Loading

    பிரதன்யா முகத்தில் இருந்த அனலுக்கு அருணை சுட்டு பொசுக்கி இருப்பாள் அத்தனை ரௌத்திரம்.

    “மகியோட அம்மா உயிரோடு இருக்காங்க ஆனா நீங்க அவங்கள செத்துட்டதா என் கிட்ட சொல்லி இருக்கீங்க”என்று ஆத்திரத்துடன் வினவ

    “ஆமாம் அப்படித்தான் சொன்னேன் எனக்கு சொல்ல விருப்பம் இல்லை அதனால சொல்லலை”என்றவனை முறைத்தவள் “பெத்த அம்மா கிட்ட இருந்து பிள்ளையை பிரிச்சு வச்சிருக்கீங்க நீங்க எல்லாம் என்ன மனுஷங்க”காட்டு கத்தலாய் கத்தினாள்.

    “எதுக்கு கத்தற பிரதி.பிரிச்சது நாங்க இல்லை பிரிஞ்சு போனது அவங்க தான்”என்றான் வெடுக்கென்று.

    “ஏன் பிரிஞ்சாங்க சண்டையா இல்லை வேறெதுவுமா சரி அப்படியே இருக்கட்டும் அதுக்கு பையனை தொடக் கூட கூடாது னு நீங்க எப்படி சொல்வீங்க”

    “நான் சொல்லாம வேற யாரு சொல்வாங்களாம்”என்றவன் “அந்த அம்மா இந்த புள்ளை எனக்கு வேண்டாம் னு விட்டுட்டு போயிருச்சு.அப்புறம் என்ன அவன் கிட்ட உரிமை வேண்டி கிடக்கு. மகி பிறந்து அஞ்சு மாசம் ‘இவன் எனக்கு வேணாம் னு’ சொல்லி விட்டுட்டு போயாச்சு. ரெண்டு ஆம்பளைங்க தனியா பிஞ்சு குழந்தையோட நிக்கிறோம். அவனுக்கு என்ன வேணும் ஏது வேணும் எதுவும் தெரியலை.அக்கம் பக்கம் கூட உதவி செஞ்சாங்க ஆனா பெத்தவ எனக்கென்னனு போயாச்சு. அண்ணன் அவங்களை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான். நல்லா வாழ்ந்தாங்க திடீர் னு ஆக்ஸிடென்ட் ல போய் சேர்ந்துட்டான். இவங்க ஏழு மாசமோ என்னவோ. மகி பிறக்கற வரைக்கும் அவங்களை நர்ஸ் வச்சு பார்த்தோம். குழந்தை பிறந்து மூணு மாசம் வரைக்கும் பார்த்தோம். நாலாவது மாசம் அவங்களா தான் நர்ஸ் வேண்டாம் நானே பார்க்கிறேன் னு சொன்னாங்க. சமையலுக்கு மேல் வேலைக்கு னு என் சக்திக்கு மீறி எல்லாம் ஆள் வச்சு பண்ணேன்.

    ஒரு பக்கம் லோன் போகுது அண்ணனுக்கு செலவு ஆன காசு அது இதுன்னு கழுத்தை நெறிச்சாலும் வீட்டில் ஒரு வார்த்தை நானோ அப்பாவோ சொல்ல மாட்டோம். கடன் பத்தி அவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணது கூட இல்லை.”

    “அப்புறம் ஏன் மகியை விட்டு போகணும்”என்று புரியாமல் கேட்டாள்.

