
அத்தியாயம் 6
நீங்க சொன்னாலும், சொல்லல்லைன்னாலும் நான் வேலையை விட்டு போக தான் போறேன்…” என வீட்டிற்குள் நுழைந்தவளின் காதில்
“அதை முதல்ல செய், கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும். எங்கம்மாப் பேச்சை கேட்டு வேலைக்கு எடுத்தேன் பாரு என்னை சொல்லணும்…” முதல் பாதியை சத்தமகவும் பின் பாதியை முணுமுணுப்பாகவும் கூறிட அது தெளிவாக ஆனந்திக்கு கேட்டது.
அவனின் பேச்சில் கடுப்பானவள் திரும்பி நின்று “நான் போறதுல அத்தனை சந்தோசமா உங்களுக்கு…” எனப் புருவம் உயர்த்திக் கேட்டாள். அவள் அப்படி கேட்டதும் உடனே ஆம் என்பதை போல் தோளைக் குலுக்கினான்…
“அப்ப கண்டிப்பா அந்த சந்தோசத்தை உங்களுக்கு கிடைக்க விட மாட்டேன்…” என்றவள் உள்ளே செல்ல, அதையும் தான் பார்க்குறேன் என்பதை போல் அபியின் இதழ்கள் இகழ்சியாக வளைந்தது.
****
அடுத்த நாள் காலை பரபரப்பாக சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார் சீதா… அபிக்கு பிடிக்குமென கேசரி செய்து கொண்டிருந்தார்.
முதலில் ஒரு காடாயில் உலர்ந்த திராட்சை,முந்திரி பருப்பு, பாதம் பருப்பு,பிஸ்தா பருப்பென அனைத்தும் பொன் நிறமாக நெய்யில் வறுத்து கொண்டார். பின் அதே காடாயில் இரண்டு கப் வெள்ளை ரவையை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து எடுத்து வைத்து விட்டார்… இரண்டு கப் ரவையை எடுத்துக் கொண்டதால் எட்டு கப் தண்ணீரை ஊற்றி சிறிதளவு நச்சு உப்பும், குங்குமப்பூவையும், நூற்றி ஐம்பது மில்லி நெய்யும் ஊற்றி கொதிக்க விட்டார்.
பின் வறுத்து வைத்திருந்த ரவையை அதில் சேர்த்து கட்டிப் பிடிக்காமல் நன்றாக கிளறி விட்டார். நன்றாக கிளறி இறக்க வைத்தவர் அதில் இரண்டு கப் சக்கரையை சேர்த்து நன்றாக கிளறி அதில் பொன் நிறமாக வறுத்து வைத்திருந்த முந்திரி, பாதாம், திராட்சை பருப்பு வகைகளை சேர்த்து கிளறி விட்டார். பின் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி எடுக்க அதன் மனம் அந்த குட்டி வீட்டையே நிரப்பியது.
கேசரியின் வாசத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆனந்தி சட்டென எழுந்து அமர்ந்துக் கொண்டாள். ஹாலில் அமர்ந்தபடி கிச்சனில் நின்றிருந்த சீதாவை பார்த்தவள்
“மேம்,கேசரி வாசம் என் தூக்கத்தை ரொம்ப ட்ஸ்ட்ரப் பண்ணுது…” என தூக்க கலக்கத்திலும் கேசரி வாசத்தை நுகர்ந்தப்படிக் கூறினாள்.
அவளின் செய்கையை மெல்லிய சிரிப்போடு பார்த்தவர்
“எப்ப தான் இந்த மேமை நிறுத்த போறயோ தெரியல, ஆனந்தி” என்க
மெல்லிய புன்னகையோடு
“போக போக மாத்திக்கிறேன் மேம்…” எனக் கூறினாள்.
” சரி கண்ணு, எழுந்து ஃப்ரெஷ் ஆயிட்டு வா, கேசரி சாப்டுவியாம்…” என அன்பொழுக கூறினார்.
“ஹிம்ம்., சரிங்க மேம்.” என்றவள் ஹாலை ஒட்டிய குளியலறையில் நுழைந்துக் கொண்டாள்…
இவள் வெளியில் வருவதற்குள் சோழாவும், குந்தவியும் தங்களின் காலைக் கடன்களை முடித்து வெளியில் வந்திருந்தனர். குழந்தைகளின் அரவம் கேட்டதும் சமையலறையில் இருந்து வெளியில் வந்த சீதாவோ
“வெளிய மழை வருது, சோபாவிலயே உட்காருங்க…” என மெல்லிய குரலில் கண்டிப்புடன் கூறினார்.
பாட்டியின் கண்டிப்பான பேச்சில் “சரி பாட்டி…” கோரசாக கத்தினர் இருவரும்.
