
தனா அதன் பிறகு தனது அண்ணனிடமும், தனது அண்ணி இடமும் சரி சரவணன் பற்றி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
எப்பொழுதும் போல் நடந்து கொண்டாள்.
இன்னும் சொல்லப் போனால் லேசாகப் பேச்சைக் குறைத்துக் கொண்டாள் என்று கூடச் சொல்லலாம்.
பாக்கியம் தான், “ஏன்டி இப்படி இருக்க?” என்று கேட்டதற்குக் கூட “ஒன்னும் இல்லம்மா, நான் எப்பயும் போல தான் இருக்கேன்” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, தனா காலேஜ் கிளம்பிக் கொண்டு இருக்க,
சரவணன் ருத்ரனைப் பார்க்க வந்தான்.
“என்ன டா சரோ, காலையிலேயே…” என்று கேட்டான்.
“இல்லடா அகிலாவைப் போய் பாத்துட்டு வரலாம் போல இருக்கு, அகிலா நினைப்பாவே இருக்கு அதான்…”
“அதனால என்ன மச்சான், போய் பார்த்துட்டு வர வேண்டியதுதானே.”
“இல்ல மச்சான், வீட்ல…” என்று விட்டு அமைதியாக,
“வீட்டில் என்ன டா?”
“வேலைக்குப் போகலையா?” என்றான்.
“வேலைக்குப் போற நேரத்தில் போறேன், அதுக்கு என்ன இப்போ?” என்று ருத்ரன் கேட்க.
அப்பொழுதுதான் சமையல் அறையில் இருந்து அனைத்துச் சாப்பாடுகளையும் ஹாலில் எடுத்துக் கொண்டு வந்து வைத்த தனா சரவணனைப் பார்த்துவிட்டு,
“வாங்க மாமா” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் இன்னும் இருக்கும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்து வைக்கச் சென்று விட,
“மச்சான், கொஞ்சம் வெளிய வாடா…” என்றான்.
“சரோ என்னடா?” என்று அவன் தோளில் கையைப் போட,
“வாடா” என்று இன்னொரு முறை சொல்ல,
“ஏதோ இருக்கு” என்று உணர்ந்தவன், “சரி வா மச்சான்” என்று விட்டு வெளியில் செல்ல,
“மாமா, சாப்பிட்டுப் போ, நேரம் ஆகுது” என்றாள் தமிழ்.
“அதுக்குள்ள என்ன நேரம் ஆகுது?”
“இல்ல மாமா, எனக்கு நேரம் ஆகுது”
“நான் இன்னைக்குக் கொஞ்சம் சீக்கிரம் போக வேண்டி இருக்கு ஸ்கூலுக்கு” என்றாள்.
“சரி, நான் வந்து சாப்பிட்டுக்கிறேன். தனா இருப்பா இல்ல” என்றான்.
தமிழ் முறைத்துக் கொண்டு இருக்க,
“அவன் எதோ பேசனும்னு சொன்னான்டி அவன்கிட்டப் பேசிட்டு வரேன், வந்து சாப்பிட்டுக்குறேன்.”
“இல்ல அது…”
“தமிழ் நான் கொஞ்ச நேரம் ஆகும் சாப்பிட, பசிக்கல” என்றான்.
தமிழ் சரோவை முறைத்து விட்டு, “வர வர நீ என்கிட்ட நிறைய மறைக்கற அண்ணா. நீ என்ன நினைக்கறியோ செய்” என்று விட்டுத் தமிழ் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“தமிழ்!” என்றான் சரோ.
“என்ன அண்ணா?” என்று உள்ளிருந்து குரல் கொடுக்க,
“கொஞ்சம் வெளிய வா” என்றான்.
அவள் வந்தவுடன், “நான் என்ன தமிழ், உன்கிட்ட மறைச்சேன்”.
“நீ என்ன மறச்சன்னு உனக்குத் தெரியும்.”
