
அத்தியாயம்-34
“துரு.. எதாச்சும் பண்ணுங்க.. பயமா இருக்கு..” என்று கிட்டத்தட்ட அழுதுவிடுவதைப் போல் அவள் கூற, “பட்டு.. ஜ..ஜஸ்ட் சில்.. ஒன்னுமில்லடாமா” என்றபடி அவளைப் பிடித்துக் கொண்டு பின்னே எட்டுக்கள் வைத்தான்.
தனது கூர் பற்கள் பளபளக்க வாயைத் திறந்துகொண்டே முதலை அவர்களை நோக்கி முன்னேற, அதைப் பயத்துடன் பார்த்தவாறு பின்னெட்டுக்கள் வைத்தவன் கால் சறுக்கிவிட்டது.
“ஆ..” என்று சரிந்து விழுந்தவன் மேல், பாவையவளும் சரிய அவளை அணைவாய் பிடித்துக் கொண்டவன் அவள் கண்களைப் பார்த்தான். நீர் மின்னும் விழிகள், அவனுக்கு அழைப்பு விடுவதாய்..
கலங்கி லேசாகச் சிவந்த விழிகளுடன் அவனைப் பார்த்தவள், “ப..பயமா இருக்கு துரு..” என்க,
அந்த விழிகள் அவனுக்கு என்ன சொன்னதோ? தன் காலைக் கடிக்க வந்த முதலையைக் கண்டு “ஏ..” என்று அஞ்சிக் காலை இழுத்துக் கொண்டவன் பக்கவாட்டாகத் திரும்பி அங்கிருந்த ஒரு நீளமான மரக்கட்டையை எடுத்து அதன் வாய்க்கு நடுவே வைத்துவிட்டான்.
முதலையால் வாயை மூடவும் முடியாது, மரக்கட்டையின் நீலத்தைவிட திறக்கவும் முடியாது போக, பதறியடித்துக் கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்று மறைந்தது.
அதில் ஒரு பெருமூச்சு விட்டு அப்படியே படுத்தவன் தன்மேல் படுத்துக் கொண்டு பயம் நீங்காது கலங்குபவளுக்கு தட்டிக் கொடுக்க,
“ஸோ ஸுவீட்ல மாமா?” என்று விஷ்வேஷ்வரன் முதுகில் தொத்திக் கொண்டிருத்த அமிர்தப்ரியா கேட்டாள்.
அவளைத் திரும்பிப் பார்த்து ஆமென்று தலையசைத்தவன் “டேப் எங்கடி?” என்க
“ஓடும்போது மூச்சு வாங்கிச்சா.. அதான் கழட்டிட்டேன்” என்றாள்.
“ஓடினது நானு மூச்சு வாங்குறது உனக்கா? இறங்குடி கீழ” என்று அவளை இறக்கியவன்,
“அம்மா.. முதுகு..” என்று பிடித்துக் கொள்ள, “ரொம்ப வலிக்குதாங்க மாமா?” என அப்பாவிபோல் கேட்டு அவனைக் கடுப்பேற்றினாள்.
அங்கு பயம் விலகாத நடுக்கத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கும் இளாவை நிமிர்த்தித் தன் முகம் பார்க்கச் செய்த துருவன், “மா..இளா.. அது போயிடுச்சுடி.. இங்கப் பாரு. உனக்கு ஒன்னுமில்ல” என்க,
“பயந்துட்டேன்.. உ..உங்க காலைக் கடிச்சிருக்கும் அது” என்றாள்.
“பாருடி.. எப்படி உருகுறானு.. நீயும் தான் இருக்கியே” என்று அங்கிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மதிமகிழன் கூற,
ஜான் அவன் பேசியது கேட்காததால் “ஆங்?” என்றாள்.
“ஆண்டவா..” என்று நொந்து கொண்டு அவன் வானை நோக்க,
“மறுபடியும் அந்த அசராத அசரீரியாடா? இவனுக்கு வேற வேலையே இல்ல போல” என்று தானும் வானத்தில் அதைத் தேடியபடி கேட்டாள்.
