
அத்தியாயம் 23
மறுநாள் காலை, யுகேந்திரனைத் தவிர அனைவரும் கூடத்தில் குழுமி இருந்தனர். ஆனால், யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.
வேலைகளை முடித்து விட்டு களைப்புடன் வந்து சேர்ந்தான் யுகேந்திரன்.
மென்மொழி, அவனிற்கான தேநீரை அவனிடம் கொடுக்க, அதை வாங்கிப் பருகி தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான் யுகேந்திரன்.
அப்போதும் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லை!
வழக்கம் போல, சுடரொளியே அங்கிருந்த அமைதியைக் கலைத்தாள்.
“அடுத்து என்ன? அகரனை நம்மளால சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சுடுச்சு.” என்ற சுடரொளி, மென்மொழியைக் கண்டு, எங்கு அவள் தவறாக எண்ணி விடுவாளோ என்ற தயக்கத்துடன், பேச்சை நிறுத்தினாள்.
ஆனால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மென்மொழியோ, “சாரி, நேத்து நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரீமா ரியாக்ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்…” என்றாள் அமைதியாக.
அனைவரும் அவளைப் பார்க்க, அவளோ யாரையும் காணாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
சில நொடிகள் அவ்விடத்தை மௌனம் மீண்டும் ஆக்கிரமித்திருக்க, ஒரு பெருமூச்சுடன், “அப்படியே எதனால நீ அப்படி ரியாக்ட் பண்ணன்னும் சொல்லிட்டா, எல்லாருக்கும் கிளியராகிடுமே!” என்று பூடகமாகப் பேசினான் யுகேந்திரன்.
அதில் சட்டென்று நிமிர்ந்து அவனைக் கண்ட மென்மொழியின் பார்வையில் இருந்தது, ஆச்சரியத்தைத் தாண்டிய பயமே!
இருவரும் பார்வையால் பேசிக் கொள்வதைக் கண்ட சுடரொளியோ, “க்கும், ஒண்ணு பேசிக்காம முகத்தைத் திருப்புறது, இல்லன்னா பார்வையிலேயே கமுக்கமா பேசிக்கிறது!” என்று மற்ற மூவருக்கும் கேட்கும் வகையில் முணுமுணுத்தவள், “என்னன்னு சொல்லு மொழி. நாங்க யாரும் உன்னை ஜட்ஜ் பண்ணப் போறதில்ல.” என்றாள்.
அப்போதும் மௌனமாக இருந்தவளைப் பார்த்தபடியே, “அகரனோட சிசுவேஷன்ல அவளைப் பொருத்தி பார்த்ததால வந்த பயம்தான் மொழியோட நேத்தைய கோபத்துக்கான காரணம்.” என்று யுகேந்திரன் கூற, அவன் முழுதாகக் கூறாததால், மற்றவர்கள் புரிந்தும் புரியாத நிலையில் இருந்தனர்.
“அகரனோட சிசுவேஷன்ல மொழி எப்படி… அதுக்கு ஏன் பயப்படனும்? எனக்கு எதுவும் புரியல.” என்று யாழ்மொழி கூற, “உனக்கு மட்டுமா? எங்களுக்கும்தான் புரியல! அடியேய் ஒழுங்கா சொல்லிடு… ஏற்கனவே இருக்க மண்டை குடைச்சல்ல, இதையும் எங்களால யோசிக்க முடியாது.” என்றாள் சுடரொளி.
‘இப்போயாவது சொல்லு!’ என்ற ரீதியில் யுகேந்திரன் மென்மொழியைக் காண, நீண்ட நேர யோசனைக்குப் பின் அவளது மனதில் உண்டான பயத்திற்கான காரணத்தை உரைக்க முயன்றாள் மென்மொழி.
