
அத்தியாயம் 23
கைப்பேசி திரையில் பாகீரதியின் பெயரைக் கண்டு சிந்தனையுடன் செவியோடு இணைத்தாள் பாவை.
“மௌனிமா..”
“சொல்லுங்க ஆன்ட்டி.”
“சரண் கல்யாண தேதி சொன்னான்.”
“நேத்து என்கிட்டயும் பேசுனாரு ஆன்ட்டி. ரெண்டு பேரும் சேர்ந்து தான் டிஸைட் பண்ணோம்.”
“சரிம்மா.. முகூர்த்தப் புடவையும் கல்யாண பட்டும் வாங்கணும். ஒரு மாசத்துக்கு முன்னாடியே வாங்குனா தான், விசேஷத்துக்குள்ள தச்சு ரெடி பண்ண முடியும். நீ ஊருக்கு வர்றியா? சேர்ந்து போயிட்டு வந்துடலாம். அப்படியே டெயிலர்கிட்ட உன்னோட அளவை கொடுத்துட்டேனா, ஒரு பெரிய வேலை முடிஞ்சிடும்.”
நொடி நிதானித்தவள், “ஸாரி ஆன்ட்டி. இப்பதான் த்ரீ டேஸ் லீவ் போட்டு ஊருக்கு வந்திருந்தேன். மேரேஜுக்கு வேற எப்படியும், டூ வீக்ஸ் லீவ் போட வேண்டியது இருக்கும். ஆஃபிஸ்ல முக்கியமான ப்ராஜெக்ட் ஒர்க் வேற போயிட்டு இருக்கு. இப்ப, லீவ் போட சான்ஸ் இல்ல.”
“அடடா! துணி எடுக்கணுமே ம்மா? நாளு வேற இல்ல? லேட் பண்ண முடியாது!”
“நீங்களே சேரியை எடுங்க ஆன்ட்டி.”
“நானா? நான் எடுக்கிறது உனக்குப் பிடிக்கணுமே ம்மா?”
“ஜெஸ்ட் சேரி. மேரேஜ் அப்ப மட்டும் கட்டிக்கப் போறேன். அது பிடிச்ச மாதிரி நானே வந்து செலக்ட் பண்ணணும்னு என்ன அவசியம்?”
பாவையின் ஒட்டா தன்மையான வார்த்தைகளில் பெரியவரின் மனம் சுணக்கம் கொண்டது.
“உனக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல சம்மதம் தானா மௌனி? இல்லேனா, உன்னோட ஆச்சி சொன்னாங்கனு ஒத்துக்கிட்டியா?” என நேரடியாகவே கேட்டு விட்டார்.
மெலிதாய் புன்னகைத்தவள், “ஆச்சிக்காக தான் ஓகே சொன்னேன் ஆன்ட்டி. ஆனா, எனக்கும் சம்மதம் தான். நீங்க, சரண், ரோகி, விமல் எல்லாரும் என்கிட்ட நல்லா தானே பழகுறீங்க? சோ, இதுல யோசிக்கவோ வருத்தப்படவோ எதுவும் இல்ல.”
அவளின் மறுமொழி சற்றே நிம்மதியைத் தர, “ஆனா, கல்யாண ஏற்பாடுல ஆர்வம் இல்லாத மாதிரி இருக்கியே ம்மா? நிச்சயத்துக்கும் துணி எடுக்க வரல. இப்பவும் வரலனு சொல்லுற?”
“ஸாரி ஆன்ட்டி. எனக்கு இதெல்லாம் என்னனு கூட தெரியாது. இதுவரை எந்த கல்யாணத்தையும் நேர்ல பார்த்த எக்ஸ்பீரியன்ஸ்யும் இல்ல. கூட வொர்க் பண்ணுற ரெண்டு கொலிக்ஸ் மேரேஜுக்கு இன்வைட் செஞ்சப்ப கூட, அவங்களோட ரிசப்ஷனைத் தான் அட்டன் பண்ணேன். நீங்களே டிரஸ் எடுக்க. எது செலக்ட் பண்ணாலும் எனக்கு ஓகே தான்!”
