
அகிலன் அகல்யா திருமணம் இனிதே நிறைவு பெற பெரியவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“என் கடைசி பேரன் கல்யாணத்தையும் பார்த்துட்டேன் இதுக்கு மேல எனக்கு என்ன வேண்டும்”என்று சிலாகித்தார் வெங்கடாசலம்.
“அது சரி இன்னும் கொள்ளுப்பேரன் பார்க்கணும் அதுக்குள்ள இப்படி ஒரு பேச்சா…”என்ற இளவரசி மணமக்களை ஆசிர்வதிக்கும்படி அட்சதையைக் கொடுத்தார்.
“தீர்க்காயுசா இருக்கணும்”என்று நடுங்கிய கைகளால் அட்சதையைப் போட்டனர் வெங்கடாசலம் கெஜலட்சுமி தம்பதியர்.
‘எல்லாம் கிளம்பினதும் வீடே வெறிச்சிடும்’வழக்கமான வருத்தம் தான் அவர்களுக்குள். அருகிலேயே வைத்து கொள்ள ஆசை தான் அவரவர் வாழ்க்கையைப் பார்க்க வேண்டுமே !!
மூத்த தம்பதிக்கு யுகாதித்தன் தேஜஸ்வினி அருண் பிரதன்யாவை காண்கையில் தான் அத்தனை நிறைவு.
அதிலும் யுகாதித்தனை கொண்டு மனதில் விரவிய நிம்மதியை அவர்களால் வரையறுக்கவே முடியாது.
எங்கள் பேரன் எத்தனை புரிதல் உள்ளவன் என்று மனதார கொண்டாடினார்கள்.
அனைவரும் விடைபெற்று செல்கையில் மீண்டும் ஒரு தருணம் இப்படி வாய்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும்.
சென்னை திரும்பியதும் அகிலனை செட்டில் செய்து விட்டு மீண்டும் பெங்களூர் திரும்பி இருந்தனர் இரு இணைகளும்.
“அக்கா காலையில் பார்க்கலாம் செம டயர்ட்”என்றவாறு தங்கள் வீட்டிற்கு சென்றாள் பிரதன்யா.
வீட்டிற்கு சென்றதும் பிள்ளைகளை உறங்க வைத்து விட்டு நகர அருண் அவளை இறுக்கமாக அணைத்திருந்தான்.
“பிரசாத்”என்று ஆச்சரியமாக அவள் திரும்ப
“ரொம்ப ரொம்ப ஹாப்பி நியூஸ். இது என்னனு பாரு”என ஒரு காகிதத்தை நீட்ட பிரித்து படித்தவளுக்கு வியப்பு தான்.
“நிஜமாவா…”என்று விழி விரித்தவளிடம் “ஆமாம் இன்னைக்கு தான் அட்வகேட் கூப்பிட்டு குடுத்தார். என்னால் நம்பவே முடியல தனு”என்றான் வியப்பு விலகாமல்.
“அப்போ இனிமே மகி நம்ம பையன். யாரும் உரிமை கொண்டாடிட்டு வர மாட்டாங்க தானே”என்று ஆவலுடன் கேட்டவளைக் கண்டு நெகிழ்ந்தவன் “வர மாட்டாங்க தனு. இதோ பாரு சத்யாவே கையெழுத்து போட்டு தந்துட்டாங்க”என அந்த காகிதத்தில் சத்யாவின் கையெழுத்தைக் காட்டவும் ஒரு முறைக்கு மூன்று முறை அந்த காகிதத்தில் இருந்ததை தெளிவாக படித்துப் பார்த்தாள்.
கடந்த மூன்று வருடங்களாக இதற்காக எத்தனை போராட்டம் எத்தனை முறை நீதிமன்றம் சென்று யார் யாரையோ வைத்து பேசி ஒரு வழியாக மகிழனின் கஸ்டடியை அருண் பிரசாத்திற்கே தந்திருந்தாள் சத்யா. கஸ்டடி என்பதை விட அருணிற்கும் பிரதன்யாவிற்கும் மகிழனை தத்து கொடுத்தது போல் எழுதி கையெழுத்து இட்டு தந்திருந்தாள் சத்யா. வருங்காலத்தில் மகிழனிடம் எந்த உரிமையும் கொண்டாட மாட்டேன் அவனின் முழு உரிமையையும் அருணிற்கும் பிரதன்யாவிற்கும் சுய சிந்தனையுடன் யாருடைய மிரட்டலும் இன்றி எழுதி தருவதாக ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டு இருந்தாள்.
