
நகரத்தின் மையத்தில்,
மூன்று மாடிகளைத் தாண்டி
உயர்ந்து நின்றிருந்தது
ஒரு முழுக் கண்ணாடி கட்டிடம்.
வெயிலின் ஒளி அதன் முகப்பில் மோதும் போதெல்லாம்,அந்த கண்ணாடிகள் பளபளத்தது…
அந்த கண்ணாடி முகப்பின் நடுவே,
அடக்கமான எழுத்தில்,
ஆனால் கவனத்தை விலக்க முடியாத வகையில்,NEXUS Systems
என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அந்த பெயரே போதும்
உள்ளே என்ன மாதிரியான உலகம் இருக்கும் என்பதைச் சொல்ல.
கதவுகள் திறந்தவுடன், பல மனிதர்கள் கணினியில் பார்வை பதித்தவாறு அவரின் விரல்கள் கீபோர்டில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது..
சிலர் அருகே இருந்த நபர்களோடு கதையடித்து கொண்டு இருந்தனர்..
அங்கே இருந்த மீட்டிங் அறையின் முன்னே நின்றிருந்த காரியதாசி மனோ
“கரண்… மீட்டிங்குக்கான எல்லா ஏற்பாடும் ரெடி தானே?” என பரபரப்பாய் கேட்டவன்,
“சார் வந்து செக் பண்ணும் போது சின்ன மிஸ்டேக் கூட இருந்தா உடனே கண்டுபிடிச்சுடுவார். அப்புறம் அவர் திட்டுவதை காதுல கூட கேக்க முடியாது,” என எச்சரித்தான் மனோ.
கரண் சற்றும் தடுமாற்றமின்றி,
“மனோ, எல்லாமே கரெக்டா இருக்கு. பிளான் முழுக்க பெர்பெக்டா லேப்டாப்புல சேஃபா இருக்கு. எந்த பிரச்சனையும் இல்ல. கிளையண்ட் என்ன கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லிடுவேன்,” என நம்பிக்கையுடன் பதிலளித்தான்.
அவன் தோளில் மெதுவாக தட்டிய மனோ,
“கரண்… இங்க இவ்வளவு சீனியர்ஸ் இருக்கும்போது, சார் ஏன் இந்த புராஜெக்ட்டை உன்கிட்ட கொடுத்தார் தெரியுமா?” என கேட்டான்.
கரண் அதற்கு பதிலாக,
“இல்லை,” எனும் விதமாக மெல்ல தலையசைத்தான்…
“சாருக்கு உன்னை மாதிரி வேலையில துடிப்பா இருக்கிற ஆளுங்க ரொம்ப பிடிக்கும்.
உனக்குள்ள இருக்கிற டேலன்ட் மேல, உனக்கே இருக்கிற நம்பிக்கைதான் உன்னோட பெரிய பலம்.
ஒரு வாய்ப்பு கிடைச்சா, அதைப் பயன்படுத்தி உன்னை நீயே ப்ரூஃப் பண்ணணும்னு இருக்கிற வேகம்… அது உன்கிட்ட இருக்கு, கரண்.
அதுனால மட்டும் தான் சார் இந்த சேன்ஸை உன்கிட்ட கொடுத்திருக்கார்.”
மனோ இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
கரணின் மனதில் தன் முதலாளியின் உருவம் இன்னும் உயர்ந்த இடம் பிடித்தது.
கடுமையாய் தெரிந்த அந்த முகத்துக்குள்,
திறமையை கண்டு மதிப்பிடும் நியாயமும்,
நம்பிக்கையை சோதிக்கும் துணிச்சலும் இருப்பதை
முதல் முறையாக அவன் தெளிவாக உணர்ந்தான்.
அந்த நொடியில் இருந்து,
இந்த புராஜெக்ட் மட்டும் இல்ல…
அந்த மனிதரின் நம்பிக்கையையும்
எந்த நிலையிலும் தவற விடக்கூடாது என்ற விசுவாசம் கரணின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியது…
திடீரென, அதுவரை சலசலத்து கொண்டிருந்த அந்த அறை,
ஒரு நொடியில் முற்றிலும் அமைதியாகிப் போனது.
அந்த மௌனம் அவ்வளவு கனமானது
குண்டூசி விழும் சத்தம் கூட தெளிவாகக் கேட்கும் அளவுக்கு
அறை முழுவதையும் ஆட்கொண்டிருந்தது…
மனோ சூழ்நிலை உணர்ந்தவன் அனைவரையும் பார்த்தான்..
