Loading

சரவணன் தன் தங்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “இந்த நேரத்தில் என்ன மகி இங்க?” என்று கேட்டான்.

 

மகி சிரித்துக் கொண்டு இருந்தவன், “நான் கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு மச்சான். அதான் அகிலாவையும், தம்பியையும் இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போலாம்னு வந்தேன். வேற ஒன்னும் இல்ல.

 

ரொம்ப டல்லா இருக்கா .என்ன விஷயம்னு கேட்டா முழுசா சொல்ல மாட்றா. எனக்கு ஒன்னும் புரியல போங்க. இங்க வந்ததால ஏதோ இப்பத் தெரிய வந்துச்சு” என்று சிரித்தான் மகி.

 

தன் தங்கையைப் பார்த்தவன்,

 

“நீ எதுவும் இதுவரைக்கும் மாப்பிள்ளைகிட்டச் சொல்லலையா?” என்றான்.

 

அகி இல்லை என்று மண்டையாட்ட,

 

“ஏன்?” என்றான்.

 

“இல்ல அண்ணா, இங்க அம்மா, அப்பாவுக்கும் முழுசா தெரியாம நான் எப்படி இவர்கிட்ட மட்டும் சொல்றது?”

 

“அம்மா அப்பாவுக்குத் தெரியலன்றது வேற…

 

“ஆனா அப்பாவுக்குத் தெரியாம அம்மாவும், அம்மாவுக்குத் தெரியாம அப்பாவும் ஏதாச்சும் விஷயம் வச்சிருப்பாங்களா? நான் உன் கூடப் பொறந்தவன் தானே… என்னோட லைஃப் பத்தி நீ மாப்பிள்ளை கிட்டச் சொல்றது இல்லையா?” என்று கேட்டவுடன் தனது மச்சானின் தோளில் கையைப் போட்ட மகி,

 

“அதுல ஒன்னும் தப்பு இல்ல மச்சான். விடுங்க… உங்க தங்கச்சி உங்க வாழ்க்கைக்காக யோசிச்சு மறைச்சு இருக்கா… அவளுக்கு உங்களை எந்த அளவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியாதா? அதனால ஒன்னும் தப்பு இல்ல” என்று சொன்னவுடன் சரவணன், தனக்கு தனாவைப் பிடித்து இருப்பதாகவும், அவளைத் தான் எட்டு வருடமாக விரும்புவதாகவும் அனைத்தையும் சொல்லி விட,

 

இறுதியாக அவளுக்கு மூல நட்சத்திரம் இருக்கிறது என்பதையும் சொல்ல,

 

தனது மாமனார், மாமியாரைப் பார்த்த மகி, “அத்தை, மாமா… நான் சொல்றேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க. நான் இந்த வீட்டுக்கு எப்படி மருமகனா வந்தேன் என்று உங்களுக்கே தெரியும்.

 

அதுவே உங்களுக்கு உறுத்தலை, தப்பாவும் தோணல… என்னை அப்படியே ஏத்துக்க தானே செஞ்சீங்க? நான் ஒரு விடோனு உங்களுக்குத் தெரியும் தானே… அப்படி இருக்கும்போது இப்ப மட்டும் என்ன?

 

இல்ல, சாஸ்திரம் பாக்குறீங்களா? மூல நட்சத்திரம் இருந்தா என்ன? நல்ல ராசியும், நட்சத்திரமும் இருக்கவங்க கூடச் சீக்கிரமா இந்த உலகத்தை விட்டுப் போறவங்களும் இருக்காங்களே… இதெல்லாம், பார்த்தா வாழ முடியுமா?

 

தங்கச்சியை நம்ம மேற்கொண்டு படிக்க வச்சுக்கலாம் மாமா…

 

மச்சான் ஒன்னும் அந்த அளவுக்கு தங்கச்சியை ஸ்ட்ரிக்டா பிடிக்க மாட்டாரே, அவ வாழ்க்கையில அவ வயசுக்கு என்ன என்ஜாய் பண்ணனுமோ, அதை என்ஜாய் பண்ண விடுவாரு… நான் என்ன சொல்ல வரேன்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.

 

மேற்கொண்டு இதைப் பத்திப் பேசலாம் என்று எனக்குத் தோணுது. நீங்க தான் முடிவு பண்ணனும். சரி ரெண்டு நாளைக்குத் தம்பியும், அகியும் இங்க இருக்கட்டும்” என்றான் மகி.

