
பிறை -48
வாழ்க்கையே வெறுத்து போனது. எப்படி பட்ட குடும்பத்தில் பிறந்து, காதலித்து திருமணம் செய்த தாய் தந்தைக்கு பிறந்து, அரணாக இருந்த தமையனுக்கு தங்கையாக பிறந்து விட்டு, தன்னுடைய அவசர புத்தியினால் எப்படிபட்ட இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோம் என காலம் கடந்த யோசனையில் இருந்தாள் பார்கவி.
அப்போது கத்தி விட்டு சென்றவன் தான்.. இன்னும் அறைக்கு வரவில்லை. இவனது முழுப் பெயர் ஆதி அர்ஜுனன் என்பதில் வேறு அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
எதற்காக அவனது முழுப் பெயரை மறைக்க வேண்டும். இதற்கு பின்னணியில் என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்தாள்.
அலைபேசி வேறு பறிபோனது. எப்படி வீட்டிற்கு தகவல் கூறுவது என தெரியாமல் முழி பிதுங்க நின்றிருந்தாள்.
அப்போது அவசரமாக அந்த அறைக்குள் வந்தான் அர்ஜுன். அவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் பார்கவி.
அவளது செய்கையை பார்த்து பெருமூச்சை விட்டவன்.. ” இங்க பாரு கவி.. இங்க இருக்கிற மத்த பொண்ணுங்க மாதிரி நான் உன்னைய ட்ரீட் பண்ணல.. நீ எப்போவும் என் கூட எப்படி இருப்பியோ, அப்படியே இரு.. உனக்கு எந்த பிரச்சனையும் வராது. உன்ன பத்திரமா உன் வீட்ல சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.. இந்த ட்ரெஸ் போட்டுட்டு என் கூட வா ” என ஒரு வெள்ளை ஆடையை அவளிடம் நீட்டினான் அர்ஜுன்.
அவனையும் அந்த ஆடையையும் மாற்றி மாற்றி பார்த்தவள்.. ” நீ என்ன நினைச்சிட்டு இருக்க அர்ஜுன்.. நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைச்சியா.. தப்பான வழியில போற.. அதுக்கு நானும் துணை வர முடியாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தா அப்படியே அதை அழிச்சிடு ”
” கவி உன் விஷயத்துல நான் ரொம்ப பொறுமையா போறேன்னு தோணுது”
” அப்போ என்னைய விட்டுடு.. நான் என் வீட்டுக்கு போறேன்”
” கவி இது ஒரு வழிப் பாதை.. உள்ள வந்துட்டா அவ்வளவு தான்.. இனி நான் நினைச்சா மட்டும் தான் உன் வீட்டை நீ பார்க்க முடியும்.. யோசிச்சுக்கோ ”
” மிரட்டி பார்க்குறியா அர்ஜுன் ”
” உண்மையை சொன்னேன் .. உன்ன மிரட்டுறதா இருந்தா எப்படியோ என் வழிக்கு கொண்டு வந்திருப்பேன்.. இப்படி இல்ல.. ”
” நீ கூப்பிடுற மாதிரி எந்த விதமான ஆராய்ச்சிக்கும் நான் வர மாட்டேன் அர்ஜுன் ”
” பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. நீயா போய் டிரஸ் மாத்திட்டு வந்திடு.. இல்லைன்னா நான் மாத்த வேண்டியதா இருக்கும் ” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் பார்கவி.
” இப்படி கூட உனக்கு பேச தெரியுமா அஜூ ” என்றவளுக்கு தொண்டை அடைத்து, கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
” டைம் இல்ல போ ” என விறைப்பாக நின்றவனை ஆழ்ந்து பார்த்தவள்.. அவன் கையில் இருந்து ஆடையை வாங்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இனிமேல் நடப்பது நடக்கட்டும்.. கடவுள் விட்ட வழி. தன் குடும்பத்தை ஏமாற்றி விட்டு வந்ததற்கு, இதுதான் தனக்கு சரியான தண்டனை என எண்ணிக் கொண்டாள்.
அவன் கொடுத்த லெகுவான ஆடையை மாற்றிக் கொண்டு வந்தாள். ” குட்.. என் பின்னாடி வா ” என முன்னே நடந்தவனை பின்தொடர்ந்து போனாள் பார்கவி.