இத்தனை பிரச்சினை நடந்த போதிலும் சத்யா அதிகமாக மகிழனை சந்திக்கவே இல்லை. அவள் பார்ப்பதற்கு கேட்டாலும் மகிழன் அவர்களைப் பார்க்கவே மறுத்தான். போக மாட்டேன் என்ற ஒற்றை வரியில் ஒதுக்கி வைத்தான் பெற்றவளை.
பிரதிம்மாவை எல்லாம் விட்டு விட்டு ரக்ஷிதா போல அம்மா என்றே அழைக்க துவங்கி இருக்க புதிதாக பார்ப்பவர்கள் மகிழனை அவர்களின் மூத்த மகன் என்று தான் நினைப்பர்.
அடாவடியாக பேசிக் கொண்டாலும் அவ்வப்போது சண்டை வந்தாலும் ஒருவரை ஒருவர் விலகி மட்டும் நிற்பதில்லை. ஆனால் காலையில் எழுந்து இரவு உறங்கச் செல்லும் வரை இருவருக்கும் முட்டிக் கொள்ளும்.
இப்போது எல்லாம் இரவு சினிமா பார்ப்பது தான் வெகுவாக குறைந்து விட்டது. குழந்தைகள் இருவரும் அப்பா அம்மா இல்லை என்றால் விழித்து கொண்டு சிணுங்கினர். அதிலிருந்தே எப்போதாவது நேரம் கிடைத்தால் மட்டும் தான் சினிமா எல்லாம். ஒரு சில வாரங்களில் தேஜஸ்வினி குழந்தைகளை அழைத்துச் சென்று விடுவாள். அப்போது எல்லாம் இருவருக்கும் கொண்டாட்டம் தான்.
இன்னொரு பிள்ளை பற்றி இருவருமே சிந்திக்கவில்லை. வரும் போது வரட்டும் என்று இலகுவாக இருந்தனர். அவர்களுக்கு மகிழன் ரக்ஷிதா இருவருமே போதும் என்று தான் தோன்றியது.
புகழ் இறந்த பிறகு எவ்வளவு தூரம் எந்த கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வேலை வேலை என்று ஓடினானோ இப்போது அவ்வளவுக்கு அவ்வளவு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டான். இப்போதும் அதே பொறுப்பும் சிக்கனமும் இருந்தாலும் கொண்டாட்டங்களுக்கு நேரம் ஒதுக்காமல் இருந்ததில்லை. அதற்கு முழு காரணம் யுகன் என்றால் மிகையாகாது.
“நீ வரலைன்னா போர் அடிக்கும் டா. போறதுனா சேர்ந்து போவோம்”என்று போகாமல் நிற்பவனைக் கண்டு வேறு வழியின்றி கிளம்பி விடுவான். என்ன தான் கார் வைத்திருந்தாலும் இரு இணைகளும் விரும்புவது என்னவோ ரயில் பயணத்தை தான். ரயில் பயணத்தில் தான் பிள்ளைகளையும் சமாளிக்க முடியும் என்பதால் இரு இணைகளும் அதைத் தான் தேர்வு செய்வர்.
மகிழன் முழுதாக தங்களிடம் வந்ததை யுகாதித்தனிடம் பகிர்ந்து கொண்டான் அருண்.
“சூப்பர் டா. ஹப்பா ஒரு வழியாக இந்த பிரச்சினையும் ஓவர். இனியாச்சும் நிம்மதியா இருங்க. உன்னை விட பிரதி தான் யோசிச்சு யோசிச்சே ரொம்ப கஷ்டப்பட்டு போயிட்டா”என்றான் நெகிழ்வான குரலில்.
“ஹ்ம்ம் ஆமா டா திடீர் னு நைட் எழுந்து உட்கார்ந்து அவனையே பார்த்துக்கொண்டு இருப்பா. அவளை சமாளிக்க தான் பெரும்பாடு ஆகிப் போயிடுச்சு.இனியாவது நிம்மதியா இருக்கணும்”என்றான் மன நிறைவுடன்.
