Loading

அத்தியாயம் 13

 

முதலில் இன்பசேகரன், மென்மொழியையும் மதுசூதனனையும் தஞ்சாவூர் அழைத்துச் செல்ல ஆயத்தமானான்.

 

அவன் மற்ற இருவரின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, கண்களை மூடியபடி, கோப உணர்ச்சியை மனதில் உருவாக்க முயன்று கொண்டிருந்தான்.

 

அந்தத் தருணத்தில் அவனிடம் இருந்த பச்சை நிறக்கல் ஒளிர, அவர்கள் அங்கிருந்து மறைந்து போகும் கடைசி நிமிடத்தில், யுகேந்திரனிடம் விழிகளை அசைத்து விடைபெற்றாள் மென்மொழி.

 

ஏதோ மாய சுழலுக்குள் இழுத்துச் செல்வதைப் போல உணர்ந்த மூவரும் அடுத்த நொடி எங்கோ வந்து விழுந்தனர்.

 

“சாரி சாரி…” என்றபடி எழுந்த இன்பசேகரன் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டான்.

 

மூச்சு வாங்க எழுந்த மென்மொழியோ நண்பனைக் கண்டு, “இன்பா, நீ ஓகேவா?” என்று வினவ, அவனும் சோர்வாகத் தலையசைத்தான்.

 

அதற்குள் மென்மொழியின் அலைபேசி ஒலியெழுப்பி, அழைத்தது சுடரொளி என்பதைச் சுட்டிக் காட்டியது.

 

மென்மொழி அழைப்பை ஏற்றதும், “மொழி நீங்க சேஃப்தான? அந்த இன்பா பையன் சரியா இறக்கி விட்டானா?” என்று அவள் வினவ, சற்றுத் தள்ளி இருந்த சரஸ்வதி மஹால் நூலகத்தைக் கண்டாள் மென்மொழி.

 

 

அழைப்பு ஸ்பீக்கரில் இருந்ததால், மதுசூதனன் நமுட்டுச் சிரிப்புடன், “ஒரு அம்பது அடி தள்ளித்தான் இறக்கி விட்டாரு சுடர்.” என்று முதல் ஆளாகக் கூற, எதிர்பாராத நபரின் பேச்சால் மகிழ்ந்த சுடரொளியோ, “ம்ச், எனக்குத் தெரியும், அவன் இப்படி ஏதாவது சொதப்புவான்னு… அதுக்குத்தான் நான் உடனே கால் பண்ணேன். உங்க சேஃப்டி முக்கியமாச்சே.” என்றாள்.

 

அதைக் கேட்ட இன்பசேகரனோ மதுசூதனனைப் பார்த்து, “ஏன் ப்ரோ?” என்றவன், மென்மொழியிடம் இருந்து அலைபேசியைப் பறித்து, “இப்படியே பேசிட்டு இருந்தன்னு வச்சுக்கோ, உன்னை ஏதாவது கண்காணாத இடத்துல விட்டுட்டு வந்துடுவேன்.” என்று மிரட்டினான்.

 

அதற்கும் ஏதோ சொல்ல வந்த சுடரொளியைத் தடுத்த யுகேந்திரன், “அங்க எதுவும் சந்தேகப்படுற மாதிரியான நடமாட்டம் இல்லல?” என்று விசாரித்து அறிந்து கொண்ட பின், “உங்க பாதுகாப்புதான் ரொம்ப முக்கியம். அதுக்கு ஏதாவது ஆபத்துங்கிற மாதிரியான சூழல் வந்தா, உடனே உங்க வேலையை அபார்ட் பண்ணிட்டு பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுங்க. சேஃபர் சைடுக்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உங்க ஸ்டேட்டஸை மெசேஜ்ல சொல்லுங்க.” என்றான் யுகேந்திரன்.

