Loading

 

KKEN-32

இங்கே விஜயன் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு அவரால் தனியாக சமாளிக்க முடியாது என்று தெரிந்துப் போனது. வித்யாவுக்கு வேண்டியது அனைத்தையும் ஒரு அன்னையாக, தந்தையாக நர்ஸாக, ஆயாவாக இருந்துச் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு எந்த அருவருப்பும் இல்லை போலும்.

இப்படியே நாட்கள் செல்லச் செல்ல திடீரென்று ஒரு நாள் வெற்றிக்கு அந்த சந்தேகம் வந்தது.

 

அவளுக்கு இன்னும் இந்த மாதத்திற்கான நாட்கள் வரவில்லை. ம்ம்! மூன்று மாதங்கள்? இல்லை இல்லை தான் இங்கு வந்த நாளில் இருந்து கணக்கிட்டால் மூன்றையும் தாண்டி விடுகிறது. அவனுக்குத் தெரியும். மாதா  மாதம்  அவளுக்கு வேண்டியதை, ஆர்கனிக் கடையில் இருந்து இவன்தான் வாங்கி வருவான். விஜயனிடம் சொல்லி மருத்துவரை வரவழைத்து பார்த்த போது வெற்றியின் சந்தேகம் உறுதியானது. ஆம்! அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். இப்போது அவள் இருக்கும் நிலையில் அபார்ஷன் செய்வது பெரிய பிரச்சனையாகி விடும் என்பதால் குழந்தையை கலைக்கவும் முடியவில்லை. அதில் வெற்றிக்கு உடன்பாடும் இல்லை. என்ன சொன்னாலும் அது அவளின் ரத்தமும் கலந்து உருவான உயிர். அதை எப்படி அழிக்க முடியும்?

அவளுக்கு கால் வீங்கும்  பொறுமையாக பிடித்து விடுவான். அடிக்கடி ட்ரிப்ஸ் ஏறுவதால் கை  வீங்கி விடும். அதையும் பிடித்து விடுவான். பார்த்து பார்த்து உணவு ஊட்டுவான் . அவள் வயிற்றில் வளர்ந்த  கண்மணியிடம் பேசுவான் பேசுவான். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பான். குழந்தைத் தூங்க வேண்டுமே? அதற்கும் நேரம் ஒதுக்குவான். அவள் எழுந்ததும் அன்னையின் வயிற்றில் எட்டி உதைத்து  தந்தையை அழைப்பாள் . அடிக்கடி கை  வைத்து பார்ப்பான். குழந்தையின் அசைவை பார்த்துக் கொள்வான். தங்கைக்கு அவன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் அவனுக்கு பெருமளவு விஷயம் தெரிந்திருந்தது. வித்யாவுக்கு கை  நிறையை வளையல் போட்டு பார்க்க வேண்டும் போல இருந்தது.

“வெற்றி! உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” விஜயன் சொன்னார்.

எப்படியோ வெற்றி திருமணத்திற்கு சம்மதித்து விட்டான். ஆனால்  அவளுக்கு சுய நினைவு இல்லாத போது  செய்யும்  திருமணம் செல்லுமா? தாலி கட்டினான். மனைவிக்கு சேர்த்து வைத்த காசில் இருந்து சின்னதாக ஒரு மோதிரம் வாங்கிப் போட்டான். அவள் கன்னத்தில் சந்தனம் பூசி இவன் மனம் குளிர்ந்தான். பிரசவ வலி வந்தது. அப்போது அவளுக்கு நினைவும் வந்தது.

“அம்மா!” வழியில் துடித்து விட்டாள் .

பனிக் குடம் உடைந்திருந்தது.  தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.

“என்னாச்சு? வித்யா? என்னம்மா? துடித்துக் கொண்டு ஓடி வந்தார் காயத்ரி.

“என்னங்க என்ன ஆச்சு நம்ம வித்யாவுக்கு?”

