Loading

அகம்-48

“அழகரு! என்னத்துக்கு அவன் கிட்டே சண்டைக்குப் போற? லூசா நீ? நாம ஹனி மூன் வந்திருக்கோம் சண்டை போட வரலை!” அவன் இழுத்த இழுப்பில் அவன் பின்னால் நடந்துக் கொண்டே பேசினாள் கருவிழி.

 

“உன்னால் தான்டி! ஹனிமூன் வந்துட்டு, மனுஷனை கோயில் கோயிலா சுத்த வைக்கிறே.? கொஞ்சமாவது ரொமான்ட்டிக்கா பேசுறியாடி? பேசாமல் பொம்பளை சந்நியாசியா போ!”

 

“நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்றே? லூசு அழகரு..! அந்த ஆள் கிட்டே என்னத்துக்கு சண்டைக்குப் போன?” மீண்டும் முதல் கேள்வியிலேயே வந்து நின்றாள் கருவிழி.

 

“இந்தாரு டி, நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுன்னு ஒரு மண்ணும் உனக்குத் தெரியாது.பேசாமல் வாயை மூடிட்டு வா!” குரலுயர்த்தி அதட்டினான் அழகர்.

 

“என்ன எனக்குத் தெரியாது? அந்த ரோஹன் தான் ஆக்ஸிடென்ட்டில் போய்ட்டானே? இன்னும் என்ன எனக்குத் தெரியாமல் நடக்குது?”

 

“இதை உனக்கு யார் சொன்னது?”

 

“ஏன்? மதுதான் சொன்னாள்!”

 

“உண்மை போல் தெரியுற சில விஷயங்கள் உண்மையாய் இருக்காது டி! சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்காமல் வா!” அவளின் நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம் என்று தான் அவளிடம் ரோஹனைப் பற்றிய உண்மைகளைச் சொல்வதைத் தவிர்த்தான்.

 

“எது உண்மை? எது பொய்? எதாவது தெளிவா சொல்லு அழகரு! தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சொல்லிக்கிட்டு!” என்றவள் அவன் இழுத்த இழுப்பிற்கு செல்லாமல் சட்டென நின்று விட்டாள்.

 

“ஏய் கிறுக்கச்சி..! ரோஹன் உன்கிட்டே பழகும் போது, நல்லவன்னு தானே நினைச்சே?” என்ற அவன் கேள்விக்கு, ஆம் என தலையசைத்தாள் பெண்.

 

“நாம கண்ணால் பார்க்கிற எதுவும் உண்மை இல்லைடி! வெளியில் அழகா தெரிஞ்ச ரோஹனுக்கு எப்படி, ஒரு அசிங்கமான மறுபக்கம் இருக்கோ, அதே மாதிரி தான். நாம கேள்வி படற சில விஷயங்களுக்குப் பின்னால் வேற ஒண்ணு இருக்கும். உன் குட்டி மூளைக்கு இதெல்லாம் புரியாது. பேசாமல் வா! அடுத்து எங்கே போகலாம்?”

 

“மாமா! அருவியில் குளிக்கப் போகலாமா? ஜாலியா இருக்கும்!”

 

“போகலாமே.. ரெசார்ட்டோட ப்ரைவேட் ஃபால்ஸ் இருக்குன்னு சொன்னாங்க.. நாம மட்டும் தனியா..?” கேள்வியோடு இடை நிறுத்தி கண்சிமிட்டி சிரித்தான் அவளின் அழகன்.

 

“போ! அழகரு.. இதையே எப்போ பார்த்தாலும் பேசாதே.. எனக்கு பயமா இருக்கு..!”

 

“நான் இருக்கும் போது உனக்கென்னடி பயம்? எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் டி ஆள் மயக்கி!”

 

“மா.. மா!” தடுமாறி குரல் திக்கியது அவளுக்கு. அவன் கண்களைச் சந்திப்பதற்கே ஒருமாதிரி சங்கடமாய் இருந்தது.