 

அதற்கு மூவரும் ஆமோதிப்பாகப் பதில் கூற, “இன்பா, இப்போ எப்படி இருக்க? ரொம்ப டையர்ட்டா இருக்கா? திரும்ப இங்க வந்து யாழ்மொழியை கூட்டிட்டுப் போக முடியுமா?” என்று வினவினான் யுகேந்திரன்.

 

“இப்போ ஓகேதான். இதோ நான் கிளம்பப் போறேன்.” என்ற இன்பசேகரன், மற்ற இருவரிடமும் பத்திரம் கூறிவிட்டு, அங்கிருந்து மறைந்தான்.

 

அதை ஒரு பெருமூச்சுடன் பார்த்த மென்மொழியும் மதுசூதனனும் சுற்றிலும் பார்த்தபடி, நூலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

 

*****

 

தஞ்சையிலிருந்து மறைந்த இன்பசேகரன் மீண்டும் மென்மொழியின் வீட்டிற்குத் திரும்பினான்.

 

“ஓகே இன்பா, நீங்களும் கிளம்புங்க. நானும் சுடரும் என்னோட கார்ல போயிடுறோம். பீ கேர்ஃபுல்.” என்ற யுகேந்திரனிடம் தலையசைத்தவன், யாழ்மொழியிடம் கரத்தை மட்டும் நீட்டினான்.

 

பார்வையோ, பேச்சோ இல்லை!

 

யாழ்மொழியும் ஒரு பெருமூச்சுடன் அவனது கரத்தில் கரத்தை வைக்க, இம்முறை எளிதாகவே அங்கிருந்து மறைந்தனர்.

 

அது யாழ்மொழி என்பதாலா, அவளின் மீதிருந்த கோபத்தினாலா என்பது அவனிற்கே வெளிச்சம்!

 

அங்கிருந்து மறைந்தவர்கள் பூம்புகார் கடல்சார் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு முன் தோன்றினர்.

 

 

அவர்களின் நேரத்திற்கு, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரின் பார்வையில் விழுந்து விட, அவரோ கண்ட காட்சியினால் உண்டான அதிர்ச்சியில் பிரம்மையில் நின்று விட்டார்.

 

அதைக் கண்ட யாழ்மொழி, விறுவிறுவென்று இன்பசேகரனை இழுத்துக் கொண்டு மறைவானப் பகுதிக்குச் சென்று விட்டாள்.

 

அப்போதும் பரபரப்பு அடங்காத நிலையில், “நல்லவேளை, கூட்டம் இல்ல.” என்ற யாழ்மொழி, அப்போதுதான் அவள் இன்பசேகரனின் கரத்தை விடாமல் பிடித்திருப்பதைக் கவனித்தாள்.

 

ஏனோ இதுவரை உணராத மாற்றத்தை அவள் உணர ஆரம்பிக்க, அந்த உணர்வை முழுதாக அனுபவிக்க விடாத வண்ணம், அவளின் பிடியை உதறித் தள்ளி நின்று கொண்டான் இன்பசேகரன்.

 

அதில் யாழ்மொழிக்குச் சட்டென்று கோபம் உண்டாக, “இப்போ என்ன பண்ணிட்டேன்னு இப்படி பிஹேவ் பண்ற?” என்று கத்த, “ஷ், எதுக்கு இப்போ தேவையில்லாம இப்படி கத்திட்டு இருக்க?” என்று அவனும் அவளிற்குக் குறையாத வகையில் கத்தினான்.

 

இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே அருங்காட்சியகம் நோக்கி நடந்தனர்.

 

*****

 

யுகேந்திரனின் வாகனம் ஏஎஸ்ஐ ஆவணக்காப்பு இடத்தை நெருங்கும் சமயம், “சுடர், நீ மறைஞ்சுக்கோ.” என்று கூறியவன் வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தினான்.

 

 

நுழைவு வாயிலில் உலோகக் கண்டறிவி (மெட்டல் டிடக்டர்) மற்றும் பை சோதனை ஆகிய பாதுகாப்புகள் இருந்தன.

