
பிறை -52
இவ்வளவு தூரம் வந்த பின் என்ன செய்ய முடியும்.. நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் அமைதியாக இருந்தாள் பிறைநிலா.
” உன் புருஷன் வருவான்னு ரொம்ப திமிரா இருக்க போல .. இந்த காட்டுக்குள்ள இருக்கிற லேப் ரொம்ப பழமையானது. ரொம்ப பேருக்கு இது தெரியாது. மும்பைல ஐம்பது வருஷத்துக்கு மேல வாழ்ந்தவங்களுக்கு மட்டும் தான் இப்படி ஒரு பழமையான லேப் இருக்கிறது தெரியும்.. அப்பறம் ஒரு முக்கியமா விஷயம்.. இப்போ இந்த லேப் என்ன கண்டிஷன்ல இருக்குன்னு யாருக்கும் தெரியாது.. நாங்க என்ன பண்ணுறோம்.. உள்ள என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரியாது.. அப்படி இருக்கும் போது உன் புருஷன் கண்டு பிடிச்சு வந்துடுவானா.. சரி வந்துட்டான்னு வச்சுக்கலாம்.. ஆனால் இந்த காட்டை மீறி இந்த லேப்பை நெருங்க அவனால முடியவே முடியாது. மீறி வந்தாலும் நான் கொன்னுடுவேன்” மிருகமாக பேசும் அவனை தீயாக முறைத்து வைத்தாள்.
வெகு நேர சித்தனையில் இருந்தவள் ” நீ சொல்லுற எல்லாத்துக்கும் நான் ஒத்து வரேன்.. பார்கவியை நான் இப்போவே பார்க்கனும் ” அழுத்தமாக இருக்கும் பிறையை நக்கலாக பார்த்தவன்.. அவளை அழைத்துக் கொண்டு பார்கவி இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அறைக் கதவை திறந்த சத்தத்தில் வேகமாக நிமிர்ந்து பார்த்தவள்.. அங்கு சத்தியமாக பிறையை எதிர்பார்க்கவில்லை..
” அண்ணி…. ” என அலறிக் கொண்டே ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டாள்.
” பாரு.. உனக்கு ஒன்னும் இல்லையே ” என அவளை மேல் இருந்து கீழ் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தாள் பிறைநிலா.
” தெரியல அண்ணி.. என்ன வச்சு ஏதோ ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டான்.. என்ன பண்ணான்னு எனக்கு தெரியல ” சிறு குழந்தை போல அழுகும் அவளை பார்க்க, இவளுக்கும் அழுகை வந்தது.
கதவில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு இருவரையும் இமைக்காது பார்த்து வைத்தான் அர்ஜுன்.
” இவளை ஏன் டா இப்படி பண்ண.. ” என கத்தியவள்.. ” அதான் நான் வந்துட்டேன்ல.. உன் அண்ணன் வந்திடுவாரு.. எப்படியும் நம்மள காப்பாத்தி கூட்டிட்டு போயிடுவாரு ” என பார்கவிக்கு தைரியம் கூறியவள்.. அவளோடு அமர்ந்து கொண்டாள்.
” நீ லவ் பண்ணுறேன்னு தானே சொன்ன.. அவன் கூட ஓடி வந்ததா தான் வீட்ல நினைச்சுட்டு இருக்காங்க.. ஆனால் உன்ன இவன் கடத்திட்டு வந்தது யாருக்கும் தெரியாது பாரு” என்றதும் குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டாள் பார்கவி.
” என்னாச்சு பாரு..”
” இவன் தான் அண்ணி நான் லவ் பண்ண அர்ஜுன் ” என பார்கவி கூறியதும்.. அதிர்ந்து போனாள் பிறை.
” என்னது இவனா.. ” என அவனை முறைத்து பார்த்தவள்.. ” உன்ன ஏமாத்தி கூட்டிட்டு வந்தானா ”
” இல்ல அண்ணி.. ” என்றதும் அர்ஜுன் புருவத்தை சுருக்கி அவளை பார்க்க.. அவனையே ஆழ்ந்த பார்த்தவள்.. ” நான் தான் அவன் காதல் உண்மைன்னு நம்பி ஏமாந்து போயிட்டேன். என் அம்மா அப்பா மாதிரி காதலிச்சு கல்யாண பண்ணி சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்பட்டது தப்பா அண்ணி.. ” உருகி அழுதவளை பார்த்து மனம் வலித்தது.