    “போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் வந்ததால்”

    “புரியலை”

    “ஆஃப்டர் டெலிவரி வரக் கூடிய ஒரு விதமான டிப்ரஷன் அதை அவங்க எங்க கிட்ட சொல்லி இருந்தா கூட ட்ரீட்மெண்ட் ஏதாவது போயிருக்கலாம் எதுவுமே சொல்லாம பச்சை பிள்ளையை விட்டு போனது தான் என்னால ஏத்துக்கவே முடியலை”என்றவனுக்கு இப்போதுமே மகிழனை வைத்துக் கொண்டு அவன் பட்ட பாடும் அவனுக்காக அவன் அம்மாவிடம் கெஞ்சியதும் தான் நினைவுக்கு வந்தது. வலி மிகுந்த கொடுமையான நாட்கள் அவை. ஐந்து வருடங்களாக கடன் ஒரு பக்கம் குழந்தை ஒரு பக்கம் என்று அவன் பட்ட பாட்டினை வார்த்தைகளால் வடித்து விட முடியாது. மகிழனை கண்ணுக்கு கண்ணாக வளர்த்து பக்குவப்பட்ட பிறகு நான் அவனின் தாய் என்னிடம் பிள்ளையை கொடு என்று கேட்கும் அவளைப் பார்த்து ஏன் இரக்கம் கொள்ள வேண்டும் என்று தான் அவனுக்குத் தோன்றியது. தாயிடம் தான் பிள்ளை இருக்க வேண்டும் என்ற தார்மீகம் அறியாதவன் அல்ல ஆனால் சில விதிவிலக்குகளும் உண்டு தானே.

    பிரதன்யாவிடம் தன் கோபத்திற்கான காரணத்தைக் கூறியவன் “இதுக்கு மேல இதை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்லை தனு. மகியை விடவும் முடியாது. அவன் அம்மானு கூப்பிட்டது கூட உன்னைத் தான்.இதுக்கு மேல நீ தான் சொல்லணும்”என்றான் அழுத்தமாக.

    அதற்கு மேல் பிரதன்யா எதுவும் பேசிடவில்லை.

    “நானும் மகியை அவங்க கிட்ட விடணும் னு சொல்லலை. விடவும் மாட்டேன்”என்றவள் “எதையும் முன்னாடியே சொல்லி பழகுங்க பிரசாத். தேவையில்லாத ரசாபாசம் பொதுவெளியில் ஆகறதை நான் விரும்பலை”என்றாள்.

    “சாரி”என்றான் வேகமாக

    “ம்க்கும்”என்று அலுத்துக் கொண்டவள் “தூக்கம் வருது தூங்குவோம்”என்றாள் படுக்கையை விரித்தபடி.

   சற்று நேரம் தயக்கமாக நின்னவன் “இன்னைக்கு மட்டும் மகியை கூட படுக்க வச்சுக்கலாமா ப்ளீஸ் தனு”என்று இறைஞ்சுதலாய் கேட்க

    “போடாங்க”என்று நாக்கை மடித்து சொல்லியே விட்டாள் கோபத்தில்.

    “ஹேய்”எனச் சிரித்தவன் “வேண்டாமா என்னவோ மைன்ட் சரியில்லை தனு அதான் ஓகே நீ தூங்கு நான் அவன் கூட ஹால்ல படுத்துக்கிறேன்”என்று வெளியேறினான்.

    ‘கடவுளே ஒரு பைத்தியத்தை லவ் பண்ண வச்சுட்டியே’என தலையிலடித்துக் கொண்டவள் அவனைத் தேடிச் சென்றாள்.

    கந்தசாமியிடம் நடந்ததை விவரித்துக் கொண்டிருக்க அவருமே அவனைத் தான் கடிந்து கொண்டார்.

    “ப்பா டென்ஷன் ஆகிட்டேன். தனு கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டேன் அவ புரிஞ்சுப்பா”என்றான்.

    “மாமா இன்றைக்கு மகி எங்க கூட தூங்கட்டும்”என்றவள் உறங்கிக் கொண்டிருந்த மகிழனை தூக்கி வரும்படி அருணிடம் கூறி விட்டு போய் விட்டாள்.

    “தூக்கிட்டு போ. இதுதான் உனக்கு கடைசி வெளியே வச்சு கத்தற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது.வீட்டில் இருந்தாலுமே தன்மையா சொல்லி பழகு அருணு. மருமக மேல இன்னொரு தடவை கோவப்பட்டணு கேள்வி பட்டேன் அப்புறம் அவ்வளவு தான்”என்று மகனை எச்சரித்து அனுப்பினார்

    “ஹ்ம்ம் சரிங்கப்பா”என்றவன் மகனைத் தூக்கிக் கொண்டு செல்ல கந்தசாமி மகிழனின் அம்மாவை சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டு படுத்து விட்டார்.