எல்லோரும் பதட்டமாய் எழுந்து நின்றனர்..
“இவங்க அட்டேஷன் போஸ்ல நிற்குறதிலேயே தெரியுது,சார் வந்துட்டார்னு “என நினைத்தவன் முன்னே பார்த்தான்…
அங்கு வெள்ளை நிற சட்டை அணிந்து முதல் இரண்டு பட்டன்களை திறந்து விட்டு அதன் மேலே கருப்பு நிற கோர்ட் அணிந்து, கருப்பு கலர் ஃபார்மல் பேண்ட் அணிந்திருந்தான்…
தன் முடியில் மேல் பாதி மட்டும் முடிந்து போட்டிருந்தவன் ஒரு கையினால் கழுத்து புரடியை தடவி விட்டு கொண்டவன் அனைவரின் கவனத்தையும் ஒரே நேரத்தில் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, கம்பீரமான தோற்றத்தில் தன் அழுத்தமான வேகநடையுடன் அடி எடுத்து வைத்தான்…
இவனின் வேக நடையில் அவனின் வலது தோளில் தகப்பனின் கழுத்தை கட்டிக் கொண்டு சாய்ந்து உறங்கும் மகள் லேசாக சிணுங்கவும் ஒரு நொடி தன் நடையை நிறுத்தியவன் தன் நீண்ட விரல்களை கொண்டு மகளின் முதுகில் மெதுவாக தட்டி தலையை கோதி கொடுக்கவும் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்…
ஆளுமையான கம்பீரமான ஆண்மகனின் மற்றொரு பரிமாணமான இந்த தாயுமானவனை ஏற்கனவே அனைவரும் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது அவர்களுக்குள் ஆச்சர்யம் எழாமல் இல்லை…
அவனின் கோப முகம் கண்டு பயப்படுபவர்கள்,இவனின் இந்த கனிவு முகம் கண்டு அதிசயிப்பார்கள்…இந்த முகமே எப்போதும் இருந்தால் என்ன என குறைபட்டு கொள்வார்கள்…
மகளை தட்டி கொடுப்பதில் கைகள் வேலை செய்தாலும்,அவன்
கூர்மையான கண்கள் மட்டும் அறையில் இருந்த ஒவ்வொருவரையும்
மெல்ல அளந்தது.
யார் தங்கள் வேலையில் முழுகியிருக்கிறார்கள்,யார் வேலை செய்யாமல் கதை அளந்தார்கள் என அவர்கள் முகம் காட்டும் உணர்வுகள் மூலமாகவும் அவர்களின் பதட்டம் பயம் கலந்த உடல் மொழி மூலம் கண்டு கொண்டான்…
மனோ உடனே அவனை நெருங்கி “சார் மீட்டிங் ரூம் ரெடி ஆகிடுச்சு”என அவன் சொல்லவும் ஒப்புதலாய் தலையசைத்தவன் கை கடிகாரத்தை பார்த்தான்..
மீண்டும் மனோவை பார்த்து “இன்னும் டென் மினிட்ஸ்ல க்ளையண்ட் வந்திருவாங்க,நீ அவங்களை ரிசீவ் பண்ணி மீட்டிங் ரூம் கூட்டிட்டு போ நான் வந்துடுறேன் “என கூறிவிட்டு முன்னால் வந்தவன் செல்லும் முன் கரணை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்றான்…
உள்ளே நுழைந்தவன் தன் தோளில் உறங்கும் குழந்தையை அங்கிருந்த குட்டி கட்டிலில் போட்டவன் கசங்கி இருந்த கோர்ட்டினை சரி செய்து தன் நாற்காலியில் அமர்ந்தான்…
அவனின் முன் இருந்த பெயர் பலகையில் ருத்ரன் CEO என தங்க நிற எழுத்துகள் ஜொலித்தது…
*********
“இனி உன்னை தனியே அனுப்ப மனசே இல்ல…”
சந்திராவின் குரலில் சொல்ல முடியாத வருத்தம் கலந்து இருந்தது.
“ஆனா என்ன பண்றது… என்னாலயும் வர முடியாத சூழ்நிலை.”