“கத்தி தொலைக்காதீங்க டா, உங்கப்பன் எழுந்தான் மூணு பேரும் காலி…” என அதே மெல்லிய குரலில் எச்சரிக்கையாக கூறவும் வாயில் கை வைத்தபடி மீண்டும் சிரித்தனர் இருவரும்.
“ஷ், போயி சோபால உட்காருங்க…” வாயில் ஆள் காட்டி விரலை வைத்தபடி கண்களை உருட்டி உருட்டி கூறினார். அவரின் மிரட்டலுக்கு பயந்தது போல ஹாலில் இருந்த சோபாவில் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.
“ஹ்ம்ம்,இவங்களுக்கு ஒரு அம்மாவை கொண்டு வரதுக்கு இன்னும் எத்தனை நாடகம் போட வேணுமோ தெரியல, போட்ட எல்லா பிளேனும் கேவலமா பிளாஃப் ஆகுது…”என இதுவரை போட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது என புலம்பிக் கொண்டே கிச்சனை நோக்கி நடந்தார்.
“பிளேனா, என்ன பிளேன்…” என்ற குரலில் திடிக்கிட்டு திரும்பி பார்த்தார் சீதா.
“நான் தான் மேம், ஏன் இவ்வளவு ஷாக்…” நகைப்போடு கேட்டாள் ஆனந்தி.
“இல்லை மா ஒன்னுமில்லை…” என்றவர் அவளின் கையில் கேசரி கிண்ணத்தைக் கொடுத்தார். சீதா ஒன்றுமில்லை என கூறிய பிறகு மீண்டும் வற்புறுத்தி கேட்கவில்லை அவள்.
நேராக சோபாவில் அமர்ந்திருந்த குழந்தைகளுடன் அமர்ந்தவள் இருவருடனும் பேசியப்படியே கேசரியை ஊட்டி விட்டாள்… சமையலறையில் இருந்த சீதாவின் பார்வை இவர்களின் மேல் தான் இருந்தது.
காலையில் இருவரையும் எழுப்பி விடுவதிலிருந்து இரவு தூங்க வைப்பது வரைக்கும் அனைத்தும் ஆனந்தி மட்டுமே பார்த்து கொண்டாள். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் தாய்மை மிளிர்ந்தது…
உண்மையாகவே அனிதா இருந்தால் கூட இவர்களை இந்த அளவிற்கு கவனித்திருப்பாளா என்பது சந்தேகமே. அம்முவை பொறுத்தவரை அபிக்கு பின் தான் அவள் பெற்ற புதல்வர்கள். அதனாலேயே அதிகம் குழந்தைகள் இருவரும் சீதாவுடனும், அனிதாவின் தாய் சாரதாவுடனும் தான் இருப்பார்கள்.
சில நாட்களுக்கு முன்பு தான் குழந்தைகளின் முழு பொறுப்பும் சீதாவிடம் வந்தது. குழந்தைகளை பார்த்து கொள்வதில் அவருக்கு பிரச்சினையில்லை ஆனால் அவர் இல்லாத காலத்தில் குழந்தைகளின் நிலை? அதை மனதில் வைத்து தான் அபிக்கு மறுமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அவரின் மகன் முடிவாய் வேண்டாமென கூறிவிட்டதால் குழந்தைகளை வைத்து அபியின் மறுமணத்திற்கு தான் திட்டம் போட்டார்.
தான் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளவில்லையென அபிக்கு தெரிந்தால் நிச்சியம் அவனுக்காக இல்லையென்றாலும் குழந்தைகளுக்காக மறுமணம் செய்து கொள்வான் என நினைத்து தான் பேர பிள்ளைகளோடு இணைந்து திட்டம் திட்டினார். ஆனால் அதற்கும் பெரிய ஆப்பாக வைத்துவிட்டான் அவரது மகன்.
“இன்னும் கொஞ்சம் கொஞ்சம்,இது மட்டும் தான்…”என்ற ஆனந்தியின் குரலில் தன் நினைவிலிருந்து வந்தவர் சோபாவில் குழந்தைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்தவளை பார்த்தார்.
ஏனோ அவரின் கண்களுக்கு அழகியாய் தெரிந்தாள் ஆனந்தி.. கோதுமை நிறம்,கதை பேசும் கண்கள், புன்னகை ஏந்தி நிற்கும் இதழ்கள், குண்டு கன்னங்கள், அடுக்கடுக்காக வெட்டியிருந்த கார்மேக கூந்தலை அள்ளி எடுத்து முடிந்து இருந்தாள். அதில் சில அடங்கா முடிகள் அவளது நெற்றியில் முத்திட்டு கொண்டிருக்க, அதுகூட அழகாக தான் தெரிந்தது… ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அவளுடன் அபியை நினைத்து பார்த்தார்.