 

அதைக் கடந்து உள்ளே சென்ற யுகேந்திரன், அங்கிருந்த காவலாளியிடம் அவனின் அடையாள அட்டையைக் காட்ட, அவன் காவலன் என்பதை அறிந்து புருவம் சுருக்கினான் அந்தக் காவலாளி.

 

அவனிடம் ஒரு பழைய கோல்டு கேஸ் சம்மந்தப்பட்ட தாளைக் காட்டிய யுகேந்திரன், “இந்தக் கேஸ் சம்பந்தப்பட்ட சில டீடெயில்ஸ் இங்க இருக்குதான்னு பார்க்க வந்துருக்கேன்.” என்று கூற, அவனோ சந்தேகமாகவே யுகேந்திரனைப் பார்த்து, “இதுக்கு என் ஹையர் அஃபிஸியல் கிட்ட பெர்மிஷன் கேட்கணும்…” என்றவாறே அலைபேசியை எடுத்தான்.

 

யுகேந்திரன் அவனைத் தடுக்க எத்தனித்த அதே நொடி, உலோகக் கண்டறிவியிலிருந்து சத்தம் கேட்க, அந்தக் காவலாளியின் கவனம் அதன் பக்கம் திரும்பியது.

 

சுடரொளியை மனதில் பாராட்டிக் கொண்டே, அந்தக் காவலாளியின் இடத்தை வேகமாக கண்பார்வையால் பரிசோதித்தான் யுகேந்திரன்.

 

அதில் ஒரு சாவியில், 320/G என்று எழுதியிருக்க, அதைக் காவலாளி கவனிக்காத பொழுதில் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான் அவன்.

 

சத்தம் இப்போது நின்றிருக்க, மீண்டும் அவனின் மேலதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான் அவன்.

 

அப்போது அவனின் அலைபேசியைப் பறித்த யுகேந்திரனோ, “இதை இப்படி செய்ய வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, இப்போ எனக்கு வேற வழியில்ல.” என்று முனகியவன், காவலாளியின் விழிகளைப் பார்த்து அவனின் மனதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தான்.

 

‘இங்க நீ சந்தேகப்படுற மாதிரி எதுவும் நடக்கல. நார்மலான செக்கப் முடிச்சுட்டு என்னை உள்ள அனுப்பிட்ட.’ என்பதை அவன் மனதில் பதிய வைத்த யுகேந்திரன், அவனது தோளில் தட்டி, உள்ளே சென்று விட்டான்.

 

அன்றைய நாளில், குறிப்பாக அந்த நேரத்தில், அங்கு அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாதது, அவர்களிற்குச் சாதகமாக அமைந்தது.

 

அப்போது கண்களுக்குப் புலப்பட்ட சுடரொளியோ, “ஷப்பா, மறைஞ்சு வரது எவ்ளோ கஷ்டமா இருக்கு?” என்று கூற, திரும்பி அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் யுகேந்திரன்.

 

அவனின் பார்வையே அவன் எண்ணத்தை உணர்த்தி விட, “சரி சரி… நீங்க செஞ்சதுதான் கஷ்டமான வேலை போலீஸ்கார்.” என்று சரண்டரானாள்.

 

“ஹ்ம்ம், நீயும் நல்லா திசைத் திருப்புன.” என்று அவன் பாராட்டும் சமயம், “நானா?” என்றவள், சிறிது யோசித்து விட்டு, “அந்த மெட்டல் டிடக்டரை சொல்றீங்களா? அட போங்க பார்ட்னர், நானே என்கிட்ட இருந்த பாக்கெட் கத்தியை மறந்துட்டு அந்த டிடக்டரை கிராஸ் பண்ணித் தொலைச்சுட்டேன். அதுவும் அலாரம் அடிச்சு செக்யூரிட்டியை அலர்ட் பண்ணிடுச்சு. ச்சு, மனுஷங்களை ஈஸியா ஏமாத்திடலாம்… இந்த சயின்ஸை ஏமாத்தவே முடியாது போல!” என்றாள்.