இயல்பாய் அவள் உரைத்த சொற்களில், மௌனியின் தனிமையான வாழ்க்கையின் ஆழத்தை உணர்ந்தார் பாகீரதி. திடீரென கணவனை இழந்து விட்டு மூன்று பிள்ளைகளுடன், ‘அடுத்து என்ன செய்வது?: என்று புரியாமல், அவர் தன்னந்தனியாய் நின்ற அத்தருணம் தான் நினைவிற்கு வந்தது.
சரண் ஓரளவு வளர்ந்து இருந்ததால், அன்று அன்னைக்கு ஆதரவாய் கைக் கொடுத்து தம்பி தங்கையைக் கவனக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அதனால் பாகீரதியால் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடிந்தது.
ஆனால் மௌனி? பத்து வயதில் பெற்றோரை இழப்பது என்பது எத்தனை பெரும் வலி?
அவளுமே வாழக் கற்றுக் கொண்டாள், தான் அறிந்த வரையில். தனக்குத் தெரிந்த மட்டும். ஆதரவு தர எவரும் இல்லாததால், மற்றவருடன் இணைந்து உணர்வுளைப் பகிர்தல் என்பதை பழகவே இல்லை.
மூன்று பிள்ளைகளை வளர்த்த அனுபவம் வாய்ந்த மனிதி, பாகீரதி. அவரால், இளையவளின் எண்ணங்களை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
“சரி மௌனிமா. நானே சேலையை எடுக்கிறேன். சட்டைத் துணியை வெட்டி, சென்னைக்குப் பார்சல் அனுப்பி வைக்கிறேன். உனக்குப் பிடிச்ச மாதிரி தச்சுக்கோ. சரண் அதுக்குப் பணம் கொடுத்துடுவான்.”
“எனக்கு அதுவும் தெரியாதே ஆன்ட்டி?”
புரியாது விழித்தவர், “என்னமா நீ?”
“இதுவரை சேரி கட்டுனதே இல்ல. ப்ளவுஸ் டிசைன்ஸைப் பத்தியும், ஐ டோண்ட் நோ.”
“சரியாப் போச்சு. இப்ப என்னதான் செய்யிறது?”
“அதான்.. நீங்க, ரோகி எல்லாம் இருக்கீங்களே ஆன்ட்டி?”
“அதுசரி, அளவு வேணாமா?”
“ரோகியோட மெசர்மெண்ட் எனக்குச் சரியாதான் இருக்கும். அவளோட அளவுக்கே தைங்க. நான் ஊருக்கு வந்த பின்னாடி, தேவைப்பட்டா எங்கேஜ்மெண்ட் டிரஸ்ஸை ஆல்ட்டர் பண்ண மாதிரி இதையும் செஞ்சிக்கலாம்.”
மெலிதாய் புன்னகைத்த பாகீரதி, “நல்ல பொண்ணும்மா நீ!”
அவள் சிரித்திட, “சரி, இப்போதைக்கு நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோம். ஆனா கல்யாணம் ஆச்சுனா, நீதான் மருமகளா வீட்டையும் குடும்பத்தையும் பொறுப்பா கவனிச்சுக்கணும்.”
“எப்படினு நீங்க சொல்லிக் கொடுக்க, நான் கத்துக்கிறேன் ஆன்ட்டி.”
“சரிம்மா.. நான் ஃபோனை வைக்கிறேன்!” என அவர் பேச்சை முடிக்க, மௌனியும் ஆசுவாச மூச்சு ஒன்றை வெளியிட்டு, கைப்பேசியை அணைத்தாள்.
அடுத்து வந்த தினங்கள் எல்லாம், திருமண ஏற்பாட்டில் இறக்கை இன்றி பறந்தன என்று தான் சொல்ல வேண்டும்.
ரோகிணி தமையனின் துணையாக வரப்போகிறவளிற்கு வீட்டில் நடப்பவை அனைத்தையும் கைப்பேசியில் காணொலி வழியாக, நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தாள். விமல் இருவருக்கும் இடையை மொழிபெயர்ப்பாளனாக செயல் பட்டான்.
கோவிலில் இருவரது விபரங்களையும் கொடுத்து திருமணத்திற்கு முன்பதிவு செய்வதில் தொடங்கி, வரும் விருந்தினர்களிற்குத் தேங்காய் பை கொடுத்து அனுப்புவது வரையிலான அனைத்து பணிகளையும் சரணே செய்ததால், ஓய்விற்குக் கூட நேரம் இல்லாது போனது.
