
அத்தியாயம் – 35
“அய்யோ என் தங்கமே இம்புட்டு வலியையும் எப்படிய்யா தாங்குன?? அந்த பாழாய் போன கடவுள் என் குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி சோதனையா கொடுத்து தள்ளுது ” என பாட்டி திடீரென்று தன்னைக் கட்டிப்பிடித்துக் கதறவும் மிரண்டு போன கார்த்திக் ,
தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப்பட்டது.
பாட்டியின் நிலமை அவனுக்கு நன்றாக புரிந்தது , சிறுவயதில் ப்ளேடில் நகம் வெட்டுகிறேன் பேர்வழி கையை சின்னதாக தான் கீறிக்கொண்டதற்கே அவ்வளவு அழுது புலம்பியவர் பாட்டி, அப்படி இருக்கையில் குண்டடி பட்டு அந்த வலியையும் பொருத்துக்கொண்டு தனியாக தான் தவித்ததை நினைத்து இப்போது அவர் பலமடங்கு துடித்துக் கொண்டிருக்கிறார் என புரிந்துகொண்டவன் அவரை சமாதானப்படுத்தும் பொருட்டு ,
“ஏய் கிழவி ரொம்ப ஆக்டிங்க் விடாத..ஆமா அதென்ன என் பொண்டாட்டி முன்னாடியே என்னை கட்டிப்பிடிச்சு அழுகுற, அவ அப்பறம் உன்னையை குக்கர்ல போட்டு வேகவச்சு பூரி செஞ்சுருவா பார்த்துக்கோ” என கிண்டல் செய்ய,
அவன் தனக்காகவே இவ்வாறு கேலி பேசுகிறான் என உணர்ந்து கொண்ட பாட்டியும் அவனுக்காக தன் சோகத்தை மறைத்துக் கொண்டு ,” அடேங்கப்பா பெரிய மன்மதர் இவரு போடா போடா போக்கத்தவனே” என அவனை திட்டியவர் , அவன் இடது தோள்பட்டையை மெல்லிசாக வருடிக்கொண்டே என்றோ பட்ட அடிக்கு இப்போது கண் கலங்கி ,”ரொம்ப வலிச்சிதா தங்கம்” என கேட்க,
அவனும் நெகிழ்ச்சியான குரலில் ,”ம்ஹூம் இல்லை பாட்டி” என பதிலளித்தான்.
இந்த விஷயத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லையே தனியாக எப்படி கஷ்டப்பட்டானோ என கார்த்திக், வர்ஷூவை நினைத்து மற்றவர்களும் வருந்தினாலும், அதைப் பற்றி பேசும் மனநிலையில் அவர்கள் யாரும் இல்லை ஏனெனில் இப்போது ஸ்ரீயே அவர்களின் சிந்தையில் ஆட்சி செய்து கொண்டிருந்தாள்.
சாருமதி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கண்ணீர் சிந்த, கலை ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தார்.
அறைக்குள் வந்த வர்ஷூவிற்கோ பயம் ஒரு பக்கம் குற்றவுணர்ச்சி மறுபக்கம் என பல உணர்ச்சிகள் அவள் மனதை சுழற்றி அடித்தது.
தன்னுடைய உயிர்த் தோழிக்கு தன்னால் தான் ஆபத்தோ என ஒரு புறம் பயமாக இருந்தது.
இப்படி தன்னைத் தாங்கும் இந்த குடும்பத்தின் சந்தோஷமான ஸ்ரீயை தன்னைத் தேடுபவர்கள் கடத்தி வைத்திருந்தால் என சிந்தித்தவளுக்கு குற்றவுணர்ச்சி மனதை அரிக்க மிகவும் தொய்ந்து போனாள் பெண்ணவள்.
