
அத்தியாயம் 27
அபர்ஜித் வீட்டை விட்டு செல்கின்றேன் என்று சொன்னதும், தன்னால் எதுவும் பண்ண முடியவில்லையே என்று கோபமாக அறையினுள் வந்த அஸ்வந் “என்னதான்டி உனக்கு பிரச்சனை?…” என்று கேட்க
அவன் உரிமையுடன் டி போட்டு அழைக்கவும், அவள் புருவம் சுருக்கி பார்க்க,
“என்ன பார்வை வேண்டி கிடக்கு.. ஒன்னு எரிக்கிற மாதிரி பாக்க வேண்டியது.. இல்ல எத பத்தியும் கவலைப்படாம உன் ஃபீலிங்ஸ்கு மட்டும் மதிப்பு கொடுத்து சுடு சொல்ல கொட்ட வேண்டியது.. எதார்த்தத்த புரிஞ்சுக்க பாரு..
…இப்போ அவன் வீட்ட விட்டு போறேன்னு சொல்லலாம்.. எப்பவுமே அவன் இந்த வீட்ட விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது.. எப்ப இருந்தாலும் நீ அவன எதிர்கொள்ளத்தான் வேணும்…”என்று அவன் பாட்டிற்கு பேச
“நிறுத்துரியாடா…” என்று அவள் (டா) போடவும் அவன் விழி விரித்து பார்க்க
“என்ன! நீ டி போட்டு பேசலாம்.. நான் டா போட்டு பேச கூடாதா…?”
“இப்ப யாரு கூடாதுன்னு சொன்னா.. உன்ன விட ரெண்டு வயசு தானே பெரியவன்.. கூப்பிடலாம்…”
” பத்து வயசு பெரியவனா இருந்தாலும் டா போடுவேன் அடுத்தவங்க பேச்ச கேக்குற உனக்கு என்ன மரியாத…”என்று அவள் சொல்ல
‘சரிதான்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
“என்னோட உணர்வுகள, என் மனநிலைய புரிஞ்சிக்கிற மனசு உங்க யாருக்குமே கிடையாது என்றது எனக்கு புரியுது.. அப்படிப்பட்ட உங்க கிட்ட இருந்து எனக்கு என்ன முக்கியத்துவம் கிடைக்க போகுது.. நான் என்னோட கஷ்டத்த சொன்னேன் அவ்ளவு தான்..”
…இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்.. என்னால தான் குடும்பத்துக்கு மூத்த பொண்ணு, அப்பா கௌரவம் அது இதுன்னு செண்டிமெண்ட்டுக்கு கட்டுப்பட்டு ஓகே சொன்னேன்..
…நீ ஒரே ஒரு வார்த்த.. அண்ணனுக்கு பார்த்த பொண்ண என்னால கட்டிக்க முடியாதுன்னு சொல்லி இருக்கலாம் இல்ல.. எனக்கு இப்படி ஒரு இழிவான நிலையே வந்து இருக்காது இல்ல…” என்று அவள் கேட்க
“நீ எந்த செண்டிமெண்ட் வெங்காயத்த புடிச்சிட்டு ஓகே சொன்னீயோ.. அதே வெங்காயத்துக்காக தான் நானும் ஓகே சொன்னேன்.. என்ன பண்ண சொல்ற, உன் அண்ணன் என்ன அவமானப்படுத்த போறான், அட்லீஸ்ட் நீயாவது என் மரியாதைய காப்பாத்துனு கேட்கும்போது எனக்கு ஓகே சொல்றத தவிர வேற வழி இல்ல..
…வேணானு சொல்ல ரீஸனும் இருக்கல.. அவனுக்குனாலும் கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு லவ் பண்றேன்னு இருந்துச்சு.. எனக்கு அது கூட இல்ல…”
“ஏன் இல்ல.. அந்த கண்மணி இருந்தாளே…”
“என்ன பேசுற.. கண்மணி என்ன, வன் சைட்டா, அவ தான் லவ் பண்ணுனா.. எனக்கு தெரியவே தெரியாது.. தெரிஞ்சி இருந்த யோசிச்சு இருப்பேன்…”
“ஓஹோ அவள் லவ் பண்ணுனது தெரியாததால ஓகே சொல்லிட்ட.. ஆக உன் அண்ணனுக்கும் என்ன பிடிக்கல.. உனக்கும் என்ன புடிக்கல.. இது எவ்ளவு கொடுமை தெரியுமா.. உங்க யாருக்குமே என்ன புடிக்கல.. அப்டி இருக்க இந்த வீட்ல நான் ஏன் இருக்கணும்.. உன் அண்ணன் எதுக்கு போகணும் நானே கிளம்பி போறேன்…” என்றபடி அவள் வாசலை நோக்கி நடக்க
“லூசாடி நீ!.. நான் சொன்னது கண்மணியோட காதல பத்தி யோசிச்சிருப்பேன்னு.. அப்படியே அவ காதல சொல்லி இருந்தாலும், கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு நான் ஓகே தான் சொல்லி இருப்பேன்..