    ***********

    “வாவ் டின்னர் எல்லாம் அசத்தலா இருக்கு”என்று வாசம் பிடித்தவனிடம் “சாப்பிட்டு டேஸ்ட் எப்படி இருக்குனு சொல்லுங்க”என அவனுக்கு பரிமாற

    “எல்லாமே எனக்கு பிடிச்ச ஐட்டம். எப்படி தெரியும் அஸ்வி. அம்மா பாடம் எடுத்தாங்களா”என்றான் கிண்டலாக.

    “ஹ்ம்ம் நான் கேட்டேன் அவங்க சொன்னாங்க”என்றதும் நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு “நைஸ்”என்றபடி உணவருந்தினான்.

    “நீயும் உட்கார் நாம ரெண்டு பேர் தானே”என்று அவளுக்கு பரிமாற “எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை”என்றாள்.

    “டூ குட். இட்லி மீன் குழம்பு அதோட காம்பினேஷனே”என்றவனின் ரசனையை விழிகளில் பருகிக் கொண்டாள் தேஜஸ்வினி.

    “பட் அடிக்கடி செய்யாதே”என்றான்.

    “ஏன்”என்று கேட்டு அவள் முகம் வாட

    “அடிக்கடி செஞ்சா என் வொர்க் அவுட் என்ன ஆகறது டயட் கன்ட்ரோல் என்ன ஆகறது. நிறைய சாப்பிடுவேன் வெய்ட் போட்டுடும்”என்றான் கவலையாக.

    “அடடா ரொம்ப தான்”என்று சிரித்தாள்.

    இருவருக்குமான இயல்பு விரவிக் கிடந்தாலும் திருமணத்தினால் உண்டாகும் உன்னத கணவன் மனைவி பந்தம் இன்னும் கிடப்பிலேயே இருந்தது.

    இரு இணைகளும் தங்கள் இயல்பு வாழ்வில் ஒன்றியிருக்க அவ்வபோது சுதாகரன் அகிலன் என்று அடிக்கடி பேசிக் கொண்டு தான் இருந்தனர்.

    வாரம் ஒரு முறை அங்கே வருவதை சாரதா வழக்கமாக்கி இருக்க இருவரின் வாசமும் ஒரே அறையில் என்றானது.

    மகன் இன்னும் பழைய நினைவுகளில் தான் இருக்கிறானா அல்லது தேஜாவோடு இணங்கிப் போய் விட்டானா என்று அறிந்து கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு.

    நாட்கள் அதன் போக்கில் கடந்திருக்க தேஜாவும் யுகாவும் இன்னும் அதே இடத்தில் தான் ‌இருந்தனர்.

    அவன் இருக்கும் வரை எதுவும் தெரியாது அவளுக்கு. வேலைக்கு கிளம்பி விட்டால் தனிமை அத்தனை சலிப்பாக இருந்தது தேஜாவிற்கு.

    “ரொம்ப போர் அடிக்குது ஏதாவது ஜாப்க்கு அப்ளை பண்ணவா”என்று கேட்க

    “யுவர் விஷ். அப்ளை பண்ணேன். “என்றவன் அவள் படிப்புக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்தும் கொடுத்தான்.

    “இங்கிருந்து ரொம்ப தூரமா இருக்கும் போலவே”என்று கேட்க

    “கண்டிப்பாக தூரம் தான் அஸ்வி பக்கமா ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி இருக்கு அதில் ப்ரெஷர் எடுக்கறாங்களா தெரியலை.”என்றிட

    “உங்க ஆபிஸ் ல எல்லாம் வேலை கிடைக்காதா”

    “கிடைக்கும் தான் பட் அங்கேயும் ஹ்ம்ம் ஓகே ட்ரை பண்ணி பார்க்கிறேன் கிடைச்சா லக் தான்”என்றான்.

