
அகம்-47
மறுநாள் விடியலிலேயே பூம்பாறைக்கு செல்வதற்காய் கிளம்பியிருந்தனர்.
மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவிலுள்ள பூம்பாறைக்குச் செல்ல, கிட்டத்தட்ட நான்கு மணிநேரங்கள் ஆகும், என்பதால் விடியலிலேயே கிளம்பியிருந்தனர். பூம்பாறையில் வீரபத்ரன் பதிவு செய்திருந்த உல்லாசப் போக்கிடம் (resort) வந்து சேர்வதற்கே காலை மணி பத்தைக் கடந்திருந்தது.
“அழகரு! பசிக்குது!”
“இப்போத்தான் வந்து இறங்கியிருக்கோம்! அதுக்குள்ளே பசிச்சுருச்சாடி? ரூம்க்கு போய் செக்-இன் பண்ணிட்டு எதாவது சாப்பிடுவோம்!” என்றவன், தங்களுக்கு சுற்றிப் பார்க்க உதவப் போகும் Guide எனப்படும் உதவியாளருக்கு அழைத்துப் பேசிவிட்டு, வரவேற்பில் சாவியை வாங்கிக் கொண்டு, மரங்களின் நடுவே நீண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் மனைவியோடு நடந்தான். காலை பத்து மணிக்குக் கூட, இன்னும் பனி விலகாது புகை மூட்டமாய் இருந்தது.
லேசான மழைத் தூறலோடு, ஏதோ பெயர் தெரியாத மூலிகையின் வாசம் காற்றில் கலந்து வர, இரம்மியமான சூழ்நிலையாய் இருந்தது.
“என்ன மாமா நடந்துட்டே இருக்கே? ரூமுக்கே இன்னும் எம்புட்டு தூரம் நடக்கணும்?”
“எனக்கென்னடி தெரியும்? இங்கே புக் பண்ணினானே உன் கொழுந்தன் அவன் கிட்டே போய் கேளு!”
“அழகரு! இங்கிருந்து எட்டிப் பாரு! பயமா இருக்கு!” ஒற்றையடிப் பாதையின் சரிவில் பக்கவாட்டில் இறங்கிய பள்ளத்தைப் பார்த்து அவளுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.
“பயப்படாதே டி கரு கரு! அவங்கதேன் தடுப்பு போட்டுருக்காங்களே? பிறகு ஏன் பயப்படுற?” என்றபடியே அவர்கள் பேசிக் கொண்டே வர, அங்காங்கே இக்ளூ வடிவில் முட்டை முட்டையாய் தெரிந்தது.
“இது என்ன அழகரு, முட்டை முட்டையா தெரியுது?”
“இதில் தான் நாம தங்கப் போறோம்ன்னு நினைக்கிறேன். நானும் இதுக்கு முன்னே பார்த்ததில்லை. ஆனால் கேள்வி பட்டிருக்கிறேன். இது தான் நம்ம அறைன்னு நினைக்கிறேன்.!” சாவியில் தொங்கிக் கொண்டிருந்த எண்ணை சரிபார்த்துக் கொண்டே, படிகளில் ஏறி மரக்கதவைத் திறந்தான்.
லக்ஸ்க்ளாம்ப்(Luxeglamp) எனப்படும் ஆடம்பரமான தங்கும் குடில். இது இக்ளு வடிவில் அமைந்திருக்கும். ஒரு பக்கம் முழுதும் வெளியே பார்ப்பதற்கு வசதியாய் கண்ணாடியாய் அமைக்கப்பட்டிருக்கும். நீர்க்குமிழிக்குள் ஓர் அறை இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். பெரும்பாலும் தரையிலிருந்து சற்று உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும்.
“அழகா இருக்குல்ல?” கதவைத் திறந்ததும், சிலாகித்து சொன்னபடி உள்ளே நுழைந்தாள் கருவிழி.
அங்கே போடப்பட்டிருந்த பெரிய கிங் சைஸ் மெத்தையில் “வெல்கம்” என மலர்களால் ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. உள்ளேயே குளியலறை வசதியும் இருந்தது.ஒரு புறம் மெத்திருக்கைகள் போடப்பட்டிருக்க ரொம்பவே அழகாய் இருந்தது அந்த அறை.