…அதுக்கு ரீசன் ரெண்டு, ஒன்னு எங்க அம்மாவோட மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்.. இரண்டாவது கண்மனி மேல எனக்கு அந்த மாதிரி எந்த அபிப்பிராயமும் இல்ல..
“அப்படி பாத்த கூட என்ன புடிச்சு கல்யாணம் பண்ணிக்கல இல்ல.. உன் அம்மாவோட கௌரவத்த காப்பாத்த தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட…”
“ஆமா அப்படியே உன்ன புடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சொன்னா மட்டும், இப்பவே என் கூட வாழ்துட போறியா என்ன..?
…எதுக்கு எடுத்தாலும் ஓவரா ரியாக் பண்றத நிறுத்து.. எல்லா விஷயத்துலயும் எமோஷனலா கனெக்ட் ஆகாத.. பிராக்டிகல் லைஃப்னு ஒன்னு இருக்கு, முதல்ல அதை புரிஞ்சுக்கோ…” என்று சொன்னவன் அதற்கு மேலும் அங்கு நின்றால் அவளது வசவு மொழிகளை கேட்க வேண்டும் என்பதால் அறையை விட்டு வெளியேறினான் .
அஸ்வந் வெளியே வரவும் அபர்ஜித் தனது உடைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
செவ்வந்திக்கு அபர்ஜித்தை பார்க்கும் போது வேதனை நெஞ்சை அடைக்க, கண்ணீர் நிரம்பி வழிந்தது.
வீட்டிற்கு தலைமகன். அவனது 18 வயதில் தந்தை இறந்து விட, தனது படிப்பையும் பார்த்துக் கொண்டு, தன் தந்தை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியையும் கவனித்துக் கொண்டு வீட்டையும் பார்த்துக் கொண்டவன்.
அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை தான் அஸ்வந் இப்போது கையில் எடுத்து நடத்தி வருகின்றான்.
அஸ்வந் இன்ஜினியரிங் படித்து முடியும் வரை அதை திறம்பட நடத்தி, தந்தையின் பங்குதாரர்களிடம் இருந்து மொத்தமாக கம்பெனியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து, அஸ்வந்தின் கையில் ஒப்படைத்திருந்தான்.
தம்பிக்காகவும் வீட்டுக்காகவும் அவன் செய்தவைகள் ஏராளம். அவன் சறுகிய ஒரே இடம் இந்த திருமணம் மட்டுமே. அதற்காக அவன் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்பது நெஞ்சை அடைத்தது. இருந்தும் வேறு வழியும் இருக்கவில்லை.
தாயிடம் வந்தவன் “சாரிம்மா.. என்னால தானே உங்களுக்கு இவ்ளவு மன கஷ்டமும்.. நீங்க என்ன பத்தி கவலைப்படாதீங்க நம்ம பீச் ஹவுஸ்ல தான் இருக்க போறேன்.. உடம்ப பாத்துக்கோங்க.. கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்…” என்றவன்
அஸ்வந்தை இருக அணைத்து விடுவித்து “அண்ணா மேல கோவம் இல்லையே…” என்று கேட்க
“என்னடா ண்ணா பேசுற.. உன்மேல எதுக்கு நான் கோவப்படணும்…” என்று அவன் கேட்க
மெலிதாக சிரித்தவன் “நான் உனக்கு என்ன பண்ணி இருக்கேன்னு கூட உனக்கு புரியலடா.. நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் எப்பவும் நினைப்பேன்.. ஆனா என்னாலேயே உன்னோட நிம்மதி போயிடுச்சுன்னு தோணுதுடா..
