
அத்தியாயம் – 32
“ஹரி நான் போய் சந்துக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமாம்..வாங்கிட்டு வந்துருறேன்” என லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த ஹரியைப் பார்த்து ஸ்ரீ கூற,
“ஹேய் ஒரு ஹாஃப் அன் ஹவர் பொறுத்துக்கோ நானே உன்னை கூட்டிட்டு போறேன் லட்டு இந்த ப்ரோகிராம் மட்டும் முடிச்சுக்கிறேன் ப்ளீஸ்” என அவன் அவகாசம் கூற,
“ஹரி பக்கத்துல தான் ஐபாகோ இருக்கு.. நான் போய்ட்டு வரேன்..நீ வேலையை பாரு” என ஸ்ரீ பதிலளித்தாள்.
“இல்லை லட்டு வேணா சித்துவை போய்ட்டு வர சொல்லு ..இல்லை அப்பா மாமா இருப்பாங்கள??” என கேட்க,
” நான் என்ன குழந்தையா பக்கத்துல இருக்க தெருவுக்கு இவ்ளோ பில்ட் அப் ஓவர் ஹரி..அப்பா ,பெரிய மாமா சின்ன மாமாலாம் தாத்தா கூட பார்க்கு வாக்கிங் போய்ருக்காங்க.. சித்து அண்ணா வர்ஷூவோட அம்மா அப்பாவை பிக்கப் பண்ண ஸ்டேஷன் போய்ருக்காங்க.. கார்த்திக் வேலைன்னு சொல்லிட்டு கண்டிப்பா எங்கயாச்சும் ஊர் சுத்த போய்ருப்பான்… இப்போது நான் செல்ல அனுமதி வழங்குவீர்களா அரசரே” என அவள் நாடக பாணியில் பேசி அவனை கிண்டல் செய்ய,
“சரி இரு நானும் வரேன்” என அவன் வேலையை விட்டுவிட்டு எழுந்து கொள்ள,
“அட ராமா இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்.. ஒழுங்கா உட்கார்ந்து வேலையை பாரு..நீ நூறு எண்ணுறதுக்குள்ள அப்படி போய்ட்டு இப்படி வந்துடுறேன்.. ஓடு ஓடு போய் வேலையை பாரு ..டாட்டா” எனக் கூறியவள் , ரூமை விட்டு ஓட,
“ஹேய் லட்டு ஒழுங்கா பார்த்து போடி,..போன் எடுத்துக்கிட்டல” என அவனின் அக்கறைக் குரல் அவளை தொடர்ந்தது,
வெளியே சென்றவள் பின் என்ன நினைத்தாளோ ,வேகமாக உள்ளே ஓடி வந்தவள் அவன் கன்னத்தில் அவசரமாக ஒரு முத்தத்தைத் பதித்து விட்டு ,”ஐ லவ் யூ ஹரி” என அவன் கண்ணைப் பார்த்துக் கூறியவள் அடுத்த நிமிடம் அங்கிருந்து ஓடி மறைந்தாள்.
நொடி நேரத்தில் நடந்து விட்ட இதை நம்ப முடியாமல் ஹரி ஆனந்தமாக அதிர்ந்து நிற்க, அடுத்த நிமிடமே அவன் மனம் ஏதோ தவறு இன்று நடக்கப் போவதைப் போல பதறியது.
ஒருவேளை அன்று போல் சந்துவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்தவன் அறையை விட்டு வேகமாக வெளியே வர, அங்கு ஹாலில் சந்துவோ தன் பாட்டியின் மடியில் நிம்மதியாக படுத்துக் கொண்டு அவர் கூறிய கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதன் பின்பே அவன் மனம் நிம்மதியாக , ‘ஒருவேளை ஸ்ரீக்கு எதாவது பிரச்சனையாக இருக்குமோ’ என மூளை எச்சரிக்கை மணி அடிக்க,
வேகமாக வீட்டை விட்டு வெளியேறியவன் லிஃப்டிற்கு காத்திருக்க பொறுமையில்லாமல் தட தடவென படிகளிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தான்.
