Loading

அத்தியாயம் 122

விமானம், கார் என்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாக பயணம் செய்து டேராடூன் அருகே இருந்த முசோரிக்கு வந்து சேர்ந்தனர் அரசு, அறிவு இருவரும்.

“ஐ அம் வெரி ஸ்சாரி அறிவு. கல்யாணமான அன்னைக்கே உன்னை ரொம்ப அலைய வைச்சுட்டேன். அது மட்டுமா என்னோட சோகக் கதையை சொல்லி உன்னோட சந்தோஷமான மூடையும் கூட ஸ்பாயில் பண்ணிட்டேன் இல்ல.” வருத்தமாய் கேட்டான் அரசு.

“லூசு மாதிரி பேசாதீங்க. சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்துக்கவா புருஷன் பொண்டாட்டி உறவு. அதெல்லாம் நான் எதுவும் தப்பா நினைக்கல. சொல்லப் போனா கல்யாணமான அன்னைக்கே என்னை மதிச்சு இவ்வளவு பெரிய உண்மை, உண்மைன்னு சொல்றதை விட இரகசியம் னு தான் சொல்லணும்.
எந்தவித தயக்கமும் இல்லாம எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லி இருக்கீங்க. இது எனக்கு எவ்வளவு பெரிய கௌரவம் தெரியுமா.” சிலாகித்துக் சொன்னாள் அவள்.

“அப்படியா பொண்டாட்டி அப்ப இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொடுத்த உன்னோட புருஷனாக கொஞ்சம் கவனிக்கலாமே.” சொல்லிவிட்டு இதழ்கடையோரம் மீசை சுருங்க சிரித்தான் அரசு.

“கவனிக்கலாமே நல்லாவே கவனிக்கலாமே. ஆனா இப்ப நம்ம ரெண்டு பேருக்குமே டயர்டா இருக்கு. அதனால எல்லாத்தையும் நாளைக்குப் பாத்துக்கலாம். மரியாதையா கையை காலை அடக்க ஒடுக்கமா வைச்சிட்டு படுத்துத் தூங்குங்க.” என்றுவிட்டு தன் இடத்தில் படுத்துக்கொண்டாள் அறிவு.
“அடிப்பாவி முதலிரவு அதுவுமா புருஷனைப் பார்த்து என்ன வார்த்தை டி சொல்ற.”

“மணியைப் பார்த்தீங்களா இராத்திரி ஒன்னு. இந்நேரத்துக்குப் பேய் தான் முதல் இரவு கொண்டாடும். அமைதியாப் படுங்க, நாளைக்கு விடியல் நம்மளுக்கு ரொம்ப நல்லதா அமையும்.” புன்னகையுடன் சொல்லிவிட்டு கண்களை மூடினாள் அறிவு.

“ஹே அப்ப நமக்கு பர்ஸ்ட் பகலா.” விட்டேனா பார் என்று அரசு கேட்க, “அடிங், நானும் புருஷனாச்சேன்னு மரியாதை கொடுத்து பேசிகிட்டு இருந்தா, ரொம்ப ஓவரா பண்ற. இப்ப அமைதியா படுக்கிற. அதுதான் உனக்கு நல்லது. இல்லைனா இந்த அறிவோட வேற முகத்தை பார்ப்ப.” மிரட்டினாள்.
“என்னடி புருஷனை மிரட்டுற.” சிரிப்போடு அரசு கேட்க, “ஆமா அப்படித்தான் மிரட்டுவேன். உன்னால் என்ன பண்ண முடியும்.” வீம்புக்கென்றே கேட்டாள்.
“என்னால என்ன பண்ண முடியுமா?” என்று ஹைபிச்சில் கேட்டுவிட்டு,

“ஒன்னும் பண்ண முடியாது போர்த்திக்கிட்டு படுத்து தூங்க தான் முடியும்.” என்று அமைதியாக படுத்துக் கொண்டான் அரசு.
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல் சீக்கிரமே எழுந்துவிட்ட அறிவு மெத்தையில் இருந்து எழுந்திரிக்கப் பிடிக்காமல் தன்னருகே குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்த தன் கணவனை அவன் அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தாள்.

