Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 37

 

அவளைப் பற்றி அவன் நினைவுகள் வலம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொள்பவனுக்கு இரவுகள் மீது கோபமாய் வரும்.

 

ஓயாது சலசலக்கும் நீருற்றாய் அவள் நினைவுகளை அவனுள் ஓட விட்டு வேடிக்கை பார்ப்பதாய் நினைத்துக் கொள்வான்.

 

அன்று ஒரு முறை முன்பு வசித்த வீட்டுக்குச் சென்று வர,தற்செயலாய் அங்கிருந்த கோயிலுக்குச் சென்றிருந்தான்,மன நிம்மதிக்கு.ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருக்கும் கோயில் என்பதால் பெரிதாய் ஆட்களும் வருவதில்லை,அங்கு.

 

இரு கரம் கூப்பி முகத்தில் உணர்வை காட்டாது அவன் வேண்டிக் கொண்டிருந்தாலும் வழமைக்கு மாறாய் ஆர்ப்பரித்த உணர்வலைகள் அவன் சோதித்துக் கொண்டிருந்தன.

 

மனம் ஒரு நிலையில் இல்லை.இதயம் படபடக்க ஒரு வித இம்சையான உணர்வு,வலியா சுகமா என்று பிரித்தறிய முடியாததாய்.

 

விபூதியை வாங்கி நெற்றியில் வைத்துக் கொண்டவனுக்கு மனம் சற்றே அமைதியடைவது போல் இருக்க ஓரமாய் ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் அருகே சென்றவனை பின் தொடர்ந்தான்,சத்யா.

 

மரத்தின் கிளைகள் தாழ்ந்து பரவியிருக்க அதை பிடித்து ஆட்டியவனாய் எங்கோ பார்வையை அலைய விட்டபடி நின்றிருந்தவனின்,உயிர் தீண்டிச்சென்றது பின்னிருந்த வந்த குரலொன்று.

 

அந்த குரலைக் கேட்டதுமே ஒரு கணம் பையனின் தேகம் ஆட்டம் கண்டது.பிரம்மையோ என அவன் நினைக்க “மித்ரா இரு வர்ரேன்..” மீண்டும் அவள் குரல்.

பையனின் இதயத் துடிப்பு நின்றே விட்டது.

 

படபடத்து போனான்.

பரிதவித்து நின்றான்.

பதறித் தவித்து துடித்தான்.

பதட்டம் மறைக்க முயன்று தோற்றான்.

 

அவள் தான்.

அவளே தான்.

அவன் ஜீவனில் ஜீவித்து நிற்கும் அவளே தான்.

 

கிளையைப் பற்றியிருந்த கரம் அப்படியே நின்றிட

ஆடிப் போய் விட்டான்,ஆறடி ஆண்மகன்.அகல ஊன்றியிருந்த பாதங்கள் மெல்லத் தொய்ந்தது.உடல் வெடவெடக்க எடுத்திருந்த உறுதி மொத்தமும் தகர்ந்து போக அசராதவனை முற்றாய் தளர்த்திப் போட்டிருந்தது,செவியில் நுழைந்து இதயத்தை ஊடுருவிய அவன் உயிரானவளின் குரல்.

 

இன்னுமின்னுமே கிளையை இறுகப் பற்றியவனுக்கோ சத்தியமாய் முடியவில்லை.உடல் விறைக்க சிலையாய் உறைந்து விட்டிருந்தவனின் இதயம் மட்டும் உச்ச அதிர்வெண்ணில் துடித்துக் கொண்டிருந்தது.

 

அவளை மட்டுமே சுமந்து

நின்றிருக்கும் இதயம்…

அவளுக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் இதயம்…

அவள் குரல் கேட்கையில் எம்பிக்குதிக்கத் தானே செய்யும்..?