வாசலில் இறங்கியவன் பக்கத்து தெருவில் இருந்த ஐபாகோவிற்கு ஓட, அங்கு அவன் மனதிற்கு தோன்றியதைப் போல் அவனின் மனதிற்கினியவளைக் காணவில்லை.
அவன் மனம் திக்கென்று இருக்க, அங்கிருந்த கடை ஊழியரிடம் விசாரித்தான்.
அவரோ அவன் கூறிய அடையாளங்களுடன் யாரும் அங்கு வரவேயில்லை என அடித்துக் கூறிவிட, அவள் செல்போனுக்கு அழைக்க, அது ஸ்விட்ச் ஆஃப் என்று பதிவு செய்யப்பட்ட குரலில் கூற,
“ஷிட்!!” என கத்தியவன் அங்கிருந்த தெருக்களில் பைத்தியம் போல் அவளைத் தேடி அலைந்தான்.
அதை ஒரு வித குரூர புன்னகையோடு தூரத்தில் இருந்த காருக்குள் இருந்து சிந்தியா பார்த்துக் கொண்டிருக்க, கையையும் வாயையும் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரு தடியன்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரீக்கோ கணவனைக் கண்டு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
துள்ளலுடன் ஐஸ்க்ரீம் வாங்க வெளியே வந்தது மட்டும் தான் அவளுக்கு நினைவிருந்தது , அடுத்த நிமிடமே எங்கிருந்தோ வந்த காருக்குள் அவளை தள்ளியவர்கள் அடுத்த நிமிடமே அவள் வாயையும் கையையும் கட்டி வைக்க, அவள் முன்னால் அமர்ந்திருந்த சிந்தியாவைக் கண்டு திகைத்துப் போய் அமர்ந்து விட்டாள்.
ஹரி பைத்தியம் போல் வெகுநேரம் தேடி அலைந்தவன் பின் கார்த்திக்கிற்கும் விஜய்க்கும் அழைத்து அவர்களை வரச்சொல்ல, அதுவரை அதை பார்த்துக் கொண்டிருந்த சிந்தியா அடுத்த நிமிடம் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
கார்த்திக் தான் முதலில் வந்தான். வந்தவன் அங்கு வாழ்க்கையே தொலைந்து விட்டதைப் போல் இடிந்து போய் அமர்ந்திருந்த ஹரியின் தோற்றத்தைக் கண்டு பதறியவன் ,அவனின் தோளைத் தொட,
மெல்ல நிமிர்ந்திருந்த ஹரியின் கண்கள் ரத்தமெனச் சிவந்திருந்தது.
அவன் தோளை ஆதரவாக பற்றியிருந்த கார்த்திக் ,”ஹரி கவலைப்படாத… ஸ்ரீ எங்கேயும் போயிருக்க மாட்டா.. நீயே இப்படி சோர்ந்து போனா எப்படி.. வா முதல்ல எழுந்திரி வீட்டுக்கு போலாம்” எனக் கூறிக்கொண்டு அவனை அழைத்து வீட்டிற்க்குள் வருவதறக்குள்ளேயே ஸ்ரீயின் மொபைலை ட்ராக் பண்ண அசிஸ்டன்ட்டிடம் சொல்லிவிட்டே வீட்டினுள் நுழைந்தனர்.
அங்கே இவர்கள் முகத்தைக் கண்டே ஏதோ சரியில்லை என உணர்ந்த வீட்டினர் கேள்விகளால் தோண்டித் துருவ, ஹரி மிகவும் உடைந்து போய்விட்டான்.
கார்த்திக் அவன் மனநிலையை அறிந்து ,”ஹரி நீ போய் அவ வாட்ச் இங்க இருக்கான்னு பாரு.. அவ வாட்ச்ல GPS tracker இருக்கு..சப்போஸ் அவ கட்டிட்டு போய்ருந்தா ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்” என ஹரிக்கு வேலை கொடுத்து அவன் மனதை மாற்ற ஹரிக்கும் லேசாக நம்பிக்கை வர, வேகமாக தங்கள் அறைக்குள் நுழைந்தான்.