அதிர்ச்சியானவர், உடனடியாக அதே மருத்துவ மனையில் மனைவிக்கும் சிகிச்சை பார்த்தார்.  இப்போது வித்யா, அவள் குழந்தை மூவருமே நலம். இதற்குக் காரணம் வெற்றி தான். அவனின் அன்பும், ஆதரவும் தான்.

அதிபன் என்ற ஒருவனால் அழிய இருந்த குடும்பம் ஓரளவு  மீண்டு வந்திருக்கிறது. அழகும், அந்தஸ்தும் கம்பீரமும் இருந்தால் மட்டுமே ஒருவன் ஹீரோவாகி விட முடியாது. பலவருடங்களாக பொறுக்கியாக இருக்கும் ஒருவன் கதாநாயகியைப் பார்த்ததும் மனம் திருந்தி, அவளுடன் வாழ்கை வாழ்வது எல்லாம் கதையில் கூட நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அழகு, பணம், கம்பீரம் எதுவுமில்லாத நம்முடைய அப்பா போல ஒருவன்தான் வெற்றி. நம் அப்பா நமக்கு நாயகன் என்றால் வெற்றியும் நம் கதாநாயகன் தான் .

 

விஜயன் வெற்றியின் கையைப் பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார். “என்னோட குடும்பத்தை திருப்பி கொடுத்துடீங்க வெற்றி. உங்களுக்கு நான் எப்டி நன்றி சொல்லறதுன்னே தெரியல.”

சொன்னவர், சட்டென அவன் காலைத் தொட்டு கும்பிடப் போனார்.

“இல்ல சார். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க”

“எனக்கும் என் குடும்பத்துக்கு நீங்க தானே கடவுள் வெற்றி ”

“சார்! பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க ”

குழந்தை நார்மல் டெலிவரியிலேயே பிறந்திருந்தது. (ரொம்ப பெரியதாக காயத்ரி  நடவடிக்கை பற்றி நான் விவரிக்க இயலவில்லை)

நாட்கள் வாரங்கள் ஆகி இதோ மூன்று மாதங்கள் ஆகி விட்டன. குழந்தைக்கு  பால் கொடுத்து முடித்தவள் கையில் இருந்து தோளில்  தட்ட வெற்றி வாங்கி கொண்டான்.

சில நிமிடத்திலேய சிறிது பாலை அவன் தோளிலேயே கக்கி விட்டாள் பாப்பா . லேசாக இருமினாள் .

“ஒனக்கு கொஞ்சம் கூட அருவறுப்பாவே இல்லையா வெற்றி?”

பல மாதங்கள் கழித்து கோர்வையாக பேசி இருக்கிறாள் வித்யா.

“எதுக்கு மேடம்?”

“என்ன பார்த்து? இதோ இத  பார்த்து? இது ..இது? யாருடைய குழந்தையோ ?”

“இது என் தங்கத்தோட குழந்தை. என் தியா குட்டியோட குட்டி. நான் எதுக்கு இதை பார்த்து அருவருப்புப்படனும் ? ”

மனைவியின் நாடிப் பிடித்துக் கொஞ்சினான். “ப்ளீஸ் டா! என்னை கொஞ்சு. எத்தனை நாள் வீடியோ காலில் அடம் பிடித்திருப்பாள்? இப்போது அவளை அவன் கொஞ்சும் மொழிகளால் என்ன சொன்னாலும் எந்த உணர்ச்சியும் காட்டுவதில்லை. இல்லை! இல்லை !உணர்ச்சிகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டது. வலுக்கட்டாயமாக .

குழந்தை ஏப்பம்  விடும்வரை தட்டிக் கொண்டிருந்தான்.

“அப்பாவை வர சொல்லுங்க வெற்றி” அவனை நாசுக்காக வெளியில் அனுப்பினாள் .அவனுக்கு வித்யாவின் அமைதி ஏதோ சொல்லியது.

மகளின் அருகில் வந்து அமர்ந்த தந்தையிடம் அவள் கேட்டது இது தான்.

“இன்னும் எத்தனை நாள் பா என்னோட புருஷன இந்த வீட்டுல வேலைக்காரனா வச்சுருக்க போறீங்க?”

