
அத்தியாயம் 121
சில நாள்கள் கடந்த பின்னர் ஒரு அழகான அதிகாலை வேளை, “கடவுளே ஏன்டா இப்படி என்னை பாடாப் படுத்துறீங்க. வேட்டி கட்டிவிடச் சொன்னது ஒரு குத்தமா.” கத்தி அந்த அறையை இரண்டாக்கிக் கொண்டிருந்தான் அரசு.
“வாயை மூடு, வாய்க்குள்ள கொசு போயிடப் போகுது. வேட்டி கட்டுறது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயம் னு நினைச்சிட்டியா.” என்றான் நாகா.
“அதானே இடுப்பில் கை வைச்சாலே கூச்சமா இருக்குன்னு கையைத் தட்டிவிடுற. அப்புறம் எப்படித்தான் வேட்டி கட்டி விட முடியும்.” என்றான் தெய்வா.
“பேசாம அறிவை வரச் சொல்லி இருக்கணும். நாம வந்ததால் தான் இந்தக் கத்து கத்துறான்.” என்று கிண்டல் செய்தான் செல்வா.
“டேய் யப்பா உங்களை ஹெல்புக்கு கூப்பிட்டு எனக்கு நானே பிரச்சனையைத் தேடிக்கிட்டேன் போல. என்னை விட்டுடுங்க. எப்பாடு பட்டாவது நானே காட்டிக்கிறேன்.” வேட்டியைப் பிடித்துக்கொண்டே சொன்னான் அரசு.
“அப்படி நீயா கட்டிக்கிட்டு வரதுக்குள்ள முகூர்த்த நேரம் முடிஞ்சிடும் பரவாயில்லையா?” சிரிப்புடன் கேட்டான் செல்வா.
“பசங்களா இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க. அங்க மாப்பிள்ளையை கூட்டிட்டு வரச் சொல்றாங்கா.” என்றவாறு அறைக்குள் வந்தார் வடிவேலு.
“அங்கிள் உங்க பசங்களை தயவுசெஞ்சு இங்க இருந்து கூட்டிட்டு போங்க. வேட்டி கட்டிவிடுறேன்னு ரொம்ப நேரமா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்க.” வீட்டுப் பெரியவரிடம் சரணடைந்தான் அரசு.
“செல்வா என்ன விளையாட்டு இதெல்லாம். உங்களுக்கே வேட்டிகட்டத் தெரியாது. எப்பவும் நான் தான் கட்டி விடுவேன். இன்னைக்கு காலையில் கூட நான் தான் கட்டிவிட்டேன். அப்புறம் எதுக்காக அவனைப் போட்டு பாடாப்படுத்திக்கிட்டு இருக்கீங்க.” வடிவேலு கேட்க, “அடப்பாவிகளா அடிப்படையே தெரியாம தான் எனக்கு உதவி பண்ண வந்தீங்களா?” பொங்கிவிட்டான் அரசு.
“எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குப்பா. இதுக்கு முன்னாடி வந்த விஷேஷங்களில் எல்லாம் எங்களை நீங்க வேஷ்டி கட்ட சொல்லும் போது, நாங்க இவன்கிட்ட ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி வாங்கிட்டு வர சொன்னா, அதெல்லாம் முடியாது இது தான் நம்ம பாரம்பரியம் அது இதுன்னு வாய்கிழிய பேசி எங்களை பழிவாங்கினான். அதுக்காக சின்னதா நாங்களும் பழிவாங்க நினைச்சோம். அவ்வளவு தான்.” தோள்களைக் குலுக்கியபடி சொன்னான் தர்மா.
“ஏன்டா இப்படி” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அரசு கேட்க, “எங்களை சேர்த்து வைச்சதுக்கான பலனை நீ அனுபவிக்கணும் தானே. இதுக்கே இப்படின்னா இன்னும் பின்னாடி பலது வரிசையில் இருக்கு.” என்று சிரித்தான் தெய்வா.
“என்ன பசங்களோ நீங்க.” வடிவேலு சிரிக்க, “இது தான் நம்ம வீட்டில் நடக்கப் போற கடைசி கல்யாணம். இதுக்கு அப்புறம் எங்களுக்கு பசங்க பிறந்து, வளர்ந்து அவங்களோட கல்யாணத்தை தான் பார்க்கணும். அப்ப இந்த மாதிரி எல்லாம் பண்ணா நல்லா இருக்காது. வரப்போற மாப்பிள்ளைங்க சிரிப்பாங்க. அதனால் தான் இப்பவே பண்ணிக்கிறோம்.” என்றான் நாகா.