அவன் போவதையும் இவர்கள் முகத்தையும் கண்ட பாட்டி ,”டேய் உருப்படாதவனே எங்கடா என் பேத்தி இங்க என்ன தான் நடக்குது” என கார்த்திக்கிடம் காய,
“உன்னை அப்பறம் கவனிச்சுக்கிறேன் கிழவி” என மனதிற்குள் கருவிக் கொண்டவன் கண்கள் தன் மனைவியைத் துலாவியது.
தங்கள் அறைக்குள் வந்த ஹரிக்கு ஸ்ரீயின் வாசம் வந்து முகத்தில் அரைய,ஹரி தொய்ந்து போய்விட்டான்.
அறை முழுவதும் அவள் இருப்பது போல் தோன்ற, அவனுக்கு ஓவென்று கதற வேண்டும் போல் இருந்தது.
கடைசியாக அவள் குடுத்துவிட்டுப் போன முத்தத்தின் ஈரமும் , அவள் கூறிய ஐ லவ் யூ ஹரியும் அவன் காதில் எதிரொலித்துக் கொண்டது.
அந்த ஈரம் இன்னும் கன்னத்தில் மிச்சம் இருப்பதைப் போல் இருந்த கன்னத்தைத் தடவியவன் கன்னத்தில் அவன் கண்களில் இருந்து வழிந்த ஈரம் அவன் கைகளை நனைத்தது.
இந்த அரைமணி நேரம் கூட அவனால் அவளைத் தொலைத்துவிட்டு வாழ முடியாது எனப் புரிய, அவள் மேல் இருந்த கோபமனைத்தும் காற்றில் கரைந்து போய் விட, அவன் மனதில் இருந்தது காதல் காதல் காதல் மட்டுமே…
ஸ்ரீ ஸ்ரீ என உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் அவளைத் தேட, தன் காதலின் ஆழத்தை அந்த நொடி உணர்ந்தவன் , அவளில்லாமல் தான் ஒரு நடை பிணம் என புரிந்து கொண்டான்.
“உன்னை கண்டிப்பா விட மாட்டேன் லட்டு” என தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டவன் அடுத்த நிமிடம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு , கார்த்திக் சொன்ன அவளின் வாட்ச்சை தேட ஆரம்பித்தான்.
ரூம் முழுக்க தேடியவன் கடைசியாக அவளது கப்போர்டை திறந்து எல்லா இடத்தையும் ஒன்று விடாமல் தேட அப்போது அவனின் கைபட்டு அங்கிருந்த அவளின் உடைக்குள் ஒருந்து ஒரு டைரி தவறி கீழே விழுந்தது.
இதென்ன என அவன் எடுத்துப் பார்க்க, முதல் பக்கமே ஹரியின் படத்தை ஒட்டி வைத்து அதன் கீழ் “ஆல்வேஸ் மைன்” என எழுதியிருக்க, ஹரி கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்ச்சிகள் அவன் கட்டுப்பட்டை மீறி வெளியே வர , சரியாக அதே சமயம் ஹாலில் ஏதோ பெரிய கலவரம் நடப்பதைப் போல் சப்தம் கேட்டது.
சரி இதை பின்பு படித்துக் கொள்ளலாம் என டைரியை மூடி தன் கப்போர்டில் பத்திரமாக வைத்தவன் வெளியே வர , அங்கு பாட்டி தான் கார்த்திக்கிடமும் வர்ஷூவிடமும் மாறி மாறி கேளிவிக் கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தார்.
ஹரி சொன்னதும் அறக்க பறக்க ஓடி வந்த விஜய்க்கு, வர்ஷூவின் கதை தெரியுமாதலால் அவளையும் சேர்த்து தான் கடத்தி விட்டார்கள் என நினைத்து வந்தவன் தன் கண்முன் முழுதாக வந்து நின்ற வர்ஷூவை நம்ப முடியாமல் பார்த்தவன் அதிர்ச்சியில் ,” உன்னை விட்டுட்டு ஸ்ரீயை மட்டும் எதுக்கு கடத்திட்டு போனாங்க..நியாயமா உன்னை தான கடத்திருக்கனும்” என வாயை விட,
அங்கு வந்த பாட்டிக்கும் அவர் பின்னால் வந்த கார்த்திக்கின் காதிலும் அவன் கூறியது தெள்ளித் தெளிவாக விழுந்தது.