“வித்யா?”

“அப்பா போதும் நிறுத்துங்க. உங்களோட சுய நலத்துக்காக அந்த அப்பாவியை  யூஸ்  பண்ணிகிட்டீங்க இல்ல? இதுவே உங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது பணக்கார பையனா இருந்தா இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வானாப்பா? எவனோ கொடுத்த குழந்தைக்கு இனிஷியல் கொடுத்து எனக்கு  தாலி கொடுத்து., எனக்கும் என் பிள்ளைக்கும் வாந்தி மூத்திரம் அள்ளி ., இன்னும் என்னப்பா ? பாவம் பா அவன். அவன் இனிமே இங்க இருக்கக் கூடாது. அவனுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ பண்ணுங்க. இனிமே அவன் என் கண்ணுலையே முழிக்கக் கூடாது” அடுத்து வெற்றியை அழைத்து பேசினாள் .

“வேண்டாம் வெற்றி. நீங்க  இனிமே இங்க இருக்க வேணாம். எங்கயாவது போய் சந்தோசமா இருங்க”

“மேடம்!”

“மேடம்! மேடம்னு என்ன கொல்லாதடா . போதுண்டா எனக்கு நீ பண்ணது எல்லாமே போதும். இதுக்கு மேலயும் என்ன கடனாளி ஆக்காத . ப்ளீஸ்!”

“ஏன் மேடம் இப்டி பேசறீங்க? என்ன நான் ஆட்டோ ஓட்டறது புடிக்கலியா? வேற ஏதாவது தொழில் செய்யறேன். ப்ளீஸ்  என்ன வெளில மட்டும் போக சொல்லாதீங்க. நாம வேண்ணா வேற ஒரு வீட்டுல இருக்கலாம். உங்கள பிரிஞ்சு மட்டும் போக சொல்லாதீங்க.”

தீர்மானமாக பேசினான்.

“ப்ளீஸ் வெற்றி! புரிஞ்சுக்கோ. உனக்குன்னு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கோ. நான் ஒரு அசிங்கம். சாக்கடை. நான் வேண்டாண்டா”

கண்களில் கண்ணீர் வழிந்தது. கைக் கூப்பினாள் . கெஞ்சினாள் .

அவன் மசிந்து விடுவானா ?

“இதுக்கா என்ன தொரத்தி தொரத்தி லவ் பண்ணீங்க? லவ்னா  கட்டி புடிக்கறது முத்தம் கொடுக்கறது மட்டும்தானா? எவன் வந்து உன்ன என்ன பண்ணா என்ன? என்னோட உசுரு மேடம் நீங்க. நீங்க ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. ”

“நீ இங்கே இருந்து போகலன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியல வெற்றி. உன்னோட வாழ்க்கையை இப்டி சிதைச்சுட்டோமேங்கற குற்ற உணர்ச்சிலேயே கூட நான் செத்துடுவேன். ப்ளீஸ்  இனிமே நீ இங்க இருக்க கூடாது.”

கை எடுத்து கும்பிட்டு கெஞ்சும் கண்மணியிடம் என்ன பேச முடியும்?

“சரிங்க மேடம்” கண்ணை துடைத்துக் கொண்டு உயிரை அங்கேயே விட்டு விட்டு பதில் பேச தெரியாமல், போக இடமில்லாமல் சென்று விட்டான். அவனுக்கு அவளை எதிர்த்து பேசத் தெரியாது.

“வெற்றி வெற்றி ! விஜயன் ஓடி வந்தார். நான் அவ கிட்ட பேசறேன். நீங்க இங்கையே இருங்க.” பெற்றவர்கள் எத்தனையோ கெஞ்சியும் அவன் அங்கு இருக்கவுமில்லை. ஏதாவது தொழில் செய்து கொள்ளுங்கள் என்று அவர் செய்த பண உதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்று இவன் இல்லை என்றால்  குடும்பம், தொழில் எதுவுமே இருந்திருக்காது. ஒன்றும் செய்ய இயலாதவர்களாக, கடன் காரர்களாய்  நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.

