
அகிலா ஒரு வாரம் தன் பிறந்த வீட்டில் இருந்துவிட்டுத் தங்கள் வீடு நோக்கிச் சென்று விட்டாள்.
நாள்கள் மாதங்களாகச் செல்ல, தமிழுக்கு ஏழாவது மாதம் தொட்டிருக்க, அகிலா நிறை மாதமாக இருந்தாள்.
வீட்டில் உள்ள அனைவரும் என்ன செய்வது என்று பெரியவர்கள் யோசித்துக் கொண்டிருக்க, தனா தான் அனைவரின் முன்பு வந்தவள்,
“தமிழ் அண்ணிக்கு ஒன்பதாவது மாதம் வளைகாப்பு வைத்துக் கொள்ளலாமா? இல்லையென்றால், ஏழாவது மாத இறுதியில் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டாள்.
வீட்டில் உள்ள அனைவரும் தனாவைக் கேள்வியாகப் பார்க்க, “இல்ல, அகிலா அண்ணிக்கு எப்படியும் இன்னும் 10 நாள்கள் தான் இருக்கிறது. அகிலா அண்ணிக்கு நாள் நெருங்கிட்டே வருது. அதனால தான்” என்று விட்டு அமைதியாகி விட்டாள். அகிலா சிரித்த முகமாகத் தனாவின் அருகில் வந்து தனாவின் கையைப் பிடித்தவள்,
“நீ அண்ணியாகச் செய்ய வேண்டியது செய்” என்றாள்.
“இருந்தாலும், உங்களுக்கும் செய்யணும்னு ஆசை இருக்கும் இல்லையா அண்ணி” என்று சொல்ல,
அகிலாவிற்கு லேசாகக் கண்கள் கலங்கத் தனாவின் கையில் அழுத்தம் கொடுத்துக் கொண்டு தனாவைப் பார்க்க,
அகிலாவிற்கு வலி எடுக்க ஆரம்பித்தது. வலியில் கத்த ஆரம்பித்தாள்.
வேகமாக அவளைத் தாங்கிப் பிடித்த தனா “மாமா” என்று அழைக்க,
அருகில் இருந்த சரவணன் தனது தங்கையைத் தாங்கிப் பிடிக்க, இங்குத் தமிழ் தனது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு முழித்தாள்.
ருத்ரன் தமிழைப் பிடித்துக் கொள்ள “ஒன்னும் இல்லடி” என்றான்.
தனது தோழியின் அருகில் தமிழ் வந்து நிற்க,
“ஒன்னும் இல்ல தமிழ்” என்று சிரிக்க முயன்றாள் அகிலா.
வேகமாக அகிலாவை மருத்துவமனை அழைத்துச் செல்ல,
அவளுக்கு இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
முதலில் தனது அண்ணனின் கையில் கொடுக்கச் சொன்னாள்.
தாய் மாமனாகச் சரவணன் தனது தங்கை மகளைப் பூ குவியலாகத் தனது கையில் தாங்கிக் கொண்டான்.
மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டுத் தன் பிறந்த வீட்டிற்கு வந்தாள். அடுத்த ஏழு நாள்களுக்குப் பிறகு குழந்தைக்கு ஏழாம் காப்பிட்டு, ‘முத்தமிழ்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
அதன் பிறகு இரண்டு நாள்கள் கழித்து நல்ல நாள் இருக்கத் தமிழுக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று முடிவு செய்து,
ஏற்கனவே திருமணம் இவர்களுக்குத்தான் என்று முடிவு செய்யாததால் மொத்த ஊரையும் கூப்பிட்டு விமரிசையாக வளைகாப்புச் செய்ய வேண்டும் என்று சரவணன் பெரியவர்களிடம் சொல்லிவிட,
அனைத்தையும் எடுத்துக் கட்டி காயத்ரியும், தனாவும், சரவணனும், அதிரனும் தான் செய்தார்கள்.
அன்று எடுத்த புடவை அவளுக்கானது என்று இருந்தாலும், அதன் பிறகு ஆசையாக வளைகாப்பிற்கு என்று ருத்ரனே தேடிப் பிடித்து புடவை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க,
அதைக் கட்டிக் கொண்டு ஊரார் முன்னிலையில் வந்து உட்கார வைக்க, ருத்ரனையும் அருகில் உட்கார வைத்து நலங்கு வைத்து வளையல் போட்டார்கள்.