“அகரன் நேச்சுரலா இவ்ளோ அக்ரேஸிவ்வா இருக்க மாட்டான். அவன் கொஞ்சம் செல்ஃபிஷ்தான். மத்தபடி, இவ்ளோ அகங்காரமும் ஆணவமும் அவன் கிட்ட இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்ல. நேத்து, அவனுக்குள்ள ஏற்படுற மாற்றங்களைப் பார்த்துப்போதான், அவன் கிட்ட இருக்க பவர் அவனைக் கண்ட்ரோல் பண்ணுதோன்னு சந்தேகம் உண்டாச்சு.” என்று மென்மொழி கூற, “அதை நானும் நேத்து ஃபீல் செஞ்சேன். இன்ஃபேக்ட், நேத்து நாங்க தப்பிச்சப்போ, அவனுக்கு உண்டான வலி கூட, அந்த பவர் அவனைக் கண்ட்ரோல் பண்ணதாலயோன்னு தோணுது.” என்றான் யுகேந்திரன்.
“எஸ்… பவர்ஸ் நம்மளைக் கண்ட்ரோல் பண்ணுறப்போ, நாம அதுக்கு அடிமையாகிடுறோம். நம்மளால அதை எதிர்த்து நடக்க முடியல. இதைத்தான் லைப்ரரில எங்களைத் தாக்க வந்தவனோட உடம்புல இருந்து லைஃப் ஃபோர்ஸை உரியுறப்போ, நான் ஃபீல் பண்ணேன். என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியல. ஆனா, அந்தக் கல்லுல இருக்க பவர், என்னைக் கண்ட்ரோல் பண்ணுச்சு.” என்ற மென்மொழி ஒரு இடைவெளி விட, “இதுலயிருந்து நீ என்ன சொல்ல வர மொழி?” என்று ஓரளவு யூகித்து விட்டவனாக இன்பசேகரன் வினவினான்.
சிறு தயக்கத்துடனே, “அகரன் கண்ட்ரோலை இழந்தப்போ, அவனை விட்டுட்ட மாதிரி, என்னையும்…” என்று அவள் முடிக்காமல் அப்படியே விட, “லூஸா நீ? உன்னை எப்படி விடுவோம்னு நினைக்கலாம் நீ? அதே மாதிரி உன் நொண்ணனை ஒன்னும் அப்படியே விடப் போறதும் இல்ல. அவன் கிட்ட இருக்க தீய சக்தியை எல்லாம் எக்ஸ்சார்சைஸ் பண்ணிட்டுதான் விடுவோம். அதுக்குள்ள நீயா ஏதாவது நினைச்சுப்பியா?” என்று கத்த ஆரம்பித்து விட்டாள் சுடரொளி.
அவளை மலையிறக்குவதற்கு அங்கிருந்தவர்கள்தான் படாத பாடுபட வேண்டியதாகிற்று.
“சுடர், கொஞ்சம் அமைதியா இரேன். அதான், முன்னாடியே நான் சாரி சொல்லிட்டேனே.” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் மென்மொழி.
அதன்பிறகே சற்று சாந்தமானாள் சுடரொளி.
அப்போது மதுசூதனன், “மொழி, பவர்ஸ் கண்ட்ரோல் மீறுறது உங்களுக்கு மட்டும் இல்ல, எங்களுக்கும் நடக்கலாம். இது கவனிக்க வேண்டிய விஷயம்தான். அதுக்காக ரொம்பவும் உங்களை க்ரிடிசைஸ் பண்ணிக்காதீங்க. இந்த நேரத்துல, இதை எப்படி ஓவர்கம் பண்றதுன்னுதான் பார்க்கணுமே தவிர, இதனால டீ-மாரலைஸாகிடக் கூடாது.” என்று கூற, புரிந்ததாகத் தலையசைத்தாள் மென்மொழி.
“ஆனா, இதை எப்படி ஓவர்கம் பண்றது?” என்று இன்பசேகரன் வினவ, ‘தெரியாது’ என்பதாக உதட்டைப் பிதுக்கித், தலையசைத்தான் மதுசூதனன்.
