
சபதம் – 36
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். (குறல் – 349)
பொருள்:
பற்றுகளை விட்ட மனத்திற்கே, பிறப்பு–இறப்பின் உண்மையும்,உலகின் நிலையாமையும் தெரியும். ஆசை, பற்றுதல் இல்லாத மனம் தான் வாழ்க்கையின் உண்மையைப் பார்க்க முடியும்.
வனரக்ஷா காடு அமைதியில் திளைத்திருந்தது. மரங்கள் இருண்ட மகா அரக்கர்களைப் போல உயர்ந்து நின்றன. அவற்றின் கிளைகள் மனித உருவங்களைப் போல வளைந்து நெளிந்திருந்தன.
தரையைச் சுற்றி பனிப்போர்வை போர்த்தியதுபோலப் பரவி இருந்தது. காற்றுக்கூட அசைய மறுத்தது. ரணசூரன் தனியாக நடந்து வந்தவன் கைகளில் மேஹ்ருன்னிஷாவின் இரத்தக்கறை படிந்திருந்தது. அவன் காட்டை நோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் கனமாக இருந்தது. ஒவ்வொரு நினைவும் அவன் தோள்களில் சுமையாக விழுந்தது.
வீர், யசோதரா, சுலைக்கா, மேஹ்ருன்னிஷா என்று ஒருவரும் இப்போது இல்லை. அனைவரையும் இழந்து விட்டான். அவனிடம் மீதமிருக்கும் ஒன்று, அவனது உயிர் மட்டுமே.
அரவள்ளி மலைத்தொடரின் உச்சியில் நின்றிருந்தது ஸ்தபத் ஸ்தம்பம், பழமையான சபதக் கல் தூண். காலத்தின் பிளவுகளால் கீறப்பட்டு, நிலவொளியில் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அரவள்ளியின் ராஜ்யங்களான அதிவார் மற்றும் ராணாவின் முதல் அரசர்கள் இங்கே, ‘அரவள்ளியையும் அதைச் சுற்றிய மலைத்தொடர்களையும் காப்போம்’ என்று கர்னி மாத சன்னதியின் முன் சத்தியம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு வழிவழியாக வந்த அரசர்கள், தங்கள் பட்டமேற்புக்குப் பின் இந்த தூணின் முன் அரவள்ளியை காக்க சத்தியம் செய்துள்ளனர். அந்த சத்தியத்தை அந்தத் தூண் நினைவில் வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று இரவு, அந்த ஸ்தபத் ஸ்தம்பம் அவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.
ரணசூரன் அதற்கருகே சென்றான். அவன் மூச்சு நடுங்க, அந்தத் தூணின் குளிர்ந்த கல்லின் மேல் கை பதித்து மண்டியிட்டு விழுந்தான். காடு முழுவதும் அசாதாரணமான அமைதி நிலவியது.
ரணசூரன் கர்னி மாத சன்னதியில் பாதுகாக்கப்பட்டிருந்த ராணா வம்சத்தின் வாளை கைகளில் ஏந்தியன், “ரணசூரன் எனும் நான்… ராணா வம்சத்தின் பட்டத்து இளவரசன். எனது தந்தையின் சத்தியத்தை முறித்தவன். அரவள்ளியை காக்க முடியாமல் தோல்வியுற்றவன்.” என்றவனின் குரல் உடைந்து வெளிவந்தது.
மேலும் தொடர்ந்த ரணசூரன், கண்களுக்குள் வீர் வந்து சிரித்தான், “வீரா…தவறிழைத்து விட்டேன்… தப்பிக்க மார்க்கம் இல்லை…நம் நாளைய சந்ததியாவது பிழைக்க வேண்டி…இந்த முடிவு.” என்றவன் கண்ணீர் வேர்களின் மேல் விழுந்தது.
வாளை வானத்தை நோக்கி உயர்த்தியவன், “நீ கொடுத்த உயிரை… உன்னிடமே சேர்த்து விடுகிறேன் தாயே கர்னி மாத. காலம் உள்ளவரை ராஜபுத்திர வீர வம்சத்தில் ரணசூரன் என்ற இளவரசன் நாட்டை காக்க தவறினான் என்று வரலாறு பேசட்டும்” என்ற வார்த்தையை கேட்டு காற்றின் வேகம் கூடியது.
“நான் தவறிழைத்துவிட்டேன்… என் சகோதரனை, என் சகோதரிகளை, என் காதலை இழந்து தவறிழைத்துவிட்டேன்” என்றவனின் விரல்கள் மண்ணில் கோபத்துடன் முட்டியது.