“என் ராஜா, என் தங்கம் நீ எவ்வளவு அழகு தெரியுமா. தாடியோட உன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கரடி பொம்மை ஞாபகம் தான் வரும். அப்படியே மடியில் உட்கார வைச்சு கொஞ்சணும் போல இருக்கும். செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி.” என்று உறங்கும் அவனை தொந்தரவு செய்யாமல் அவன் கன்னத்தை மெதுவாக கிள்ளி முத்தமிட்டாள் அறிவு.
சிறிது நேரத்தில் அரசு கண் விழிக்க, “டார்லிங் முசோரியில் முதல்ல எங்க போகலாம். ஏதாவது பிளான் இருக்கா.” குளித்து முடித்த ஈரத்தலையை துவட்டிக் கொண்டே கேட்டாள் அறிவு. எழுந்து அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டவன், “எனக்கு எங்கேயும் வர்றதுக்கு ஐடியா இல்லை. இங்கேயே இந்த ரூமிலேயே இருந்திடலாம்.” கரகரப்பான குரலில் சொன்னான்.

“இப்படி இருக்கிறதுக்கு நாங்க நம்ம ஊருல இருந்திருக்கலாம்.”
“ம்ம்ம்” என்று அவள் தோள்களில் முகத்தைத் தேய்த்துக்கொண்டே அவன் குழைய, “அழுக்கு மூட்டை முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க. நாம முக்கியமான ஒரு இடத்துக்கு போகனும்.” என்றாள்.

“அப்படி என்ன முக்கியமான இடம் டார்லிங் பக்கத்தில் எங்கேயாவது கோவில் இருக்கா?” தங்கைகளின் நினைவில் இவளும் அப்படித்தான் கேட்பாள் என்று நினைத்துக் கேட்டான்.

“ஏன் நீங்க அங்க போகனுமா?” அறிவு தீவிரமாகக் கேட்கவும், “அப்ப நீ அங்க போக வேண்டாமா?” என்றான் அரசு.

“நான் எப்ப கோவிலுக்குப் போகனும் னு சொன்னேன்.” அறிவு கேட்க, “இல்ல பொதுவாவே பொண்ணுங்க கோவிலுக்கு போக ஆசை படுவாங்களே அதனால் தான் கேட்டேன்.” சமாளித்தான் அரசு.

“என்னை என்ன வெள்ளி செவ்வாய்க்கு தலைக்கு குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு குனிஞ்ச தலை நிமிராம வர பொண்ணுன்னு நினைச்சீங்களா? நான் கொஞ்சம் வேற மாதிரி. நம்ம பழக்கம் எல்லாம் அடிக்கு அடி, வெட்டுக்கு வெட்டு, இரத்தத்துக்கு இரத்தம். சரி அதை எல்லாம் விடுங்க. இங்க சுத்தி பார்க்கிறதுக்கு நிறைய இடம் இருக்கு. நான் காலையில் எழுந்ததிலிருந்து அதை தான் நெட்டில் தேடிக்கிட்டு இருந்தேன். அதில் ஏதாவது ஒரு இடத்தை செலக்ட் பண்ணுங்க.” என்றபடி தான் தேர்ந்தெடுத்திருந்த இடங்களைக் காட்டினாள் அறிவு.

“ப்ரீ ப்ளானோட தான் இருக்க போல. சரி இத்தனை ஆசையா இருக்கிற நீயே சொல்லு, முதல்ல நாம எங்க போகலாம்.” மனைவியின் மனதிற்கு மதிப்பு கொடுத்து அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னான் அரசு.

“இங்கே பக்கத்தில் ஒரு அருவி இருக்கு அங்க போலாமா?” அறிவு சொல்ல, “அப்ப அறிவியில் போய் குளிச்சுக்கலாம் தானே.” என்றான் அவன்.
“அங்க என்னோட ப்ரண்ட்ஸ் கொஞ்ச பேர் வராங்க. உங்களுக்கு பரவாயில்லைன்னா இப்படி அழுக்கு மூட்டையாவே வாங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.” என்றாள்.

“ஏய் யாரை கேட்டு டி இங்க உன்னோட ப்ரண்ட்ஸை வர சொன்ன.” ஆச்சர்யம் அதிர்ச்சி இரண்டும் நிறைந்திருந்தது அவன் குரலில்.
“நிறைய பேர் இருந்தா இன்னும் ஜாலியா இருக்கும் னு தான் வரச் சொன்னேன்.” நமட்டு சிரிப்போடு சொன்னாள்.

