
அகம்-49
மரங்கள் அடர்ந்திருந்த இருள் சூழ்ந்திருந்த வனத்தில், காய்ந்த சருகுகள் காலில் மிதிபட, கூர்மையாய் அலசியபடியே நிதானமாய் நடந்தான் துடிவேல் அழகர்.
வானில் உலா போகும் பிறை நிலாவின் வெளிச்சம் கூட, அடர் கானகத்திற்குள் விழ வழியில்லாது அடர்ந்து செழித்து வளர்ந்திருந்தன மரங்கள். காற்றில் பரவிய இனம் புரியா மூலிகையின் மணம், அவன் நாசியை நிரடியது. ஆனால் அவன் கண்களும் மனமும், அவளை மட்டும் தான் தேடியது. காற்றில் பரவிய மூலிகை வாசத்தின் நடுவே அவளின் வாசம் தேடினான் அவன். கண்ணுக்கே தெரியாத புள்ளியாய் அவள் காற்றோடு காற்றாய் கரைந்து போவாளோ? என்ற பயம் அவன் மனதில் முளைத்திருந்தது.
இதற்குக் காரணம் ரோஹனாகத்தான் இருப்பான் என அவன் மனம் ஆழமாய் நம்பியது. ரோஹனால் ஏதாவது இடைஞ்சல் நேரும், என அவன் எதிர் பார்த்திருந்தான். ஆனால், தான் உடனிருக்கையில், அவளை யார் என்ன செய்துவிட முடியும்? என்ற குருட்டு நம்பிக்கையும் அவனிடம் இருந்தது.
அவன் குளியலறைக்குச் சென்று வந்த ஐந்து நிமிடங்களுக்குள் அவளைக் காணவில்லை. ஒருவேளை அவளுக்கு ஏதேனும் நேர்ந்தால், தான் மட்டுமே காரணம் என்கிற குற்றவுணர்வு கொல்லாமல் கொன்றது.
வாகனம் சென்ற தடத்தை வைத்து, பூச்சிகளின் ரீங்காரம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த கானகத்திற்குள் பயணித்தான் அழகர். தீடீரென சரசரவெனக் கேட்ட சத்தத்தில், சட்டென அருகிலிருந்த மரத்தின் பின் ஒதுங்கி, அசையாமல் நின்றான் அவன்.
டார்ச் லைட்டின் மங்கலான வெளிச்சத்தில், சரசரவென பாம்பு ஊர்ந்துப் போவது தெரிய, மூச்சு கூட விடாமல் அமைதியாய் நின்றவன். பாம்பு கடந்து சென்றதும், மீண்டும் தன் பயணத்தைத் துவக்கினான்.
வாகனத்தின் தடம் ஓரிடத்தில் முற்றுபெற்று, இன்னொரு கிளை பாதையை நோக்கித் திரும்பியிருந்தது. இந்தப் பாதையில் அவ்வளவாய் எந்த வாகனங்களும் பயணிப்பதில்லை என்பதையும், இது இரகசிய வழியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், வேறெந்த வாகனத்தின் தடமும் இல்லாததை வைத்தே அறிந்துக் கொண்டான் துடிவேல் அழகர்.
ஒருவழியாய் அந்தப் பாதை அந்த காட்டின் நடுவே இருந்த பெரிய மாளிகையோடு முற்றுப் பெற்று நின்றது. அவன் கணித்ததைப் போலவே, அந்த ஜீப் போன்ற வாகனம், புதர் மறைவில் ஓரமாய் நின்றது.
நடுக்காட்டில் இப்படியொரு மாளிகையை அவன் எதிர்பார்க்கவே இல்லை. உயர் மின்னழுத்த பாதுகாப்பு கம்பிகள் மதில் சுவர்களின் மேல் நீட்டிக் கொண்டிருக்க, மங்கலான வெளிச்சத்தில், பார்க்கவே பயங்கரமாய் காட்சியளித்தது அந்த மாளிகை. அந்த ஆட்கள் இருப்பதன் அடையாளமாய், மின் விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. ஏதோ அரசு அலுவலக வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு பின் கைவிடப்பட்ட மாளிகை என்பது அதன் தோற்றத்தில் தெரிந்தது.
