
காலம் தாண்டிய பயணம் 23
மித்ரனின் பார்வை பூஜையின் முன்னே அமர்ந்திருக்கும் மகிழின் மீது தான் இருந்தது.
‘தன் மகனா இவன்?’ என்ற கேள்வியுடன் அவனைத் தான் பார்த்திருந்தான்.
உள்ளே மனதோ ‘இல்லை இல்லை உன் மகன் இவனில்லை. இவன் கொடூரமானவன் உன் மகன் தான் மென்மையாவன் ஆகிற்றே!’ என்று எடுத்துக்கொடுக்க, அவன் மனதோ உள்ளே வலித்தது.
கண் முன்னே இருந்தும் தன்னவர்கள் யாரையும் காக்க முடியாத நிலை அவனுக்கு.
அவன் காதல் மனைவியைக் காக்க முடியவில்லை. அவன் உயிர் நீரில் உருவான குழந்தையின் வரவை அறிந்த அன்றே பிரியும் நிலை.
இதோ ஆசையாய் இத்தனை ஆண்டுகள் வளர்த்த மகன் வேறொருவனாய் மாறி நிற்கையில் தடுக்க முடியாத நிலை…
மகனின் காதலின் ஆழம் அவன் அறிந்தது தானே!
இன்று அவனே அவன் காதலுக்கு எமனாய் மாறி நிற்பதைக் கண்டும் தடுக்க முடியாத நிலை…
இவை எல்லாம் சேர்த்து, ஒரு கணவனாய் ஒரு தந்தையாய் ஒரு மாமனாய் ஏன் ஒரு மனிதனாய்க் கூடத் தோன்றுவிட்ட உணர்வு அவனுக்கு.
சற்று முன்னர் மகன் இனியாவை தூக்கி வந்தபோது அவன் அதிர்ந்த அதிர்வு அவன் மட்டுமே அறிவான்.
கூடவே தான் தான் ஆத்ரீக வளவன் என்று உரக்க கத்திய மகன், அவன் நெஞ்சில் வேலைப் பாச்சிய வேதனை அவனுள்…
வான்மீகியிடம் திரும்பியவனோ “ஏன் சாமி சொல்லல, இவன் தான் அந்த ஆத்ரீகன்னு ஏன் சொல்லல” என்று இயலாமையுடன் கேட்க,
அவரோ பெருமூச்சுடன் “அது மகிழுக்குத் தெரிவது நல்லதல்ல மகனே! தெரிந்தால் இப்படி ஏதும் விபரீதம் வந்துவிடும் என்ற பயத்தினால் தான் சொல்லவில்லை” என்றார்.
மித்ரன் அவரையே கேள்வியாகப் பார்த்திருக்க, மீண்டும், “மார்த்தாண்டனால் உன்னுள் அவன் நினைவைக் கொண்டு வரமுடியவில்லை, அவனால் அவனை அடக்க முடியாது கூடவே அவனின் பாதியான உன்னையும் அடக்க முடியாமல் போனதாலேயே அது சாத்தியமானது. ஆனால் ஆத்ரீகன் மீது அப்படி இல்லையே! மீண்டும் கொண்டு வந்துவிட முடியும், அதனாலேயே மறைத்தேன். எதற்குப் பயந்தேனோ அதுவே இப்போது நடந்துவிட்டதே!” என்று கலக்கத்துடன் பேச, மித்ரன் செய்வதறியாது நின்றான்.
துயிலேனோ “சுவாமி வேறு வழி ஏதும் இல்லையா?? உலகம் அழிவின் பால் நெருங்கி நிற்கின்றதே! இதற்கு என்னதான் முடிவு?” என்று கேட்டான்.
வான்மீகியோ “எல்லாம் எல்லை கடந்துவிட்டது துயிலா. இனிமேல் நடக்கவிருக்கும் துயரம் நீங்க வேண்டும் என்றால், மார்த்தாண்டன் மனது மாற வேண்டும். அது என்றும் நடக்காத ஒன்று. இல்லையேல் ஆத்ரீகனுள் இருக்கும் மகிழ் விழித்துக்கொள்ள வேண்டும், அதுவும் சாத்தியமில்லை. அத்தனை சக்தி படைத்தவன் ஆன்மாவை மீறி மகிழின் ஆன்மா அவன் நினைவுகள் வெளியே வருவது அசாத்தியமானது. முடிந்தவரை போராடியாகிவிட்டது இனிமேல் முடிவு பைரவனின் கையில். அவன் ஒருவன் நினைத்தாலேயற்றி மகிழை வெளியே கொண்டு வர முடியாது, ஆத்ரீகனை அடக்க அவனால் மட்டுமே முடியும். அதற்கு உள்ளே இருக்கும் மகிழின் நினைவுகள் வெளியே வரச் சிரிதேனும் போராட வேண்டும்” என்றார் கொஞ்சமே ஒளிந்திருக்கும் நம்பிக்கையுடன்…
இவர்கள் இங்கே பேசிகொண்டிருக்க, பூஜையில் இரு மேடையில் யாழினியும், இனியாவும் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.