முதல் கட்டமாக அவளை அழைத்து கொண்டு அந்த ரசாயன பெட்டியில் படுக்க வைத்தனர். மிகவும் பயந்து போனவள்.. பிடிப்பிற்காக அவனது கரங்களை பிடித்து கொண்டாள். இந்த சூழ்நிலையில் கூட அவனையே நாடும் தனது மனதையும் உடலையும் எண்ணி வெட்கிப் போனாள் பார்கவி.
” ரிலாக்ஸ் கவி .. கொஞ்சம் நேரம் அமைதியா படு.. முடிச்சிடலாம் ” என அவளுக்கு ஆறுதல் அளிக்க.. பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு படுத்திருந்தாள் பார்கவி.
அதே நேரம் அங்கு வீடு வந்து சேர்ந்தார்கள் ஆதிதேவ், திவாகர், மீனாட்சி , சரண்.
வந்ததும் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை தான் பார்த்தான். அதில் பெருசாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பார்கவி வீட்டில் இருந்து கிளம்பி தெரு முக்கில் திரும்பிய காட்சி அப்படியே தெளிவாக தெரிந்தது.
அதற்கு பின்னே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு ஆட்டோ பிடித்து பார்கவி சென்றது தெளிவாக தெரிந்தது. உடனே அந்த ஆட்டோ நம்பரை பார்த்து, ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோவை எல்லாம் விசாரித்து அந்த ஆட்டோவை கண்டு பிடித்தான் சரண்.
அதே இடத்திற்கு ஆதிதேவ் வந்து சேர்ந்து விட.. நண்பர்கள் இருவரும் விசாரணையை தொடங்கினார்கள்.
வீடியோவில் இருக்கும் பெண்ணை காட்டி, விசாரணை செய்தார்கள்.
” சார் இந்த பொண்ணு என் ஆட்டோல தான் வந்தாங்க. ஆனால் நான் எங்க இறக்கி விட்டேன் ” என தலையை தட்டி யோசித்தான் அந்த ஆட்டோக்காரன்.
” கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க… ” சரண் கேட்டதும்..
” சார் ஒரு நாளைக்கு எத்தனை சவாரி போறோம்.. எல்லாத்தையும் எப்படி மண்டையில போட்டுக்க முடியும்.. ஆனால் இந்த பொண்ணு… ரொம்ப அவசரமாக போக சொன்னுச்சு.. ” என சற்றே யோசித்தவர்..
” ஹான் இந்த பொண்ணு நம்ம காந்திபுரம் சர்ச் வாசல்ல தான் இறங்கிச்சு சார் ”
” நல்லா தெரியுமா.. ”
” அட ஆமா சார்.. அன்னைக்கு கூட இந்த பொண்ணை இறக்கி விட்டுட்டு சர்ச் வாசல்ல என் மகளுக்கு போலி வாங்கிட்டு போனேன்.. நல்லா ஞாபகம் இருக்கு சார் ” என்றதும்.. அவருக்கு நன்றி கூறி விட்டு இருவருமாக அந்த சர்ச் வாசலுக்கு சென்றனர்.
” இங்க தான் பார்வதி இறங்கிருக்கனும்.. இதுதான் ஆட்டோ ஸ்டாப்பிங் ” சரண் கூறவும் .. சுற்றியும் பார்வையை பதித்தான் ஆதிதேவ்.
” இங்க ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா சிசிடிவி இருக்கும் சரண்.. நம்ம செக் பண்ணா தெரிஞ்சுடும்”
” ம்ம் சர்ச் பாதர் கிட்ட விசாரிச்சு பார்ப்போமா ”
” இல்ல சர்ச் வாசல்ல இருக்கு.. ஆனால் அது சர்ச் வாசலை பார்த்து இருக்கு.. பார்கவி இங்க தான் இறங்கிருப்பா.. சோ அதுல தெரியாது.. இந்த பக்கமா வியூ வர மாதிரி தேடனும்.. ” என்றதும் சரண் சுற்றி பார்த்தவன்..
” அங்க ஒரு கடைல இருக்கு பாரு…வா கேட்கலாம் ” என ஆதியை அழைத்து கொண்டு சென்றான்.