கூடவே குட்டி குளிர்சாதனப் பெட்டி, (refrigerator) காஃபி தாயாரிக்க கெட்டில், காபி மற்றும் தேநீர் தயாரிக்க தேவையான பொருட்களும் இருந்தது.
அறையின் ஒருபகுதியை முழுதும் மறைத்தாற் போல் போடப்பட்டிருந்த, திரைச்சீலையை அழகர் விலக்க, மலை மீது மேகம் தவழ்ந்து செல்லும் காட்சி அத்தனை அழகாக இருந்தது.
இங்கிருந்தே மலைச்சரிவில் அடுக்கடுக்காய் தெரிந்த பாசன வயல்களைப் பார்க்க முடிந்தது.
“இங்கிருந்து பார்க்க எவ்வளோ அழகா இருக்குல்ல அழகரு?” திரை விலக்கப்பட்டதும் தெரிந்த கண்ணாடிச் சுவரின் அருகே நின்று, கண்களை விரித்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் கருவிழி.
“உன்னை விட எனக்கு எதுவும் அழகா தெரியலை டி கரு கரு!” அவளோடு தோளுரச நின்றவன் சொல்ல, அவன் நெருக்கத்தில் மூச்சடைத்தது அவளுக்கு.
“வெளியே போய் பார்க்கலாமா?” அவனை விட்டு விலகி கதவைத் திறந்துக் கொண்டு, வெளியே சென்றவள், மரத்தாலேயே அமைக்கப்பட்டிருந்த பால்கனியில், ஓரமாய் போடப்பட்டிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்தாள். வெளியே அமர்ந்து இரசிப்பதற்கு வசதியாய் கூடை நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கமோ, திறந்த வெளியில் குளியல் தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. பால்கனியை ஒட்டினாற் போல் வலையிலான தூங்கும் மஞ்சம் (Hammock) அமைக்கப்பட்டிருந்தது.
“இது எதுக்கு அழகரு? திறந்த வெளியில் எப்படி தூங்க முடியும்?” அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வலையிலான தூங்கும் மஞ்சத்தைப் பார்த்து வினவினாள் அவள்.
“மத்தவங்க தூங்குவாங்களான்னு எனக்குத் தெரியாது.. நாம வானத்தைப் பார்த்துட்டே இராத்திரி கதை பேசலாம்!”
“ஆத்தி! இங்கணையா? கீழே பார்க்க பயமா இருக்கு!”
“நான் இருக்கேனே டி, உன்னையெல்லாம் அப்படி விட்டுட மாட்டேன்!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களை கொடைக்கானல் முழுதும் சுற்றிக் காட்ட உதவி செய்யும் உதவியாளர் வந்திருந்தார்.
“வெல்கம் சார்! வெல்கம் டூ லக்ஸ் க்ளாம்ப்! மார்னிங் ப்ரேக் ஃபாஸ்ட் வந்துடும் சார். சாப்பிட்டு எங்கே போகணும்ன்னு சொன்னீங்கன்னா கிளம்பிடலாம்.! ட்ரான்ஸ்போர்ட், கைட் எல்லாம் நாங்களே அரேஞ்ச் பண்ணிடுவோம் சார்.!”
“தேங்க் யூ சார்! என் வொய்ஃப் பூம்பாறை முருகன் கோயிலுக்குப் போகத்தான் ஆசைப்பட்டாங்க! முதலில் அங்கே போகலாம்!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காலை உணவு வந்தது.
“ஷ்யூர் சார்! சாப்பிட்டு கீழே வந்து கால் பண்ணுங்க! ட்ரைவர் காரோட வெய்ட் பண்ணுவாங்க! நீங்க வோன் (Own) வெகிக்கிள் எடுக்க வேணாம் சார்!” பணிவாக சொல்லிவிட்டு அந்த ஊழியர் சென்றுவிட,
“என்ன அழகரு, வெறும் பாலும் பழமும் தான் சாப்பாடா? நாலு முந்திரியும் பாதாமும் வச்சிருக்காங்க! நெய் தோசை எல்லாம் கிடைக்காதா?” தட்டில் மூடி வைத்திருந்த உணவு வகைகளைப் பார்த்து வினவினாள் அவள்.