அகிலா தனது கைக்குழந்தையுடன் வந்து தனது தோழிக்கு வளையல் போட்டுச் சிரிக்க, தனது மகளைத் தூக்கிக் கொஞ்சிய தமிழ், முத்தமிழின் தாடையை பிடித்துக் கிள்ளிக் கொஞ்ச,
“ஆனாலும் உன் பிரண்டுக்கு ஓவர் குசும்பு தான்” என்று மகி சொல்ல,
“ஏன் மகி?” என்று தமிழ் கேட்க,
“உன் பேர்லயே வைக்கணும்னு ஆசைப்பட்டு தானே ‘முத்தமிழ்’ என்று பெயர் வச்சிருக்கா?” என்று சிரித்தான்.
அங்குப் பெரியவர்களும் உடன் சிரிக்கச் செய்தார்கள்.
பெயர் வைக்கும் போது எப்படிக் கூப்பிடுவது? என்று வீட்டில் உள்ள அனைவரும் கேட்க,
“இந்தப் பேர் வேண்டாம், வேற பேர் வை” என்று சொன்னதற்கு, “இல்ல, இந்தப் பேர் தான் வைப்பேன்” என்று அடம்பிடித்து வைத்தாள் அகிலா.
பெரியவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.
தமிழை வளைகாப்பு முடிந்து பிறந்த வீட்டிருக்கு அழைத்துச் செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க,
ருத்ரன் ஒரே வார்த்தையாகத் “தமிழை நான் எங்கயும் அனுப்ப மாட்டேன்” என்றான்.
பாக்கியம் தான் முறைத்துக் கொண்டு நின்றார்.
“டேய், வளைகாப்பு முடிந்து ரெண்டு நாளாச்சும் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரணும். பொறந்த புள்ள அம்மா வீட்டுல போய் தங்காம எப்படி டா?” என்றார்.
“அத்தையும் மாமாவும் நம்ம வீட்டுல வந்து இருக்கட்டும். அவங்க தனியா தானே இருக்காங்க” என்று ருத்ரன் சொல்ல.
சரவணன் தனது நண்பனின் தோளில் தட்டி, “என் தங்கச்சியை வளைகாப்பு முடிஞ்சு என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு நான் எதுக்குடா உன்கிட்ட கேக்கணும்?” என்று மல்லுக்கு வர,
“மச்சான் விளையாடாதே” என்றான் ருத்ரன்.
“காயத்ரியும், அகிலாவும் சண்டை நடக்குமோ?” என்று வந்து நிற்க,
இருவரது தலையிலும் கொட்டிய தனா, “அவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிட்டு நிக்கிறதப் பார்க்க, அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம்?” என்றாள்.
“அதுல வர சந்தோசமே தனி” என்று இருவரும் சிரிக்க,
இங்கு முத்தமிழ் குட்டி அழ ஆரம்பித்தாள்.
இருவரும் குழந்தை அழுதவுடன், “என் தங்கப் புள்ள” என்று ஆளுக்கு ஒரு பக்கம் குழந்தையை வாங்க வேகமாகக் கை நீட்ட,
வேகமாகவே சிரித்து விட்டாள் தனா.
மொத்தக் குடும்பமும் ஏன் என்று தனாவைப் பார்த்துக் கேட்க,
இங்கு காயத்ரியும், அகிலாவும் ஏதாவது நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டிருந்ததைச் சொல்ல மொத்தக் குடும்பமும் இருவரையும் முறைத்தார்கள்.
இருவரும் குழந்தையை மாற்றி மாற்றிக் கொஞ்சும் நேரத்தில் தனம் தான், “ருத்ரா, தமிழை விட்டு எங்களால் இருக்க முடியாது டா. எங்க கைகுள்ளேயே வச்சுப் பார்த்து கிட்டாலும், எங்க பொண்ணா நாங்க அவளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகுது டா. அவளை இங்க கல்யாணம் பண்ணிக் கொடுத்த நாளிலிருந்து ஒரு நாள் கூட வந்து நம்ம வீட்ல தங்கவில்லை டா” என்று கண்கள் கலங்கச் சொல்ல,
ருத்ரனுக்கு ஒரு மாதிரி ஆகியதால், “அப்போ நானும் வந்து அங்க இருப்பேன், உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்க,
“உன் மாமா வீட்டுக்கு நீ வருவதற்கு எங்களைக் கேட்கணுமா ராசா, வாடா” என்று சொல்ல,
தனது மனைவியுடன் தனது தாய் மாமா வீட்டிற்குச் சென்றான் ருத்ரன்.