அதுவரை மென்மொழியைப் பார்த்துக் கொண்டிருந்த யுகேந்திரனோ, “மெடிட்டேஷன் வழியாதான்.” என்று கூற, “எதே மெடிட்டேஷனா? எனக்கு எதுவும் தப்பா கேட்டுடலையே? போலீஸ்கார், என்னையெல்லாம் பார்த்தா, அதுக்குச் சரிப்பட்டு வர மாதிரி தோணுதா உங்களுக்கு?” என்று முதல் ஆளாகக் கேட்டாள் சுடரொளி.
“தியானம் செஞ்சா சக்தியை கண்ட்ரோல் பண்ண முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்ம முன்னோர்களுக்கு இந்தச் சக்திகள் அப்படித்தான கிடைச்சுருக்கு.” என்ற யுகேந்திரன் சுடரொளியை நோக்கியபடி, “உன்னால அதைச் செய்ய முடியலன்னா பரவால்ல… மிஞ்சிப் போனா என்ன ஆகிடும்? திடீர்னு உன்னோட சக்தி ஓவர்லோட்டாகி, மொத்தமா யாரு கண்ணுக்கும் தெரியாம மறைஞ்சு போயிடுவ… இல்லன்னா, எதிரிங்க கிட்டயிருந்து மறைஞ்சு இருக்க முக்கியமான நேரத்துல உன் சக்தி உன்னைக் கைவிட்டு… நீ அவங்க கண்ணுக்குத் தெரிஞ்சு…” என்று அடுக்கிக் கொண்டே இருக்க, அவனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்ட சுடரொளியோ, “போதும் சாமி போதும்… இப்போ என்ன தியானம் செய்யணும், அவ்ளோதான? எப்படி செய்யுறேன்னு மட்டும் பாருங்க.” என்றவள், அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் சென்று சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
அவளைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க, அதைக் கூட கண்டு கொள்ளவில்லை அவள்!
“சரி, இப்போ மெயின் டாப்பிக்குக்கு வருவோம். அகரன் கிட்ட இருக்க பிளாக் கல்லோட சக்தியை எப்படி எதிர்க்கப் போறோம்? அகரனுக்குப் பின்னாடி இருக்க… அதாவது இருக்குறதா நாம சந்தேகப்படுற பிரேம் ரத்தோரை எப்படி நெருங்கப் போறோம்?” என்று கேட்டான் இன்பசேகரன்.
“முதல் கேள்விக்கான பதில் எனக்கும் தெரியல. இந்த மெடிட்டேஷன் அதுக்கு ஒரு தீர்வா இருக்கலாம்னு நம்புறேன்.” என்ற யுகேந்திரன் மோவாயைத் தடவியபடி, “ரெண்டாவது கேள்விக்கான பதிலை தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, அதை ஒட்டிய இன்னொரு கேள்வி எனக்குள்ள ஓடிட்டே இருக்கு… நேத்து அகரனோட பாடிலாங்குவேஜ்ஜையும் பேச்சையும் பார்த்தா, அவனுக்குப் பின்னாடி யாரும் இல்லையோன்னு தோணுது. அப்படியே இருந்தாலும், அவங்களை அவன் மதிக்கலங்கிற மாதிரி இருந்துச்சு அவனோட பேச்சு. இதை நீங்க ரெண்டு பேரும் கவனிச்சீங்களான்னு எனக்குத் தெரியல.” என்றான்.
அதற்கு, அவனுடன் அகரனைக் காணச் சென்ற மென்மொழியும் இன்பசேகரனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தனர்.
“அப்போ, அகரன்தான்… அதாவது அகரனை மேனிப்புலேட் பண்ற பவர்தான் நாம ஃபேஸ் பண்ணப்போற ரொம்ப பெரிய வில்லனா இருக்குமோ?” என்று மதுசூதனன் வினவ, “ஹ்ம்ம், அதுக்குன்னு அந்தப் பிரேம் ரத்தோரை அண்டர்-எஸ்டிமேட் பண்ணக்கூடாது.” என்ற யுகேந்திரனின் மனதில் வருணின் விஷயம் வந்து போனது.