“உன்னைய போல ஒருத்திய கட்டிவச்சிருந்தா சமாளிக்குறதுக்கே நேரம் சரியாருந்துருக்கும்” என ஒரு பெருமூச்சு விட்டவன், “உனக்கு ஸ்பீக்கர் போச்சுனு தெரிஞ்சும் பேசுற நான்தான்டி பைத்தியக்காரன்” என்று நொந்துக் கொள்ள,
வானில் அசரீரீயை தேடி தோற்றவள் காட்சியை வேடிக்கைப் பார்க்கத் தொடர்ந்தாள்.
இளநகையை தூக்கிவிட்டு நிற்கச் செய்தவன் அவள் கண்களைத் துடைத்துவிட, ஜோடி ஜோடியாய் ஓடிய மற்ற நால்வரும் வந்து சேர்ந்தனர்.
“பாவிகளா.. விட்டுட்டு போயிட்டீங்க” என்று துருவன் அவர்களை முறைக்க,
“மாசமா இருக்குறவளை காப்பத்தனும்னு போயிட்டேன்டா” என்று அவசரத்தில் அகர்ணன் வாய்க்கு வந்த காரணத்தைக் கூறினான்.
அதில் தலையில் அடித்துக் கொண்ட அகநகை, அவனைத் திருப்பித் தன் வயிற்றை குறிப்பிட்டுக் காட்டவும், அகர்ணன் “அடடா.. அந்த அசரீரீ நம்ம பேபிய ஆட்டயபோட்டதை அவசரத்துல மறந்துட்டேன்டா அவி” என்க,
விஷ்வேஷும் ப்ரியாவும் வெடி சிரிப்பு சிரித்தனர்.
“சரி இதை எப்படி கடக்க?” என்று இளா கேட்க,
“நீங்க எப்புட்ரா இந்த ஆத்தை கடந்தீங்க?” என்று ப்ரியா கேட்டாள்.
“நாங்க எங்கடா கடந்தோம்? அந்தக் கரடிகுட்டி ஏறிக் குதிச்சதுல தான் பறந்து வந்து மரத்துல ஜொயிங்குனு மாட்டிகிட்டோம். கை வலிக்குதுடா எப்பா. வந்து எறக்கிவிடுங்கடா” என்று மதி கத்தினான்.
“என்னவாம் அவங்களுக்கு?” என்று ஜான் கேட்க,
“அய்யோ கடவுளே.. உனக்குச் சொல்றதுக்குள்ள இருக்குற கொஞ்சம் ஜீவனும் செத்து சுண்ணாம்பா போயிடும் போடி” என்று அழுதான்.
“ப்ரியா.. ஒரு பாலம் வேணும்” என்று துருவன் கூற,
“நான் என்ன இன்ஞ்..” என்று கூற வந்தவள் வாயைப் பொத்தி, “நீ கேட்டா கிடைக்கும் அமி..” என்று அவளுக்கு விஷ்வேஷ் நினைவூட்டினான்.
“அட ஆமாம்ல?” என்றவள் “இப்பவே இங்க ஒரு பாலம் வரனும்” என்று கூற,
திடுதிடுவென எங்கெங்கிருந்தோ குரங்குகள் வந்தன.
அக்குரங்குகள் சேர்ந்து பாலம் அமைக்க, “பாரேன்.. நாம இலங்கைக்கு போகப் போறோம். வாணரப்படை நமக்குப் பாலம் அமைக்குது” என்று விஷ்வேஷ் கூறினான்.
“அதை இன்னொரு வாணரம் சொல்லுது பாரேன்” என்று துருவன் கூற,
“அடிங்கு” என்று விஷ்வேஷ் அவனைத் துரத்த, அவர்களது குட்டி கலாட்டாவின் இடைவெளியில் குரங்களின் கட்டமைப்புப் பணி முடிவு பெற்றது.
ஒருவழியாய் பாலம் கட்டி முடியவும் யாவரும் அந்த ஆலமரத்திடம் வர,
“எங்கடா அந்தக் கரடி?” என்று அகா சைகை செய்து கேட்டாள்.
“அது மரத்தைச் சுத்தி ரொம்ப நேரமா மோப்பம் புடிச்சுட்டே இருந்து இப்பத்தான் ஒரு இடத்தைத் தோண்ட ஆரம்பிச்சிருக்கு அந்தப் பக்கம். முதல்ல எங்களை இறக்கி விடுங்கடா” என்று மதி கூற,
“கை வலிக்குதுடா எப்பா” என்று ஜான் கத்தினாள்.
