
அவளிடம் பேசி வைத்து பின்பும் தூக்கம் இம்மியளவும் அவனது கண்களை வந்து சேரவில்லை…
குற்றவுணர்வில் கொஞ்சம் தவித்த அவன் மனது, அவள் பேசி விட்டு வைத்ததும் ஆறுதலடைந்தது.
அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிறு தீப் பொறிப் போல உள்ளுக்குள் பற்ற ஆரம்பித்தது. அவளை திங்களன்று தான் பார்க்க முடியும் எண்ணும் போதே உடலில் ஏதோ ஒரு பாகம் நழுவத்தை போல உணர்ந்தான்.
இதயம் அவளுக்காக துடிப்பது போல ஒரு பிரேமை. இதயத்தை வருடி பார்த்துக் கொண்டான். நாளைக்கு அவளை பார்க்க செல்லலாமா? வேண்டாமா? என்ற பட்டிமன்றம் வேறு உள்ளுக்குள் நடத்தப் பட்டது.
அவளை பார்க்க போ மனம் ஊந்த, போகாதே என்று மூளை கட்டளை போட, என்ன செய்வதென்று அவனுக்கு புரிய வில்லை. அவள் வேண்டி மனம் போராட்டத்தில் முதல் அடியை எடுத்து வைக்க, போராட்டத்தின் முற்று கட்டையாக மூளை’ அவள் திருமணமானவள், வயது மூத்தவள் குழந்தையுடன் இருப்பவள் அவள் உனக்கு வேண்டுமா? செகண்ட் ஹேன்ட் ‘ என்றதும் அவனுக்கு சுருக்கென்று உள்ளுக்குள் கோபம் சுரந்தது தன்மீதே !
நாளைக்கு ஞாயிறு தூக்கம் தான் முக்கியம் என்று கண்களை மூடி தூங்கி, நித்ரா தேவியை தேட ஆரம்பித்து கண்டடைந்து உறங்கிப் போனவன், சரியாக நாலு மணிக்கு அலாரம் வைத்து போல எழுந்து விட்டான்.
“ச்ச..!”என தன்னை நினைத்துக் நொந்துக் கொண்டு மீண்டும் கண்களை மூட எண்ணியவனுக்கு மனப் போராட்டமே அவனை தூங்க விடவில்லை… துடைத்து எடுத்தது போல தூக்கம் காணாமல் போனது. எழுந்து குளித்து முடிந்து வெளியே வந்தவன் கண்டது என்னவோ இருளின் ஆட்சி தான் வீடெங்கும். மெதுவாக விட்டை விட்டு வெளியேறியவன், காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.
அவள் போகும் சர்ச் அவனது நண்பன் அஜய் செல்லும் அதே சர்ச் என்பதால் அவனுக்கு கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு முறை பத்து மணி பூசைக்கு அஜய் வந்திருந்த போது அவளை மட்டும் பார்த்திருக்கிறான். அவளை பார்த்த செய்தியை துருவனின் காதில் என்றோ போட்டது. இன்று தான் உதவியது.
நேரமாகவே வந்து விட்டான், அன்றைய நாளின் முதல் பூசை என்பதால் மக்கள் குறைவாக தான் இருந்தார்கள்.
உள்ளே வந்தவன் ஓரமாக அமர்ந்துக் கொண்டான் அவனுடன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அஜய் வந்து அமர்ந்து விட்டான். இந்த பூசையை அவன் இதுவரைக்கும் பார்த்தது கூட இல்லை… ஆனால் நண்பனாகிப் போனதால் வேறு வழியின்றி வந்திருந்தான்.
பூசைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தனர். துருவனோ வாசலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோளில் சாய்ந்து தூங்கி விழுந்தான் அஜய்.
“ப்ச்… பூசைக்கு வந்துட்டு தூங்கற! அப்புறம் ஜீசஸ் வந்து கண்ண நோண்டிட போறார்” தன் தோளை குலுக்கிட அவன் தலை, அந்த மர பெஞ்சில் மோதியது. உடனே “ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆ…!”என வலியில் கத்தியவனின் வாயை பொத்தினான் துருவன்.
