
அத்தியாயம் 29
நடுஜாமத்தில் லட்சு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டு, தற்செயலாக திரும்பி படுத்த நிலா அவளை கண்டு ௭ன்னவோவென அலறி மற்ற இருவரும் எழுந்து அவர்களும் பயந்து, இறுதியில் லட்சுவென கண்டுபிடித்து, அவளை உலுக்க, அவளோ இவர்கள் அலறியதையே பொருட்படுத்தாமல் திரும்பி படுத்து உறங்கி விட, மற்ற மூவரும் பயத்தில் சிவராத்திரி இருந்தனர்.
விடிந்து எழுந்து அவளிடம் கேட்க, “சில டைம் அப்டித்தான்டி செய்வேன். அம்மா சொல்லிருக்காங்க, ஆனா எனக்கு ஞாபகம் இருக்காது. ஏன் பயந்துட்டீங்களா என்ன?” இவள் அசால்டாக கேட்க, மறுபடியும் அங்கு ஒரு பிரளயம் ஆரம்பமாகியது. இப்படியாக ஐ வி முடித்து ஊர் திரும்பினர்.
நடுச்சாமத்தில் வீடு வந்திறங்கியவளை எதிர்பார்த்து வாசலில் நின்றார் ஜெயந்தி. அடுத்த இரண்டு நாட்கள் லீவு என்பதால் மறுநாள் மதியம் மேல் எழுந்தவள், வாங்கி வந்த பொருட்களை காட்ட, “நல்லா இருக்கு” என்றவாறு வாங்கி பார்த்தார்.
ப்ரகலத்தன், அவன் அப்பா, அம்மா என அவர்களுக்கு வாங்கியதற்கும் அவர் எதுவுமே சொல்லாதது ஆறெழிலுக்கு குற்ற உணர்வை அதிகப்படுத்த, மெதுவாக, “இன்னொரு விஷயம் சொல்லணும்மா”.
“சொல்லு எழில்”.
“அது வந்து, ப்ரெசிடெண்ட்டும் அங்க வந்திருந்தாங்க. மொத நாள் புல்லா அவங்களோட தான் ஊரை சுத்திப் பாத்தேன், இது எல்லாமே அவங்களோட போய் எடுத்தது தான்”.
“நீ மட்டுமா? உன் பிரண்ட்ஸ் எல்லாருமா?”.
“நா மட்டும்தான் ம்மா” என்றாள்.
அமைதியாக அவளையே பார்த்தவர் “நிமிர்ந்து பாரு எழில். தப்பு செஞ்சுட்டு வந்து குனிஞ்சி நின்னுட்டா நா உன்ன மன்னிச்சுடணும்னு அர்த்தமா” என்க.
“இல்லம்மா, இது ஃபஸ்ட்டே பிளான் பண்ணது இல்லம்மா. சட்டுனு அந்நேரம் தோணுச்சு கிளம்பிட்டோம். போயிட்டு வந்தப்புறம் தான் லட்சு ரொம்ப திட்டுனா, தப்புன்னு புரிஞ்சது. ரொம்ப கஷ்டமா இருந்தது” என்க. ஓங்கி அறைந்தார்.
“உனக்கு அதிகமா இடம் கொடுத்துட்டேன். அந்தப் பையன்னு உன் ஸ்டாப் கூப்ட்டு சொன்னப்பவே நீ டிஸ்கன்டியூ பண்ணாலும் பரவால்லன்னு உன்ன அந்த காலேஜ் விட்டு நிறுத்திருக்கணும். எதனாலும் செஞ்சுட்டு சொல்லிட்டா தப்பு இல்லன்னு ஆயிடுமோ? போன இடத்துல ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா என்னடி பண்ணுவ. தைரியம் கூடி போச்சுல்ல. நல்லவன் மாறியே ௭ங்கிட்ட பேசிட்டு உன்ன கூட்டிட்டு சுத்துனானா அவேன். உன்ன இனியும் ௭ப்டி நம்புறது ௭ழில்” என திருப்பி ஒரு அடி அடித்தார். வாங்கிக்கொண்டாள் அமைதியாக.
“பதில் பேசுடி, இல்லனா நீ படிச்ச வர போதும், நானு ௭ன் வேலைய விட்டுட்டுறே பாட்டி கிட்ட போவோம். ௭ன்ன சொல்ற?”.