ஏதேதோ நினைத்தவளின் மனது இன்னொரு புறம் கார்த்திக் கடைசி வரையில் தன்னைக் காதலிக்கிறேன் என்றே சொல்லவில்லை அப்போது அவனுக்கு என்மேல் ஏற்பட்டுள்ளது பரிதாபம் தான் என பைத்தியக்காரத்தனமாக யோசிக்க மனதில் உள்ள பாரம் குறையும் வரை அங்கேயே அமர்ந்து அழுது கரைந்தாள். தன் பெற்றோர் இறந்த பின் தன் தந்தை தனக்கு சாப்பிட சொல்லிக்கொடுத்த அவளுக்கு மிகவும் பிடித்த நான்வெஜ் உணவுகளை இப்போது சாப்பிடாமல் ஒதுக்கி வைத்திருக்க, அதை எப்படி கார்த்திக் கண்டுகொண்டு அன்று ஹோட்டலில் அதை ஆர்டர் செய்தான் என சிந்தித்திருந்தாலும் அவளுக்கு கார்த்திக்கின் காதல் புரிந்திருக்கலாம்.. இதுவும் விதியின் திருவிளையாடல் எனும்போது நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
ஹரி , கார்த்திக், விஜய் மூவரும் அந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள சிசிடிவி கேமெராவில் ஏதாவது க்ளூ கிடைக்காதா என்று எண்ணி அதை செக் செய்ய கன்ட்ரோல் ரூமிற்குச் சென்றனர்.
“ஹரி உன்னை வாட்ச் தேட சொன்னனே கிடைச்சுதா ” என கார்த்திக் நடந்து கொண்டே கேட்க,
அவள் டைரியை வைக்கும் போது தன்னுடைய கப்போர்ட்க்குள் இருந்த கைகடிகாரத்தைக் கண்டிருந்த ஹரி வருத்தத்துடன் ,”ம்ம் இருந்துச்சு ” என சுரத்தே இல்லாமல் கூற,
அவன் கவலையை அறிந்த விஜய் ,”மச்சி ஃப்ரீயா விடு டா..அது இல்லைனா என்ன.. சிசிடிவில கண்டிப்பா ஏதாவது க்ளூ கிடைக்கும் டா டோன்ட் வொர்ரி” என அவனை அணைத்து சமாதானப்படுத்த , அதற்குள் அவர்கள் நடந்து கொண்டே அங்கிருந்த அறையை அடைந்திருந்தனர்.
உள்ளே செல்ல அவர்களின் கெட்ட நேரம் அந்த அப்பார்ட்மென்ட்டின் செகெரட்டரி கார்த்திக் அடிவாங்கிய அந்த ஃப்ரென்ச் ஆன்ட்டியின் கணவன்.
அவர் அன்று வெளியூர் சென்றிருந்ததால் , அந்த ஆன்ட்டியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்தால் மட்டுமே சிசிடிவி ஃபூட்டேஜ்ஜை காண்பிப்பேன் என வாட்ச்மேன் சட்டமாக கூறிவிட, கார்த்திக்கிற்க்கு பகீர் என்று இருந்தது.
‘அந்த ஆன்ட்டியா ஆத்தி நமக்கு ஆப்பு கன்ஃபர்ம் டா’ என நினைத்த கார்த்திக் அவர்களை பாவமாய் பார்க்க, ஹரி அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை, அவன் மனமெல்லாம் அவனின் ஸ்ரீ மட்டுமே வியாபித்திருந்தாள் எனவே அவன் சிறிதும் தாமதிக்காமல் அந்த ஆன்ட்டியின் வீட்டிற்கு ஒடியிருந்தான்.
ஆனால் விஜய் இவனைக் கண்டுகொண்டு ,”டேய் என்ன டா பேயறைஞ்ச மாதிரி இருக்க.. வா டா போலாம் நின்னுகிட்டே இருக்க அவன் போய்ட்டான் பாரு” என அவன் கையைப் பிடித்து இழுக்க,
“டேய் பக்கி கையை விடுடா நாம என்ன அந்த ஆன்ட்டியை பொண்ணு பார்க்கவா போறோம் இப்படி ஒன்னா போக, அதான் அவன் போய்ருக்கான்ல அவன் வாங்கிட்டு வருவான் நான் வரலை” என கையை அவன் பிடியில் இருந்து உதறிக் கொண்டான் கார்த்திக்.
அவனை சந்தேகமாக பார்த்த விஜய் ,” உண்மையை சொல்லு டா அந்த ஆன்ட்டியை எதும் கஜகஜா பண்ணிட்டியா அதான் வர மாட்டேங்குறியா?” என கேட்க,
தலையிலே அடித்துக் கொண்ட கார்த்திக் ,” அப்படி நினைச்சா கூட அந்த ஆன்ட்டி நம்மளை வச்சு கபடி ஆடிரும் டா..கடைசியில நம பாடிக்கு கஜா புயலை விட அதிகமான சேதாரம் தான் மிஞ்சும் சோ பார்த்து சூதானமா இருந்துக்கோ அவளோ தான் சொல்லுவேன்” என்று வந்த கார்த்திக்கின் பதிலில் ‘பய செமத்தியா அடி வாங்கிருக்கான் ‘ என புரிந்து கொண்ட விஜய் ,”விடுடா மச்சான் ஒரு ப்ளே பாய் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம்” என அவனை கிண்டல் செய்துவிட்டு ஹரி வருகிறானா என பார்க்க சென்றுவிட்டான்.
