Loading

அத்தியாயம் 26

 

பிரிஸம் டவர்ஸ் அடித்தளம்…

 

வெளியே தடதடவென காலடிச்சத்தம் கேட்க, அதற்குரியோர் பிரேம் ரத்தோரின் காவலாளிகள் என்பதை உணர்ந்து கொண்ட அகரன் நக்கல் சிரிப்புடன் ரத்தோரை நோக்கி, “உன் செக்யூரிட்டிஸுக்கு இப்போதான் விஷயமே தெரியுது போல!” என்றான் கேலியாக.

 

அவனிற்குப் பயந்து ஒடுங்கி அமர்ந்திருந்த ரத்தோரோ, “அகரா, நீ தப்பா நினைச்சுட்டு இருக்க. உன்னை எதிர்க்கணுங்கிறது என்னோட எண்ணம் இல்ல. நம்ம ரெண்டு பேரோட நோக்கமும் ஒண்ணுதான். அந்தக் கற்களை பயன்படுத்தி லாபம் பார்க்குறது… நாம ஏன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது… எப்பவும் போல?” என்றார் மெல்லியக் குரலில்.

 

அதற்கு ஒரு அசட்டுச் சிரிப்பை வெளியிட்ட அகரனோ, “என் நோக்கமும் உன் நோக்கமும் ஒண்ணா? நீ வெறும் காசுக்காக இதைச் செய்யுற! ஆனா, நான்…” என்று இடைவெளி விட்டவன், “என்னோட நோக்கம் உன்னோடதை விட ரொம்ப பெருசு ரத்தோர்ஜி!” என்று கூறியவன், அங்கிருந்த கணினியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

 

அவனின் செய்கையைக் கண்ட ரத்தோர், “நான் சொன்னது உண்மைதான். உனக்கு எதிரா இதுல எதுவும் இல்ல.” என்று கூற, “ஆஹான், எப்படி மும்பைல இருந்தது மாதிரிதான?” என்று அதே நக்கல் தொனியில் கேட்டான் அகரன்.

 

அதற்குள் வெளியே இருந்து காவலாளிகள் ரத்தோரை அழைக்க, அவரை ஒரு பார்வை பார்த்த அகரன், கதவைத் திறந்தான்.

 

வெளியில் இருந்த நால்வர், அகரனையும் ரத்தோரையும் மாறி மாறிப் பார்த்தபடி, ரத்தோரின் கட்டளைக்காகக் காத்திருக்க, அவரோ அகரனிற்குப் பயந்து கொண்டே, “எதுக்கு நீங்க எல்லாரும் இங்க வந்தீங்க? நான் கூப்பிடாம வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்தான?” என்று ஹிந்தியில் திட்டி, அவர்களை அனுப்பி வைத்தார்.

 

மீண்டும் அகரன் அவனின் வேலையைத் தொடர, ரத்தோர் கூறியபடி அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

 

அப்போது அவனது பையிலிருந்து ஒரு பழைய ஓலைச்சுவடியை எடுத்தவன், “அப்போ, இதுதான் எனக்கு எதிரா இருக்க ஒரே ஆயுதம் போல!” என்று ஒரு மார்க்கமாகச் சிரித்தான்.

 

அப்போது அவனிற்குள் ஊடுருவியிருக்கும் சக்தியோ, அதை எரித்து விட சொல்ல, முதலில் அதற்கு ஒப்புக்கொண்டு அகரனும் நெருப்பைப் பற்ற வைக்கப் போகும் தருவாயில் என்ன எண்ணினானோ, அந்த ஓலைச்சுவடியைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

 

அந்தச் சமயத்தில் அவனது உடல் அவன் கட்டுப்பாட்டை மீறி செயல்பட ஆரம்பித்தது.

 

அந்தச் சக்தி அவனை முழுதாகக் கட்டுப்படுத்த முயல, அவன் அந்தச் சக்தியை மீற என்று அங்கு ஒரு குட்டிப் போரே நடக்க, கண்முன் நடப்பதை திகைப்பும் குழப்பமும் கலந்த மனநிலையோடு பார்த்தார் பிரேம் ரத்தோர்.