“இனி இப்டி பண்ணமாட்டோம் இதுவே லாஸ்ட், உன்ட்ட சொல்லாம ௭தயும் செய்ய மாட்டேன்ம்மா இந்த ஒரு தட ௭ங்கள ௭க்ஸ்கியூஸ் பண்ணு, பிரசிடெண்ட்ட ௭தும் சண்ட போடாத, அவுங்க ௭னக்காக தான் செஞ்சாங்க, இனி கண்டிப்பா ரிஸ்க் ௭டுக்க மாட்டோம்மா ப்ளீஸ் ம்மா. சாரி” ௭ன அவனுக்கும் சேர்த்தே தான் கடைசி வரை பேசினாள்.
வெடுக்கென்று ௭ழுந்து சென்று விட்டார் ஜெயந்தி.
ஆனால் அவளுக்கு இப்போது சற்று நிம்மதியாக இருந்தது. தவறு ௭ன உறுத்தியதை சொல்லி தண்டனையும் வாங்கியாகிற்று. அது குடுத்த நிம்மதி. கார்டனில் இருவரும் சேர்ந்து ௭டுத்த அந்த போட்டோவை காட்டும் தைரியம் மட்டும் வரவில்லை. அதை தனியாக எடுத்து வைத்து காலேஜில் ப்ரகலத்தனிடம் கொண்டு கொடுத்துவிட்டாள்.
“ஏன்?” என அவன் கேட்டதற்கும், லட்சு சொன்னது, வீட்டில் ஜெயந்தி அடித்தது என அனைத்தையும் சொல்ல.
“லவ்ல இது மாதிரி அடிதடி எல்லாம் சகஜம் தான். அம்மாதான ஃப்ரியாவிடு” என்றான் அவன்.
அன்றே ஜெயந்திக்கு கால் செய்து, “சாரி ஆண்ட்டி. எனக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் காலேஜ். அதான் அவளுக்காகன்னு ஒரு விஷயம் பண்ணேன். நீங்க கோபமா இருப்பீங்கனு தெரியும், உங்க கோபம் குறைய நா முயற்சி பண்ணிட்டே இருப்பேன்” என அவர் பதிலை ௭திர் பாராமல் பேசி வைத்தான்.
மேலும் ஒரு வாரமாக எழிலிடம் பேசாமல் இருந்தார். “இனி இப்டி பண்ண மாட்டேன் ம்மா” என அவளின் பலமுறை கெஞ்சலுக்கு பின்னையே சற்று மனமிறங்கினார்.
“இனி எனக்கு தெரியாம எந்த களவாணித்தனமும் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்ற கண்டிஷன் அடிப்படையில் அந்த கோபத்திலிருந்து மீண்டு வந்தார்.
ஆனால் ப்ரகலத்தன் அன்றைய தினத்தின் பின் அவனே படுபிஸியாக தான் இருந்தான். காலேஜ் வருவதே அதிசயமாகத் தான் இருந்தது. ஆறு மட்டும் சனி, ஞாயிறுகளில் ஜெயந்தி மொபைலில் இருந்து போன் செய்து அவனிடம் பேசுவாள். அதுவும் பத்து, பதினைந்து நிமிடங்கள் மட்டுமே, அதற்கு மேல் அவனே வைத்து விடுவான். அந்த பத்து நிமிடங்களும் நீட் எக்ஸாம், செமஸ்டர், ப்ராஜெக்ட் என காலேஜ் சம்பந்தபட்டதாகவே இருக்கும்.
படிப்பு ஒரு பக்கம் என்றால் காலேஜ் ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் மீட்டிற்கும் தயாராகினர். வாலிபால், கிரிக்கெட், கேரம் என அனைத்தும் இருந்தது. வெளி காலேஜிற்கும் நோட்டீஸ் அனுப்பினர். டேன்ஸிங், சிங்கிங் என அதற்கும் ரெடியாகினர். காலேஜ் கல்ச்சுரல்ஸால் கலைகட்டியது. ஆறு எதிலும் பங்கேற்க மாட்டேன் என்றவளை நண்பர்கள்தான் வற்புறுத்தி சேர வைத்தனர்.