திருமண பதிவிற்காக சான்றிதழ்கள் வேண்டி, அழைப்பிதழ்களின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க, விருந்திற்கான உணவு வகைகளைப் பற்றிப் பேச, தாலி வாங்குவதற்காக சென்ற பொழுது, மிஞ்சிக்காக கால் விரலின் அளவு கேட்டு என நான்கைந்து முறைகள் மட்டுமே மௌனியிடம் பேசினான்.
நேரடியாய் சொல்லவில்லை என்றாலும் ரோகிணியிடம் குறுஞ்செய்தியின் வாயிலாக பேசிய தருணங்களில், ஆடவனின் வேலைப் பளுவை அறிந்ததால், மௌனியும் அதற்கு ஏற்றது போல் அதிகப்படியாய் விசாரணை எதுவும் செய்யாது அவன் கேட்கும் விபரங்களை உரைத்தாள்.
திருணத்திற்கு இருபது தினங்கள் இருக்க, அன்றைய தினத்தின் விடியலிலேயே பாவைக்கு அழைத்து விட்டான் சரண்.
கைப்பேசியின் ஒலியில் தான் இமைகளையே பிரித்தாள்.
தொடர்பை இணைத்தவள் கொட்டாவியை வெளிவிட்ட படி, “ஹலோ..” என்றிட, “என்ன மோனி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என வினவினான் மறுபுறம் இருந்தவன்.
‘பரவாயில்ல. எப்படியும் நான் இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திரிக்கத்தான் போறேன். சொல்லுங்க சரண், என்ன விஷயம்? இவ்வளவு காலையில கால் பண்ணி இருக்கீங்க?”
“இன்விடேஷன் பிரிண்ட் ஆகி வந்திடுச்சு.”
“ஓ.. குட்..”
“உனக்கு எத்தனை வேணும்?”
“ம்ம்.. ஃபைவ்!
ஆடவனின் குரல் சட்டென்று இறங்கி விட, “அஞ்சு போதுமா?”
“போதும். இங்க பெருசா யாரும் இல்ல எனக்கு. ரஞ்சனி, அவளோட அத்தை ஃபேமிலி தான் கொஞ்சம் குளோஸான ஆளுங்க. கொலிக்ஸ் கூட எல்லாம், நான் அவ்வளவா பழகுறது இல்ல.’
புடவை விஷயத்தைப் பற்றி பாகீரதி ஏற்கனவே மகனிடம் பகிர்ந்து இருந்ததால், “ஏன், இப்படி எல்லாரை விட்டும் விலகியே இருக்க மோனி?”
அவள் சின்னதாய் சிரித்து, “என்ன திடீர்னு டாப்பிக்கை மாத்தீட்டீங்க?”
“நீயும் மாத்தாம, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!” என்று குழந்தையைக் கண்டிக்கும் மூத்தவனது தொனியில் உரைத்தான்.
“ரொம்ப நெருங்கிப் பழகிட்டோம்னா, அவங்க திடீர்னு விலகும் போது அதிகமா வலிக்கும் சரண். அம்மா அப்பா, அம்மாவோட பேரண்ட்ஸ் இவங்களை எல்லாம் இழக்கும் போது, அந்த வலியை நான் அனுபவிச்சு இருக்கேன். எவ்வளவு காலத்துக்குத்தான், அது கூடவே வாழ முடியும்? சோ.. எல்லாருக்கிட்டயுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெயிண் பண்ணிக்கிறது.
அப்புறம் இன்னொரு காரணமும் இருக்கு. நான், தனி ஆள் சரண். ஈஸி கோயிங் பர்சனா இருந்தா, சுத்தி இருக்கிற ஆட்கள் சுலபமா ஏமாத்திடுவாங்க. அட்வாண்டேஜ் எடுத்துக்க வாய்ப்பு அதிகம். யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அது புரியாம இருந்துட்டா, நான் தப்பு செஞ்ச மாதிரி ஆகிடும். சரியா இருக்கணும்னு நினைக்கிறேன்!”
மெலிதான பெருமூச்சை வெளிவிட்டவன், “அப்ப, என்கிட்டயும் அப்படித்தான் பழகுற இல்ல?”
“இல்ல..”
“என்ன இல்ல?”
“நீங்க மத்த ஆட்கள் மாதிரி இல்ல. உங்களைக் கல்யாணம் செஞ்சிக்கப் போறேனே? சோ, கொஞ்சம் ஸ்பெஷல் தான்.”