 

சில நிமிடங்கள் கடந்த நிலையில், அந்தப் போரில் அகரன் வெற்றி பெற, மிகுந்த களைப்புடனும், அதை மிஞ்சிய குழப்பத்துடனும் ரத்தோரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்.

 

அகரன் வெளியே சென்ற சில நொடிகளிலேயே ரத்தோரின் பேரன் அவருக்கு அழைக்க, சற்று நேரத்திற்கு முன் பார்த்த காட்சி கொடுத்த தாக்கம் விலகாதவராகவே அந்த அழைப்பை ஏற்றார் அவர்.

 

“ஹலோ தாத்தா, அங்க என்னதான் நடந்துட்டு இருக்கு? அந்த அகரன் கூட உங்களுக்கு என்ன தனியா பேச்சு? அவன் முன்ன மாதிரி இல்ல. ரொம்ப ஆபத்தானவனா மாறிட்டான்.” என்று அவன் கூறும்போதே, “ஆமா, நான் நேர்லயே பார்த்தேன்.” என்றார் ரத்தோர்.

 

“என்ன? உங்களுக்கு எதுவுமில்லையே?” என்று அவன் அதிர்ச்சியுடன் வினவ, “இல்ல… ஆனா, திரும்ப அவனோட கவனம் நம்ம பக்கம் திரும்பும்னு நினைக்கிறேன்.” என்றார் ரத்தோர் யோசனையுடன்.

 

“அப்போ, மத்த கற்களைப் பத்தி அவனுக்கு இன்னமும் தெரியாதா? உங்க கிட்ட எதுவும் கேட்கலையா?” என்று அவன் வினவ, “மேபி, அதுக்குத்தான் அவன் இன்னைக்கு வந்துருக்கணும். ஆனா, அதுக்குள்ள அவனுக்கு வேற வேலை வந்துடுச்சோ என்னவோ!” என்றவர், அகரனிடம் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி பேரனிடம் கூட பகிரவில்லை.

 

“எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. அடுத்த முறை அவனைத் தனியா மீட் பண்ணாதீங்க. நம்ம கிட்ட இருக்க கற்களை வேற இடத்துக்கு மாத்த சொல்லியிருக்கேன். அந்த இடம் உங்களுக்குத் தெரியாம இருக்குறது நல்லது!” என்று அவன் கூற, “ம்ம்ம்…” என்றதோடு முடித்துக் கொண்டார் ரத்தோர்.

 

அழைப்பைத் துண்டித்தவனிற்கோ, ‘என்னாச்சு இவருக்கு? எப்பவும் அந்தக் கற்களைப் பத்தி பேசுனாலே ரொம்ப ஹைப்பராகிடுவாரு. இப்போ நான் சொன்னதுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டாருன்னுல நினைச்சேன். ஆனா, எதுவுமே கேட்காம சரின்னு சொல்லிட்டாரு. உண்மைலேயே அவரு நல்லாதான் இருக்காரா?’ என்ற எண்ணம் தோன்ற, பிரிஸம் டவர்ஸில் இருக்கும் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ரத்தோரைக் கவனிக்கும்படி ஆணையிட்டான்.

 

இங்கு, ரத்தோரோ ஏதோ சிந்தனைவயப்பட்டவராகக் காணப்பட்டார்.

 

அவரின் மனதில் அகரன் உதிர்த்த சொற்கள் மீண்டும் மீண்டும் வலம் வந்து கொண்டிருந்தன.

 

‘என்னோட நோக்கம் உன்னோடதை விட ரொம்ப பெருசு!’

 

சில நிமிட யோசனைக்குப் பின்னர், ஏதோ முடிவெடுத்தவராக, தனது விசுவாசியைத் தொடர்பு கொண்டு, நடந்தவற்றைப் பகிர்ந்து, “அகரனோட ஃபேமிலியைத் தூக்கணும்!” என்று கட்டளையிட்டார்.

 

“சார் என்ன விளையாடுறீங்களா? அவன்கிட்ட ஏதோ பவர்ஸ் இருக்குன்னு சொல்றீங்க… அவனை எப்படி எதிர்க்க முடியும்? உங்க கிட்ட இருக்க அந்தக் கற்களை யூஸ் பண்ணப் போறீங்களா?” என்றான் அந்த விசுவாசி.