 

விழிகளை இறுகப் பொத்தி அழுத்தமான இதழ்கள் பிளக்க மூச்சுக்கு தவிப்பவன் போல் சுவாசித்துக் கொண்டிருந்தவனின் ஆழ் கடல் மனதில் மென் நீரலையாய் அடங்கியிருந்த இருந்த உணர்வுகள் ஆழிப்பேரைலயாய் எழுந்து உயிரைக் உருக்கிக் கொண்டிருந்தது.உருக்கிய உயிரை விட்டு வைக்காமல் குடித்துக் கொண்டிருந்தது.

 

மறந்ததாய் அவன் நினைத்திருக்க, இத்தனை நாள் புதைந்திருந்த அவளுக்கான காதல் பூகம்பமென வெடித்துச் சிதறி அவனை வேரோடு சாய்த்திருக்க பையன் அவனாய் இல்லை.

 

இத்தனை நாள் இல்லாது உணர்வுகளின் பேரலை.

ஆடவனின் மனதுக்குள்ளோ காதலின் புயல்மழை.

பையனின் இதயமது, இப்போதும் அவன் இசைக்கென துடித்தது.

 

காணாத நொடியெல்லாம் அவளை எதிர் கொள்ள தேக்கி வைத்திருந்த தைரியம் மொத்தமும் அவள் குரலைக் கேட்டவுடனேயே கரைந்து போயிற்று.

 

முடியவில்லை.அதற்கு மேலும் முடியவில்லை அவனால்.தொண்டை வரண்டு போக எச்சில் விழுங்கிக் கொண்டவனின் முகம் முழுக்க வியர்த்திருக்க துடைக்கக் கூட மறந்தவனாய்,அவன்.

 

“இதோ வந்துட்டேன்..” மீண்டும் அவளின் குரல் தான்.அவனிருக்கும் இடத்தில் இருந்து பத்தடி தள்ளி முதுகு காட்டி நின்றிருந்தவளுக்கு அவ(ள்)ன் ஜீவன் உறை(ந்து)ய நின்றிருப்பது தெரிய வாய்ப்பில்லை.

 

விழிகளை இன்னுமே இறுகப் பொத்தி கைகளை இறுக்கிக் கொண்டு அசையாது உள்ளங்கை வியர்க்க நின்றவனின் மனதில் அவளையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லை.இதயம் இன்னும் பல மடங்கு துரிதமாய் துடித்தது.

 

விழிகளோ அவளைப் பார்க்கச் சொல்லி கட்டளையிட மனமோ மறுப்பு சொன்னது.

இருக்கும் நினைவுகளையே மறக்க முடியாது செத்துக் கொண்டிருப்பவனுக்கு இன்னும் ஒன்று சேர்ந்து கொண்டால் கூட அதன் கனமே ஆயுளை மென்று தின்று விடும்;

ஏற்கனவே பாதி ஜீவனுடன் திரிபவனை கொன்று புதைத்து விடும்.

 

அங்குமிங்கும் அசையும் கருமணிகளை சுமந்த மூடிய விழிகளுக்குள் கண்ணீர் திரண்டிருக்க இதழ்களில் பதட்டத்தை மீறி சிறு புன்னகை.

“மாட்டேன்”என முரண்டு பிடிக்கும் சிறு குழந்தையாய் அவனின் தோற்றம்.

 

அவளின் பாதச்சத்தங்கள் விலகுவது புரிய அவள் பின்னே ஓட முயன்ற மனதை இழுத்துப் பிடிக்க முயன்றவனுக்கு அத்தனை எளிதாய் இருக்கவில்லை.

 

அவன் மேல் காதல் கொண்டனால்,அவளில் காதல் கண்டவனால் அவளுக்காக தன் காதலை கொன்று கொண்டிருப்பவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

 

பின்னே அடியெடுத்து வைத்து பெருமரத் தண்டில் சாய்ந்து நின்றவனோ,ஒற்றைக் கையால் விழிகளை மூடிக் கொண்டு மறு கரத்தால் இதயத்தை அழுத்தமாய் நீவி விட்டான்.