“நான் எதையும் என் லைஃப்ல இருக்கிறதை உன்கிட்ட பெருசா மறைக்கல. ஆனா…” என்று விட்டு அமைதியாகி விட,
தனா அதைக் கண்டு கொள்ளாமல் அமைதியாகக் காலேஜ் கிளம்ப அவளுடைய ரூமுக்குச் சென்று விட்டாள்.
சரவணன் தோளில் கையைப் போட்ட ருத்ரன் அவனை வெளியில் அழைத்துக் கொண்டு வர,
“என்னடா தமிழ் சொல்றா… என்ன விஷயம் டா” என்று கேட்க,
“தெரியாது விடு. நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு.”
“அம்மாவும், அப்பாவும் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருக்காங்க மச்சான்.”
“சரிடா, அதுக்கும் நீ அகிலாவைப் பார்க்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“மச்சான், உண்மையாவே அகிலாவைப் பாக்கணும் போல இருக்கு. நான் அவகிட்ட மனசு விட்டுப் பேசியே அஞ்சு மாசம் ஆயிடுச்சு. அப்பா அம்மா வேற உன் கல்யாணத்தைப் பத்திப் பேசலாம், உனக்கு வயசு ஏறிட்டே போகுதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.”
“மச்சான் சரிடா, கல்யாணம் பண்ணிக்கோ. பொண்ணு பார்க்கணுமா? இல்ல அத்தை மாமாவே பார்த்து விடுவார்களா?” என்று சிரிப்புடன் கேட்க,
அவனது தோளில் ரெண்டு அடி போட்டு, “விளையாடாத மச்சான், சீரியஸா பேசிட்டு இருக்கேன்.”
“நானும் சீரியஸா தான்டா பேசிட்டு இருக்கேன். என்ன பண்ணனும் இப்ப. உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு மாமா அத்தை நினைக்கிறாங்க. அப்பா, அம்மாவா அவங்களோட நினைப்பு ஒன்னும் தப்பில்லையே” என்றான்.
“மச்சான், எனக்கு தனாவைப் புடிச்சிருக்கு. உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன்.”
“சரி, என்கிட்ட சொல்லி என்ன பண்ண?”
“நீ தாண்டா அவ அண்ணன்”
“சரி நான் தான் அண்ணன், என்கிட்ட கேட்டா நான் பொண்ணு குடுத்துடுவேனா?”
“பின்ன யாரு கொடுப்பாங்க?”
“என்னதான் அவ என் தங்கச்சியா இருந்தாலும், நீ பொண்ணு கேக்கணும் என்று நினைச்சா மாமா கிட்டயும், அத்தை கிட்டயும் அதாவது உங்க சித்தப்பா, சித்திகிட்ட தான் கேக்கணும். என்கிட்ட வந்து கேட்டுட்டு இருக்க. இன்னொரு விஷயம், பொண்ணு கேட்டுக் கட்டிக்கலாம்னு இருக்கியா? இல்ல, உன்னோட விருப்பத்தைத் தனாகிட்ட சொல்ற ஐடியாவுல இருக்கியா?”
“மச்சான் அவகிட்ட சொல்லணும் தான். இருந்தாலும், சின்னப்பொண்ணு அவ”
“போதும் மச்சான். அவ ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல, சரியா? UG முடிச்சிட்டு PG சேர்ந்துட்டா. இதுக்கு மேல உன் விருப்பம். அவகிட்ட சொல்லுவியோ? இல்ல, உன் விருப்பத்தை வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லி மேற்கொண்டு பேசுவியோ? இல்ல, அவளைச் சாதாரணமா பொண்ணு கேட்டுக் கட்டிப்பியோ? அது உன் விருப்பம்” என்று சொல்லி விட்டு,
அவனது தோளில் தட்டி விட்டு ருத்ரன், “எனக்கு வேலைக்கு நேரமாகுது மச்சான்” என்றான்.
ருத்ரன் ரூமுக்குப் போக தமிழ் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
“இப்ப என்னை ஏண்டி முறைச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டான்.
“அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசக் கூப்பிட்டுப் போனார்?”