” உங்க அம்மா அப்பா மாதிரி கல்யாணம் பண்ண நினைச்சது சரி தான் பாரு.. ஆனால் உங்க அப்பா மாதிரி ஒரு ஆளை நீ காதலிச்சு இருக்கனும். தப்பான ஆளை காதலிச்சு வாழ்க்கையை தொலைக்க போயிருக்க.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. உங்க அண்ணன் வந்து நம்மளை காப்பாற்றுவார்” என உறுதியாக கூறினாள் பிறைநிலா.
அவர்களது உரையாடலை கேட்டவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஏனோ அவள் தவறானவனை காதலித்தேன் என கூறியது அவனுக்கு சுருக்கென்று இருந்தது.
” பேசுனது போதும்.. நீ கேட்ட மாதிரி அவளை பார்த்தாச்சுல… இப்போ வா ஸ்டார்ட் பண்ணலாம் ” என பிறையை அழைக்க.. பார்கவி அவசரமாக தடுத்தாள்.
” வேணாம் அண்ணி. அவன் சொன்னான்னு போகாதீங்க.. கண்ட கண்ட மருந்தை எல்லாம் நம்ம உடம்புல ஏத்துவான்.. நமக்கு சுய நினைவே போயிடும்.. போதையில வச்சிருப்பான்.. உடம்புல இருந்து என்னமோ எடுக்குறான்” என பயத்தில் படபடவென பேசினாள் பார்கவி.
அதில் சற்றே பயந்து போன பிறை… அவன் அழைத்தும் அந்த இடத்தை விட்டு நகராமல் இருக்க.. அதில் கோபமடைந்தவன்.. ” நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க.. நிலா நீயா வந்துட்டா உனக்கு நல்லது.. இல்லைன்னா மோசமா நடந்துக்க வேண்டியது இருக்கும் ” எச்சரித்தான் அர்ஜுன்.
அர்ஜுனின் இப்படி ஒரு பரிமாணத்தை பார்த்த பார்கவிக்கு நெஞ்சம் எல்லாம் அடைத்தது.
” பிளீஸ் அர்ஜுன்.. என் உடம்புல இருந்து எடுத்தது பத்தாதா.. அண்ணியை விட்டுடு… ” என கெஞ்சினாள் பார்கவி.
” யூஸ்லஸ் மாதிரி பேசாத கவி.. இவளை வச்சு நான் எவ்வளவு பெரிய பிளான் எல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா.. இவ மேல இருந்து வர வாசனை .. அது எப்படி ஒரு வாசனை தெரியுமா.. நார்மலா ஸ்மெல் பண்ணாலே அப்படியே போதையாக்குது.. கண்டிப்பா நிலா எனக்கு வேணும்.. ” என உறுதியாக கூறியவனை பார்த்து இரு பெண்களும் அதிர்ந்தனர்.
” தப்பு பண்ணுற அர்ஜுன்.. நீ அழிவை நோக்கி போயிட்டு இருக்க.. என் அண்ணனை சாதாரணமா இடை போடாத.. அவரு கண்டிப்பா எங்களை கண்டு பிடிச்சு வருவாரு.. பிளீஸ் விட்டுடு ”
” விடுறதுக்கா இத்தனை வருஷமா பிளான் பண்ணி தூக்கிருக்கேன்.. பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணாத.. நிலா நீ என்கூட வா ” என அவன் அழைக்க கலக்கத்தோடு அங்கிருந்து எழுந்தாள் பிறை.
” அண்ணி.. நீங்க ஏன் போறீங்க ”
” இல்ல பாரு.. தெரிஞ்சோ தெரியாமலோ.. நீ இங்க வந்து மாட்டிட்டு இருக்கிறதுக்கு நானும் ஒரு காரணம் .. அதுனால உன்ன காப்பாத்த நான் இதை பண்ணித்தான் ஆகனும். நான் முடியாதுன்னு சொன்னாலும், இந்த விஷயம் நடக்கத்தான் போகுது. என்னால தான் இதுக்கு முடிவுன்னா.. இதுல கடைசியா பாதிக்கப்படுறது நானாவே இருந்துக்கிறேன் ” என கண்ணீர் மல்க அவனோடு சென்றாள் பிறை.