 

“சும்மா கண்ணால் பார்த்தாலே கால் மணிநேரம் வார்த்தை வர மாட்டேங்குது.. உன்னை வச்சு குடும்பம் நடத்தி, குழந்தை பெத்து.. விடிஞ்சிரும்.!”

 

“போ அழகரு..!” இனம்புரியா பயத்தோடும் தடுமாற்றத்தோடும், அவன் கரம் கோர்த்துக் கொண்டவளுக்கு, மனம் படபடக்கத் துவங்க, அந்தக் குளிரிலும் அவளுக்கு வியர்த்தது.

 

“என்னடி சத்தத்தையே காணோம்?”
“ஒ.. ஒண்ணுமில்லை அழகரு..!” அவன் கண்களைச் சந்திக்க தயக்கமாய் இருந்தது கருவிழிக்கு.

 

“என்னத்துக்குடி இம்புட்டு பயம்? நான் பார்த்துக்கிறேன் டி!” கரத்தினில் அழுத்தம் வைத்தான் அவன். அதன் பின் வார்த்தைகளுக்கு வேலையற்றுப் போக, பார்வைகளும் ஸ்பரிசங்களும் மௌனமாய் பேசிக் கொண்டன.

********

“அழகரு..!”

“என்னடி..?!”

“இந்த ட்ரெஸ் ஓகேவா?” என்று வந்து நின்ற கருவிழியை இமைக்காமல் பார்த்தான் துடிவேல் அழகர். கண்கள் மனையாளை விட்டு நகர மறுத்தது.

 

“ஏன்டி மனுஷனைக் கொல்றே?” உதடுகள் புன்னகையுடன் உச்சரிக்க, கண்கள் அவளை விட்டு நகரவே இல்லை. கருப்பு நிற கையில்லாத மேல் சட்டையும், முட்டி வரையிலுமே இருந்த ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள்.

 

கருப்பு அருவியாய் வளைந்து நெளிந்த அவள் கார் கூந்தலின் நுனியில் அவன் மனம் சிக்கித் தவித்தது. கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிற்றைத் தவிர வேறு ஆபரணங்கள் எதுவும் இல்லை.

 

இளமாலை நேரத்தில், சூரியக் கதிர்கள் அவள் முகத்தை முத்தமிட சிலையென வந்து நின்றவளை கைப்பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கினான் அழகர்.

 

“அழகரு.. குளிக்கத்தானே வரச் சொன்ன? இப்போ என்ன பண்ணுற?” கழுத்தோரம் உரசிய அவன் மூச்சுக் காற்றில், உடல் சிலிர்த்தது பெண்ணுக்கு.

 

“என்ன வேணும்னாலும் பண்ணுவேன்டி! ரெண்டு நாளும் அத்தை கூட படுத்துக்கிறேன் ஆட்டுக்குட்டிக் கூட படுத்துக்கிறேன்னு என்னை ஏமாத்தினியே? இப்போ எங்கே ஓடி ஒளியப் போற கரு கரு?” கழுத்து வளைவில் மீசை அழுந்தப் பதிய முத்தமிட்டான். கண்களில் மையல் தேக்கி அவனை தள்ளி விலக்கியவளோ,

 

“யாராச்சும் பார்த்துருவாங்க அழகரு!” சிணுங்கலுடன் சொன்னவள், சுற்றிலும் தன் அகல் விழிகளை அகல விரித்துப் பார்த்தாள்.

 

“ரெண்டு மணி நேரத்திற்கு யாரும் வர மாட்டாங்க!” என்றவனின் உதடுகள் அவளின் மெத்தென்ற கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தது.

 

“அழகரு.. இப்படி திறந்த வெளியில்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு! யாரோ பார்க்கிற மாதிரியே தோணுது!”அவள் கண்கள் சுற்றிலும் பார்ப்பதை நிறுத்தவில்லை.

 

“அதெல்லாம் யாருமே இல்லை!” என்றவன், அவளை இழுத்துக் கொண்டு சட சடவென சப்தமிசைத்துக் கொண்டிருந்த அருவியை நோக்கி இழுத்துப் போனான்.

