
காதல் -29
” யாழி … பிளீஸ் டி நான் பண்ணது தப்பு தான் .. என்ன மன்னிச்சிடு ” என பின்னால் ஓடினான் மறவன்…
சற்றும் தலை நிமிர்ந்து அவனை ஸ்பரிசிக்கவில்லை அவள்… யாரோ இவன் என்பதை போல வீட்டிற்குள் சென்று கதவை அடைக்க பார்க்க, மூடப் போகும் கதவை மூட விடாமல் தடுத்து விட்டான் மறவன்.
முகத்தை சுழித்து கொண்டு உள்ளே சென்றாள் சாயாலி… ” இங்க பாரு உண்மை என்னனு தெரியாம ஏதோ புத்தி கெட்டு போய் இப்படி எல்லாம் பண்ணிட்டேன் டி.. எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு யாழி… ஆனால் என்ன விட்டு மட்டும் போகாத பிளீஸ் ” என கெஞ்சும் கணவனை சற்றும் இரக்கமில்லா பார்வை பார்த்தாள் சாயாலி..
அவளது முகமே அவளது எண்ணத்தை பிரதிபலிக்க.. அனைத்தும் கை விட்டு போனவனாய் நிற்க..
வெளியே போகுமாறு சைகை செய்தாள் சாயா… ” நீதான் எங்க அம்மாவோட இந்த நிலைமைக்கு காரணம்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்… ஏன் தெரியுமா… அன்னைக்கு அந்த இடத்தில இருந்த சிசிடிவில நீ ஏதோ தப்பு பண்ணிட்டு பயந்து ஓடுற மாதிரியே இருந்தது.. அப்போதான் நான் கண்டு பிடிச்சேன்.. என் அம்மாவோட இந்த நிலைமைக்கு நீயும் ஒரு காரணம்னு… ஆனா நான் கொஞ்சமும் நினைச்சு பார்க்காத ஒன்னு, என் அம்மாவோட மானதுக்காக உன் அப்பாவையே நீ கொலை பண்ணுவன்னு நான் நினைக்கல யாழி…
இந்த காலத்துல யாருமே பண்ணாத ஒரு காரியத்தை நீ பண்ணிருக்க.. என்னால இதுல இருந்து வெளிய வர முடியல டி.. ஒரே குற்ற உணர்வா இருக்கு ” என அவள் அருகில் சென்று இறுக்க அணைத்திட.. அவளோ எந்த வித எதிர்வினையும் காட்டாது நின்று கொண்டிருந்தாள்.
” இப்பவும் உங்க உடம்பு மேல ஆசைப்பட்டு நான் கட்டி பிடிப்பேனு நீங்க எதிர்பார்க்க வேணாம் மிஸ்டர் மறவன்.. ” கணீரென்ற குரலில் திடுக்கிட்டு அவளிடம் இருந்து விலகினான் மறவன். சாயாலி பேசிவிட்டாள்.. அதோடு பேசிய வார்த்தை தேள் கொட்டியதை விட கொடுமையாக இருந்தது..
அவள் கூறிய வார்த்தை அத்தனை வலியை கொடுத்தது … இதே வலியை தானே நான் கூறும் போதும் அவளுக்கு வலித்திருக்கும்… நினைக்கும் போதே மனம் கசந்தது…
” இன்னொரு முறை என் கிட்ட நெருங்கி வர நினைச்சா ” என அருகில் இருக்கும் பழம் வெட்டப்பட வைத்திருந்த கத்தியை கொண்டு கையை கிழித்து கொள்ள போக… அடுத்த நொடி…
” யாழிழிழிழிழி…… ” என அலறிக் கொண்டே அதிர்ந்து விழித்தான்…
சுற்றி எங்கும் பார்க்க அவன் அறை, அவனது யாழி அற்ற அறை… கண்டது அனைத்தும் கனவு .. சண்டையிட்டு கொண்டாவது அவனுடன் இருக்கவேண்டும் என வெகுவாக அவனது மனம் ஏங்க.. இப்போது யோசித்து என்ன பயன்…
அறைக்குள்ளேயே இருந்த மறவனுக்கு தலை சுற்றியது. இன்னும் அந்த அறையில் சாயாலியின் தனிப்பட்ட நறுமணம் அவனை கொன்று புதைத்துக் கொண்டிருக்க.. அதையும் ஜீரணிக்க முடியாமல் குளியலறைக்குள் நுழைந்து கண்ணை மூடிக் கொண்டான்..
