
அத்தியாயம் 21
மென்மொழி அகரனின் மனைவியான நிவேதிதாவிற்கு அழைத்தபடி மற்றவர்களிடமிருந்து தள்ளிச் சென்றாள்.
சில நிமிடங்கள் கடந்த பின்னரே அழைப்பு ஏற்கப்பட்டது.
பரஸ்பர நலவிசாரிப்புகள் முடிந்த பின்னர், “அண்ணி, அங்க எல்லாம் ஓகேதான?” என்று மென்மொழி வினவ, அவளின் கேள்வி எதற்கென்று அறிந்ததைப் போல, “ஏன் உங்க அம்மா கால் பண்ணாங்களா மொழி?” என்று வினவிய நிவேதிதாவின் குரலில் இருந்தது கேலியா விரக்தியா என்பதைப் பிரித்தறிய முடியவில்லை மென்மொழியால்.
சின்னவளின் அமைதியே பதிலைச் சொல்லியிருக்க, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மொழி. வர வர அத்தையோட பேச்செல்லாம் சகிச்சுக்க முடியல. முன்னாடியாவது உன் அண்ணானோட சப்போர்ட் இருந்துச்சு. இப்போ கொஞ்ச மாசமா அவருக்கு என்னாச்சுன்னு தெரியல. எப்போ பார்த்தாலும் வேலை இருக்குன்னு சொல்லிட்டு வீட்டுலயே இருக்குறது இல்ல. எப்பவும் முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்காரு. என்னாச்சுன்னும் சொல்ல மாட்டிங்குறாரு. இவரைத்தான் அடம்பிடிச்சு கல்யாணம் செஞ்சேனான்னு இருக்கு. அந்தளவு ஆளே மாறியிருக்காரு இந்த சில மாசத்துல!” என்று புலம்பினாள் நிவேதிதா.
அவள் கூறிய மாதக்கணக்கு இடிக்க, “ஏன் அண்ணி? வேலைல எதுவும் பிரஷரா?” என்று மென்மொழி வினவினாள்.
“அதைச் சொன்னாதான எனக்குத் தெரியும் மொழி! எதுவுமே சொல்றது இல்ல. ஆனா, வேலைலதான் ஏதோ டென்ஷன்னு தோணுது. அதுவும் சில மாசத்துக்கு முன்னாடி, அந்த ரத்தோரோட பிரிஸம் டவர்ஸுக்கு போயிட்டு வந்ததுல இருந்துதான், ஒரு மாதிரி சுத்திட்டு இருக்காரு.” என்றாள் நிவேதிதா.
“பிரிஸம் டவர்ஸ்?” என்று மென்மொழி கேள்வியாக நிறுத்த, “ஆமா, அந்த இடத்தைப் பத்தியும், அதோட ஓனரான ரத்தோரைப் பத்தியும் யாரும் நல்ல விதமா சொல்றது இல்ல மொழி. ஏதோ சீக்ரெட் ஆர்கனைசேஷன்னு சொல்றாங்க… சீக்ரெட்டான பல விஷயங்கள் அங்க நடக்குதுன்னு சொல்றாங்க. அதைப் பத்தி இன்வெஸ்டிகேட் பண்ண போன சிலரைக் கொன்னுட்டதா கூட நியூஸ் இருக்கு. அந்த ரத்தோருக்குப் பெரிய இடத்துல சப்போர்ட் இருக்குறதால, யாராலயும் எதுவும் செய்ய முடியலன்னு சொல்றாங்க. இதெல்லாம் உண்மையா பொய்யான்னு வேற தெரியல. இதுல உன் அண்ணனுக்கு அங்க என்ன வேலைன்னு கேட்டதுக்குத்தான், அன்னைக்கு எரிஞ்சு விழுந்தாரு. இப்போ எல்லாம் அவரு கிட்ட பேசவே பயமா இருக்கு… பேச என்ன, பார்க்கவே பயமாதான் இருக்கு!” என்று புலம்பிய நிவேதிதாவிடம் சமாதானம் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மென்மொழி.