“வலிக்குது டா தொலைஞ்சவனே! எதுக்கு டா அர்த்த ராத்திரியில போன போட்டு வர சொன்ன?”
“மச்சி, சண்டே சாமி கும்பிடறது உன் கடமை இல்லையா டா ! அந்த கடமையை நீ சரியா செய்ய உனக்கு உதவினேன் தப்பா மச்சி?”என பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டே கேட்க,
“நீ எனக்கு உதவியா செய்ற மச்சி ! உபத்திரம் பண்ணிட்டு இருக்க… நான் எல்லாம் பத்து மணி பூசை தான் போவேன்… நீ என்னடா என்னை ஐஞ்சற மணி பூசைக்கு வந்து உட்கார வச்சிருக்க, ஏன் டா ஏன்?”
“காலையில வேண்டினா நீ வேண்டறது எல்லாம் பழிக்கும் அஜய் !”
“உனக்கா? இல்லை எனக்கா?” சந்தேகம் கேட்க, “இல்ல புரியல என்ன உனக்கா? எனக்கா? ?”
“இல்ல டா ! நீ வேண்டறது நடக்குமா? இல்ல நான் வேண்டறது நடக்குமா?”
“எல்லாரும் வேண்டறதும் நடக்கும் டா”என்றான் வாசலை பார்த்துக் கொண்டு. அவன் பார்வையைப் கண்டதும் அவன் புறம் வாகா திரும்பி அமர்ந்த அஜய் “கிருஸ்டின் பொண்ண எதுவும் லவ் பண்றீயா மச்சி?”எனக் கேட்டான்.
வாசலை பார்த்துக். கொண்டிருந்தவன் அவனிடம் “எனக்கு சரியா தெரியல, ஆனா அவளை பார்க்கனும் மனசு ஏங்குச்சி அதான் பார்க்க வந்தேன்”என்றான்.
“யாரது ?”எனவும் அவன் தயங்க குடும்பத்துடன் வந்தமர்ந்தாள் ஜெஸி. அவனது கேள்வியை ஒதுக்கி வைத்து விட்டு அவள் வந்து அமருவதை கண்டான்.
வாயில் கைவைத்து அதிர்ந்த அஜய் “அடப்பாவி ஜெஸி மேடமையா?”
அவனோ ஆமோதிக்க, “டேய் “எனும் போதே பூசை ஆரம்பிக்க,
“அப்புறம் பேசலாம் “என்ற அஜய், அவனை முறைத்து விட்டு பூசையை கவனிக்க ஆரம்பித்தான்.
இவனோ பூசையை கவனிக்காமல் கடைக்கண்ணால் ஜெஸியை பார்த்தான். அஜய் இரண்டு முறை அவன் முகத்தை திருப்பி விட்டான்.
“பச், நான் எதுக்கு வந்தேனோ அதை தான் பண்றேன். நீ எதுக்கு வந்தீயோ அதை பாரு !”என உரைத்து விட்டு அவனை மீண்டும் பார்க்க,
“எங்க வந்து என்னடா பண்ற? இப்போ உன்னை தான்டா ஏசப்பா கண்ணா குத்த போறாரு!”
“வாய்ப்பே இல்லை… சிலுவ சுமந்தவரு என் கண்ணை குத்துவாரா போடா?!!”என்று அவனை அலட்சியம் செய்து விட்டு அவளை பார்க்கலானான்.
அவளது பார்வையோ பாதிரியார் சொல்லும் கருத்தில் பதிந்திருக்க, இவனது பார்வையோ அவள் மேலே படிந்தது. அவளுடன் வந்த மூவரையும் கவனித்தான். அதில் சுட்டித் தனமாக இருக்கும் டெனியை அவனுக்கு பிடித்து போனது.
