
தமிழ் தனாவைத் தனியாக அழைத்தாள்.
“என்ன தனா ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,
“இல்ல அண்ணி, எனக்கு லேசா பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இருவரது அருகில் வந்த ருத்ரன் தனது தங்கையைப் பார்த்துக் கொண்டிருக்க,
“தப்பா எடுத்துக்காத அண்ணா, எனக்கு உண்மையாவே பயமா இருக்கு. வேற ஒன்னும் இல்ல” என்றாள்.
“சரி விடு” என்று விட்டு ருத்ரன் அமைதியாக நகர,
எங்கு அவனுக்குக் கோவம் வந்துவிட்டதோ? என்று தமிழும், தனாவும் நினைத்தார்கள்.
தனது அண்ணனுக்குத் தன் மேல் கோபம் போல என்று எண்ணி விட்டுத் தனா கையைப் பிசைந்து கொண்டு நிற்க,
“நான் பேசுறேன் தனா, ப்ரீயா விடு நீ” என்று அவள் தோளில் தட்டி விட்டு நகர,
ருத்ரனிடம் சென்று, “என்ன மாமா, அவ மேல உனக்குக் கோவமா?” என்று கேட்டாள்.
“அப்படிலாம் ஒன்னும் இல்லடி. விடு. நம்ம கோவிலுக்குப் போயிட்டு வரலாம்” என்றான்.
“இப்பவா? உனக்கு அசதியா இல்லையா?”
“கோயிலுக்குப் போலாம், வரியா? இல்லையா?” என்று திரும்ப ருத்ரன் கேட்க,
“நம்ம மட்டுமா?” என்றாள்.
“பெரியவங்க வீட்ல இருக்கட்டும். அவங்களுக்கு தான் டயர்டா இருக்கே… நம்ம மட்டும் போயிட்டு வரலாம். நம்ப மட்டும்னா, நம்ப மட்டும் இல்ல. எல்லாரும் தாண்டி” என்றான்.
“சரி” என்று விட்டு அனைவரிடமும் சொல்ல,
மாலை 6 மணி போல் சிறியவர்கள் மட்டும் அனைவரும் கோவிலுக்குச் சென்றார்கள்.
குழந்தை அமுதனும் அசதியில் உறங்கி இருக்க,
பாக்கியம் தான், “தம்பி இங்கயே இருக்கட்டும். நீங்க மட்டும் கோயிலுக்குப் போயிட்டு வாங்க, அதான் நாங்க இருக்கோம் இல்ல. பார்த்துக்கிறோம்” என்றார்.
அமுதன் பெரியவர்கள் அனைவரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டதால், “சரி” என்று விட்டு அகியும் கோவிலுக்குச் சென்று இருந்தாள்.
சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கும் பொழுது எழுந்து நின்ற சரவணன்,
“தனா, கொஞ்சம் குளத்துகிட்ட வரியா, பேசணும்” என்று அனைவரின் முன்பு எழுந்து நின்று கேட்க,
முதல்முறையாகத் தன்னிடம், அதும் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று தன்னுடைய மாமா கேட்பதை உணர்ந்த தனா ஒன்றும் புரியாமல் கண்ணைத் திருதிருவென முழித்துக் கொண்டு தனது அண்ணன் அண்ணியைப் பார்க்க,
ருத்ரனுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்துவிட்டது.
சரவணன் ருத்ரனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு தான் இருந்தான்.
“அப்ப மாமனும் மச்சானும் என் தங்கச்சியை வச்சு விளையாடிட்டு இருக்கீங்களா?” என்று சொன்ன மகி,
தனாவின் தோளில் தட்டி, “நீ போய் பேசிட்டு வாடா தனா மா, அண்ணன் இருக்கேன். மாமனும், மச்சானும் என்ன பண்ணிடுவாங்கனு நான் பார்க்கிறேன்” என்று சொல்ல,
எழுந்து நின்ற தனா தனது தோழியை ஒரு நொடி பார்த்தாள்.
காயத்ரி கண்ணை மூடித் திறக்க எதுவும் பேசாமல் சரவணன் செல்லும் இடம் நோக்கிச் சென்றாள்.