 

“ஒரு நிமிஷம் உன்னை மனசுக்குள்ள பாராட்டிட்டேன்.” என்று கேலியாகக் கூறியவன், அங்கிருந்த பல பூட்டப்பட்ட கதவுகளைத் தாண்டிச் செல்ல, “ஹலோ போலீஸ்கார், ஏதோ உங்க மாமியார் வீட்டுக்கு வந்த மாதிரி நேரா உள்ள போயிட்டே இருக்கீங்க… எங்கப் போறீங்க? இந்த ரூமை எல்லாம் பார்க்க வேண்டாமா?” என்று கிசுகிசுத்தாள் அவள்.

 

“தேவையில்ல… இதை மட்டும் பார்த்தா போதும்…” என்றவனின் விரலிடுக்கில் சுழன்றது ‘320/G’ என்று குறிப்பிடப்பட்ட சாவி.

 

*****

 

பூம்புகார் கடல்சார் அருங்காட்சியகம்…

 

இந்தியாவில் இருக்கும் ஒரே கடல்சார் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்திற்குள் சென்றனர் யாழ்மொழியும் இன்பசேகரனும்.

 

அங்கு, 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஈயக்கட்டிகள், ரோமானிய காலத்து ‘ஆம்போரா’ வகை மது ஜாடிகள், சிதைந்த கப்பல் பாகங்கள், நங்கூரங்கள், சுடுமண்ணாலான புத்தரின் தலை, சுண்ணாம்பு கல்லாலான புத்தரின் பாதம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், சிலைகள், சதுர வடிவ காசுகள், பெரிய செங்கற்கள், உறை கிணறுகளின் மாதிரிகள் ஆகியவற்றைக் கண்டனர்.

 

அவற்றுள் யாழ்மொழியின் கவனத்தை ஈர்த்தது வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு பெட்டி.

 

அதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்த இன்பசேகரனிடம், “இன்பா, இந்தப் பெட்டி உனக்கு ஞாபகம் இருக்கா? தாத்தா வீட்டுல இருந்த பெட்டி மாதிரியே இருக்குல?” என்று அவள் வினவ, அவள் கூறிய பின்னரே இன்பசேகரன் இரு பெட்டிகளுக்கும் இருந்த ஒற்றுமையைக் கண்டான்.

 

“ஆமா, ஒரே மாதிரிதான் இருக்கு. ஒருவேளை நம்ம கிட்ட கல்லைப் பத்தின டீடெயில்ஸ் இதுல இருக்குமோ?” என்று இன்பசேகரன் வினவினான்.

 

யாழ்மொழியோ அங்குப் பணிபுரியும் ஒருவரை அழைத்து, அந்தப் பெட்டியைப் பற்றிய தகவல்களை வினவினாள்.

 

“இதுவா… இது ரீசண்ட்டா 2025லதான் கடலுக்கடில இருந்து கண்டுபிடிச்சாங்க. 2000 வருஷத்துக்கு முன்னாடி உருவாக்கப்பட்ட பெட்டியா இருக்கலாம்.” என்று அசுவாரஸ்யமாகக் கூறியவர் அங்கிருந்து சென்று விட, “இந்தப் பெட்டியை நாம தூக்கணும் இன்பா.” என்றாள் யாழ்மொழி.

 

அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவனோ, “தூக்குறதா? என்ன விளையாடுறியா? என்னதான் ஹை செக்யூரிட்டி இல்லன்னாலும், இந்த இடம் ஃபுல்லாவே சிசிடிவி இருக்கு. அசால்ட்டா தூக்கலாம்னு சொல்ற!” என்று மெல்லியக் குரலில் முணுமுணுத்தான் அவன்.

 

“இதுலதான் ஏதோ இருக்கு இன்பா…” என்றவள் திடீரென்று அமைதியாக, அவளிடம் ஏதோ கேட்க வந்தவனின் இதழையும் மூடி அமைதியாக்கினாள், கரத்தால்தான்!