கந்தசாயியிடம் விஷயத்தை பகிர்ந்த போது மனிதர் கதறி அழுதிருந்தார். மூத்த மகன் வாழ்ந்ததற்கு அடையாளமாக பேரன் இருக்க அவனை இழந்து விடுவோமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டியவருக்கு இது பெருத்த நிம்மதியை தந்திருந்தது.
*********
வெங்கடாசலத்தின் குடும்பம் மொத்தமும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் ஆஜராகியிருந்தனர்.
திரிபுரசுந்தரி பத்மநாபன் தம்பதியரின் பேரப் பிள்ளைகள் நால்வருக்கும் முடி இறக்கி காது குத்த வந்திருந்தனர்.
மொட்டை அடிக்க விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மகளை மலையிறக்குவதற்குள் யுகாதித்தன் தான் ஒரு வழியாகி விட்டான்.
முடியெல்லாம் மேலே உதிரவும் இன்னும் வீச்சு வீச்சென்று கத்தினாள் அவனின் செல்வ சீமாட்டி.
“லயா பாப்பா அழுவ கூடாது டா…இந்தா இங்கே பாருங்க இங்கே பாருங்க.”என்று சுதாகரன் தான் சற்று அவளை அமைதி படுத்தினான்.
“ப்பா டால்க்கு வயிக்கும்.” லக்ஷ்யாவின் மொட்டைத் தலையை வருடி முத்தமிட்டது வேறு யாரும் அல்ல சுதாகரனின் மகன் யுவகேந்திரன் தான்.
“மொட்டை அடிச்சது எல்லாம் வலிக்குமாடா அடேய் மவனே நீ ரொம்ப பண்றியேடா”என்று அகிலன் அவனின் கன்னம் கிள்ளி கொஞ்ச
“சித்து நோ”என்று தலையாட்டி கன்னத்தை அத்தனை துடை துடைத்தான்.
“ஒட்டலை ஒட்டலை. அண்ணி எங்கண்ணே சேத்துல கூட உருண்டு வருவாரு இவன் என்ன இவ்வளவு சுத்தம் பாக்கிறான்”என்று நந்தினியை அகிலன் வம்பு செய்து சிரிக்க
“அது என் புள்ள என்னை மாதிரி கொழுந்து. அதான் அப்படி அண்ணன் தம்பி எல்லாம் சேத்துல குதிக்கிற ஆள்னு தான் டூ ஸ்டெப் தள்ளியே வச்சிருக்கோம் என்ன அகலு”என்று அகிலனின் மனைவியையும் கூட்டு சேர்த்தவள் அகிலனை ஓட்டித் தள்ளினாள்.
“அடேய் அங்க காது குத்த வந்துட்டாங்க இங்க என்ன வியாக்கியானம் பேசிட்டு இருக்கீய. புள்ளையல தூக்கிட்டு வாங்கடா. போற பக்கம் எல்லாம் கூட்டம் சேந்துக்குவானுவ. ஏ அத்தகாரிகளா வாங்கடி உங்களுக்கு வேற வெத்தலை பாக்கு வைக்கணுமோ “என்று இளவரசி அதட்டலாய் பேசிக் கொண்டு வரவும் “வர்றோம்த்த”என்று இரு மருமகள்களும் செல்ல பின்னால் சுதாகரன் அகிலன் இருவரும் சென்றனர்.இருவரும் சேர்ந்து தான் சீர்வரிசை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து எல்லாம் சேர்ந்தே வாங்கியிருந்தனர்.
முதலில் யுகாதித்தன் தேஜஸ்வினி பிள்ளைகளுக்கு காதை குத்த கவின் ஒரு கண்ணை சுருக்கி “ஸ்ஸ் ஆஆஆ”என்றதோடு சரி. லக்ஷ்யா தான் மீண்டும் அழுது ஊரைக் கூட்டினாள்.
