Loading

ருத்ரன் “உன்னைக் கேள்வி கேட்டா நீ பதில் சொல்லு. அதை விட்டுட்டு என்னைத் திரும்பக் கேள்வி கேட்கிற?” என்றான்.

 

“இப்பவும் அதைத்தான் சொல்றேன். நீ நிதானமா உட்கார்ந்து பொறுமையா யோசிச்சாலே, உனக்குத் தேவையான விசயம் உனக்குக் கிடைக்கும்.”

 

“விழிமா, சீரியஸா பேசிட்டு இருக்கேன். அடிச்சிடப் போறேன். இவ்வளவு நாள் இதைப்பத்தி யோசிக்காமல் இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா? எனக்குத் தெரியாமல், புரியாமல் தானே உன்கிட்டக் கேட்கிறேன்.”

 

“சரி மாமா, நீ இவ்ளோ நாள் யோசிச்ச. அதுல உனக்குக் கொஞ்சம் கூட எந்த இடத்திலுமே உனக்கு எப்பொழுது இருந்து என்னைப் பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தோணவில்லையா?”

 

“அடிச்சேனா பாரு” என்று அவளது பக்கம் கையை உயர்த்திக் கொண்டு வந்தவன், அவள் கண்களை மூடிக்கொண்டு நிற்கவும், கையைக் கீழே போட்டு இருந்தான்.

 

அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தவள், “எப்படியும் என்கிட்ட இருந்து உனக்கான பதில் கிடைக்காது. நிதானமா யோசி” என்று விட்டு அந்தப் பக்கம் சென்று படுத்துக் கொள்ள,

 

“அடியே, இங்க ஒருத்தன் கத்திகிட்டு இருக்கேன். பதில் சொல்றேன், சாப்பிட்டுக் குளிச்சிட்டு வான்னு சொன்ன.

 

இதுக்கு தான் என்னைச் சாப்பிட்டு வா, குளித்துட்டு வான்னு சொன்னியா? நீ பதில் சொல்லலடி” என்றான்.

 

“இப்பவுமே அதான் மாமா சொல்றேன். என்கிட்ட இதுக்கான பதில் இல்லை. உன்கிட்ட தான் இருக்கு” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

ருத்ரனுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

 

ஒன்றும் புரியாமல் ஒரு சில நொடி நின்று அவளைப் பார்த்தவன், தனது மொபைலைத் தேடி எடுத்துக் கொண்டு, பால்கனிப் பக்கம் சென்று தனது நண்பனுக்கு அழைத்தான்.

 

மணி இரவு ஒன்பதரை ஆகி இருந்தது.

 

சரோ வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டு இருக்க,

 

போன் அடிக்க எடுத்து “என்ன மச்சான், பிஸியா இருப்பேன்னு நினைச்சேன். எனக்கு போன் பண்ற, அவ்வளவு பாசமா என் மேல உனக்கு?” என்று சிரித்துக் கொண்டே சரோ கேட்க,

 

அந்தப் பக்கம் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த ருத்ரன் இன்னும் கத்தச் செய்தான்.

 

“தங்கச்சியையும் அனுப்பி விட்டுட்டு அவ ஒரு பக்கம் என்னை டார்ச்சர் பண்றா… நான் உனக்கு போன் போட்டா நீயும் கடுப்பேத்துற” என்றான்.

 

“கொஞ்சம் பொறுமையா இரு. என்ன இப்ப நான் தப்பா கேட்டுட்டேன். பிஸியா இருப்பியே, இந்த நேரத்துல எனக்கு போன் போட்டு இருக்க என்று தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன்?”

 

இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளை உபயோகித்த ருத்ரன்,

 

“வெங்காயத்தில பிஸியா இருக்காங்க.” என்றான்.

 

“சரி மச்சான், விடு விடு என்ன ஆச்சு? அதைச் சொல்லு முதல்ல. அப்புறமா நம்ம அடுத்த விஷயத்துக்கு வருவோம். நடந்த விஷயத்துக்கு வா” என்று கேட்க,

 

நடந்த அனைத்தையும் ருத்ரன் சொல்ல,

 

“என் தங்கச்சி ஒன்னும் தப்பா சொல்லலையே மச்சான். நீ தானே யோசிக்கணும்.”

 

“சரோ, சீரியஸா என்ன செய்வேன்னு தெரியாது. என் பக்கத்துல இருந்தன்னு வச்சுக்கோ” என்றான்.

