
ருத்ரன் கத்தி விட்டு ரூமுக்குள் நுழைந்து கொள்ள,
தமிழைப் பார்த்த பாக்கியம், “என்னடி ஆச்சு, எதுக்கு இப்படி முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கான், உன் புருஷன்?” என்று கேட்டார்.
“ஏன், உங்க பையன் தானே. நீங்க கேட்க வேண்டியது தானே” என்று கேட்டாள்.
“அது சரி, புருஷனும் பொண்டாட்டியும் முறுக்கிகிட்டுத் திரியறதுக்கு இடையில நான் தான் மத்தளமா?” என்று பாக்கியம் சொல்ல, சிரித்துக் கொண்டே தனது அத்தையைத் தமிழ் பார்க்க,
அவளது தோளில் தட்டியவர், “என்னாச்சு தமிழ்” என்று கேட்க,
தமிழ் ஒன்று விடாமல் நடந்த அனைத்தையும் சொல்ல,
“நான் கூட மறந்துட்டேன் தமிழு… நம்ம தனாவுக்கு…” என்று அவர் வாய் எடுக்க வரும்போதே அவரது வாயில் கையை வைத்த தமிழ்,
“விடுங்க அத்தை நல்லதே நடக்கும். ஆனா கொஞ்சம் யோசிக்க நேரம் வேணும். அதுவரைக்கும் உங்க பையனை அமைதியா இருக்கச் சொல்லுங்க. என்னால முடியல, நைட் அவ்வளவு சொன்னேன். கொஞ்சம் கூடக் காதுல வாங்காம காலையிலையே அப்பா, அம்மா முன்னாடி போய் நின்னு இருக்காரு. அவங்க கிட்டப் பேசினது மட்டும் இல்லாம, பெரியப்பா வீட்டுக்கும் போயிருக்காரு.”
“என்ன தமிழ் சொல்ற?” என்றவுடன்,
அங்கு நடந்த அனைத்தையும் சொன்னாள் தமிழ்.
“அதனாலதான் இப்படி மூஞ்சைத் தூக்கி வச்சுகிட்டுச் சுத்துறானா?”
“ஒரு விஷயத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செஞ்சிட முடியாது. பொறுமையா தான் செய்ய முடியும் அத்தை. எனக்கும் சரவணன் அண்ணன் தானே? அவருக்கு மட்டும் நண்பனா? அவருக்குக் கெடுதல் நினைப்பேனா. நான்… நம்ம தனாவும் விரும்புறா, அண்ணனும் விரும்புறாரு. அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க என்பதற்காக நான் எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செஞ்சிட முடியாதே அத்தை.
யோசிச்சு தான் முடிவு பண்ணனும், சொல்லி வைங்க உங்க பையன்கிட்ட. உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.
“சரி விடு, பார்த்துக்கலாம் டி” என்றார் பாக்கியம்.
“மணி ஆகுது பாரு, நீ போய் கிளம்பு” என்றார்.
“ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல போங்க… நான் அப்படியே சமையலைப் பாதியிலேயே விட்டுட்டு ஓடிட்டேன். உங்க பையன் பண்ண அட்டகாசத்துல” என்று நொடிந்து கொண்டாள்.
“உனக்கும், அவனுக்கும் தான பிரச்சனை. என்கிட்ட ஏன் மூஞ்சியைத் திருப்பி கிட்டுப் போற” என்று பாக்கியம் சிரிப்புடனே சொல்ல,
“அது சரி” என்று தனது அத்தையுடன் வாய்க்கு வாய் பேசிக் கொண்டே சமையலில் இறங்கி இருந்தாள் தமிழ்.
ருத்ரன் இதுவரை தனது அம்மாவும், மனைவியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க தான் செய்தான்.
‘ஆமாண்டி உனக்கு எல்லார் கிட்டயும் சிரிச்சுப் பேசத் தெரியும். என்கிட்ட மட்டும் தான் மூஞ்சத் தூக்கி வச்சுட்டு, எரிந்து விழத் தெரியும்’ என்று முனகிக் கொண்டு இருந்தான் இங்கு ரூமில்.
வேலைக்கு நேரமாகவதை உணர்ந்தவன் குளித்துவிட்டுக் கிளம்பி வெளியில் வரக் கதவைத் திறக்க,
தமிழ் அப்பொழுதுதான் சமையலை முடித்து விட்டு,
தனக்குப் பள்ளிக்கு நேரமாவதை உணர்ந்து,
மாமாவை மனதினுள் திட்டிக் கொண்டே ‘இவரால் தான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இன்னைக்கு’ என்று புலம்பிக் கொண்டே வந்து கதவைத் திறந்தவுடன், நேராக அவனது நெற்றியில் முட்டி விட்டு, “பார்த்து வரத் தெரியாதா?” என்று முனகினாள்.