நிவேதிதா கூறிய ‘பிரிஸம் டவர்ஸ்’ பற்றி சிந்தித்தபடியே மற்றவர்களை நெருங்கும் சமயம்தான், யுகேந்திரன் பிரேம் ரத்தோரைப் பற்றிக் கூறியிருக்க, இரண்டு தகவலில் இருந்த பெயர் ஒற்றுமையைப் பார்த்த மென்மொழியின் மனம் அடித்துக் கூறியது, அந்தப் பிரேம் ரத்தோருக்கும் பிரிஸம் டவர்ஸுக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருக்கும் என்று.
அதனாலேயே, அந்தப் பிரேம் ரத்தோர் டெல்லியில் இருக்கலாம் என்று கூறினாள் மென்மொழி.
அத்துடன் நிவேதிதாவுடனான உரையாடலையும் அவள் கூறியிருக்க, மற்றவர்களும் மென்மொழியின் யூகத்தை நம்ப ஆரம்பித்தனர்.
“மொழி, உங்க அண்ணன் என்ன ஒர்க் பண்றாரு? அவருக்கும் ரத்தோருக்கும் எப்படி கனெக்ஷன் உண்டாகி இருக்கும்?” என்று யுகேந்திரன் வினவ, “அகரன் ஒரு எத்திக்கல் ஹேக்கர், ஹை-என்ட் செக்யூரிட்டி கன்சல்டன்ட். முதல்ல ஃப்ரீலான்சரா ஆரம்பிச்சவன், இப்போ அவனோட இன்னும் ரெண்டு மூணு பேரை சேர்த்து ஒர்க் பணறான்.” என்ற மென்மொழி, யுகேந்திரனின் அடுத்தக் கேள்விக்கான பதிலை யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதே சமயம், ‘பிரிஸம் டவர்ஸ்’ பற்றி இணையத்தில் தேடிய இன்பசேகரனோ, “ஐடி கம்பெனியா! ஆர்க்கியாலஜில இருந்து ரிட்டயர்ட்டானவருக்கும் ஐடி கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவினான்.
“க்கும், ஐடி கம்பெனில வேலை பார்க்குறவனுங்க எல்லாம் சம்பந்தம் இருந்தா வேலை பார்க்குறானுங்க? ஐடிங்கிறது சும்மா ஷோக்காக இருக்கலாம். உள்ள வேற ஏதோ பண்றானுங்க.” என்றாள் சுடரொளி.
“அகரன் ஃப்ரீலான்சர். சோ, ஏதாவது செக்யூரிட்டி பர்பஸுக்குக் கூட அவனை கான்டேக்ட் பண்ணியிருக்கலாம்.” என்ற கருத்தைப் பகிர்ந்தாள் யாழ்மொழி.
“அகரனுக்கு ரத்தோர் கூட கான்டேக்ட் ஏற்பட்டு பல மாசமாகியிருக்கு. இப்போவரை, அவங்க சீக்ரெட் மெயின்டெயின் பண்ணியிருக்க முடியுமா?” என்று மென்மொழி வினவ, “இருக்கலாம்… ரத்தோர் எதுக்கு அகரனை செலக்ட் பண்ணாருங்கிறதைப் பொறுத்துதான் இதுக்கான பதில் இருக்கு. அகரனுக்கும் உங்களுக்கும்… அதாவது அகரனுக்கும் உங்க தாத்தாக்கும் இருக்க கனெக்ஷன் தெரிஞ்சதால வேலைக்கு எடுத்தாரா இல்ல வேலைக்கு எடுத்ததுக்கு அப்புறம் அதைத் தெரிஞ்சுகிட்டு தாத்தா வீட்டுக்கு அனுப்பி வச்சாரான்னு நமக்குத் தெரியல. இதுல, இன்னொரு பாசிபிலிட்டியும் இருக்கு… ஒருவேளை, அகரன் கருப்புக் கல்லை எடுத்தது பியூர் ஆக்சிடெண்ட்டா இருக்கலாம்.” என்று அவனது யூகங்களை அடுக்கினான் யுகேந்திரன்.