 

“மாப்பிள்ளை, உண்மையாவே வேலையா? இல்ல” என்று சரவணன் கேட்க,

 

“இல்ல மச்சான், உண்மையாவே எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அவங்க ரெண்டு நாளைக்கு இங்க இருக்கட்டும். அம்மாவும், நானும் தான் சொந்த ஊருக்குப் போறோம். அங்க கொஞ்சம் வேலை இருக்கு, அதைப் பாத்துட்டு வந்துருவோம். ஒரு ரெண்டு நாள் ஆகும். அதுவரைக்கும் அகியும், தம்பியும் இங்க இருக்கட்டும்” என்று விட்டு அகிலாவை ஒரு சில நொடி பார்த்தான்.

 

அகிலா குழந்தை அமுதனைத் தனது அண்ணன் கையில் கொடுத்துவிட்டு அவளுடைய ரூமுக்குள் செல்ல, பின்னாடியே மகியும் சென்றான்.

 

“என் மேல கோவமா?” என்று அகிலா கேட்க,

 

அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன், “கோவம்லாம் இல்லடி, நீ உன் அண்ணனோட வாழ்க்கைக்காகப் பேசுற, யோசிக்கிற… அவரே முழுசா முடிவெடுக்காத விஷயத்துல, நீ உறுதியா இருக்க, தப்பில்ல… எனக்குக் கோவம் உண்மையா இல்ல.

 

அதே மாதிரி உன்ன நினைச்சு எனக்குப் பெருமையாவும் இருக்கு. அதைவிட மச்சானை நினைச்சா எனக்கு இன்னும் பெருமையா இருக்கு” என்று விட்டு, அவளது கண்ணைப் பார்த்துவிட்டு அவளது உதட்டில் பட்டும் படாமல் முத்தம் கொடுத்து, சில நொடிக்குப் பிறகு அவளை விட்டு விலகி,

 

“சாரி டி, பார்த்து பத்திரமா இருங்க. தமிழ் கூடவே ஸ்கூலுக்குப் போயிட்டு வந்துரு. தம்பியையும் உன் கூட கையோட கூட்டுப் போனாலும் ஓகே இல்ல, அவன் அத்தை கூட வீட்ல இருந்தாலும் ஓகே தான்” என்று விட்டு வெளியில் கிளம்ப,

 

தனது கணவனைப் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு நின்றாள் அகி. சிறிது நேரத்திற்குப் பிறகு அவளைத் தன் பக்கம் திருப்பிய மகி அவளையே பார்த்துக் கொண்டே இருக்க,

 

அகிலா அவனது நெற்றியில் முத்தமிட்டு, “சரி, பார்த்துப் போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தாள்.

 

வெளியில் வந்த மகி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத் தன் மகனைத் தூக்கிக் கொஞ்சி விட்டு,

 

“மாமா கூடக் காட்டுக்குப் போறியா? இல்ல ஸ்கூலுக்குப் போறியா?” என்று கேட்க,

 

அவன் “ஜாலி ஜாலி, மாமா கூட” என்று மழலை மொழியில் சொல்ல,

 

“மாமா உன்னை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டுக் கூப்பிட்டு வரேன், தங்கம்… ஸ்கூலுக்குப் போகனும், சாயங்காலம் வந்து மாமா கூட இருங்க சரியா?” என்று சரோ சொல்ல,

 

தன் தந்தையைப் பார்த்தான். அவனும் சிரிக்க,

 

“சரி மச்சான்” என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு மகி சென்று விட்டான்.

 

மறுநாள் காலையில் அகிலா காலையில் எழுந்தவுடனே தனது மகன் அமுதனை அழைத்துக் கொண்டு தமிழைப் பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றாள்.

 

“என்ன மேடம், இந்தப் பக்கம் காத்தடிக்குது. அதுவும் காலங்காத்தால, எப்ப வந்தீங்க?” என்று கேட்க .

 

“நேத்து நைட்டே வந்துட்டேன்டி” என்று சிரித்தாள்.

 

சமையலறை வாயிலில் அப்பொழுது தான் முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றான் ருத்ரன்.

 

“ஐ சித்தப்பா, ஜாலி” என்று சொல்லிட்டு ருத்ரனிடம் செல்ல,

 

“வாடா தங்கம்” என்று அமுதனைத் தூக்கிச் சுத்தி விட்டு, “தங்கம் ரெண்டு நாளைக்கு இங்க தான் இருக்கப் போறீங்க போல” என்றான்.

 

அவனை ஒரு சில நொடி நின்று முறைத்த அகிலா,

 

“அதுக்குள்ள உனக்கு இன்பர்மேஷன் அப்டேட் ஆகிவிட்டதா மாமா” என்று கேட்டாள்.

 

அவளது தலையில் லேசாகத் தட்டி விட்டு, “உன் பிரண்டைப் பார்க்க நீ காலையிலேயே எழுந்து வந்திருக்க, என் பிரண்டு என்கிட்டச் சொல்றான். உனக்கு என்ன?” என்றான் சிரித்த முகமாக.