முந்தைய வருடம் போல், 6 பேரும் இணைந்து நாடகம் போட பிளான் செய்தனர். அம்பிகாவதி-அமராவதி கதையை எடுத்து நடித்தனர். அந்த கதையில் இறுதியில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் இறந்து விடும் போல் காட்சி அமைக்கப்பட்டிருக்க, தத்ரூபமாக நடித்து கண்கலங்க வைத்தனர், அமராவதியாக நடித்த லட்சுவும், அம்பிகாவதியாக நடித்த நிலாவும். ஸ்போர்ட்ஸ் மீட்டில் வின் பண்ணியவர்களுக்கு அன்றைய விழாவில் விருது அளிக்கப்பட்டது.
முக்கியமாக பெஸ்ட் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் அந்த ஆண்டு இறுதி ஆண்டு மாணவனான ப்ரகலத்தனுக்கு வழங்கப்பட்டது. சந்தோஷமும், பிரிவின் துயரமும் கலந்த உணர்வில் இருந்தவள் விழா முடிந்து கிளம்புகையில் அவனிடம் அந்த மிஸ் யூ கார்டை நீட்ட, “இன்னும் செமஸ்டர் இருக்கு எழில். ரெண்டு பேப்பர்னாலும் அத எழுத வருவேன், அப்போ பாக்கலாம். டோன்ட் ஒர்ரி” ௭ன கன்னம் தட்டி சென்றான்.
அந்த மைசூர் அவுட்டிங்கின் பின் அவன் அவளிடமிருந்து அதிகமாக விலகியிருப்பதாகவே தோன்றியது அவளுக்கு, அதனால் “எனக்கு மட்டும்தான் பிரியப்போறோம்ற பீலிங்ல்ல??, உங்களுக்கு அது இருக்க மாதிரி தெரியலையே” ௭ன்றாள் அவனிடம்.
“இந்த ஸ்பேஸ் நமக்குள்ள டெம்ப்ரவரி தான் ௭ழில். உலகம் சுத்துற ஸ்பீடுக்கு இயர்ஸ் ஈஸியா ஓடிரும். நா அப்டித்தான் நினைக்கிறேன்” என்க.
அவள் பெருமூச்சுடன் கார்டை வாங்க சொல்லி நீட்ட, “தேங்க்ஸ் எழில்” என வாங்கியவன், அதை பிரித்து பார்க்க,
நீல நிறக் கண்ணன் அவன் – அவன்
கண்ணில் நான் விழுந்தேன் – என் கனவில்
அவன் நுழைந்தான் எனை கேளாமல்
அவனைத் தொடர்ந்தன என் பாதங்கள்,
அவனை மட்டுமே தொடரும் அவன் நினைவுகளுடன் காத்திருக்கிறேன் அவனோடு கைகோர்க்கும் நாளுக்காக
– – இப்படிக்கு அவனின் அவள்” ௭ன ௭ழுதியிருக்க,
லேசாக சிரித்தவன், “பார்றா கவிதைலா ட்ரை பண்ணிருக்க.. ரொம்ப நல்லாருக்கு எழில், தேங்யு. கோ’ன்னா மிஸ் யூ” என லேசாக அணைத்து விடுவித்தான்.
“அம்மா இன்னும் கோவமா தான் இருக்காங்க”.
“அதெல்லாம் நா பாத்துகிறேன் நீ எக்ஸாம்ல கான்சன்ட்ரேட் பண்ணு, ஸ்டடி ஹாலிடேஸ் வேஸ்ட் பண்ணாத” ௭ன்றவன், அதற்கு மேல் நிற்க நேரமில்லாமல் கிளம்பிவிட்டான்.
நாட்கள் ஓடியது. அவனது கடைசி எக்ஸாம்கே அவளை பார்க்க முடிந்தது. “இன்னும் எத்தன எக்ஸாம் இருக்கு?” ௭ன்றான்.
“இன்னும் 2 பேப்பர் இருக்கு. நீங்க கேட் எக்ஸாம் அப்ளை பண்ணீங்கல்ல என்னைக்கு எக்ஸாம்?”.
“இன்னும் பத்து நாள்ல, நீயும் நெஸ்ட் இயர்ல இருந்து ப்ரிப்பேர் பண்ணு விட்டுறாத. நா அடிக்கடி கால் பண்றேன். முடிஞ்சா வீட்டுக்கு வர்றேன்” ௭ன்க, அவள் தலையசைக்க, “மூஞ்சிய அப்டி வச்சிருக்காதடி நல்லா இல்ல”.
