப்போக, வான்மீகியோ அவசரமாய் தடுத்தார்.

 

“மகனே எழ வேண்டாம், அந்த மார்த்தாண்டனை அழிக்க முதல் எழுவது ஆபத்து” என்று அங்கிருந்தப்படியே சொல்ல,

 

அவனோ அப்படியே அமர்ந்து கொண்டவன் மித்ரனைப் பார்த்துப் புன்னகையுடன் “கேட்டுச்சா மித்து, நான் ஒரு டூயட் போட்டுட்டு வாரேன் சீக்கிரம் அவன முடிச்சிட்டு வந்து சேறு” என்றான் நிலைமையைச் சுமூகமாக்கும் பொருட்டு…

 

அதில் பொய்க் கோபம் கொண்ட மித்ரனோ “ஏன்டா சொல்லமாட்டா, ஒரு வில்லன்னு இங்க வந்தா குறுக்க இந்தக் கௌஷிக் வந்தான்னு கேட்டுட்டு நீயும் வில்லனா வருவ, நான் மாங்கு மாங்குனு உனக்காகத் தொண்ட தண்ணி வத்த பேசுனா அவனுக்கு உள்ளேயே படுத்துத் தூங்கிட்டு, உன் ஆளு ரெண்டு டயலாக் எக்ஸ்ட்ரா விட்டதும் சிங்கம் ஒன்னு புறப்பட்டதே ரேஞ்சிக்கு வெளியே வருவ… இத்தனையும் பண்ணிட்டு இப்பவும் ஜாலியா உக்காந்திருக்கல்ல உன்ன என்ன பண்ணுறேன் பாரு” என்றான்.

 

அதில் புன்னகைத்த மகிழோ “சீக்கிரம் முடிச்சிட்டு வாப்பா, கல்யாணம் வேற பண்ணிக்கனும். இத்தனை வயசாச்சே பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுமேனு ஒரு ரெஸ்பான்ஸ்பிள் உள்ள அப்பாவா நடந்துக்கோ” என்றான் நக்கலுடன்…

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, இளவேந்தனோ “சுவாமி அவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்கும் வேளையில் மார்த்தாண்டனை அழிக்க வேண்டாமா?? இது என்ன சிறு பிள்ளைத்தனம்… வெற்றியானது கரத்தின் அருகில் நெருங்கி இருக்கும்போது இப்படித்தான் தமக்குள் சண்டை இடுவதா??? ஒருவேளை இதுவும் அந்த மார்த்தாண்டனின் வேலை தானோ?” என்றார் கோபத்தோடு…

 

வான்மீகியோ புன்னகையுடன்… “அவர்கள் சமயோசிதமாகச் செயற்படுகிறனர் வேந்தா, நம் கவனம் கலைந்தது போலவே மார்த்தாண்டனின் கவனமும் கலைந்திருக்கிறது. அவனை நெருங்கவே இந்த யுக்தி” என்க, திரும்பிய இளவேந்தனின் பார்வையில் மித்ரன் மார்த்தாண்டனை நெருங்கி விட்டது புரிய, அவர் விழிகளில் ஒரு மெச்சுதல்…

 

இத்தனை நேரமும் தனக்குள் செய்வதை யோசித்துக் கொண்டிருந்த மார்தாண்டனின் அருகில் நெருங்கிய மித்ரனோ அவன் நெஞ்சில் வாளை வைத்திருக்க, திடுக்கிட்டு நிமிர்ந்த மார்த்தாண்டனின் முகம் ஒரு நொடி அதிர்ச்சியை உள்வாங்கி மீண்டும் ஆசுவாசம் பெற்றது.

 

“என்ன மார்த்தாண்டா பயத்தை மறைக்கிறாயா?” என்ற மித்ரனின் கேள்வியில் புன்னகைத்தவன் “இதனை ஒரு ஆயுதமென்று எண்ணி என்னைக் கொல்ல முடியுமெனப் பேராசை கொள்ளும் உன் செய்கையில் புன்னகை தான் உதிர்க்கின்றது மித்ரா” என்றவன் நீட்டி இருந்த வாளை அவன் கரத்தாலேயே அவன் நெஞ்சிலே இறக்கினான்.

 

அந்தோ பரிதாபம் அவன் நெஞ்சில் ஏற்பட்ட காயம் தன்னால் மறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்திருந்தது.