    இரண்டு மூன்று கம்பெனிகளை தெரிவு செய்து அவனே அப்ளை செய்தும் கொடுத்தான்.

    அடுத்தடுத்த நாட்களில் தேஜா இரண்டு மூன்று நேர்முகத் தேர்வுகளிலும் கலந்து கொண்டாள். ஒவ்வொரு இடத்தில் இரண்டு மூன்று சுற்றுகளிலேயே வெளியேவும் வந்து விட்டாள்.அதில் சோர்ந்து அமர்பவளை “விடு விடு பார்த்துக்கலாம்”என்று அவன் தான் தேற்றவும் வேண்டியிருந்தது.

    “பேசாம ஏதாவது கோர்ஸ் பண்ணவா”என்று கேட்க

    “சூப்பர் உன் டிபார்ட்மெண்ட் பேஸ்டாவே செய்”என்று அடுத்த சில நாட்களில் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட்டான்.

    காலையில் சென்றால் மதியம் வருவது போல வகுப்புகள் இருக்க யுகாவுடன் சென்று விட்டு மதியம் முடிந்ததும் கேபில் வந்துவிடுவாள்.

    கணினி வகுப்பில் சேர்ந்ததில் இருந்து சற்று பொழுது போனது அவளுக்கு வெளி உலக பழக்கமும் கிடைத்தது.

    சிலரோடு நன்றாக பழகவும் செய்தாள்.

    “நீங்க யுகாதித்தன் வொய்ஃபா”என்று ஒரு பெண் திடீரென கேட்க

    ஆமென்று தலையசைத்தாள் தேஜா ‌

    “ஓகே ஓகே. அவர் கூட வந்து போனீங்களா அதான் ஒரு டவுட் ல கேட்டேன்”என்றாள் அந்த பெண்.

    “நீங்க”என்று தேஜா வினவ

    “நான் ஜஸ்ட் அவங்க நெய்பர் தான். முன்னாடி ரெண்டு தெரு தள்ளி இருக்கற அப்பார்ட்மெண்ட்ல தான் இருந்தார் அப்போ தெரியும்”என்று முடித்துக் கொண்ட பெண் “வர்றேன் சிஸ்டர்”என்று பார்க் போய்விட்டாள்.

    என்னடா இது என்று யோசித்தபடி தானும் பார்க்கில் சென்று அமர்ந்தாள் தேஜா. அங்கு விளையாட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது அவளுக்கு பிடித்தமான ஒன்று.

    வழக்கம் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதேனும் கொறித்தால் பரவாயில்லை என்றிருக்க அங்கிருந்த கடையை நோக்கிச் சென்றாள்.

    சற்று முன் அவளிடம் பேசிய பெண் வேறு யாரிடமோ பேசிக் கொண்டு நின்றாள் அவள் தேஜாவை கவனிக்கவில்லை.ஆனால் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது அட்சர சுத்தமாக தேஜாவின் காதில் விழுந்தது.

  “இந்த தமிழ் பசங்க பயங்கர கில்லாடி பசங்களா இருக்கானுக”என்று ஆங்கிலத்தில் உரைத்து விட்டு “நான் முன்ன இருந்த ஃப்ளாட் பக்கத்தில் இருந்த பையன் ஒரு பொண்ணை லவ் பண்ணான் ரெண்டும் எப்போதும் அங்கேயே தான் இருக்கும் கிட்டத்தட்ட லிவ் இன் மாதிரி எல்லாம் முடிச்சுட்டு அந்த பொண்ணை கழட்டி விட்டுட்டு இப்ப ஏதோ ஊர் பக்கம் உள்ள பொண்ணை மேரேஜ் பண்ணி கூட்டி வந்திருக்கான். வாழ்வு தான் அவனுக்கு.”என்று சொல்லி சிரித்தாள்.

    தேஜாவிற்கு உலகமே நின்று விடும் போலிருந்தது. கண்கள் கலங்குவது போலிருக்க அங்கிருந்து உடனடியாக கிளம்பினாள். அது நேரத்தில் யுகா வீக் என்ட் பார்ட்டி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

    …… தொடரும்

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
26
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment