Loading

இன்று ஹரீஷின் திருமண நாள். காலையிலேயே எழுந்து மித்ரன் கிளம்பினான்.

“நாளைக்கு உனக்கு கல்யாணத்த வச்சுக்கிட்டு இன்னைக்கு உன் ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போயே ஆகனுமா?” என்று நர்மதா சலித்தார்.

“அவன் என் ஃப்ரண்ட்டு மா.. அவங்க வீட்டுல இருந்தும் நமக்கு பத்திரிக்கை வச்சுருக்காங்க. நீங்க எல்லாரும் பிசி.. நான் போயிட்டு வர்ரதுல என்ன இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே தலை வாரியவன் பரிசுப்பொருளை எடுத்துக் கொண்டான்.

“சரி.. சீக்கிரமா வந்துடு.. சொந்தக்காரவங்க எல்லாம் வர ஆரம்பிச்சுடுவாங்க”

தலையாட்டி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

மண்டபத்தில் பரபரப்பு குறையும் வரை காத்திருந்து மேடையேற, ஹரீஷ் அப்போது தான் நண்பனை பார்த்தான்.

“வாடா வாடா. நீ வருவனு நினைக்கல” என்று ஆர்வமாக வரவேற்றான்.

“கன்கிராட்ஸ் மச்சி” என்று மித்ரன் வாழ்த்த, ரம்யா இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹரீஷ் அவள் பக்கம் திரும்பியதும், முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“என் ஃப்ரண்ட்..” என்றதற்கு தலையாட்டி வைத்தாள்.

பிறகு படம் எடுத்துக் கொண்டு மித்ரன் கிளம்பி விட்டான்.

“இவனுக்கு நாளைக்கு கல்யாணம்.. நாம தான் போக முடியாது” என்று ஹரீஷ் வருத்தப்பட, “ஆமா. தெரியும்.. தெரிஞ்சவங்க தான்.. பத்தரிக்கை வச்சாங்க” என்றாள் சாதாரணமாக.

“அப்படியா?” என்று ஹரீஷ் ஆச்சரியப்பட்டான்.

அதற்குள் ரம்யாவின் தந்தை மித்ரனை பார்த்து விட்டார்.

“வாங்க தம்பி.. வாங்க வாங்க.. வீட்டுல யாரும் வரலயா?”

“அங்கயும் கல்யாண வேலையில பிசி.. ஹரீஷ் என் ஃப்ரண்ட்.. அதான் நான் மட்டும் ஓடி வந்துட்டேன்”

“ஓ.. பரவாயில்ல பரவாயில்ல.. வாங்க தம்பி சாப்பிட்டு போகலாம்..”

“இருக்கட்டுங்க..”

“அட வாங்க.. கல்யாணத்துக்கு வந்து சாப்பிடலனா எப்படி?” என்று வற்புறுத்த, “பாயாசம் மட்டும் போதும்” என்று உடன் சென்றான்.

பாயாசத்தை வாங்கி குடித்து விட்டு மேடையில் இருந்தவனிடம் கையாட்டி விட்டு கிளம்பியும் விட்டான்.

வீட்டுக்கு வந்தவனுக்கு ஹரீஷின் முகத்தில் இருந்த மலர்ச்சி தான் நினைவில் இருந்தது. அவனால் இந்த அளவு சந்தோசத்தோடு சம்பூர்ணாவின் அருகே நிற்க முடியுமா?

மதிய நேரம் அனைவரும் வரவேற்புக்கு தயாரானார்கள். பெரிய விஐபிகளை மட்டும் தான் சம்பூர்ணா அழைத்திருப்பதாக சொல்லியிருக்க, மித்ரன் வீட்டிலும் முக்கியமான சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தனர்.

மித்ரன் அவனது உடையில் தயாராகி நிற்க, சம்பூர்ணா சேலையில் வந்தாள். முதல் முறை அவளை சேலையில் பார்க்கிறான். ஆச்சரியமாக இருந்தது. இருந்த அலங்காரத்துக்கு, எதோ ஒரு மேற்கத்திய உடையில் வருவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் சேலை? நம்பவே முடிவில்லை.

அவள் அருகே வந்ததும் ஆச்சரியத்தை விட்டு விட்டு முகத்தை ஆராய்ந்தான். போலிச்சிரிப்பு அப்பட்டமாக தெரிந்தது. அதை பார்த்ததுமே மித்ரனுக்கு சிரிப்பு வர பார்த்தது.

“கஷ்டமா இருக்குல?” என்று மித்ரன் கேட்க, அவனை புருவம் சுருங்க பார்த்தவள் உடனே புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.