“இந்த வாழ்வில் அவர்களை காப்பாற்ற முடியவில்லை” என்றபடி மெல்ல எழுந்தவன், இரு கைகளையும் அந்தப் பழமையான தூணின் மேல் வைத்தான். தூண் மெல்ல அதிர்ந்தது.
ரணசூரனின் குரல் ஆழமாக ஒலித்தது, ” பல உயிர்களுக்கு அன்னையாய் விளங்கும் அரவள்ளியே, கேள். ராஜபுத்திர வீர வம்சத்தில் உதித்த ராணா குல முன்னோர்களே, கேளுங்கள். அரவள்ளி இங்கு அழிந்து கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்த்திருந்த
தேவர்களே, கேளுங்கள்.” என்றவனின் குரல் மரங்களின் வழியே ஓங்கி ஒலித்தது.
ரணசூரன், “மற்றொரு வாழ்க்கை இருந்தால்…மற்றொரு பிறப்பு இருந்தால்…மற்றொரு வாய்ப்பு இருந்தால்…” அவன் கண்களில் எரிந்த தீயுடன், “நான்…இந்த ராணா குலத்தின் இளவல் ரணசூரன் மீண்டும் எழுவேன். என்னிடமிருந்து பறிக்கப்பட்டதை மீட்டெடுப்பேன்.
நான் காக்கத் தவறியதை காப்பேன். துரோகம் செய்தவர்களை அழிப்பேன். என் குல பெண்களைத் தொட்ட கைகளை வெட்டி எறிவேன். இன்று தொடங்கிய இந்தப் போரைக் மறுபிறவி எடுத்தாவது நான் முடிப்பேன்” என்றவனின் வார்த்தையில் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று கல்லை இரண்டாகப் பிளந்தது.
காடு நடுங்கியது. ரணசூரன் நெற்றியை தூணில் சாய்த்தபடி, “இது என் சபதம். என் சாபம்.
என் விதி” என்றதும் அந்த பிளவு விரிந்தது, தூண் அவன் சபதத்தை ஏற்றுக்கொண்டது போல,ஒளி அதிகரித்தது.
இரு கைகளையும் ஸ்தம்பத்தின் மேல் வைத்திருந்தவன், “அக்னி தேவன் என் பாவப்பட்ட உடலை ஆட்கொள்ளட்டும்…துரோகத்தின் வலி எப்படி இருக்கும் என்பதற்கு சரித்திரம் என் பெயரைச் சொல்லட்டும்…” அதை கேட்ட கர்னி மாதா கோவிலின் தூங்கவிளக்கு கோபத்தில் திகுதிகுவென எரிய தொடங்கியது.
“ஈன்ற குலத்தைத் தாரை வார்த்துவிட்டேன்…வளர்ந்த மண்ணை மாற்றானிடம் அடிமைப் படுத்திவிட்டேன்…” என்றதும் பற்றி எறிந்த நெருப்பு கோவிலை சேர்த்து விழுங்க தொடங்கியது.
மேலும் தொடர்ந்த ரணசூரன், “தாய் மண்ணைக் காக்கும் இந்த தீ…என் உயிரைப் பருகி…
எதிரியைப் பழிதீர்க்கட்டும்…” மெல்ல சுற்றியுள்ள மரம் கொடி என்று பரவிய தீ ரணசூரனின்
கால்களை, அவன் இடுப்பை, அவன் மார்பைச் சுற்றி உயர்ந்தது.
ஆனால் அவன் அசையவில்லை. அவன் கூச்சலிடவில்லை. ராணா குல வாளை வானத்தை நோக்கி உயர்த்தியவன், “வாழ்க போர்வீரர் குலம்! ஓங்கட்டும் அக்னி தேவனின் புகழ்!” என்ற அடுத்த நொடி தீ அவனை முழுவதும் விழுங்கியது.
ரணசூரனின் உருவம் வாள் உயர்த்தியபடி, உடல் எரிந்தபடி, அசையாமல் அக்னிக்குள் நின்றது. காடு முழுவதும் ஒளி கனலாய் மாறியது. மரங்கள் எரிந்தன. தரை பிளந்தது.
வானம் சிவந்தது. வனரக்ஷா காடு அவனுடன் சேர்ந்து எரிந்தது. அவன் உருவம் மெதுவாக சாம்பலாக சிதறியது. ஆனால் தீ அவன் ஆவியைத் தொடவில்லை.
ஸ்தபத் ஸ்தம்பம் இதுவரை இல்லாத அளவு ஒளிர்ந்தது. அவன் சபதத்தை உறிஞ்சி,
அராவள்ளியின் மண்ணிலும், காட்டின் வேர்களிலும், எதிர்காலத்தின் விதியிலும் பதித்தது.