…எதுவா இருந்தாலும் நானே பாத்துக் கொள்ளனும்..உன் தலைக்கு வரக்கூடாதுன்னு யோசிப்பேன்.. இப்ப எல்லாத்தையும் உன் தலையில காட்டிட்டு நான் போறேன்..
…பார்கவி மனச மாத்தி அவ கூட சந்தோஷமா வாழ வேண்டியது.. அம்மாவ பாத்துக்கொள்ள வேண்டியது.. கம்பனிய பாத்துக்க வேண்டியது.. எல்லா பொறுப்பும் இப்போ உன் கிட்ட தான் இருக்கு..
…உன்ன எவ்ளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கேன்டா.. அது கூட உனக்கு புரியலையா…? என்று கேட்க
“தெரியலண்ணா.. நீ கூட இருந்தா எதுவுமே தெரியாது.. நீ போனதுக்கு பிறகு தான் தெரியும்னு நினைக்கிறேன்…” என்றான் அவனும் தொண்டை அடைக்க
“பாத்துக்க…” என்றவன் தன் காரை எடுத்துக் கொண்டு பீச் ஹவுஸ்க்கு வந்து விட்டான்.
தனியாக அங்கு வந்தாலும் அபர்ஜித்தின் மனதில் தோன்றியது என்னவோ வேறு திட்டம் தான்.
உடனே அறிவழகிக்கு அழைப்பை எடுத்து விடயத்தை கூறி வீட்டிற்கு வருமாறு சொன்னான்.
அவளும் அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தவள் “உண்மையாவே வீட்ட விட்டு துரத்திட்டாங்களா?…” என்று கேட்க
“அறிவு உன்ன கொல்லப் போறேன் பாரு.. யாரும் என்ன வீட்ட விட்டு துரத்தல.. நானாதான் வந்தேன்.. இந்த பிரச்சினைக்கு சொல்யூஷனே கிடையாது அறிவு.. பார்கவியோட ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு..
…ஒரு பொண்ண எந்த அளவுக்கு மனசளவுல சித்திரவதை செய்ய முடியுமோ.. அந்த அளவுக்கு நானும் என் குடும்பமும் பண்ணி இருக்கோம்.. இதுக்கு மேலயும் அவ கண்ணு முன்னாடி இருந்து அவள மொத்தமா மண்ணுக்கு தாரை வார்த்து கொடுக்க முடியாது.. அதே நேரம் நான் இங்க இருக்கிறதும் சரி வராது…”
“அப்போ எங்க இருக்க போறீங்க..? நீங்க செஞ்ச வேலைக்கு நடுத்தெருவுக்கு வருவீங்கன்னு தெரியும் சீனியர்.. ஆனா இவ்ளவு சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல…” என்று அவள் சொல்ல
“நான் சொல்றத கொஞ்சம் சீரியஸா கேளு…”
“அதுக்கு நம்ம ஐ.சி.யூ உள்ள…” என்று அவள் சொல்ல வர, அவள் வாயை எட்டி பொத்தியவன், இல்லை என்ற வகையில் தலையாட்டி
“தயவுசெஞ்சு வாய திறக்காத…” என்று அவனது கையை எடுத்து விட்டு, அவளது கையை கொண்டு வாயை பொத்த வைத்துவிட்டு
“இப்டியே இருக்கணும்.. உன் கை கீழ இறங்கிச்சு.. எங்க அம்மா ஒரு டவுட்ல தான் இருக்காங்க.. போற போக்குல நீ தான் என் லவ்வர்னு மாட்டி விட்ருவேன்.. எங்க அம்மா பத்தி தெரியும் இல்ல.. வக்கணையா சாப்பிடுறதுக்கோ,இல்ல கோர்ட்ல போய் வாதாடுறதுக்கோ உன் வாய் இருக்காது.. உடைச்சு விட்டுடுவாங்க…” என்று சொல்ல
“ம்ம்..” என்று தலையை ஆட்டினாள்.
“அறிவு நான் ஆஸ்திரேலியா போக போறேன்…”
“என்னது..?” என்று அவள் கத்த
“சூ..வாயில இருந்து கை எடுக்காத.. நான் இங்க இருக்கிறது சரி வராது அறிவு.. அம்மா என்ன பாக்காம இருக்க மாட்டாங்க.. அம்மாவ பாக்காம இருக்க என்னாலயும் முடியாது..