நாள்கள் வேகமாகச் சென்று தமிழுக்கு ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் இருக்கும் பொழுது அவள் வீட்டு வேலைகள் ஒன்று விடாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய,
ருத்ரன் கூட “எதுக்குடி இப்படி இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ற?” என்று கேட்க,
“நம்ம வீடு மாமா, அது மட்டும் இல்லாம குனிந்து நிமிர்ந்து கொஞ்சம் வேலை செஞ்சா தான் குழந்தை நார்மலா பிறக்கும். ஆரோக்கியமும் இருக்கும், எனக்கும் பெருசா வலி தெரியாது” என்று சிரித்தாள்.
“எதோ பண்ணு” என்று அவன் அவள் அருகிலேயே இருக்க,
இரவு எட்டு மணிக்குத் தமிழ் சாப்பிட முடியாமல் “நெஞ்சுக் கரிக்குது” என்று சொல்ல,
சீரகத் தண்ணீர் வைத்துக் கொடுத்த தனம் தனது மகளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள,
பாக்கியம் கூட தனது அண்ணன் வீட்டில் வந்து இருந்து கொண்டார்.
அவள் சாப்பிட்டுவிட்டு, நடந்து கொண்டு இருக்க, “ஒரு மாதிரி மூச்சு முட்ற மாதிரி இருக்கு மாமா” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
உடனே ருத்ரன் “கொஞ்ச நேரம் உட்காரு” என்று விட்டு அவளுக்குக் கால் வீங்கியது போல் இருந்தவுடன் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டு இருக்க, வேகமாகக் கத்தச் செய்தாள்.
“இன்னும் தேதி 20 நாள் இருக்கே” என்று பாக்கியம் சொல்ல, தனது தாயை முறைத்தான் ருத்ரன். சரி என்று விட்டு வேகமாக சரவணனுக்கு ஃபோன் செய்து தனம் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனைவரும் ஒன்று கூடி இருந்தார்கள்.
தமிழ் சிறிது நேரம் கழித்துத் திரும்பவும் வலியில் கத்த, இது சூட்டுவலி போல் இல்லை என்பதை உணர்ந்த பெரியவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல,
இரவு 9 மணி போல் மருத்துவமனைக்குச் சென்று விடியற்காலை 4:00 மணி போல் ஆருத்ரன், தமிழ் விழியின் பூமகள் இந்தப் பூமியை வந்தடைந்தாள்.
“பெண் குழந்தை” என்று வந்து சொல்ல, இங்கு அகிலா கைதட்டிச் சிரிக்கச் செய்தாள்.
தனா அகிலாவைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் தனது அண்ணனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அதன் பிறகு குழந்தையைக் கொண்டு வந்து கொடுக்க,
“மாமா கையிலே கொடுங்க” என்று விட்டு சரவணனைப் பார்க்க,
சரவணன் வேகமாகக் குழந்தையை வாங்கிக் கொண்டு குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.
அப்போது, ருத்ரன் தான் “என்ன எப்ப மச்சான், மாமனா ஆக்குற ஐடியா?” என்று கேட்டான்.
தனது மனைவியைப் பார்த்துச் சிரித்த சரோ, “அதுக்கு என்ன மச்சான், ரெடி பண்ணிட்டா போச்சு, இனிமே தான் பிராசஸ்ல இறங்கணும்” என்று சொல்ல,
“எது?” என்று ருத்ரன் முறைக்க,
ருத்ரனைப் பார்த்துச் சிரித்த சரோ, “குழந்தை பிறக்கிறதுக்கான பிராசஸில் சொன்னேன், சரியா?” என்று சிரித்துவிட்டு அந்தப் பக்கம் நகர்ந்து விட்டான்.
மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருந்து விட்டுத் தமிழை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
ருத்ரன் தனது அத்தையைப் பார்த்து நீங்க ரெண்டு பேரும் அங்க வாங்க. இங்க எல்லோரும் வந்து போகக் கஷ்டமா இருக்கும். அங்க என்றால், எல்லாருக்குமே ஈசியா இருக்கும்” என்று சொல்ல,
மற்ற சிறியவர்களும் அதையே சொல்லச் சரி என்று ஒத்துக் கொண்டு செல்வமும் தனமும் தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
குழந்தை பிறந்த 15 வது நாள் ஏழாம் காப்பு இடலாம் என்று தனா சொல்லிவிட,
சரி என்று விட்டு என்ன பெயர் வைக்கலாம் என்று அனைவரும் யோசிக்க,
அப்போது ருத்ரன், “தனா பேரு வைப்பா” என்று ஒரே வார்த்தையாக முடித்து விட்டான்.