 

அதே சமயம் கீழே உள்ள ஒரு அறையில், அந்த அருங்காட்சியகத்தின் மேற்பார்வையாளருக்கும் பணியாளருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அதை அவளின் கேட்கும் சக்தியின் மூலம் இருந்த இடத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருந்தாள் யாழ்மொழி.

 

“சார், இதெல்லாம் தப்பு.” என்று அந்த வேலையாள் கூற, “டேய், இங்க நான்தான் சூப்பர்வைசர். உன் வேலை, நான் சொல்றதை செய்யுறதுதான். புரியுதா? இப்போ போய், நான் சொன்ன காப்பர் காயின்ஸை எடுத்துட்டு வா.” என்றார் மேற்பார்வையாளர்.

 

அதை வைத்து ஏதோ கணக்கு போட்டவளாக மர்மமாகச் சிரித்தாள் யாழ்மொழி. நடந்தது எதுவும் அறியாத இன்பசேகரனோ அவளைப் புதிராகப் பார்த்தான்.

 

*****

 

சரஸ்வதி மஹால் நூலகம்…

 

பல பழங்கால நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் உள்ளடக்கிய அந்த நூலகத்தில் மென்மொழியும் மதுசூதனனும் நுழைந்தனர்.

 

“மொழி, எங்க இருந்து ஸ்டார்ட் பண்ண?” என்று அங்கிருந்த புத்தகங்கள் அடங்கிய அடுக்குகளைப் பார்த்துக் கொண்டே மதுசூதனன் வினவ, “320/Gனா என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கலாம் மது.” என்ற மென்மொழி, அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து, அதிலிருந்த புத்தக எண்ணைக் கண்டாள்.

 

அதற்கும் இவர்களிடம் இருக்கும் எண்ணிற்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பத்து இலக்கு எண்ணாக இருந்தது.

 

“சோ, புக் நம்பர் இல்ல…” என்ற மென்மொழி, அங்கிருந்த அடுக்குகளைப் பார்க்க, ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் என்று பதிக்கப்பட்டிருந்தது.

 

ஏதோ கண்டுபிடித்ததைப் போல அவள் ஒரு திசையிலும், அவன் மறு திசையிலும் ஓடினர்.

 

பல நிமிட போராட்டத்திற்குப் பின்னர், ஒருவழியாக 320ஆம் அடுக்கை கண்டுபிடித்தவர்களிற்கு அடுத்த தலையிடியாக இருந்தது ‘G’ என்ற எழுத்து.

 

அது ஏதோ சோழப் பேரரசர்கள் காலத்தில் பயன்படுத்தப் பட்ட நிலப்பட்டயம் சார்ந்த கோப்புகள் இருந்த அடுக்கு.

 

மென்மொழி அதைக் குழப்பத்துடன் பார்த்திருக்க, “’G’னா ரோஸை (Rows) குறிக்குமோ?” என்று மதுசூதனன் அவளின் யோசனையைக் கலைத்தான்.

 

“ஆனா, இங்க ஆறு ரோஸ்தான இருக்கு.” என்ற மென்மொழி, கீழே குனிந்து பார்க்க, அங்கு கீழ் வரிசைக்கும், தரைப்பகுதிக்கும் இடையே உள்ள சுவரில் ஏதோ நுட்பமாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டாள்.

 

போதிய வெளிச்சம் இல்லாததால், அது என்னவென்று தெரியவில்லை அவளிற்கு. அலைபேசி வெளிச்சத்தில் அதைப் பார்க்க, ‘320/G’ என்றே அங்கு எழுதப்பட்டிருந்தது.

 

தேடி வந்ததைக் கண்டுபிடித்த வேகத்தில், அந்த இடத்தில் அவள் கையை வைக்க, ‘டொக்’கென்ற சத்தத்துடன் ஏதோ ரகசிய இடம் போல உள்ளே சென்றது.

 

அதைக் கண்ட அந்த இருவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்