அவள் சென்றவுடன், “இதுக்கு தான் நம்ம மட்டும் கோயிலுக்குப் போகலாம்னு கூப்பிட்டியா மாமா” என்று கேட்டாள் தமிழ்.
“லூசு, நான் சாதாரணமா தான் கோவிலுக்குப் போலாம்னு சொன்னேன். நீயே தப்பா எடுத்துக்காத” என்றான்.
“சரி” என்று விட்டு மற்ற அனைவரும் பேசிக்கொண்டு இருக்க,
தனா அமைதியாக நின்று கொண்டு இருக்க, சரவணன் அவளது அருகில் சிறிது இடைவெளி விட்டு நின்று, “என்ன தனா, உனக்கு இப்போ மனசுல யோசனை?” என்றான்.
தனா தன்னையும் மீறி வேகமாக அவனைக் கட்டி அணைத்து கொண்டு, அவனது நெஞ்சில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டு அழச் செய்தாள்.
“மாமா உண்மையாவே எனக்குப் பயமா இருக்கு. இப்போ, இந்தக் கல்யாணம் வேணுமா என்று?” என்றாள்.
“இப்ப வா… இல்ல, எப்பயுமே வேணாமா? அதை முழுசா சொல்லு”.
அவனது நெஞ்சில் இரண்டு மூன்று அடிகளைக் கொடுத்துக் கொண்டே “எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு மாமா. எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியல, ஆனா…” என்று நிறுத்தினாள்.
அவளது கண்ணை உற்று நோக்கிய சரோ, “உனக்கு என்னைப் புடிச்சிருக்கா இல்லையா? அதை மட்டும் சொல்லு” என்றான்.
“லூசா மாமா நீ? இப்போ அதைத் தானே சொன்னேன். எனக்கு உண்மையிலேயே உன்னைப் பிடிச்சிருக்கு”
“அதோட விடு. அதுக்கு அப்புறம் வேற எதுவும் பேச வேண்டாம், மற்றதை நான் பார்த்துக்குறேன்.”
“உனக்கு என்னை பிடிச்சு இருக்கு தான. ஆனா நீ…” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
தனக்கு விருப்பம் என்பதை வேகமாகச் சொல்ல முடிந்த தனாவால், நீங்களும் என்னை விரும்புகிறீர்கள் தானே? என்று கேட்க ஏதோ ஒன்று தடுக்க,
அவளைப் பார்த்துச் சிரித்த சரோ,
“எனக்கு உன்னப் பிடிக்கும்டி இப்போ இல்ல… 8 வருஷமா உன்னப் பிடிச்சிருக்கு போதுமா? எட்டு வருஷமா உன் மேல பைத்தியமா இருக்கேன்” என்றான்.
“எது?” என்று அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க,
“நீ ஏஜ் அட்டன்ட் பண்ண அப்போல இருந்து உன்னப் பிடிக்கும் டி. இது உன் அண்ணனுக்கும் தெரியும்.” என்றான்.
“ஆனா இதுவரைக்கும் அண்ணா என்கிட்ட இதப்பத்திப் பேசலையே” என்றாள்.
“என்னனு வந்து உன்கிட்ட சொல்லுவான்? என்னுடைய நண்பனுக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு வந்து சொல்லணுமா? அவன் உனக்கு அண்ணன்டி. ஆனால், அதே அளவுக்கு எனக்கு நண்பனும் கூட”
எதுவும் பேசாமல் தனா அமைதியாகவே இருக்க,
“தனுமா, என்னப் பாரேன்” என்றான் சரோ.
அவனின் தனு என்ற வார்த்தை தனக்குப் புதிது என்றவுடன் நிமிர்ந்து பார்த்தவுடன் அவனது கண்கள் லேசாகக் கலங்கி இருக்க,
அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு “கல்யாணம் பண்ணிக்கலாம் டா. எது வந்தாலும் மாமா உன் கூட லைஃப் லாங் இருப்பேன். என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான்.
அவனது கையை வேகமாகப் பிடித்த தனா, “நான் எப்ப மாமா அப்படிச் சொன்னேன்? ஆனா, பின்னாடி ஏதாவது…” என்று அவள் சொல்லும்போதே, அவளது கையில் அழுத்தம் கொடுத்த சரோ,
“எதுவும் வராது. எது நடந்தாலும் நாம் சேர்ந்தே சமாளிப்போம். எதுவா இருந்தாலும்” என்றான்.
