
அத்தியாயம் 17
சுடரொளி கூறியதைக் கேட்ட மென்மொழி, “என்னடி சொல்ற? இந்தக் கல்லாலதான் குமரிக்கண்டம் அழிஞ்சுதா? அதை நீ பார்த்தியா என்ன?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
அவள் கேள்விப்பட்ட குமரிக்கண்டமும், அதில் வாழ்ந்த மக்களும் சுடரொளி கூறியவற்றில் சற்றும் பொருந்தாமல் போனது அவளின் சந்தேகத்திற்குக் காரணமாக அமைந்தது.
மேலும், கடல்கோளால் குமரிக்கண்டம் அழிந்தது என்று சில தமிழ் இலக்கியங்களும் கூறினவே!
மென்மொழியின் கேள்விக்குப் பதிலாக, “ஆமா மொழி, முழுசா என்ன நடந்துச்சுன்னு தெளிவா தெரியலைன்னாலும், ஓரளவு நான் அங்கப் பார்த்ததை வச்சு சொல்றேன். முதல்ல சிலர் ஏதோ டிரெயினிங் மாதிரி எடுத்துட்டு இருந்தாங்க. அவங்க உடல்லயிருந்து கலர் கலரா வெளிச்சம் வெளிய வந்துச்சு. அப்புறம், அந்த இடமே ஒரே கேயோஸா இருந்துச்சு. சிலர் அங்க இருந்த மக்களை கொலை செஞ்சுட்டு இருந்தாங்க. முக்கியமா அவங்க டார்கெட் இந்தப் பவர்ஸ் இருந்தவங்கதான். அந்த இடமே போர்க்களமா இருந்துச்சு. கடைசில, யாரோ ஒருத்தர், அவங்ககிட்ட இருந்த சக்தியை பயன்படுத்தி, சுனாமியை உண்டாக்கி, அந்த இடத்தையே மூழ்கடிச்சுட்டாங்க.” என்று விளக்கமாகக் கூறினாள் சுடரொளி.
அவள் கூறியதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்த மதுசூதனன், “சுடர், அவங்க உடல்ல இருந்து வெளிச்சம் வந்துச்சுன்னா சொன்ன? அப்போ இந்தக் கல்?” என்று வினவ, “எனக்கு சரியா தெரியல. ஆனா, நான் பார்த்த வரை அவங்க உடல்லயிருந்துதான் வெளிச்சம் வந்துச்சு. அதுவும் ரெயின்போ கலர்ஸ்ல!” என்றாள் சுடரொளி.
“ஒருவேளை, இந்தப் பவர்ஸ் அங்க வாழ்ந்தவங்களுக்கு நேச்சுரலாவே கிடைச்சுருக்குமோ?” என்று யாழ்மொழி சத்தமாக யோசிக்க, “அப்போ இந்தக் கல் எங்க இருந்து வந்துச்சு? இதுக்குள்ள இருக்க பவர்ஸுக்கு என்ன காரணம்?” என்றான் இன்பசேகரன்.
“என்னோட வைல்டு கெஸ் என்னன்னா, இந்தப் பவர்ஸை வச்சு அங்க ஒரு அரசியல் நடந்துருக்கலாம். மேபி, அது பரவாம தடுக்கக் கூட, அந்த பவர்ஸையும் அந்த நிலப்பரப்பு கூடவே தண்ணிக்குள்ள மூழ்கடிக்க நினைச்சுருக்கலாம்.” என்ற யுகேந்திரன், அவனருகே இன்னும் யோசனையில் இருந்த மென்மொழியைக் கண்டான்.
அவளோ ஒரு பெருமூச்சுடன், “தாத்தாவோட ரகசியக் குறிப்புல இதைப் பத்தின தகவல்கள் கிடைக்குதான்னு பார்க்கலாம்.” என்றவள், அவள் எடுத்து வந்த குறிப்பேட்டையும் வேறு சில காகிதங்களையும் காட்டினாள்.
தனியாக இருந்த காகிதங்களைச் சுட்டிக் காட்டியவள், “இதுல, குமரிக்கண்டத்துக்கான சில மேப் இருக்கு. கையால வரைஞ்சுதுதான்… ஆனா, இதுல எதை சொல்ல வராங்கன்னு புரியல.” என்று கூற, மற்றவர்களும் அதை வாங்கிப் பார்த்தனர்.
