
அத்தியாயம் 123
“என்ன தம்பி இன்னும் ஷாக்கில் இருந்து வெளி வரலையா?” சொந்த நினைப்பில் மூழ்கியிருந்த அரசுவின் பின்னந்தலையில் அடித்து நிகழ்வுக்கு கொண்டு வந்தான் நாகா.
“இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும், அங்கிள் சொன்னாரா?” தயக்கமாய் கேட்டான் அரசு.
நெடுநாளாக அவனுக்குள் இந்த சந்தேகம் இருந்தது. தன் வளர்ப்புத் தந்தை இறப்பதற்கு முன்னர் வடிவேலுவை தனிமையில் சந்தித்து பேசிய போது, உண்மைகளை சொல்லி இருப்பாரோ என்று அடிக்கடி யோசனை வருவதுண்டு.
தன்னுடைய பயம் உண்மையாக இருந்தால், ஒருநாள் இல்லை ஒருவேளையாவது வடிவேலு எப்படியும் அவரின் தந்தை உணர்வுகளை தன்னிடம் காட்டியிருக்கக் கூடும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அவருக்கு நடந்த எதுவும் தெரியவில்லை என்றே மனதைத் தேற்றியிருந்தான். அந்த மனிதர் அனைத்தையும் உள்ளுக்குள் போட்டு மருகிக்கொண்டு இருந்திருக்கிறார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்.
பெற்றவரை அருகிலேயே வைத்துக்கொண்டு நாளும் பொழுதும் அவரை மாமா என்று அழைக்கும் கொடுமை தன்னோடு போகட்டும் என்று அவன் நினைத்திருக்க, தன் வேதனைக்கு இணையான வலியை இத்தனை நாளாக வடிவேலுவும் அனுபவித்திருப்பார் என்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை அரசுவால்.
“அடி பிச்சுப்புடுவேன் படவா. இன்னும் என்னடா அங்கிள் னு சொல்லிக்கிட்டு. ஒழுங்கு மரியாதையா அப்பான்னு கூப்பிடு.” அதட்டினான் தெய்வா.
“தெய்வா நாம இங்க கிளம்பும் போது அப்பா என்ன சொன்னாருன்னு மறந்துட்டியா?” செல்வா கேட்க, “ஸ்சாரி ப்ரதர் ஸ்சாரி. ஒரு ப்ளோவில் சொல்லிட்டேன் இனி சொல்லமாட்டேன்.” வருந்தினான் தெய்வா.
“அவர் அப்படி என்ன சொன்னாரு.” அங்கிள் என்ற அழைப்பைத் தொலைத்து மொட்டையாகக் கேட்டான் அரசு.
“அவர் உன்னைப் பெத்தவராச்சே. உன்னை மாதிரி தானே அவரும் இருப்பாரு. அவருக்கு உன்னோட வளர்ப்பு அப்பா, அம்மா சாகும் போதே விஷயம் தெரிஞ்சிருக்கு.
இத்தனை நாளா யார்கிட்டேயும் காண்பிச்சுக்காம உள்ளுக்குள்ளேயே வைச்சிருக்கார். இன்னைக்கு உன் மாமனார் உன்னை ஒருவார்த்தை குறைச்சு சொல்லவும் மனசு தாங்கமா பொங்கிட்டார். அதை தர்மா கேட்கப் போய் எங்களுக்குத் தெரிய வந்தது.
எக்காரணம் கொண்டும் உனக்கு இந்த உண்மை தெரியக்கூடாதுன்னு அவர் சொல்லிக்கிட்டு இருந்த நேரத்தில் தான் அறிவு மூலமா உனக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் னு எங்களுக்குத் தெரிய வந்தது.
அப்ப கூட, ‘அரசுகிட்ட உங்களையோ, என்னையோ ஏத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. நமக்குத் தேவை அரசு நம்ம கூட, நம்ம கண் எதிரில், நம்ம வீட்டில் இருக்கணும் அவ்வளவு தான். அதுக்குத் தேவையான ஏற்பாட்டை பண்ணா போதும்’ னு சொன்னாரு.” தோள்களைக் குலுக்கியபடி சொன்னான் தெய்வா.
அரசுவிற்கு இதற்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை அமைதியாக நின்றிருந்தான். மனைவி தன் இரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டாள் என்கிற நினைப்பில் அவளைப் பார்க்க.
“நீங்க என்ன நினைச்சு என்னைப் பார்க்கிறீங்கன்னு எனக்குப் புரியுது. நான் உங்களுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறல. பலத்த தயக்கத்தோட என்கிட்ட நீங்க பேச ஆரம்பிக்கவும் காதலைச் சொல்லத் தான் வரீங்கன்னு நினைச்சு வாய்ஸ் ரெக்காடரை ஆன் பண்ணேன்.