மீண்டும் அனைவரும் ப்ரியாவை நோக்க, “ஏணி வேணும்” என்று பல்லைக் கடித்தாள்.
வானத்திலிருந்து வீலென்று ஏதோ சத்தம் கேட்டதில் யாவரும் மேலே நோக்க, ஏணி ஒன்று அதிவேகத்தில் கீழே வந்து கொண்டிருந்தது.
அதில் அய்யோ அம்மாவென்று அலறியவண்ணம் அறுவரும் நகர, ஏணி தொம்மென்ற சப்தத்துடன் கீழே வந்து விழுந்தது.
“கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே” என்று ப்ரியா புலம்ப, எழுந்த நின்ற துருவன் காலடியில் ‘கிரிக்’ என்ற சத்தம் கேட்டது.
அனைவரும் அரண்டுபோய் அவளை நோக்க, “ஆத்தீ.. அடேய்.. புலம்பக் கூட விடமாட்றீங்களேடா” என்று கதறலாய் கூறியவள், “இப்ப என்ன பண்ண?” என்று பரபரப்பாய் யோசித்தாள்.
“பைத்தியமே.. கன்னிவெடிலாம் நமத்துபோகனும்னு சொல்லு” என்று அகர்ணன் கூற,
“ஆங்.. கன்னி வெடி எல்லாம் வெடிக்காத வெடியா போகட்டும்” என்றாள்.
“அதென்ன தீவாளி பட்டாசாடி வெடிக்காம போறதுக்கு? உசர வாங்குறீங்கடா எப்பா” என்று நொந்துக் கொண்ட விஷ்வேஷ் பெருமூச்சுவிட,
இளநகையும் துருவனும் ஏணியை தூக்கி நிறுத்தி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தோரை கீழே இறக்கினர்.
“அந்தக் கரடி எதையாச்சும் கண்டுபிடிச்சுதானு பாருடா” என்று துருவன் கூற,
“டேடி பேர்..” என்றபடி அதைத் தேடிச் சென்றான்.
சில நிமிடங்களில் “டேய்.. எல்லாரும் இங்க வாங்க” என்று மதி குரல் கொடுக்க யாவரும் அந்த மரத்தைச் சுற்றிக் கொண்டு பின்புறம் சென்றனர்.
அங்கு மண்ணுக்கு அடியிலிருந்து ஒரு பெட்டியை எடுத்தவன் அதன்மேலிருந்த மண்ணை தட்டி எடுக்க,
“என்ன பேப்பர் மாதிரி இருக்கும்னு பார்த்தா பெட்டி மாதிரி இருக்கு?” என்று ஜான் கேட்டாள்.
“நானும் எதாவது க்ளூ பேப்பரா இருக்கும்னு தான் நினைச்சேன்” என்று இளநகை கூற,
தன் கரங்களைத் தட்டி அனைவரையும் தன்னை பார்க்கச் செய்த அகா அதைத் திறக்கும்படி சைகை செய்தாள்.
அதிலிருந்த சக்கரம் போன்ற அமைப்பை மதி திருக, சடாரென்று அதிலிருந்து ஒரு தகடு நீண்டது.
‘எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்’ என்று அதில் பொறிக்கப்பட்டிருப்பதை எழுத்து கூட்டி வாசித்த மதி அதை அழுத்த, ‘கண்ணீர் பிரிவினை’ என்று மொட்டையாக இருந்தது.
“கண்ணீர் பிரிவினையா?” என்று விஷ்வேஷ் கேட்க,
“அப்படிதான் போட்டிருக்கு. இது என்ன சொல்ல வருது?” என்று மதி கேட்டான்.
“கண்ணீர்ல என்னடா பிரிவினை இருக்கு? எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்னா?” என்று அகர்ணன் கேட்க,
சட்டெனக் கண்கள் பளிச்சிட அகா கைகளைத் தட்டினாள்.
யாவரும் அவளை நோக்க, தனது குறிப்பேட்டில் விறுவிறுவென ஏதோ எழுதி அகர்ணன் புறம் நீட்டினாள்.