 

சடசடவென பாறாங்கல்லாய் தலையின் மீது வீழ்ந்த நீரின் வேகத்தில், தள்ளாடி கீழே விழப் போனவள், பதற்றத்தின் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

“அழகரு பயமா இருக்கு! அழகரு.. நான் தண்ணியில் அடிச்சுட்டு போகப் போறேன்.!”

 

“காப்பாத்து அழகரு!”

 

“ஏய் கிறுக்கச்சி! கத்தி ஊரைக் கூட்டாதே! நான்தேன் உன்னைப் பிடிச்சிருக்கேனே? பிறகு என்ன? முதலில் பயப்படாதே டி!” அவள் இடையில் அழுத்தம் கூட்டி, தான் இறுக்கமாய் பிடித்திருப்பதை உணர்த்தினான் அழகர். அவன் தன் இடையில் தந்த அழுத்ததில், பேச்சற்று அவள் நிற்க, விடாமல் சடசடவெனக் கொட்டிய தண்ணீர் அவளை பயமுறுத்த,

 

“போதும்..! நான் ரூமில் போய் குளிச்சுக்கிறேன். எனக்கு பயமா இருக்கு!” அவனை விட்டு விலகி கீழே இறங்க முயன்றவள், பாறையில் கால் வைக்க, தான் வழுக்கியதோடு, அழகரையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கீழ விழப்போனாள்.

 

தான் காலை, இறுக ஊன்றி, அவளைத் தன்னோடு சேர்த்து, விழாதவாறு செய்தவன்,

 

“பைத்தியக்காரி! ரெண்டு பேரும் சேர்ந்து விழ வேண்டியது தான்.” எனத் திட்டவும், ஒற்றை வார்த்தைக்கே முகம் சுருக்கினாள் பெண்.

“ப.. பயமா இருக்கு மாமா!” அவள் குரலில் தெரிந்த நடுக்கத்தில் அவள் நிலை உணர்ந்தவன்,

 

“சரி.. ரூமுக்குப் போகலாம் டி! வெளியில் சிங்கப் பெண் மாதிரி பேசுறது. அருவியில் குளிக்க தைரியம் இல்லை! நீயெல்லாம் வெறும் வாய் மட்டும் தான்டி!” என திட்டிக் கொண்டே அவளை வெளியே அழைத்து வந்தான்.

 

“போ அழகரு! எம்புட்டு பயமா இருதுச்சு தெரியுமா? பார்க்க வெறும் தண்ணிதான். பாறாங்கல்லு மாதிரி மோதுது! ஆத்தி! பயந்துட்டேன்.!” என்றவளின் இதழ்கள் குளிரில் நடுங்கியது. நடுங்கிய அவள் மெல்லிதழ்களை மென்மையாய் பெருவிரல் கொண்டு வருடினான் அவன். முகத்தில் துளித் துளியாய் நீர்த்திவலைகள் விரவியிருக்க, நடைந்த உடையுடன், நீரில் நனைந்த சிற்பமாய் அவள் நின்றிருந்த தோற்றம், அவனுக்கு கிறக்கமூட்டியது.

 

“ஏன்டி இம்புட்டு அழகா இருந்து என்னைக் கொல்றே?” கரகரப்பைச் சுமந்து வந்தது அவன் குரல்.

 

“அழகரு..!” நடுங்கிய உதடுகள் மென்மையாய் உச்சரிக்க, அவளின் ஒவ்வொரு செயலிலும், கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பொறுமையும் நிதானமும் காற்றோடு காற்றாய் கரைந்துக் கொண்டிருந்தது.

 

“சோதிக்கிறடி என்னை! அந்தப் பக்கம்தேன் அறை இருந்துச்சு துணியை மாத்திட்டு வா! கிளம்புவோம்!”

 

“நீ துணி மாத்திக்கலையா அழகரு?”

 

“எனக்கு குளிரலை டி! நீ வெரசா மாத்திட்டு வா!” அவளை அவசரப்படுத்தியவன் அவள் உடைமாற்றி வந்ததும் அறைக்கு அழைத்துப் போனான்.