பார்த்தா கர்ணனோட பிறப்பு இரகசியம் மாதிரி இத்தனை பெரிய விஷயத்தை சாதாரணமா சொன்னீங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. இருந்தாலும் நான் ஏதாவது செய்தே ஆகனும் னு தோணுச்சு.
உங்க பேச்சை மீறாம உங்க வாயால் நீங்க சொன்னதை அப்படியே செல்வா சாருக்கு அனுப்பிட்டேன்.” என்றவளை முறைத்தான் அரசு.
“மத்தவங்களுக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து செய்யுறவங்களுக்கு, தனக்கு நிஜத்தில் என்ன தேவைன்னு தெரியாதுன்னு சொல்லுவாங்க. அது உங்க விஷயத்தில் நூத்துக்கு நூறு சரி.
உங்களுக்கு வடிவேல் மாமா அவர் பசங்கன்னு வாழுற வாழ்க்கை பிடிச்சிருக்கு. அதை ஏத்துக்கிட்டா உங்க வளர்ப்பு அப்பா அம்மாவுக்கு துரோகம் பண்ண மாதிரி ஆகிடுமோன்னு பயப்படுறீங்க. அவங்க சாவுக்கு நீங்களும் ஒரு காரணம் என்கிற குற்றவுணர்வு உங்ககிட்ட இருக்கு.” என்க, தன்னை இத்தனை உணர்ந்திருக்கிறாளா தன் மனைவி என்று ஆச்சர்யமாகப் பார்த்தான் அவளை.
“ஒவ்வொருத்தரோட கர்மா படி தான் அவங்களுக்கான முடிவு இருக்கும்.” என்றவளை முறைக்கப் பார்த்தான் அரசு.
“நான் ஏற்கனவே சொன்னது தான். அவங்க உங்களோட அப்பா, அம்மாவா இருந்தாலும், உங்களை உயிருக்கு மேலா நினைச்சு வளர்த்திருந்தாலும் அவங்க பண்ணது பெரிய தப்பு.
ஒருத்தர்கிட்ட ஐந்து குழந்தைங்க இருந்தா, அதில் இருந்து ஒன்னை அவங்க எடுத்துப்பாங்களா? இப்ப உங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நாளைக்கு உங்க பசங்களில் யாரையாவது யாராவது திருடிட்டு போயிட்டா அது சரின்னு உங்களால் சொல்ல முடியுமா?” என்க, “திருட்டா?” பதறினான் அரசு.
“உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்யும். திருடிட்டு போன பொருளை நல்லபடியா பார்த்துக்கிட்டாலும் அது திருட்டு தான். குறைந்தபட்சம் சாகுற நேரத்திலாவது உண்மையைச் சொல்லி உங்களை வடிவேலு மாமாகிட்ட ஒப்படைச்சிருந்தா என் மனசு ஆறி இருக்குமோ என்னவோ. அப்ப கூட உங்களை மொத்தமா அவர்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்களே. எனக்கு அவங்க சுயநலத்தோட மொத்த வடிவமாத் தான் தெரியுறாங்க.” என்ற மனைவிக்கு என்ன பதில் சொல்லுவான் அரசு.
அனைவரும் நியாயத்தை யோசிக்க, அவன் யோசித்தது என்னவோ அவன் வளர்ப்புத் தாய், தந்தை அவன் மீது வைத்திருந்த அன்பை மட்டும் தான்.
“எனக்கு மனசு ஆறலங்க. காமராஜ் மாமாவும், பொற்கொடி அத்தையும் உயிரோட இருந்து இந்த விஷயங்கள் எனக்குத் தெரிய வந்திருந்தா நான் கண்டிப்பா இப்படி பண்ணி இருக்க மாட்டேன். ஆனா விஷயம் அப்படி இல்லையே. செத்துப் போனவங்களோட நியாயமில்லாத ஆசைக்காக உயிரோட இருக்கிறவங்களை சங்கடப்படுத்தணுமா என்ன.
வடிவேல் மாமாவைப் பத்தி கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. காமராஜ் மாமா சாகுற வரைக்கும், தன்னோட பையனைப் பத்தி தெரியாம தொலைச்சவர் அதுக்கு அப்புறம் தெரிஞ்சே உங்களைத் தொலைச்சிட்டார்.
நண்பனோட மரணப் படுக்கையில் செஞ்சு கொடுத்த சத்தியத்தை ஞாபகப்படுத்தி, உங்களை தூரமா வைக்கிறதுக்கு அவர் இன்ன வரைக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்.” என்க, கண்ணை அழுந்த மூடித்திறந்தான் அரசு.