மலை மீது இப்படியொரு கட்டிடம் இருக்குமென அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
அதே நேரம், கருவிழி இங்கே தான் இருக்கிறாள் என்பதற்கு ஆதாரமாய், அவளின் மேகவர்ண துப்பட்டா, முள்ளில் மாட்டி தொங்கியபடி காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது. அவள் துப்பட்டாவைப் பார்த்தவன், அதை மென்மையாய் முள்ளிலிருந்து விடுவித்து, தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
‘உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவிழி என்ன நிலையில் இருக்கிறாள் என்பதும் தெரியாது. ஆனால் உள்ளே செல்ல வேண்டும்!’ என யோசித்தவன், அந்தக் கட்டிடத்தின் பின்புறமிருந்த சிறிய வழியொன்றைக் கண்டு பிடித்திருந்தான்.
அதே நேரம்,
“பொறி வச்சு பிடிச்சுட்டேன்ல்ல டி? என்னையவா ஏமாத்த பார்க்கிறே? இப்போ மாட்டிக்கிட்டியே பேபி!” கருவிழியின் தாடையை இறுகப் பற்றியபடி பேசினான் ரோஹன்.
நாற்காலியில் கட்டிப் போட்டபடி அமர்ந்திருந்தவளோ, அவனை அதிர்வுடன் பார்த்தாள்.
மயக்கத்திலிருந்து சில நிமிடங்களுக்கு முன்பு தான் தெளிந்திருந்தாள். கண்கள் ஏனோ மசமசப்பாய் தெரிந்தது. எதிரில் நிற்பவன் ரோஹன் என அவன் குரலை வைத்து தான் அவளால் அடையாளம் காண முடிந்தது.
“நீ.. நீ.. உயிரோட இருக்கியா?” அதிர்வுடன் தனக்கு மிக அருகில் நின்றிருந்தவனைப் பார்த்தாள் கருவிழி. பார்வை தெளிவு பெறத் துவங்கியது. இருந்தாலும் தலைவலி விண்ணெனத் தெறித்தது.
“ஷாக்கிங்கா இருக்கா பேபி? உன்னைக் கொல்லவே உயிரோட வந்தேன்டி! எந்த வீடியோவை வச்சு என்னை மாட்டி விட்டியோ, இன்னைக்கு நீயே வீடியோவுக்கு கன்டென்ட்டா மாறப் போறே?” அவளை விட்டு விலகி, வெண் சுருட்டை பற்ற வைத்துப் புகைத்தபடியே சொன்னான் அவன்.
அவள் அதிர்ந்து விழிப்பதை பொருட்படுத்தாமல்,
“நான் மட்டும் இல்லை, இவங்க என் ஃப்ரெண்ட்ஸ்.. எங்க நாலு பேருக்கும், இன்னைக்கு நீ மட்டும் தான் விருந்து!” என்றவன் கை காட்டிய திசையில், ரோஹனின் நண்பர்களான, முகேஷ், வைபவ் மற்றும் ராகவ் மூவரும், மது அருந்தியபடி கிறங்கிய கண்களால் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“மச்சி! எப்போவும் படம் தானே காட்டுவ? இன்னைக்கு லைவ் ஷோவா மச்சான்?” குழறலான குரலுடன், வைபவ் கேட்க தூக்கிவாரிப் போட்டது கருவிழிக்கு.
“ச்சீ.. பொண்ணுங்களோட அந்தரங்கத்தை அவங்களுக்குத் தெரியாமல் படம் பிடிச்சு, அவங்களை மிரட்டுறதெல்லாம் ஒரு பொழப்பா? இந்தப் பொழப்புக்கு நாண்டுக்கிட்டு தொங்கிரு! ஒரு பொண்ணோட சாவுக்குக் காரணமான கொலைகாரன் நீ!”
“என்னடி ஓவரா பேசுற? நான் கொலைகாரன் தான். இந்த தீப்தி மட்டும் தான் ஏதோ மிஸ் ஆகி வெளியே தெரிஞ்சுடுச்சு. நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் கெட்டவன் இல்லை பேபி! ஜஸ்ட் வீடியோ எடுத்தோமா, ஃப்ரெண்ட்ஸோட படம் பார்த்தோமான்னு இருக்கிற நல்ல பையன் நான். உன்னை மாதிரி புரட்சி பண்ணுறேன்னு சில பைத்தியங்கள் தான், கற்பு அது இதுன்னு பேசி கழுத்தறுக்கும். அந்தப் பைத்தியங்களை வீடியோவை காட்டி மிரட்டி பார்ப்பேன். வழிக்கு வரலைன்னு வையேன்.. நீ சொன்ன மாதிரியே கொன்னுடுவேன்.!” கண்களில் துளி பயமில்லாமல் இரசனையோடு சொல்லும் அவன் தோரணையில் உள்ளுக்குள் குளிரெடுத்தது கருவிழிக்கு.