அந்த ஆன்ட்டியிடம் பெர்மிஷன் வாங்கிய ஹரி , அவரையே வாட்ச்மேனுக்கு அழைத்து சொல்ல சொல்லி விட்டு வேகமாக கீழிறிங்கி வந்தான்.
அவன் வந்ததும் மூவரும் அங்கு சென்று சிசிடிவியில் ஸ்ரீ கிளம்பிய நேரத்தை கணக்கில் கொண்டு அந்த காணொளியைப் பார்க்க, அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
தங்கள் வாசலில் வைத்தே அவளை கடத்தியிருந்தது தெரிய வர, வாட்ச்மேனை பிடித்து “இதான் நீ வேலை பார்க்குற இலட்சணமா” என திட்டித் தீர்த்துவிட்டனர்.
அவன் அப்போது சாப்பிட போயிருந்தாக கூற ,இப்போது இவனைத் திட்டி என்ன ஆகப் போகிறது என சலித்துக் கொண்டவர்கள் அந்த காணொளியில் ஏதாவது துப்பு கிடைக்கிறதா எனத் ஆராய்ந்தனர்.
அவளை கடத்தியிருந்தவர்கள் தெளிவாக அந்த கார் நம்பர் ப்ளேட்டின் மீது ஸ்டிக்கரை ஒட்டி வைத்திருந்தனர், மேலும் அவளை உள்ளே தள்ளியவர்களும் முகத்தில் துணி வைத்து மறைத்திருக்க, அவர்களுக்கு அவனின் முகம் தெரியவில்லை.
ஆனால் அவனின் கண்களும் நெற்றியும் தெரிய, கார்த்திக்கிற்கு ஸ்ரீயின் இடது கையைப் பிடித்து உள்ளே தள்ளியவனைக் கண்டு புருவங்கள் முடிச்சிட்டது…..
“என்னம்மா தன்ய ஸ்ரீ ரொம்ம்ம்பபப சந்தோஷமா இருக்க போல ” என சேரில் கை கால்களோடு சேர்த்து வாயையும் கட்டி வைத்திருக்கும் ஸ்ரீயைப் பார்த்து சிந்தியா நக்கலான குரலில் வினவ,
அவளை முறைத்த ஸ்ரீ ,” முண்டம் ஐஸ்க்ரீம் வாங்க போனவளை கடத்தி வந்து கட்டிவச்சுட்டு கேட்குது பாரு கேள்வி சந்தோஷமா இருக்கியான்னு..” என மனதிற்குள் அவளை கழுவி ஊத்தினாள்.
“என்ன ஸ்ரீ வார்த்தைக்கு வார்த்தை பேசுவ இன்னைக்கு பயத்துல பேச்சு வரலையோ பாப்பாக்கு” என மீண்டும் அவளை சீண்டினாள் சிந்தியா.
“அடியேய் கூமுட்டை வாயை கட்டி வச்சுட்டு பதில் சொல்லலைன்னா கேக்குற, மவளே வாய்ல இருக்க ப்ளாஸ்தரை மட்டும் எடுத்து விடுடி அப்பறம் நான் பேசுற பேச்சுல நீ இங்கேயே தூக்கு மாட்டிகிட்டு செத்து போய்ருவ” என மீண்டும் ஸ்ரீ மனதிற்குள்ளயே அவளை சாடினாள்.
அவளை கடத்தி வந்து ஹரி அலைந்து திரிவதை இரசித்துவிட்டு வந்த சிந்தியா அந்தக்காரை பாதியில் நிறுத்தி விட்டு வேறொரு காரில் ஏறியவள் அந்த தடியன்களை துரத்திவிட்டுவிட்டு அவள் மட்டும் ஸ்ரீயை கை கால்கள் கட்டிய நிலையில் அவள் கண்ணையும் கட்டிவிட்டு தன் தந்தைக்குக் கூடத் தெரியாமல் அவர்களின் வீட்டில் உள்ள ஸ்டோர் ரூமிலே அவளை கடத்தி வைத்திருந்தாள் சிந்தியா.