 

“உனக்கு எப்ப இருந்துடா தெரியும்? நான் அவளை விரும்புகிறேன் என்று.”

 

“இப்போ நீ அவளை எப்போ விரும்ப ஆரம்பிச்சேன்னு எனக்குத் தெரிஞ்சது முக்கியமா மச்சான், இல்ல நீ எப்ப இருந்து அவளை விரும்ப ஆரம்பிச்ச என்பது முக்கியமா?” என்று கேட்க,

 

“சொல்லி வச்ச மாதிரியே ஒரே மாதிரி கேள்வி கேக்குறீங்க டா.”

 

“அதான் மச்சான் நானும் கேட்கிறேன். எனக்கு எப்போ தெரியும் என்று மட்டும் தெரிஞ்சா போதுமா உனக்கு? நீ அவளை விரும்ப ஆரம்பிச்சு ஒரு வருஷம் கழிச்சு கூட எனக்குத் தெரிஞ்சி இருக்கலாம். ஒரு மாசம் கழிச்சுத் தெரிஞ்சிக்கலாம். அதனால அப்பத்தான் நீயும் அவளை விரும்ப ஆரம்பிச்ச என்று ஆயிடுமா?”

 

“நான் என்ன தான் செய்யணும்னு நெனச்சிட்டு இருக்கீங்க?” என்று ருத்ரன் கேட்க,

 

“அமைதியா இருந்த என்னை, உன் தங்கச்சி உசுப்பேத்தி விட்டுட்டு வேடிக்கை வேற காமிச்சிட்டு இருக்கா… என்னால அவளை நெருங்கவும் முடியல. அவளை விட்டு விலகவும் முடியல, இப்போ இந்த நேரத்துல எந்த யோசனை வரும்?” என்றான்.

 

அங்கு சரவணன் வேகமாகச் சிரித்து விட்டான்.

 

“அவ்ளோ ஆசையா இருந்தா போய் வாழ்க்கையை ஆரம்பி மச்சான்…” என்றான்.

 

“உண்மையா கொன்றுவேன். வாழ்க்கையை ஆரம்பிக்கத் தெரியாம தான் இங்க உட்கார்ந்து இருக்காங்களா? அப்படி ஆரம்பிக்கலாம் என்று ஆசைப்பட்டு இருந்தா, ஊரிலேயே ஆரம்பித்து இருப்பேன். அதுக்கு எதுக்குடா நான் ஒரு வருஷம் காத்துட்டு இருக்கணும்?”

 

“கல்யாணம் ஆன அடுத்த நாளிலிருந்து அவள் கூட வாழனும்னு தோணுச்சா?” என்று சரோ கேட்க,

 

“சரோ விளையாடாத, நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.”

 

“நானும் சீரியஸா தான் மச்சான் கேட்கிறேன்.”

 

“நீ தான சொன்ன? ஒரு வருஷமா எனக்கு வாழத் தெரியாதான்னு” என்றான்.

 

“வைடா போனை” என்றான் ருத்ரன்.

 

“நானா ஃபோன் பண்ணேன். நீதானே மச்சான் போன் போட்ட நீயே வை.”

 

“உங்களையெல்லாம் திருத்த முடியாது” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்யப் போக,

 

“டேய் டேய்” என்று சரோ கத்த,

 

“சொல்லித் தொலை” என்றான்.

 

“சாப்டீங்களா இல்லையா?”

 

“அதெல்லாம் சாப்பிட வச்சுக் கூப்பிட்டு வந்து தான் உன் தங்கச்சி என்னைப் பழி வாங்குறா? எத்தனை நாள் ஆசையோ தெரியல, என்ன வச்சு செய்றா…” என்று சொல்ல,

 

இங்குச் சரவணன் சிரித்துவிட்டு, “சரி மச்சான், ஏதாவது என்றால் போன் பண்ணு” என்று விட்டு வைத்து விட்டான்.

 

இங்கு ருத்ரன் தான் மண்டையைப் பிடித்துக் கொண்டு பால்கனியிலேயே நின்று கொண்டிருந்தவன், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தமிழைப் பார்த்தான்.

 

அவளது கண்கள் ஒரு சில நொடி கூட வேறு பக்கம் நகராமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க, அவளைப் பார்த்துக் கை காமிக்க வேகமாக எழுந்து வந்தவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“போ விழி மா, என்னை நீ படாதபாடு படுத்துற” என்றான்.

