
பிறை – 54
சரண் , ஆதி, அர்ஜுன் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து, மூவரும் சேர்ந்து யூபிஎஸ்சி எக்ஸாமை , முதல் முறையிலேயே அதிரடியாக தூக்கி விட்டு, இரண்டாம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றார்கள்.
மூவருமே அப்படி ஒரு நட்பு.. இணை பிரியாத அந்த நட்பு தான் அவர்களை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது என ஆதியே பலமுறை நினைத்திருக்கிறான்.
குடும்பத்தில் இவர்களது நட்பை பற்றி தெரியும் என்பதால்.. பெரியவர்கள் கூட மூவரது வெற்றியையும் கொண்டாடி தீர்த்தனர்.
சரணுக்கு அன்னை மட்டுமே. அவன் ஒரே பிள்ளை என்பதால் சுருக்கமான குடும்பம். ஆதியின் குடும்பத்தை பற்றி நமக்கு தெரியும்.. அர்ஜுனுக்கு தந்தை மட்டும் தான். சிறு வயதிலேயே அவரது அன்னை வயிற்றில் பிள்ளையோடு இறந்திருக்க.. தந்தையோடு வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு வாழ்க்கை சலித்து போனது. தனக்கென்று பிள்ளை இருப்பதை உணராமல் , குடி குடித்தனம் என ஊரை சுற்றிக் கொண்டிருந்தவர், அவனது பத்தாம் பொது தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில்.. இரவில் படுத்தவர் காலை எழவில்லை.
அதன் பிறகு அவனுக்கென்று யாருமில்லை. தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாமல் இருந்தவனை இரண்டு நாட்கள் இறக்க விழிகளுடன் பார்த்த சொந்தங்களும் மாயமாகி போன நிலையில்.. அடுத்தது என்னவென்று யோசிப்பதற்குள் வாடகை வீட்டுக்காரர் அவனை காலி செய்ய சொன்னது அவனது மனதை உடைத்திருந்தது.
அவனுக்கென்று எந்த ஒரு பணமும் சேர்த்து வைக்காத ஊதாரி அப்பனை எண்ணி மனதிற்குள் புழுங்கிக் கொண்டான். அவனுடைய நிலையை நினைத்து வருந்திய வீட்டின் உரிமையாளர்.. அவருக்கு தெரிந்த ஆசிரமத்தில் அவனை சேர்த்து விட்டதோடு , அருகில் இருந்த அரசாங்க பள்ளியில் மேற்படிப்பு படிக்க சேர்த்து விட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலிடமும், மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் இரண்டாம் இடமும் பிடித்து பெருமை சேர்ந்திருந்தான் அர்ஜுன்.
மனதில் குடும்பதற்கான ஏக்கம் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்றால் பணம் வேண்டும். அந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு படித்துக் கொண்டிருந்தான்.
அவனது நோக்கம் தவறாக இருந்தாலும்.. படிப்பில் அவன் காட்டும் வெறி அவனை முன்னேற பாதையில் கொண்டு சென்றது.
அருமையாக படித்தவனுக்கு , அத்தனை கல்லூரிகளில் இருந்து வாய்ப்புகள் குமிய.. எதை எடுப்பது என திக்கு முக்காடி போனவன்.. இறுதியாக ஒரு கல்லூரியை தேர்வு செய்து.. அங்கு சேர்ந்து கொண்டான்.
அங்கேயே விடுதியும் இருப்பதால், அங்கே தங்கிக் கொண்டான். அவனது மதிப்பெண்ணிற்கு அனைத்தும் இலவசமாகவே கிடைத்தது.
அங்கு தான் ஆதி , சரண் இருவரையும் சந்தித்தான்..
இயல்பிலேயே ஆதி நன்றாக படிக்கும் பையன் . சரண் விளையாட்டாக படித்து எழுதினாலும் .. நல்ல மதிப்பெண்கள் வாங்க கூடியவன். இவர்கள் இருவரையும் பற்றி அறிந்தவன்.. அவர்களிடம் நட்பு பாராட்ட எண்ணி.. அவனே சென்று அவனை அறிமுகம் செய்ததோடு, அவர்களோடு நட்பையும் வளர்த்துக் கொண்டான்.
பள்ளியில் அவன் வாங்கிய அவனது மதிப்பெண்ணை கேட்டு நண்பர்கள் இருவரும் அவனை மறக்காமல் வாழ்த்தினார்கள்.