இதுவரை வருணைப் பற்றி மற்றவர்களிடம் பகிராததால், முன்தினம் கண்டுபிடித்ததையும் பகிரவில்லை அவன்.
ஆனால், அவன் முகத்தை வைத்தே, எதையோ சொல்லாமல் விடுவதைக் கண்டு கொண்டாள் மென்மொழி.
யுகேந்திரன் மென்மொழியின் மனதைப் படிப்பது பெரிய விஷயமில்லை. அது அவனிற்குக் கிடைத்த சக்தி. ஆனால், மென்மொழி யுகேந்திரனின் அசைவுகளைக் கொண்டு அவன் மனதிலிருப்பதை அறிய முற்படுவது, அவளாலேயே நம்ப முடியாத இனிய ஆச்சரியமே!
“அதோட, நேத்து அகரனைத் தேடி நாம போன இடம், மும்பைல இருக்க ஏஎஸ்ஐக்கு சொந்தமான ஒரு சீக்ரெட் வேர்ஹவுஸ். ரத்தோர் ஏஎஸ்ஐயோட ஹெட்டா இருந்தப்போ, எக்ஸ்கவேஷன்ல கிடைச்ச பல பொருட்கள், அது சம்பந்தப்பட்ட பல டாக்குமெண்ட்ஸை அந்த ரகசிய இடத்துல வச்சுருந்ததா தகவல் கிடைச்சது. அதே இடத்துல, அந்தக் கற்களையும் முன்னாடி வச்சுருந்துருக்கலாம்.” என்றான் யுகேந்திரன் யோசனையுடன்.
“சோ, நம்மளோட அடுத்த டார்கெட் மும்பையா?” என்று அதுவரை விழிகளை மூடியிருந்த சுடரொளி வினவ, “இதுதான் நீ மெடிட்டேஷன் பண்ற லட்சணமா?” என்று கேலி செய்தாள் யாழ்மொழி.
“க்கும், எல்லாரும் என் காதுல விழுகுற மாதிரியே பேசிட்டு இருந்தா, நான் எப்படி பீஸ்ஃபுல்லா மெடிட்டேட் பண்றதாம்?” என்று உதட்டைச் சுழித்தவளோ, “ஆமா போலீஸ்கார், இந்தத் தகவல் உங்களுக்கு எப்படி கிடைச்சது?” என்று வினவ, “ரத்தோரோட வேலை செஞ்ச ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன்.” என்று சாதாரணமாகக் கூறித் தோளைக் குலுக்கினான் யுகேந்திரன்.
அப்போது யுகேந்திரனிற்கு அழைப்பு வந்திருக்க, அதை ஏற்க வேண்டி தனியே சென்றான் அவன்.
அவன் சொல்லாமல் விட்டதைத் தெரிந்து கொள்ள வேண்டி, அவனைப் பின்தொடர்ந்தாள் மென்மொழி.
அதைக் கண்ட மற்றவர்களோ, வேறு விதமாக எண்ணி தங்களிற்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்.
*****
பின்வாயிலில் நின்றிருந்த யுகேந்திரன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, அவனைக் காண வந்த மென்மொழியோ அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தேங்கி நின்று விட்டாள்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் தொடர்ந்த அந்த அழைப்பை அவன் துண்டித்த பின்னரும், அவள் அவனை அணுகாமல் நின்றிருக்க, அவனோ திரும்பிப் பார்க்காமலேயே, “இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே நிக்கிறதா உத்தேசம்? நானா திரும்புற வரை பேசுற ஐடியா இல்லையா மொழிக்கு?” என்றான் சற்று உற்சாகமாகவே.
அதில் திகைத்து விழித்தவளிற்கு, அவன் எப்படி அவளின் வரவைக் கண்டு கொண்டான் என்ற கேள்வி உறுத்த, ‘நான்தான் மனசுல எதுவுமே நினைக்கலையே!’ என்று நினைத்துக் கொண்டாள் மனதிற்குள்!