” ஐயோ அண்ணி நீங்க எப்படி இதுக்கு காரணம் ஆக முடியும்.. தப்பு எல்லாம் என் மேல தான் போகாதீங்க.. ” என பார்கவி கத்தியும் அவனோடு சென்றிருந்தாள் பிறை.
‘ ஐயோ அண்ணா .. நீ எங்க இருக்க.. அண்ணியை வந்து காப்பாத்து.. கடவுளே… இதுல இருந்து தப்பிச்சே ஆகனும் ‘ என மனதிற்குள் புலம்பினாள் பார்கவி.
காட்டின் மற்றொரு பகுதிக்கு சென்றவர்கள்.. அங்கிருந்த குறுகிய பாதையை பார்த்து, அதன் வழியே தேடிச் செல்ல தயாராகினார்கள்.
காட்டிற்குள் போவதற்கு தேவையான உபகரணங்களை எல்லாம் எடுத்து கொண்டு ஜீப்பை இயக்கினான் சரண். ” பயப்பிடாத ஆதி.. கண்டிப்பா அவனை கண்டு பிடிச்சுடலாம்.. ரெண்டு பேரையும் கூட்டிட்டு தான் நம்ம ஊருக்கே போறோம் ” என உறுதியாக கூறினான் சரண்.
ஆனால் அதற்கு எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தான் ஆதிதேவ். அவன் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்பது அவனுக்கே வெளிச்சம்.
இங்கு பிறை ஆடையை மாற்றிக் கொண்டு அனைத்திற்கும் தயாராக இருந்தாள்.
அவளை அழைத்து கொண்டு வழக்கம் போல அந்த கண்ணாடி பெட்டிக்குள் படுக்க வைத்தவன்.. அவளது உடலில் செலுத்துவதற்கு தேவையான மருந்துகளை தயார் செய்து கொண்டிருக்க..
அப்போது.. அந்த கட்டிடம் அதிரும் அளவிற்கு அபாய ஒலி எழுந்தது. அதில் துணுக்குற்றவன்.. வேகமாக எமர்ஜென்சி அறைக்கு சென்றான். அவன் பின்னயே வில்சனும் சென்றார்.
வேகமாக இருவரும் அங்கிருந்த சிஸ்டத்தை எல்லாம் பார்வையிட.. அதில் ஒரு நான்கு ஜீப்புகள் லேப் இருக்கும் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
” யாரு இவங்கலாம். என்ன நடக்குது ஆதி.. இத்தனை பேர் எதுக்காக திடீர்னு காட்டுக்குள்ள வராங்க. அதுவும் இந்தப் பாதை அவங்களுக்கு எப்படி தெரியும்.. சம்திங் பிஷி .. ” சற்றே பதட்டமடைந்தார்.
அமைதியாக அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவன்.. படத்தை எல்லாம் ஜூம் செய்து பார்க்க.. இரண்டாவது வாகனத்தில் வருவது ஆதிதேவ் என தெளிவாக தெரிந்தது.
அவன் வருவான் என தெரியும். ஆனால் இத்தனை சீக்கிரம் அவளை தேடி வருவான் என அவனே எதிர்பார்க்கவில்லை.
” நான் அப்போவே சொன்னேன்.. இவன் நமக்கு எதிரி.. நம்ம இடத்தையே ஒன்னும் இல்லாம ஆக்கிடுவான்னு.. ஆனால் நீ என் பேச்சை கொஞ்சமும் கேட்கலை . இப்போ பாரு ஒரு படையை கூட்டிட்டு நம்ம இடத்துக்கே வரான்.. இப்போ என்ன செய்ய போற.. எல்லா விஷயத்துலையும் அசால்ட்டு.. இப்போ அதுவே உன்னையை குழி தோண்டி புதைக்க போகுது ” என கோபத்தில் கத்தினார் வில்சன் .
பின்னே இத்தனை வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர்.. தற்போது அவர் கட்டி வைத்த கோட்டை என்னவாக போகிறதோ என்ற பயத்தில் திணறிப் போனார்.
“ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ…. ஆதி…… உன்ன சும்மா விட மாட்டேன் டா ” என வெறி கொண்டு கத்தியவன்.. அங்கிருந்த சிஸ்டத்தை எல்லாம் உடைத்து எறிந்தான்.