ஒரு சில நொடி அவனது கண்களைப் பார்த்த தனா, “சரி மாமா, கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள்.
“உனக்கு இப்போ உடனே கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா?” என்று விட்டு ஒரு சில நொடி தயங்க,
“எனக்கு நான் யோசிச்ச காரணம் இப்போ கல்யாணம் வேணுமா? அப்படின்னு தான் மாமா. நான் அதுக்கான ரீசனையும் உன்கிட்டச் சொல்லிட்டேன். அதைத்தவிர எனக்கு இப்போ உங்களக் கல்யாணம் பண்ணிக்க வேற எந்தத் தடங்கலும் கிடையாது.
நான் என்னோட மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். என் மாமா என்னை அப்படியே ஏத்துப்பாரு, அப்படின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னை நீங்க காலேஜ் அனுப்புவீங்க என்ற நம்பிக்கை இருக்கு. மேற்கொண்டு நான் என்ன செய்யணும் என்று விருப்பப்படறனோ, அதைச் செய்ய விடுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு” என்று அவனது கையில் தட்டி அழுத்தம் கொடுத்துவிட்டு,
“எல்லோரும் அங்க இருக்காங்க மாமா, தேடுவாங்க. அது மட்டும் இல்லாம எனக்கு நம்ம மட்டும் தனியா வந்து பேசுறது ஒரு மாதிரி இருக்கு. அங்க போலாமா? ரொம்ப நேரமா இங்கயே நின்னு பேசிட்டு இருக்கோம்” என்றாள்.
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு, “சரி வா” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சரவணன் அனைவரும் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
“என்ன டா மச்சான் பேசி முடிச்சாச்சா?” என்று ருத்ரன் சிரிப்புடன் கேட்க,
காயுதான் “மாமா நீலாம் உண்மையாவே ஒரு அண்ணன் தானா?” என்று கேட்டாள்.”
“ஏன்? அதுல உனக்கு என்ன டவுட்டு? நீ உன் பிரண்டு பார்த்த உடனே கண்ணை மூடித் திறக்கும் போது தெரியலையோ? இப்போ நான் என் மச்சான்கிட்டப் பேசும்போது தான் நான் ஒரு அண்ணன் என்று தெரிகிறேனோ?” என்று சிரித்தான்.
“தெய்வமே என்ன ஆள விடு” என்றாள் காயு.
“சரி நேரம் ஆகுது கிளம்பலாமா?” என்று சரவணன் கேட்க,
“சரி” என்று விட்டு குடும்பத்துடன் அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள்.
பெரியவர்கள் சமைத்து வைத்திருக்க அனைவரும் சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டார்கள்.
அன்று இரவு காலையில் கட்டிய புடவையுடனே வலம் வந்த தமிழ் ரூமுக்குள் நுழைய, நேராகச் சென்று கட்டிலில் உட்கார்ந்தாள்.
“என்ன விழி மா, ரொம்ப வேலையா?” என்று ருத்ரன் கேட்க,
அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு அவனது மடியில் தலை சாய்த்தாள்.
“என்னடி, நானா கூப்பிடாமலே வந்து கட்டிலில் உட்கார்ந்து இருக்க? மடியில் எல்லாம் வந்து தானா படுக்கிற?” என்று சிரித்தான்.
“என் மாமா மடியில நான் படுக்கிறேன். ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று சிரித்தாள்.
அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்சியவன் “உனக்கு இல்லாத உரிமையா?” என்று அவளது நெற்றியோடு முட்டி விட்டு அவளது கண்ணையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“நேரம் ஆகுது, டயர்டா இருக்கு” என்றாள்.
“சரிடி வா தூங்கலாம்” என்று விட்டு லைட் நிறுத்தப் போக,
“உனக்கு வேற எதுவும் வேணாமா மாமா” என்று கேட்டாள்.
“எனக்கு என்னடி வேணும்” என்றான்.
“இல்லை அது…” என்று விட்டு அவனது கண்ணையே பார்த்துக் கொண்டிருக்க,
“லூசு, என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு. என் மனசுல இருக்குறதை உன்னிடம் சொல்லணும்னு தான் நினைச்சேன். அதைத் தாண்டி நீ வேணும்னு நான் யோசிக்கலடி சரியா?” என்று சிரித்தான்.