 

தமிழ் சிரித்து விட்டு அகிலா கையில்  டீ கொடுக்க,

 

பால் எடுத்துக் கொண்டு வந்து அமுதனிடம் கொடுக்க, “சித்தி, எனக்குப் பால் வேணாம். பால் குடிச்சா தான் தம்பி ஸ்ட்ரென்த்தா இருக்க முடியும்” என்று சொல்ல,

 

ருத்ரனைத் திரும்பிப் பார்த்தான் அமுதன். அவனை மடியில் உட்கார வைத்தவன்,

 

“டேய் அமுதா, எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. ஸ்கூல்ல இவங்க மூணு பேரையும் நீ எப்படிக் கூப்பிடுவ?” என்று கேட்டான்.

 

அகி தமிழ் இருவருமே ருத்ரனை முறைத்துக் கொண்டு இருக்க,

 

அமுதன்  மூஞ்சியைச் சோகமாக வைத்துக் கொண்டு வீட்டில் மட்டும்தான் அம்மா, சித்தி, அப்பாலாம்… ஸ்கூலுக்குள்ள வந்துட்டா ரெண்டு பேரும் மிஸ்னு கூப்பிடனும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அப்பாவையும் சார்னு தான் கூப்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்க, ருத்ரன் சிரித்து விட்டான்.

“அதுக்குத் தாண்டா வாத்தியாருக்குப் பிள்ளைங்களா இருக்கக் கூடாது” என்றான்.

 

“வாத்தியார், டீச்சருக்கு எல்லாம் புருஷன், பொண்டாட்டியா மட்டும் இருக்கலாமோ?” என்று இருவரும் ஒரே போல் சொல்லிவிட்டுச் சமையல் அறைக்குள் புகுந்து விட்டார்கள்.

 

தோழிகள் இருவரும் ஆயிரம் கதைகள் பேச 8 மணிக்கு அகிலா அமுதனை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்று, அமுதனை ஸ்கூலுக்குக் கிளம்பித் தன் அண்ணன் அழைத்துக் கொண்டு செல்வதாகச் சொன்ன உடன் அவனுடன் விட்டுவிட்டு,

 

தான் மட்டும் தமிழுடன் பள்ளிக்குச் செல்ல,

 

பள்ளி செல்லும் வழியில் அகிலா இரவு வீட்டில் நடந்த அனைத்தையும்  தமிழிடம் சொல்ல,

 

“சரி அகி, இதைப் பத்தி யோசிப்போம். கொஞ்ச நாள் ஆகட்டும். பெரியம்மாவும், பெரியப்பாவும் கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா? அமைதியா அவங்களை யோசிக்க விடுங்க. ஒவ்வொருத்தவங்களா போயிட்டு அவங்களை நோண்டிகிட்டு இருக்காதிங்க. நமக்காக ஒத்துக்கக் கூடாது சரியா?” என்று சொல்ல,

 

“சரிடி” என்று விட்டு அகிலாவும் அமைதியாகி விட்டாள்.

 

மாலை காலேஜ் முடிந்து காயுவும், தனாவும் வந்து கொண்டிருக்க,

 

காயுவின் வண்டி மீது ஒருவன் மோத, வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய காயு, கன்னா, பின்னாவென்று தனக்குத் தெரிந்த அனைத்து வசவுகளையும் கொடுக்க,

 

எதிரில் வந்தவனோ, தனது ஹெல்மெட்டைக் கழற்றிக் கொண்டு, “சாரி” என்று கேட்க,

 

“வாடா மாப்பிள்ளை, உன்ன தான் எதிர்பார்த்தேன். நேற்று என்னமா பேச்சுப் பேசின? நைட் நேரத்துல கண்ணை எங்க வச்சுக்கிட்டு வரேன்னு கேட்ட, இப்ப நீ எங்க வச்சுட்டு வந்திருக்க, இந்தப் பகல் நேரத்தில” என்று கேட்க,

 

அவளை முதலில் பார்த்தவன் அவள் சொன்ன “வாடா மாப்பிள்ளை” என்ற வார்த்தையில் திருதிருவென முழித்தவன், இறுதியில் அவளைப் பார்த்துச் சிரித்து விட்டான். பின்னாடி உட்கார்ந்து கொண்டு இருந்த தனாவுக்கு தான் ஒன்றும் புரியாமல், “யாருடி உனக்குத் தெரிஞ்சவங்களா?” என்று கேட்டாள்.

 

“நீ வேற, நானே இவனை நேத்து தான் பார்த்தேன்.”