‘ஐயோ.. இவன் இராட்சசனாய் இருப்பானோ? அழகரு.. இவன் என்ன செய்யப் போறானோ தெரியலையே? எனக்கு பயமா இருக்கு அழகரு!’ மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் கருவிழி.
அவன் கண்கள் மிரட்சியுடன் நான்கு பேரையும் மாறி மாறி பார்த்தது. அவர்கள் நான்கு பேர், இவள் ஒருத்தி. எப்படி சமாளிக்க முடியுமென்று அவளுக்குத் தெரியவில்லை. அழகருக்கு அவள் இருக்கும் இடம் தெரியுமா? அவள் பூம்பாறையில் தான் இருக்கிறாளா? இல்லை வேறெங்கும் கடத்தி வந்துவிட்டார்களா? எதுவுமே அவளுக்குத் தெரியாது. பயம், பயம் மட்டுமே அவள் மனம் முழுதும் நிறைந்துக் கிடந்தது.
பற்றாக்குறைக்கு வெண்சுருட்டின் புகையும், மதுவின் வாடையும் அவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
‘இதே ரோஹனுக்காகத்தான் பாண்டிச்சேரி வரை போய் குடிச்சுட்டு வந்தே? இப்போ மட்டும் உனக்கு இந்த ஸ்மெல் பிடிக்கலையா?’ மனம் அவளுக்கெதிராக அவளிடமே கேள்வி கேட்டது.
‘இந்தப் பக்கி, இம்புட்டு விவகாரமானவன்னு எனக்குத் தெரியாதே? அழகா இருக்கானேன்னு பேசினேன். ஆன்டி ஹீரோவா இருப்பான்னு கனவா கண்டேன்? கருமம் பிடிச்சவன் கடத்திட்டு வந்து கட்டி வச்சிட்டான். நாம சரக்கடிக்கும் போது, ஸ்மெல் தெரியலை. அடுத்தவங்க அடிச்சுட்டு நம்ம பக்கத்தில் வரும்போது சகிக்க முடியலை!’ தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொண்டாள் கருவிழி.
‘இப்படி மனசுக்குள்ளேயே கேள்வி கேட்டு பதில் சொல்லிட்டு இரு! தப்பிச்சுப் போக வழியைப் பாருடி!’
‘நானே சோகத்தில் இருக்கேன். இந்தப் பரதேசிக்காக சாகவெல்லாம் துணிஞ்சேனே? எனக்கே என்னை நினைச்சு அசிங்கமா இருக்கு. உண்மையான லவ் எது ஈர்ப்பு எதுன்னு தெரியாமல் இருந்திருக்கேனே? அழகர் சொன்னிச்சு நான்தான் கேட்கலை! மிஸ் யூ அழகரு!’
‘இப்படி மனசுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திட்டு இரு! அவன் வீடியோக்கு உன்னை கன்டென்ட் ஆக்குறேன் சொல்லிட்டு இருக்கான். உன்னையெல்லாம் அழகரு எப்படி தான் வச்சு சமாளிக்கிறானோ?’
‘ஐயய்யோ! ஆமால்ல, எனக்கு பயமா இருக்கே! இந்தக் கிறுக்குப் பய ரோஹன் என்ன செய்யப் போறானோ?’ மனதிற்குள் தனக்குத்தானே புலம்பியபடியே சிந்தை கலைந்து நிமிர்ந்து நோக்கினாள் அவள்.
புகைப்பிடித்தபடியே தன்னை நோக்கி வந்த ரோஹனைப் பார்த்து அவளுக்கு பயமாக இருந்தது. எச்சில் கூட்டி விழுங்கி, பயம் வழிந்த விழிகளுடன் அவளைப் பார்த்தாள் கருவிழி.
“என்ன பேபி பயமா இருக்கா? என்னைப் பார்த்ததும் உன் கண்ணில் வர்ர இந்த பயம் இருக்கே, அது தான் எனக்கு ராஜபோதை தெரியுமா?”