“இது என்னடி கதையா இருக்கு? என் மச்சான் என்னைக் கூப்பிட்டான். அதை ஏண்டி நீ நோண்டிட்டு நிக்கிற?” என்று விட்டு அமைதியாக,
ரூமில் இருக்கும் தனாவை அழைத்து, ”உங்க அண்ணனுக்குச் சாப்பாடு கொடுத்திடு, எனக்கு நேரம் ஆகுது” என்று விட்டு தமிழ் அவளுடைய ரூமுக்குள் சென்று விட்டாள் .
தனா இங்குத் தனது அண்ணனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள்.
“தேவையா இது உனக்கு? வாய் வச்சிட்டு அமைதியா இருக்க மாட்டியா அண்ணா?” என்றாள்.
“அது சரி, ரொம்ப தான் பேசுறா… நான் சாப்பிட்டுக்கிறேன், நீ போய் காலேஜ் கிளம்பு” என்றான்.
“சரி அண்ணா” என்று விட்டு ரூமுக்குச் சென்று விட்டாள்.
ருத்ரன் ரூமுக்குள் செல்ல ஸ்கூலுக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தாள் தமிழ்.
“என்னடி உனக்கு கோபம் மூக்குக்கு மேல வருது” என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்ட,
“அது வந்தா போகுது, உங்களுக்கு என்ன வந்தது?”
“ரொம்ப தாண்டி வாய் பேசக் கத்துகிட்ட, இப்போலாம்”.
“அந்த வாய் அங்கயே தான் இருக்கு, பொறந்ததில் இருந்து பேசிக்கிட்டு தான் இருக்கேன்”
“ஆமா, வாய் அங்கயே தான் இருக்கும், யாரு இல்லைன்னு சொன்னா”.
“வர வர உன் பேச்சும் சரி, செயலும் சரி சரியில்ல” என்றாள் தமிழ்.
“என்ன சரியில்லை மேடம்? என் பேச்சும், செயலும்” என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து விட்டுக் கேட்டான்.
“நேரம் ஆகுது எனக்கு, ஒழுங்கா போயிடு. நேரம் கெட்ட நேரத்தில் வாங்கிக் கட்டிக்காத” என்றாள்.
“என்ன கட்டிக்கணும்?” என்று அவளது அருகில் நெருங்கி வந்து கேட்க, அவனது நெஞ்சில் கையை வைத்துத் தள்ளி விட்டவள்,
“நீ மட்டும் தனியா லூசு மாதிரிப் பேசிட்டு இரு, எனக்கு நேரம் ஆகுது” என்று விட்டு ஒரு முறை தன்னைக் கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டவள்,
“உண்மையாவே எனக்கு நேரமாகுது. தனாவைச் சாப்பாடு போடச் சொல்லிச் சாப்பிட்டுக்கோ மாமா. இல்லனா அத்தைட்ட சொல்லி சாப்பிட்டுக்கோ” என்று விட்டுக் கிளம்பி விட்டாள்.
அவளைப் பார்த்துச் சிரித்த ருத்ரன், அவனாகவே சாப்பாடு போட்டுச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் சென்று விட்டான்.
இங்கு சரவணன் அகிலாவிற்கு ஃபோன் செய்தான்.
அவளது போனை எடுத்த அமுதன், “மாமா…” என்று மழலைக் குரலில் அழைக்க,
“செல்லம், அம்மா இல்லையா டா” என்று கேட்க,
“ஏன் என்கிட்டப் பேச மாட்டியா மாமா” என்று மழலையில் கேட்டான்.
“என் தங்கத்து கிட்டப் பேசாமயாடா, என்ன பண்ணுது தங்கம்” ஸ்கூலுக்குக் கிளம்பியாச்சா?” என்று கேட்டான்.
“மாமா, அம்மா சாப்பாடு ஊட்டிவிட்டுக் கிளப்பி விட்டுட்டாங்க. பாட்டி கூட ஆட்டோ ஏறப் போறேன்” என்றான்.