” சாரி சார் இது ரெண்டு மாசமா ஓடாம இருக்கு ” என கடைக்காரர் கூறியவர்.. “பக்கத்துல ரெண்டு கடை தள்ளி இருக்கு சார்…நீங்க வேணும்னா அதுல பாருங்களேன் ” என அவரே கடையையும் காட்டினார்.
போலீஸ் என்றதும் அவர்களும் வேகமாக ஒத்துழைப்பு கொடுக்க.. பார்கவி வீட்டில் இருந்து ஆட்டோ ஏறிய மணியை கணக்கில் கொண்டு.. அந்த மணித்துளியில் உள்ள நிகழ்வுகளை பார்த்தனர்.
ஐந்து நிமிடம் சென்றதும்.. பார்கவி ஆட்டோவில் வந்து இறங்குவதும்.. அதன் பின் போனில் பேசிக் கொண்டே ஒரு காரில் ஏறி செல்வதும் மட்டுமே காட்சிகளாக இருந்தது.
” யாரோட கார்ல ஏறி போறா.. போன்ல யாரா இருக்கும் சரண்.. ” காட்சிகளை பார்த்ததும் ஆதிக்கு பயம் வந்தது. தானாக சென்று மாட்டிக் கொண்டாளே என வேதனையாகவும் இருந்தது.
” சார் இந்த பொண்ணை தேடித்தான் வந்தீங்களா ” என அந்த கடைக்காரர் கேட்க..
” ம்ம் ஆமா உங்களுக்கு ஏதாவது இந்த பொண்ணை பத்தி தெரியுமா ” என சரண் கேட்டான்.
” அட வெள்ளிக்கிழமை எல்லாம் சர்ச் வாசலுக்கு வந்திருவாங்க சார்.. இந்த பொண்ணோட லவ்வர் இங்க தான் வந்து இந்த பொண்ணை மீட் பண்ணுவார்.. ”
” வாட்.. லவ்வவரா.. ” ஆதிதேவ் அதிர்ந்தான்.
” ஆமா சார்… எப்பவுமே பார்த்து பேசிட்டு போயிடுவாங்க.. அனால் ஒரு நாள் திடீர்னு அப்படியே எங்க கடைக்கு வந்தாங்க.. வந்ததும் சமோசா ஆர்டர் பண்ணி சாப்பிட்டு கிளம்பிட்டாங்க.. நான் பார்த்த லவ்வர்ஸ்ல இவங்க கொஞ்சம் வித்தியாசம்.. அஞ்சு நிமிஷம் தான் பேசுவாங்க”
” அந்த பையனை நீங்க பார்த்திருக்கீங்களா சார் ”
” பார்த்திருக்கேன் சார்.. ”
” அப்போ வெள்ளிக்கிழமை ரெக்கார்டிங் எல்லாம் எடுங்க.. நம்ம செக் பண்ணலாம் ” சரண் கூறியதும்.. அதை எடுத்து ஓட விட்டான் அந்த கடைக்காரன்.
எப்போதும் போல மாலை வேளையில் சரியாக ஐந்து மணிக்கு அந்த இடத்திற்கு வரும் பார்வதி அன்று வராமல் இருக்க.. யோசனையில் ஆழ்ந்தான்.
” மச்சான் அந்த வாரம் தான் எனக்கு கல்யாணம் ஆச்சு.. அதுனால தான் வரல போல.. நம்ம வேற ஒரு நாள் செக் பண்ணலாம் ” என ஆதி கூறவும் அடுத்தடுத்த நிகழ்வுகளை எல்லாம் தேடிப்பார்த்தான் ஆதி.
சரியாக மறுநாளே மாலை ஐந்து மணிக்கு அவனோடு சர்ச் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தாள் பார்கவி.
” கொஞ்சம் ஜும் பண்ணுங்க ” என அவனது முகத்தை பார்க்க ஆர்வமானான் ஆதிதேவ்.