தனாவிற்குக் கண்கள் கலங்கத் தனது அண்ணனைப் பார்க்க,
“நீயே வைடா தனுமா” என்று சொல்ல, இங்கு காயத்ரி சிரித்து விட்டாள்.
“எதுக்குடி சில்லுவண்டு சிரிக்கிற?” என்று கேட்க,
“இன்னும் எத்தனைப் பேரு தான் அவளை தனுமானு சொல்றீங்க என்று நானும் பாக்குறேன்” என்று சொல்ல, இங்கு சரோவிற்குப் புரை ஏறியது.
“ஃபர்ஸ்ட் அவளை தனுன்னு கூப்பிட்டது நானு. நானும் பாக்குறேன். அவளோட மாமா கூப்பிட்டாரு பஸ்ட். இப்போ நீ கூப்பிடுற. என் பங்க உரிமையா கூப்பிடுற உரிமை கூட எனக்கு இல்லையா?” என்று முறைத்தாள்.
இருவரையும் இடுப்பில் கையை ஊனிக் கொண்டு முறைத்தாள்.
இருவரும் அவளது இடுப்பில் இருந்த கையை எடுத்துவிட்டு அவளது கையைப் பின் பக்கம் திருப்பி மடக்கக் கத்தினாள், வலியில்.
“ரெண்டு பேரும் விடுங்க அவ கையை” என்று தனா முறைத்துக் கொண்டு நிற்க,
“இதோ வந்துட்டா பாரு, உன் பங்கு சண்டைக்கு” என்று இருவரும் சிரித்தார்கள்.
மொத்தக் குடும்பமும் அவர்களைப் பார்த்துச் சிரித்தது.
“சரி தனா, நீ பேர் சொல்லு” என்று சொல்ல,
தனா சுற்றியுள்ள தன் குடும்பத்தார்களைப் பார்த்து விட்டுத் தனது தோழியைப் பார்க்க,
அவளது தோளில் கையைப் போட்ட காயத்ரி, நீ வை பங்கு. நம்ம பாத்துக்கலாம்” என்று சொல்ல,
“மாயமித்ரா” என்றாள் தனா சுற்றி இருந்த அனைவரும் அவளைப் பார்க்க,
“தெரியல, அந்தப் பேர் தோணுச்சு” என்று சிரித்து விட்டுத் தனது தோழியின் நெற்றியில் முட்டினாள்.
அதன் பிறகு, ருத்ரனின் குழந்தைக்கு ‘மாயமித்ரா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்”.
காயத்ரி, தனா இருவரும் முதுகலை இரண்டாம் ஆண்டு இறுதியில் இருந்தார்கள்.
பெரியவர்கள் யாரும் இருவரிடமும் குழந்தையைப் பற்றிப் பேசவில்லை.
இருவரும் படித்து முடிக்கட்டும், என்று அமைதியாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று தனா காலேஜ் கிளம்பிக் கொண்டு இருக்க,
சரவணன் அவளிடம் கத்திக் கொண்டிருந்தான்.
“ஒரு பொருள் இந்த வீட்ல வச்ச இடத்துல இருக்கா?” என்று புலம்ப,
“நீங்க எங்கயோ போட்டதற்கு நான் எப்படி மாமா பொறுப்பு ஆக முடியும்?” என்று சொல்லிக்கொண்டு அவனிடம் கத்திக் கொண்டு இருந்தாள் தனா.
அப்பொழுதுதான் முனுசாமி, “எதுக்குடா பிள்ளைகிட்டக் கத்திட்டு இருக்க?
நீ எங்க வச்சயோ, அங்க போய் தேடுடா” என்றார்.
“உங்களுக்கு என்ன வந்துச்சு? உங்களுக்கு என்ன தெரியப் போது?” என்று தனது தந்தையிடமும் சீறினான்.
‘இவன் எதுக்குக் காலையிலேயே இப்படிச் சத்தம் போட்டுகிட்டு இருக்கான்?’ என்று முனுசாமி புரியாது பார்த்தார்.
அப்பொழுதுதான் காயத்ரி வீட்டுக்குள் நுழைய, “என்ன அண்ணா, காணோம்?” என்று கேட்டாள்.