“பொழுதன்னைக்கும் நெய் தோசை தானே சாப்பிடுற? ஒருநாள் இதுவும் சாப்பிடலாம் சாப்பிடு!” அவளை உண்ண வைத்து தானும் உண்டவன், அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கிப் போனான்.
அவன் கரம் பிடித்தபடியே, வந்த வழியே ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து, சற்று தூரத்தில் நின்றிருந்த வாகனத்தில் ஏறி கோவிலை நோக்கிப் பயணித்தனர்.
*******
கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இங்கு நாம் செல்ல முருகப் பெருமான் நினைத்தால் மட்டும்தான் போகவே முடியும்.
இந்த தேதியில், இந்த நேரத்தில் வர வேண்டும் என்பது அவன் விருப்பம். மிகவும் சக்திவாய்ந்த நவபாஷாண முருகர்.
இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வென்கலம், கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே போகர் எனும் சித்தரால் நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. ஒன்று பழநி மலை. இன்னொன்று பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்.
முருகன் குழந்தை உருவம் கொண்டு, அருணகிரிநாதர் மீது ஏறி விளையாடி, இராட்சசியிடமிருந்து அவரைக் காப்பாற்றியதால், குழந்தை வேலர் என அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராய் அருள்பாலிக்கிறார்.
வாகனத்திலிருந்து இறங்கி, மீண்டும் ஒற்றையடிப் பாதையில் மேலே ஏறி, போகிற வழியில் இருந்த மகாலெட்சுமி கோயிலையும் தரிசித்துவிட்டு.. குழந்தை வேலப்பரைப் பார்க்கச் சென்றனர். கோயிலின் வாசலை மிதித்ததுமே நேர்மறையான அதிர்வலைகளை உணர முடிந்தது.அன்று இவர்களின் நல்ல நேரமோ என்னவோ, விஷேஷம் காரணமாக கோயில் நடை திறந்திருந்தது.
குழந்தை முருகனின் திருவுருவத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டுமென்று தோன்றியது இருவருக்கும். கருவிழியின் மனதிற்குள்ளோ, குழந்தை முருகனை மடியில் அள்ளி வைத்துக் கொஞ்ச வேண்டுமென்று தோன்றியது.
அத்தனை அழகு.. எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்றதொரு தோற்றம். குழந்தை முருகனையும், பக்கத்திலேயே இருந்த அருணகிரி நாதரையும் வணங்கிவிட்டு, பிரகாரத்தைச் சுற்றிவிட்டு அமைதியாக அமைர்ந்திருந்தனர். மனம் ஏனோ எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது.
இளநீல நிற காட்டன் புடவையில் தன்னருகே அமர்ந்து பிரசாதத்தை உண்டுக் கொண்டிருந்தவளை நேசத்தோடு பார்த்தான் துடிவேல் அழகர். இவளின் புன்னகை வாடாமல் காலம் முழுதும் கண்ணுக்குள் வைத்து தாங்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது.
“அழகரு! இந்த திணைமாவும் தேனும் எம்புட்டு டேஸ்ட்டா இருக்கு? முருகனை ஏன் அழகன்னு சொல்றாங்கன்னு இப்போ தான் தெரியுது! எவ்ளோ அழகு இல்லை? நாள் முச்சூடும் கண்ணெடுக்காமல் பார்த்துட்டே இருக்கலாம் போல! நம்ம கல்யாணத்திற்குப் பிறகு வந்த முதல் கோயில். அடிக்கடி இங்க வரணும் அழகரு!”
“நானும் அழகன் தான்டி கரு கரு! நீ இங்கே வரணும்ன்னா இந்த அழகரோட, அந்த அழகன் முருகனும் மனசு வைக்கணும்.! குறிஞ்சி நிலத்தின் தலைவனா மலைமேல முருகன். இந்த மண்ணை மிதிச்சதும் எல்லாமே நல்லதுக்குன்னு தோணுது. மனசு நிறைஞ்சு இருக்குடி!” உளமார உணர்ந்து தான் சொன்னான் அவன்.