அதுவரை ஏதோ தீவிர யோசனையில் இருந்த மதுசூதனனை உசுப்பிய சுடரொளி, என்னவென்று வினவ, “இப்போ அகரன் இருக்கிறதா சொல்றது மும்பைல… அப்போ உங்களை அட்டாக் பண்ணது யாரு? ஒண்ணு அகரன் மும்பை போறதா பொய் சொல்லி இங்க வந்து உங்களை அட்டாக் பண்ணி இருக்கணும். இல்லன்னா, நாம தேடிட்டு இருக்க வில்லன், அகரன் கிட்டயிருந்த கருப்புக் கல்லை பறிச்சு, அவரைக் கஸ்டடில வச்சுருக்கணும்.” என்றான்.
“இப்போ நம்மளோட அடுத்த பிளான் என்ன? டெல்லியா மும்பையா?” என்று யாழ்மொழி வினவ, “மும்பைல அகரன் எங்க இருக்காருன்னு இதுவரை நமக்குத் தெரியாதுல.” என்றான் இன்பசேகரன்.
அதைக் கேட்ட சுடரொளியோ, “போலீஸ்கார், அகரனோட நம்பரை வச்சு லொக்கேஷன் டிரேஸ் பண்ண முடியும்ல?” என்று வினவ, “அதுக்கெல்லாம் நிறைய ப்ரோசீஜர் இருக்கு. அதுவும் இது வேற ஸ்டேட் வேற! சாதாரணமா எல்லாம் லொக்கேஷன் டிராக் பண்ண கேட்க முடியாது. ஏற்கனவே, ஒருமுறை போலீஸ் பேட்ச் யூஸ் பண்ணி மாட்டியாச்சு. ஏதோ அடிப்பட்டிருக்குன்னு சொன்னதால வார்னிங்கோட விட்டுட்டாங்க.” என்று தோளைக் குலுக்கினான் யுகேந்திரன்.
“இதை மறந்தே போயிட்டேன். இன்னைக்கு நாம போன மூணு இடத்துலயும் ரெண்டு பெரிய சம்பவம் நடந்துருக்கு. ஆனா, அதைப் பத்தின நியூஸ் எதுவுமே வெளிய வரல!” என்றாள் யாழ்மொழி.
“ஹ்ம்ம், இதுவே சொல்லுது இதுக்குப் பின்னாடி பெரிய ஆட்கள் இருக்காங்கன்னு. என்னதான் நம்ம கிட்ட பவர்ஸ் இருந்தாலும், நாம இன்னும் எச்சரிக்கையாதான் இருக்கணும்.” என்றான் யுகேந்திரன்.
அப்போது திடீரென்று, “அடச்சே, இதை எப்படி மறந்தேன்?” என்று கத்திய சுடரொளி, மற்றவர்களை நோக்கி, “அகரனை டிரேஸ் பண்ண பெரிய ப்ரோசீஜர் எல்லாம் தேவையில்ல.” என்றாள் சிரிப்புடன்.
அனைவரும் அவளை நோக்க, “நம்ம கிட்ட பவரை சென்ஸ் பண்ற நடமாடும் ஜிபிஎஸ் இருக்கே!” என்ற சுடரொளி மதுசூதனனைக் காட்டினாள்.
“இவளுக்கு இதே வேலையா போச்சு!” என்று முணுமுணுத்த இன்பசேகரன், பரிதாபமாக அங்கு அமர்ந்திருந்த மதுசூதனனிடம் சென்று, “கங்கிராட்ஸ் ப்ரோ!” என்றான்.
*****
மும்பை…
நகரை விட்டு சற்றுத் தள்ளியிருந்த இடம் அது. பகல் நேரத்திலேயே ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கும் இடம், அந்தக் கும்மிருட்டில் இரவு நேர பூச்சிகளின் இருப்பிடமாக இருந்தது.
அந்த இடத்தில் அழையா விருந்தாளியாக வந்திருந்தான் அகரன்!