“மச்சான்.. பேச்சு வார்த்தையிலேயே முடிச்சுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா.? எங்களுக்கு லைவ் ஷோ வேணும்டா!”
“ஆமா! ஆமா! வேணும்! வேணும்!”
“பொண்ணு வேற செம்ம அழகா இருக்கா! வீ கான்ட் வெய்ட் மச்சான்!” அவன் நண்பர்களின் குரல் அவள் செவிகளை எட்ட, உயிர் நடுங்கியது கருவிழிக்கு.
அடி மேல் அடி வைத்து ரோஹன் அவளை நெருங்கி வர, உடல் உதற, உயிர் நடுங்கியது. ஆனாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாது நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.
“நீ என்னதான் தைரியமாய் காட்டிக்கிட்டாலும், உன் கண்ணில் பயம் தெரியுதே பேபி! அன்றைக்கு என்னை அடிக்கும் போது இந்த தைரியம் எங்கே போச்சுடி ***? இந்த ரோஹனைத் தொடறதுக்கு முன்னால் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்கணும் பேபி! நீங்களா தானேடி வர்ரீங்க? என் ஸ்ட்டேடஸ் பார்த்து, அழகைப் பார்த்து வர்ரீங்க? அப்பறம் எதுக்குடி இந்த போலி வேஷம்? உனக்கு ஒண்ணு தெரியுமா? என்னை அறைஞ்ச முதல் பொண்ணும் கடைசி பொண்ணும் நீயா மட்டும் தான் இருப்பே!” என மெல்லிய குரலில் பேசியபடியே அவளை நெருங்கி வந்தவன் ஓங்கி அறைந்திருந்தான்.
ரோஹன் ஓங்கி அறைந்ததில், விரல் தடங்கள் அவள் கன்னத்தில் அச்சாகப் பதிந்திருக்க, உதடு கிழிந்து உதிரம் துளிர்த்திருக்க, ஒற்றைக் கண்ணிலிருந்து சரேலென வழிந்தக் கண்ணீர் துளி, திகு திகுவென எரிந்துக் கொண்டிருந்த கன்னம் தழுவி நழுவியது. இப்போது அவள் கண்களில், பயத்தோடு மிரட்சியும் குடியேறியிருந்தது.
“ரோ.. ரோஹன் வே.. வேணாம் ப்ளீஸ்..!” அதீத பயத்தில் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.
“எனக்கு வேணும் டி! உன்னைக் கொல்லணும்! எவ்வளவு தைரியம் இருந்திருந்தால், எனக்கு எதிரா ஆதாரம் கொடுத்து என்னையே மாட்டி விடுவ? செஞ்சதுக்கெல்லாம் அனுபவிக்க வேணாம்.!” கண்கள் சிவக்க உரைத்தவன்,
“என்னை நீ லவ் பண்ணினே தானே பேபி? டூ யூ லவ் மீ?” என அழுத்தமான குரலில் கேட்க,
‘இல்லை’ என இடவலமாய் தலையசைத்து மறுத்தாள் கருவிழி.
“ஆறு மாசம் பேபி! பட்டுன்னு இல்லைன்னு சொல்றே? ஒரு நாள் ரெண்டு நாள் இல்லைடி! முழுசா ஆறு மாசம் உனக்காக நல்லவன் மாதிரி வெய்ட் பண்ணியிருக்கேன். உன் சுண்டு விரலைக் கூடத் தொட விடாமல், என்னைக் காக்க வச்சியேடி? இப்போ எல்லாமே எனக்குத்தான்.” அவன் கூர் விழிகள் அவள் மேனி மீது அலை பாய்ந்தது.
“அடுத்தவன் பொண்டாட்டியை இப்படி அசிங்கமா பார்க்குறியே உனக்கெல்லாம் வெட்கமா இல்லை? ஒரு பொண்ணை படுக்கையில் வீழ்த்துறது ஒண்ணும் ஆம்பிள்ளைத்தனம் இல்லை! என்னைக் கட்டி வச்சு கதை பேசற நீயெல்லாம் ஆம்பிள்ளையே இல்லை!” நிலமையின் தீவிரம் சற்று தாமாதமாகத்தான் கருவிழிக்குப் புரிந்தது.
இவன் முன்னால் அழுதுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாதென முடிவு செய்தவள், அவனைச் சிந்திக்க விடக் கூடாதென முடிவு செய்த பின்னே பேசினாள்.