அது உண்டாக்கிய முறுவலுடன் அவள் புறம் திரும்பியவனோ, “உன்னைத் தெரிஞ்சுக்க, உன் மனசை படிக்கணும்னு அவசியம் இல்ல மொழி. அந்தக் கட்டத்தைத் தாண்டியாச்சுன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?” என்று கேட்க, திடீரென்று அவன் கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து, “என்ன நினைக்கணும்?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“அதை நீதான் நினைக்கணும். உனக்காக நானா நினைச்சுக்க முடியும்?” என்று வார்த்தையால் விளையாடியவன், அவளைத் திணற வைத்தது போதும் என்று எண்ணினானோ என்னவோ, “சரி சொல்லு, என்ன கேட்கணும்?” என்று வினவ, அப்போதுதான் வந்த காரணத்தைப் பற்றிய எண்ணமே எழுந்தது மென்மொழிக்கு.
“அது… நீங்க அங்க எதையோ சொல்லாம விட்டதைப் போல இருந்துச்சு. அதைக் கேட்கத்தான் வந்தேன்.” என்று அவள் கூற, அவளை ஆர்வமாகப் பார்த்தவனோ, “இஸ் இட்? எப்போ இருந்து மொழிக்கு இந்தப் புது பவர் கிடைச்சதாம்?” என்று வினவினான்.
அதில் உதட்டைச் சுழித்தவளோ, “கேட்டதுக்கு பதில் சொல்லாம ஏதேதோ பேசி குழப்பிட்டு இருக்கீங்க. எப்போ சொல்லணுமோ சொல்லுங்க. நான் போறேன்.” என்று அவள் செல்ல முயல, அவளின் கரம் பற்றித் தடுத்தவனோ, “மொழி கேட்டு சொல்லாமையா?” என்றவன், முன்தினம் வருணிடம் விசாரித்ததைப் பற்றிக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட மென்மொழி, “அப்போ… வருணோட மெமரியை அழிச்சது யாரா இருக்கும்?” என்று வினவ, “கண்டிப்பா அகரன் இல்ல. சோ, நமக்குத் தெரியாம இன்னொருத்தனும் கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கான். அவனுக்கு ரத்தோரோட சம்பந்தம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்!” என்றான் யுகேந்திரன்.
அத்துடன், “இந்த விஷயம் இப்போதைக்கு நமக்குள்ளேயே இருக்கட்டும்.” என்றும் கூறினான்.
அதற்குத் தலையசைத்தவள், அங்கிருந்து செல்ல முற்பட, மீண்டும் அவளின் கரம் பற்றித் தடுத்தவன், “அவ்ளோ தானா? என்கிட்ட வேற எதுவும் சொல்ல வேண்டாமா?” என்று வினவ, தலையைக் குனிந்து கொண்டவள், “வேற என்ன?” என்றாள்.
“ஹ்ம்ம், நேத்து நடந்ததுக்கு எல்லாரு கிட்டயும் சாரி கேட்ட… என்கிட்ட எதுவும் சொல்லல?” என்று அவன் வினவ, அவனை நிமிர்ந்து பார்த்தவளோ, “அதான் எல்லாரு கிட்டயும் சாரி கேட்டேனே…” என்றாள் அவள்.
அதற்கு வாய்மொழியில் அல்லாமல், விழிமொழியில் அவன் கேள்வி கேட்க, அக்கேள்விக்கு அவள் பதில் சொல்வதற்குள் அங்கு வந்த சுடரொளியோ, “சாரி சாரி போலீஸ்கார்… உங்க பீநட்டை அப்புறமா ஃபிரை பண்ணுங்க. ஒரு அர்ஜெண்ட் மேட்டருக்காக உங்க ஆளைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றவள் கையோடு மென்மொழியை அழைத்துச் சென்றாள்.
யுகேந்திரனோ, “அப்படி என்ன தலை போற விஷயம்னு இவ்ளோ வேகமா கூட்டிட்டுப் போற?” என்று கேட்க, “ஹையோ, என் தலையே போற விஷயம்தான்.” என்று கத்தியபடி அங்கிருந்து சென்றாள் சுடரொளி, உடன் மென்மொழியையும் அழைத்துக் கொண்டு!