“சரி” என லேசாக சிரித்துக் கொண்டாள். அடுத்த அரை மணி நேரமும் அமைதியாகவே அமர்ந்திருந்து விடைபெற்றனர் இருவரும்.
நாட்கள் ஓட, அவன் அழைப்பிற்காக காத்திருந்தாள், வரவே இல்லை. இவளுக்கு எக்ஸாம் முடிந்து, லீவு முடிந்து, தேர்டு இயர் ஸ்டார்ட் ஆகி இருந்தது. சண்டே கால் செய்து பார்ப்பாள், அவன் தான் எடுக்க மாட்டான். மூன்று மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் காலையில் ஜெயந்தி செல்லிற்கு ப்ரகலத்தனிடம் இருந்து கால்வர எடுத்தார், ஆனால் பேசாமல் அமைதியாக இருக்க, “உங்ககிட்ட இருந்து தான் கோவம் வந்தா பேசாம கம்முனு இருந்துக்கணும்னு எழில் படிச்சுருக்கா ஆண்ட்டி” என்றான் சிரித்து.
“என்ன விஷயம்?” என்றார்.
உடனே “ஹப்பா இதுவாது கேட்டீங்கட்டீங்களே. எப்டி இருக்கீங்க ஆண்ட்டி. எழில்ட்ட கூட பேச முடியல, நாலு மாசம் ஆச்சு. செமஸ்டர் ரிசல்ட் எப்டி வந்திருக்கு. என் மேல கோவத்துல இருக்காளா என்ன?” என வரிசையாக கேட்க.
“வெட்டி கத பேச தான் போன் பண்ணுனனா, நா வச்சுடுறேன்” என்றார் அதட்டலாக.
“சரி ஆண்ட்டி, நா விஷயத்தை சொல்லிட்டு வச்சுடுறேன். கேட் ஸ்கோர்ல xxxல ஏரோ டிசைனர் போஸ்ட்க்கு செலக்ட் ஆகிட்டேன். டெல்லில போஸ்டிங், கம்மிங் 15த் ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர் வந்திருக்கு”.
“ரொம்ப சந்தோசப்பா வாழ்த்துக்கள்” என்றார் மனதார சந்தோஷத்துடன்.
“ஈவினிங் எழில கால் பண்ண சொல்லுங்க”.
“நானே அவட்ட சொல்லிக்கிறேன். அவ்வளவுதான வச்சுடடுமா” என வைத்துவிட்டார்.
ஈவினிங் வந்தவளிடம் அவர் சொல்லவில்லை, மறுநாள் காலையில் அவள் ப்ரண்ட்ஸ் சொல்லியே அவளுக்கு விஷயம் தெரிந்தது. ‘என்ட்ட மட்டும் ஏன் சொல்லல? நா எத்தன டைம் கால் பண்ணேன், ஏன் எடுக்கல?’ என மனதிற்குள் மிகவும் வருந்தினாள். ஆனால் மீண்டும் முயற்சிக்க கஷ்டமாக இருந்ததால் போன் பண்ணவில்லை.
அவன் சொன்னது போல் நாட்கள் வேகமாக தான் சென்றது. பைனல் இயரில் காலெடுத்து வைத்தாள். இருவரும் பேசி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இருந்தது. எல்லா விஷயமும் வைரம் மூலமே இவளுக்குத் தெரியவரும். ஆனால் ஒரு நாளும் வைரம் போனை வாங்கி இவளும் பேசியதில்லை, அவனும் போன கொடு அவட்ட பேசுறேன்னு சொன்னது இல்லை.
ஆனால் அவன் ஜெயந்தியிடம் எல்லா விஷயங்களையும் தவறாமல் பகிர்ந்து கொண்டான். அது எழிலுக்கு தெரியாது. இவளுக்கு தெரியாது என்று அவனுக்கு தெரியுமோ தெரியாதோ., இருந்தாலும் ஒரு யூகத்தில் வைரத்திடமும் சொல்லி விடுவான். அவன் மூலமாகனாலும் தன்னை பற்றிய விஷயம் ௭ழில் காதிற்கு செல்லட்டுமென. இவளை பற்றியும் அனைத்தும் அவன் அறிவான். ‘ஏன் பேச மறுக்கிறான்?, ௭த்தனை முறை தானே இறங்கி இறங்கி சென்று பேசுவது’ ௭ன்ற குழப்பத்தில் சுற்றி வந்தாள் ஆறெழில்.

