Loading

   எபிலாக்

    “மாப்ள…தோரணத்தை இழுத்து கட்டு”என்ற சுதாகரனின் குரலில் போஸ்ட் மரத்தில் ஏறியிருந்த யுகாதித்தன் “யோவ் மச்சான். இதுக்கு மேல இழுத்து கட்டினா பிச்சுக்கும்.”என்றான் சத்தமாக.

    “கீழாப்ள இருக்கு மாப்ளை அதான் சொன்னேன்”

    “உன் பனைமர உசரத்துக்கு எல்லாமே கீழ தான் டா தெரியும்”என்று நக்கலடித்தவன் இன்னும் சற்று இழுத்து கட்ட

    “மாம்ஸ் அப்படியே குதிங்க பார்க்கலாம். இன்ஸ்டா ரீல்ஸ் போட நல்லா இருக்கும்”என்று அகிலன் ஒரு பக்கம் கூற

    “டேய் என்ன லந்தா அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் ஏத்தி விட்ருவேன் பாத்துக்க”என்று மிரட்டியவன் அங்கிருந்து குதிக்கப் போக

    “மாமா ஒழுங்கா ஏணியில் இறங்கி வாங்க குதிச்சீங்க அவ்வளவு தான்”என்று எச்சரிக்கை விடுத்தாள் தேஜா. தனிமையில் தான் ஆதி என்று அழைப்பது பொதுவில் அனைவரும் இருக்கும் போது ஏங்க என்னங்க என்று அழைக்க இளவரசி தான் அதட்டி மாமானு கூப்பிடு என்றிருந்தார். அழைக்க கூச்சப்பட்டு தயங்கி அழைத்தவளிடம் ‘இது கூட கிக்கா தான்டி இருக்கு இப்படியே கூப்பிடு’என்றிருந்தான் அவளின் ஆதி. சில நேரங்களில் பொதுவெளியில் ஆதி என்று அழைத்து இளவரசியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பவளை பார்த்து சிரிப்பு தான் வரும் அவனுக்கு.

    “அவளுக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடட்டும் அண்ணி”என்று சாரதா கூட சொல்லி இருந்தார் ஒரு முறை.

    “சும்மா இரு நீ. இந்த பழக்கம் தான் மத்த இடத்திலும் வரும். மருமகனுக்கு மரியாதை எல்லாம் பொண்டாட்டி எப்படி நடத்தறாளோ அதுல தான் இருக்கு சாரதா. அங்கே எதுவும் தெரிஞ்சுக்காது இங்கே ஊருக்குள்ள இப்படி தான் கூப்புடணும்”என்று அதட்டியே சொல்லி இருக்க வேறு யாரும் பேச முடியவில்லை.

    இவளுக்கு மட்டும் அல்ல பிரதன்யாவிற்கும் அதே பாடம் தான் நடத்தினார் இளவரசி. அதில் அருணுக்கு தான் அத்தனை குதூகலம்.

    “ப்ரதர் அழகா சமத்தா மாமான்னு கூப்பிடணும் எங்கே கூப்பிடு பார்க்கலாம்”என்று நக்கலடிக்க

    “போடா டேய் உன்னை மாமானும் சொல்ல முடியாது கோமானும் சொல்ல முடியாது. அவங்க முன்னாடி உன்னை கூப்பிட்டா தானே”என்றாள் முறைப்பாக .

    அதனாலேயே அரசி முன்பு வேண்டுமென்றே பிரதன்யாவை அழைப்பதும் பேசுவதுமாய் இருக்க கடுப்பாகிப் போவாள் பிரதன்யா.

    “பிரசாத்”என்று பல்லைக் கடிக்கும் சமயங்களில் எல்லாம் எவரும் அறியா வண்ணம் கண்சிமிட்டி உதடு குவிப்பவனைக் கண்டு கோபமும் கொள்ள முடியாது அவளால்.

    மனைவியின் சொல்லே மந்திரம் என்பது போல ஏணியில் மெதுவாய் இறங்கி வர அகிலனுக்கு சிரிப்பு தாளவில்லை.