வடிவேலுவுக்கு நெடுநாளைக்கு முன்பே விஷயம் தெரியும் என்று தெரிந்ததில் இருந்தே அவன் மனம் இதை நினைத்து தான் பதறிக்கொண்டிருந்தது.
“உண்மை தெரிஞ்சு இவங்க நாலு பேரும் மாமாகிட்ட சண்டை போட்டப்ப கூட காமராஜ் அங்கிளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்லல. நிர்பந்தத்தால் செய்தாலும் நண்பனோட மரணப்படுக்கையில் செய்து கொடுத்த சத்தியத்தை அவர் மதிக்கிறார். அந்த மனுஷன் உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஒரே ஒரு விஷயம் தான். நீங்க அவர் கண்ணு முன்னாடி இருக்கனும்.
இதைக் கூட அவருக்காக உங்களால பண்ண முடியாதா என்ன. உங்களுக்கு சொத்து எழுதிக்கொடுப்பதற்கு என்ன, உங்களுக்காக எதையும் செய்யும் உரிமை அவருக்கு இருக்கு. அதை நிராகரிப்பது அவரோட அன்பை கொச்சைப்படுத்துவதற்குச் சமம்.” என்க, மீண்டும் அழுத்தமாக கண்களை அழுந்த மூடித்திறந்தான் அரசு.
“ஊருக்கும் உலகத்துக்கும் நீங்க காமராஜ், பொற்கொடி பையன். அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும். வடிவேல் மாமா அந்த அடையாளத்தை உங்ககிட்ட இருந்து பறிக்க நினைக்கல. அதே மாதிரி உங்களுக்குச் செய்ய நினைக்கிற அவரோட உரிமையை நீங்க பறிக்காதீங்க.” என்ற அறிவரசியை ஆத்மார்த்த அன்போடு பார்த்தனர் ராஜ் சகோதரர்கள்.
அரசுவுக்கு அவனுக்கு பெண்வேடம் போட்டதைப் போன்ற பெண் கிடைத்ததில் அவர்களுக்கு அத்தனை ஆனந்தம். இப்படித் தெளிவான சிந்தனையுள்ள பெண்ணால் அவன் வாழ்வு மேலும் மேலும் மேன்மையடையும் என்று சந்தோஷம் அடைந்தனர் ஆண்கள் அணி.
“நீங்க பயப்படுற மாதிரி நான் உங்களுக்கும், உங்க அப்பா அண்ணன்களுக்கும் நடுவில் எந்த ஒரு பிரச்சனையையும் உண்டாக்க மாட்டேன். அதே மாதிரி அந்த நாலு அக்காங்க கூட எந்த விதமான சண்டையும் போட மாட்டேன்.
என்னால ஏதாவது பிரச்சனை வந்தாலோ இல்ல அவங்களால ஏதாவது பிரச்சனை வந்தாக் கூட நானே விட்டுக் கொடுத்து போயிடுவேன். உங்களுக்காக எதையும் செய்ய என்னால் முடியும். என்னை நம்புங்க. என்னால கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷமா வாழ முடியும்.” என்றவளை ஆழமான பார்வை பார்த்தான் அரசு.
“எனக்கு உங்களோட சந்தோஷம் ரொம்ப முக்கியம். உங்களுக்கு சந்தோஷம் அந்த வீட்டில், அங்க உள்ளவங்க கூட இருக்கும் போது தான் கிடைக்கும்.
வடிவேல் மாமாவுக்கு ஒரு நிறைவான சந்தோஷத்தை நீங்க மட்டும் தான் கொடுக்க முடியும். அது உங்களுக்கும் தெரியும். உங்க ஒரு வார்த்தைக்காக எத்தனை பேர் காத்திருக்காங்கன்னு யோசிச்சு, எந்த முடிவையும் எடுங்க. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்.” என்று தன் பேச்சை முடித்தாள் அறிவு.
“டேய், லெட் பி ப்ராங்க். முதன்முதலில் உண்மையில் நீ யாரு எப்படி எங்களை விட்டுப் பிரிஞ்சு போனன்னு தெரிய வந்த போது அவங்க இரண்டு பேர் மேலும் எங்க எல்லாருக்கும் ரொம்பக் கோபம் வந்தது.
நிதானமாக உட்கார்ந்து யோசனை பண்ணி பார்க்கும் போது தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நம்மளையும் மீறின சக்தி ஒன்னு இருக்கு. அதுக்குப் பெயர் விதி.
அது நினைக்கிறதை நம்ம யாராலும் மாத்த முடியாது. எது நடந்தாலும் அதுக்குப் பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கத் தான் செய்யும். அதே மாதிரி தான் நீ எங்களை விட்டு பிரிஞ்சு போனது.