அதே வேகத்தில் உள்ளே சென்றவன்.. எப்போதும் கலக்கும் அளவை விட.. கூடுதலாக மருந்தை எடுத்து அதை கலந்து கண்ணாடியின் உள்ளே இருக்கும் பிறைக்கு செலுத்த போக.. அவசரமாக அவனை தடுத்தார் வில்சன்.
” இப்போவும் அவசரத்துல காரியத்தை கெடுத்துறாத அர்ஜுன். நான் சொல்லுறத கேளு.. இன்னும் நம்ம கிட்ட எல்லாம் அப்படியே தான் இருக்கு . கையை விட்டு போகல.. அவன் வரட்டும் . நம்ம போராடலாம்.. ஒருவேளை எல்லாம் முடிஞ்சது மாதிரி ஒரு நிலைமை வந்தா இவளை கொன்னுடு.. ஒருவேளை நம்ம தப்பிச்சா இவ நமக்கு தேவை.. நீயே சொல்லியிருக்க இவ ஸ்மெல் எப்படின்னு.. யோசிச்சு முடிவு பண்ணு ” என அவன் செய்யவிருக்கும் காரியத்தை தடுத்தார் வில்சன்.
” இப்போ என்ன பண்ண ” கத்தினான் அர்ஜுன்.
” பழைய மாதிரி நம்ம எப்பவும் போடுற டோஸ் போடுவோம்.. நானே போடுறேன் ” என அவனை விலக்கி விட்டு.. அவரே அதற்காக மருந்தை தயாரித்து கொண்டார்.
” நீ போய் அந்த பொண்ணை பத்திரப் படுத்து.. நான் இவளை பார்த்துக்கிறேன் ” என அவனை அனுப்பி வைத்தவர்.. பேசிக் கொண்டே பிறைக்கு மருந்தை ஏற்றினார்.
ஏதோ ஒன்று நடக்கிறது என்பது மட்டும் பிறைக்கு புரிந்தது. இதுவே இறுதியாக இருக்கட்டும்.. இனிமேல் இந்த இடத்திற்கு எந்த பெண்களும் வரக்கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் பிறை. மருந்தை கலந்து அவளுக்கு ஊசியை போட்டிருந்தார் வில்சன் .
பார்கவி இருந்த அறைக்குள் வந்தவன்.. வெறி பிடித்தவன் போல அங்கும் இங்கும் நடந்தான். இத்தனை கோவமாக அவன் நடப்பதை பார்த்து துணுக்குற்றவள்.. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.
மெத்தையில் அமைதியாக அமர்ந்திருக்கும் பார்கவியை பார்த்தவன்.. ” நான் இங்க இருக்கேன்னு எப்படி டி உன் அண்ணனுக்கு தெரியும்.. நீ சொன்னியா… எப்படி தகவல் போச்சு ” என அவளது முடியை கொத்தாக பிடித்து தூக்கி இருந்தான்.
அண்ணன் இங்கு வருகிறான் என கேட்டதுமே அவளுக்கு மனம் நிறைந்து போனது. ” நான் எதுவும் என் அண்ணன் கிட்ட சொல்லல.. ஆனால் நான் அப்போவே சொன்னேன்ல என் அண்ணன் எங்க இருந்தாலும் எங்களை தேடி கண்டு பிடிச்சு வருவான்னு” என மிதப்பாக கூறியவளை பார்க்க பார்க்க அத்தனை ஆத்திரமாக இருந்தது.
“அவளோட ஸ்மெல் வச்சு பணம் சம்பாரிச்சு இந்த கோட்டையோட இளவரசனா நான் இருந்துட்டு.. உன்னைய என்னோட இளவரசியா ஆக்கனுனு நினைச்சேன் டி.. ஆனால் அதுக்கெல்லாம் கொஞ்சமும் தகுதி இல்லாத ஆள் நீ.. ” என மேலும் முடியை இறுக்கினான்.
” ஆ…. வலிக்குது அர்ஜுன்.. முடியை விடு ”
” உன் அண்ணன் வரான்னு சந்தோஷமா இருக்கேல.. உங்க மூணு பேரையும் இங்கேயே கொன்னு புதைக்கிறேன் ” என அவளது முடியை பிடித்து இழுத்து கொண்டு சென்றான் ஆதிஅர்ஜுனன்.
சனா💖