“சார் இதுல பேக் போஸ் தான் தெரியுது.. ”
” அப்போ வேற ஏதாவதுல அவனோட முகம் தெரியுதான்னு பாருங்க.. ”
அவனும் வேறு ஒரு வீடியோவை செக் செய்து அதை ஓட விட்டான். அதில் அவனது முகம் தெளிவாக தெரிந்தது. ஜூம் செய்து அவனது முகத்தை கட்டினான் கடைக்காரன். ” இவரு தான் சார் இந்த பொண்ணை பார்க்க வருவாரு ”
கடைக்காரன் காட்டிய ஆளின் முகத்தை பார்த்ததுமே இருவரும் ஒரு சேராக அதிர்ந்தனர். இருவரது உதடுகளும் உச்சரித்த வார்த்தை.. ” ஆதி…. ” என்று தான்.
” சார் உங்களுக்கு தெரியுமா.”
” சார்.. சார்.. ” என்றதும் நினைவிற்கு வந்தவர்கள்..
” ஹான் இந்த வீடியோ எனக்கு வேணும்.. உடனே ” என பதட்டமானான் ஆதிதேவ். அவருக்கும் நன்றி கூறி விட்டு கிளம்பி இருந்தார்கள்.
இருவருமே அதை வாங்கிக் கொண்டு காரில் ஏறினார்கள்.
” என்ன மச்சான் என்னால சத்தியமா நம்ப முடியல.. அவன் எப்படி திரும்பும் வந்தான்.. அதுவும் இப்படி ஒரு ரூபத்துல… ” என்றவனுக்கு மனம் பதறியது.
பதில் பேசாமல் அமர்ந்திருந்தான் ஆதிதேவ். ” என்ன யோசிக்கிற ”
” ஹி இஸ் வெறி டேஞ்சர் டா… இவன் தான் என் வீட்டுக்கும் வந்திருக்கான்.. ஐ திங்க் வீட்டுக்குள்ள என் பொண்டாட்டி கிட்ட வந்தவனும் இவனும் ஒரே ஆள் தான் ”
” வாட்…. என்ன சொல்லுற… உனக்கு எப்படி தெரியும் ”
” எனக்கு தெரியும்.. இவன் என்னைய மாதிரி மாஸ்க் போட்டு தான் என் வீட்டுக்குள்ள வந்திருக்கான் சரண்.. ”
” பார்கவி ரொம்ப பெரிய ஆபத்துல இருக்கா ஆதி… சீக்கிரம் நம்ம அடுத்த ஸ்டெப் எடுக்கனும் ” சரணும் பதறினான்.
” ம்ம்… ” என சீட்டில் தலை சாய்த்து இருக்க.. பிறை அவனுக்கு அழைத்திருந்தாள்.
” போனை எடு மச்சான். ஏதாவது அவசரமா இருக்க போகுது ”
” சிசிடிவி பார்த்தேன்… வீட்ல தான் இருக்கா.. இவ மட்டும் முன்னாடியே சொல்லிருந்தா இவ்வளவு பெரிய பிரச்சனையில பாரு மாட்டிருக்க மாட்டா டா.. ” என அவள் மீது பயங்கர கோபத்தில் இருந்தான் ஆதிதேவ்.
” அதுக்காக போன் எடுக்காம இருக்காத.. என்னனு ஒரு வார்த்தை கேட்கிறது நல்லது ”
” நம்ம அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்.. சோ ரெண்டு பேரும் ஒரே ஆள் தான் ஒரே ஆதி தான்.. ” பேச்சை மாற்றிய நண்பனை கோவமாக பார்த்தவனும் கேசில் மூழ்கினான்.
” எப்படி சொல்லுற ”
” கையில இருக்குற டேட்டூ தான்.. அவன் கையில இருக்குற பாம்பு சிம்பிள் தான்.. பிறையும் அவனோட கையில இந்த படத்தை பார்த்ததா சொன்னா.. அப்போ என் கெஸ் சரின்னா ரெண்டு பேரும் ஒன்னு தான்.. ”
“அடுத்து என்ன பண்ணலாம்… ”
” ஆதி அர்ஜுனை பத்தி விசாரிக்கனும்… அவனை பிடிச்சா எல்லாம் முடிஞ்சுடும் ” என ஏதோ நினைவு வந்தவனாக அவனது போனை எடுத்து பார்த்தான் ஆதிதேவ்.
போனை பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் உலகமே இருண்டு விட்டது போலானது.
சனா💖