முதலில் இனியாவை பலிகொடுத்து அந்த மண்டையோட்டின் எண்ணிக்கையை நூறாக்கி மீண்டும் அந்த ஆமாவாசை நாளுக்குச் சென்று யாழினியைப் பலி கொடுத்தால், மோகினிக்கு உடல் கிடைத்துவிடும். கூடவே ஆத்ரீகனின் சக்தியும் பன் மடங்கு பெருகும் அதன்பின் அவர்களை ஆழிக்கும் ஆயுதமான அந்த முத்து மாலை தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்…
உலகுக்கே சர்வ நாசம், அதன் பின் உலகமே அவர்கள் பிடியில்…
இதுவே மார்த்தாண்டனின் திட்டம்…
இதோ ஏத்தனை எத்தனையோ பிறவிகளில் தோற்று இன்று இத்தனை நூற்றாண்டு போராட்டத்தின் பின் அவன் எண்ணங்கள் நிறைவேறக் காத்திருக்கிறது.
“ஆத்ரீகா, வென்று விட்டோமடா மகனே! இனிமேல் நம்மை மிஞ்ச இந்த உலகில் யாரும் இல்லை… தெய்வமாம்?? பைரவனாம்?? இனி யார் வருகிறார்கள் என்று பார்ப்போம்” என்று உரக்க சத்தமிட்டு அவன் இறுமாப்பை வெளிப்படுத்தியவனோ,
மீண்டும் “கொன்று பலி கொடுத்துவிடு ஆத்ரீகா” என்று உரக்கச் சொல்ல, ஆத்ரீகனோ இனியாவை அழிக்க அவள் அருகில் பாதம் எடுத்து வைத்து நெருங்கினான்.
பூஜையில் அமர இன்னும் சில நாழிகைகளே!
இங்கே மித்ரனோ அவனை தடுக்கும் வழியறியாது “வேணாம் யாழ்… வேணாம்டா… உன் காதல்டா அவ” என்று கத்தியவன் பேச்சு அவனுள் இருக்கும் மகிழுக்கு கேட்டால் தானே!!!
“மித்ரா டூ சம்திங்” என்று தனக்கு தானே சொல்லிகொண்டவன் மனதோ அவனிடம் இருக்கும் அந்த ஒன்றை மண்டையோட்டை ஞாபகப் படுத்தியது. கூடவே சித்தர் வான்மீகி சொன்னவைகளும் ஞாபகம் வந்தது.
அன்று மார்த்தாண்டன் யாழியைக் கவர்ந்து சென்ற அன்று அந்த நாய் அவனிமிருந்து கவ்விய அந்த மடையோட்டை, மித்ரனின் கையில் தானே சேர்த்திருந்தது.
அதுக்காகத் தானே இனியாவை பலி கொடுக்கப் போகிறான் அது இருந்தால் அவளையாவது இப்போது காப்பாற்றலாமே என்ற எண்ணம் உதிர்க்க, “மார்த்தாண்டா அவளை விடு, உன்னோட அந்த ஒன்றை மண்டையோடு என்கிட்ட தான் இருக்கு, அத கொடுத்துடுறேன் அவளை விடு” என்று கத்தினான்.
மார்த்தாண்டனோ நாடியில் கை வைத்துப் புன்னகைத்தவன் “அப்படியா? ஆனால் எனக்கு அது இப்போது வேண்டாம் என்று தோன்றுகிறதே! என்னை விட்டுச் சென்றது சென்றதாகவே இருக்கட்டும். இப்போது என் மகன் மீண்டு வந்த சந்தோசத்தைக் கொண்டாட பலி ஒன்று வேண்டாமா? கூடவே அந்தப் பைரவன் தடுத்த வழியையும் தாண்டி வென்றான் மார்த்தாண்டன் என்று உலகம் போற்ற வேண்டாமா?” என்று கேட்டபடி ஆத்ரீகனுக்கு கண் காட்ட, அவனும் கேலிப்புன்னகையுடன் தயாரானான்.
மீண்டும் மித்ரனுக்கு தோல்வி, அவன் மனம் மூளையென அனைத்தும் ஒரு அவசர கதியில் இயங்க, மனமோ சட்டென வான்மீகியின் வார்த்தைகளை மீண்டும் எடுத்துக்கொடுத்தது.
‘மார்த்தாண்டனால் உன்னுள் அவன் நினைவைக் கொண்டு வரமுடியவில்லை, அவனால் அவனை அடக்க முடியாது. அவனின் பாதியான உன்னையும் அடக்க முடியாமல் போனதாலேயே அது சாத்தியமானது. ஆனால் ஆத்ரீகன் மீது அப்படி இல்லையே!’
சட்டென வான்மீகியின் புறம் திரும்பியவனோ “சாமி அவனால அவனைக் கட்டுப்படுத்த முடியாதுனா என்னையும் கட்டுப்படுத்த முடியாதுனு சொன்னீங்க தானே! என்னை எதுவும் பண்ணல இப்போ வரை இனிமேலும் பண்ண மாட்டான் தானே!” என்று கேட்க, வான்மீகிக்கு ஏதோ புரிவதை போலிருக்க, அவர் முகத்தில் வெளிச்சம்…
“ஆம் மகனே! அவன் அவன் உயிரைக் காணிக்கையாய் செலுத்தி உனக்குப் பிறவி கொடுத்திருப்பதால் உன்னைக் கட்டுப்படுத்த முடியாது… நிச்சயம் முடியாது” என்றார்.
மித்ரனோ சட்டென மார்த்தாண்டனை பார்த்தவனோ “மார்த்தாண்டா, இப்போ இத நீ நிறுத்தலனா… என் மூச்ச அடக்கி என்னை நானே அழிச்சிப்பேன்” என்று உரக்க குரல் கொடுக்க, முதலில் சாதாரணமாக இவன் குரலுக்குத் திரும்பியவனின் முகம் இறுதி வரியில் அதிர்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டது.
இருந்தும் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டவனோ “சாகப் போகிறாயா? என் வெற்றியைக் காணாமல் சாகப் போகிறாயா? அத்தனை அவசரம் எதற்கு மித்ரா நானே வழியனுப்பி வைக்கின்றேன் பொறுமை கொள்” என்று கேலி பேச, சிறிது நேரம் என்றாலும் அவன் முக மாற்றம் மித்ரனின் கண்களிலிருந்து தப்பவில்லை…
அடுத்து எதையும் யோசிக்கவில்லை அவன் மூச்சை இழித்துப் பிடித்துத் தன்னை தானே அழித்துக் கொள்ளப் பார்க்க, சட்டென அவனது மந்திர கட்டுக்கள் அவிழ கீழே விழுந்திருந்தான்.
எழுந்தவன் கண்ணில் ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்ட வெளிச்சம்…
மார்த்தாண்டனுக்கோ கோபம் எல்லை கடந்தது. அவன் உருவாக்கியவன் இப்போது அவனுக்கே அவன் இலட்சியத்தில் இடராய் இருப்பான் என்று அவன் கனவா கண்டான்.
மித்ரனோ மீண்டும் மார்த்தாண்டனைப் பார்த்தபடி இதழ் வளைத்த புன்னகையுடன் மூச்சை உள்ளே இழுக்க, இந்த முறை பதறியது என்னனோ மார்த்தாண்டன் தான்.
“மித்ரா” என்ற அழைப்புடன் அவனை நெருங்கியவன் “வேண்டாம்” என்றான் தீர்க்கமான குரலில்…
மித்ரனின் புன்னகையும் அவனுடன் நின்றிருந்தவர்களின் புன்னகையும் ஒருங்கே விரிய, மார்த்தாண்டனுக்கு மண்டை சூடாகியது.
அவனுக்குப் பிறவி கொடுத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி எரிச்சல் கொண்டவனோ “என்ன வேண்டும் உனக்கு?” என்றான் கோபம் கொப்பளிக்கும் குரலில்…
அதற்கிடையில் அவன் அருகில் நொடியில் நெருங்கிய ஆத்ரீகனோ மித்ரனின் கழுத்தில் தன் வலக்கரம் வைத்து அவனைத் தூக்கி அந்தரத்தில் பிடித்தவன் “யார் தந்தையை யார் மிரட்டுவது? உன் உயிர் உனக்குப் பாரம் என்றால் நானே போக்கி விடுகிறேன்” என்று இன்னும் அழுத்த, மித்ரனின் முகம் வேதனையைத் தத்தெடுத்துக் கொண்டது.
தன் யாழ் தன்னைக் கொல்வதா??? கூடவே மகன் முகத்தில் இத்தனை ரௌத்திரம் என்றும் மித்ரன் பார்த்திராத ஒன்று. எப்போதும் அவனைக் கண்டு உவகையில் புன்னகைக்கும் அந்த கண்கள் இன்று இரத்த சிவப்பேறி கோபத்தை சுமந்திருப்பதை அவனால் காணமுடியவில்லை.
மகனின் செயலில் இப்போது புன்னகைப்பது மார்த்தாண்டனின் முறையானது.
“பார்த்தாயா மித்ரா நம் மகனின் வீரத்தை? உன்னை நீயே அழித்துக்கொண்டால் மட்டுமே எனக்கு ஆபத்து. உன்னை என்னால் அழிக்கவும் முடியாது, ஆனால் பார் நம் மகனால் உன்னை அழிக்க முடியும்” என்று சொல்லிச் சிரித்தவன்,
“நம் மகனின் கையால் உயிரைவிட ஆசையாய் இருக்கிறாய் போல் இருக்கிறதே!” என்றான்.
மீண்டும் அவனே “ஒரு நிமிடம் என்னையே அசைத்து விட்டாயே மித்ரா! என்னில் பாதி என்று நிரூபிக்கிறாயடா. என்ன பார்க்கிறாய்? நீ என்ன நினைத்துச் செய்தாய் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் உன் உயிரை நீயே பறித்துக் கொண்டால் என் சாகாவரம் செயலிழந்து போகும். அதனாலேயே என் தடுமாற்றம். ஆனால் நம் மகன் கையால் நீ அழிவதென்றால் நிச்சயம் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று சத்தமாய் புன்னகைத்தான்.
“என்ன ரகசியத்தை அவனே உடைக்கின்றான் என்று பார்க்கிறாயா??? எதிரியே இல்லாமல் வென்றால் நன்றாகவா இருக்கும்? உன்னால் முடிந்தவற்றை நீ செய்தால் தான் வெல்வதிலும் எனக்குத் திருப்தி. என்னை வெல்ல முடியாது என்பதை நீயும் போராடி அறிய வேண்டாமா? இதற்குப் பின் நீயும் எங்களைத் தான் வணங்க வேண்டும்” என்றான் முகம் விரகசிக்க…
ஆத்ரீகனோ விடாமல் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியவனோ “ஆணையிடுங்கள் தந்தையே இவன் கதையை முடித்து விடுகிறேன்” என்க,
மித்ரனோ அவன் முகத்தையே பார்த்தபடி “யா..ழ் நா..ன் உன் மித்..துடா, என்..னைப் பாரு யாழ், நீ இப்..போ வெளிய வ..ந்தா மட்டும் தான் யாழ், நம்ம காதலையும் இந்..த உலக..த்தையும் அழிவுல இரு..ந்து காப்..பாத்த முடியும்” என்று திக்கி திணறிப் பேசி முடித்தவனின் முகத்தை ஆத்ரீகன் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை…
மார்த்தாண்டனோ ஆத்ரீகனைப் பார்த்து ‘இல்லை’ என்பதாய் சைகை செய்ய, அவனோ சட்டென மித்ரனைக் கீழே விட்டான்.
மித்ரனோ எழுந்தவன் “யாழ்” என்றபடி ஆத்ரீகன் அருகில் நெருங்க, அவனோ கை நீட்டி அவன் அசைவைத் தடுத்திருந்தான்.
மார்த்தாண்டனோ “ஹா…ஹா அவன் இப்போது உன் யாழ் இல்லை மித்ரா, நம் மகன் ஆத்ரீகன். அன்றே செல்ல வேண்டி இருந்த இவன் உயிரைக் காத்தது நீ. இல்லையே இன்று என் மகன் பூரண உடலோடு எனக்குக் கிடைக்க, இன்னும் நான் ஆண்டுகள் தவம் இருந்திருக்க வேண்டும். அந்த நன்றிக்கேனும் உன்னை விட்டுவைக்க வேண்டுமே!” என்றவனைப் புரியாமல் பார்த்தான் மித்ரன்.
“என்ன பார்க்கிறாய், இவன் மறுபிறவி எடுத்தது இதோ நிற்கிறாளே இவள் கொடுத்த வாக்கின் பலன்” என்று மந்திர கட்டில் நிற்கும் பூவிழியைக் காட்டியவன்,
மீண்டும் “முன்பொரு ஜென்மத்தில் நம் மனைவியிடம் ‘நம் குழந்தையைக் காப்பேன்’ என்று வாக்கு கொடுத்திருக்கிறாள். அதனால் இவளுக்கே மகனாய் பிறந்தவன் இறந்து உன் மகனாக யாழினி வயிற்றில் உதிர்க்க வேண்டும் என்பது விதி. ஆனால் நீயோ சென்று கொண்டிருந்த அவன் உயிரின் பாதியை போகவிடாமல் உன் மூச்சுகாற்றின் அண்மை கொண்டு நிறுத்தி இருக்க, நம்மைப் போல் நம் மகனும் பாதியாய் இரு பிறவியாய் பிரிந்தான். உன் யாழினி வயிற்றில் ஒரு பாதியும் உன் வளர்ப்பு மகனாக இன்னொரு பாதியும். இதோ அவன் பிறவி இரண்டையும் இணைத்து அவனுக்கு முழு உயிர் கொடுத்தாகி விட்டது. அவன் சக்தியும் முழுமை ஆகிவிட்டது. இனி யாராலும் அவனை வெல்ல முடியாது. அன்று நீ அவனைக் காக்க வில்லை எனில் நிச்சயம் என் வெற்றி சத்தியமில்லை. அதனாலேயே என் பாதியான உன்மீது சற்று கனிவு தோன்றுகிறதடா” என்றான் உல்லாச மனநிலையுடன்…
தன்னை இதற்குப் பிறகு யாரால் அழிக்க முடியும் என்ற இறுமாப்பு அவனை அனைத்து சகசியத்தையும் பேச வைத்திருந்தது.
மித்ரன் அப்படியே சிலையாய் நின்றிருக்க, ஆத்ரீகனும் மார்த்தாண்டனும் பூஜை அருகே விரைந்தனர்.
மார்த்தாண்டனோ யாழினி முன்னே பூஜையில் அமர, அவன் அருகே ஆத்ரீகன் இனியாவின் முன்னே அமர்ந்தான்.
ஒரே நேரத்தில் இரு பூஜைகளும் ஆயத்தமானது.
மித்ரன் அப்படியே நிற்கக் கண்ட வான்மீகியோ “மகனே மனதைத் தளர விடாதே, நிச்சயம் உன்னால் உன் மகனை வெளியே கொண்டு வர முடியும். உன் மூச்சுக் காற்றில் மகிழ் உயிர் பெற்றான் என்றானே! செல் என்னவென்று யோசி, அந்த மாலை உன் உதிரம், உன் மகனின் இருப்பிறவிகள் சேர்ந்த அந்த ஆத்ரீகனின் உதிரம் களப்பின் மார்தாண்டனை அழிக்கும் ஆயுதமாகும் சந்தர்ப்பத்தைத் தவற விடாதே!” என்று அவனுக்கு நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைக்க…
முயன்று மனதில் தைரியத்தை வரவழைத்தவனோ பூஜை அருகே சென்றான்.
பெண்கள் இருவரும் மயங்கிய நிலையில் இருக்க, நடப்பவை எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை…
பூஜையில் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்கும் மகனை நெருங்கிய மித்ரனோ ஏதேதோ பேசினான்.
அவர்கள் ஒன்றாய் கழித்த பொழுதுகளின் இனிமைகளை அவனுள் புகுத்த முனைய, மூடி இருந்த அவன் கண்களில் எந்த மாற்றமும் இல்லை…
உதடுகள் அதன் போக்கில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தது.
இறுதியாய் அங்கேயே சரிந்து அமர்ந்த மித்ரனோ “உன் மித்து பேசுறேன் யாழ்… உன் அப்பா உனக்கு வேணாமா யாழ்? என்னோட யாழ் எவ்வளவு மென்மையானவன், இப்போ நீ காதலிச்ச பொண்ணையே கொல்லப் போறியா?? அப்பா உன்ன அப்படியா யாழ் வளர்த்தேன்… ஒருவாட்டி அப்பானு கூப்பிட மாட்டியா?” என்று ஏக்கக் கேள்வியுடன் நிறுத்த,
மூடி இருந்த ஆத்ரீகனின் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வழிய, கண்களைத் திறந்தவனின் கண்களில் இருந்த இரத்த சிவப்பு நிறம் காணாமல் போயிருந்தது.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…