அவரோ ஏற்கனவே தன் பேத்தியைக் காணவில்லை என படபடப்பில் இருந்தவர், இவன் வேறு இவ்வாறு கூறவும் அனைவரையும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்.
“என்ன தான் நடக்குது இங்க!!! வர்ஷூவை எதுக்கு கடத்தனும் .. ஸ்ரீயை யாரு கடத்துனா??? நீங்கெல்லாம் எங்க கிட்ட இருந்து என்ன மறைக்கிறீங்க இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா ?? எனக்கு இப்போ எல்லாமே தெரிஞ்சாகனும்” என பாட்டி உச்சாஸ்ததியில் கத்த,
இதற்கு மேலும் உண்மையை மறைப்பது நல்லதல்ல என நினைத்த கார்த்திக் விஜய்யை முறைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் , தான் வர்ஷூவின் சந்தித்ததிலிருந்து அவர்களின் கல்யாணம் வரை நடந்த கதையை சொல்லத் தொடங்கினான்..
***
“கார்த்திக் இன்னைக்கு ஸ்ரீக்கு ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சு நைட் ஏழு மணிக்கு தான் வருவா டா ..டிரைவர் அண்ணா இன்னைக்கு லீவ் சோ நீ போய் கூட்டிட்டு வந்திரு” என பத்மினி தன் மகனுக்கு கட்டளையிட்டுவிட்டு அவன் மறுத்துக் கூறும் முன் உள்ளே சென்றுவிட,
“ச்சை இதுங்களுக்கு டிரைவர் வேலை பார்த்தே என் பொலைப்பு ஓடுதே இந்த அத்தை பெத்ததும் தான் பெத்தாங்களே ரெண்டு பொம்பளை பிள்ளையை பெத்து எனக்கு ஒன்னு ஹரிக்கு ஒன்னுன்னு சரியா பங்குபோட்டு தராம, ஹரிக்கு மட்டும் ஜோடி சேர்த்து விட்டுட்டு எனக்கு மட்டும் இந்த அரைவேக்காடு அஷ்வினை தலைல கட்டிட்டாங்க” என புலம்பிக் கொண்டே காருக்குச் சென்றான் கார்த்திக்.
கார்த்திக் என்னதான் விளையாட்டுப் பிள்ளையாய் இருந்தாலும் குறும்போடு சேர்த்து மூளையையும் அவனுக்கு அதிகமாக படைத்துவிட்டார் கடவுள். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர்ந்த புதிதிலேயே அவனுக்கு சைபர், க்ரிப்டோகிராபி போன்ற பாடப் பிரிவின் மீதிருந்த மோகம் அதிகமாக, அவன் துப்பறிதல் தான் தனக்கு தகுந்த துறை என அப்போதே தீர்மானித்து விட்டான். இந்தியாவில் மற்ற நாடுகள் போல் இதற்குத் தனியாக எதுவும் கல்லூரிகள் மற்றும் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்த லீகலாக பெரும்பாலும் எந்த பிரச்சனையும் வருவதில்லை. இந்தோர் மற்றும் டெல்லியில் மட்டும் உள்ள கல்லூரிகளில் துப்பறிதல் பற்றி படிப்புகள் உண்டு.
இதற்குத் தேவையான தகுதிகள், குறைந்தபட்ச டிகிரி, எதிகல் ஹேக்கிங்க்(ethical hacking) பற்றிய அறிவு, சட்ட திட்டங்கள் என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருத்தல், மற்றும் அன்றாட வாழ்வில் நடக்கும் செய்திகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட மனோதிடமும், உடல் பலமும் மிகவும் அவசியம்.