ஒரு கணம் நின்று,
கண்களில் தேங்கி நின்ற கவலையை மறைத்துக்கொண்டு தொடர்ந்தார்
“நேத்து முக்கியமான அசோசியேஷன் மீட்டிங். அங்க போக வேண்டியதுனால, என் செல்லப் பேரனோட பர்த்டேல கூட
என்னால கலந்துக்க முடியல.
டைம் ஸ்பெண்ட் பண்ணவும் முடியல…” என சோகமாக கூறியவர்
“இப்போ எனக்கு டைம் இருக்கு…
ஆனா இப்ப இவன் இருக்க முடியாதுல.” என கவலையாய் முடித்தவர் பேரனின் பிரிவால் கண்கள் கலங்கினார்..
அஞ்சலி அம்மாவின் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுக்கவும், கண்களை சிமிட்டி அழுகையை கட்டுப்படுத்தியவர் “சே நான் ஒரு லூசு போகும் போது அழுகிறேன் பாரு “என தலையில் தட்டி கொண்டவர்
“இனி இவனை நல்லா பார்த்துக்கோ, என் முயல் குட்டியை
நான் ரொம்ப… ரொம்ப மிஸ் பண்ணுவேன்,”
என்று சொல்லிக்கொண்டே,
நிலைனை தன் கைகளுக்குள் இறுக்கி அணைத்து
அவன் முகம் முழுவதும்
முத்தத்தாலேயே
அன்பை பொழிந்தார் சந்திரா.
“போதும்… போதும், பிக் மம்மி,”
என்று மூக்கைச் சுருக்கிக் கொண்டு
“எல்லா பாசமும், எல்லா முத்தமும்
உங்க பேரனுக்கே கொடுத்துட்டா,
அப்போ உங்க செல்லப் பொண்ணு எனக்கு என்ன கொடுப்பீங்க?” போலி கோபத்துடன் குழந்தை தனமான பொறாமையுடன் கேட்டாள்…
இவள் சிறு பிள்ளை தனத்தை கண்ட அஞ்சலி, உடனே தங்கையை சீண்டும் சிரிப்புடன்
“ஹா… எங்க முதல் கவனிப்பு எல்லாம்
எங்க முயல் குட்டிக்குத்தான்.
அப்புறம் போனா போகுதுன்னு
இந்த குட்டி சாத்தானுக்கு
கொஞ்சம் கொடுக்கிறோம்.” என கேலியாக கூறினாள்…
“மம்மீ!” என்று கோபமாக கத்தினாள்…
அவளின் கத்தலை கேட்டு
உடனே, அவர்களைச் சுற்றி உடை பெட்டியை தள்ளி கொண்டு பரபரப்பாக சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும்
ஒரு நிமிடம் நின்று, புரியாமல்
குழப்பமும், கலந்த
பார்வையுடன் இவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் வழியில் கடந்து சென்றனர்.
அந்த பார்வைகளை கவனித்தவள்,
உடனே தங்கையின் வாயை பொத்தியபடி,
“ஏய்… லூசு!
வாயை மூடு,” என்று அவசரமாய் கூறியவள்
“இது நம்ம வீடு இல்ல.
ஏர்போர்ட். சத்தம் போடாதடி.”
பின் சுற்றிப் பார்த்து,
குரலை சற்று தாழ்த்திக் கொண்டு,”எல்லாரும் நம்மளை
லூசுனு நினைச்சு பார்த்துட்டு
போறானுங்க.”என புலம்பினாள்…
மகள்களின் குறும்பு கலந்த சேட்டையை சந்திரா ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது,
ஒரு கணம் அவர் மனம்
பின்னோக்கி பயணித்தது.
சிறு வயதில்
தானும் தன் தங்கையும்
போட்டு கொண்ட சண்டைகள்,
அதற்குப் பிறகான சமாதானங்கள்,
சின்னச் சின்ன கொஞ்சல்கள்
அனைத்தும் ஒரே நொடியில்
நினைவுகளாக விரிந்தன.
அந்த நினைவுகளின் நெருக்கம்
அவளின் கண்களில்
மெல்ல நீர் திரையிடச் செய்தது.
குரல் தழுதழுக்காமல் இருக்க மௌனத்தை தேர்ந்தெடுத்தார்..
ஆனால் மனதில் மட்டும்,
ஒரு சொல்ல முடியாத பாரம்
மெல்ல ஏறிக் கொண்டே இருந்தது.