“அப்புறம் இந்த டைரியும் கிடைச்சது. இதை நான் இன்னும் படிக்கல.” என்று அந்தக் குறிப்பேட்டை தூக்கும் போதே, அதிலிருந்து விரலி (பென்டிரைவ்) ஒன்று கீழே விழுந்தது.
அதை ஆச்சரியமாகப் பார்த்த மென்மொழி, “இது எங்க இருந்து வந்துச்சு? நான் எடுக்கும் போது கவனிக்கவே இல்லையே!” என்று கூற, “டைரியை எடுத்துட்டு அவசரமா கிளம்புனதுல நோட்டீஸ் பண்ணியிருக்க மாட்டீங்க.” என்றான் மதுசூதனன்.
“ஃபர்ஸ்ட் அந்தப் பென்டிரைவ்ல என்ன இருக்குன்னு பார்த்துடலாமா?” என்று யாழ்மொழி வினவ, அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
சுடரொளி அந்த விரலியை வாங்கி தொலைக்காட்சியில் பொறுத்த, அது வேலை செய்யவில்லை.
அதைக் கண்ட மென்மொழியோ, “ஒரு பென்டிரைவை மாட்ட தெரியல.” என்று அங்கலாய்த்துக் கொண்டே, அதைச் சரியாகப் பொறுத்தி, அதிலிருந்த ஒரே ஒரு காணொளியை ஓட விட்டாள்.
அவர்கள் எதிர்பார்த்தபடி, அதில் தோன்றியது ஆராவமுதனே!
“ரெக்கார்ட்டாக ஆரம்பிச்சுடுச்சா?” என்று யாரிடமோ கேட்ட ஆராவமுதனை வேதனையுடன் பார்த்தாள் மென்மொழி.
“என்னோட பெயர் ஆராவமுதன். ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்ல வேலை செஞ்சு ரிட்டயர்ட்டானவன். இந்த வீடியோ நீங்க பார்த்துட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு அந்தக் கற்களைப் பத்தித் தெரிஞ்சுக்கும், இல்ல அந்தக் கற்கள் உங்க கையில கிடைச்சுருக்கும்னு நம்புறேன். முதல்ல, நான் சொல்லிக்குறது என்னன்னா, அந்தக் கற்கள்… அது ஒன்னும் விளையாட்டுப் பொருள் இல்ல. ஒரு நாடும், இனமும் சிலரோட பேராசையால அழிஞ்சுப் போனதுக்கான எச்சம் அது! அதை நீங்க உபயோகப்படுத்த முடிவு பண்ணிட்டா, உங்களைச் சுத்தி ஆபத்து நெருங்கப் போகுதுன்னு அர்த்தம். ஒண்ணு, உங்களால மத்தவங்களுக்கு ஆபத்தா இருக்கலாம். இல்ல, இந்தக் கல்லைத் தீவிரமா தேடுற மத்தவங்களால உங்களுக்கு ஆபத்தா இருக்கலாம். ரெண்டுல எதுவா இருந்தாலும், அதனால பாதிக்கப்படப் போறது இதைப் பத்தி எதுவும் தெரியாத அப்பாவி மக்கள்தான்! பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி குமரிக்கண்டத்துல நடந்தது, நாளைக்கு தமிழ்நாட்டுலயும் நடக்கலாம்… கொஞ்சம் கொஞ்சமா உலகம் முழுக்க பரவலாம்.” என்றவர் ஒரு பெருமூச்சு விட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவங்களிற்குத் திக்திக்கென்று இருந்தது.
மூப்பின் காரணமாகத் தொடர்ந்து உரையாட முடியாமல் இடைவெளி விட்டுப் பின் மீண்டும் பேச ஆரம்பித்தார் ஆராவமுதன்.
“முதல்ல இந்தக் கல் எப்படி எங்களுக்குக் கிடைச்சதுன்னு சொல்றேன். பூம்புகார்ல கடல்சார் அகழ்வாராய்ச்சி நடத்தும்போது, அங்க எங்களுக்குக் குமரிக்கண்டம் சார்ந்த சில பொருட்கள் கிடைக்க ஆரம்பிச்சது. அதை ஆர்வத்தோட என் உயரதிகாரிங்க கிட்ட சொன்னப்போ, அவங்க அதுல பெருசா ஆர்வம் காட்டல. ஹ்ம்ம், அதுக்குக் காரணம் பாலிட்டிக்ஸ்னு சொல்லணுமோ! தமிழ் சார்ந்த ஒரு கண்டுபிடிப்பை உலகத்துக்கு கர்வத்தோட சொல்ல முடியலையேன்னு எனக்கு ரொம்ப வருத்தமும் கோபமும் இருந்துச்சு. ஆனா, பின்னாடி நடக்கப் போறது தெரிஞ்சுருந்தா, அப்போவே இந்த ஆராய்ச்சியை கைவிட்டுருப்பேனோ என்னவோ! எல்லாம் விதி…” என்றவர் மீண்டும் ஒரு பெருமூச்சை வெளியிட்டார்.