கார்த்திக் இது தான் தன் துறை என்று தேர்வு செய்ததுமே, படித்துக் கொண்டிருக்கும் போதே தங்கள் குடும்ப லாயரிடம் உதவிக்கு அனுப்பி சட்ட திட்டங்களை பயிற்று வித்தார் அவனின் தாத்தா. ஹேக்கிங்க் எல்லாம் அவனுக்கு முன்பே சர்வ சாதரணமாக வரும் கைவந்த கலையானதால் அதில் ஏதும் பிரச்சனை இல்லை. அடுத்து ஹரியும் அவனும் ஜிம்மிற்கு சென்று உடலை வளர்க்கிறேன் என காமெடி செய்தது தனிக்கதை.
இப்போது கல்லூரி முடிந்ததும் ஓரளவு அனைத்து தகுதிகளையும் பெற்று விட்டு அதை செயல்படுத்தும் விதமாக மும்பையில் உள்ள பிரபலமான டிடெக்டிவ் ஏஜென்சியில் டிரையினிங் எடுத்துக் கொண்டிருக்கிறான். மாதம் சில நாள் இங்கு வந்து செல்பவன், இப்போது ஒரு கேஸ் இவர்கள் ஊர்ப்பக்கம் நடப்பதால் அதை துப்பறிய ஒரு மாத காலமாக இங்கு தான் தங்கியிருக்கிறான்.
ஹரி குடும்பத்தை பிரிந்திருக்க முடியாமல்(?) கோயம்புத்தூரிலே எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்த சமயம் அது.இதுபோன்ற சமயங்களில் டிரைவர் வேலை பார்க்கும் ஹரிக்கு அன்று கல்லூரியில் கல்ச்சுரல்ஸ் என்பதால் தான் கார்த்திக்கை அனுப்பி வைத்திருந்தார் அவனின் அன்னை.
கார்த்திக் வந்து அரை மணி நேரம் ஆகியும் ஸ்ரீ வெளியில் வராததால் உச்சக்கட்ட கடுப்பில் காருக்குள் அமர்ந்திருந்தான் கார்த்திக்.
அவன் உள்ளே செல்லாததற்கு முக்கிய காரணம் அங்கிருந்த அனைவரும் இவன் மேல் கொலை காண்டில் இன்னும் சுற்றிக் கொண்டு இருந்த்தே.. கார்த்திக்கும் அந்த பள்ளியின் முன்னால் மாணவன் தான், ஆனால் நம் முன்னோர்களின்(குரங்கின்) மறு உருவமாக அவன் திகழ்ந்ததே அங்கிருந்தோரின் கோபத்திற்குக் காரணம்.
எப்போதும் எதையாவது வம்பிழுத்து பல்லே முழைக்காத கேஜி குழந்தைகள் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என அனைவரிடமும் வம்பு வளர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பேராவது அவன் மீது குற்றம் சாட்டாமல் இருந்ததாக அந்த பள்ளி சரித்திரத்தில் இல்லை.
மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள், அங்கு வேலை செய்யும் பெண்கள், வாட்ச் மேன், முதற்கொண்டு அங்கு பள்ளியை கண்காணிக்க வரும் DEO வரை அனைவரிடமும் அடிவாங்கிய பெருமை கார்த்திக்கையே சாரும்.
அவன் இவ்வளவு குறும்பு செய்தும் அவனை பள்ளியிலிருந்து துரத்தாமல் இருக்க ஒரே காரணம் அவனின் அறிவு. என்ன சேட்டை செய்து படிக்காமல் சுத்தினாலும் கடைசியில் முதல் ரேங்க் வாங்கி விடும் அவனைக் கண்டு முட்டி முட்டி படிக்கும் பெண்களின் பொறாமையில் அவன் பொசுங்கிப் போகாதது அதிசயம் தான்.
இவர்கள் இப்போதைக்கு வரப்போவதில்லை என உணர்ந்தவன் மியூசிக் ப்ளேயரை ஆன் செய்து விட்டு சீட்டில் சாய்ந்து கொண்டான்.
“ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே ”
என்ற பாட்டு ஒலிக்க, கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் காதில் அப்போது கார் திறக்கும் சப்தம் கேட்க, ஸ்ரீ தான் வந்துவிட்டாள் என கடுப்புடன் அவளைத் திட்ட திரும்பினான்,
ஆனால் அங்கோ இருட்டில் வெள்ளை வெளேரென்ற தேகத்துடன், தலை எல்லாம் கலைந்து ஈஈ என அவனைப் பார்த்து இழித்துக் கொண்டிருந்தாள் வர்ஷூ.