கல்லூரியில் அந்த மூவர் அணி என்றாலே.. ஆதி, அர்ஜுன் , சரண் என யாரை கேட்டாலும் கூறுவார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் அவர்களது நட்பு அத்தனை நெருக்கமாக இருந்தது.
ஒவ்வொரு தேர்விலும் மூவரும் நன்றாக படித்து தேர்வை எழுதுவார்கள். ஆனால் எப்போதும் ஆதியை விட இரண்டோ அல்லது ஒன்றோ குறைந்த மதிப்பெண் வாங்குவான் அர்ஜுன்.
அடுத்த தேர்வில் ஆதியை முந்தி விட வேண்டும் என தீயாக படித்தவனுக்கு பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
அவன் எத்தனை நல்ல மதிப்பெண் எடுத்தாலும் அவனால் ஆதியை மீறி மதிப்பெண் எடுக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது பொறாமை தோன்றி.. காலப்போக்கில் அது வன்மமாக மாறிப் போனது.
இதை எதையும் அறியாத ஆதி, அவனிடம் இயல்பாகவே நடந்து கொண்டான்.. அன்று இறுதிகட்ட தேர்விற்கு அனைவரும் தயாராகி கொண்டிருந்தார்கள்.
ஆதி, சரண் , அர்ஜுன் மூவரும் நன்றாக பரீட்சை எழுதிய கையோடு .. யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக தொடங்கினார்கள்.
ஒரு வருடம் தீவிரமாக படித்ததோடு, அடுத்த வாரம் பரீட்சை என்ற நிலையில் அனைவருமே தீவிரமாக படித்தார்கள்.
பரீட்சை தினமும் வந்தது. காலையில் மூவரும் கோவிலுக்கு சென்று விட்டு அதன் பின்பு பரீட்சைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள்.
காலை சரண் வண்டியை எடுத்துக் கொண்டு ஆதியின் வீட்டிற்கு வருவதாகவும்.. அர்ஜுனையும் ஆதியின் வீட்டிற்கு வரக் கூறி இருந்தார்கள்.
கல்லூரி முடிந்த கையோடு அந்த விடுதியை காலி செய்தவன்.. ஆதி, சரண் இருவர் கூறியும் கேட்காமல்.. வெளியில் உள்ள விடுதியில் தங்கிக் கொண்டான்.
தேர்வுக்கு படித்துக் கொண்டே பார்ட் டைமாக வேலை பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன். அதில் வந்த பணத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மனதில் அப்படி ஒரு சந்தோஷம் பிறக்கும்.
வேலை நேரத்தை அதிகரித்து அதிக பணமும் சம்பாதிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்கு ஈடாக விடிய விடிய தேர்வுக்கும் படித்து விடுவான். இரண்டையும் அளவிற்கு அதிகமாக செய்தாலும், அவன் மனம் சுனங்கவில்லை.
பணத்தை சம்பாரித்தே ஆக வேண்டும் என்ற வெறி. இறுதியாக தந்தை இறந்தபோது காசில்லாமல் அவன் நிற்கும் பொழுது உறவென்று சொல்லிக் கொண்டு வந்த சொந்தங்கள் அவனை கைவிட்டு சென்றதும்.. வீடு இல்லாமல் தெருவில் நின்றதும் அவனது மனதை ரணமாக்கி வைத்தது.
இதோ விடுதியில் இருந்து கிளம்பி ஆதி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன். மீனாட்சி , திவாகர் இருவருமே அவர்கள் மூவரையும் ஆசீர்வாதம் செய்து அனுப்பி இருந்தார்கள். வீட்டிற்கு வந்த அர்ஜுனை , பார்கவி பார்க்கவில்லை. அவனது பெயரை கேள்விப்பட்டதோடு சரி. அர்ஜுன் விடுதியை விட்டு எங்கும் வராததால் அவனை தெரியவில்லை. இன்று தான் முதல் முதலில் அர்ஜுன், ஆதியின் வீட்டிற்கு வந்திருக்கிறான். அதனால் தான் வீட்டுக்கு வெளியே இருக்கும் சிசிடிவியை பார்க்க தவறினான்.
வாசலில் வந்து சரண் வண்டியை எடுக்க.. அப்போது அர்ஜுன் அவர்களுக்கு முன்பு வந்து சரண் வண்டியை ஸ்டார்ட் செய்து இருந்தான். உடனே சரண் அவன் பின்னால் ஏறிக் கொள்ள.. அடுத்தாக ஆதி வந்து அவனது வண்டியை எடுத்துக் கொண்டு மூவருமே வீட்டை விட்டு கிளம்பினார்கள்.