“அவ சின்ன பொண்ணு சீதா…” என மனம் பலமாக அதட்ட, அந்த நினைவை அப்படியே ஒதுக்கி வைத்தவர் அபிக்கு பிடித்த உணவு வகைகளை செய்ய ஆரம்பித்தார்.
“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா மேம்…” எனக் கேட்டபடி வந்தாள்.
“இல்லை மா, அதெல்லாம் வேண்டாம் சிம்ப்ள் டிஷ்…” என ஆனந்தியை புன்சிரிப்புடன் பார்த்தவர் மீண்டும்
“இந்த மழை வேற நிக்கவே மாட்டேங்குது.எவ்வளவு நேரம் தான் வீட்டை சாத்தியே வைக்கறது? ஆனந்தி அந்த கதவை ஓபன் பண்ணி விடு மா…”என
சொல்லவும் சரியென்றபடி கதவை திறந்து விட்டாள்.
மழை காற்றும் அதனுடன் இணைந்த மலர்களின் மனமும் ஆனந்தியின் வதனத்தை தடவி செல்ல, அதனை ஆழ்ந்து சுவாசித்தவள் மெல்ல வெளியில் வர, அவளோடு சோழாவும், குந்தவியும் இணைந்து கொண்டனர்.
பிள்ளைகள் இருவரும் வெளியில் வந்ததை ஆனந்தி கவனிக்கவே இல்லை. அவளின் கவனம் முழுவதும் வாசலில் வைத்திருந்த பன்னீர் ரோஜாக்களின் மேல் தான் இருந்தது.
இரவில் வெகுநேரம் அமர்ந்திருக்கும் போது கூட வீட்டை சுற்றியிருந்த செடிகளும், மரங்களும் அவளின் கவனத்தில் பதியவில்லை, இப்போதும் அவையனைத்தும் அவளின் கவனத்தை முழுவதும் ஈர்த்தது.
மீண்டும் மீண்டும் ஈரம் சுமந்த காற்றினை ஆனந்தி ஆழ்ந்து சுவாசிக்க, அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தனர் சோழாவும், குந்தவியும். இயற்கையின் அழகில் லாயித்து இருந்தவள் தன் அருகில் நின்ற குழந்தைகளை கவனிக்கவில்லை.
வெளியிருந்த ஈர ரோஜாக்களை வருட ஆசைக் கொண்டது ஆனந்தியின் மனம். மனதின் எண்ணத்தை செயல் படுத்த நினைத்தவள் வாசலில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து பன்னீர் புஷ்பங்களின் அருகில் சென்றாள்.
பன்னீர் பூக்களின் மேல் வாகாக சாய்ந்து கொண்டிருந்த மழை நீரை குறுகுறுவென பார்த்தவள் அதனை கிழே விழ வைக்க எண்ணி பூக்களை ஆட்ட பூவின் மேலிருந்த துளிகள் அனைத்தும் ஆனந்தியின் வதனத்தின் மேல் விழுந்தது…
நீர் திவளைகள் தன் மேல் விழுந்ததும் அதன் ஈரத்தை கண்மூடி ரசித்தவளின் காதில் “குளோரி ஆன்ட்டி, எனக்கும் எனக்கும் பூ…” என்ற சோழாவின் குரல் கேட்டது.
சட்டென கண்களை திறந்து வாசலில் நின்ற சோழாவையும், குந்தவியையும் பார்த்தவள் “அச்சுக்குட்டி, நீ அங்கையே நில்லுங்க, வாசலெல்லாம் மழை தண்ணியா இருக்கு. வழுக்கி விட்ரும். குட்டிமா அவனை பிடி..” மெல்லிய குரலில் அவனை வர வேண்டாம் என கூற கூற குந்தவியின் எதிர்ப்பையும் மீறி வெளியே வந்தவன் வாசலின் தேங்கி நின்ற மழை நீரில் வழுக்கி விழுந்தான்.
குப்புற விழுந்ததால் நெற்றியிலும், மேலன்னத்திலும் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிவர, பதறிப் போனாள் ஆனந்தி.
“ஐயோ, சோழா” என கத்தியவள் அவனை நோக்கி ஓடவும், அபி, அவனை தூக்கவும் சரியாக இருந்தது.
அப்பொழுது தான் காலைக் கடன்களை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்திருந்தான். ஆனந்தி கத்தவும் சட்டென வாசலிற்கு வந்திருந்தான். “அம்மா…” என பெருங்குரலெடுத்து சோழா அழுக, அவனின் கத்தலில் சீதாவும் அடுப்பை அணைத்து விட்டு வெளியில் வந்தார்.
அதே நேரம் இளையவனின் வாயிலும், நெற்றியிலும் வழிந்த இரத்தத்தை தன் துப்பட்டாவை கொண்டு துடைத்து விட்டவள் அருகில் நின்ற அபியிடம் “சார், ஹாஸ்பிடல் போலாம். இரத்தம் அதிகமாக வருது…” எனக் குரலில் இருந்த பதற்றத்தை அப்பட்டமாக வெளிக் காட்டியபடி கூறினாள்.