“அம்மேஏஏ!!!!!” என பயத்தில் அவன் உண்மையிலே கத்தி விட, “ஷ் ஷ்!!! கத்தாதீங்க” என அவள் மெதுவாக கூற, நம்ம கார்ல ஒய்யாரமா ஏறி உட்கார்ந்துகிட்டு நம்மளையே வேற வாயை மூட சொல்லுது என நினைத்த கார்த்திக்,
“ஓய் யார் மா என் கார்ல உட்கார்ந்ததும் இல்லாம இந்த இருட்டுல மோகினி பிசாசு மாதிரி சிரிச்சு மனுஷனை பயமுறுத்துற” என அவன் கேட்க,
அவன் மோகினி பிசாசு என்று சொன்னதில் அவளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட ,” நீ தான் டா முள்ளம் பன்றி தலையா” என திட்டினாள்.
நிஜமாவே அப்படி தான் இருக்கோ என அவன் தலையைத் தொட்டுப் பார்க்க, அவளுக்கு கோபம் மறைந்து மீண்டும் சிரிப்பு வந்தது.
“இந்தாமா நீ என்ன வேணும்னாலும் பண்ணு ஆனா தயவு செய்து சிரிக்க மட்டும் செய்யாத.. ஆத்தா உன் சிரிப்புக்கு சின்ன கவுண்டர் மனோரமா சிரிக்கிறதே பரவாயில்லை” என அவன் அவளை கிண்டல் செய்ய,
“சீ போ” என அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அப்போது மீண்டும் “”ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னைத் தேடியே” என்ற வரிகளே காற்றில் மிதந்து வர,
“க்கும் தேவதை எங்க வந்துச்சு தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு லேடி கெட்டப் போட்ட மாதிரி மோகினி பிசாசு தான் வந்திருக்கு” என முனுமுனுத்தவன்
“இப்போ நீ யார்ன்னு சொல்ல போறியா இல்லை வண்டியை அப்படியே போலிஸ் ஸ்டேஷனுக்கு விடவா” என அவன் கடுமையாக கேட்பது போல் நடிக்க,
அவளோ உண்மையில் பயந்து விட்டாள். ஸ்ரீயை ஏமாற்றுவதற்காக முன்பே வகுப்பிலிருந்து ஓடி வந்தவள் ஸ்ரீயைக் தினமும் கூட்டிச் செல்லும் கார் நிற்கவும் அதில் ஒளிந்து கொள்ளலாம் என்றே ஏறினாள்.
உள்ளே எப்போதும் இருக்கும் டிரைவர் இல்லாமல் இன்னொருவன் இருக்க, ஸ்ரீ அவள் குடும்ப புகைப்படத்தை காட்டியிருந்ததால் அவன் கார்த்திக் என்பதை கண்டுகொண்டவள் பயப்படாமலே அவனுடன் பதிலுக்கு பதில் பேச, இப்போது போலீஸ் என்றதும் உண்மையாகவே இவன் வேறு யாரோ போல என நினைத்து பயந்தவள் காரிலிருந்து இறங்க போக,
அவள் கையைப் பிடித்தவன் ,”எங்க போற, இவ்ளோ நேரம் என் காருல இருந்த ஏசியை என்ஜாய் பண்ணிட்டு, என் கார்ல ஓடுன பாட்டை காதுல கேட்டுட்டு, இதுல சிரிச்சு என்னை பயமுறுத்துனதும் இல்லாம என்னை முள்ளம்பன்றி தலையான்னு வேற அவமானப்படுத்துக்கெல்லாம் சேர்த்து ஒரு ஐநூறு ரூபாய் அபராதம் கட்டிட்டு இங்கிருந்து வெளிய போ..இல்லைனா போலிஸ் ஸ்டேஷன் தான்” என எப்போதும் போல் அவன் அவளிடமும் வம்பு வளர்க்க,