“நான் பார்த்து தான் மேடம் வந்தேன். கதவு திறந்து இருக்கா, இல்ல இப்பதான் திறக்கிறாங்களான்னு கூடத் தெரியாத அளவுக்கு மேடம் வரீங்க. அப்படி என்ன ஒரு பலத்த யோசனை?” என்றான்.
“சும்மா போங்க. நீங்க பண்ண வேலைக்கு…” என்று இப்பொழுதும் அவனைப் பார்த்து முனகி விட்டு, ‘நேரம் ஆகிறது’ என்று முனங்கிக் கொண்டே ரூமுக்குள் செல்ல,
“எங்க போக நேரமாகுது?” என்று கேட்டான்.
“எங்க போறேன்னா, ஸ்கூலுக்குப் போக வேண்டாம். வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து இருந்தால் சோறு கிடைக்குமா?” என்றாள்.
அவளது கையை பிடித்து நிறுத்தி, “நான் உன்னை உட்கார வைத்துச் சோறு போட மாட்டேன் என்று சொல்லலடி. நீ போறது உன்னோட ஃபேஷனுக்காக… நீ ஆசைப்பட்ட வேலையை, விருப்பப்பட்ட வேலையை நீ செய்யணும்ன்றதுக்காகப் போற சரியா…
சோத்துக்கு வழி இல்லாம அப்படின்ற மாதிரி நிலைமை இல்லை. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். நான் தப்புப் பண்ணியிருக்கேன் தான், இல்லன்னு சொல்லல. ஆனா, என்னைக் காயப்படுத்துற மாதிரி நீ நிறைய விஷயம் பேசுற. அதுல பாதி உனக்கும் வலிக்கதான் செய்யும் என்பதை மறந்துடாத” என்று அவளது கையை விட்டவன் எதுவும் பேசாமல் ஹாலுக்கு வர,
தமிழ் தான் ஒரு சில நொடி அப்படியே பேய் அறைந்தது போல் நின்றாள்.
‘சொன்னாலும், சொல்லா விட்டாலும் அவரைக் குத்திக் காட்டுகிறேன் என்று பெயரில் நிறைய விஷயங்கள் அளவுக்கு மீறிப் பேச தான் செய்கிறோம். நான் இப்படி எல்லாம் இருந்ததில்லையே’ என்று எண்ணியவள்,
தன் தலையை உலுக்கி விட்டுப் பள்ளிக்கு நேரமாவதை உணர்ந்து குளித்துவிட்டு ரெடியாகி வெளியில் வர,
ருத்ரன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்புவதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
இருவரும் கிளம்பிக் கொண்டிருக்கும் போது வந்த தனா, “அண்ணா” என்று கூப்பிட..
அவளைப் பார்த்து “என்ன தனா?” என்றான்.
“இல்ல அது…” என்று விட்டு வார்த்தையை மென்று முழுங்கி, “எங்க கல்யாணத்தைப் பத்தி மெதுவா கூடப் பேசலாம். எனக்கு இப்ப அவ்ளோ அவசரம் இல்லை, கல்யாணத்துக்கு” என்று தனா ருத்ரனிடம் சொல்ல,
“மாமாவுக்கு வீட்ல பொண்ணு பார்க்குறாங்கன்னு அத்தை வந்து சொன்னதால மட்டும்தான் பயந்தேன். மத்தபடி இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும் என்று நான் யோசிக்கல” என்றாள்.
“ஓ…” என்று தன் தங்கையைப் பார்த்தவன்,
“உனக்கு வயசு ஆகலம்மா, உனக்கு என்ன வந்துச்சு. என் நண்பனுக்கு தான் வயசாகுது. என் மச்சான் கேனை இல்லையா? உனக்கு என்ன வந்ததுன்னு சொல்லிட்டு நீ போயிடுவ…
அடுத்த நிமிஷம் வீட்டில் இருப்பவர்கள் சொன்னார்கள் என்று சொல்லி அவனைப் பிடிக்கலைன்னு கூட நீ சொல்லுவ. நாளைக்கு அவன் தான் பைத்தியம் மாதிரி, காதல் படம் பரத் மாதிரி, லூசு மாதிரிச் சுத்தணும் இல்லையா? உங்களுக்கு எல்லாம் என்ன வந்துச்சு?