அர்ஜுன் சற்றே வேகமாக வண்டியை விட்டு கோவிலுக்கு சென்று விட.. அப்போதே மணி ஆகி இருந்தது.
” சரண் ஏற்கனவே டைம் ஆகிடுச்சு சீக்கிரம் சாமி கும்பிட்டு கிளம்பலாம் டா ” என அர்ஜுன் கூறியதை தொடர்ந்து மணியை பார்த்தவன்.. ” ஆமா மச்சான்.. ஆனால் ஆதி இன்னும் வரலையே.. ”
” அவனுக்கு என்ன கோவில் தெரியாதா.. பின்னாடியே வருவான்.. நீ வா ” என அவனை அழைக்க.. அரை மனதோடு இருவரும் உள்ளே சென்று தரிசனம் பார்த்து விட்டு வெளியே வந்தனர்.
” இன்னுமா ஆதி வரல.. ”
” அட கோவில் செம கூட்டம்.. அதுனால உனக்கு தெரியாம இருந்திருக்கும்.. அவனை மாதிரியே ஒருத்தனை பார்த்தேன்.. அது ஆதி தான்.. வந்திடுவான்.. நீ வா ” என அழைத்து விட்டு பைக்கை எடுத்தான்.
வாசலில் வந்து ஆதியின் பைக்கை தேடிய சரணுக்கு.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதை காணவில்லை.
” எங்க போயிருப்பான் ” என யோசனையோடு அர்ஜுனோடு கல்லூரியை நோக்கி சென்றிருந்தான்.
உள்ளே சென்றதும்.. அவர்களுக்கு எந்த அறை என பார்த்துக் கொண்டார்கள். மூவருக்கும் வேறு வேறு அறை. எப்படி இவர்கள் மூவருக்கும் ஒரே கல்லூரி அமைந்தது என தெரியவில்லை. ஆனால் கிடைத்து விட்டது.
” என்ன அர்ஜுன்.. இன்னும் ஆதியை காணோம்.. எங்க போய் தொலைஞ்சான். பரீட்சைக்கு போன் கொண்டு வரக் கூடாதுன்னு சொன்னதுனால, இப்போ அவனுக்கு கால் கூட பண்ண முடியாது ” என புலம்பிக் கொண்டிருந்தான்.
” ஆதியை பத்தி நமக்கு தெரியாதா.. பரீட்சைக்கு கண் மாதிரி வந்துடுவான். நம்ம ரூமுக்கு போகவே இன்னும் தூரம் இருக்கு. வா போகலாம் ” என அவரவர் அறையை விசாரித்து கிளம்பி இருந்தார்கள். சரணுக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. உள்ளே சென்றதும் பரீட்சை கேள்விகள் அவனை சூழ்ந்து கொள்ள.. விடையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மூழ்கிப் போனான்.
இரண்டு மணி நேரம் எப்படி சென்றது என தெரியவில்லை. அறையிலிருந்து வெளியே வந்தவனுக்கு ஆதியை நினைத்து கவலை எழ.. அவனது அறையை தேடி சென்றிருந்தான் சரண்.
ஆனால் அதற்கு முன்பே அங்கு அர்ஜுன் நின்றிருந்தான். கை, கால்களில் பலத்த அடியுடன்.. முதலுதவியோடு வந்து கொண்டிருந்தான் ஆதி. அவனை பார்த்ததும் சரணுக்கு தூக்கிவாரிப் போட்டது.
” டேய் ஆதி.. என்ன டா இதெல்லாம்.. எப்படி ஆச்சு ”
” பைக் பிரேக் பிடிக்கலை டா ” என சலிப்பாக கூறினான் ஆதி.
” நீ அப்படியெல்லாம் விட மாட்டியே டா.. எப்படி இவ்வளவு அசால்ட்டா இருந்த”
” நேத்து நைட்டு கூட செக் பண்ணேன்.. அப்பறம் இன்னைக்கு காலையில அப்பா கூட செக் பண்ணாரு டா.. ஆனால் எப்படின்னு தெரியல ”
” டேய் இதுவா இப்போ முக்கியம்.. இவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும் வாங்க ” என அர்ஜுன் அவர்களை யோசிக்க விடாமல் அழைத்து சென்று சிகிச்சை செய்து வீட்டில் விட்டிருந்தான்.