…அதே நேரம் நான் என்னதான் ஒரே வீட்ல இல்லாமா போனா பார்கவி மனசு மாறிடும்னு சொன்னாலும்.. இதே ஊர்ல தான் இருக்க போறேன்.. கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிகிட்டு வார பார்கவி வெளியில வச்சு என்ன எங்கையாவது பார்க்க நேர்ந்தா..
…திரும்பவும் மனசு இருக வாய்ப்பு இருக்கு.. முழுசா பார்கவி மனசு மாறுற வரைக்கும் நான் அவ கண்ணுல படக்கூடாதுன்னா.. நான் இந்த ஊர்ல இருக்க கூடாது…”
” இந்த ஊர்ல தானே இருக்க கூடாது.. வெளியூர் போலாமே, வெளிநாட்டுக்கு எதுக்கு…”
“வெளியூர்ல போய் என்ன பண்ண சொல்ற.. ஆஸ்திரேலியால கார்ப்பரேட் லீகல் அட்வைசரா வேலை பாக்குறதுக்கு வர சொல்லி இருக்காங்க கொஞ்ச நாளைக்கு அங்க இருக்கேன்..
…நீ இங்க உள்ள கேஸ் எல்லாம் பாத்துக்க.. அஸ்வந்த கவனிச்சுக்க, நான் இல்லனாலும் என் இடத்துல நீ இருந்து எல்லாத்தையும் பாத்துக்கணும்.. முடிஞ்சா பார்கவி கிட்ட பேச பாரு.. அவ முழுசா மாறினதுக்கு பிறகு தான் நான் ஊருக்கு வருவேன்..
…நான் ஆஸ்திரேலியா போற விஷயம் அஸ்வந்துக்கும் அம்மாக்கும் கூட சொல்லல.. இப்போதைக்கு தெரிய வேணாம், நான் ஃபிளைட் ஏறிட்டு அஸ்வந்துக்கு ஃபோன் பண்ணி சொல்லிக்கிறேன்…”
“அப்போ பர்விதா மேடம்?…”
“அவள சந்திக்கணும், அவள் கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நேத்து தான் என்ன புடிச்சிருக்குன்னு வாய திறந்து சொன்னா.. இன்னைக்கு அவள விட்டு தூரமா போக போறேன்..
…எனக்கு மனசு விட்டு போச்சு அறிவு.. போனா திரும்பி வருவேனானு கூட எனக்கு தெரியல.. எதுக்கு தான் இந்த காதல், அப்படி ஒரு நேரத்துல எனக்கு வரணும், என் புத்தி ஏன் அப்படி போகணும்..
…வாழ்க்கையில குடி என்ற ஒன்ன நான் தொடப்போறதில்ல.. ஆனா எத்தன பேர் வாழ்க்கை அந்த குடியால கருகி போயிருக்கும்.. அந்த குழியில நானும் கொண்டு விழுவேன்னு சத்தியமா எதிர்பார்க்கல அறிவு..
… நான் ஒன்னும் டெய்லி குடிக்கிற ஆள் இல்லயே.. எப்பயாவது இருந்துட்டு தானேனு ஒரு நாள் குடிக்க போய் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைய அந்தரத்துல தொங்க விட்டு இருக்கேன்..ச்சே…”
“ஐயோ! சீனியர் எதுக்கு இப்ப அழுகாட்சி.. அதெல்லாம் அசால்ட்டா சால்வ் பண்ணிடலாம்.. வீட்ட விட்டு பிரியுறோமே என்ற கவலையில பேசிட்டு இருக்கீங்க.. கண்டிப்பா எல்லாம் சரியாயிடும். எத பத்தியும் கவலைப்படாதீங்க.. அறிவு இருக்கேன்ல எல்லாத்தையும் பாத்துப்பேன் என்று அவனுக்கு ஆறுதல் கூறியவள் கிளம்பிச் சென்றாள்.
அறிவு சென்ற பின்னர், பர்விதாவிற்கு அழைப்பை எடுத்தவன், அவசரமாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி கோயிலுக்கு வர சொல்லி இருந்தான்.
“காலைல பாக்கலன்னா என்ன ஈவினிங் பாக்க வேண்டியதுதானே.. ஒரு நேரம் பாக்காம இருக்க முடியாதா?..” என்று அலுத்துக் கொண்டவள் அவனுக்காக கோயில் வந்து காத்திருந்தாள்.