    “என் வாழ்க்கை என் ரூல்ஸ் னு சுத்தின மனுஷனை எப்படி ஆக்கிட்டாங்க எங்க அக்கா”என்று கிண்டல் அடிக்க தேஜா புன்னகையுடன் உள்ளே செல்ல “பின்னே கூட்டிட்டுப் போய் ஊமைக் குத்தா குத்தி அனுப்பிடுவா உங்கக்கா பயப்படணும்ல”என்றபடி நகர சுதாகரன் “ஆமாமா பயந்தவக தான் நீங்க எல்லாம்”என்றான் அவன் பங்கிற்கு.

   அதற்குள் அருண் அழைத்திருக்க”சொல்லுடா அங்கே எல்லாம் ரெடியா வரவா நாங்க”என்று கேட்க

    “முடிஞ்சது டா வண்டியை எடுத்துட்டு வாங்க. ஏத்திடுவோம்”என்றான் அருண்.

    வாழைமரம் கொண்டு வரப் போயிருந்தான் அருண். ஆளாளுக்கு ஒரு வேலையை கவனித்தது நம் அகிலனின் திருமணத்திற்கு தான்.

    படிப்பை முடித்த கையோடு இரு மாமாக்களும் தங்களுடைய கம்பெனியிலேயே ரெஃபர் செய்ய அகிலன் வேலை வாங்கி விட்டான். சில மாதங்கள் வேலை பார்த்திருக்க அதற்குள் அரசி தன் பக்க சொந்தத்திலேயே பெண் பார்த்து விட்டார். அகிலனுக்கும் மறுக்க காரணம் இல்லாமல் போக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தான்.

    செந்தாளம்பட்டியில் தான் திருமணம் என்று சுதாகரனின் தந்தை கூறி விட பத்மநாபன் மறுக்கவில்லை. வரவேற்பு மட்டும் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி விட்டார்.

    அதன்படியே இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்றிருக்க சொந்தங்கள் அனைவரும் ஒவ்வொரு குடும்பமாய் வந்து கொண்டிருந்தனர்.

    “ஏலே கல்யாண மாப்ள வெயில்ல என்ன சுத்திட்டு இருக்கவேன். கருத்து போயிடாதடே”என்று அகிலனை கிண்டல் செய்தது ஒரு பெருசு.

    “பொண்ணுக்கு கருத்த மச்சானதேன் பிடிக்குமாம் பெரியப்போய் அதேன் மாப்ள வெய்யிலேயே அலையுதான். தக்காளியை நவ்வாபழமா ஆக்குறோம் அதுக்கு தான் இழுத்துட்டு சுத்துறோமாக்கும்”‌என்று பதில் கொடுத்தான் யுகா.

    “அதுசெரி…மாலைகழுத்து வெளியே தெருவ அலையாதப்போய். லே சுதா என்னம்னாலும் நீ போயிட்டு வா. மாப்ளகாரனை வீட்டுல இருக்க சொல்லு”என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றார் அவர்.

    “அதுவும் செரித்தேன் அகிலு நீ இங்கனயே இரு. நாங்க பாத்துக்கிறோம். போர் அடிச்சா இந்த நண்டு சிண்டுகளை மேயி. வந்திடுறோம்”என்று யுகாவும் சுதாகரனும் மட்டும் கிளம்பிச் சென்றனர்.

    வாழை மரம் ஏற்றி வந்ததில் இருந்து வாசற்கால் தோரணம் மாவிலை என்று கட்டி முடித்து அவ்வபோது வந்தவர்களுக்கு பந்தி பரிமாறி என்று இளையவர்களுக்கு அத்தனை வேலை இருந்தது. கேட்டரிங் சர்வீஸில் விட்டு விடலாம் என்றதற்கு சுதாகரனே மறுத்து விட்டான்.

    “இம்புட்டு சொந்த பந்தம் சுத்தி நிக்கையிலே யாரையோ ஏன் விடணும்.ரெண்டு நா கூத்துக்கு ஆள் வைக்கணுமா. நம்ம பயலுக போதும் சித்தப்பா. நீங்க மத்ததை பாருங்க”என்று கூறி விட்டான்.

    அதன்படியே அவனது நண்பர்கள் உறவில் உள்ள இளைஞர்கள் என்று அவர்கள் தான் எல்லா வேலைகளையும் செய்தனர்.