கொஞ்சம் மாத்தி யோசனை பண்ணிப் பாரேன். நீ எங்க கூட நம்ம வீட்டில் வளர்ந்திருந்தா என்ன நடந்திருக்கும். நாங்க நாலு பேர் நாலு திசையில் இருந்த மாதிரி, எக்ஸ்ட்ராவா நீயும் ஒரு திசையில் இருந்திருப்ப. நம்ம ஐந்து பேரையும் பார்த்து பார்த்து நெஞ்சு வெடிச்சே அப்பா செத்து போய் இருந்திருப்பாரு. அதுக்குப் பிறகு நாம எல்லாரும் உலகத்தில் ஒவ்வொரு மூலைக்கு பிரிஞ்சு போய் இருந்திருப்போம்.” என்க, முட்டைக்கண்ணை விரித்தான் அரசு.
“ஒரு மனுஷன் முதன் முதலில் அனுபவிக்கிற அன்பு தாயன்பு. அதுக்கப்புறம் தந்தையோட அன்பு. அதுக்கப்புறம் சகோதரத்துவம் தானே டா.
இந்த மூன்று முக்கியமான உறவுகள் தான் ஒரு மனிதனோட குணநலன்களை உருவாக்கும். இந்த உறவுகளுக்கு உண்மையா, நேர்மையா, பாசமா இருக்க முடியாதவன் பின்னாடி எப்படி தன்னோட மனைவி குழந்தைகளுக்கு உண்மையா இருப்பான்.
அப்படி ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பை, பாசத்தை எங்க நாலு பேருக்குள்ள வளர வைச்சது நீ. அதுக்கு முக்கியமான காரணம் உன்னோட வளர்ப்பு அப்பா, அம்மாவால உனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட நற்குணங்கள்.
இதையெல்லாம் யோசிக்கும் போது எங்களுக்கு அவங்க மேல இருந்த கோபம் காணாமல் போன இடமே தெரியல.” உணர்ந்து சொன்னான் செல்வா.
நடந்து முடிந்ததை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் இனி நடக்கப் போவதில் கவனம் செலுத்தலாம் என்று இறங்கி வந்திருந்தார்கள் இராதா இல்லத்தினர்.
“என் மனசைத் தொட்டு சொல்றேன் அரசு. இப்போதைக்கு எங்களோட ஆசை எல்லாம், உண்மையான சகோதரப் பாசத்தை எங்களுக்கு உணர வைச்ச உனக்கு அந்த பாசம் முழுமையா கிடைக்கணும். அதுக்கு நீ எங்க கூட இருக்கனும்.
தள்ளி இருந்து அனுபவிக்கலாமேன்னு நீ சொல்லாத. தள்ளி இருந்தா தனியா இருக்கத் தான் தோணும்.” என்றான் தர்மா.
“சரி விடுங்க எதுக்கு இப்படி சென்டிமெண்ட்டா பேசி என்னை அழ வைக்கிறீங்க. நான் உங்களை விட்டு அப்படி எங்க போயிட போறேன். ஆமா என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க என் தங்கச்சிங்க எங்க.” அரசு கேட்க நால்வரின் முகமும் எதையோ நினைத்து கோபமாகியது.
“கடவுளே இப்ப என்னாச்சு எதுக்காக இவனுங்க சாபம் கொடுக்கப் போற விஸ்வாமித்திரன் மாதிரி மூஞ்சியை வைச்சுக்கிட்டு இருக்கானுங்கன்னு தெரியலையே.” உள்ளுக்குள் நினைத்து பதறினான் அரசு.
“ஏதோ கூட பிறந்த பாசத்துக்காக நீ பண்ண எல்லாத்தையும் நாங்க மறந்துட்டோம். ஆனா அவங்க அப்படி இல்ல. அவங்க நாலு பேரும் உன் மேல செம கோவத்துல இருக்காங்க.
நாங்க எங்களோட இங்க வரச்சொல்லி கூப்பிட்டப்ப, ‘நாங்க அரசு அண்ணாவைப் பார்த்தா கோபத்தில் பொது இடம் னு கூட பார்க்காம அடிச்சிடுவோம். அதனால நீங்க போய் அவர் இஷ்டப்பட்டா இங்க கூட்டிட்டு வாங்கன்னு’ சொல்லிட்டாங்க.” என்றான் நாகா.
“இது என்னடா அநியாயமா இருக்கு. அவங்களுக்கு எதுக்கு என்மேல இவ்வளவு கோவம். என்னைக்காவது ஒரு நாள் இந்த விஷயம் வெளிய வரும் போது அவங்க நாலு பேரும் தான் என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு எனக்கு ஆதரவா இருப்பாங்கன்னு நெனச்சேனே நானு.” பாவமாய் சொன்னான் அரசு.