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன், தரையோடு தரையாக ஒட்டியிருந்த ரகசியக் கதவைத் திறந்தான். அதன் முகப்பில், பட்டகம் (பிரிஸம்) போன்றதொரு சின்னம் இருந்தது.
அந்த ரகசிய இடத்திற்குள் சென்ற அகரன் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது அலைபேசி ஒலிக்க, அலட்சியப் பார்வையில் அதைக் கண்டவன், அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அவனது வேலையைத் தொடர்ந்தான்.
“அகரன், என்ன பண்ணிட்டு இருக்க? நீ எதுக்கு மும்பை போன? அங்க உனக்கு என்ன வேலை?” என்று மறுமுனையில் ஒரு குரல் படபடப்புடன் ஹிந்தியில் வினவியது.
அதற்கு அகரனோ அதே அலட்சியப் பாவனையில், “நீங்க சொன்ன வேலையை முடிச்சுட்டேன். இப்போ பெர்சனல் வேலைக்காக இங்க வந்துருக்கேன்.” என்றான்.
“அகரன் நீ செய்றது எதுவும் சரியா படல. அங்க நீ செஞ்ச வேலையை மறைக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அதுக்கு ஒரு எக்ஸ்ப்ளனேஷன் கூட குடுக்கல. நீ பாட்டுக்கு மும்பைக்கு போயிட்ட.” என்று மறுமுனையில் இருந்தவர் கோபத்தில் கொந்தளிக்க, அகரனோ தேடி வந்தது கிடைத்த வெற்றியில் இதழ்களை விரித்து சிரித்தபடி, “எக்ஸ்ப்ளனேஷன்தான? நேர்ல பார்த்து தெளிவா குடுத்துடுறேன் சார்.” என்றான் குதர்க்கமாக.
*****
மென்மொழியின் வீட்டில்…
மதுசூதனன் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவனிற்கு எதிரே மேஜையில் இந்திய வரைபடம் வைக்கப்பட்டிருந்தது.
அவனோ அந்த வரைப்படத்தையும் அருகே அமர்ந்திருந்த சுடரொளியையும் ஒரு பார்வை பார்த்தான்.
“ஹ்ம்ம், சீக்கிரம் உங்க பவரை யூஸ் பண்ணி அகரனோட லொக்கேஷனை கண்டுபிடிங்க.” என்று அவள் கூற, அவளின் தலையில் தட்டிய மென்மொழியோ, “அவரென்ன விட்ச்கிராஃப்ட்டா பண்ணிட்டு இருக்காரு? எதுக்குடி மேப் எல்லாம் வச்சிருக்க?” என்றாள் மென்மொழி.
“க்கும், எத்தனை சீரிஸ்ல பார்த்துருக்கேன்… லொக்கேஷனைக் கண்டுபிடிக்கணும்னா, இப்படி மேப் வச்சு அதுல பிளட் விட்டு…” என்று சுடரொளி அடுக்கிக் கொண்டே போக, “மொழி, உன் ஃபிரெண்டை தயவு செஞ்சு அந்தப் பக்கம் கூட்டிட்டுப் போயிடுங்க.” என்ற மதுசூதனன் கண்களை மூடி கிரகிக்க முயன்றான்.
“ம்ச், அவரை டிஸ்டர்ப் பண்ணாம இருடி.” என்று சுடரொளியை மிரட்டிவிட்டே அங்கிருந்து நகர்ந்தாள் மென்மொழி.
சில நிமிடங்கள் கழிந்தும் அவன் கண்களைத் திறக்காமல் இருந்தான். மாறாக, அதிக அளவில் சக்தியை உபயோகித்ததாலோ என்னவோ, அவன் நரம்புகள் புடைத்து கருப்பு நிறத்தில் மாறத் துவங்கின.
அதைக் கண்ட சுடரொளியோ, “மது, போதும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க…” என்று கூற ஆரம்பிக்க, மற்றவர்களும் அங்கு வந்து விட்டனர்.