யுகேந்திரன் ஒரு பெருமூச்சுடன் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான்.
*****
பிரிஸம் டவர்ஸ்…
அந்த பல மாடிக் கட்டிடத்தின் தரைத் தளத்திற்குக் கீழே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆய்வுக்கூடத்தின் ஒரு மூலையில் அமைந்திருந்த பிரம்மாண்டமான அறை அது.
அதன் மத்தியில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த பிரேம் ரத்தோர் பதற்றத்துடன் கைக்கடிகாரத்தை நொடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரின் பதற்றத்திற்குக் காரணமானவனோ சாவகாசமாக அந்த அறைக்குள் நுழைந்தான்.
அவனிடம் முன்பிருந்த பணிவும் மரியாதையும் இல்லாததைக் கண்ட ரத்தோருக்கு உறுத்தினாலும், அப்போது அதைப் பெரிது படுத்தவில்லை.
அதை விடவும் பேசுவதற்கு முக்கியமான விஷயங்கள் இருந்தனவே!
“அகரன், நேத்தே வர வேண்டியது… இன்னைக்குத்தான் வந்துருக்க. அதுவும் எதுக்கு மும்பை போனன்னு இதுவரை சொல்லல! சொன்ன வேலையையும் சரியா முடிக்கல. என்னதான் நினைச்சுட்டு இருக்க நீ?” என்று சற்றுக் காட்டமாகவே வினவினார் பிரேம் ரத்தோர்.
அகரனோ அசுவாரசிய பாவனையுடன், “நீங்க சொன்ன வேலை… அந்த ஆர்க்கைவ்ஸ்ல நீங்க செஞ்ச ரிசர்ச் சம்பந்தப்பட்ட எதுவும் இருக்கக் கூடாதுங்கிறதுதான? இப்போ எதுவும் அங்க இல்ல. அப்போ சொன்ன வேலையை முடிச்சுட்டேன்தான?” என்றான்.
அதில் மேலும் கோபமடைந்த ரத்தோரோ, “அதுக்குன்னு அந்த ஆர்க்கைவ்ஸை அடிச்சு நொறுக்கிருக்க… அதுவாச்சும் பரவால்ல, விஷயம் தெரிஞ்சவங்களை அப்படியே விட்டுட்டு வந்துருக்க? அவங்களால நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா?” என்று வினவ, “அது என் பிரச்சனை. அதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” என்று முடித்து விட்டான் அகரன்.
“உன்னை வேலைக்கு சேர்த்துகிட்ட என்கிட்டயே இவ்ளோ ஆட்டியூட்டா பேசுறியா? ஹ்ம்ம், உன்னை எடுக்க வேண்டாம்னு அன்னைக்கே அவன் சொன்னான். நான்தான் கேட்கலை… இன்னைக்கு உன்னால எனக்கு எவ்ளோ லாஸ் தெரியுமா?”என்று அவர் பேசிக் கொண்டே செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அகரனோ, அவரின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி,
“என்ன ஓவரா பேசிட்டே இருக்க? ஏதோ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிருக்கியேன்னு சும்மா விடலாம்னு பார்த்தா ஓவரா துள்ளுற! நீ பண்றதையெல்லாம் வெளிய சொன்னா, என்ன ஆகும்னு தெரியும்ல? சோ, அமைதியா இருக்கணும். இனி, நான் சொல்றதுதான் நடக்கணும். அப்படி நடந்தா, நீயும் அதுல ஒரு பார்ட்டா இருக்கலாம். இல்லன்னா, இப்போவே உன்னை அழிச்சுடுவேன், மும்பைல இருக்க உன்னோட ரகசிய இடம் மாதிரி!” என்று கூறினான்.
அதே சமயம், மும்பையில் இருந்த அந்த ரகசிய இடம் தீக்கு இரையாகி இருந்தது!
தொடரும்…