ரணசூரன் சாம்பலாகி மறைந்த அந்த நொடியில், காடு முழுவதும் ஒரு குரல் ஒலித்தது. அது அவனுடையது அல்ல. அது சபதத்தின் குரல்.
“ரணசூரன் திரும்புவான். சபதம் முடிக்க ரணசூரன் திரும்புவான்”
தீ அணைந்தது. காடு மீண்டும் அமைதியானது. அன்று பிறந்த ரணசூரன் சபதம், யுகங்களைத் தாண்டி ஒலிக்கும் ஒரு உறுதியாக நிலைத்து நின்றது.
ஒரு நாள், வீரும் ரணசூரனும் மீளுவர் என்ற நம்பிக்கையில் நிலைத்து நின்றது.
வனரக்ஷா காட்டின் தீ அணைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், அரவள்ளி நிலம் அமைதியாகவே இருந்தது. மரங்கள் மீண்டும் துளிர்த்தன. சாம்பல் மண்ணில் கலந்தது.
ஆனால் சபதம் மட்டும் மறையவில்லை.
முகலாய படையெடுப்பில் உயிர் தப்பிய சிலர் ரணசூரனின் கதையை பரப்பினர். அணைத்தையும் இழந்த ஒரு இளவரசன் காட்டை சேர்த்து எரித்து, வரலாறாய் மாறிய கதையை பரப்பினர்.
காடு எரிந்ததை நேரில் கண்ட வீரர்கள் தங்கள் பிள்ளைகளிடம், “அவன் தீக்குள் நின்றதை நாங்கள் பார்த்தோம். ஸ்தபத் ஸ்தம்பம் ஒளியால் பிளந்ததை பார்த்தோம். ஒரு மனிதன் சபதமாக மாறியதை பார்த்தோம்” என்று கதை தலைமுறைகளுக்கு தொடர்ந்தது.
அவன் கடைசி வார்த்தைகள், அவன் வாளை வானத்தை நோக்கி உயர்த்திய அந்த நொடிகள், அவை எல்லாம் கதைகளாக மாறின. ராஜபுத்திர குழந்தைகள் வளரும்போது கேட்ட வரிகள், “ரணசூரன் இறக்கவில்லை. அவன் தீயாக மாறினான்” என்பதாகும்.
பாடகர்கள், கவிஞர்கள் அந்தக் கதையை இராச்சியமெங்கும் எடுத்துச் சென்றனர். சந்தைகளில் அதை பாடினர். அந்த கதைக்கு “ரணசூரன் சபதம்” என்று பெயர் சூட்டினர்.
ஒவ்வொரு முறையும் அந்தக் கதை சொல்லப்பட்டபோது, அந்தத் தீ இன்னும் பிரகாசமானது.
இப்போது அது ஒரு கதை இல்லை. அது நம்பிக்கை. மக்கள் நம்பினர். ஸ்தபத் ஸ்தம்பம் சில இரவுகளில் இன்றும் ஒளிர்வதாகவும், காடு இன்னும் அவன் பெயரைச் சொல்வது போலவும் பல கதைகள் உலவின.
வனராக்ஷாவின் சாம்பலில் அவன் ஆவி வாழ்கிறது என்றும். அராவள்ளியின் மண்ணில் சபதம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது என்றும் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதித்தனர்.
“அநீதி எழுந்தால், ரணசூரன் எழுவான்” என்று பூசாரிகள் கோயில் சுவர்களில் அவன் சபதத்தை பொறித்தனர். போர்வீரர்கள் யுத்தத்திற்கு முன் அவன் பெயரில் சத்தியம் செய்தனர்.
காலம் சென்றபோது, கதை தீர்க்கதரிசனமாக மாறியது. முனிவர்கள் அறிவித்தனர், “துரோகியின் வம்சம் மீண்டும் எழும்போது, பாதுகாப்பாளர்களின் வம்சமும் எழும்” என்று.
“வீர் திரும்புவான். ரணசூர் திரும்புவான். சபிக்கப்பட்ட ஆளுநரின் முடிவு அவர்களின் கைகளில் எழுதப்படும். அவனைச் சபித்த பெண் அவன் வீழ்ச்சியைப் பார்ப்பாள்” என்று அசரீரி போல் ராஜபுத்திர வம்சம் நம்பியது.
ராஜபுத்திர மக்கள் காத்திருந்தனர்.
“சபதம் நிறைவேறும். ரணசூரன் சபதம் ஒருபோதும் பொய்க்காது” என்று நம்பினர்.