“இல்ல… அகரனை நெருங்கிட்டேன்னு நினைக்கிறேன்.” என்று மீண்டும் அவன் வேலையைத் தொடர, மற்றவர்களோ படபடப்புடன் இருந்தனர்.
அப்போது, “மொழி, உன்னோட ஹீலிங் மதுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?” என்று இன்பசேகரன் வினவ, அவளோ அவளுக்குக் கிடைத்த புதிய சக்தியின் தாக்கத்தால் தயங்கி நின்றாள்.
அவளின் மனதை உணர்ந்தவனாக, அவளை நெருங்கி கரத்தைப் பற்றிய யுகேந்திரன், “உன்னால உன் சக்தியை கண்ட்ரோல் பண்ண முடியும் மொழி. உன்னை நம்பு.” என்று ஆறுதல் கூற, “எனக்கே தெரியாம ஹர்ட் பண்ணிட்டேன்னா…” என்று தயங்கினாள் மென்மொழி.
‘நான் இருக்கேன்!’ என்பது போல பார்த்தவனின் பார்வையைப் புரிந்தவளாகக் கண்களை இமைத்து சம்மதத்தைத் தெரிவித்த மென்மொழி, மதுசூதனனின் அருகே அமர்ந்து அவனின் கரத்தைப் பற்றினாள்.
அவளின் கரம் பட்டவுடன், மதுசூதனனின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மறைய ஆரம்பித்தன. அவனின் உடல்நிலை சீரானது.
அதன் விளைவாக, சற்று நேரத்திலேயே அகரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான் மதுசூதனன்.
கண்களைத் திறந்த மதுசூதனன் மென்மொழியை ஆச்சரியமாகப் பார்த்தபடி, “தேங்க்ஸ் மொழி. எப்பவும் என் பவரை யூஸ் பண்றப்போ ரொம்ப கஷ்டப்படுவேன். ஆனா, இந்த டைம் ரொம்ப ஈஸியா இருந்துச்சு.” என்று கூற, ஒரு சிரிப்புடன் அதைக் கடந்து விட்டாள் அவள்.
இடம் தெரிந்ததும், இன்பசேகரன் தயாராக இருந்தான்.
அனைவரையும் அங்கு கூட்டிச் செல்வது இன்பசேகரனை மிகுதியான சோர்விற்குத் தள்ளும் என்பதால், மென்மொழியும் யுகேந்திரனும் மட்டுமே அவனுடன் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மூவரும் அகரன் இருப்பதாக மதுசூதனன் கண்டுபிடித்துக் கூறிய இடத்தை நொடியினில் அடைந்தனர்.
அப்போதுதான், அந்த ரகசிய இடத்தை விட்டு வெளியே வந்தான் அகரன்.
திடீரென்று அவன் முன்பே தோன்றிய அந்த மூவரைக் கண்டு ஒருநொடி திகைத்தவன், மறுநொடியே வினோதமாக அவர்களைப் பார்த்துச் சிரித்தான்.
அவனது உடல்மொழியையும் விழிமொழியையும் கண்ட மென்மொழிக்கே வித்தியாசமாகத் தெரிய, அவனை நெருங்கி, “அகரா…” என்று அழைத்தாள்.
“மொழி, நீ இங்க என்ன பண்ற?” என்று சாதாரணமாக வினவிய அகரன், அடுத்த நொடியே, “உன்கிட்ட உனக்குச் சொந்தமில்லாத ஒண்ணு இருக்கு போலயே!” என்று கூறியவன், மற்ற இருவரையும் பார்த்து, “என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டீங்கன்னு நினைச்சேன். இப்படி இன்னைக்கே திரும்ப சந்திப்போம்னு நான் நினைக்கவே இல்ல.” என்று கூறி மர்மமாகச் சிரித்தான்.
அதைக் கேட்ட மற்ற மூவரும் ஒன்றை உறுதி செய்தனர்.
அது, அன்றைய நாளின் துவக்கத்தில் அவர்களைத் தாக்கிய அந்த இருள் உருவம் அகரன் என்பதே!
தொடரும்…