“ஏய் யாரைடி ஆம்பிள்ளை இல்லைன்னு சொல்றே? திமிரா டி உனக்கு!” அவன் கரம் அவள் கழுத்தை இறுகப் பற்றியது.
அவனின் இறுகியப் பிடியில் மூச்சுக் காற்றுக்குத் தவித்தாலும்,
“இப்போவும் என்னைக் கட்டி வச்சு தான் உன் வீரத்தைக் காட்டுறே? நீதான் உலகத்திலேயே தைரியமான ஆம்பிள்ளைன்னு ஒத்துக்கிறேன் ரோஹன்!” என நக்கலாய் சொன்னாள் கருவிழி.
“உன்னை அவிழ்த்து விட்டால் மட்டும் என்னடி செஞ்சு கிழிச்சிடுவ? என்ன செய்றேன்னு நானும் பார்க்கிறேன் டி!” அவசரமாய் அவளை இறுக்கிக் கட்டியிருந்த கயிறை அவிழ்க்கத் துவங்கினான் ரோஹன்.
“டேய் மச்சி! எல்லாரும் ஃபுல் போதையில் இருக்கோம்! அவளைத் தப்பிக்க விட்டுடாதே டா!” ராகவின் குரல் சத்தமாய் கேட்டது.
“ஆமா டா மச்சான்! சொல்றதைக் கேளு!” யார் சொன்னதுமே ரோஹனின் காதில் விழவே இல்லை.
‘அழகரு! வந்துடு! உன்னை நம்பித்தான் இந்த திட்டத்தைப் போட்டிருக்கேன்.!’ மனதிற்குள் நினைத்தவள், அவன் கயிற்றை அவிழ்த்த மறுநொடி, தான் மொத்த பலத்தையும் திரட்டி, அவனைத் தள்ளிவிட்டவள், தனக்குப் பின்னாலிருந்த கதைவைத் திறந்துக் கொண்டு ஓடத் துவங்கியிருந்தாள்.
அவள் முன்பக்கமிருந்த கதவு வழியாகத்தான் தப்பிக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி, மூன்று நண்பர்கள், அவளுக்கு முன்னே இருந்த கதவினருகே அமர்ந்திருக்க, அவளோ, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய், தனக்குப் பின்னாலிருந்த கதவு திறந்திருப்பதைக் கணித்து, அந்த வழியாக ஓடியிருந்தாள்.
“டேய் முட்டாள்களா! தப்பிச்சு ஓடுறா டா!”
“நான் தான் அவிழ்த்து விடாதேன்னு சொன்னேனே மச்சான்!”
“போய் பிடிங்கடா பரதேசிகளா!” ரோஹன் ஆத்திரத்தில் கத்த, மூவரும் ரோஹனோடு சேர்ந்து துரத்திக் கொண்டு ஓடினர்.
கல்மண் தெரியாத வேகத்துடன் நொடி நேரம் கூட நிற்காமல், குறுகிய சந்து பொந்துகளில் புகுந்து ஓடி வந்தவள், அவளைப் பின் வழியாய்த் தேடி வேகமாய் நடந்து வந்துக் கொண்டிருந்த அழகரின் மேல் மோதி நின்றாள்.
“அழகரு! மாமா! ரோஹன்!” ஒவ்வொரு வார்த்தையாய் தடுமாறிப் பேசியவளுக்கு மூச்சிரைத்தது.
“ஒண்ணும் இல்லைடி! அதேன் நான் வந்துட்டேன்ல்ல..!” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள,
“இங்கிருந்து போகணும்! அழகரு இங்கிருந்து போகணும்! வா! வா!”
“இருடி! நான் சொல்றதைக் கேளு!”
“ஏய் இந்த வழி இல்லை டி!” அவன் சொன்னது எதையுமே காதில் வாங்காது அவசரமாய் அவனை இழுத்துக் கொண்டு ஓடத் துவங்கியிருந்தாள். ஆனால் அந்தக் கும்மிருட்டில் எந்த வழியாக செல்கிறோம் என்கிற அடையாளம் தெரியாது, வழிமாறி ஓடத் துவங்கியிருந்தனர்.
“ஏய் கிறுக்கச்சி! நாம எதுக்குடி ஓடணும்? தப்பு பண்ணின அவிங்களே தைரியமா இருக்கும் போது, நாம ஏன் பின்னங்கால் பிடரியில் பட ஓடணும்?”