வீட்டில் விஷயம் தெரிந்ததும் பெற்றவர்கள் இருவரும் துடித்து போனார்கள். இதில் அர்ஜுன் அறியாத ஒரு விஷயம்.. ஆதியின் வீட்டின் வெளியே சிசிடிவி கேமரா இருப்பதை தான்.
எங்கே அவன் தான் பிரேக் வயரை அறுத்து விட்டான் என்பது தெரிந்தால் , ஆதி உண்டில்லை என ஆக்கி விடுவான் என்பது நன்றாக தெரியும்.
இருந்தாலும் அவனை அந்த தேர்வை எழுத விடக் கூடாது என்ற எண்ணத்தில் செய்து வைத்த செயல் தான்.
இதை கண்டு பிடித்ததே மீனாட்சி தான். பொழுது போகாமல் வீட்டில் இருக்கும் பொழுது மீனாட்சி, வெளியே இருக்கும் சிசிடிவி காட்சிகளை போட்டு பார்ப்பதுண்டு.. அதில் அவர் போடும் கோலங்களை ரசித்துக் கொண்டிருப்பார்.
அதே போல தான் அன்றும் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தான் சாப்பிட்டு முடித்து முதல் ஆளாக வெளியே வந்த அர்ஜுன்.. ஆதியின் வண்டியில் உள்ள பிரேக் வயரை கத்தரித்து விட்டு, சாவியோடு இருக்கும் சரண் வண்டியை ஸ்டார்ட் செய்து தயாராக இருக்க அடுத்ததாக சரண் வந்து ஏறிக் கொண்டதும்.. அதன் பின்பு ஆதி வந்ததும் தெளிவாக தெரிந்தது.
அதை பார்த்துப் பதறிப் போனவர்.. உடனே இதை பற்றி கணவனிடம் கூறி இருக்க.. விஷயத்தை கேள்வி பட்டவர் அதிர்ந்து, மாலை மகனுக்காக காத்திருந்தார்.
” ஆதி..”
” சொல்லுங்க பா ”
” உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்.. ஆனால் அதை நீ எப்படி எடுத்துக்க போறான்னு தான் தெரியல ”
புருவத்தை சுருக்கியவன்.. யோசனையோடு.. ” என்ன விஷயம் ”
” உனக்கு எப்படி பைக் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தெரியுமா.. ”
” வண்டி பிரேக் பிடிக்கலை பா ”
” அது மட்டும் காரணம் இல்ல.. வண்டி பிரேக் வயரை கட் பண்ணி இருக்காங்க ” என்றதும் அதிர்ந்தவன்..
” யாரு பண்ணது.. ” என முகத்தை கடுமையாக மாற்றினான்.
” கோபத்தை குறை ஆதி.. இதை பண்ணது நம்ம அர்ஜுன் தான் ” என்றதும் அவனோ அதிர்ச்சியில் சிலையாகிப் போனான்.
” என்ன சொல்லுறீங்க.. ”
” ஆமா அர்ஜுன் தான் ”
” நீங்க அவனை தப்பா புரிஞ்சுட்டு பேசுறீங்க பா.. ”
” இல்ல அவன் தான் பண்ணது ”
” அவன்தான் பண்ணான்னு என்ன ப்ரூஃப் இருக்கு ” அப்போதும் நண்பனை சந்தேகிக்க மனமில்லை.
மீனாட்சி வந்து அந்த காட்சிகளை எல்லாம் காட்ட.. நெஞ்சம் வலித்தது. ஒரு நாளும் அர்ஜுன் இப்படி செய்வான் என கனவில் கூட கண்டதில்லை. ஆனால் அவன் எப்பேர்பட்ட துரோகத்தை செய்திருக்கிறான். சரணுக்கு அழைத்து விஷயத்தை கூறி வரக் கூறினான். சரணுக்கு அப்படி ஒரு கோபம்.. ” ஏதாவது ஆகி இருந்தா என்ன டா பண்ணுறது.. இவன் என்ன சைக்கோ வா.. எதுக்காக இதெல்லாம் பண்ணுறான் ” என கத்த தொடங்கினான்.
” அமைதியா இரு சரண்.. நம்ம நினைச்சத விட அர்ஜுன் ரொம்ப டேஞ்சர் ” என அமைதியாக இருந்து விட்டானுக்கு.. அடுத்தடுத்து அர்ஜுனை பற்றிய சுயரூபம் முழுவதுமாக தெரிய வந்தது.
சனா💖