 

“ஈஸி ஈஸி ஆர்யா..ரிலாக்ஸ்..ஒன்னுல்ல..ஒன்னுல்ல..” மூச்சு வாங்கிய படி இதழ்கள் உச்சரித்தாலும் அவளுக்காக துடிக்கும் இதயம் இயல்பாகவில்லை.

 

அவளை காதலிப்பது தெரியும்.அவனை விட அவளைக் காதலிப்பதும் தெரியும்.அவள் குரலால் உயிர்த்துடிக்கும் அளவு காதலிப்பது அப்போது தான் புரிந்தது,பையனுக்கு.

 

இரு வருடங்களின் பின் தீண்டிய குரல் அவன் மூச்சை நிறுத்தி விடும் போல் இருக்க இன்னும் கொஞ்ச நேரம் தாண்டியிருந்தால் மூர்ச்சையாகி போயிருப்பான்,பையன்.

 

இத்தனை நேரம் பையனைத் தான் விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்,சத்யா.

 

என்ன மனிதன் இவன்..?

நினைக்காமல் இருக்க முடியவில்லை,அவனால்.

 

அதிலும் அவன் காதல்.

நினைக்கும் போதே தேகம் சிலிர்த்தது.ஒருவனால் இத்தனை காதலிக்க முடியுமா என்று அவன் எண்ணும் போதெல்லாம் பையனின் மீது இன்னும் மதிப்பு கூடத் தான் செய்கிறது.

 

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.கொஞ்சமாய் இயல்பு மீண்டு விழி திறக்க அந்த விழிகளில் ஜீவனே இல்லை.மொத்தமாய் தளர்ந்து போயிருந்தவனோ தலை தாழ்த்திய படி நடந்து சென்று காரில் ஏறிக் கண் மூடி சாய்ந்து விட்டான்.

 

அவன் நிலை புரிந்த சத்யாவும் எதுவும் கேட்கவில்லை.

கண் கூடாகக் கண்டவனுக்கு கருத்துக் கேட்க முடியவில்லை.

 

வீட்டுக்கு வந்தவன் எப்படி அறைக்குள் நுழைந்தான் என்று அவனுக்கே தெரியாது.

கதவை அடைத்துக் கொண்டு அப்படியே கை கால்களை குறுக்கிக் கொண்டு கருவறைகயில் இருக்கும் குழந்தை போல் தரையிலேயே படுத்து விட்டான்.

 

அன்று அவளை காண முடியாதா என்கின்ற ஏக்கம்.இன்று அவளை கண்டிடக் கூடாது என்கின்ற கலக்கம்.

தோளில் முகம் பதித்து சாய்ந்திருந்தவனின் விழியில் இருந்து வழிந்த ஒற்றைத் துளிக் கண்ணீர் சட்டைக் கையை நனைக்க அப்படியே தூங்கிப் போனான்.

 

உறக்கத்தில் ஏதோ அவளைப் பற்றி கனவு கண்டிருப்பான் போலும்.

மென்மையாய் இதழ்கள் முறுவலித்து மொழிந்தன, “இசை” என்று.

 

அன்று அவள் குரல் கேட்டும் தரிசனத்தை தவிர்த்து விட்டு வந்தாலும்,அவளின் திருமணச் செய்தி அவனின் செவியை எட்டாதது அவனுக்கு ஏனோ உறுத்தல்.

 

தன்னால் தானோ,என்கின்ற எண்ணம் உலாவர அது வேறு அவனின் நிம்மதியைத் தின்றது.

 

அதன் பின்னரே தெரிய வந்தது,அவள் தன்னை இன்னும் தேடுவது.அதிதி தான் ஒருமுறை சந்திக்கையில் அவனிடம் கூறியிருக்க,சத்தியமாய் அதிர்ந்து விட்டான்,அந்த செய்தியில்.