அவனின் மிரட்டலை உண்மை என நம்பியவள் பயத்தில் லேசாக அழுகை எட்டிப்பார்க்க, தன்னுடைய பையிலிருந்து ஐடி கார்டை எடுத்தவள் அதற்கு அடியில் வைத்திருந்த நூறு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டி ,” என் கிட்ட சத்தியமா இவ்ளோ தான் இருக்கு..மிச்சத்தை ஸ்ரீ கிட்ட கொடுத்துடுறேன் என்ன விட்ரு” என அழுக,
அவன் ஸ்ரீ என்று சொன்னதுமே ,”கிழிஞ்சது கிருஷ்ணகிரி” என நினைத்துக் கொண்டு அவள் பணத்தோடு சேர்த்து ஐடி கார்டையும் பிடுங்கிக் கொண்டு ,”நான் வரப்போலாம் நூறு நூறு ரூபாயா வந்து என் கிட்ட கொடுத்துட்டு ஐடி கார்டை வாங்கிக்கோ இப்போ கிளம்பு ” என சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற,
“ஐடி கார்ட் இல்லைனா ஸ்கூல்ல விட மாட்டாங்க..ப்ளீஸ் அதை கொடுத்துறேன்” என வர்ஷூ கெஞ்சினாள். ஆனால் அவனோ ,”அப்போ போலிஸ் ஸ்டேஷன் போக வேண்டி தான்” என காரை கிளப்ப போக, பயத்தில் வேக வேகமாக காரை விட்டு இறங்கியவள் அவன் சுதாரிக்கும் முன் டேஷ்போர்டில் வைத்திருந்த அவனின் கூலிங்க் க்ளாஸை எடுத்துக் கொண்டு “போடா போடா தகர டப்பா தலையா” என திட்டி விட்டு ஓடியிருந்தாள்.
சரியான கேப்மாரியா இருக்கும் போல என நினைத்தவனின் இதழ் ஓரம் சிரிப்பு தோன்ற அந்த ஐடி கார்டில் அவள் புகைப்படத்திற்கு கீழ் இருந்த V.Priyavarshini என்ற பெயரை தன் மனதிற்குள் கூறிக் கொண்டு அதை தன் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் ஸ்ரீயும் வந்துவிட, வர்ஷூவை மறந்தவன் ஸ்ரீயிடம் சண்டையிட்டுக் கொண்டே வீட்டிற்கு வர, அதன் பின் ஹரியும் வந்துவிட மொத்தமாக வர்ஷூவை சந்தித்ததையே மறந்துவிட்டான்.
இரவு படுப்பதற்கு முன் குளிக்கப் போக, அப்போது தான் அவன் பாக்கெட்டிலிருந்த வர்ஷூவின் ஐடி கார்ட் அவன் கைகளில் சிக்கி அவள் முகத்தை மீண்டும் நினைவு படுத்த, அவன் உதட்டில் ஒரு புன்முறுவல் தோன்றியது ,”சரியான கேடி என் புது கூலிங் கிளாஸை ஆட்டையை போட்டுட்டா” என செல்லமாக திட்டிக் கொண்டவனுக்கு தெரியவில்லை அந்த திருடி பின்னாளில் அவன் இதயத்தையே திருடப்போவதை.
அதன் பின் கார்த்திக் மும்பை சென்று விட, வர்ஷூ அவன் நினைவுகளிலிருந்து மறைந்திருந்தாலும் எங்காவது ரேபான் கூலிங்க் க்ளாஸ் அதுவும் இவன் வாங்கிய மாடலில் அணிந்திருப்பவர்களை காணும் போது மட்டும் அவளின் நியாபகம் அவன் மனதில் மழைச்சாரலாய் தூவிச் செல்லும்.
வருடங்கள் இப்படியே உருண்டோட, இரண்டு வருடங்கள் ட்ரைய்னிங்கை முடித்து விட்டு தனியாக டிடெக்டிவ் ஏஜென்சி தொடங்குமளவு தன்னை தயார்படுத்திக் கொண்டவன் மும்பையிலிருந்து மொத்தமாக தன் பிறந்த மண்ணிற்கு வந்து சேர்ந்தான்.