 

அறைக்கு வந்து கதவைத் திறந்தது மட்டும் தான் கருவிழியின் நினைவில் இருந்தது, கதவைத் தாழ் போட்டு விட்டு அவள் நகர்ந்த நொடி, அழகரின் இறுகிய அணைப்பிற்குள் தான் இருந்தாள்.

 

“உன் ட்ரெஸ் ஈரமா இருக்கு அழகரு..! தள்ளி நில்லு!” துள்ளி விலகியவளை, இழுத்து தன்னோடு இறுக்கமாய் அணைத்தவன், குளிரில் நடுங்கிய, அவள் இதழ்களில் முத்தம் பதித்தான்.

 

” இனி ட்ரெஸ் தேவைப்படாது டி கரு கரு..!” காதோரம் மோதிய அவன் குரலும் வெப்ப மூச்சுக்காற்றும், அவள் அடிவயிற்றுக்குள் ஒரு குட்டி பூகம்பத்தையே நிகழ்த்திக் கொண்டிருந்தது.

“ப.. ப.. பயமா இருக்கு அழகரு..!”

 

“திக்காமல் பேசுடி கரு கரு விட்டுடுறேன்!” அவள் இதழ்களை தன் உதடுகளால் உரசியபடியே பேசினான் அழகர். அவன் கரங்களோ, பெண்ணவளை வீணையாய் மீட்டத் துவங்கியிருந்தது.

 

அழ..கரு..! இன்னொரு நாள் பா..ர்த்துக்கலாமே..!”

 

“எனக்கு பொறுமை இல்லைடி! என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி ஆள் மயக்கி! இப்போ இந்த நிமிஷம் நீ எனக்கு வேணும்!” நெற்றி, கண், மூக்கு என குட்டிக் குட்டியாய் முத்தம் வைத்தான் அவன். அவன் செய்கைகளில் கண் மூடி, கிறங்கி மயங்கி நின்றவளின் கரம், பிடிமானத்திற்காய் அவள் தோள்களை இறுகப் பற்றியது. கணக்கில்லா முத்தங்களால் அவளைக் குளிப்பாட்டியவன், அவள் இதழோடு இதழ் சேர்க்க நெருங்கியவன், நூலளவு இடைவெளில் நிறுத்தி நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

 

அதே நேரம் கண்களைத் திறந்து தன்னவனைப் பார்த்தாள் கருவிழி. கண்கள் நான்கும் கவ்விக் கொள்ள, இனம் புரியா உணர்வு இருவருள்ளும். கண்களோடு கண்கள் நோக்கி, தன் நுனி விரலால் எம்பி நின்றவள், இரு கரங்களால் அவன் முகம் தாங்கி, அவன் வன்மையான உதடுகளில் தன் மெல்லிதழ்களைப் பொருத்தியிருந்தாள்.

 

மனையாளின் செயலில் அகமகிழ்ந்து, அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தபடியே கட்டிலில் சரிந்திருந்தான் அழகர். அவன் மார்புச் சட்டையை இறுக்கமாய்ப் பற்றியபடி, அவன் கரம் செய்த மாயத்தில் கிறங்கி, மயங்கி அவன் மார்போடு புதைந்தவளின், இதழ் வரிகளில், இருவரிக் கவிதைகள் எக்கச்சக்கமாய் படைத்து, அவள் மூச்சுக்கு ஏங்கித் தவிக்கும் நேரம் இடைவெளி விட்டு மீண்டும் இதழ்களில் புதைந்தான் அவன்.
அவளோடு கனவுகளில் கற்பனையாய் வாழ்ந்த நாட்கள் கண் முன்னே வந்து போக, அவள் கைவிரல் நுனிகளில் முத்தம் வைத்து, விரலோடு விரல் கோர்த்து, அவளை பித்தம் கொள்ள வைத்தான் அவன்.