நூற்றாண்டுகள் கடந்தன. பேரரசுகள் எழுந்தன, வீழ்ந்தன. ஆனால் புராணம் மட்டும் நிலைத்தது. அராவள்ளியில் அநீதி எழுந்த ஒவ்வொரு முறையும், ஒரு கொடுங்கோல் ஆட்சி வந்த ஒவ்வொரு முறையும், ஒரு பெண் பாதுகாப்புக்காக அழுத ஒவ்வொரு முறையும், குல மூத்தவர்கள் சொல்வது, “பயப்படாதே. சபதம் உயிருடன் இருக்கிறது.
ரணசூரன் திரும்புவான்” என்பது தான்.
வனராக்ஷா காட்டின் இதயத்தில் எங்கோ ஸ்தபத் ஸ்தம்பம் இன்னும் நின்றது. தூண் பிளந்து, மங்கலாக ஒளிர்ந்தபடி, சபதம் மீண்டும் விழிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தது.
காலம் கூடியபோது, சாபம் நீதியை வேண்டியபோது, அனைத்தும் விதியால் இணைந்த போது இரண்டு ஆன்மாக்கள் மறுபிறவி எடுத்தன.
வீர் மற்றும் ரணசூர்.
நூற்றாண்டுகளாக உறங்கியிருந்த சபதம், மீண்டும் உயிர்த்தது.
மிர்சா குத்புத்தீனின் மரணத்திற்குப் பிறகு, அவன் குடும்பம் வடக்கு சமவெளிகளில் சிதறிப் போனது. சிலர் தங்கள் பெயர்களை மாற்றினர். சிலர் தங்கள் வம்சத்தை மறைத்தனர். சிலர் தீர்க்கதரிசனத்தின் கோபத்திலிருந்து தப்பிக்க ஓடினர்.
ஆனால் சாபம் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தலைமுறையிலும், மிர்சா குத்புத்தீனின் ரத்தவழியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு தீ வடிவில் ஒரு மச்சம் இருந்தது.
எரியும் காட்டின் கனவுகளுடன், அராவள்ளியைப் பற்றிய விளக்கமற்ற பயத்துடனும், தன்னை விட்டு பிரியாத ஒரு நிழலுடன் வளர்ந்த அந்த குழந்தைகளை பார்த்த குடும்பத்தினர், “இது சபிக்கப்பட்ட ஆளுநரின் குறி. ரணசூரனின் தீ இன்னும் அவர்களை வேட்டையாடுகிறது” என்று தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.
அந்த குடும்பங்கள் சாபத்தை உடைக்க, யாகங்கள், பிரார்த்தனைகள், துறவுகள் அணைத்தையும் முயன்று தோற்றனர். ஏனெனில் அந்த சாபம் உடைக்கப்பட வேண்டியது அல்ல. அது நிறைவேற்றப்பட வேண்டியது.
நூற்றாண்டுகள் கழித்து, அராவள்ளியிலிருந்து தொலைவில் உள்ள ஒரு பரபரப்பான நவீன நகரத்தில், செல்வந்த அரசியல் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அவன் பெயர் ஆரிஸ் குரேஷி. மிர்சா குத்புத்தீனின் நேரடி வம்சத்தை யாராலும் அறிய முடியவில்லை. அந்த குடும்பத்தவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் அறிகுறிகள் இருந்தன, மிர்சா குத்புத்தீனின் கூர்மையான கண்கள், அதே அகங்காரம், அதே அதிகார பசி
அதே தீ வடிவ பிறப்புகுறி ஆரிஸ் குரேஷியிடம் இருந்தது.
அவன் இருபத்தொன்றாவது வயதில், ஒரு கனவு அவனை விழித்தெழச்செய்தது.
ஒரு எரியும் காடு. தீக்குள் நிற்கும் மனிதன். வானத்தை நோக்கி உயர்த்தப்பட்ட ஒரு வாள் கொண்டு, “நான் திரும்புவேன்” என்ற வார்த்தை காதில் ஒழிக்க ஆரிஸ் அலறியபடி விழித்தான்.
அன்றில் இருந்து அவனது பூர்வ ஜென்ம நினைவுகள் விழிக்க தொடங்கியது. தன் இருப்பிடத்தை உதய்ப்பூர்க்கு மாற்றியவன், ராஜபுத்திர குலங்களை கவனிக்க தொடங்கினான்.
ராணா குல வாரிசை அளிக்க முயன்றான். ரன்வீரின் தந்தையை கொன்றது, ரன்வீரை கொள்ள ஆள் அனுப்பியது. கரணின் அன்னையை கொன்றது என்று அவனது பாவத்தை ஜென்மம் கடந்து நீடிக்க செய்து கொண்டிருந்தான் சவுஹானால் ‘மாலிக்’ என்று அழைக்கப்பட்ட அந்த அறுபது வயது ஆரிஸ் குரேஷி.
ரணசூரன் சபதம்……