அவரின் முகமே அவரின் வருத்தத்தை பிரதிபலித்தது.
“என்னதான் கவர்மெண்ட் இந்த ஆராய்ச்சியை நிறுத்தச் சொன்னாலும், நாங்க ரகசியமா ஆராய்ச்சியை தொடர்ந்து செஞ்சுட்டுதான் இருந்தோம். அப்போதான் எங்களுக்கு ரெண்டு பெட்டியும் சில குறிப்புகளும் கிடைச்சது.” என்று அவர் கூற, மற்றவர்கள் அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற ஆர்வத்துடன் கவனித்தனர்.
“ஆனா, ஒரு பெட்டி ஏற்கனவே திறந்து கிடந்தது. அதுக்குள்ள எதுவும் இல்ல. இன்னொரு பெட்டி நல்ல கனமா இருந்துச்சு. அதைச் சாதாரணமா திறக்கவோ உடைக்கவோ முடியல. அப்போவே, அதுக்குள்ள ஏதோ இருக்குன்னு என்னோட உள்மனசு சொல்லுச்சு. என்னோட கவனமெல்லாம் அதைத் திறக்குறதுல இருந்துச்சு. பல மாசத்துக்கு அப்புறம் ஒரு வழியா அந்தப் பெட்டி திறக்கவும் செஞ்சுச்சு. ஆனா, இதுல இருக்க மர்மம் என்னன்னா, அது எப்படி திறந்துச்சுன்னு இதுவரை எனக்குத் தெரியல. நாங்க எவ்ளோ முயற்சி செஞ்சும் திறக்காதப் பெட்டி தானா திறந்துச்சா… அதுதான் அதுக்கான விதியா… எதுவும் புரியல எங்களுக்கு! நீங்க நினைக்கிற மாதிரி அதுக்குள்ள இருந்தது வானவில் நிறக் கற்கள்தான். ஆனா, அது இப்போ உங்ககிட்ட இருக்க கற்கள் இல்ல!” என்று அவர் கூறியதைக் கேட்டவர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஆமா, உங்க கிட்ட இப்போ இருக்குறது ரெண்டாவதா எனக்குக் கிடைச்ச கற்கள்… நான் மத்தவங்க கிட்ட இருந்து மறைச்சு வச்ச கற்கள்! அப்போ முதல்ல எங்களுக்குக் கிடைச்ச கற்கள் என்னாச்சுன்னு யோசிக்கிறீங்களா?” என்றவர் ஒரு விரக்தி சிரிப்புடன்,
“அதுவரை எங்க ஆராய்ச்சில தலைகாட்டாத உயரதிகாரிங்க, இந்தக் கற்கள் கிடைச்சதும், அதைப் பத்திக் கேட்க ஆரம்பிச்சாங்க. திடீர்னு ஒருநாள், கார்பன் டேட்டிங் பண்றதுக்காக வாங்கிட்டுப் போனவங்க கிட்ட இருந்து, அதுல ரேடியோ-ஆக்டிவ் எமிஷன் வருதுன்னும், அதுக்கான ரிசர்ச் போயிட்டு இருக்குன்னும் தகவல் வந்துச்சு. அதுக்கப்புறம், சில மாசங்களா எந்தத் தகவல்களும் இல்ல. அப்போதான் எங்களுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சது. அவங்க கிட்டயே நேரடியா போய் கேட்டப்பதான், அவங்க ரிசர்ச் பண்றது கவர்மெண்ட்டுக்காக இல்லன்னும், அவங்களோட சொந்த லாபத்துக்காகன்னும் தெரிய வந்துச்சு. நான் இது ஆபத்துன்னு எவ்ளோவோ எச்சரிச்சும் அவங்க அந்த ரிசர்ச்சை நிறுத்துறதா இல்ல. இதைப் பத்தி வெளிய சொன்னா, எங்க உயிருக்கு ஆபத்துன்னும் மிரட்டுனாங்க. சில கற்கள் கிடைச்சதுக்கே இப்படின்னா, அகழ்வாராய்ச்சில வேற ஏதாவது தகவல்கள் கிடைச்சா, அதையும் அவங்க சுயலாபத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்கன்னு வெறுத்துப் போய்தான், ஆராய்ச்சியையே முடிச்சுக்குறோம்னு எழுதிக் குடுத்துட்டு வந்துட்டேன்.” என்றார்.