“ப்ச்.. மறுக்கா மறுக்கா அசிங்கபடுத்துறியேடி..” என்றவன் அதை இளநகையிடம் கொடுக்க,
“ஏ சூப்பர் அகா” என்ற இளா “எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்னா இந்தக் கேள்விக்கான பதிலை நாம சொன்னாதான் அது நமக்கான க்ளூவை குடுக்கும்னு அர்த்தம். கண்ணீர் பிரிவினைனா கண்ணீரோட வகைகள டிஸ்கிரைப் பண்ண சொல்லிக் கேட்குது” என்று கூறினாள்.
“கண்ணீரோட வகையா?” என்று அனைவரும் குழம்ப சில நிமிடங்கள் அங்கு யோசனையான அமைதி நிலவியது.
துருவன் தோளைச் சுரண்டிய ஜான், “இந்தக் கைய கொஞ்சம் பிடிச்சுவிடேன் வலிக்குது” என்று தன் கரத்தை நீட்டினாள்.
“அடிங்கு.. அவன் அவன் என்ன கவலைல இருக்கான்.. ஒழுங்கா யோசி” என்று துருவன் திட்ட,
“மச்சான்.. எனக்குக் காது கேட்காதது எவ்வளவு வசதியா இருக்கு பார்த்தியா? நீ என்னை ஏதோ நாலு நல்ல வார்த்தை கேக்குறனு புரியுது ஆனா எனக்கு எதுமே கேட்கலை” என்று கூறி முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி அவனை வெறுப்பேற்றினாள்.
இதற்குள் ஒரு யோசனைக்கு வந்த மதி “ஏ.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. கண்ணீரோட வரையறைய கேட்குறாங்க..” என்று கூற,
அனைவரும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.
“அதாவது சைகாலஜிபடி வலது கண்ணுலருந்து முதல் துளி கண்ணீர் வந்தா அது சந்தோஷத்தின் அடிப்படைல வரும் கண்ணீர். அதுவே இடது கண்ணுலருந்து முதல்ல வந்தா அது சோகத்தின் அடிப்படைல வரும் கண்ணீர். ரெண்டு கண்ணுலருந்தும் சேர்ந்து வந்தா அது ஃப்ரஸ்டிரேஷன்ல வரும் கண்ணீர்” என்று அவன் கூற, பெட்டியில் ‘கிரிக்’ என்ற சத்தம் கேட்டது.
அனைவரும் ஆர்வமாய் பெட்டியைப் பார்க்க, அதிலிருத்த சங்கிலிகள் எல்லாம் சுற்றிக் கொண்டு பெட்டி திறந்தது.
“ஏ ஹுரே..” என்று குதித்த இளநகை அந்தப் பெட்டிக்குள்ளிருந்த தகடை எடுத்தாள்.
“நாளம் தாக்கவும் காக்கவும்
ஆன மலர் சூழ்ந்த,
ஓடுநீர் பிறப்பிடத்தே
மாபெரும் வித்தின் விருட்சத்து, இருபால் பட்சியின் கூட்டதிலே
அடுத்த துப்பு உள்ளதுவே!” என்று இளநகை வாசிக்க,
“கடைசி வரிய தவற ஒரு மண்ணும் புரியலை” என்று விஷ்வேஷ் கூறினான்.
“உனக்காவது பரவால அங்க என் பொண்டாட்டிய பாருடா. அவளுக்கு ஒன்னும் கேக்கவே செஞ்சிருக்காது” என்று மதி கூற,
“அப்படியே கேட்டுட்டாலும் அவ கிளுகிளுனு பதில் சொல்லிக் கிழிச்சுடுவா” என்று துருவன் கூறினான்.
“ஷ்ஷு.. பேசுறத விட்டுட்டு யோசிங்க” என்று இளநகை கூற, அனைவரும் மாறி மாறி அதை வாங்கிப் படித்துப் பார்த்தனர்.
“நாளம்னா.. இதயத்தைக் குறிப்பிடலாம்.. அப்படினா இதயத்தைத் தாக்கவும் காக்கவும் ஆன பூ.. அதென்ன பூ?” என்று இளநகை யோசித்தாள்.
பலமணி நேர யோசிப்பின் பலனாய் ஆளுக்கொரு வரியைக் கண்டுபிடித்திட தங்கள் இரண்டாம் துப்பைத் தேடி சென்றனர்.