“இதுக்குத்தேன் பொண்டாட்டி சொல்லைக் கேட்கணும்ன்னு சொல்றது! நீ தான் வர மாட்டேன்னு சொன்னியே.. நான்தேன் வம்படியா பிடிச்சு இழுத்துட்டு வந்திருக்கேன். இங்கே வராமல் இருந்திருந்தால், முருகனைப் பார்க்காமல் மிஸ் பண்ணிருப்போம்!” அவன் கண்பார்த்துச் சொன்னாள் கருவிழி.
“கேட்டுட்டா போச்சு! அதே மாதிரி பொண்டாட்டியும் புருஷன் பேச்சைக் கேட்கணுமாம்!” கண்சிமிட்டி அவன் சிரிக்க,
“போ அழகரு!” மென்கரங்களால் அவள் அடிக்க, இருவரும் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருப்பதை, அங்கே சூழ்ந்திருந்த பனி மூட்டத்தின் நடுவிலிருந்து இரு கண்கள் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் தங்களை யாரோ உற்று நோக்கும் உணர்வில் சுற்றத்தை ஆராயத் துவங்கினான் துடிவேல் அழகர்.
“எஸ் சார்! நம்ம ரெஸாட்டில் தான் தங்கியிருக்காங்க!”
“மூணுநாள் ஸ்டே பண்ணுறதுக்கு புக் பண்ணியிருக்காங்க சார்!”
“எஸ் சார்! நம்ம ஆட்களை கூட இருந்து கண்காணிக்க சொல்லியிருக்கேன்!”
“ஓகே சார்! ஓகே..!” அந்தப் பக்கம் என்ன கேள்வி கேட்கப்பட்டதோ தெரியாது, பதில் மட்டும் கருவிழியையும், அழகரையும் பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
அதே நேரம், அழகர் எதேச்சையாய் திரும்ப, தங்களையே பார்த்துக் கொண்டு நின்றவனை ஒருநொடியில் கவனித்த அழகர், விறுவிறுவென எழுந்து அவனை நோக்கி சென்றிருந்தான்.
“அழகரு! எங்கே போற? அழகரு!” பின்னாலேயே விழி ஓடிவர,
“யோவ்! யார் நீ? உனக்கு என்ன வேணும்? உன்னை ரெண்டு மூணு முறை பார்த்துட்டேன். என் எங்களையே சுத்தி வர்ர?” அந்த நபர் சுதாரிப்பதற்குள் சட்டையைப் பிடித்திருந்தான் அழகர்.
அழகர் எப்போதுமே இப்படி அவசரப்படுபவனோ, உணர்ச்சிவசப்படுபவனோ இல்லை. ஆனால் ஏதோவொன்று தவறாகப் படவும், யோசிக்காமல் சட்டென சட்டையைப் பிடித்துவிட்டான்.
“சார்! சார்.. நான் ஃபோட்டோக்ராஃபர் சார்! அழகான ஜோடியா இருக்கீங்களே.. ஃபோட்டோ எடுக்கப்பீங்களான்னு கேட்க வந்தேன் சார். வயிற்றுப் பிழைப்பு சார்! தப்பா எடுத்துக்காதீங்க!”
என்ற அந்த நபர் கையெடுத்துக் கும்பிட, அவன் சட்டையோடு சேர்த்து அவனையும் உதறியவன், விழியின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
ஆனால், இங்கே நடந்த அத்தனை சம்பாஷணைகளையும் அந்த நபரின் அலைபேசி வழியே ரோஹன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அழகர் அறிந்திருக்கவில்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


குழந்தை வேலப்பர் கோவில் விளக்கம் அருமை. 👌🏼💛
பொழுதனைக்கும் நெய் தோசை வேணுமா விழி உனக்கு?
ஆபத்து அவனுக்கு தான் என்பதனால் துணிந்து இறங்கிவிட்டான் அழகர். இதுவே விழிக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தால் விழிப்பாய் இருந்திருப்பான்.
வரும் முன்னர் என்னவகையான ஏற்பாட்டினை செய்திருப்பான்?🤔
அவன் இல்லை என்றால் அவள் நிச்சயம் உயிர்ப்புடன் இருக்க மாட்டாள் என்பதனை மறந்து போய்விட்டானோ.