அவனை அடக்கிய படியே பிரசங்கத்தை கவனித்துக் கொண்டிருந்தாள் ஜெஸி. அவனுக்கு சிரிப்பாக இருந்தது. பார்வையாலே ஒரு மனிதனை அடக்கி விடும் அவள், தன் மகனை அடக்க திணறிப் போவதை கண்டு ரசித்தான், உள்ளுக்குள் குதூகளித்தான்.
முதுகு சில்லிட, யாரோ தன்னை பார்வையால் துளைப்பது போல அவள் உணர, சட்டென அவளும் திரும்பினாள். தனக்கு பின்னாடியும் பக்க வாட்டிலும் பார்த்தாள். அவள் திரும்பியதும் தன்னை மறைத்துக் கொண்டான்.
அவனுக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது.’ இதெல்லாம் ஒரு பொழப்பு ‘ என்பது போல அவளை கேவலமாக பார்த்து துப்பி விட்டு திரும்பிக் கொண்டான் அஜய். பிரசங்கத்தில் ஒருவரை பார்த்து ஒருவர் சமாதானம் சொல்லும் நேரமும் வர,
வேகமாக, அவள் கண் பட தன் இடத்தை மாற்றிக் கொண்டான் துருவன்.’ ஐயோ ‘ என்றானது அஜய்க்கு. முதல் அவள் பக்கத்திலும் முன்னாடியும் “சமாதானம் சொன்னவள் , தன் மகனிடம் “சமாதானம் ” என்றாள்.
அவளை போல டெனியும் கைசேர்த்து குனிந்து சமாதானம் சொல்ல, அவன் நெற்றி முற்றி முத்தம் வைத்தவள், பக்கவாட்டில் திரும்பி “சமாதானம் “சொன்னவளுக்கு அதிர்ச்சி.
எதிரே குனிந்து சமாதானம் சொன்னது என்னவோ துருவன் தான். அவனை கண்டதும் அவள் விழிகள் பெரிதாக விரிந்தது.
அவனோ கையை அசைத்தான். அவள் அவனை முறைக்க, டெனி தான் அவனை பார்த்து கையை அசைத்தான் இவனும் வேகமாக அசைத்தான்.
டெனியை அடக்கி விட்டு திரும்பி அவனை முறைத்தவள், அவனுக்கு பின்னால் திரும்பி பார்க்க, ரவி, தன்யா , ஶ்ரீ , அசோக் என யாருமில்லை…
மீண்டும் அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள். அவனோ தோளை குலுக்கி விட்டு திரும்பிக் கொண்டான்.
அவனை பார்த்த பிறகு அவளால் பிரசங்கத்தை கவனிக்க முடியவில்லை. அவளது கவனம் ஏனோ சிதறிப் போனது. ஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. அனைவரும் எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்தனர் ,
இவனும் ‘ அப்பாடா முடிஞ்சது ‘ என. குறுக்கை பிடித்து ஆட்டிவிட்டு எழ, தலையில் அடித்துக் கொண்டான் அஜய். வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
இவனும் அவளுக்கு முன்னே சென்று வாசலில் அவளுக்காக காத்திருந்தான். இவளும் தன் குடும்பத்துடன் வந்தாள்.
“ஹாய் “என்றான் அவர்களுக்கு முன்னே, ஆரோக்யாவும் அபிராஹமும் தான் மருமகளை பார்த்தனர்.
“அத்தை மாமா, ஹி இஸ் மிஸ்டர் துருவன். சாருக்கு தான் நான் பாடிகார்ட்டா இருக்கேன்”என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள். அவள் கோபத்தில் இருப்பது அவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ அவனுக்கு புரிந்தது.
“ஹாய் ப்பா ! ஹாய் மா !”அவர்கள் முன் குனிய இருவரும் அவன் அழைப்பில் கனிந்து போக மகனாக எண்ணி அவனை ஆசிர்வாதம் செய்தனர்.