    அடுத்தது உனக்கு தான் அவனுக்குத் தான் என்று தங்களுக்குள்ளேயே பேசி சிரித்துக் கொண்டு வேலையில் கவனம் வைக்க இடையில் அவரவரின் முறைப் பெண்களை பார்த்து ரசிக்கவும் தவறவில்லை.

    அகிலனுக்கு பார்த்த பெண் அமரிக்கையாக கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது இரண்டிற்கும் நடுவில் வளர்ந்த பெண்ணாக இருந்தாள். அசரடிக்கும் பேரழகு என்றில்லாமல் அழுத்தமான அழகியாக மிளிர்ந்தாள். முக்கியமாக தன் நாத்தனார்களுடன் தோழமையை கடைபிடித்தாள்.

    “அகிலா… ரொம்ப நேரம் அரட்டை அடிக்க வேண்டாம். நேரத்திற்கு தூங்கி எழுந்திருங்க. ஃபோட்டோ சூட் முடிச்சதும் தூங்க போயிடுங்க மத்ததை நாங்க பார்த்துப்போம்”என்று அவனை புகைப்படங்கள் எடுத்து முடித்ததுமே அறைக்கு அனுப்பி இருந்தனர்.

    “ஆதி உங்க கிட்ட தான் வரணும் னு ஒரே அழுகை”என்றபடி தன் பத்து மாதக் குழந்தை லக்ஷ்யாவை கொடுத்தாள் தேஜா. கவினுக்கு பிறகு அடுத்த பிள்ளை பெண் குழந்தை அவளின் ஆசைப்படி. கவிலயா எனப் பெயரிடுவான் என்று அவள் நினைக்க வித்தியாசமாக அவளின் லயாவை மட்டும் எடுத்து முதலும் கடைசியுமாய் அவ்வெழுத்து வருவது போல பெயரிட்டான் ‌.

  தேஜா சிரிப்புடன் “ப்பா சரியான ஆள் நீங்க நான் கூட உங்களை என்னவோ நினைச்சேன்”என்றதும் “ஏன் உனக்கு பிடிக்கலையா நேம் சேஞ்ச் பண்ணிடலாமா அஸ்வி”என்று ஒரு மாதிரியாக உள்ளடங்கிய குரலில் கேட்கவும் ஆதூரமாய் அவனைப் பார்த்தவள் “நீங்க எனக்கு கிடைச்சதுக்கே அவங்க நேமை வைக்கலாம்”என்றிருந்தாள்.

    காதலியை மறக்காதே அவள் வார்த்தைகளை மறக்காதே என்று கூறும் மனைவி யாருக்கு கிடைப்பாள்.

    அவள் காதலியாய் இருந்திருந்தால் எளிதில் மறந்து விடக் கூடும் அவனுக்கு அவள் எல்லாமுமாக இருந்திருக்கிறாள் பிறகெப்படி மறக்க இல்லை மறந்து போ என்று எப்படி சொல்ல…

    அவன் வானின் வானவில் அவன் காதலி என்றால் யுகனின் வானமே தேஜஸ்வினியாகிப் போனாள்.

    “லக்ஷி பாப்பாக்கு அப்பாட்ட வரணுமா”என்று மகளைக் கொஞ்சியபடி தூக்கிக் கொண்டவன் “கவின் எங்க அஸ்வி… அவனை தூங்க வை இல்லாட்டா உன்னை காலையில் போட்டு படுத்துவான்”என்று சொல்ல

    “அவன் தூங்கியாச்சு. மேடம் தான் ப்பா ப்பானு ராகம் போட்டாங்க அதான் தூக்கிட்டு வந்தேன்”என்றவள்”கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வருவோமா”என்று கேட்டதும் சரியெற்றவன் மகளைத் தோளில் போட்டபடி மனைவியோடு வாசலுக்கு நடந்தான்.

    “என்னவாம் முகமே ஒரு மாதிரியா இருக்கு”என்று அவளின் கையைக் கோர்த்துக் கொள்ள “எதுவும் இல்லை சும்மா தான்”என்னவளின் குரலும் சரியில்லை.

    “உனக்கு ஞாபகம் இருக்கா அஸ்வி. இந்த வீட்டுல தானே நாம ஐ ஸ்பை விளையாடுவோம் அந்த பாட்டி கூட திட்டிட்டே இருக்குமே”என்று ஒரு வீட்டைக் காட்டவும்”ஆமாம் ஆமாம். நான் கொஞ்ச வருஷம் இங்கே வரலைல்ல அப்போ அந்த பாட்டி ரொம்ப விசாரிச்சதாம்… அரசி பெரியம்மா சொல்வாங்க”என்றாள் பழைய நினைவுகளில் மூழ்கியபடி.

    “சின்ன பிள்ளையாவே இருந்திருக்கலாம் இல்ல அஸ்வி”என்றதும் “ம்ம்ம்”என்றவள் “அந்த ஒரு வருஷத்தை மட்டும் ஞாபகத்தில் இருந்து அழிச்சுட்டு மத்தது எல்லாம் இருந்தா சின்ன பொண்ணாவே இருக்க ஆசைப்பட்டு இருப்பேன்.”என்றாள் கசந்த முறுவலோடு.

    “விடுடா கண்ணா அதெல்லாம் ஒரு விஷயமா?!”என்றவன், “இதைத் தான் யோசிச்சு அப்செட்டா இருக்கியா யார் என்ன சொன்னா?”என மனைவியின் முகவாட்டத்திற்கு காரணத்தை மிகச் சரியாக பிடித்து விட்டான்.

    “அந்த பிரகாஷோட அக்கா ஒருத்தி இருக்காளே அவ தான் ரொம்ப ஓவரா பேசிட்டா”என்று சொல்லவும்,”ப்ப்ச் அவங்களை எல்லாம் மைன்ட் பண்ணாத அஸ்வி.”என்றவன் தோளோடு அணைத்துக் கொண்டு நடக்க, எதிரே பிரகாஷ் நடந்து வந்து கொண்டிருந்தான்.

    இவர்களைப் பார்த்ததும் ஒரு நொடி நின்றவன் பின்னர் வேகமாய் கடந்து செல்ல யுகன் புன்னகைத்தான்.

    பிரகாஷோ பின்னால் நின்று இருவரும் நடந்து செல்வதைத் திரும்பித் திரும்பி பார்த்துச் சென்றான்.

    “உன் சைல்ட்ஹூட் க்ரஷ் போறாரு”என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னவனை முறைத்தவள் “கொழுப்பு தான் உங்களுக்கு”என்று ஒரு அடி வைத்தாள்.

    சில நிமிடங்கள் நடந்த பிறகு “எவ்வளவு முட்டாள்தனம் பண்ண இருந்தேன்ல நான்”என்றாள் யோசனையாக.

    “லூசே… அதை எல்லாம் நினைக்காதே.”என்று சமாதானம் செய்ய

    “வேற யாரும் என் ஹஸ்பண்டா இருந்தா இவ்வளவு ஃப்ரியா பேச முடியுமா..‌. நல்லா நாலு மிதி மிதிச்சிருப்பான். “என்று புன்னகைக்க

    “நாம நம்ம லைஃப் ல நடந்ததை தெரிஞ்சு மேரேஜ் பண்ணிக்கிட்டோம் அஸ்வி. நமக்கு தெரியும் தானே ஒரே ஊர் எப்படியும் பார்க்க வேண்டி வரும் இதை எல்லாம் கடந்து போக வேண்டி வரும் னு. கடந்து போனதை நினைச்சுட்டே இருந்தா தான் கஷ்டம். மூவ் ஆன் ஆன பிறகு பழைய விஷயங்கள் நமக்கு சிரிப்பை தரும் இல்லை அதைப் பத்தி யோசிக்கவே மாட்டோம்”என்றான்.

    “பாப்பா தூங்கிட்டா வீட்டுக்கு போவோம்”என்றதும் மெதுவாய் நடந்து வீட்டிற்கு வந்தனர்.

    வரும் போதே சிலர் நலம் விசாரிக்கவும் செய்ய அவர்களுக்கு எல்லாம் பதில் தந்தபடி தான் வந்தனர்.

    புரிதலில் தானே காதல் நிலைத்து நிற்கும். இருவரின் மனதும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழும் போது நினைவுகளா அவற்றை அழித்து விடும். நிஜங்களின் கடுமையில் நினைவுகள் நீராவியாய் ஆகிடுமே. நிஜங்களோடு பயணிக்கட்டும் இந்த இணை.

    …… தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super