 

அவள் உடல் தழுவிய ஆடைகளுக்கு விடுதலை தந்து, தானே அவள் ஆடையாய் மாறி, அவள் பயம் களைந்து, அவளின் அகம் சேர்ந்தான் அவன். அவள் பயம் கொண்டு புலம்பிய புலம்பல்கள், விரைவிலேயே முனகலாய் மாறிப் போக, புன்னகையுடன் அவள் பிறை நெற்றியில் முத்தம் வைத்து அவள் நெஞ்சுக் குழியில் சரிந்தான் அழகர். அழகான ஆலிங்கனம் அரங்கேறி முடிந்த பின்னும், கண்கள் திறக்காது கிறங்கிக் கிடந்தவளின், கன்னக் கதுப்பில் மீசையால் குறுகுறுப்பூட்டினான் அவன்.

 

உடலும் மனமும் மீண்டும் மீண்டும் அவள் வேண்டுமென அடம் பிடித்துத் தொலைத்தது.

 

‘சின்னப் பொண்ணு, ரொம்பவும் படுத்தினால் பயந்துடுவா!’ என அவன் மனம் அளுக்காய் பரிந்து வந்தது.

 

“என்னடி வேணாம் வேணாம்ன்னு சொன்னே? கண்ணைக் கூடத் திறக்க மாட்டேங்கிற?”

 

“போ அழகரு! எனக்கு ட்ரெஸ் வேணும்! நீ தள்ளிப் போ! நான் கண்ணைத் திறக்க மாட்டேன்.!” நாணம் கொண்டு விழி திறக்க மறுத்தவளைப் புரிந்துக் கொண்டு, அவளை விட்டு விலகி, போர்வைக் கொண்டு அவளை மூடியவன், தன் இடையில் துண்டைக் கட்டிக் கொண்டு, அவளை கரங்களில் அள்ளிக் கொண்டு போய் குளியலறையில் நிறுத்தினான்.

 

“பொறுமையாய் குளிச்சுட்டு வா! துணி வேணும்ன்னா கேளுடி எடுத்துத் தர்ரேன்!” என்றபடியே அவளுக்கான இடைவெளியைக் கொடுத்து விலகியிருந்தான்.
ஷவரைத் திறந்துவிட்டு வெதுவெதுப்பான நீரின் கீழ் நின்றவளுக்கு, சற்று முன் நடந்த அத்தனையும் கனவு போல் இருந்தது.

 

கன்னங்கள் சிவக்க, தனக்குத் தானே சிரித்துக் கொண்டவள், குளித்து முடிக்கவுமே, கதவைத் தட்டி, அவளுக்குத் தேவையான ஆடைகளை எடுத்துக் கொடுத்தான்.

 

அவள் குளித்து உடை மாற்றி வெளியே வரவும்,

 

“சாப்பாடு சொல்லிருக்கேன் டி! வந்ததும் சாப்பிடு! நான் குளிச்சுட்டு வர்ரேன்!”
என அவன் சொன்னதும், அவன் முகம் பார்க்காமல் தலையசைத்தாள் அவள்.

 

ஆலிவ் பச்சை நிற இரவு உடையில், கையில்லாத மேலாடையும், முட்டி வரையுமான நைட் பேண்ட்டும் அணிந்திருந்தாள்.அவன் பார்வை அவளை இரசனையாய் மொய்ப்பதை உணர்ந்துக் கொண்டவள், மெத்திருக்கையில் கிடந்த மேகவர்ண துப்பட்டாவை தன்மேல் போட்டுக் கொண்டு, தயக்கமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இடையில் வெறும் டவலுடன் நின்றவனைப் பார்க்க அவளுக்கு தயக்கமாய் இருந்தது.

“நீ போய் குளிச்சுட்டு வா அழகரு..! சாப்பாடு வந்தால் நான் பார்த்துக்கிறேன்.!” என அவள் சொன்னதும், புன்னகையுடனே குளியலறைக்குள் நுழைந்தான் அவன். அழகர் நகர்ந்ததும் தான் அவளால் மூச்சு விடவே முடிந்தது. கணவன் என்ற உரிமையுணர்வு இருந்தாலும், அவனிடம் இப்போதெல்லாம் ரொம்பவே தயக்கமாய் இருந்தது. ஆனாலும் பூவைப் போல், அவன் தன்னை மென்மையாய் கையாண்ட விதம் அவளுக்குப் பிடித்திருந்தது.