 

“நேத்துப் பார்த்தது போலயே தெரியலையே? நீ சொல்றதப் பார்த்தா…” என்று தாடையில் கை வைத்துத் தனா யோசிக்க,

 

“எதே…” என்ற காயுவும் யோசித்து விட்டு,

 

“அடேய், ஞாபகம் வந்துருச்சு. நாங்க எம்எஸ்சி ஜாயின் பண்ணும் போதே உன்னப் பார்த்தேன். ஆமா நீ யாரு?” என்று கேட்டாள். அவளது தலையில் கொட்டிய தனா, “அடியே… இவர் நம்ப காலேஜ் கெமிஸ்ட்ரி லேப் அசிஸ்டன்ட்” என்று சொல்ல,.

 

“அச்சச்சோ, சாரி சார் நீங்க யாருன்னு எனக்குத் தெரியல அதான்” என்று மன்னிப்பு வேண்ட,

 

இருவரையும் பார்த்துச் சிரித்தவன், “வண்டியில இடிச்ச உடனே அந்த மரியாதை எல்லாம் எங்கேயோ பறந்து போயிடுச்சு. அப்படியே ஒரே செகண்ட்ல யாருன்னு தெரிஞ்ச உடனே பம்மிகிட்டு வர, ஆனாலும் நல்லா தான் மா பேசுற. பொழச்சிக்குவீங்க சீக்கிரம்” என்று இருவரையும் பார்த்துச் சிரித்தவன்,

 

“பார்த்து  பத்திரமாப் போ கீர்த்தனா, உன் பிரண்டு கூடப் பார்த்துப் பழகு. போற வழியில எங்கயாவது உன்னைச் சாக்கடையில் தள்ளிவிட்டு, நீயா விழுந்துட்டேன்னு சொல்லிட்டுப் போகப் போறாங்க” என்று தனது ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

“ரொம்பத் தாண்டி வாய்க் கொழுப்பு ஜாஸ்தி, அந்த கெமிஸ்ட்டிக்கு” என்று தன் தோழியைப் பார்த்துக் காயு சொல்ல,

 

“உன்ன விடவா டி” என்று சிரித்தாள் தனா.

 

“யாருன்னு கூடத் தெரியாம வாயாட வேண்டியது” என்று சிரித்தாள்.

 

தனது தோழியைப் பார்த்து முதலில் முறைத்து விட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே தனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள் காயு.

 

வீட்டிற்கு வந்தவுடன் தனாவை இறக்கிவிட்டு வீட்டுக்குள் வந்தவள் புலம்பிக் கொண்டே வந்து உட்கார,

 

பாக்கியம் இருவரையும் பார்த்துவிட்டு, “என்ன டி  நானே வீட்டுக்குள்ள வானு கூப்பிட்டா கூட வர மாட்ட, அத்தை என்ற நினைப்பே இருக்காது. அப்படியே உன் பிரண்ட இறக்கி விட்ட உடனே ஓடிருவ, இன்னைக்கு வீட்டுக்குள்ள வர.”

 

“என் அத்தை வீட்டுக்குள்ள வரதுக்கு நான் உன்னைக் கேட்டுட்டு வரணுமா? தண்ணி தா அத்தை, எதையாச்சும் சொல்லிக்கிட்டு” என்றாள்.

 

“என்னடி என்ன ஆச்சு?” என்றார்.

 

“அதுவா வர வழியில ஒரு பஞ்சாயத்து” என்றாள்.

 

“என்னடி பஞ்சாயத்து?” என்று பயத்துடன் பாக்கியம் கேட்க,

 

“மா நீ வேற, அவ தான் பேசுறானா, நீயும் அவ சொல்றதுக்குப் பயந்துகிட்டு இருக்க… அவ சும்மா சொல்லிட்டு இருக்கா, ஒன்னும் இல்ல” என்றாள் தனா.

“ஏண்டி கொஞ்ச நேரத்துக்குள்ள பதற வைக்கிறீங்க?”

 

வயசுப் பிள்ளைங்களைத் தனியா அனுப்பி வச்சிட்டு இங்க வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கறதா இருக்கு. இதுல நீ வேற. வாயாடி… வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா?

 

எங்கையாவது வம்புச் சண்டை இழுத்துட்டு வந்து என் அண்ணன் பேரையும், அண்ணி பேரையும் கெடுத்துப்புடாதடி” என்று விட்டுச் சமையல் கட்டுக்குள் சென்றார் பாக்கியம்.

“எது நான் உங்க அண்ணன், அண்ணி பேரைக் கெடுக்கப் போறேனா? அது சரி, அப்போ உன் மருமகள் ரொம்ப நல்லவள் தான் போ” என்றாள்  காயு.

“என் மருமகளுக்கு என்னடி?” என்று வாயைக் கோணித்துக் காண்பித்தார் பாக்கியம்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்