 

“அந்தக் கற்கள் எல்லாம் அவன் கிட்ட இருக்க சக்திக்கு முன்னாடி எதுவுமில்ல.” என்ற ரத்தோர், “நான் சொன்னதை ஏற்பாடு பண்ணு. இது கிட்டத்தட்ட சூசைட் மாதிரிதான். சோ, அதுக்கான ஆட்களை ஏற்பாடு பண்ணு.” என்றார்.

 

“சார்… இவ்ளோ ரிஸ்க் அவசியம்தானா?” என்று மறுமுனையில் இருந்தவன் வினவ, “என்னோட கணக்கு சரியா இருந்தா, நான் நினைச்சது நடந்தே ஆகும். சோ, நீ ஆளுங்களை ஏற்பாடு பண்ணிட்டு சொல்லு, நேரத்தை நான் குறிக்கிறேன்.” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

 

*****

 

சுடரொளி, இன்பசேகரன் மற்றும் மதுசூதனன் மூவரும் மென்மொழியின் வீட்டிற்குத் திரும்பினர்.

 

கையில் சில காகிதங்களுடனும், முகம் முழுக்க குழப்ப ரேகைகளைச் சுமந்து கொண்டும் திரும்பி வந்த சுடரொளியை நெருங்கிய மென்மொழி, “அடியேய் சுடர், ஏன் இப்படி பேயை பார்த்த மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று வினவினாள்.

 

அப்போதும் சுடரொளி எதுவும் பேசாமல் அவளிடமிருந்த கருநீலக் கல்லையே பார்க்க, “அவ எங்க பேயை பார்த்தா? அவளால பலர் பேயை நேர்ல  எக்ஸ்பீரியன்ஸ் பண்ண இருந்தாங்க.” என்ற இன்பசேகரன், அங்கு நடந்தவற்றைக் கூறினான்.

 

“எது பவர் வேலை செய்யலையா? உனக்கு மட்டும்தானா?” என்று கேட்ட யாழ்மொழி அவளிடமிருந்த கல்லை நோக்க, “சுடர் உன்னோட பவரை சரியா யூஸ் பண்ணியா? ஒருவேளை நிறைய யூஸ் பண்ணதால அப்படி ஆகியிருக்குமா?” என்று வினவினாள் மென்மொழி.

 

“இருக்குமோ? இந்த தடியனுங்க ரெண்டு பேரை சேர்த்து மறைய வச்சதுல, என் பவர்ஸ் குறைஞ்சுருக்குமோ? ஹையையோ, இப்போ எப்படி இதை ரீசார்ஜ் பண்றது?” என்று புலம்பவே ஆரம்பித்து விட்டாள் சுடரொளி.

 

அவளால் ‘தடியர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்களோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அப்போது அங்கு வந்த யுகேந்திரன், “நான்தான் முன்னாடியே சொன்னேனே… மெடிட்டேஷன்!” என்று கூற, “திரும்பவும் முதல்ல இருந்தா?” என்று நீள்சாய்விருக்கையில் சோர்வுடன் அமர்ந்து விட்டாள் சுடரொளி.

 

“மெடிட்டேஷன் பண்ணா பவர்ஸ் திரும்ப பழைய நிலைக்குத் திரும்பிடுமா?” என்று மென்மொழி சந்தேகத்துடன் வினவ, “சரியா தெரியல. பட் டிரை பண்ணிப் பார்க்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

 

“அப்போ மொபைலுக்கு சார்ஜ் போடுற மாதிரி இந்தக் கல்லுக்கும் சார்ஜ் போடணுமா?” என்று சுடரொளி உதட்டைப் பிதுக்க, “வேற ஆப்ஷனே இல்ல உனக்கு.” என்றான் இன்பசேகரன்.

 

“எல்லாம் உன்னாலதான்டா!” என்று சுடரொளி சண்டைக்குச் செல்ல, “ஒரு முறை என்னை மறைய வச்சதுக்கு சண்டைக்கு வரியா? அப்போ நானெல்லாம் எவ்ளோவோ கேட்கணும்!” என்றான் இன்பசேகரன்.

 

“அதான, அப்படிப் பார்த்தா உன்னோட பவரும் சார்ஜ் போயிருக்கணும்ல?” என்ற சுடரொளி, இன்பசேகரனை சந்தேகமாகப் பார்த்தபடி, “எனக்குத் தெரியாம பவர் பேங்க் எதுவும் வச்சுருக்கியா என்ன?” என்று வினவினாள்.