 

அப்போது தான் ‘உணவு ஆர்டர் செய்திருக்கிறேன்!’ என அவன் சொன்னது நினைவிற்கு வர,

 

“அதுக்குள்ளே சாப்பாடா? ஆறு மணிக்கு தானே இங்கண வந்தோம்!” என யோசித்தபடியே திரைச் சீலைகளை அகற்ற, இருள் ஆட்சி செய்திருந்த இரவுப் பொழுதில், நட்சத்திரங்கள் மட்டும் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டிருந்தன.

 

“ஆத்தி! எட்டு மணி ஆகிடுச்சா.? நேரம் போனதே தெரியலை!” என அவள் முனகிக் கொண்டிருந்த நேரம், அழைப்புமணி ஒலிக்கவும்,

 

“அதுக்குள்ளே சாப்பாடு வந்துடுச்சா?” என சத்தமாய் முனகியவள் கதவைத் திறந்தாள்.
உள்ளே குளித்துக் கொண்டிருந்த அழகருக்கும் அழைப்புமணியின் ஓசை கேட்டது.

“ஏய் கரு கரு! சாப்பாடு வந்துடுச்சா டி!”

 

“நீ சாப்பிடு! நான் வர்ரேன்!”
அந்தப்பக்கமிருந்து எந்த சத்தமும் வராததில் ஏதோ உறுத்தினாலும், அவள் விளையாடுகிறாள் என்றெண்ணியவன், உணவு தான் வந்திருக்கும் என, நிதானமாய் குளித்துவிட்டு வெளியே வர, அங்கே கருவிழியைக் காணவில்லை.

 

“இவ எங்கிட்டு போனாள்? என்னைப் பார்க்க சங்கடப் பட்டுக்கிட்டு வெளியே நிக்கிறாளோ?” என முணுமுணுத்தவன், அவசரமாய் உடை மாற்றிவிட்டு கதவை நோக்கிச் செல்ல, மீண்டும் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.

 

அவசரமாய் கதவைத் திறந்தவனின் பார்வையில், கையில் உணவுடன், அந்த விடுதியின் ஊழியர் வந்து நிற்கவும் அதிர்ந்து தான் போனான் துடிவேல் அழகர்.

 

“சாப்பாடு இப்போதான் வருது! அப்போ இதுக்கு முன்னே அழைப்பு மணி அடிச்சுதே?” என முணுமுணுத்தவன்,

 

“இதற்கு முன்னாடி நீங்க ஃபுட் எடுத்துட்டு வரலையா?” எனக் கேட்டான்.

 

“இல்லையே சார்.! நான் இப்போ தான் வர்ரேன். யுவர் ஃபுட் சார். குட் நைட் சார்.! தேங்க் யூ சார்!” என்ற அந்த ஊழியர், உணவை அழகரின் கரத்தினில் தந்து விட்டு சென்றிருக்க, உணவை பக்கத்திலிருந்த மேஜையின் மீது வைத்தவன், பதற்றத்துடன் கருவிழியைத் தேடத் துவங்கினான்.

 

“ஏய்! கரு கரு எங்கேடி இருக்கே?”

 

“இது விளையாடுற நேரம் இல்லைடி! இராத்திரி நேரத்தில் என்ன விளையாட்டு டி இது?”

 

“கருவிழி! எங்கே இருக்கே டி?” அந்த அறை முழுதும் தேடி அலசியவன், வெளியிலும், தேடிப் பார்த்தான். எங்கே தேடியும் அவள் இருப்பதற்கான சுவடே தெரியாமல் போக, தன் உயிரே தன்னை விட்டுச் செல்வதைப் போல் ஓருணர்வு அவன் மனதை ஆட்கொண்டது.