“இல்ல.. இன்னைக்கு நீ படப்போற கஷ்டத்த பார்த்து நான் எல்லாத்தையும் மறந்துடுவேன்” என்று விட்டு மேடையை பார்த்தாள்.

“மேல போகலாமா?” என்று கேட்டு விட்டு அவள் திரும்பி நடக்க, அவளோடு அவனும் நடக்க வேண்டியிருந்தது.

‘அப்படி என்ன கஷ்டம்?’ என்று மித்ரனுக்கு புரியவில்லை.

மேடையில் ஏறியதும் வணக்கம் சொல்லி விட்டு, சில பல போட்டோக்களையும் எடுத்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்க ஆரம்பித்தனர்.

பரிசை கொடுத்ததில் பாதிப்பேருக்கும் மேல் மித்ரனை மதிக்கவில்லை. அவர்களது தகுதிக்கு சம்பூர்ணா ஒரு பணக்காரனை திருமணம் செய்திருக்க வேண்டியது. எந்த வித பின்புலமும் இல்லாத ஒருவனை திருமணம் செய்தது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலும் பெண்கள் அதை வெளிப்படையாக காட்டினர். அது மித்ரனை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது.

சங்கீதாவுக்கோ கோபம் கோபமாக வந்தது. அண்ணன் சொத்து முழுவதும் இந்த அன்னக்காவடிக்கா? ஆனால் சுதாராணியும் அபர்ணாவும் இருக்கும் போது அவர்களது குடும்பத்தின் மீது வெறுப்பை கூட காட்ட முடியவில்லை.

சங்கிதாவின் அண்ணன் மகன் பரிசோடு வந்திருந்தாள்.

வாழ்த்தை சொல்லி பரிசை நீட்டியதும் மாறாத புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

“இவரு தான் நீங்க லவ் பண்ணவரா?” என்று மித்ரன் பொறுக்காமல் கேட்க, சம்பூர்ணா யோகமித்ரனை திரும்பிப் பார்த்து விட்டு அவன் கையைப்பிடித்துக் கொண்டாள்.

“நாங்க காலேஜ்ல ஒன்னா படிச்சவங்க மிஸ்டர் மித்ரன்.. லவ் இல்லாம எப்படி?” என்று கேட்டு சிரித்தாள்.

யோகமித்ரனுக்கு சிரிப்பதே கடினமாக இருந்தது. ஆனாலும் தலையாட்டி வைத்தான்.

“ஓகே..” என்றவன் படம் எடுத்துக் கொண்டு இறங்கி விட்டான்.

வந்த எல்லோரும் விடை பெற்றுச் சென்ற பிறகு, சம்பூர்ணாவும் யோகமித்ரனுக்கும் ஓய்வு கிடைத்தது.

“அதென்ன லவ் ஸ்டோரி?” என்று கேட்க, சம்பூர்ணா புரியாமல் பார்த்தாள்.

“என்ன லவ் ஸ்டோரி?”

“அதான் ஒருத்தன் கிட்ட சொன்னியே?”

“எவன்?” என்றவள் சுத்தமாக மறந்து விட்டாள்.

“அவன் பேரும் மித்ரன் தான்”

“ஓ.. அவனா.. அவனுக்கு என்னை பொண்ணு கேட்டாங்க.. நான் ஏற்கனவே ஒருத்தன லவ் பண்ணுறேன்னு பொய் சொல்லி வச்சுருந்தேன். இப்ப உன்னை பார்த்ததும் நீனு நினைச்சு கேட்டு போறான்”

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஆளாளுக்கு வேலையை பார்த்தனர். இரவு வீட்டுக்குச் சென்று விட்டு, காலையில் மீண்டும் மண்டபத்திற்கு வரவேண்டும்.

மித்ரன் கிடைத்த இடைவெளியில் தூங்கி எழுந்தான். காலையில் அனைத்தும் பரபரப்பாக நடந்தது. யாருக்கும் எதையும் யோசிக்கும் நேரம் இல்லை. மூச்சு விடும் முன்பு இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது.

விஐபிகள் எல்லாம் இரவே வந்து சென்று விட்டதால், முழுவதும் சொந்தங்கள் தான் நிறைந்து இருந்தனர்.

எல்லாம் முடிந்து நிதானமாகும் முன்பே மித்ரனும் சம்பூர்ணாவும் மணமேடையில் அமர்ந்திருந்தனர்.

ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். இப்போதும் சேலை தான் கட்டியிருந்தாள். முகூர்த்த புடவை அன்று எடுத்தது தான். அலங்காரமும் மாறியிருந்தது. அமைதியாக இருந்தவள் முகத்தில் அவளே மறைக்க முடியாத ஒரு கோபம் இருந்தது.