உங்களுக்கு வேணும்னா புடிச்சி இருக்குன்னு சொல்லுவீங்க, வேணாம்னா புடிக்கலைன்னு போவீங்க. கேட்டா எங்க குடும்ப சூழ்நிலை என்று சொல்லுவீங்க” என்று தன் தங்கையைப் பார்த்து முறைத்துக் கொண்டு சொன்னவன்,
இறுதியாகத் தமிழைப் பார்த்துவிட்டு வேலைக்குச் செல்ல, தமிழுக்கு தான் எங்கேயோ சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
‘தன் மீது இருக்கும் கோபத்தைத் தன் மீது காட்ட வேண்டியதுதானே. இப்படி லூசு மாதிரிச் சொந்த தங்கச்சி மீது காட்டி விட்டுச் செல்கிறாரே… அதுவும் சின்ன பிள்ளை. அவள் என்ன யோசிப்பாள் என்று கூட உணராமல் பேசிவிட்டுச் செல்கிறாரே’ என்று எண்ணி விட்டு இப்பொழுது தனாவைப் பார்க்க, அவளது கண்கள் கலங்கியிருந்தது.
“தனா…” என்று தோளில் கை வைக்க,
“ஒன்னும் இல்ல அண்ணி. நான் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை அண்ணி. அண்ணன் அவருக்கு எங்கையோ இருந்த கோபத்தை என் மேல காமிச்சுருச்சு விடுங்க. ஆனா, அது பேசின வார்த்தை அதிகம் தான். வலிக்குது என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் இரண்டு அடி எடுத்து வைத்தவள்,
“அப்போ என்னையவே இந்த வார்த்தை சொல்லிப் பேசுதுனா உங்களை… இன்னும் என்ன என்ன வார்த்தை எல்லாம் சொல்லிப் பேசி இருக்கும்?” என்று கேட்டாள்.
தனாவின் கையைப் பிடித்த தமிழ், “தனா நீ என்ன சொல்ற?” என்று கேட்க,
“தெரிஞ்சுகிட்டேன் அண்ணி. ஒரு சில விஷயம் தெரியாம இருந்துச்சு. இப்போ அதுவா தன்னால தெரிஞ்சிருச்சு.
“ஆனா, நீங்க விரும்பினதும் சரி, உங்க விருப்பத்தை நீங்க சொன்னதும் சரி, அதுக்கு அவர் உங்களை என்ன பேசினார் என்றும் தெரியாது. ஆனால், ஏதோ பேசி இருக்கிறார் என்று தெரியும். அதே மாதிரி உங்க கல்யாணத்தப்போ, அந்த செகண்ட் அத்தனை பேர் முன்னாடியும், மண்டபத்தில் “நீ என்னைக் கட்டிக்கிறியா?” என்று உங்ககிட்ட அண்ணன் கேட்டது.
உங்களுக்கு உயிர் போற வலியை தான் கொடுத்திருக்கும் இல்லையா? அப்படி இருந்தும் எப்படி அண்ணி, நீங்க அண்ணா கூட எங்களுக்காக சகஜமா இருக்க மாறி நடிக்கிறீங்களா? இல்ல, எங்களுக்காக அண்ணனைச் சகிச்சுக்கிட்டு அவர் கூட வாழ்றீங்களா? என்று எனக்குத் தெரியல.
ஆனா ஆயுசுக்கும் அந்த வலி, உறுத்தல் உங்களுக்குள்ள இருக்க தானே செய்யும். ஆனா, ஒன்னு அண்ணி, இப்போ எங்க அண்ணன் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க. அவர் உங்ககிட்ட எரிஞ்சி விழுந்தா கூட அதுல முழுக்க முழுக்க அன்பு மட்டும் தான் இருக்கு.
அது உங்களுக்கு நான் சொல்லிப் புரிய வேண்டிய அவசியமில்லை. எங்க அண்ணனைப் பத்தி உங்களுக்கே தெரியும். இருந்தாலும், எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. சாரி அண்ணி, இந்த நிமிஷம் வரைக்கும் அண்ணன் உங்களைக் கஷ்டப்படுத்துறதுக்கு. நானும் ஒரு சில விஷயத்தை உணர்ந்து இனிமே அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிறேன்.
எது நல்லது கெட்டது என்றும், பெரியவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் என்றம் புரிய வச்சிருக்கீங்க” என்று விட்டு ரூமுக்குள் சென்றுவிட்டாள் காலேஜ் கிளம்ப.
ஒரு சில நொடிகளில் காயத்ரி வந்து நிற்க, தன் தங்கையைப் பார்த்து முறைத்த தமிழ்,
“இதெல்லாம் உன் வேலையாடி. நீ தான் தனாகிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னியா?” என்று கேட்க,
“நான் எதுவும் சொல்லல. ஆனா, அவளா வந்து கேட்டா. நான் மேலோட்டமா மட்டும் சொன்னேன். வேற என்ன செய்றது? அவ ஏற்கனவே தெரிந்து வைத்திருந்து தான் வந்து கேட்கிறா. நீ என்னை இதுல இழுத்து விடாதே தமிழ்” என்று விட்டு வேறு எதுவும் சொல்லாமல் தன் தோழியை அழைத்துக் கொண்டு காலேஜ் கிளம்பி விட்டாள் காயத்ரி.