எங்கே தந்தைக்கு தெரிந்தால் வருணின் மீது இருக்கும் பாசத்தில் அவர் ஸ்ரீயை விட்டு விடுவாரோ என்றெண்ணியவள் யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு தங்களின் வீட்டுக்குள்ளையே அவளை கட்டி வைத்துவிட்டு அவளிடம் இப்போது சாவகாசமாக உரையாடிக் கொண்டிருந்தாள்.
இப்போது ஸ்ரீயின் முகபாவனையை வைத்தே அவள் தன்னைத் தான் திட்டுகிறாள் என்றுணர்ந்த சிந்தியா வெளியே சென்று தன் வீட்டில் யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வந்தவள் அவளின் வாய்க்கு விடுதலை அளித்தாள்.
அவ்வளவு தான் டேமை திறந்து விட்டதும் சீறிப்பாயும் வெள்ளம் போல் ஸ்ரீயின் வாயிலிருந்து நல்ல நல்ல வார்த்தைகளாக சிந்தியாவை நோக்கி வந்து விழுந்தன.
‘கடத்திட்டு வந்திருக்கேன்னு கொஞ்சமாச்சும் பயமிருக்கா பாரு இவளுக்கு’ என நினைத்து கடுப்பாகிய சிந்தியா,
“ஷட் அப் யுவர் ப்ளடி மவுத்” என ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் கத்திவிட,
ஸ்ரீயோ அப்போதும் அசராமல் ,” உன்னையை விட நானும் கத்துவேன் பார்க்குறியா..ஆளையும் மூஞ்சியையும் பாரு பவுடர் போட்ட பாண்டா மாதிரி இருந்துகிட்டு என்னையவே வாயை மூட சொல்றியா ..கொய்யால கொமட்டுலயே குத்துனேன்னா கோமாக்கு போய்ருவ ஜாக்கிரதை” என எகிறினாள்.
“யூ யூ யூ!!! ” என சிந்தியா எரிச்சலோடு கத்த
“என்ன யூ க்கு அப்பறம் வி ன்னு கூட சொல்லித் தரலியா ரொம்ப நேரமா யூவையே கட்டிட்டு அழுகுற.. நீயெல்லாம் என்னாத்தை படிச்சியோ எங்க பக்கத்து வீட்டு பாப்பாவே எவ்ளோ அழகா ஏ பி சி டி சொல்லும் தெரியுமா” என ஸ்ரீ மீண்டும் அவளை கேலி பேசி அவளின் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தினாள்.
“ஹேய் உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்லை காசு கொடுத்து கடையில செஞ்சு வாங்கிட்டு வந்தாங்களா?? உன்னை கடத்திட்டு வந்திருக்கேன் பயப்படாம என்னையவே திட்டுறியா?? உன்னோட வாயால தான் இன்னைக்கு உனக்கு இந்த நிலமை இன்னும் நீ அடங்காம வாயை விடுற பார்த்தியா?? உன்னை வச்சு அந்த ஹரியை கதற வைக்கனும்னு நினைச்சேன் ஆனா இப்போ வர கோபத்துக்கு உன்னை அப்படியே பொட்டுன்னு போட்டுத் தள்ளிரனும் போல இருக்கு ” என பேசிக்கொண்டே போனவள் திடீரென தன் தந்தையிடம் இருந்து திருடி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவளின் முன் நீட்ட,
ஸ்ரீக்கு திக்கென்று இருந்தது, இருந்தும் பயத்தை முகத்தில் காட்டாமல் சமாளித்தவள் ,” என்னடி துப்பாக்கி வச்சிருந்தா நீ பெரிய தைரியசாலியா? என்னையை கட்டிபோட்டு வச்சுட்டு உன் வீரத்தை காமிக்குறியே உனக்கு வெட்கமா இல்லை .. நீ உண்மையிலே சரியான வில்லியா இருந்தா எங்க என் கட்டெல்லாம் அவுத்து விட்டுட்டு சுடு டி பார்ப்போம்” என ஸ்ரீ மீண்டும் கெத்தாக சவால் விட,
“துப்பாக்கி படம் நானும் பார்த்துருக்கேன் டி ..என் கிட்டயே உன் தில்லாலங்கடி வேலையை காமிக்கலாம்னு நினைக்கிறியா சுட்டு பொசுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் ” என சிந்தியா மிரட்டினாள்.