“அவனுங்க துப்பாக்கியெல்லாம் வச்சிருக்காணுங்க அழகரு! நாம ஒழுங்கா ஊரு போய் சேர்ந்தால் போதும்!”
பயத்தில் அவள் குரல் நடுங்கியது. அப்போது தான் சுற்றுப் புறத்தைக் கவனித்தான் அழகர். அவர்கள் வந்து சேர்ந்திருந்த இடம் ஓர் மலை முகடு அதாவது மலையுச்சி.
காட்டுப் பகுதியை விட்டு வெளியே வந்திருந்தனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் முன்னேறி செல்லவும் எந்த வழியும் இல்லை.
“சொன்னேன்ல்ல டி! இந்தப் பக்கம் வழி இல்லை! மலை உச்சியில் வந்து மாட்டிக்கிட்டோம்! போகணும்ன்னா வந்த வழியே திரும்பிப் போகணும்!” எனச் சொன்னவன் அவள் கரம் பிடித்து, இரண்டடிகள் எடுத்து வைக்க, ரோஹனும் அவன் நண்பர்களும், கருவிழியையும் அழகரையும் சுற்றி வளைத்திருந்தனர்.
“இந்தாருடி! ஒரு சின்ன கேப் கிடைச்சாலும், ஓடிரு! என்னைப் பத்தி கவலைப் படாதே நான் வந்துருவேன். முன்னோக்கி ஓடணும் டி! திரும்பிப் பர்க்காமல் ஓடணும்!” அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் அழகர்.
“மாட்டேன் மாமா! உன்னை விட்டுப் போக மாட்டேன்.!”
“ஏய் கரு கரு! என்னை நம்புடி நான் வந்துருவேன்!” என அவன் சொல்ல, பயம் அப்பிய முகத்துடன் சம்மதமாய் தலையசைத்தாள் அவள். அந்தச் சூழ்நிலையை ஆட்கொண்டிருந்த இருளும், வானில் உலாப் போய்க் கொண்டிருந்த பிறை நிலவும், அவளுக்கு அந்தக் கொடூரக் கனவை நினைவுபடுத்த பயத்துடன் உடல் நடுங்க, ரோஹனையும் அவன் நண்பர்களையும் பார்த்தாள் கருவிழி.
“அவிழ்த்து விட்டால் பெருசா கிழிச்சிடுவேன்னு டைலாக் எல்லாம் பேசின பேபி? இப்படி வந்து மாட்டிக்கிட்டியே? அதுவும் ஜோடியா மாட்டிட்டீங்களே?” நக்கலாய் கேட்டான் ரோஹன்.
“டேய்! அவளைப் பிடிங்கடா!” என ரோஹன் உத்தரவிட, மற்ற மூவரும் கருவிழியை மெதுவாய் நெருங்கினர். நெருங்கி கருவிழியைத் தொட முயன்ற தருணம், “ஆ..ஆ!” என அந்தக் காடே எதிரொலிக்க அலறியபடி கீழே விழுந்திருந்தனர் இருவர்.
மூன்றாவதாய் நெருங்க முயன்ற ராகவின் மூக்கில், ஓங்கி மூக்கிலேயே குத்துவிட்டான் அழகர். ராகவின் மூக்கிலிருந்து பொல பொலவென இரத்தம் கொட்ட அவன் மயங்கி கீழே விழ, அடுத்ததாய் எஞ்சியிருந்த ரோஹனைத் தேடினான் அழகர். கருவிழியோ அழகர் சொன்ன திசையில் தன் ஓட்டத்தை துவக்கியிருந்தாள்.
அதே நேரம் ரோஹனோ, கருவிழி முன்னால் ஓடிக் கொண்டிருக்க, பின்னால் துரத்திக் கொண்டு ஓடினான் ரோஹன். அவசரமாய் ரோஹனை நோக்கி ஓடிய அழகர், அவன் சடைக் காலரைப் பற்றி, தரதரவென இழுத்து வந்தான்.
“நீ ஓடிருடி! எங்கணையும் நிக்காதே!” சத்தமாய்ச் சொன்னவன், ரோஹனை அடித்து வெளுத்து எடுத்துவிட்டான்.