தமிழ் தான் திரும்பி வீட்டைச் சுத்திப் பார்க்க பாக்கியம் அழுகையுடன் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு அவரது அருகில் சென்று “அத்தை” என்று கூப்பிட,
“உனக்கு ஏற்கனவே ஸ்கூலுக்கு நேரம் ஆயிடுச்சு தமிழ். நீ கிளம்பு, எனக்கு ஒன்னும் இல்ல தமிழ். நான் நல்லா தான் இருக்கேன்” என்றார்.
“அத்த, அம்மா…” என்று இழுத்தாள்.
“அண்ணிக்கு போன் பண்ணிச் சொல்ல மாட்டேன் தமிழ். அதுக்காக என் அண்ணன், அண்ணிகிட்ட என் மன பாரத்தைச் சொல்லக் கூடாதுன்னு நீ சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன். ஆனா, நீ அவனைக் கல்யாணத்துக்கு முன்னாடியே விரும்பினதைப் பத்திப் பேச மாட்டேன். நீ ஸ்கூலுக்குப் போயிட்டு வா” என்று சொல்லி நம்பிக்கை கொடுக்க,
“சரி அத்தை” என்று தனது அத்தையின் கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு,
‘இவரை வச்சிட்டு என்னதான் பண்றதுன்னு தெரியல. இவரோட முன் கோபத்தால இன்னும் என்னென்ன நடக்குமோ?’ என்று புலம்பிக் கொண்டே ஸ்கூல் நோக்கி வண்டியை விட்டாள் தமிழ்.
ஸ்கூலுக்கு சென்றவுடன் ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து இருக்கும் போது அகிலா தமிழைப் பார்த்துவிட்டு, “ஏன்டி மூஞ்சி வாட்டமா இருக்கு, என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
நேற்றிலிருந்து இன்று காலை பள்ளிக்கு வரும் வரை நடந்த ஒன்று விடாமல் அனைத்தையும் தமிழ் ஒரே மூச்சாகச் சொல்லி முடிக்க,
தமிழின் கண்கள் கலங்கி இருந்தது. அவளை வேகமாக இழுத்து அணைத்த அகிலாவின் கண்களும் கலங்கி இருந்தது.
“எல்லாம் சரியாகும் தமிழ்” என்று அவள் தோளில் தட்டிக் கொடுக்க,
“இந்த மாமா ஏன் அகி, எதையும் புரிஞ்சுக்க மாட்றாரு. எதை எடுத்தாலும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிக்கணும் என்று நினைத்தால் எப்படி? இதுல தனாவுக்கு எல்லாம் எப்படித் தெரிஞ்சதுன்னு தெரியல, எனக்குத் தைரியம் சொல்லிட்டுப் போறா.
சின்னப்புள்ள அகி. அவளுக்கு இருக்க மெச்சூரிட்டி கூட ஏன் மாமாவுக்கு இல்லை. ஏன் தான் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கிறார் , என்று தான் புரியல” என்று தமிழ் புலம்ப,
அவளது கண்ணீரைத் துடைத்து விட்ட அகி, “மாமாவுக்கு இரண்டு பேருமே முக்கியம் தமிழ். மாமாவுக்கு அண்ணன்னா எந்த அளவுக்கு உசுருன்னு உனக்குத் தெரியாதா? மாமா அண்ணனைப் பத்திக் கொஞ்சம் யோசிக்கிது தமிழ். அதனாலதான் தனாகிட்ட அண்ணனை மட்டும் மனசுல வச்சு அப்படிப் பேசிருச்சு.
மாமாவே அதைச் சாயங்காலம் வந்து தனாகிட்டப் பேசிப் புரிய வைக்கும். மத்தபடி ஒன்னும் இல்ல. எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்களோ என்ற பயம் மாமாவுக்கு உள்ளுக்குள்ள இருக்கு. அந்த பயத்தோட மாமா இருக்கும்போது தனாவும் இப்போதைக்குக் கல்யாணம் வேணாம் என்று சொல்லவும், மாமா அவகிட்ட அப்படிப் பேசிடுச்சு. விடு எல்லாம் சீக்கிரம் சரியாகும்” என்று சொன்னாள் அகிலா.
“ஏண்டி அப்படியேவா விட்டுருவேன் நானு. என் மேல எப்பயுமே நம்பிக்கை வராதா அவருக்கு அவங்க ரெண்டு பேத்தோட வாழ்க்கையும், எப்படியோ போகட்டும்னு அமைதியா இருந்திருவேனா?” என்று கேட்டாள்.
“ஒரே ரூம்ல தான் இருக்கேன் அகி. ஒரு வருஷம் ஆகப் போகுதுடி இருந்தும், கொஞ்சம் கூட அவருக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள் தமிழ்.
அடுத்த நொடி அகிலா தமிழை ஓங்கி அறைந்து இருந்தாள். தமிழ் அகிலாவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Interesting