“எங்க பொண்டாட்டிங்களை எங்களை விட நீ தான் நல்லாப் புரிஞ்சு வைச்சிருக்கிற அரசு. நீ சொன்ன மாதிரி இந்த விஷயம் தெரிய வந்தப்ப, லீலா தான் எங்களுக்குப் பொறுமையா எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வைச்சா.
ஆனா நீ பண்ண ஒரு காரியம் தெரிய வந்தப்ப எங்க யாராலையும் கூட அவளோட கோபத்தைக் கட்டுபடுத்த முடியல.” என்றான் செல்வா.
“ஏது லீலாவுக்கு கோபம் வந்துச்சா. பூமாதேவிக்கு கோபம் வந்தா வீடு தாங்காதே. ஆமா அவ்வளவு கோவம் வர்ற அளவுக்கு நான் என்னடா பண்னேன்.” நிஜமாகவே புரியவில்லை தான் அரசுவிற்கு.
“அடிங்” என்று அவனை அடிப்பதற்காய் தெய்வா பாய அவனைப் பிடித்துக்கொண்டான் செல்வா. மனைவி முன்னால் அடித்து வைக்காதே என்னும் கண்டிப்பு தெரிந்தது மூத்தவனின் பார்வையில்.
“எனக்காகப் பார்க்காதீங்க. கண்டதையும் யோசிச்சு எல்ரோரையும் ஏங்க விடும் இவரை தலையில் கை வலிக்கும் வரை கொட்டணும் னு எனக்கே தோணுது.” என்று தெய்வாவின் கோபத்தை ஏற்றிவிட்டாள் அறிவு.
“நல்லா வருவம்மா நீ.” என்று மனைவியைப் பார்த்து சொன்ன அரசு, சகோதரர்கள் பக்கம் திரும்பி தன் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தான்.
“ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நல்லாவே நடிக்கிற மேன் நீ. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா, அறிவோட அப்பா அம்மாவை நம்ம அப்பா கிட்ட பேசி, உன்னை அவங்க கூட தனியா கூட்டிட்டுப் போக ஐடியா கொடுத்திருப்ப.” தெய்வா சொல்ல, அரசுவின் தலை மெதுவாக தன்னுடைய தர்மபத்தினியை நோக்கி திரும்பியது.
“அடிப்பாவி என்கிட்ட எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு அப்புறம் உங்க அம்மா அப்பாவுக்கு வேற தனியா போன் போட்டு அவங்க கிட்ட இருந்தும் கேட்க வேண்டியது எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு மொத்தமா இவங்க காதுல ஓதிட்டியா. ஐயோ பார்க்கிறானுங்களே, வைச்சு செஞ்சிடுவானுங்க போலையே.” மனதோடு புலம்பினான் அரசு.
“சரி நீங்க அப்படியே பேசிட்டு இருங்க. நான் கொஞ்சம் முக்கியமான வேலையா போயிட்டு வந்திடுறேன்.” என்று நழுவி ஓடப் பார்த்தான் அரசு.
“அடேய் ஓடுனா மட்டும் உன்னை விட்டுடுவோமா கமான் ஸ்டார்ட்.” என்று தெய்வா ஓட அவனைத் தொடர்ந்து ஓடினர் மற்ற மூவரும்.
அங்கும் இங்குமாய் ஓடி அரசு போக்கு காட்ட, “நம்மளை வாரனம் னு சொன்ன அவன் தான் வானரம் மாதிரி சேட்டை பண்ணிக்கிட்டு திரியுறான்.” என்ற தெய்வா அவனை பிடிப்பதில் மும்முரம் காட்டினான்.
அப்படியும், இப்படியும், அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் ஓடி எப்படியோ அரசுவைப் பிடித்து உட்கார வைத்து அவன் எழுந்து போகாத படி அவனை சுற்றி அரண் வைத்தது போல அமர்ந்தனர் நால்வரும்.
அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணி அறிவு ஹோட்டல் அறைக்குத் திரும்பிவிட, சகோதரர்கள் அனைவரும் தனித்து விடப்பட்டனர்.
வார்த்தைகளை அருவிக்குப் போட்டியாக கொட்டித் தீர்த்ததன் பலனாய், பல வருட ஏக்கம், தவிப்பு, சோகம், கோபம், கண்ணீர் என அனைத்தும் அரசுவிடம் இருந்து அருவி போலக் கொட்டியது. இதுவரை அழுதே பார்த்திராத ஒருவன் திடீரென்று அழவும் மற்ற நால்வருக்கும் மனதும் கண்ணும் தன்னால் கலங்கியது.
ஒருவன் மற்றவனைத் தேற்ற, அடுத்தவன் அதற்கடுத்தவனை தேற்ற என்று ஐவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் மாறிப்போயினர்.
மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலுக்கு சென்று அவரவருக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்தனர். சகோதரர்களுடன் சேர்ந்தாலும் மனைவியை மறக்காமல் அழைத்து அவள் உணவுண்டாளா எனக் கேட்க, அவளுக்கு அத்தனை திருப்தி. தான் அவனுக்காக பார்த்து பார்த்து செய்யும் அளவு அவன் தகுதியானவே எனத் தன்னோடு நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.
தாங்கள் மூத்தவர்களாக இருந்தாலும் அரசுவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்த தெய்வா எங்கே இருக்கிறோம் என்பதை மறந்து, தன் சாப்பாட்டில் கொஞ்சம் எடுத்து அரசு முன்னால் நீட்ட, அவனைத் தொடர்ந்து மற்ற அனைவரும் அதையே செய்தனர்.
மூத்தவர்கள் இளையவனுக்கு ஒருவர் பின் ஒருவராக ஊட்டி விட, சுற்றியிருந்த மற்றவர்கள் இவர்களை வித்தியாசமாகப் பார்த்தனர். ஆனால் அது எதுவும் இவர்களைச் சிறிதும் பாதிக்கவில்லை.
ஹனிமூன் கொண்டாட என்று மனைவியுடன் வந்தவன் இப்போது சகோதரர்களுடன் சேர்ந்து பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தான்.
ஐவரும் ஒருவர் மேல் ஒருவர் பனிக்கட்டிகளை அள்ளி வீசி ஆனந்தமாய் விளையாடினர். ஒன்றாக சியர்ஸ் சொல்லி சூடாகத் தேநீர் அருந்தினர். இதே போல் சிறு சிறு விஷயங்கள் தான் என்றாலும், அதைப் பொக்கிஷமாக நினைவடுக்கில் சேமித்துக் கொண்டிருந்தனர் ஐவரும்.
எதேச்சையாக அரசு மணியைப் பார்க்க இரவு ஏழு மணி என்று காட்ட அறிவின் ஞாபகம் வந்தது அவனுக்கு.
“டேய் அண்ணணுங்களா உங்களால நான் என் பொண்டாட்டியை மறந்துட்டேன். இப்போ ரூமுக்கு போனா என்னை அவ கழுவி கழுவி ஊத்துவா. உங்களுக்கு தான் இதில் ஏகப்பட்ட முன் அனுபவம் இருக்குமே. கோபத்தில் இருக்கிற பொண்டாட்டியை சமாதானப்படுத்தி சிரிக்க வைக்கிறது எப்படின்னு எனக்கு கொஞ்சம் கிளாஸ் எடுங்கடா.” சிரிப்போடு கேட்டான்.
திருமணம் முடிந்து முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் அவனால் அவன் மனைவியைப் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் சகோதரர்களை வம்பிழுக்க வேண்டி கேட்டான்.
“சோ சேட் அரசு. அந்த இரகசியத்தை நாசா விஞ்ஞானிகளால் கூட இப்ப வரைக்கும் கண்டுபிடிக்க முடியல. உன்னைப் பார்த்தா கொஞ்சம் பாவமா இருக்கு. அதனால
ஒரு சின்ன சொல்யூஷன் சொல்றேன். நீ நார்மலா ரூமுக்கு போ. போன உடனே உன் பொண்டாட்டி திட்ட ஆரம்பிப்பா.
எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி அமைதியா அவ முகத்தையை பார்த்துக்கிட்டு இரு. கொஞ்ச நேரத்தில் வாய் வலிச்சிடும் அவளே நிறுத்திடுவா.” என்றான் நாகா.
அரசு நாகா சொன்னதை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து இருக்க, “ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம். உன் தங்கச்சிங்க எல்லாரும் நேரா அந்த ஹோட்டலுக்கு தான் போனாங்க. இந்நேரம் அவங்க எல்லாரும் ரொம்ப ஜாலியா பேசிகிட்டு இருப்பாங்க.” என்று அரசுவின் வயிற்றில் பாலை வார்த்தான் செல்வா.
பல வருடமாக மனதில் இருந்த பாரம் நீங்கியதால் அரசு இன்னும் இன்னும் புத்துணர்ச்சியாக உணர்ந்தான். அண்ணன்மார் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒன்று சொல்லி வம்புக்கு இழுத்து ஆளாளுக்கு நான்கு அடிகளை வாங்கிக் கொண்டே இருந்தான்.
நால்வராய் இருந்தபோது இருந்த அன்பும், பாசமும் ஐவராய் மாறிய பின்பு இன்னும் அதிகரித்ததாகவே உணர்ந்தனர் செல்வா, தெய்வா, நாகா, தர்மா நால்வரும்.