 

அந்த நொடி அவனுக்கு புரிந்தது,அவள் தன்னை காதலிப்பது.காதலின்றி இத்தனை தூரம்,தேட மாட்டாள் என்று புரிய,அவனுக்குள் அப்பட்டமான குற்றவுணர்ச்சி.

 

தான் அவசரப்பட்டு தன் விருப்பத்தை சொல்லி அவளை திருமணம் செய்யக் கேட்டதை எண்ணி பலமுறை தன்னை நொந்து கொண்டவனுக்கு,அதை சரி செய்யும் வழியும் தெரியவில்லை.

 

தன்னை காணாது இருந்தால்,மறந்திடக் கூடும் என்று அவன் நினைத்திருக்க,அதை பொய்யாக்கியது,அவள் தன்னை தேடி வந்ததாய் அவனை சென்றடைந்த செய்தி.

 

அவர்களின் வீட்டைப் பராமறிக்கும் பையன் கூறிட,அதன் பின்னரே நிலமையின் தீவிரம் தெரிந்தது.அவனே எப்படியோ அவளுக்கு தன் இருப்பிடத்தை தெரியப்படுத்தி,நாடகாமடி நம்ப வைத்து அவளின் திருமணம் வரை கொண்டு சென்று விட்டிருக்க,இனி என்னவாகுமோ..?

 

கதவு தட்டப்படும் சத்ததில் கலைந்தவனோ,வெளியில் வர அவருக்காக காத்துக் கொண்டிருந்தார்,வேல்முருகன்.

 

“என்னப்பா..?” என்க,அவனை இழுத்து அமர வைத்து அவர் உணவூட்டி விட,அவன் விழிகளில் அதே நெகிழ்வு.கூடவே,தான் விட்டுச் சென்றால் அவரின் நிலையை நினைக்கையிலேயே உள்ளம் கலங்கியது.

 

அவனுக்கென்று இருப்பது அவர்.அவருக்கென்று இருப்பது அவர்.அதில் யாரேனும் ஒருவர் தனித்து விடப்டட்டால் வாழ்க்கை நரகம் தான்.

 

இரவு நேரம்,

 

படுக்கையை உதறி சரி செய்தவாறு இருந்த வேல் முருகனின் பின்னே வந்து அணைத்துக் கொண்டான்,பையன்.

 

தோழன் பேசி விட்டுச் சென்றது,அவனை போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

 

“என்ன அப்பு என்ன யோசன..?”கொஞ்சம் தலை திருப்பி அவனின் தலையை வருடியவாறு கேட்க,மறுப்பாய் தலையசைத்தவனை விலக்கி முன்புறமாக இறுக அணைத்துக் கொண்டார்,மனிதர்.

 

“என்னாச்சு என் அப்புக்கு..?” அவனின் கன்னம் பிடித்த செல்லம் கொஞ்ச,அவனை இயல்பாக்கவே இந்த முயற்சி என்று புரியாமல் இல்லை,பையனுக்கு.

 

“நா தப்பு பண்றேனாப்பா..?” விழிகள் அலைபாய தவிப்புடன் கேட்டவனின் காதோரமாய் பக்கச்சிரை முகர்ந்தார்,அவர்.

 

முன்பிருந்தே அப்படித் தான் முத்தமிடுவார் அவனை.அலைக்கழிப்புக்களின் போது பையனுக்கு அது இனம் புரியா ஆறுதலை தந்திடும்.

 

“சொல்லுப்பா..”

 

“என் அப்பு தப்பு பண்ண மாட்டான் எப்பவும்..” அவரின் வார்த்தைகள் அவனுக்கு பெருத்த ஆறுதலாய்.

 

வழமை போல் பையன் அவன் அறைக்குச் செல்லப் போக,என்ன தோன்றியதோ பேசாமல் அவரின் மடியில் படுத்து விட,அவரோ மெதுவாய் அவனின் சிகை கோதி விட,உறக்கம் சுழற்றியது,மாத்திரைகளின் வீரியத்தில்.