“சரிடா தங்கம், அம்மாகிட்ட போன் குடுடா” என்று கெஞ்சிக் கேட்க,
அமுதன் சிரித்துக் கொண்டே “அம்மா மாமா” என்று கொடுக்க,
அமுதனின் நெற்றியில் முத்தம் வைத்த அகிலா, அமுதனிடம் இருந்து “சரி டா தங்கம்” என்று போன் வாங்கிக் கொண்டு,
“என்ன அண்ணா இவ்வளவு காலையில” என்றாள்.
“அகிலா உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.”
“சரி அண்ணா, நான் ஸ்கூலுக்குப் போகணுமா? இல்ல, லீவு போடணுமா”.
“நான் ஸ்கூலுக்கு வரேன். எதுக்கு லீவு போட்டுகிட்டு?” என்றான்.
“சரி அண்ணா” என்று விட்டு வைத்து விட்டாள்.
அவள் ஸ்கூலில் சென்று இறங்க,
அகிலா, மகி இருவரும் தனித்தனி வண்டியில் தான் ஸ்கூலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு மீட்டிங் இருக்கலாம், இன்னொருவருக்கு மீட்டிங் இல்லாமல் இருக்கலாம்.
ஒரே வண்டியில் சென்று வந்தால், சரிப்பட்டு வராது என்று எண்ணி மகியும், அகிலாவும் தனித்தனி வண்டியில் தான் ஸ்கூலுக்குச் சென்று வருகிறார்கள்.
வெளியே கேட் அருகே சரவணன் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க,
சரவணனைப் பார்த்துச் சிரித்து விட்டு, “என்ன அண்ணா” அதுவும் வெளியில் வெயிட் பண்ணிட்டு இருக்க, அவ்வளவு முக்கியமான விஷயமா? என்னனு போன்லயே சொல்லி இருக்கலாமே” என்று கேட்டாள்.
தனது அண்ணனை ரொம்ப நாள் கழித்துப் பார்த்த சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே கேட்க,
அண்ணனின் முகம் ஒரு மாதிரி வாடிப் போய் இருப்பதைப் பார்த்துவிட்டு “வெளியே எங்கயாச்சும் போலாமா அண்ணா, லீவ் சொல்லிட்டு வரட்டா?” என்று கேட்டாள்.
அவனால் லீவு போடு என்று சொல்ல முடியவில்லை. ஆனால், தன் தங்கையுடன் இன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தான்.
ஒரு சில நொடி தனது அண்ணன் அமைதியாக இருந்தவுடன்,
போனை எடுத்துத் தனது கணவனுக்கு அழைத்தாள்.
“என்ன அகி” என்று அவன் அந்தப் பக்கம் கேட்க,
“மகி, தப்பா எடுத்துக்காதீங்க, அண்ணா வந்திருக்கு.”
“மச்சானா? நான் வீட்ல இல்லையே, நான் ஸ்கூலுக்கு வந்துட்டேன்” என்றான்.
“அண்ணா ஸ்கூல் கேட்ல தான் நின்னுட்டு இருக்கு. எனக்கு இன்னைக்கு ஒரு நாள் லீவு சொல்லிடுங்க. நான் இன்பார்ம் பண்ணிடுறேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்றதுக்கு தான் போன் பண்ணேன். அண்ணா கூட கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்றாள்.
“சரி நீ பாரு” என்று விட்டு வைத்து விட்டான்.
தமிழுக்கு போன் செய்து சொல்ல,
“எது அண்ணன் வந்து இருக்கா. என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல” என்று பேசிக் கொண்டே தமிழ் வெளியே வர,
சரவணனைப் பார்த்துவிட்டு, “என்ன அண்ணா, அப்படி முக்கியமான விஷயம் அந்தத் தங்கச்சிகிட்ட மட்டும் தான் சொல்லுவியோ? உன் மச்சான் கிட்ட சொல்ற, என்கிட்டச் சொல்ல மாட்டியோ? அப்ப நான் யாரோ? அப்படித்தானே” என்று சொல்லிவிட்டு அகிலாவையும், சரவணனையும் முறைத்து விட்டு ஸ்கூலுக்குள் நுழைந்தாள் தமிழ்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Haha….sandakozhi tamil… Saravanan maatitu mulikuran .. interesting