“ஏன்டா! பொம்பளப் பிள்ளைகள் கிட்டே மட்டுந்தேன் வீரத்தைக் காட்டுவீகளோ? ஒரு பிள்ளை உன்னால் செத்துப் போயிருக்குது! கொஞ்சமும் குத்தவுணர்ச்சி இல்லாமல், நேக்கா தப்பிச்சு என் பொண்டாட்டி மேலேயே கை வைக்க வருவியாடா பரதேசி நாயே! ஒரு பொண்ணோட நிர்வாணத்தை ஆபாசமா பார்க்கிற நீயெல்லாம் மனுஷ பிறவியே இல்லை. உன் அம்மாவோட நிர்வாணத்தில் தானே நீ பொறந்த? பொம்பளை வயிற்றில் பிறந்துட்டு, பொண்ணுங்களை கீழா பார்க்கிறே?!” எனக் கேட்டவன், கீழே விழுந்துக் கிடந்த ரோஹனைக் கன்னம் கன்னமாக அறைந்து தள்ளிவிட்டான்.
போதையில் இருந்த ரோஹனின் நண்பர்கள், சில அடிகளுக்கே தாக்குப் பிடிக்க முடியாது மயங்கி விழுந்திருக்க, ரோஹனுக்கும் அழகரை உடல் பலத்தால் வெல்வது கடினம் என்பது புரிந்தது. தான் தப்பிப்பதற்கு அழகரைக் கொன்றே தீர வேண்டும் என முடிவு செய்தவன், தன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை மெதுவாய் எடுத்தான்.
நிசப்தம் சூழ்ந்திருந்த அந்த அடர்வனத்தில், ரோஹன் துப்பாக்கியை எடுத்ததை சத்தத்தை வைத்தே உணர்ந்திருந்தான் அழகர்.
அவசரமாய் ரோஹனை தூக்கி நிறுத்தி, ரோஹனிடமிருந்து துப்பாக்கியை அழகர் பறிக்க முயல, அவசரமாய் துப்பாக்கியை பின்னுக்கு இழுத்து, விசையை அழுத்தியிருந்தான் ரோஹன்.
அவன் சுட்ட குண்டு தன்னைத் துளைக்கும் முன்னமே, ரோஹனை வேகமாய்த் தள்ளியிருந்தான் துடிவேல் அழகர்.
நிசப்தம் சுமந்து நின்ற, அடர் வனத்தில் கர்ண கொடூரமாய் துப்பாக்கியின் சத்தம் கேட்க, அந்த அர்த்தஜாம வேளையில், பறவைகள் படபடவென தன் சிறகை அடித்துப் பறந்தன. அதே நேரம் சற்று தொலைவில் ஓடிக் கொண்டிருந்த கருவிழியோ, துப்பாக்கி சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்க்க, இருளில், தரையைத் தாண்டி வெளியே வளர்ந்திருந்த அந்த மரத்தின் வேரில், கால் தடுமாறி கீழே விழுந்திருந்தாள்.
நச்சென்று தலை எதிலோ மோதியிருக்க, நெற்றியில் கசிந்த உதிரத்தை தொட்டுப் பார்த்தபடியே மயங்கிச் சரிந்திருந்தாள் கருவிழி.
******
ஆகாயச் சூரியனை அள்ளி விழுங்கிவிட்டு, காரிருள் தன் இராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த இரவுப் பொழுது. கண்களுக்கு புலப்பட மறுக்கும் அந்த அந்தகார வேளையில், அத்துவானக் காட்டிற்குள் நிர்கதியாய் தலைவிரிக் கோலத்துடன், கண்கள் சிவப்பேறி நெருப்புத் துண்டங்களாய் தகிக்க நின்றிருந்தாள் அந்தப் பெண்.
கசங்கி நலுங்கிய உடையில் தலைவிரி கோலமாய் அவள் நின்றிருந்த தோரணை, அந்த மதுரையை நெருப்பின் கோரப்பசிக்கு இரையாக்கிய மாதரசி கண்ணகியை நினைவுபடுத்தியது.
கோட்டான்கள் அலறும் அந்த அர்த்த ஜாம வேளையில், நடுக்காட்டில் தன்னந்தனியாய் நின்றுக் கொண்டிருந்தவளின் கண்கள் எதையோ அந்த மையிருட்டில் தேடித் துளாவியது. ஒற்றை கால் கொலுசு சிணுங்க, எதையோ தேடி, அங்கேயும் இங்கேயும் பைத்தியமாய் உலவிக் கொண்டிருந்தாள் அவள். உதவி செய்ய நாதியில்லை. தொலைத்த பொருள் கிடைக்குமா என்பது அவளுக்குத் தெரியவும் இல்லை. அவளின் கருங்குவளை விழிகள் சுற்றத்தை அலசுவதை நிறுத்தவில்லை.