‘படுபாவி ப்ளானை கண்டுபிடிச்சுட்டாளே.. இந்த மென்டல் கிட்ட இருந்து எப்படி தப்பிக்க அங்க என் புருஷன் பாவம் எவ்ளோ கஷ்டப்படுறானோ , இந்த வீணாப்போன கார்த்திக் என்னத்தை டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு தொலைஞ்சிருக்கானோ அண்ணி காணமப் போய் இவ்ளோ நேரமாகுதேன்னு சீக்கிரம் கண்டுபிடிக்கிறானா? இதுல பெரிய அறிவாளின்னு பீத்திக்குவான் எப்போ பாரு … நான் தப்பிச்சு வந்த பின்னாடி உனக்கு இருக்கு டா என் கொழுந்தனாரே’ என மனதிற்குள் சிந்தியா தொடங்கி கார்த்திக் வரை வருத்தெடுத்தவள் இறுதியாக ஹரியை நினைத்து மிகவும் வருந்த, இந்த சிந்தியா முன் அழுதுவிடக்கூடாது என்ற வீராப்புடன் கண்ணீரை உள்ளடக்கிக் கொண்டிருந்தாள்.
அவளை ஒரு வித குரூரத்துடன் பார்த்த சிந்தியா ,”இந்த நாளுக்காக தான் நான் இவ்வளவு வருஷமா காத்துட்டு இருந்தேன்.. உன் புருஷன் …ஹாஹா என்ன பார்க்குற உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆனது எனக்கு எப்படி தெரியும்னா.. உன்னை பத்தி எனக்கு தெரிஞ்சுக்க ஜஸ்ட் சில ஆயிரங்களை தூக்கி போட்டேன் அரைமணி நேரத்துல உன் ஜாதகமே என் கையில… உன்னையும் உன் புருஷனையும் நான் படுத்துற பாட்டுல ரெண்டு பேரும் என் கால்ல விழுந்து கதறனும்..” என கூறியவளின் குரலில் அத்தனை வன்மம்.
“அப்பறம் அந்த நொண்டி கூட உங்க வீட்டுக்கே வந்திருச்சாமே… இப்போ பைத்தியம் வேற ஆய்ருச்சாம்..அச்சோ பாவம்” என பரிதாபப் படுவது போல் நடிக்க,
“இன்னொரு முறை சந்துவை இப்படி சொன்ன பேச வாய் இருக்காது.. என்ன சொன்ன ஹரியும் நானும் உன் காலுல விழனுமா?? குட் ஜோக் .. என்னை கடத்துனதுக்கே என் புருஷன் உன் மேல கொலை காண்டுல இருப்பான்..மரியாதையா உயிர் மேல ஆசை இருந்தா எங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு விலகி போய்ரு பாவமேன்னு என் ஹரிகிட்ட சொல்லி உன்னை சும்மா விட சொல்றேன்” என ஸ்ரீ தான் அவளுக்கு சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்க,
அவள் பேசிய பேச்சு சிந்தியாவின் கோபத்தை மேலும் உசுப்பிவிட, ஆத்திரத்தில் ஸ்ரீயின் கன்னத்தில் அரைந்திருந்தாள்.
“இதோ இந்த திமிர் தான் எல்லாத்துக்கும் காரணம்..கூடிய சீக்கிரம் இதை அடக்கிக் காட்டுறேன் .. அதுவரைக்கும் சோறு தண்ணி இல்லாம இங்கயே கிடந்து சாவு” என கடுப்புடன் மொழிந்து விட்டு அவள் வாயை மீண்டும் ப்ளாஸ்டர் போட்டுவிட்டு நகர்ந்தவள் கதவின் ஓரத்தில் நின்று கொண்டு ,” உனக்கு இன்னொரு விஷயம் சொல்லவா , இவ்வளவு வருஷமா உன் பின்னாடி நாய் மாதிரி சுத்துனானே வருண் அவன் யார் தெரியுமா?? என்னோட அண்ணன்” என்று கண்ணடித்து கூறியவள் ஸ்ரீயின் அதிர்ந்த தோற்றத்தை ரசனையுடன் பார்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