 

அதனையே அதிர்ச்சியாய் பார்த்தபடி நின்ற மித்ரனைப் பார்த்தவன் “சாகா வரம் பெற்றவனடா நான், என்னை அழிப்பது என்பது நடக்காத காரியம். சாக வேண்டும் என்று நான் நினைத்தாலேயன்றி” என்றான் கோணல் புன்னகையுடன்…

 

இப்போது உண்மையில் அதிர்வது மித்ரனின் முறை ஆனது…

 

வான்மீகிக்கும் நடப்பது புரியவில்லை…

 

இந்த ஆயுதத்தால் தானே அவனை அழிக்க முடியும் என்று விதி இருக்கிறது. ஆனால் இதோ அந்த ஆயுதமே அவனை எதுவும் செய்யவில்லையே!

 

மார்த்தாண்டனோ “என்னையே அழிக்க முடியும் என்று கனவு காண்கிறீர்களா??? அது வெறும் கனவு மாத்திரமே!” என்றவன் பாதியில் நிறுத்தி இருந்த பூஜையைத் தொடங்க, அங்கே அத்தனை அமைதி…

 

இறுதி ஆயுதமும் கேள்வியாகிப் போன நிலை தான் அவர்களுக்கு…

 

அடுத்து கடந்த சில நிமிடங்களில் பூஜையை முழுவதுமாய் முடித்தவன் எழ, இப்போது யாழினியின் உடல் காற்றில் மிதந்தது.

 

அவனோ இனியாவின் அருகில் வந்து, அவளை நோக்கி கைகளை உயர்த்த அவர் உடலும் காற்றில் மிதந்தது. பின் மகிழை ஒரு பார்வை பார்க்க, அவனோ தூரச் சென்று விழுந்தான்.

 

“எத்தனையோ பலி கொடுத்து உருவாக்கிய என் மகனை அழிப்பீர்களா? அவன் அழிவில்லாதவன் மீண்டும் கொண்டு வருவேன்” என்று அந்தப் பூஜையில் அமரப் போக,

 

மித்ரனின் “மார்த்தாண்டா” என்ற குரல் தடுத்தது.

 

அலட்சியமாகத் திரும்பியவனின் முன்னே தொட்டுவிடும் தூரத்தில் அதே வாளோடு மித்ரன்.

 

“ஒருமுறை செய்து காட்டினாலும் உனக்குப் புரியவில்லையோ? இன்னொரு முறை முயற்சிக்க வேண்டுமா?? வேண்டுமென்றால் எத்தனை முறையாயினும் முயற்சி செய்து பார் உன் ஆசையை யான் நிறைவெற்றியதாக இருக்கட்டும்” என்றவன் இரு கரங்களையும் விரித்தபடி நின்றான்.

 

அவனையே சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருந்த மித்ரனின் இதழ்கள் தானாய் வளைய, கரமோ அவனை நோக்கிப் பிடித்திருந்த வாளைத் தன்னை நோக்கித் திருப்பி இருந்தது.

 

அதுவரை திமிர் புன்னகையுடன் மித்ரனைப் பார்த்திருந்த மாரத்தாண்டனின் விழிகளில் அதிர்ச்சியுடன் கலந்த பயம்.

 

அதனைக் கண்ட மித்ரனுக்கு தன் முடிவு திருப்தியாக இருக்க, நொடியும் தாமதிக்காமல் அவன் வயிற்றில் அந்த வாளினை இறக்கி இருந்தான்.

 

“அப்பா… மாமா… மகனே… மித்ரா” இப்படி பல அதிர்ச்சிக் குரல் அவன் காதை அடைய,

 

மித்ரனோ மார்த்தாண்டனையே பார்த்தபடி “என்னை உருவாக்கினது தான் உன்னே நீயே அழிச்சிக்க உருவாக்குன ஆயுதம். என்னை நானே அழிச்சிக்கிட்டா உன்னோட சாகாவரம் இல்லாம போகும்கிற ரகசியத்தை என்கிட்டயே சொன்ன உன்னோட அலட்சியம் தான் உன்னோட அழிவுக்கு ஆரம்பம்” என்ற மித்ரன், அதே வேகத்தோடு தன் வயிற்றிலிருந்து எடுத்த அந்த வாளினை மார்த்தாண்டனின் நெஞ்சில் இறக்கி இருந்தான்.

 

அதே நேரம் வானிலிருந்து வெட்டிய பெரிய மின்னல் ஒன்று அவன் நெஞ்சில் அந்த வானினூடே பாய, “கூடாது, நான் அழியக் கூடாது… இந்த மார்த்தாண்டனுக்கு அழிவா? இல்லை. ஆஆஆ….” என்ற கதறலுடன் அவன் உடலோ காரும்புகையாகி காற்றில் மறைந்தது.