கால்கள் ஓட்டத்தை நிறுத்தவில்லை. அவள் மனமோ அழகரை நினைப்பதை நிறுத்தவில்லை. அவளின் மலர் பாதங்களில் கல்லும், முள்ளும் தைத்த போதும் கூட அவள் வலியை உணரவில்லை. தனக்குச் சொந்தமானதைத் தேடுவதையும் நிறுத்தவே இல்லை.
அந்த அத்துவானக் காட்டில், ஆளில்லா தனிமையில் தன்னந்தனியாய் பெண்ணொருத்தி, பிறை நிலாவின் ஒளியில் தேடிக் கொண்டிருக்க, அவள் கண்கள் எங்கெங்கோ அலைபாய்ந்து, இறுதியில் ஏதோ ஓரிடத்தில் ஸ்தம்பித்து நின்றது. இத்தனை நேரமாய் இருந்த ஒட்டுமொத்த தைரியமும் மொத்தமாய் வடிந்து, கண்கள் நீரைச் சுமந்து நிற்க, கால்கள் கண்மண் தெரியாமல் தட்டுத் தடுமாறி ஓடத் துவங்கியது. பதைபதைக்கும் நெஞ்சை அழுத்திப் பிடித்து, ஓடியவள், அந்த மங்கலான வெளிச்சத்தில் கீழே விழுந்துக் கிடந்த உருவத்தின் அருகே நெருங்கினாள்.
நெருங்க நெருங்க இதயம் படபடத்தது.
‘இல்லை! இருக்கக் கூடாது.! இது அவனாக இருக்கக் கூடாது..!’ மனம் அடித்துக் கொள்ள, தடுமாறி தவித்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி, அவனருகே வந்தாள். கண்கள் பயத்தில் குளித்திருந்தது. உடலும் மனமும் ஒருசேர நடுக்கமுற, கவிழ்ந்து விழுந்துக் கிடந்த அந்த முரட்டு உருவத்தினை, நடுங்கும் தளிர்க்கரங்களால் திருப்பினாள் அவள். இரத்தச் சகதியில் கிடந்தவனைத் திருப்பி அவன் முகத்தைக் கண்டவளுக்குள், ஆயிரம் மின்னல்கள் ஒருசேர தாக்கியதைப் போன்ற அதிர்ச்சி. கண்கள் இருட்டிக் கொண்டு வர, அவள் கரத்தில் மசமசப்பாய் உதிரம் ஒட்டியிருக்க,
“அழகரு..!” என்ற அவளின் அலறல் அந்தக் காடெங்கும் எதிரொலிக்க, செய்வதறியாது கண்கலங்கி, சித்தம் தடுமாறி, கண் முன் பார்க்கும் காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், தன்னந்தனியாய் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவளின் தோளைத் தொட்டது அந்தக் கரம். அந்தக் கரத்தின் சொந்தக் காரனைப் பார்த்து அதிர்வில் விழி விரித்தாள் கருவிழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரோஹனிடம் மாட்டிக்கொண்ட அதிர்வில், அவன் உயிருடன் இருக்கும் அதிர்ச்சியில் ஆரம்பத்தில் தவித்தாலும் பிறகு நிதானித்துக்கொண்டால் விழி.
அவன் கட்டிப்போட்டு மிரட்டிட்டு இருக்கான் அப்போ போய் mind voice la விவாதம் செஞ்சிட்டு இருக்கியே விழி.
நிலைமையோட தீவிரத்தை புரிஞ்சிட்டு சமயோஜிதமா யோசிச்சு அவன் கவனத்தை பேச்சாலேயே திசை திருப்பி தப்பிச்சது அருமை.
ஆழ்மன நேசத்தின் மீதான நம்பிக்கையில் மனம் சொன்ன பாதியில் அவளை தேடி வந்து விட்டான். அவன் நம்பிக்கையை பொய்யாக்காமல் அவளும் கிட்டிவிட்டாள்.
அழகர் சொல்வதை கேளாமல் தவறான பாதையில் சென்று இப்படி மாட்டிக்கொண்டாளே.
மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. 😍😍