“இவளை வைச்சுக்கிட்டு” மனதோடு நொந்தவன், “அடியேய் நாம என்ன பிக்னிக்கா வந்து இருக்கோம் மத்தவங்களோட என்ஜாய் பண்ண. ஹனிமூன் வந்து இருக்கோம் டி.” வேதனையாக வந்தது அரசுவின் வார்த்தைகள்.
மெதுவாக அவனை நெருங்கியவள் அவன் தோளில் கை போட்டுக் கொண்டு, “என்னங்க நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. நான் இந்த மாதிரி வெளியிடங்களில் பாதுகாப்பு இல்லாத மாதிரி ஃபீல் பண்றேன்.

அதனால ஏன் நாம நம்ம வீட்டில் இது எல்லாத்தையும் வைச்சுக்க கூடாது.” என்று அவன் அடிமடியில் கை வைத்தாள்.
“அடிப்பாவி அடி மடியிலே வேட்டு வைச்சிட்டியே. கடவுளே இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இன்னும் கல்லு மாதிரி இருக்கியே. இந்த அரசுவுக்கு ஏதாவது உதவி பண்ண கூடாதா?”

“அதெல்லாம் அவரு தேவைப்படும் நேரத்தில் கரெக்டா உதவி பண்ணுவாரு. இப்போ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க நாம கிளம்பனும்.” என்று அவனை பாத்ரூமிற்குள் தள்ளினாள் அறிவு.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அறிவு சொன்ன அருவிக்கு வந்திருந்தனர் புதுமண ஜோடிகள் இருவரும். “நாட் பேட் அறிவு, இந்த இடம் ரொம்பவே அழகா இருக்கு ஆனா இன்னைக்கு ஆட்கள் கொஞ்சம் கம்மி தான் போலேயே.” என்றான் அரசு.

“என்னோட ப்ரண்ட்ஸ் வர்றாங்கன்னு சொன்னேன் ல வந்துட்டாங்க பாருங்க.” என்ற அறவு ஒரு திசையில் கையை காட்ட, கண்ணை கசக்கி உற்று உற்றுப் பார்த்த அரசு கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.

“அறிவு என்னோட கண்ணுக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என் வீட்டு வானரப்படைகள் மாதிரியே தெரியுது எனக்கு.” சிரிப்புடனே சொன்னான் அரசு.

சொல்லி முடிக்கும் வேளையில் செல்வா, தெய்வா, நாகா தர்மா நால்வரும் அவன் அருகில் வந்து வந்திருந்தனர்.
“தெய்வா பார்த்தியாடா நம்ம வீட்டில் இருக்கிற வரைக்கும் நம்ம கிட்ட எப்படி எல்லாம் பேசுவான். வெளியே வந்ததும் நாம அவனுக்கு வானரப் படையாம்.” நாகா கேட்க, “நாம வானரம் னா அவன் யாராம். நாலு வானரத்துக்கு அப்புறம் பிறந்த சின்ன வானரம்.” என்றான் செல்வா.

“ஹே நீங்க எல்லாம் நிஜமாவே இங்க வந்துட்டீங்களா ஆனா எப்படி வந்தீங்க?” அரசுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

“ம்ம்ம் ஹெலிகாப்டர் ல பறந்து வந்தோம். ஆனா அது விஷயம் இல்ல. அதைவிட பெரிய விஷயம் இப்ப நடக்கப் போகுது. தம்பிகளா எல்லாரும் சேர்ந்து நம்ம சின்ன தம்பியை தூக்குங்க.” செல்வா சொல்ல மற்றவர்கள் அனைவரும் அவனை நெருங்கினர்.

“ஏய் ஏய் இருங்க இருங்க. என்னாச்சு உங்களுக்கு. உங்க பேச்சு நடவடிக்கை எதுவுமே சரியில்லயே.” பதறிக்கொண்டு கேட்டான் அரசு.

“அதுவா தம்பி எங்களைப் பெத்தவரும் எங்க கூடப் பிறந்தவனும் சேர்ந்து இத்தனை வருஷமா மறைச்சு வைச்சிருந்த ஒரு ரகசியம் இப்ப தான் எங்களுக்கு தெரிய வந்திருக்கு. அதைக் கொண்டாட வேண்டாமா அதுக்குத் தான் நாங்க இங்கே வந்தோம்.” என்ற நாகா பேசிக் கொண்டிருக்கும் போதே அவனை அலேக்காகத் தூக்கி அருவியின் முன்னால் குளம் போல் தேங்கி இருந்த தண்ணீரில் போட்டான்.