எங்கிருந்தோ தப்பிப்பது போல இருந்தது அவனது செயல்… ஆனால் அதற்கு மாறாக எங்கு சென்றாலும் உன்னை விடமாட்டேன் என்பதை போல அவளது அழகான புடவை ஒன்று அந்த குளியலறை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது..
பார்க்க பார்க்க இரு விழிகள் போதவில்லை அவனுக்கு.. அவளுக்காக பார்த்து பார்த்து அவன் எடுத்த புடவைகளில் ஒன்று.. கண்ணுக்கு விருந்தாக அத்தனை பாந்தமாய் அவளது பூ உடலை தழுவி இருந்தது..
கதவு தட்டும் சத்தத்தில் தன் எண்ணத்தில் இருந்து வெளியே வந்தவன்.. முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு கதவை திறந்தான்.
மூர்த்தி யோசனையாக நின்று கொண்டிருந்தார். ” உன் கிட்ட கொஞ்சம் பேசனும் மறவா , பேசலாமா ? ” என அனுமதி கேட்கும் தந்தையை புதிதாக பார்த்தான்…
“உள்ள வாங்க பா ” என பால்கனிக்கு செல்ல.. அவரும் அவனை பின் தொடர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து விட்டார். பால்கனி கம்பியில் சாய்ந்து கொண்டே தன் தந்தையை பார்த்தவன்… ” நிஜமா யாழி எங்க போனான்னு எனக்கு தெரியலை பா ” என கேள்வி கேட்கும் முன்னரே பதில் உரைக்கும் மகனை ஆயாசமாக பார்த்தவர்.
” என் மனசுல என்ன இருக்கு, அடுத்து என்ன பேச போறேன்னு கூட தெரிஞ்சு அதுக்கு பதில் சொல்லுற உனக்கு ஏன் மருமகள் மனசு தெரியலை… அவ மனச புரிஞ்சுக்காம ஒரு நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துட்ட ” என மகனை நோக்க.. அவனோ அனைத்தையும் இழந்தது போல நின்று கொண்டிருந்தான்.
என்ன இருந்தாலும் மகன் வாடுவதை தந்தையாக அவரால் பொறுக்க முடியுமா என்ன … ” நீ மனச விட்டுடாத மறவா.. கண்டிப்பா சாயாலி ரொம்ப தூரம் எல்லாம் போயிருக்க வாய்ப்பு இல்ல, அப்பா இருக்கேன் டா உனக்கு” என தோளை தட்டவும்.. அடுத்த நொடி அவரை இறுக்கி அணைத்திருந்தான் மறவன்..
சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது அவரை நெருங்கியது, விவரம் தெரிந்த வயதிற்கு மேல் தந்தையை தூரம் நிறுத்தி விட்டான்… இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுதல் தேடி தந்தையை அணைத்திருக்கிறான் என்றால் அவனது வலியின் ஆழம் அத்தனை பெரிது என்பது மூர்த்திக்கு புரிந்து போனது.
“அம்மாவை வர சொல்லவா மறவா “..
தந்தையை விட்டு பிரிந்தவன்… ” நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா பா ” என்றதும்…
” உனக்கு செய்யாம யாருக்கு டா செய்ய போறேன்… சொல்லு என்ன வேணும்”
” தமிழ் காதலன் புத்தகம் வேணும் ” என்றதும் அதிர்ந்து போய் மகனை பார்த்தவர்…
” உன்கிட்ட இல்லாததா ” என சந்தேகமாக கேட்டார்
அதை கேட்டதும் விரக்தியாக சிரித்தவன்… ” அந்த புத்தகத்தை மலை உச்சில இருந்து தூக்கி போடும் போது தான் பா, உங்க மருமகளை பார்த்தேன்… ” என்றதும் அன்றைய நாள் அழையா விருந்தாளியாக அவன் கண் முன்னே ஓட… முயன்று அதை ஒதுக்கி விட்டு… “உங்ககிட்ட இருக்கா பா ” என மீண்டும் கேட்ட மகனுக்கு பதில் கூறாமல் அறையில் இருந்து வெளியேறிய மூர்த்தி… நேராக அவர் அறைக்கு சென்று தமிழ் காதலன் புத்தகத்தை எடுத்து கொண்டு மீண்டும் மகனது அறைக்கு வந்தார்.
சாயாலிக்கு பிடித்த அதே புத்தகம்.. இப்போது அவன் கையிலும்… காதல் புறாக்கள் ஒன்றை ஒன்று பிரிந்தாலும்.. இருவருமே தமிழ் காதலன் புத்தகத்தில் ஒன்றாகி போனார்கள்….
கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டவன்… சாயாலியின் நினைவில் அவளை நினைத்து கொண்டே அவளை போலவே ஏதோ ஒரு பக்கத்தை திறந்தான்… தமிழ் காதலன் புத்தகம் அவளுக்கு மட்டும் தான் ஆறுதல் தருமா என்ன, இதோ மறவனுக்கும் ஆறுதலை வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறது.
அவன் திறந்த பக்கம் எண்.. 222..அன்று பேருந்தில் சாயாலி திறந்து அதில் உள்ள கருத்தை படிக்காமல் மூடி வைத்த அதே பக்கத்தை இன்று மறவன் திறக்கிறான்..
அதில் இருந்த வரிகள்…
வார்த்தையால் குத்தி
கிழித்து விட்டு
கண்ணீரால் மருந்திட்டால்
ஆறுமா???
மனதின் காயங்கள்!
ஏதோ அவனையே செருப்பால் அடித்ததை போல இருந்தது அந்த கவிதை…
சட்டென்று புத்தகத்தை மூடி டீபாயில் வைத்து விட்டு நெஞ்சை நீவிக் கொண்டே கண் மூடி அமர்ந்து விட்டான்… நினைவுகளோ அவனது ரதியின் வசம்..
அவனது நினைவுகளுக்கு சொந்தக்காரியோ… திண்டுக்கல் மாநகராட்சிக்கு வந்தடைந்தாள்.. திண்டுக்கல் அருகில் சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுமலைக்கு தேனுவை அழைத்து சென்றாள்.
மலை வாழ் மக்கள் அல்லவா… ஊர் விட்டு ஊர் வந்தாலும் அந்த மண் வாசனையும் மலை வாசனையும் அவர்களை விட்டு செல்லாது…
“இங்க உனக்கு யாரை மா தெரியும் ” என தேனு கேட்க..
அவர்கள் எதிரில் பளிச்சென்று வந்து நின்றான் பழனி… மரியாம்மாவின் மகன்… ஏற்கனவே சாயாலிக்கு பேசி வைத்தவன்.. தேனு கண்களை விரித்து பழனியை பார்க்க .. ” என்ன மா என்ன தெரியலையா ?” என கேட்க..
” எப்படி பா உன்ன மறப்பேன்… நீ என்ன இங்க இருக்க , எப்போ ஊரை விட்டு வந்த”
” எனக்கு இங்க திண்டுக்கல் ஜங்சன்ல வேலை கிடைச்சு வந்திட்டேன் மா ”
” ரொம்ப சந்தோஷம் பா…”
” எனக்கு எல்லா விஷயமும் தெரியும் மா.. நீங்க வாங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ” என இருவருக்கும் தைரியம் அளித்தான் பழனி… சாயாலி மருந்துக்கும் ஒரு வார்த்தை பேசவில்லை….
பிறகு பேசிக் கொள்ளலாம் என அவனும் அமைதியாக அவர்களுக்காக பாத்திருந்த வீட்டிற்கு அழைத்து சென்றான்..
” இப்போதைக்கு இங்க இருங்க மா, சாப்பாடு வாங்கி ரெடியா வச்சுருக்கேன்.. நான் வேலைக்கு போயிட்டு வந்து வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கலாம் … ” என அவனும் அவசரமாக பணிக்கி கிளம்பி விட்டான்…
ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக சாயாலி செய்தது, அங்கு அருகில் இருக்கும் பெண்களிடம் விவரம் கேட்டு வேலைக்கு சேர விரும்பினாள்… ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் மனைவிக்கு இந்த நிலை..
” சாயாலி”
” சொல்லுங்க ” என சைகை செய்த மகளை தவிப்பாக பார்த்தவர் … ” அங்க என்ன நடந்துச்சு என்ன சண்டை எதுவுமே நான் கேட்க விரும்பலை, ஆனால் நான் கேட்கிற ஒரு கேள்விக்கு மட்டும் மறைக்கமா பதில் சொல்லு… ” என கொஞ்சம் நிறுத்தி.. “மறவன் தம்பியை விட்டுட்டு வந்ததுல உனக்கு எந்த வருத்தமும் இல்லையா மா ” என முகத்திற்கு நேராக கேட்டு விட்டார் தேனு…
மனதை திறக்கும் நேரம் …. சாயாலி மனம் திறந்து கூறுவளா????
சனா💖