மித்ரன் சாதனாவுக்கு பதில் சொல்லி விட்டு சம்பூர்ணா பக்கம் சாய்ந்தான்.

“ரொம்ப கஷ்டமா இருந்தா இப்ப கூட நிறுத்திடேன்” என்று சொல்ல சம்பூர்ணா பதில் சொல்லாமல் இருந்தாள்.

“நீ திருந்த மாட்ட.. எனக்கு பொண்டாட்டி ஆகியே ஆகனும்னு அடம் பிடிக்கிற.. ஆனா உனக்கு கல்யாணமே பிடிக்காதுங்குறத மறந்துட்டல?”

உடனே புன்னகைத்த சம்பூர்ணா, “கடுப்பேத்தாத.. நான் வேற டென்சன்ல இருக்கேன். வீணா எதையாவது பேசி உன் மூடையும் ஸ்பாயில் பண்ணிக்காத.. அப்புறம் உன் மொத்த குடும்பமும் என்னனு புரியாம முழிக்கும். நல்லா சிரிச்ச மூஞ்சியோட அந்த செயின வாங்கி கழுத்துல போடுறதோட நிறுத்திக்கோ” என்றாள்.

“அடியே.. அது தாலிடி”

“எனக்கு அது செயின் அவ்வளவு தான்.. சென்டிமண்ட் எல்லாம் எதிர்பார்க்காத.. நடக்காது” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

‘இவ கிட்ட பேசுறதே வேஸ்ட்.. எப்படியும் இவ தான்னு மணமேடை வரை வந்துட்டேன். இனிமே இவள என்ன பண்ணுறதுனு யோசிப்போம்’ என்று அமர்ந்திருந்தான் அவன்.

ஐயர் தாலியை கொடுக்க, அதை வாங்கி சாதனாவும் புவனனும் கொடுத்தனர். மித்ரன் வாங்கி எதையும் யோசிக்காமல் சம்பூர்ணா கழுத்தில் போட்டு விட்டான்.

அதிகம் யோசிப்பது கூட சில நேரங்களில் ஆபத்து தான்.

அட்சதை பூக்களை தூவி முடித்ததும் குங்குமத்தை கொடுத்தனர்.

பொட்டு வைக்கும் போது சம்பூர்ணாவின் கண்கள் வாசலில் நிலைத்து இருந்தது. மித்ரன் அதை கவனித்து திரும்பும் முன்பே முன்னால் இருந்த கூட்டத்தினர் அனைவரும் எழுந்து திருமணத்தை வேடிக்கை பார்க்க முன்னால் வந்து விட்டனர்.

சடங்குகளை சொல்லச் சொல்ல செய்து கொண்டே இருந்தனர். இருவருக்கும் எப்போதடா எல்லாம் முடியும் என்று இருந்தது.

சாப்பாடு வகை வகையாக இருந்த போதும், இருவருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை. செய்யக்கூடாத ஒன்றை பிடிவாதத்தில் செய்து விட்டது போல் வருத்தமாக இருந்தது. அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவும் முடியவில்லை.

சொந்தபந்தங்களை அனுப்பி விட்டு மணமக்கள் இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும், மற்றவர்கள் அடுத்த வாகனத்தில் ஏறிக் கொண்டனர்.

பெண் வீட்டில் தான் முதல் நாள் இரவு தங்க வேண்டும். அடுத்த நாள் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

காருக்குள் நுழைந்ததுமே சம்பூர்ணாவின் முகம் போலி புன்னகையை தொலைத்து இறுகியது. அவசரமாக மாலையை கலட்டி மடியில் வைத்தவள் தலையை தேய்த்துக் கொண்டாள்.

காரில் டிரைவர் இருக்கையில் இருந்த புவனன் மித்ரனை திரும்பிப் பார்க்க அவன் மறுப்பாக தலையசைத்து வைத்தான்.

புவனனும் சாதனாவும் தான் முன்னால் இருந்தனர்.

சாதனா ஒரு நொடி சம்பூர்ணாவை திரும்பிப் பார்த்து விட்டு, “நினைச்சேன்” என்றாள்.

“என்ன நினைச்ச?” என்று கேட்க, புவனன் காரை எடுக்கப்போக, “ஒரு நிமிஷம் இருங்க வர்ரேன்” என்று இறங்கிச் சென்றாள்.

நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்க, சாதனா திரும்பி வந்தாள்.