“அதை உன் பிரண்டுகிட்டே போய் கேளு” என்று முனக,
வீட்டில் அவன் ரூமில் அலசத் தனது தோழியின் அருகில் சென்ற காயூ “என்னடி?” என்று கேட்டாள்.
“எனக்கு என்ன தெரியும்?”
“என்னத்த அப்படித் தொலச்ச?” என்று கேட்க,
தனது தோழியைப் பார்த்துச் சிரித்த தனா, “என் மனசை தான் அவரிடம் தொலைத்து விட்டு இருக்கிறேன், போதுமா?” என்று சொல்ல,
“அடிக்கள்ளி!” என்று சிரித்தாள் காயூ.
இளவரசியும், “என்ன தனா?” என்று கேட்க,
“ஒன்றும் இல்லை அத்தை, அவர் ஏதோ லூசு மாதிரித் தேடிட்டு இருக்காரு” என்று சொல்ல,
“நான் லூசு தாண்டி” என்று முறைத்தான் சரவணன்.
“காயத்ரி இன்னைக்கு உன் பிரண்டு காலேஜ் வர மாட்டா, நீ மட்டும் காலேஜ் போ” என்றான்.
“எனக்கு வேலைப் பொழப்பு இல்லாம தான், இவ்வளவு தூரம் வந்து இருக்கேன் பாரு, உன் பொண்டாட்டியக் கூட்டிட்டுப் போக… அவ்வளவு அக்கறை இருந்தா, நீயே தினமும் உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போகணும்” என்று காயத்ரியும் சூடாக வாதாட,
“நான் இனிமே கூட்டிகிட்டுப் போறேன், நீ ஒன்னும் கூட்டிட்டுப் போக வேண்டாம்” என்றான் கையை நீட்டி.
காயத்ரி தனது அண்ணனின் கையைப் பிடித்து, அவன் கையில் இருப்பதைப் பிடுங்கிப் பார்க்க,
அந்த பிரக்னன்சி கிட்டில் இரண்டு கோடுகள் இருக்க, கண்கள் மின்னத் தனது தோழியைக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.
அவளும் தலையாட்ட,
“இதுக்கு எதுக்கு ரெண்டு பேரும் காலையிலேயே இவ்வளவு அலப்பறை பண்ணிட்டு இருக்கீங்க?”
“என்ன?” என்று முனுசாமி, இளவரசி இருவரும் கேட்க,
இருவருக்கும் பதிலைச் சொல்லாத காயத்ரி மொத்தக் குடும்பத்திற்கும் போன் செய்து வர வைத்திருந்தாள்.
மொத்தக் குடும்பமும் வந்தவுடன் முதலில் ருத்ரனையும், அகிலாவையும் அருகில் அழைத்துக் காட்ட,
அகிலா கண்கள் கலங்க அந்த பிரக்னன்சி கிட்டைத் தன் கையில் வைத்துக் கொண்டு நிற்க,
ருத்ரன் தனது மச்சானைத் தூக்கிச் சுற்றினான்.
மொத்தக் குடும்பத்திடமும் அகிலா தனது சந்தோஷத்தைப் பகிர,
மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்தது.
அனைவரும் தனாவிற்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொடுத்தார்கள்.
“இதுக்கு எதுக்குடா, காலைல இருந்து புள்ளகிட்டக் கத்திட்டு இருக்க?” என்று இளவரசி கேட்க,
“நான் இதை வாங்கிட்டு வந்து கொடுத்து மூணு நாள் ஆகுது. உன் மருமக இன்னைக்கு தான் செக் பண்ணா… செக் பண்ணிட்டு கூட எங்கடி வெச்சேன்னு கேட்டா, அங்க தான் எங்கேயாச்சும் வைத்திருப்பேன், தேடி எடுத்துக் கொள், என்று சொல்றா” என்று முனகினான்.
அவன் முனகியதைப் பார்த்த குடும்பம் மொத்தமும் சிரித்தது.
அகிலா, “நீ எப்போ காயு மா, நல்ல செய்தி சொல்வ?” என்று கேட்க,
“எனக்கு வேற வேலை இல்ல, பாரு… அதான் மூணு பேரும் ஆளுக்கு ஒன்னு பெத்துப் போடுவீங்க இல்ல, அதை வளர்த்து ஆளாக்கணும். எனக்கு இன்னொரு வருஷம் போகட்டும்” என்று சிரித்தாள்.
அவள் சொல்லிய விதத்தில் அனைவரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்தக் குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.
——————சுபம்——————–