“ஐயோ கொலை, என்னைக் கொல்லப் பார்க்கிறானுங்க. ஹெல்ப், யாராவது வாங்க. என்னை தண்ணீக்குள்ள போட்டு கொல்லப் பார்க்குறாங்க.” அரசு கத்திக்கொண்டே எழ அங்கே அவன் இடை வரை மட்டுமே தண்ணீர் இருந்தது.
“இதுக்கா இவ்வளவு பில்டப் பண்ணோம். ச்சே என் எனர்ஜி எல்லாம் வேஸ்ட்டா போயிடுச்சே.” என்று புலம்பிக்கொண்டே எழுந்த அரவுக்கு முன்னால் அரண் போல நின்றிருந்தனர் நால்வரும்.

“அடேய் என்னடா அயர்மேன், ஹல்க், பேட் மேன், சூப்பர் மேன் ரேன்ஞ்சுக்கு நிக்கிறீங்க.” என்ற அரசு அதன் பின்னரே அவர்கள் நால்வரின் கண்ணில் தெரிந்த கொலை வெறியை உணர்ந்தான்.

வந்தவுடன் அவர்கள் சொல்லியது இப்போது தான் அவன் மூளையை எட்டியது போல் அதிவிரைவாக பதற்றமானவன் தண்ணீரில் இருந்து வெளியேற ஆயத்தமானான். தர்மா அவனை இழுத்துப் பிடிக்க மற்ற மூவரும் அவனை சுத்துப் போட்டனர்.

தெய்வா அவன் தலையில் வலிக்குமாறு கொட்டி, “விஷம் விஷம் கூடவே இருந்தியே இத்தனை வருஷமா ஒரு வார்த்தை சொல்லத் தோணல இல்ல உனக்கு.” என்றான்.

“இத்தனை வருஷமா சொல்லல சரி. நாங்க நாலு பேரும் சேர்ந்த அப்புறமாவது சொல்லி இருக்கலாமே. நாலு பேரா இல்லாம ஐந்து பேரா சகோதரத்துவத்தை அனுபவிச்சிருக்கலாமே. எனக்கு அது ஒன்னு தான் கஷ்டமா இருக்கு.” என்றான் செல்வா.

“இங்க பார் அரசு, நான் சொல்றதை நல்லாக் கேளு. நம்ம அப்பா, நம்ம எல்லாரையும் பெத்த நம்ம அப்பா, உன்னை வளர்த்த அப்பாவுக்கு அவர் சாகுற நேரத்தில் மனப்பூர்வமா உன்னை தத்து கொடுத்துட்டதால உன்னை காமராஜ் அங்கிளோட பையனா தான் மனசில் வைச்சிருக்காரு.
ஆனா இந்த சத்தியத்தில் நாங்க சம்பந்தப்படல. எங்களுக்கு எங்க தம்பி வேணும். மத்தவங்களை விடு எனக்கு என் தம்பி எனக்கு அடுத்து பிறந்த நீ கண்டிப்பா வேணும்.

இந்த செல்வாவும், தெய்வாவும் ஓவரா கொஞ்சிக்கிட்டு இருக்காங்க. சரி நாமளும் நம்ம இரட்டைப் பிறவி கூட சேர்ந்து அவங்களை கடுப்பேத்தலாம் னு பார்த்தா தர்மா ரொம்ப நியாயம் பேசுறான்.
அவன் எல்லாம் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். நீயும் நானும் தான் இனி அவங்களுக்கு டஃப் கொடுக்கனும் என்ன?” என்றான் நாகா.

“யாரா இருந்தாலும் வீட்டோட கடைக்குட்டியா இருக்க ஆசைப்படுவாங்க. ஆனா நான் எனக்கு அடுத்து ஒரு தம்பி இருக்கான் அதுவும் நீன்னு தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நீ எங்களுக்கு வேணும் அரசு. நீ எங்க கூடவே இருந்திடு.” தன் பங்கிற்குப் பேசினான் தர்மா.

ஆனால் அரசுவிற்கு இது எதுவுமே காதில் விழவில்லை. அவன் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்த விஷயம் தன் அப்பா சாகும் தருவாயில் வடிவேலு அங்கிள் தன்னை மனப்பூர்வமாக அவருக்கு தத்து கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் தான்.

இத்தனை நாள் இரத்த சொந்தங்களை அருகே வைத்துக்கொண்டு பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் நான் தவித்தது போல, பெற்ற மகனை அருகிலேயே வைத்துக்கொண்டு யாரோ ஒருவர் போல் நடந்து கொண்டிருக்கிறாரே வடிவேலு. அவருக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்பதாய் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எவ்வளவு பெரிய ரகசியத்தை மறைச்சு வச்சிருக்காங்க