 

அவள் அமைதியாகவே இருக்க,

 

அவளது தலையைக் கோதிக் கொண்டே தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அவனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

 

‘தான் இவளை எப்போது இருந்து விரும்ப ஆரம்பித்திருப்போம்?’ என்று யோசனையில் மூழ்கி இருந்தான்.

 

இங்குத் தமிழ் அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களை மெதுவாக வருடிக் கொண்டு இருந்தாள். அந்த உணர்வு கூட இல்லாமல் ருத்ரன் நினைவுகள் பின்னோக்கி தான் இருந்தது.

 

பள்ளிப் பருவத்தை யோசித்துப் பார்த்தான். அப்பொழுதெல்லாம் தனக்கு அவள் மேல் அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லை.

 

‘தனது மாமன் மகள், தன்னுடன் வளர்பவள் என்ற எண்ணத்தைத் தாண்டி அவள் மீது தனக்கு எப்போது காதல் துளிர் விட்டிருக்கும்?’ என்று யோசனையில் உழன்று கொண்டு இருந்தான்.

 

தமிழ் கல்லூரி முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருந்தாள். அந்த வேளையில் அகிலாவும் தமிழும், அப்பொழுது எல்லாம் அவர்களுக்கு வண்டி வாங்கித் தராத காரணத்தினால் பஸ்ஸில் தான் காலேஜ் சென்று வந்து கொண்டு இருந்தார்கள்.

 

 

ஆரம்பத்தில் பஸ்ஸில் சென்று வந்தார்கள்.

 

தங்களுக்குச் சரியான நேரத்திற்கு காலேஜுக்கு செல்ல முடியவில்லை. சரியான நேரத்திற்கு பஸ் இல்லை என்ற காரணத்தினால், முன்கூட்டியே சென்று அங்கு ரொம்ப நேரம் உட்கார்ந்து இருப்பது போல் இருக்கிறது.

 

இல்லை ஃபர்ஸ்ட் அவர் ஸ்டார்ட் ஆனதுக்கப்புறம் காலேஜ் செல்லும் படியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இருவரும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் பள்ளிக்கு உபயோகித்த சைக்கிளில் காலேஜ் சென்று வருவதாகச் சொல்ல,

 

வீட்டில் உள்ள பெரியவர்கள் “இவ்வளவு தூரம் வேண்டாம். பஸ்ஸில் சென்று வாருங்கள்” என்று சொல்ல,

 

ருத்ரன் தான் தனது இரண்டு மாமாவிடமும் பேசி இருவரையும் “சைக்கிளில் சென்று வரட்டும், பேசிக் கொண்டே சென்று வந்தால், அவர்களுக்கும் பெரிதாக அலைச்சல் தெரியாது” என்று சொல்லியிருந்தான்.

 

அப்படி இருவரும் கல்லூரி சென்று வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் தமிழ் கீழே விழுந்து அப்பொழுது எல்லாம் சுடிதார், தாவணி பாவாடை அணிந்து தமிழ் காலேஜ் சென்று வருவாள்.

 

அன்று, தாவணி போட்டுக் காலேஜ் சென்று இருக்க கீழே விழுந்து விட்டதால் முட்டியில் அடிபட்டதாக, வீட்டில் வந்து தனது அத்தையிடம் அதாவது ருத்ரனின் அம்மாவிடம் வந்து புலம்பி அழுது கொண்டு இருக்க, ருத்ரன் அப்பொழுதுதான் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தான்.

 

காலேஜ் முடிந்து வந்தவள், தனது பாவாடை தாவணியில் பாவாடையை முட்டிவரை மேல் உயர்த்தி, தொடைப் பகுதி வரை உயர்த்தி இருந்தாள். தனது அத்தையிடம் காண்பித்து, “அதிகமா வலிக்குது. வீட்டுக்குப் போய் அம்மாகிட்டச் சொன்னா திட்டும். ஏற்கனவே அம்மாவும் அப்பாவும் என்னை சைக்கிள்ல போக வேணாம்னு சொன்னாங்க. மாமா சொன்னதால தான் அனுப்பி விட்டாங்க” என்று சொல்லிக் கொண்டு இருக்க,

 