 

“அப்பு தைரியமா இருக்கனும்..இப்டி இருக்க கூடாது டா..எதுக்கும் கலங்கக் கூடாது சரியா..”

 

“நீ இருக்குறப்போ நா எதுக்குப்பா அப்சட் ஆவேன்..”

 

“நா இல்லாதப்போவும் தைரியமா இருக்கனும் அப்பு..” அவரின் வார்த்தைகளை கேட்க,பையன் விழித்திருக்கவில்லை.

 

மாத்திரைகளின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்குள் விழுந்திருக்க,சில நொடி தாமதித்து அவர் உதிர்த்த வார்த்தைகள் அவன் செவியை சென்று சேரவில்லை.

 

இமை மூடி குழந்தை போல் உறங்குபவனை பார்த்திருந்தவரின் விழிகள் கனிந்திட,அவனை நினைக்கையில் கண்ணீரும் கட்டியது.

 

துளிக்கண்ணீர் அவனின் சிகையில் விழ,கலங்கிய விழிகளுடன் உச்சி முகர்ந்தவரின் மனமோ,பையனின் நல்வாழ்வுக்காக கடவுளிடம் வேண்டுதல் வைத்து,அன்றிரவு முழுவதும்.

 

விடியும் தருவாயில் உறக்கத்தை தழுவி இருந்தார் மனிதர்,பையனைப் பற்றி நினைத்துக் கொண்டே.

 

மெல்லிய வெளிச்சக் கீற்று அறையில் பரவிட,விழிகளை திறந்த பையனுக்கு அப்போது தான் இரவு முழுவதும் தாயுமானவரின் மடியில் படுத்து இருந்ததே உரைத்தது.

 

“கால்வலிச்சாலும் சொல்ல மாட்டாரே..”முணகிக் கொண்டே எழுந்தவனோ அவரைப் பார்த்திட,ஏதேதோ வித்தியாசங்கள்.

 

மார்புக்கூடு ஏறி இறங்கவில்லை..

மூச்சுக்காற்றின் சத்தம் இல்லை..

தோட்டிட தேகச் சூட்டின் வெம்மை இல்லை..

தேகம் சில்லிட்டுப் போக,உண்மை உரைத்தாலும் அதை புத்தி ஏற்க வேண்டுமே.

 

“ப்பா..” கண்ணீர் கட்டிய விழிகளுடன் அவரின் நெஞ்சில் சாய்ந்து இதயத் துடிப்பை கேட்க முனைந்தான்.ம்ஹும்..முடியவில்லை.

 

முகம் முழுவதும் வியர்வையில் குளித்திட,இன்னுமே நெஞ்சோடு அழுத்தி தன் காதை வைத்து துடிக்கும் இதயத்தின் ஓசையை செவிமடுக்க முயன்றான்.

 

அழுத்தி அழுத்தி,அவரை நெஞ்சோடு இறுக்கி,என்னவெல்லாம் செய்தாலும்,இதயம் துடிப்பின் ஓசை மட்டும் அவன் செவியை தொடவே இல்லை.

 

இதயம் துடிக்கவில்லை என்கின்ற உண்மையை சித்தம் உணரத் தவறிட,அவனை மீறி துளிக் கண்ணீர் வழிந்து நனைத்தது,அவர் நெஞ்சை..

ஏறி இறங்காத அவரின் நெஞ்சை..

 

அவர் உயிர் பிரிந்திருக்க,அதனுடன் சேர்ந்து பையனின் ஜீவனும் தொலைந்திருந்தது.

 

காதல் தேடும்.

 

2025.04.30

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆர்யாவுக்கு இவ்வளவு கஷ்டம் வரக்கூடாது. அடுத்து 🥺🥺🥺