வேகமாக அவன் போட்டிருந்த டி-ஷர்ட் காலரைப் பிடித்து இழுத்தவள், அவனது இதழோடு இதழ் பொருத்தி இருந்தாள்.
ருத்ரனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து இருந்தது. ஒரு சில நொடிகளுக்குப் பிறகு அவனை விட்டு விலகிய தமிழ்,
அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “என் மாமா கண்ணைப் பார்த்தே என் மாமாவுக்கு என்ன வேணும் என்று எனக்குத் தெரியும். என் மாமா முழுசா என்னை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். அதுக்காக நானே வேணாம்னு என் மாமா யோசிக்கல” என்று அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டுச் சிறிது நகர,
இப்பொழுது அவள் செய்த வேலையை இவன் கையில் எடுத்திருந்தான்.
வேகமாக அவளது கழுத்து வளைவில் கைவிட்டுப் பின்னங்கழுத்தைத் தன்னை நோக்கி நகர்த்தி அவளது இதழோடு இதழ் சேர்த்து, அவளது இதழில் தேன் பருகத் தொடங்கியிருந்தான்.
அதிர்ச்சியில் இப்பொழுது தமிழின் கண்கள் விரிந்திருந்தது.
அவளது கண்கள் கூட லேசாகக் கலங்கச் செய்தது.
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு, “எனக்கு உன்னைப் பிடிக்கும் விழி மா… இந்த அளவுக்கு நீ என்னைப் புரிஞ்சு வச்சிருக்க, நான் தான் கொஞ்சம் கூட உன்னப் புரிஞ்சுக்கவே இல்ல. உன்னோட நேசத்தையும்” என்று சொல்லும் பொழுதே அவனது வாயில் ஒரு அடி போட்டவள்,
“ஒன்னும் இல்லை சரியா, படு டயர்டா இருக்கு. உண்மையாவே தூங்கலாம்” என்று விட்டு அவனது நெஞ்சில் தலை சாய்த்தாள்.
பிறகு இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கி இருந்தார்கள்.
இரண்டு நாள்கள் சென்று இருந்தது.
முனுசாமி தனது மகள், மருமகன் சம்மந்தி, தன் மனைவி, தன் மகன் என அனைவரையும் அழைத்துக் கொண்டு காலையில் அனைவரும் வேலைக்கும் காலேஜுக்கும் செல்வதற்கு முன்பாகவே ருத்ரன் வீட்டில் வந்து நிற்க,
தனது இடுப்பில் சொருகிய புடவையை எடுத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்த தமிழ்,
தனது பெரியப்பா, பெரியம்மா குடும்பத்துடன் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியாக நின்று விட்டு, “மாமா” என்று வேகமாக அழைக்க,
பின்னால் இருந்த பாக்கியமும், தனாவும் என்ன என்று புரியாமல் வீட்டிற்குள் வர, ரூமில் இருந்த ருத்ரனும் வர,
தமிழ் அமைதியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ருத்ரன் “எதுக்குடி இப்படி கத்துற?” என்று கேட்டான்.
“மாமா தானே வந்து இருக்காரு. அதுக்கு எதுக்கு இவ்வளவு வேகமா கத்துற?” என்று சொல்லிவிட்டு அவளது அருகில் வந்து நின்றான்.
தனாவின் கண்கள் அதிர்ச்சியில் இருந்தது.
தனது தாயின் கையை இறுகப் பற்றிக் கொண்டு நின்றாள்.
அவளைப் பார்த்துச் சிரித்த பாக்கியம், “ஒன்னும் இல்லடி” என்றார்.
அப்பொழுதுதான் செல்வம், காயு, தனம் மூவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
“இப்போது, செல்வத்திற்குத் தன் அண்ணன் பக்கம் நிற்பதா? இல்லை, தங்கை பக்கம் நிற்பதா? என்று புரியாமல் நிற்க,
அப்போது ருத்ரன் தான், “மாமா, இந்தப் பக்கம் வாங்க, பொண்ணு குடுக்கப் போறதே நீங்கதான்” என்று சிரித்தான்.