 

இப்போது “வளவா” என்ற குரல் சத்தமெடுக்க, அந்தக் குரலின் சொந்தக்காரியான மோகினியின் அருவமும், அது தோன்ற காரணமானவனின் அழிவில் காற்றில் கலந்தது.

 

அவன் இறப்பு உறுதியானதும் யாழினி, இனியா இருவரின் உடலும் தன்னால் தரையை அடைய, மீண்டும் மயக்கத்தில் அவர்கள்.

 

மந்திர கட்டில் நின்றிருந்தவர்களின் கட்டுக்கள் அவிழ, நொடியும் தமதிக்காமல் அங்கேயே சரிந்து விழுந்த மித்ரனைத் தாங்கிக் கொண்டனர் மற்றவர்கள்.

 

 

 

__________________

 

 

 

இமைகள் இரண்டும் திறக்கப் போராட, அது போராட்டத்துடனே மீண்டும் மூடிக்கொண்டது.

 

மீண்டும் இந்த முறை சற்று வலிமையுடன் விழிகளோ முயற்சித்து திறந்துகொள்ள, முன்னே ஒரு ஆடவனின் தெளிவில்லாத உருவம் தெரிந்தது.

 

மீண்டும் இரண்டு மூன்று முறை விழிகளை மூடித் திறக்க, முன்னே தெளிவான துயிலனின் உருவம்…

 

“எழுந்து கொள்ள முடிக்கிறதா பாருங்கள் மித்ரரே” என்றான் துயிலன்.

 

மித்ரனோ தலையைக் கைகளால் பிடித்தபடி எழுந்து கொள்ள, வயிற்றில் கட்டு ஒன்று போடப்பட்டிருந்தது…

 

‘அப்படியென்றால் தான் சாகவில்லையா?’ என்ற எண்ணத்துடன் வேகமாக எழுந்து அமர்ந்தவனுக்கு காயம் வலித்ததில் “ஆஆ” என்று அவன் அலறிவிட, வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் உள்ளே வந்துவிட்டத்தில் பயந்தே விட்டான்.

 

அந்த அறையோ சிறியது. அதனுள் திடீரென மூன்று பேர் ஒரே நேரத்தில் உள்ளே வந்தால் பயம் வராமல் என்ன செய்யும்…

 

உள்ளே வந்த மகிழோ “மித்து உனக்கு ஓகே தான?காயம் வலிக்குதா? எங்க யாழ்னு சொல்லு பாப்போம்” என்று அவனைப் பேசவே விடாமல் கேள்வியாய் அடுக்க,

 

அவை எதற்கும் பதில் சொல்லாதவனோ “என்னாச்சு நான் அன்னைக்கு கத்தியால குத்தினேனே அப்பறம் எப்படி?” என்றான் கேள்வியாக…

 

“குத்தினது தான் இப்போ இந்தப் பெரிய கட்டோட உன் வயித்துல இருக்கே இன்னுமா உனக்கு டவுட்?” என்ற மகிழ் அவன் அருகில் அந்தப் படுக்கையில் அமர, அவன் முதுகில் ஒன்று வைத்த மித்ரனோ “என்ன நடந்திச்சுனு சொல்லு முதல்ல” என்றான்.

 

“நீ குத்தினத்துல அவன் செத்துட்டான் நீ மயங்கிட்ட, உனக்கு இவரு தான் வைத்தியம் பாத்தாரு கூடவே நானும் பார்த்தேன்… அப்பறம் என்ன ரெண்டு நாளா தூங்கிட்டே தான் இருக்க” என்றான் நக்கல் கலந்த பதிலாக…

 

அந்த நேரம் சித்தர் வான்மீகி உள்ளே வர, பெண்கள் இருவரும் வழி விட்டு நின்றனர்.

 

“எதையும் குழப்பிக் கொள்ளாதே மகனே, நீ இறந்தால் மட்டுமல்ல, இறக்க நினைத்து இரத்தம் சிந்தினாலும் அவன் சாகாவரம் இழக்க நேர்ந்திருக்கக்கூடும், இதுவும் என் யூகம் தான். உன் உயிரைக் கொடுத்து அவனை அழிக்க நினைத்த உன் உயர்ந்த மனதின் வெகுமதியாகவும் இருக்கலாம். ஏதோ ஒன்று அவன் அழிந்தான் அது மட்டுமே நிம்மதி இப்போது” என்றார்.

 

அவனும் ஆமோதிப்பாய் தலையசைக்க, மீண்டும் அவரே “இப்போது உடல் நலம் எப்படி உள்ளது மகனே?” என்று கேட்க, அவனோ “வலி இருக்கிறது ஆனால் நான் நலம் தான்” என்றான்.