ஐவரும் ஹோட்டல் அறைக்குத் திரும்ப வர அரசுவைப் பார்த்ததும் பெண்கள் நால்வரும் ஒரே போல் முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
“டேய் என்னடா அவங்க நாலு பேரும் என்னைப் பார்த்து இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு போறாங்க. நீங்களும் பார்த்துகிட்டு அமைதியா இருக்கீங்க. இது நல்லாவா இருக்கு. ஒரே வீட்டில் இருக்கணும் னு ஆசைப்பட்டா மட்டும் போதாது. இப்படி பிரச்சனை வரும் போது நாட்டாமையா மாறி தீர்ப்பு சொல்லணும்.” சோகமாய் சொன்னான் அரசு.
“டேய் தம்பி இன்னைக்கு தான் நீ எங்களுக்கு தம்பி. ஆனா நேத்து வரைக்கும் அவங்க எல்லாருக்கும் அண்ணன். அண்ணனுக்கும் தங்கச்சிங்களுக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும். அதில் நாங்கள் தலையிடுவது நல்லா இருக்காது.
உன் மூளை தான் ரொம்ப வேகமாக செயல்படுமே. போ போய் அவங்களே நீயே சமாதானப்படுத்து.” புத்திசாலித்தனமாகத் தப்பித்தான் தர்மா.
அரசுவும் மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொருவரிடமும் என்னென்னவோ பேசி ஒரு மணி நேர இடைவெளியில் எப்படியோ அவர்களை சமாதானப்படுத்தி விட்டிருந்தான்.
இரவு ஒன்றாகச் சாப்பிட அமர்ந்திருந்த வேளையில், உணவின் மணத்திற்கு தேவகிக்கு வாந்தி வந்து அவள் எழுந்து செல்ல, அவளைத் தொடர்ந்து எழுந்த லீலாவைத் தடுத்து தர்மா இருந்த இடம் காலியாய் இருந்ததை கண்களால் காட்டினான் செல்வா.
லீலா சிரித்துக்கொண்டு மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள். இரவு எவருக்குமே உறக்கம் என்பது இல்லாமல் போயிற்று. தனித்தனியாக அறை எடுத்திருந்தாலும் ஒரே அறையில் ஒன்றாக அமர்ந்து கண்டதையும் பேசிக்கொண்டிருந்தனர். ஒன்றும் இல்லாத விஷயங்கள் கூட பெரும் இரசனைக்குரியதாகிப் போனது அவ்விடத்தில்.
ஒரு கட்டத்தில் அரசுவை மனைவியுடன் அவன் அறைக்குச் செல்லச் சொல்ல, “வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க டா.” என்றதோடு நிறுத்திக்கொண்டான் அரசு.
இயற்கை பிரச்சனை போல என்றதோடு வேறு பேச்சை ஆரம்பித்தனர் ஆண்கள். பெண்களின் அருகில் அமைதியா அமர்ந்து இவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அறிவு. அவளுக்கு இது எல்லாம் புது அனுபவமாக இருந்தது.
பொதுவாக நண்பர்கள் கூட்டத்தில் கூட ஒரே கருத்துக்கள் இல்லாத இரு நபர்கள் பேசிக்கொள்ளும் போது சண்டைகள் வரும். ஆனால் இங்கு எதிர்மறைக் கருத்துக்களை கூட பக்குவமாக ஏற்றுக்கொள்கிறார்களே என்று ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
உறவு தேவை என்று நினைப்பவர்கள் தான் மட்டுமே சரி என்று நிரூபிக்க நினைக்க மாட்டார்கள் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.
லீலாவின் மடியில் ஊர்மி தலை வைத்து படுத்திருக்க, மற்றொரு புறத்தில் தேவகி படுத்துக்கொண்டாள். இருவரின் தலை முடியையும் வருடிக்கொடுத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் லீலா. அறிவுக்கு அந்தக் காட்சி அதிகம் பிடித்திருந்தது. தன்னையும் அறியாமல் பெண்களிடம் மனதளவில் நெருங்கி இருந்தாள்.
ஒரு கட்டத்தில் ருக்கு, ஊர்மி, தேவகி மூவரும் உறங்கிவிட லீலாவும் அமர்ந்த நிலையிலே உறங்கிவிட்டாள். ருக்கு லீலாவின் தோளில் சாய்ந்தவண்ணம் உறங்கிவிட, தன் மனைவியை எழுப்பலாம் என்று அருகே சென்ற செல்வாவைத் தடுத்து, “விடு அப்படியே உறங்கட்டும்” என்றான் தெய்வா. அவனுக்கு அந்தக் காட்சி அத்தனை ரம்மியமாக இருந்தது.