“என்ன ஸ்பெஷலோ, எனக்கு ஒன்னும் அப்படித் தெரியல.”
சின்னதாய் சிரித்தவள், “ஃபோன்ல பேசும் போது, எப்படித் தெரியும்?”
“அடடா! மௌனிகாவுக்கு ஜோக் பண்ணக்கூட வருது!”
“சரண்! நானும் ஒரு சாதாரண மனுஷிதான்.”
“ஓகே. இதுக்கு மேல, உன்னை சீண்டல. இன்விடேஷனை கொரியர் பண்ணி விடுறேன். எனக்கு வாட்ஸ் அப்ல அட்ரஸை அனுப்பி விடு!”
“ம்ம்..” எனப் பேச்சை முடித்த பாவை, அவன் சொன்னதைச் செய்தாள்.
புலனத்தைத் திறந்து முகவரியைப் பார்த்தவனிற்கு, ஏனோ மனதில் லேசான அழுத்தம்.
‘உறவுகளுடன் பழகும் விதம் அறியாதவள், தான் மணக்கப் போகிறவள்!: என அறிந்தான். அத்தோடு இன்னொன்றும் புரிந்தது, ‘கணவனாய் இருந்தாலுமே மௌனி தன்னிடமும் அதே இடைவெளியைக் கடைபிடிப்பாள்.’ என்று.
‘தானாக முன்னெடுப்பு செய்யாது, அவளின் அந்த தனிமையான உணர்வை மாற்ற இயலாது!’ எனத் தோன்றிட, அதற்காக செய்ய வேண்டியதைத் தற்போதில் இருந்தே திட்டமிடத் தொடங்கினான்.
“கணி சாப்பாடு வந்திடுச்சு. வெளிய நிக்கிறான் சொமேட்டோ காரன். போய் வாங்கிட்டு வாடா..” என ரஞ்சனி கெஞ்சலாய் கேட்டிட, “நான் போக முடியாது. நீதான ஆர்டர் போட்ட? வேணும்னா, நீயே போயி வாங்கு!” என்று கூடத்தில் இருந்த சோஃபாவில் கால் நீட்டி வசதியாய் படுத்துக் கொண்டான் அவன்.
“பாவி பாவி! ஏண்டா இப்படிச் செய்யிற? டயர்டா இருக்குனு தான சொல்லுறேன்?”
“உனக்கு மட்டும் தான் இருக்குமா? நாங்க எல்லாம் டயர்ட் ஆக மாட்டோமா? சொல்லப் போனா, உனக்கு டிரைவராவும் பாடிகார்டாவும் வேலை பார்த்ததுல, என்னோட எனர்ஜி மொத்தமும் டிராப் ஆகிடுச்சு. போயி நீயே சாப்பாடை வாங்கிட்டு வந்து இந்த கணியனுக்குக் கொடுத்து, போற வழிக்குப் புண்ணியத்தைத் தேடிக்க!’
“அடிங்க! பையன் நமக்கு ஹெல்ப் பண்ணுறானேனு, உனக்குப் பிடிச்சதை ஆர்டர் போட்டு வர வச்சா.. என்ன பேச்சு பேசுற?” என அவள் அடிப்பதற்காக கை ஓங்க..
இவர்களது வாதத்தைப் பார்த்திருந்த மௌனிகா, “ஆக மொத்தத்துல, ரெண்டு பேருமே போய் வாங்க போறது இல்ல. வந்தவன், எவ்வளவு நேரம் தான் வெளிய வெயிட் பண்ணுவான். நான் போயிட்டு வர்றேன்!” என்று கிளம்பினாள்.
“சோ ஸுவீட் அக்கா, நீங்க!” என கணியன் பாராட்டு சான்றிதழ் வழங்க, “தேங்க்ஸ் படி! என்று நன்றி தெரிவித்தாள் ரஞ்சனி.
இருவரையும் பார்த்து சிரிப்புடன் வெளியே சென்றாள்.
ஏழு நிமிடங்கள் கடந்தும் மௌனி வராமல் இருக்க, வீட்டில் இருந்தவர்களிற்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
கணியனும் ரஞ்சனியும் வெளியே வந்து பார்க்க, பாவையின் வழியை மறத்தபடி நின்று இருந்தான் சந்துரு.