“ஆனா, அவங்க அதோட நிறுத்தல. அவங்க ஆராய்ச்சி முன்னேறாம ஒரே இடத்துல தேங்கி நிக்குதுன்னு, எங்க டீம்ல இருந்த ஒவ்வொருத்தவங்க கிட்டயும் வேற ஏதாவது தகவல் கிடைச்சதான்னு கேட்டுட்டே இருந்தாங்க. அதுல பலரை அவங்க கொல்லவும் தயக்கம் காட்டல. இதுல வேடிக்கை என்னன்னா, என்னை மட்டும் கொல்லாம விட்டு வச்சாங்க. என்னால, அவங்க ஆராய்ச்சிக்கு ஏதாவது யூஸ் இருக்கும்னு நினைச்சுருப்பாங்க போல… அது உண்மையும் கூட! ஏன்னா, நான் அந்த ஆராய்ச்சியை ரகசியமா தொடர ஆரம்பிச்சேன். அது கொஞ்சம் கூட வெளிய கசியக் கூடாதுன்னு, யாரோடவும் நான் தொடர்பு வச்சுக்கல, ராகவனைத் தவிர்த்து!” என்றதில், அனைவரின் பார்வையும் மதுசூதனனைத் தொட்டு மீண்டது.
“அவங்களுக்குத் தெரியாதது, அந்தக் கற்களைப் பத்தின ரகசியம் எங்களுக்கு ஏற்கனவே தெரியுங்கிறது! ஆமா, இந்த ரகசியத்தைப் பாதுகாக்கவே ஆறு உயிர்கள் போயிருக்கு. இப்போ அந்த ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்லப் போறேன். இது தெரிஞ்சதுக்கு அப்புறம், இந்தக் கற்களை மட்டுமில்ல, ஒரு வகையில இந்த உலகத்தைக் காப்பாத்துறதும் உங்க கையிலதான் இருக்கு.” என்றவர், ஒரு இடைவெளி விட்டு,
“என்னடா ஆறு உயிர் போயிருக்கு… அவங்க பாதுகாத்ததா சொல்ற ரகசியத்தை ஒரு வீடியோல சாதாரணமா சொல்றேனேன்னு நீங்க நினைக்கலாம்…” என்று கூற, மற்றவர்கள் அதை எண்ணினரோ என்னவோ, யுகேந்திரன் அதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“மொழிம்மா…” என்று ஆராவமுதன் அழைக்க, மற்ற ஐவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, மென்மொழியோ கண்களில் தழும்பியிருந்த கண்ணீருடன் கண்டாள்.
“நீயும் அந்த குழுவுல ஒரு ஆளா இருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது இப்போன்னு இல்ல, நீ முதல் முறையா அந்தக் கற்கள் இருந்த பெட்டியைத் திறந்தப்பவே, உன் கைப்பட்டு அந்தக் கற்கள் ஒளிர ஆரம்பிச்சப்பவே எனக்குத் தெரியும்… உன்னை அந்தக் கற்கள் தேர்ந்தெடுத்துருக்குன்னு… ஆமா, அந்தக் கற்களால தேர்ந்தெடுக்கப்பட்டவங்களாலதான் அதுலயிருக்க சக்திகளை முழுசா பயன்படுத்த முடியும். அதனாலதான், உன்னோட ஃபிங்கர்பிரிண்ட் இருந்தா மட்டும் ஓப்பனாகுற மாதிரியான பென்டிரைவ்ல இந்த வீடியோவை சேவ் பண்ணப் போறேன். இதனால, உனக்கும் ஆபத்து வரலாம். கவனமா இரு மொழிம்மா.” என்றார்.
அதைக் கேட்ட சுடரொளியோ, “அதனாலதான், நான் போட்டப்போ ஒர்க்காகலையா? நான் கூட என்னையே தப்பா நினைச்சுட்டேன்.” என்று மென்மொழியை பார்த்தபடி கூற, அவளோ திரையில் தெரிந்த ஆராவமுதனை கண்ணீருடன் பார்த்தபடி இருந்தாள்.
அப்படி, ஆராவமுதன் கூறப்போகும் ரகசியம் என்ன? அதனால் வரப் போகும் ஆபத்து என்ன?
தொடரும்…