 

அவரோ புன்னகையுடன் தலையசைக்க, “அந்த ஆத்ரீகன் என்ன ஆனான் சாமி, மறுபடியும் யாழ் உடம்புக்குள்ள வரமாட்டான்ல” என்றான் அருகே அமர்ந்திருந்த மகனின் தோள்மீது கையிட்டு அணைத்தபடி…

 

“அவன் அழிந்துவிட்டான் மகனே… சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டான், இனிமேல் நிச்சயம் எந்த இடரும் இல்லை… உங்கள் வாழ்க்கையை இனிமேல் மகிழ்ச்சியுடன் வாழலாம்” என்றவர் அவனுக்கு ஓய்வு கொடுக்க எண்ணி அங்கிருந்து வெளியேறப் போக,

 

“நாங்க எங்க காலத்துக்கு எப்படிப் போறது சாமி? அந்த மாலை தான் இப்போ இல்லையே!” என்று கேட்ட மித்ரனின் குரலில் திரும்பிப் பார்த்தவர் “இரு நாள் கடந்து வர இருக்கும் பௌர்ணமி அன்று இங்கிருந்து செல்லலாம் மகனே கவலை வேண்டாம், பைரவன் உங்களைக் கொண்டு சேர்ப்பான்” என்றபடி வெளியேறினார்.

 

 

அடுத்து அங்கே அமைதி, விழிகளை உயர்த்தி அங்கிருப்பவர்களைப் பார்க்க, நுழைவாயிலின் அருகே அவன் மனைவி நின்றிருந்தாள்…

 

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோத, எத்தனையோ நாள் ஏக்கத்தின் மிச்சம் அந்தப் பார்வை வீச்சில் தொக்கி நின்றது.

 

அவன் கவனைத்தை கலைத்த இனியாவோ “எப்படி இருக்கீங்க மாமா?” என்று கேட்க, அவளை அருகில் அழைத்தவன், மகிழை எழும்படி சைகை செய்ய,

 

அவனோ குறும்பு புன்னகையுடன் “வேணும்னா உங்க டோல் என் மடில கூட உக்காந்துக்கலாம் நான் ஒன்னும் நினைச்சிக்க மாட்டேன்” என்க, இனியாவோ சட்டெனத் தோன்றிய வெட்கத்தை மறைக்க, முறைப்பை முகமூடியாய் பூசிக்கொண்டாள்.

 

மித்ரனோ “நீ கடல வருத்தது போதும், நகரு முதல்ல” என்க, “நீயும் கடல வருப்பல்ல அப்போ கவனிச்சிக்கிறேன்” என்று சற்று தள்ளி நின்றிருந்த, யாழினியைப் பார்த்தான்.

 

மகனது பார்வை மனைவியிடத்தில் நிலைத்ததை உணர்ந்தவன் “போதும் போதும் போடா அங்கிட்டு” என்றபடி இனியாவை அருகில் அமர்த்தினான்.

 

“மாமா ரொம்ப நல்லா இருக்கேன் டோல், நீங்க எப்படி இருக்கீங்க? சீக்கிரமே நம்ம வீட்டுக்குப் போய்டலாம் சரியா?” என்று அவள் கேசத்தை அன்பாய் வருடிக் கொடுத்தான்.

 

அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் சிறிது நேரம் அப்படியே இருந்தாள், ஏனோ அவன் குத்துப்பட்டு இரத்ததோடு கீழே விழுந்தது அவளை மிகவும் பாதித்திருந்தது.

 

முதன் முதலில் அவள் மீது நேசம் உணர்த்திய ஆணவன் அவன். இப்போது அவளுக்கு அத்தனை முக்கியமான அத்தையின் கணவனும் கூட…

 

அவன் மயக்கத்தில் இருந்த இந்த இரண்டு நாளும் அவன் எப்போது முழித்துக்கொள்வான் என்றே காத்திருந்தாள்.

 

அவர்கள் அப்படியே பாசப்பயிரை வளர்க்க, மகிழோ கடுப்பாகி விட்டான்.

 

“போதும் ஸ்பைசி நீ எந்திரி முதல்ல” என்றவன் கையோடு அவளை எழுப்பித் தன் கை வளைவில் பிடித்துக்கொண்டவனோ, திட்ட வந்த மித்ரனுக்கு பார்வையால் யாழினியைக் காட்டினான்.

 

அதன் பின் மித்ரன் எங்கே பேச, அவன் பார்வை மொத்தமும் மனைவியிடத்தில் நிலைக்க, மகிழோ அவர்களுக்குத் தனிமை கொடுத்து அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்