அவள் பேசியதை மட்டும் காதில் வாங்கியவன் வேகமாக வந்தான். அப்பொழுது அவளது முட்டியில் லேசாகச் சதை பெயர்ந்து காயமாக இருக்க, அதைப் பார்த்தவன்,

 

வேகமாக அவளது அருகில் வந்து அவள் ஒரு பெண், அதுவும் வயதிற்கு வந்த பெண் என்று கூட உணர்வு இல்லாத ருத்ரன்,

 

அவளது பாவாடையை இன்னும் லேசாக மேலே உயர்த்தி விட்டு, “என்னடி ஆச்சு? விழிமா கீழே விழுந்துட்டியா? இவ்ளோ காயம் இருக்கு, சதை வேற பெயர்ந்து இருக்கு” என்று அவளுக்கு வலிக்கும், எரிச்சல் இருக்கும் என்று எண்ணி ஊதிவிட்டுக் கொண்டே தன் அம்மாவை முறைத்துவிட்டு,

 

“அவதான் கதை சொல்லிட்டு இருக்கா, நீ கேட்டுட்டு இருக்கியா? மருந்து போடக் கூடத் தோணலயா?” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கு இருக்கும் மருந்து எடுத்து வந்து அவளது கால் முட்டியில் வைத்துவிட்டு,

 

ஊதிக்கொண்டே “எரியுதா விழிமா?” என்று கேட்டது எல்லாம் இப்போது அவனது நினைவில் வந்து செல்ல, தன் நெற்றியில் பொறி தட்டியது போல் உணர்ந்தவன், வேகமாகக் கீழே குனிந்து விழியைப் பார்க்க, அவனைப் பார்த்துக் கொண்டே அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களை இழுத்துக் கொண்டிருந்தாள்.

 

விழி அவனது கண்களையே உற்றுப் பார்க்க,

 

கீழே குனிந்த ருத்ரன் அவளது கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு, “அப்போ இருந்தாடி” என்று கேட்க,

 

அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தவள், “எப்ப இருந்து மாமா?” என்று கேட்டாள்.

 

“உண்மையா விளையாடாதேடி” என்றான்.

 

“உனக்கு என்ன தோணுச்சு என்று நீ சொன்னா மட்டும் தான் மாமா, எனக்குத் தெரியும் என்றாள்.”

 

“என் பார்வையிலேயே எல்லாம் தெரியும்னு சொன்ன?”

 

“அதுக்காக நீ என்ன யோசிக்கிற இந்த நிமிஷம், அப்படின்ற அளவுக்கு எல்லாம் பூதக்கண்ணாடி வச்சுப் பாக்குற அளவுக்கு நான் ஒன்னும் மந்திரவாதி அல்ல, மாயமந்திரம் செய்கிறவளும் இல்லை” என்று சிரித்தாள்.

 

“அதான், என்ன மாயம் மந்திரம் செஞ்சனு தெரியலையே. என்னோட மொத்த நினைவும் உன் பின்னாடிதானே சுத்துது” என்று அவளது நெற்றியில் முட்டிவிட்டுத் தான் யோசித்ததைச் சொல்ல,

 

கண்கள் கலங்க அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். “என்னடி?” என்று கேட்க, தன்னையும் மீறி அவனை இறுக்கி அணைத்தவள் அழச் செய்தாள்.

 

அவனது வெற்று உடம்பில் அவளது கண்ணீர் பட்டது.

 

“விழி மா, இப்ப எதுக்கு அழுவுற?” என்று கேட்டான்.

 

“நீ அப்பொழுது இருந்து என்னை விரும்புகிறாயா? இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், உன்னை நான் அப்ப இருந்து தான் மாமா விரும்ப ஆரம்பிச்சேன்” என்று சொல்ல,

 

அவளைத் தனக்குள் புதைத்துக் கொள்ளும் ஆசை வர, தன் நெஞ்சோடு அவளை அழுத்திப் புதைத்துக் கொண்டான் ருத்ரன்.

 

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை தானே… இந்த நொடிதான் அவளை அப்போது இருந்துதான் விரும்பி இருப்போமா? என்று யோசிக்க,

 

‘இவள் என்னவென்றால் தனக்கு அப்போதுதான் உங்கள் மீது விருப்பம் ஏற்பட்டது என்று சொல்கிறாள். அப்போது இருந்தே இவள் தன்னை விரும்புகிறாளா?’ என்று யோசித்துக் கொண்டே அவளை இன்னும் இன்னும் தன்னோடு புதைத்துக் கொள்ள,

 

ஒரு சில வினாடிக்குப் பிறகு மூச்சு முட்ட, “மாமா விடு” என்றாள் தமிழ்.