“ஒன்னுமில்ல, சின்ன காயம் தான்…” எனக் கூறியவன் மகனின் நெற்றியை ஆராய்ந்தான். கல் குத்தி காயம் ஏற்பட்டிருந்தது. விழுந்த வேகத்தில் மேலன்னத்தை கடித்து கொண்டான் போலும் வாயிலும் நன்றாகவே இரத்தம் வழிந்தது.
அவனின் ஆராய்ச்சி பார்வையில் கடுப்பானவள் “சார்,என்ன பார்த்துட்டே இருக்கீங்க…அவனுக்கு இரத்தம் வருது…” என பல்லை கடிக்க, பதில் பேசாது அவளை முறைத்தான்.
“அபி, ஹாஸ்பிடல் போலாம் ப்பா,..” என்ற தாயின் குரலில் அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி கொண்டவன் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் காரினை நோக்கி நடந்தான். அவசரமாக வீட்டை பூட்டி விட்டு குந்தாவியை அழைத்து கொண்டு காரினை நோக்கி நடந்தார் சீதா.
டிரைவர் சீட்டில் அபி அமர்ந்து கொள்ள,முன் பக்க இருக்கையில் சீதாவும், பின் பக்க இருக்கையில் குந்தவி, சோழாவுடன், ஆனந்தியும் அமர்ந்து கொள்ள, கார் மருத்துவமனையை நோக்கி பயணித்தது…
****
அடுத்த அரைமணி நேரத்தில் சோழாவை பரிசோதித்து, மருந்திட்டு மாத்திரைகளை கொடுத்திருந்தார்கள் மருத்துவர்கள்.
அங்கே மருத்துவமனை வளாகத்தில்
“ஆனந்தி,சோழாக்கு ஒன்னுமில்லை டா எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க…”என்ற சீதாவின் குரலில் தன் நிலைக்கு வந்தவள் அவரிடம் திரும்பி
“இல்லை மேம், கிழ விழுந்ததுல ரொம்ப இரத்தம் போயிடுச்சு” என அழுதவளை பார்க்க ஏதோ போல் இருந்தது சிதாவிற்கு…
அதே நேரம் மருத்துவரின் அறையிலிருந்து வெளிவந்த அபியிடம் “நீயாவது இந்த பொண்ணுகிட்ட சொல்லுப்பா. அவனுக்கு ஒன்னுமில்லைன்னு ரொம்ப துடிச்சு போறா…” என்றவரை முறைத்தான் அபி. அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் “சொல்லு ப்பா…” என்றார் மென்மையாக.
பெருமூச்சுடன் தாயை அழுத்தமாக பார்த்தவன் சோழாவின் கைப் பிடித்து அமர்ந்திருந்தவளை பார்த்து
“இப்ப எதுக்கு இந்த அழுகை மிஸ் ஆனந்தி” என எரிச்சலாகக் கேட்டான்.
“நான் என் சோழாக்காக அழறேன். அதுல உங்களுக்கு எங்க வலிக்குது…” என அழுகையுடனே கடுப்பாக கூற, சீதா அவளை திகைத்து பார்த்தார்.
ஆனால் அபிக்கு அவளின் பேச்சு புதிது இல்லை என்பதை போல் “என் காது வலிக்குது. அதை விட உன் மூக்குல இருந்து விடாம வர சளியை என் கர்சிப்பில துடைச்சுட்டு இருக்கறத பாக்க பாக்க வெறியே வருது…” என கடுப்படித்தான்.
மருத்துவமனைக்குள் நுழையும் முன்பே தனது கர்சிப்பை அவளிடம் நீட்டி முகத்தை துடைக்க கூறினான். ஆனால் அவளோ முகத்தை மட்டுமல்லாமல் மூக்கையும் துடைக்க, கடுப்பாகி போனவன் மீண்டும் கர்சிப்பை வாங்கவே இல்லை…
“ரொம்ப பண்ணாதீங்க, துவைச்சு கொடுத்துடுவேன்…”என சிவந்த மூக்கில் சிந்திய நீரை துடைத்துக் கொண்டே கூறினாள்.
அவளின் செய்கையில் முகம் சுளித்தவன் “ச்சீ, அதை நீயே வைச்சுக்க, மனுசன் யூஸ் பண்ணுவானா…” முகத்தை சுண்டி கொண்டே கூறினான்.
தன் மகன் வழமை போலவே பேசுவதை சிறு சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தார் சீதா. தன் தாயின் பார்வையை கவனித்தவன் சட்டென முகம் இறுக “கிளம்பலாம் மா..” என்று சோழாவை தூக்கி கொண்டு முன்னால் நடந்தான்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
25
+1
5
+1
1