அந்நேரம்,
வெள்ளைத் தோல் பளபளக்க
ஒரு வெளிநாட்டு இளைஞன்
பரபரப்புடன் ஓடி அங்கு வந்தான்.
“ஹாய் ஜான்,”
என்று இனி புன்னகையுடன் கை நீட்டினாள்.
“ஹாய், ஸ்வீட்டி,”
என்று பதிலுக்கு கை கொடுத்தவனே,
“உன் போர்டிங் பாஸ்க்கு டைம் ஆச்சு,”
என்று நினைவூட்டினான்.
அதை கேட்டதும்,
உடைப் பெட்டியை எடுத்துக் கொண்ட இனி, ஒரு கையால் சந்திராவிடமிருந்து
குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
அஞ்சலி விடாமல்
நிலனுக்கு முத்தம் கொடுத்தாள்.
அவனுடன் சில புகைப்படங்களையும்
அவசரமாக எடுத்துக் கொண்டவள்,
தங்கையைப் பார்த்து
“என்ன பிரச்சினை வந்தாலும்
உடனே எனக்கு கால் பண்ணு.
தனியா நினைக்காதே.”மெதுவாக சொன்னாள்..
அந்த வார்த்தைகளில்
ஒரு அக்காவின் கவலையும்
அன்பும் கலந்திருந்தது.
சந்திரா,
மகளையும் பேரனையும்
ஒரே நேரத்தில் கட்டி அணைத்தார்.
விடுவிக்க மனதில்லை அவருக்கு…
ஜான், சிரிப்புடன்,
“பாய் ஸ்வீட்டி…
என்ஜாய் யூர் ஜர்னி.
அண்ட் என்ஜாய், லிட்டில் சாம்ப்,”
என்று சொல்லிக்கொண்டே,
அவனையே
கொட்ட கொட்டவிழிகளை விரித்து
பார்த்துக் கொண்டிருந்த
குழந்தையின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளி
ஒரு முத்தம் கொடுத்தான்.
இவளுக்கும் அழுகை வந்தது…
ஆனால் அதை யாருக்கும் தெரிய விடாமல், தன்னுள் அடக்கிக்கொண்டு, உதட்டோரம் ஒரு புன்னகையை பூசிக்கொண்டு உள்ளே சென்றாள்…
அங்கு அவளுக்கான செக்கிங், வெரிபிகேஷன் எல்லாம் முடிந்ததும்,
ஃப்ளைட்டுக்குள் ஏறியவளை ஒரு பணிப்பெண் புன்னகையுடன் வரவேற்று, அவளுக்கான இடத்தைச் சுட்டிக் காட்டினாள்…
தன் சீட்டில் வந்து அமர்ந்தவள்,
மெல்லிய குரலில் கோபத்துடன்
“ஏன் வீர்… நீங்க என்கூடவே ஒண்ணா வந்திருக்கலாம்ல… எதுக்கு முன்னாடியே வந்து இங்க உட்கார்ந்திருக்கீங்க?”
என்று வினவினாள்…
அருகில், நிலன் தன் பாஷையில் ஏதேதோ கத்திக்கொண்டிருந்தான்…
மற்ற பயணிகள் அவளை ஒரு கணம் பார்த்து, குழப்பத்துடன் கடந்து சென்று தத்தம் இடங்களில் அமர்ந்தாலும்,
அவர்களின் பார்வை என்னமோ மீண்டும் மீண்டும் இவள்மீதே வந்து நின்றது…
அவன் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்து, பின்னர்,”இனி என்ன பண்ணுறது… என்னைய விட, உன்னை பார்த்தா தான் என் ஃபேமிலி ஆட்களுக்கு பிடிக்க மாட்டுது…
அதான் அவங்கள ஏன் சங்கடப்படுத்தனும்னு நினைச்சு, நான் தனியா முன்னாடியே வந்து இங்க உட்கார்ந்திட்டேன்…”மெதுவாகச் சொன்னான்.
அவள் எதுவும் சொல்லவில்லை…சுற்றி தன் மீது இருக்கும் பார்வையை கண்டு கொள்ளவில்லை…
மெல்ல அவனது தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்…
அந்த ஒரு சாய்வில், அவளுடைய எல்லா பயமும், கோபமும், வலியும் கரைந்து போனது…
தேவன் வருவான் ❤️❤️❤️…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1