 

அவளைத் தன்னிலிருந்து பிரித்தவன் அவளது கண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண்ணை மூடிய நொடி அவளது கண்ணில் முட்டிக்கொண்டு இருந்த கண்ணீர் கிழே சிந்தியது.

 

அவளது கண்ணில் இதழ் பதித்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் அப்பொழுதும் கண்ணைத் திறக்காமல் இருக்க, அவளது உச்சியில் இதழ் பதித்தான். அடுத்த நொடி அவள் கண்கள் திறக்க அவளது கண்கள் கலங்கி இருந்தது.

 

“சத்தியமா எனக்குத் தெரியலடி, நான் உன்னோட காதலையும் உணரவில்லை. என்னோட காதலையும் உணரவில்லை. அப்போ, ஏதோ ஒரு வேகத்துல வந்து…” என்று விட்டு அமைதியாக நிறுத்த,

 

“அன்னைக்கு நீ சாதாரணமாகச் செஞ்சுட்டு போயிட்ட மாமா. அப்போ எனக்கும் எதுவும் தோணல. ஆனால், வீட்டுக்குப் போனதிலிருந்து உன் நினைப்பாவே இருந்துச்சு. அந்தக் காயம் ஆறுகிற வரைக்கும் உன்னோட ஞாபகமா தான் இருக்கும். அதுக்கப்புறம் கூட எங்கேயாவது கீழே விழுந்து அடிபட்டா, என்னோட மாமா எனக்கு மருந்து போடுவாரு அப்படின்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு வந்துச்சு.

 

அந்த வயசுல அது எனக்குப் பெருசா தெரியல. அதனால அதை நான் பெருசா எடுத்துக்கல. அப்படியே வளர வளர அகிலா தான் என்னை ஒரு நாள் காலேஜ் விட்டு வரும்போது தாடையில் அடிச்சிட்டு, வீட்ல பெரியப்பா கிட்ட ஸ்கூட்டி வாங்கித் தரச் சொல்லி அடம் புடிச்சா…

 

எதுக்குடின்னு கேட்டதுக்கு, மூடிட்டு இரு நானும் பாத்துட்டே இருக்கேன். ஒரு நாளைக்கு 1000 முறை மாமாவைப் பத்திப் பேசிட்டு இருக்க என்றாள். உன் போக்கும் சரியில்ல என்று எச்சரிக்கை செய்தாள்.

 

அதன் பிறகு தான், நான் உன்னை விரும்புவதையே நான் உணரச் செய்தேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன்பு வரை அது வெறும் ஈர்ப்பு, வயதுக் கோளாறு என்றுதான் நினைத்தேன். ஆனால், அவள் சொல்லியதற்குப் பிறகுதான் நான் உன்னை விரும்புவதையே உணர்ந்தேன்.

 

அவளைப் பார்த்து நான் திருதிருவென முழிக்க, அகிலா என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

 

நீ மாமாவை விரும்ப ஆரம்பிச்சுட்ட தமிழ். இது நல்லதா கெட்டதா எனக்குத் தெரியல. எங்க போய் முடியும்னு தெரியாது. மாமா சாதாரணமா தன்னோட மாமா பொண்ணுனு நெனச்சுப் பண்ணுனத நீ தப்பா எடுத்துகிட்டியானு எனக்குப் பயமா இருக்குடி… பின்னாளில் நீ மாமா கிட்டப் போய் உன்னோட விருப்பத்தைச் சொல்லி மாமா ஏத்துக்கலைன்னா, என் தமிழ் எந்த அளவுக்குக் கஷ்டப்படுவா என்று எனக்குத் தெரியும்னு அழுதா.

 

அதன் பிறகு தான், சரி இது நல்லதுக்கு அல்ல. அதுவும் தங்கள் குடும்பத்திற்கு நல்லது இல்ல. தன்னுடைய விருப்பம், தன்னுடைய மொத்தக் குடும்பத்தையும் எங்கு பிரித்து விடுமோ?” என்ற பயத்திலேயே அவனிடமிருந்து சிறிதாக விலகச் செய்து இருந்தாள் தமிழ்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்