============================================

வித்யாவை அந்த வீட்டில் இருந்து அவளை அடுக்ககத்திற்கு வர சம்மதிக்க வைப்பதற்கே அவர்களுக்கு பெரும் பாடாகிவிட்டது. இதில் எதிர் வீட்டில் வெற்றி இருக்கிறான் என்று எப்படி சொல்வது? சொல்வதா வேணாடாமா ? நாமாக எதையும் பேச வேண்டாம் அவளாகவே தெரிந்து கொள்ளட்டும். அமைதியாகவே இருந்து விட்டார்கள். ஆனால் அன்று இரவில்  உதி குட்டி தூக்கத்தில் பா, அப்பா என்று முனகிக்  கொண்டிருந்தாள். இது ஒன்றும் புதிதில்லை. பேச்சு வருவதற்கு முன்பே பா  பா  என்று தான் லேசாக ஆரம்பித்தாள். அவள் அப்படி சொல்லும் போதெல்லாம் இவளுக்கு அதிபனின்  நினைவு வந்து விடும். நல்லவன் என்று எத்தனை நம்பி இருந்தாள் . எங்கோ யாரோ அவனை சுட்டுக் கொன்று விட்டார்களாம். ஆனால்  இவளுக்கும் இவளை போல பல பெண்களுக்கும் நடந்த அக்கிரமங்கள் மறைந்து விடுமா? அவன் நினைப்பு வந்ததுமே மகளிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வாள். கதறி அழுதாலும் தூக்க மாட்டாள். தரையில் மூலையில் அமர்ந்து, முழகாலிட்டு கதறும் மகளைப் பார்த்து அவளும் கதறுவாள்.

வித்யாவுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, உதி அப்பா என்று நம்பிக் கொண்டிருப்பது யாரை? வெறும் உயிர் வரக்  காரணமாக இருந்தவனையா? அல்லது தன்னையும் அன்னையையும் உயிராக இருந்து காத்தவனையா?

வெற்றி தான் தன்னுடைய தந்தை  என்பதை புரிந்து கொண்ட சிறு குழந்தை விரைவிலேயே தன்  அன்னைக்கும் புரிய வைப்பாள்.

அப்புறம் வேற என்ன?

கதை முடிந்து விடும்……..

சொன்னபடியே அடுத்த வாரம் வந்து பால் காய்ச்சினார்கள். வழக்கம்போலவே தான் வர முடியாது என்று முரண்டு பிடித்தாள்  வித்யா. பழைய வித்யா அடம்  பிடிப்பாள். மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வாள். சிணுங்குவாள். கெஞ்சுவாள் அதே சமயம் கொஞ்சுவாள். இந்த புது வித்யா, ஆயிரம் வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில ஒரு வார்த்தை பேசினாள் . மற்றவர்கள் எதையாவது அழுந்த கூறினால் வெறித்த பார்வையுடன் அடுத்த ஒரு வாரத்திற்கு முகத்தைக் கூட பார்க்க மாட்டாள். எத்தனை முயற்சி செய்தாலும் பெற்றவர்களால் அவளை மாற்றத்தான்  முடியவில்லை. அவள் தந்தையும் பெரும்பான்மையான கம்பனி ஷேரை   விற்று விட்டு தேவையானதை மட்டுமே வைத்துக் கொண்டு முழு நேரமும் அவளுடனேயே இருந்து பார்த்தார். ம்ம் ஒன்றும் நடக்கவில்லை. இதோ வழக்கம்போல பெரியவர்கள் மட்டுமே வந்து பால் காய்ச்சினார்கள். வெற்றியை அழைத்திருந்தார்கள்.  சாமி கும்பிட்டு பாலைப் பருகியவனுக்கு தன்னவளின் முகம் காண ஆசையாக இருந்தது. அவள் நிச்சயம் வந்திருக்க மாட்டாள் அவனுக்குத் தெரியும்.

 

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்