 

“எங்கேடி போய்த் தொலைஞ்ச கிறுக்கச்சி.? என்னை இப்படி பைத்தியக்காரன் மாதிரி புலம்ப வைக்கணும்ன்னு எத்தனை நாள் ஆசை உனக்கு? நான் கனா கண்ட வாழ்க்கை என் கைக்கு வந்துடுச்சுன்னு நினைச்சேன்.. கண் மூடித் திறக்கறதுக்குள்ளே காணாமல் போய்ட்டியே டி!” எனத் தன்னைப் போல் புலம்பியவன், அந்த சொகுசுப் போக்கிடத்தின், வரவேற்பிற்குச் சென்றவன், அங்கிருந்த மேலாளரிடம், தன் மனைவியைப் பற்றி விசாரித்தான்.

 

“சார்! உங்க வொஃய்ப் இங்கே வரலை! ஒருவேளை வழி மாறி, பக்கத்தில் இருக்கிற காட்டுப் பகுதிக்குள் போயிருக்கலாம் சார். இதுக்குத்தான் இருட்டின பிறகு வெளியே வராதீங்கன்னு சொல்றோம்! எங்கே கேட்குறீங்க? போலீசுக்கு இன்ஃபார்ம் பண்றேன் சார்! பட், பக்கத்தில் இருக்கிற ஃபாரஸ்ட் ஏரியாக்குள்ளே போயிருந்தால், கண்டு பிடிக்கிறது கஷ்டம் தான். ஏன்னா அது ரிஸர்வ்டு ஃபார்ஸ்ட் சார். விலங்குகள் நடமாடுற நேரம்!” என அந்த மேலாளர் சொல்லவும் பக்கென்று ஆகிவிட்டது அழகருக்கு.

 

இனி இவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என அவனுக்குத் தெரிந்து போனது. அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. தெரியாத ஊரில் எங்கே சென்று தேடுவதென்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஏனோ கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தான் குளித்துக் கொண்டு இருக்கும் போது, அழைப்பு மணியின் ஓசை கேட்டது அவன் நினைவிற்கு வந்தது.

 

“சார்! ஃபுட் வர்ரதுக்கு முன்னாடி எங்க அறைப்பக்கம் யார் வந்தாங்கன்னு தெரியணும். சி.சி.டி.வி யில் பார்த்து சொல்ல முடியுமா?”

“என்ன சார் விளையாடுறீங்களா? ப்ரைவஸிக்காக நாங்க சி.சி.டி.வி ஃபிக்ஸ் பண்ணுறது இல்லை! வர்ரவங்க முக்கால்வாசி பேர் ஹனிமூன் கப்புள்ஸ் தான். அவங்களுக்கு இடைஞ்சலாய் இருக்கும்ன்னு நாங்க ஃபிக்ஸ் பண்ணுறதில்லை சார்.!”
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

 

கண்கள் கலங்கியது அவனுக்கு. எங்கே என்ன கஷ்டப் படுகிறாளோ? நெஞ்சம் விம்மித் தவித்தது. தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி படுத்திருந்தவள், இப்போது இல்லை என்பதை உணரவே அவனுக்கு நிமிடங்கள் தேவைப்பட்டது. அவளைச் சுற்றியிருக்கும் ஆபத்து தெரிந்தும், எச்சரிக்கையோடு இல்லாமல் இருந்துவிட்டேனே? என தன்னைத் தானே நொந்துக் கொண்டான் அவன்.

 

அந்த ரெஸார்ட் அமைந்திருக்கும் இடம் முழுதும் சுற்றிப் பார்த்தான். எங்கும் அவள் இருப்பதற்கான அடையாளம் தெரியவே இல்லை. வெறும் டீ-ஷர்ட்டும், ஜீன்ஸுமாய் நின்றிருந்தவனின் மேனியைத் தாக்கிய குளிரைக் கூட அவன் உணரவில்லை. சுற்றி சுற்றி தேடிப்பார்த்துவிட்டு, எங்கே செல்வதெனத் தெரியாமல் ஓரிடத்தில் நின்றான்.

 

நேரம் செல்ல செல்ல, அவன் மனதை பயம் இறுகக் கவ்விப் பிடித்தது. தன்னவளுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ? என்ற ஒற்றைக் கேள்வி அவன் உயிர் நடுங்கச் செய்தது.

 

“எங்கே தான்டி போன? எனக்கு நீ வேணும்டி என் ஆயுசுக்கும் வேணும் டி கிறுக்கச்சி!”

 

கண்கள் கலங்கியது. கண்ணீர் அவன் கன்னம் தீண்டி நனைத்தது. அவசரத்தில் யோசிக்க மறந்த மனதை ஒருநிலைப் படுத்த முயன்று தோற்றான் அவன். நீண்ட பெருமூச்செடுத்து ஆசுவாசப்படுத்தி, விழிகளை மூடித் திறந்து, தன் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

 

தெளிவாய் தீர்க்கமாய் சாத்தியக் கூறுகளை யோசித்தான். மலைமேல் பரந்து விரிந்திருக்கும் இந்தக் காட்டுக்குள் தனியே செல்ல முடியாது என யோசித்தான். ஆனால் தனியே செல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும், அவளுக்கு ஆபத்து என்பது அவனுக்குப் புரிந்தது.

 

‘உள்ளே செல்ல வழிகள் ஏதேனும் இருக்கிறதா?’ என சுற்றிலும் அலசியது அவன் கூர்விழிகள். அவன் நின்றிருந்த இடத்திற்கு சில அடிகள் தள்ளி ஏதோ மின்னுவதை அவன் கண்கள் கண்டுபிடித்தது.

 

அவசரமாய் அருகே சென்று என்னவென்று பார்த்தான். அந்த நிலவொளியில் மின்னிய அந்தப் பொருள், கருவிழியின் கொலுசு. அவன் வாங்கிக் கொடுத்த தங்கக் கொலுசு. உயிர் போய் உயிர் வந்தது அழகருக்கு. பக்கத்திலேயே ஒற்றையடிப் பாதையை விட, சற்று பெரிய பாதையைக் கண்டான் அவன். அந்தப் பாதையில் வாகனம் செல்வதற்கான அடையாளம் தெரிய, அத்துவானக்காட்டில் காட்டில் கண் தெரியாமல் நின்றவனுக்கு, துளி வெளிச்சமாய்த் தெரிந்தது அந்தப் பாதை. கையில் கிடைத்த அவளின் கொலுசு அவளே தன் கையில் கிடைத்ததைப் போன்ற ஓருணர்வை தந்தது.

 

அந்தக் காட்டிற்கு அவளைத் தேடி நுழையப் போனவன், சட்டென நிதானித்து நொடி நேரம் யோசித்தான். யோசனையின் முடிவில், தன் உயிரைக் கொடுத்தாவது அவளை மீட்டாக வேண்டுமென்ற தீர்க்கமான முடிவை எடுத்தவன், அந்த கோரமான இருளில் ஒற்றை டார்ச் விளக்கின் துணையோடு அந்தக் காட்டிற்குள் நுழைந்தான் துடிவேல் அழகர்.

 

காற்று கூட தன் இயக்கத்தை மறந்து, நிசப்தம் சுமந்திருந்த அந்த கானகத்திற்குள், சருகுகள் மிதிபட அவன் நுழைந்த தருணம், இங்கே நடக்கப் போகும் விபரீதங்கள் ஏதும் அறியாது, மௌன சாட்சியாய் நின்றது அந்த அடர்வனம்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆபத்து இருக்கிறதென்று தெரிந்தும் எச்சரிக்கையாக இல்லாமல் போய்விட்டான்.

    விழியிடம் உண்மையை கூறியிருந்தாலுமே அவளுக்கு பயம் தான் அதிகமாகி இருக்குமே தவிர அவள் சுதாரிப்பாக இருந்திருக்க வாய்பில்லை தான்.

    Privacy என்றாலும் பாதுகாப்பிற்காக தொலைவான சில இடங்களிலாவது கண்காணிப்பு கருவி பொருத்தி இருக்க வேண்டும்.

    யாருக்கும் தெரிவிக்காமல் இவன் மட்டும் அந்த காட்டுப்பகுதிக்குள் செல்கின்றானா?