தண்ணீர் பாட்டிலை சம்பூர்ணா பக்கம் நீட்டினாள்.

“பூர்ணா.. இந்தா… இந்த மாத்திரைய போட்டுக்க” என்றதும் சட்டென கண் திறந்த, சம்பூர்ணா சாதனாவை நன்றியாக பார்த்தாள்.

“மாத்திரையா?”

“ஆமா.. இவ்வளவு பூவ தலையில வச்சு அலங்காரம் பண்ணா தலை வலி வராம? எனக்குலாம் வந்தப்போ என் அக்கா காலையிலயே ஒரு மாத்திரைய கொடுத்துட்டா.. அத போட்டதால தான் சிரிக்கவே முடிஞ்சது.. எதுக்கும் இருக்கட்டும்னு அத்தை கிட்ட கொடுத்து வச்சேன்” என்று விட்டு சாதனா நன்றாக அமர்ந்தாள்.

“தாங்க்யூ சாதனா.. செம்ம வலி” என்று விட்டு மாத்திரையை போட்டு தண்ணீரை குடித்தாள் சம்பூர்ணா.

சாதனா எல்லாம் தெரிந்தவள் போல் தலையாட்டி சிரித்தாள்.

“என்ன பேரு சொல்லி கூப்பிடுறீங்க?” என்று மித்ரன் புரியாமல் கேட்க, “ஒரு வயசு தான கூட? அதான் பேர சொல்லியே கூப்பிட்டு பழகிட்டோம்” என்று சாதனாவே பதில் சொன்னாள்.

“அது சரி.. ”

“அதுக்காக நீ பேரு சொல்லக்கூடாது”

“இதுக்கு பேரு தான் அண்ணி அராஜகம்.. அண்ணானா இருக்கியே கேட்க மாட்டியா?”

“உனக்கு கல்யாணமாகிடுச்சுனு என் பொண்டாட்டிய பிரிச்சு விட பார்க்காதடா தம்பி..”

“சரியான பொண்டாட்டி தாசன்டா நீ”

“அங்க காட்டிக்கல இங்க காட்டிக்கிறேன்.. அவ்வளவு தான் வித்தியாசம்”

“ச்சே இன்சல்ட்.. இதுக்கு நீ பதில் சொல்லனும் தெரியுமா?” என்று சம்பூர்ணாவை இழுத்தான்.

“என்னனு? நீ பொண்டாட்டி தாசன் இல்லனு பொய்யா? ஆமாங்க.. . இவன் புருஷன் தாசன்.. ச்சே.. நான் தான் புருஷன் தாசனிங்க. இவன் இல்ல”

சாதனாவும் புவனனும் சிரிக்க ஆரம்பித்து விட, மித்ரனும் அன்றைய நாளில் முதல் முறையாக உண்மையாக புன்னகைத்தான்.

“வாட் அ சேம்.. இங்க பாருடா அண்ணா.. இனிமே அண்ணி அடிச்சா உன்னை காப்பாத்த மாட்டேன் பார்த்துக்க”

“நீயும் தான் அடி வாங்குவ.. முதல்ல அதுல இருந்து தப்பிக்கிறது எப்படினு டிப்ஸ் கேளு.. அண்ணனா போனா போகுதுனு சொல்லித்தர்ரேன்”

“கால்ல விழுற டிப்ஸ் தான? நீ விழுந்து வீட்டுல குழியே விழுந்துடுச்சு”

“இல்லையே.. அத சிமெண்ட் வச்சு பூசிட்டோமே.. நீ எப்ப பார்த்த மித்ரா?” என்று அப்பாவி முகத்தோடு சாதனா கேட்க, சம்பூர்ணா தன்னை மறந்து சிரித்தாள்.

“சிமெண்ட் வாங்குனதே நான் தான் அண்ணி” என்று புது மனைவியை ஒரு முறை பார்த்துக் கொண்டு பதில் சொன்னான்.

சாதனா கணவனின் தோளில் ஒன்று வைத்தாள்.

“ஒரு சிமெண்ட்ட கூடவா நீங்க வாங்க மாட்டீங்க.. சேம் சேம் ஆகிடுச்சு பாருங்க” என்று கணவனை கலாய்த்து வைக்க, நல்ல நேரம் வந்து விட்டதாக சொல்லி காரை எடுக்கச் சொன்னார்கள்.

பேச்சை அதோடு விடாமல் தொடர்ந்து கொண்டே, நால்வரும் சம்பூர்ணாவின் வீட்டுக்கு சென்று சேர்ந்தனர்.

இன்னார்காகு இன்னார் என்று.. எப்போது கணக்கு தப்புவதே இல்லை.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்