 

இருவரும் சண்டையிட்டுக் கொள்ள, அவர்களைக் கண்டு கொள்ளாத மென்மொழியும் யூகேந்திரனும் சுடரொளி எடுத்து வந்த காகிதங்களைப் பார்வையிட்டனர்.

 

பாதி எரிந்த நிலையில் இருந்த அந்தக் காகிதங்களைப் பார்த்த மென்மொழி, “இதுக்கும் நாம தேடுறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?” என்று வினவ, “இல்லன்னா, இது எதுக்கு அந்த இடத்துல இருக்கணும்?” என்றான் யுகேந்திரன், அந்தக் காகிதங்களிலிருந்த பட்டக வடிவத்தையும் அதிலிருந்து பிரிந்து சென்ற வானவில் நிறங்களையும் பார்த்தபடி.

 

“நமக்குத் தேவையானதை அகரன் எடுத்துருப்பான்னு சொன்னீங்களே… அப்போ இதை மட்டும் ஏன் விட்டு வச்சுருக்கணும்?” என்று மென்மொழி வினவ, “இதுக்கான பதில் என்கிட்ட இல்ல.” என்று தோளைக் குலுக்கினான் யுகேந்திரன்.

 

அப்போது மென்மொழிக்கு அவளின் அன்னையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

அதை ஏற்றவள், “நேத்து ஏன் காலை எடுக்கல?” என்று அழைப்பை ஏற்றவுடன் கேட்க, “நீதான் உன்னைத் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டியே… இப்போ எதுக்கு கால் பண்ண?” என்றார் அவளின் அன்னை விட்டேற்றியாக.

 

தாயின் பேச்சு எரிச்சலைக் கொடுத்தாலும், அகரனின் புதிய அவதாரம் அவளின் குடும்பத்திற்கே ஆபத்து விளைவிக்கலாம் என்பதால் மட்டுமே பொறுமை காத்தாள் மென்மொழி.

 

அத்துடன், அகரனின் சக்தி குறித்தோ, ஆராவமுதனின் ஆராய்ச்சி குறித்தோ நேரடியாக குடும்பத்தினரிடம் சொல்ல விரும்பவில்லை அவள்.

 

கூறினாலும், அவள் கூறுவதை நம்புவார்களா என்பதும் சந்தேகமே!

 

அதனாலேயே அதை மறைத்தவள், “அகரன் கிட்ட பேசுனீங்களா?” என்று வினவி, அகரனைப் பற்றிய தகவலைச் சேகரிக்க முயன்றாள்.

 

“ஹ்ம்ம், அவன் இன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டான். பாவம், ரொம்ப டையர்ட்டா இருப்பான் போல, வந்ததும் ரூமுக்கு போயிட்டான்.” என்று அவர் கூற, “என்ன அவன் வீட்டுக்கு வந்துருக்கானா?” என்று அதிர்ந்தபடி வினவினாள் மென்மொழி.

 

அதற்கு ஒரு மார்க்கமான தொனியில் ஆமோதிப்பாக பதிலளித்தார் அவளின் அன்னை.

 

“அம்மா, அவன் உங்ககிட்ட எதுவும் சொன்னானா? ஏதாவது வித்தியாசமா நடந்துகிட்டானா?” என்று பதற்றத்துடன் மென்மொழி வினவ, அவளருகே அமர்ந்திருந்த யுகேந்திரனோ அவளின் கரத்தைப் பிடித்து சாந்தமாக்கினான்.

 

“என்ன சொல்ற நீ? அவன் எதுக்கு வித்தியாசமா நடக்கணும்?” என்று அவளின் அன்னை வினவ, அவரிடம் எதுவும் சொல்ல முடியாமல், “ஒன்னுமில்ல… உங்க கிட்ட சொல்லாம போயிட்டானே… அதுக்கு ஏதாவது சொன்னானான்னு கேட்க வந்தேன்.” என்று சமாளித்த மென்மொழி, மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

இப்போது அனைவரும் மென்மொழியைச் சூழ்ந்து கொள்ள, “நாம டெல்லி போகணும்.” என்றாள் அவள் பதற்றத்துடன்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்