“யாத்தே பேத்தி ஸ்பீக்கரைத்தேன் முழுங்கி இருப்பா போலருக்கு”என்று இளவரசி சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். யுகாதித்தன் மகள் அழுவது பொறுக்காமல் கண்கலங்க அருண் சிரித்தபடியே “அடேய் இதுக்கு நீ ஏன் டா அழுவுற… “என்றதும் கண்களைத் துடைத்துக் கொண்டவன் “இதெல்லாம் இப்பவே வேணாம்னேன் கேட்டீங்களா”என்று மகளைத் தூக்கிக் கொண்டான்.
“வயசு ஆக ஆக உன் மக இன்னும் கத்துவா பரவாயில்லையா”என்று அதட்டிய சாரதா “மகனே…இதுக்கேவா”என்றார் கிண்டலாக.
“ப்ப்ச் சாரதா அவனே வருத்தத்தில் இருக்கான் நீ வேற சும்மா இரு . யுகி அந்த பக்கம் காத்தாடலா நில்லு”என்று அனுப்ப
“இல்லப்பா மகிக்கும் ரக்ஷிக்கும் காது குத்துவாங்களே”என்று அங்கேயே நின்று கொண்டான்.
“ரக்ஷி மா நீயும் கத்துவியா”என்று அகிலன் கேட்க
“மாத்தேனே. நான் குட் கேர்ள்”என்று சட்டமாய் மாமனின் மடியில் அமர்ந்து கொண்டாள் ரக்ஷிதா.
“இப்போ பார்க்கிறேன் குட் கேர்ளை”என்று காது குத்திய நொடி கத்திய கத்தலில் அகிலன் காதை குடைந்து கொண்டான்.
“ஹப்பா காது ங்ஙொய்னுது…கத்தாத ஆளைப் பாரு”என்று புன்னகைக்க
“பெரிப்பா இவரை அடிங்க. இப்பி குத்திட்டாரு”என்று காது குத்துபவரை அடிக்க யுகாதித்தனை அழைத்தாள்.
“யம்மாடி யம்மா… சுந்தரியக்கா உன் பேத்தியை பாத்தியா என்னைய அடிக்க பெரியப்பனை கூப்பிடுறதை. ஏன் பெரியப்பா தான் வரணுமாக்கும்”என்று காது குத்துபவர் கேட்க
“அவங்க பெரியப்பனுக்கு செல்லப்பிள்ளை. எதுக்கா இருந்தாலும் அவனைத்தான் கூப்பிடுவா”என்றார் சாரதா பெருமிதமாக.
“செரித்தான்.”என்றவர் புன்னகை முகமாக தன் சம்பளம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார்.
காது குத்தி முடியவுமே கௌமாரியை மனமுருகி தரிசித்து விட்டு அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் உணவருந்த ஏற்பாடு செய்து இருக்க அங்கே சென்று விட்டனர் அனைவரும்.
அசைவ விருந்து அமர்க்களப்பட்டது. அனைவரும் உணவருந்தி முடிக்கவும் யுகனையும் அருணையும் சாப்பிட அழைக்க வர ஒரு பக்கம் ரக்ஷிதாவை அருண் நெஞ்சில் சாய்த்து உறங்க வைத்தபடி தானும் உறங்கியிருக்க ஃமறுபக்கம் யுகன் தன் மகளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு உறங்கியிருந்தான்.
லக்ஷ்யா முகமெல்லாம் சிவந்து போய் அழுது அழுது அப்படியே உறங்கி இருந்தாள்.
“தூங்கறவங்களை என்னத்துக்கு பாக்குற சாரதா”என்று இளவரசி வரவும் கூடவே திரிபுரசுந்தரியும் வந்தார்.
“எதுவும் இல்லை அண்ணி. “என்றவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை அளவிட்டு கூற முடியாது.
பின்னர் இருவரையும் எழுப்பி உணவருந்த வைத்து விட்டு அங்கிருந்து கிளம்ப அதே நேரம் அகிலன் தான் இரு இணைகளும் சேர்ந்த புகைப்படம் வேண்டும் என்று நிற்க வைத்து விட்டான்.
கௌமாரி யின் பரிபூரண அருளோடு கவிலயாவின் ஆன்மா மகிழ்ந்து ஆசிர்வதிக்க இவர்களின் ஜோடி பிரியாதிருக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
……….. சுபம்………
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


❤️❤️💐💐💐💐💐👍😊
Super super super super super super super super super super lovely story