வயிற்றைக் குறுக்கிக்கொண்டு படுத்திருக்கும் தேவகியை எழுப்பி அதே மெத்தையில் சௌகர்யமாக உறங்க வைத்தான் தர்மன். நாகா ஊர்மியைத் தூக்கி தனியே இன்னொரு படுக்கையில் படுக்க வைத்துவிட்டான்.
தனி வீட்டில் இருந்தால் யாருக்கும் பயந்து பயந்து மனைவியை நெருங்கத் தேவையில்லை என்று சொன்ன தெய்வா இப்போது தன் தம்பிகள், இத்தனை பேர் முன்னிலையில் தங்கள் மனைவியிடம் காட்டும் அன்பை உணர்ந்து இரசித்தான். எல்லாமே அழகு தான். அனைத்தும் நாம் பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது என்பதை இப்போது தான் உணர்ந்தான் அவன்.
அறிவும் கூட லீலாவை ஒட்டியண்ணமும் படுத்து உறங்கிப் போக, ஒரே மெத்தையில் லீலா, தேவகி, ருக்கு, அறிவு நால்வரும் உறங்கிக்கொண்டிருக்க, அவர்களுக்கு வெகு அருகில் இன்னொரு சின்ன கட்டிலில் சௌகர்யமாகப் படுத்திருந்தாள் ஊர்மி.
“ஏன்டா உன் பொண்டாட்டியை மட்டும் தனியாப் படுக்க வைச்சிட்ட.” தர்மா நாகாவிடம் கேட்க, “அவளைப் பத்தி தெரியாது டா உங்களுக்கு. சரியா புருஸ்லீ. பகலில் என்னை எப்படியெல்லாம் பழிவாங்கனும் னு மனசுக்குள் நினைப்பாளே அது எல்லாத்தையும் இராத்திரி உறக்கத்தில் தான் காட்டுவா. அத்தனை வாங்கி இருக்கேன் நான். அதனால் தான் அவளைத் தனியா நாடுகடத்திட்டேன். அவளுக்கும் நிம்மதி மத்தவங்களுக்கும் நிம்மதி.” என்று தோள்களைக் குலுக்கியவனுக்கு தன் மேல் கால், கை போடாமல் சரியாக உறங்க முடியாமல் தவிக்கும் மனைவியின் சுருங்கிய புருவத்தைக் கண்டு சின்னதாய் சிரிப்பு கண்ணோரம்.
பெண்களைக் கண்டு ஒருநிமிடம் பொறாமை கொண்டு தெய்வா, நாகா, அரசு, தர்மா நால்வரும் செல்வாவைப் பார்க்க,
“என்ன அங்க லுக் விட்டுட்டு அப்படியே இந்தப்பக்கம் லுக்கு விடுறீங்க. அந்த மாதிரியெல்லாம் என்னால பண்ண முடியாது. ஒழுங்கு மரியாதையா அமைதியாய் படுங்க.” என்றுவிட்டு மீதம் இருந்த ஒற்றைக் கட்டிலில் படுத்தான் செல்வா.
இவர் சொன்னா நாங்க கேட்கணுமா என்று குரல் கொடுத்துக்கொண்டே மற்ற நால்வரும் அதே படுக்கைக்கு வர, சிரிப்புடன் வழிவிட்டான் செல்வா. அரசுவை நடுவில் போட்டுக்கொண்டு படுத்திருந்தனர்.
“டேய் நீங்க நல்ல அண்ணனுங்கடா. எங்க நான் ஓடிப் போயிடுவேனோன்னு பயத்தில் இப்படி லாக் பண்ணி வைச்சிருக்கீங்களே.” என்று நினைத்து சிரித்துக்கொண்டான் அரசு.
அடுத்த நாள் காலை அனைவரும் கோயம்புத்தூர் நோக்கி பயணப்பட அரசு மட்டும் படபடப்பாகவே உணர்ந்தான்.
அண்ணன்களுக்கு அவனுடைய பதற்றம் புரிந்தாலும், ‘எங்களை எப்படி எல்லாம் அலையவிட்ட. கொஞ்ச நேரம் நல்லா அனுபவிடா.’ என்பது போல் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.
தர்மபத்தினியிடம் ஆதரவு தேடலாம் என்று அவளைத் தேடினால், அவளோ அக்காமார்களிடம் எப்படி நெருங்குவது என்று அவர்களுடனே ஒட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருந்தாள். படபடக்கும் இதயத்துடன் இராதா இல்லத்தின் வாசலில் கால் வைத்தான் அரசு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
13
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செல்வா😜😜😜😜😜 என்னால லாம் அப்படி பண்ண முடியாது. சத்தமா சிரிச்சுட்டேன்.