“சரிம்மா நீ பேசிட்டு வா ! நாங்க கல்லறையில இருக்கோம்”என்றவர்கள் அவனிடமும் சொல்லி விட்டு சென்றனர்.டெனியும் அவளுடன் இருந்துக் கொண்டான்.
அவனை பார்த்து குனிந்தவன் “ஹாய் பாய் ! ஹவ் ஆர் யூ?”என்றான்.
“பைன் அங்கிள் !”என்றான்
“அங்கிளா???!!! நோ ! கால் மீ துருவ்!”என்றான்.
“ஒகே துருவ்!”என்க “சோ சுவிட்”என்று கன்னம் கிள்ள, இவளோ அவனை சந்தேகமாக பார்த்து”எதுக்கு இங்க வந்த? அதுவும் தனியா? வீட்டுக்கு தெரியுமா நீ வந்தது? அவங்களுக்கு லீவு கொடுத்துட்டு, இப்போ இங்க தனியா வந்து நிக்கற? உனக்கு எதுவும் ஆச்சுன்னா யார் பதில் சொல்றது?” என்று பழைய படி கோபமாக அவனிடம் சீற,
“ஹேய் ஹேய் ரிலாக்ஸ் ! இப்போ நாம பிரண்ட்ஸ் மறந்துட்டீயா? அப்புறம் எனக்கு எதுவும் ஆகாது, ஏன்னா, என்னோட சீப் பாடிகார்ட் இங்க தானே இருக்காங்க”என்று உதட்டை சுழித்து நக்கல் செய்ய, அவனை தீயாக முறைத்தவள்
“எதுக்கு நீ இங்க வந்த? உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஏன் நான் இந்து தான். அதுக்காக சர்ச்க்கு வர கூடாதுன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா? எம் மதமும் சம்மதம் நினைக்கிற ஆள் நான். எல்லாக் கடவுளையும் கும்பிடுவேன்…
அது மட்டும் இல்ல நான் செஞ்ச பாவத்தை கர்த்தர் கிட்ட முறையிடலாம் வந்தேன்”என்று பாவமாக முகத்தை வைக்க, அவனை மீண்டும் சந்தேகமாக பார்த்தான்.
“என்னை நம்பலயா ஜெஸி? இல்லை ஒரு இந்து பையன் சர்ச் வந்தது பிடிக்கலையா? ஒருவேளை சர்ச்க்கு கிருஸ்டியன் மட்டும் தான் வரணும் நினைக்கிற மதவெறி பிடிச்ச பொண்ணா ஜெஸி நீ?! ச்ச உங்களை என்ன என்னமோ நினைச்சேன்.. இப்படி நீ சாதி, மதம் பார்ப்ப நினைக்கல ஜெஸி “என அவனொரு நாடகம் போட, அவர்களை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றனர் மக்கள். ஜெஸிக்கு ஒரு மாதிரி ஆகிவிட, அவனை அடக்கினாள்.
“எப்பா சாமி போதும், நீ தாராளமா இங்க வரலாம். நான் ஒன்னும் மதவெறி பிடிச்ச பொண்ணு இல்ல… காரணம் இல்லாம புதுசா வந்திருக்கியே எதுக்கு கேட்டேன்.. இப்போ என்னை ஆள விடு !”என நகர, அவனும் சிரித்துக் கொண்டே அவள் பின்னால் நடந்தான்.
அவளோ நேராக ஆரோனின் கல்லறைக்கு வந்தாள். சிரித்துக் கொண்டிருந்தவனின் முகம் மாறியது.
ஆரோனின் சிரித்த முகம் அந்த பளிங்கு கல்லில் பதித்திருந்தது, அதற்கு கீழ் அவனது பிறப்பு இறப்பு தேதி பொறிக்கப் பட்டிருந்தது. அதன் மீது பூக்களை வைத்து கண்ணீர் சிந்தி விட்டு அவனது பெற்றோர்கள் முன்னே சென்றிட
அவர்களை தொடர்ந்து மகனின் கையை பிடித்து மெல்ல முன்னே நடந்தாள் ஜெஸி. அவளை தொடர்ந்து புன்னகையுடன் வந்த துருவனின் முகம் கல்லறையில் ஆரோனின் முகத்தை கண்டதும் மாறியது.
அவன் பார்வை, தந்தையின் கல்லறை முன் மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடி வணங்கிய டெனியின் மீதும் படிந்தது.
அவனுடன் மண்டியிட்டவள், மெழுகுவர்த்தியை ஏத்தி வைத்து விட்டு, கரங்கள் இரண்டையும் கோர்த்து கண் மூடி கண்ணீர் சிந்தினாள்.
அமைதியாக அவர்கள் அருகே வந்து நின்றான் துருவன். கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு பக்கவாட்டில் வந்து நின்ற துருவனை கண்டாள். அவனது பார்வையோ ஆரோனின் முகத்தில் படிந்திருந்தது.
“ஆரோவோட கல்லறை… ஆனா இதுல ஆரோனோட உடம்பு இல்லை துருவா…”என்றாள் தன்னை மறந்து.
அவனோ திரும்பி அவளை புரியாமல் பார்த்தான். “உங்க அப்பாவோட உடம்பு உங்களுக்கு எப்படி கிடைக்கலையோ அது போல தான். ஆரோனோட உடம்பும் எங்களுக்கு கிடைக்கல… அவன் டாலரை வச்சி தான் அவனும் அந்த ஆக்சிடென்ட்ல இறந்துட்டான் தெரிஞ்சுக்கிட்டோம்… செத்த மகனுக்காக அவங்க அம்மா அப்பா கல்லறை எழுப்பி இருக்காங்க… ஆனா அவங்களுக்கு தெரியல ஆரோனோட உயிர் எங்கயும் போல என்கிட்ட தான் இருக்குனு…! அவன் சாகல துருவா ! என் கூட இன்னமும் வாழ்ந்துட்டு தான் இருக்கான்… இந்த மெழுகுவர்த்தி அவங்க திருப்திக்காக…!”என்றாள் போகும் அவளது அத்தை மாமாவை பார்த்த படி.
தூரத்தில் செல்லும் அவர்களின் உணர்வை அறிந்து கொண்டவளுக்கு அருகே நின்று கொண்டிருந்தவனின் உணர்வை கவனிக்க தவறவிட்டாள் பெண்ணவள்.
ஆரோனின் உயிர் தன்னுடன் இருப்பதாக கதைத்தவளுக்கு அருகே நின்ற ஜீவனின் ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை உணரவில்லை…
அவனுக்கு அங்கே நிற்பதும் தீயில் நிற்பதும் ஒன்று போல தான் இருந்தது. அவள் சொன்னது அவனுக்கு சுட்டது. ஆரோனின் இறப்பை ஏற்றுக் கொள்ளாதவள், தான் காதலை ஏற்றுக் கொள்வாளா? ஆரோனை மறந்து தன் காதலையும் தன்னையும் நினைப்பாளா? இது மலையை திருப்பிப் போடும் முயற்சியல்லவா உன்னால முடியுமா துருவா?’ மனசாட்சி கேட்க, அவனிடம் பதில் இல்லை. அமைதியாக நின்றான்.
தனக்காக காத்திருக்கும் அத்தை மாமாவை கண்டவளுக்கு அருகே இருந்த துருவன் நினைவிற்கு வர,
“நீ எப்படி தனியா போவ துருவா ! நான் வேணா கூட வரட்டுமா?”அவள் அவன் மீது கொண்ட அக்கறையில் கேட்டாள்.
“கூட வந்தால் ஹாப்பியா தான் இருக்கும் ஜெஸி. ஆனா நீ தான் உன் பேமிலியோட இருக்கியே !” இரு பொருள் பட கூறியவனை புருவங்கள் சுருங்க பார்த்தாள்.
“இல்ல.. அது.. பயந்து ட்ரைவ் பண்ண வேண்டியதில்லை, நீ இருக்கன்னு தைரியமா ட்ரைவ் பண்ணலாம்… அதுக்கு சொன்னேன்”என்று சமாளிக்க,
“அப்ப எதுக்கு சார் தனியா வந்தீங்க ?!”
அவள் கேள்விக்கு வழிந்தவன், ‘ உன்னை பார்க்க தான் சொன்னா உன் ஸ்டைல் அடிப்ப எதுக்கு?’ என உள்ளுக்குள் முணங்கியவன்,
“அஜய் இருக்கான் ஜெஸி . நான் மேனேஜ் பண்ணிப்பேன்”என்றான்.
“ஓகே.. பட் நீ டைரக்ட்டா வீட்டுக்கு தான் போகணும். எங்கயும் போக கூடாது” என்றாள்.
“ம்ம்…”என்றான் மனமின்றி.
இருவரும் பார்கிங் வரை ஒன்றாக தான் வந்தனர். மகனின் விரலை பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து வரும் ஜெஸியையும் அவள் விரலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டவனுக்கும் அவள் விரலின் ஸ்பரிசத்தை உணர வேண்டும் என்ற ஆவல் உதிக்க, ஆவலுக்கு அணைப்போட தவித்தான்.
இருவரும் மகிழுந்தின் அருகே வந்து விட்டனர். ஜெஸியின் மாமனார் மாமியார் கண்டு புன்னகை செய்தவன், டெனியின் முன் மண்டியிட்டு அமர்ந்து” நீங்க இங்க வருவீங்க நான் எதிர்பார்க்கல.. இப்போ இந்த துருவ் கிட்ட எதுவும் இல்லை.. நெக்ஸ்ட் டைம் ஒரு பிக் சப்ரைஸ் உனக்கு தர்றேன்… பாய் டெனி!”என்றான்
“ஓகே துருவ் பாய் !”என்றான்.
“வீட்டுக்கு வா ப்பா ! “என இருவரும் அழைக்க, “இன்னொரு நாள் வர்றேன் மா”என்று அவர்களிடம் விடைப் பெற்று அஜய்யுடன் செல்ல இருந்தவனை அழைத்தவள்”எதுனாலும் எனக்கு கால் பண்ணு இல்ல ரவிக்கு கால் பண்ணு ! பீ கேர் ஃபுல்”என்று எச்சரிக்க,
“ம்ம்”என்றவன் மனமின்றி கிளம்பினான். அவர்களும் கிளம்பி விட்டனர்.
“மணி எட்டுக் கூட ஆகல ! அடுத்து சார் எங்க போறதா இருக்கீங்க?”என நக்கல் செய்தான்.
“எங்கேயும் போக இன்டர்ஸ் இல்ல டா !”என சலிப்பாக சொன்னான்.”அதான் வீட்டுக்கு வாங்க ப்பா கூப்பிட்டாங்கலே போக வேண்டியது தான?”
“போகணும் தான் ஆசை. ஆனா உடனே வர்றேன் ஒத்துக்கிட்டா, அவங்க என்னை நினைப்பாங்க? ஜெஸி கண்டிப்பா கண்டு பிடிச்சிடுவா ! அவ்ளோ ஷார்ப் அவ ! சோ மெதுவா தான் அடுத்தடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கணும்”என்றவனை குழப்பமாக பார்த்தான் அஜய்.
“எதுக்கு ஸ்டெப் எடுத்து வைக்கற நீ?”
“அவ மனசுலயும் அவ குடும்பத்திலையும் இடம் பிடிக்க தான்…”என்று அவனுக்கு நெஞ்சு வலி வர வைத்தான்.
“ஆர் யூ மேட் துருவா ! உன்னை விட வயசுல மூத்தவங்க, மேரிட், குழந்தை வேற இருக்கு அவங்களை மேரேஜ் பண்ணிக்க நினைக்கிற நீ ? உனக்கு என்ன ஆச்சு?”
“எஸ் ஐ மேட் ஆன் ஜெஸி ! எனக்கு அவளை பிடிச்சிருக்கு … அவ வயசுல மூத்தவ, மேரிட், குழந்தை இருக்கு இதெல்லாம் எனக்கு தெரியல எனக்கு அவ மட்டும் தான் தெரியறா ! அவ மட்டும் தான் வேணும் எனக்கு !”என்று அவன் உலற!
“நீ ஏதோ குழப்பத்தில் இருக்க துருவா ! நாம பேசலாம்” என்றவன் அடுத்த கணமே தன் நண்பர்களை அழைத்து, கம்பெனிக்கு வர சொல்லிருந்தான் அஜய்.
அவர்களும் நேரம் பார்க்காமல் வந்து சேர, அங்கே மீட்டிங் நடந்தது.
“துருவா நீ யோசிக்காம ஜெஸி மேல வந்த அட்ராக்சனை காதல் சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கற தோணுது !”என்றான் வித்யாசாகர்.
“டேய் நான் என்ன அடல்ட் டா ! எனக்கு வந்த காதலை அட்ராக்சன் சொல்றீங்க… லவ் டா ப்யூர் லவ் !”
“ஏன் மேரிட் உமென் மேல தான் வரணுமா?”
“அவ மேரிட் தெரியறதுக்கு முன்னே அவ மேல எனக்கு லவ் வந்தது அதுவும் கோவால தான் அதை உணர்ந்தேன்… அவ லைப் ஸ்டோரி கேட்டதும் அவ கூட இருக்கணும் தோணுச்சு , அவ கூட வாழனும் ஆசைப்படறேன்”
“சப்போஸ் அவளுக்கு ஹஸ்பண்ட் இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப?”
“என் மனசை மாத்த ட்ரைப் பண்ணிருப்பேன் “
“எஸ் இப்பயும் உன் மனச மாத்துனு தான் சொல்றேன்… பிகாஸ்,ஜெஸி கூட அவங்க ஹஸ்பண்ட் இல்லைனாலும் அவங்க கூட இருக்கிறதா நினைச்சி வாழ்ந்துட்டு இருக்காங்க… அவங்க மனசை மாத்தி உன்னை காதலிக்க வைக்க போறீயா அதுக்கு வாய்ப்பே இல்ல… பெட்டர் உன் மனசை மாத்தறது நல்லது”என்றான் ரிஷி
“முடியாது ரிஷி ! எனக்கு ஜெஸி வேணும்…! அவ மனசை நான் மாத்துவேன்”
“அதுக்கு வருஷங்கள் ஆகும் துருவா !”
“எனக்கு கவலை இல்லை… ஜெஸி மனச மாத்துவேன், என்னை என் காதலையும் பதிய வைப்பேன். இட்ஸ் செலஞ்சு…!”என்றான்.
அவர்களும் அவனது மனசை மாற்ற முயன்றனர், ஆனால் அவனோ பிடித்த பிடியிலே இருக்க, அவர்களோ ‘இவனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது பட்டால் தான் திருந்துவான்’என்று விட்டு விட்டனர்.
நாட்கள் செல்ல, துருவனின் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியை திறக்கும் நாளும் வந்தது.
வீரமதியும் ராதாவும் சேர்ந்து ரிப்பன் வெட்டி கம்பெனியை திறந்து வைத்தனர். ஐயர் மந்திரங்கள் ஓதி பூஜை செய்து கொண்டே விளக்கை ஏற்ற சொல்ல, முதலில் வீரமதி. அடுத்து ராதா , நித்திகா, லோகிதா அவனது குடும்ப பெண்கள் அனைவரும் விளக்கை ஏற்ற, மீதி இருந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றாமல் இருக்க, அவனோ ஜெஸியை அழைத்து ஏற்றச் சொன்னான் முதலில் தயங்கினாள் .
அவன் பிடியாக அழைக்க, அவளும் வந்து விளக்கை ஏற்ற, வீரமதி தன் மகனது செயலில் குழப்பமும் அதிர்ச்சியும் கொண்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