“சரி சரி நீங்க போய் வந்தவங்களை உபசரிக்கிற வேலையைப் பாருங்க. நான் அரசுவை ரெடி பண்ணி கூட்டிகிட்டு வரேன்.” என்றபடி அந்த நாள் நாயகன் அருகே வந்தார் வடிவேலு.
வேஷ்டியை சரியாகக் கட்டி விட்டு திருமண மாலையை அவன் கழுத்தில் போட்டு சற்று தள்ளி நின்று அவனை அழகு பார்த்தார்.
“ஜமீன் வீட்டு வாரிசு மாதிரி இருக்கடா. அப்படி ஒரு இராஜகளை உன்கிட்ட இருக்கு. நீ எந்த கவலையும் இல்லாம நூறு வருஷம் சந்தோசமா வாழனும்.” என்று அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் வடிவேலு.
அரசுவின் கண்கள் கலங்கியது. இடைப்பட்ட நாள்களில் அவன் எத்தனை முயன்றும் கம்பெனி பொறுப்பில் இருந்து விலகுவதற்கு அவனை விடவில்லை ராஜ் சகோதரர்கள். “எங்க அப்பாவுக்கு நாங்க பசங்க மட்டும் தான். ஆனா நீ தான் அவரோட சம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காப்பாத்தப் போற வாரிசு. மரியாதையா அவர் சொன்னதைக் கேட்டு நடந்துக்கோ. இல்லன்னா கெட்ட கோபம் வரும்.” என்று மூத்தவனாய் செல்வா மிரட்ட, மற்றவர்களும் அதையே தான் சொன்னார்கள். ஆனாலும் அரசு தயங்கிக்கொண்டே தான் இருந்தான்.
இவர்களுக்கு ஏன் தன்மேல் இத்தனை பாசம் என்று நினைத்து சின்னதாய் தேம்பினான் அரசு. “என்னடா கண்ணா நல்லநாள் அதுவுமா கண் கலங்கிக்கிட்டு. அப்பா, அம்மா ஞாபகம் வந்திடுச்சா.” வடிவேலு இதைக் கேட்டவுடன் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டான் அரசு.
“எனக்கு நல்லாத் தெரியும். உன்னால அவங்களை மறக்க முடியாது. நான் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும், அவங்க தானே உன்னோட அப்பா, அம்மா. அவங்களோட இடத்தை என்னால எப்படி நிரப்ப முடியும்.” சின்ன குரலில் சொன்னார் வடிவேலு.
“லூசு மாதிரி பேசாதீங்க. இன்னொரு தடவை இப்படிப் பேசினீங்க எனக்குக் கெட்ட கோவம் வரும் ஆமா.” பொங்கிவிட்டான் அரசு.
“சரிடாப்பா நான் எதுவும் பேசல. இப்ப கண்ணைத் துடைச்சிக்கிட்டு மணமேடையில் வந்து உட்காரு. யாராவது உன்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் கல்யாணம் பிடிக்காமல் நீ அழுகிறன்னு தப்பா நினைச்சுக்கப் போறாங்க.” சொல்லி சிரித்தார் வடிவேலு.
அரசு மணமேடையை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தவன் திரும்பி நின்று, “அங்கிள் எனக்கு அப்பா ஸ்தானத்தில் நீங்க இருந்து தாலி எடுத்துக் கொடுக்கிறீங்களா?” ஏக்கமாய் கேட்டான்.
“ராஸ்கல், அப்ப இவ்வளவு நேரமா என் உரிமையை யாருக்கு கொடுக்கலாம் னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தியா? கொன்னுடுவேன் படவா.
என் பையனுக்கு என் இடத்திலிருந்து ஆசிர்வாதம் பண்ணக் கூடிய கொம்பன் இந்த ஊருக்குள்ள யாரு டா இருக்கா?” வேட்டியை மடித்துக்கொண்டு சவடால் காட்டினார் வடிவேலு.
“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.” என்று ஓடிவந்து அவருடைய கன்னத்தில் முத்தமிட்டான் அரசு.
“டேய் இதை அந்தப் பொண்ணுக்கு கொடுத்தாவது ஏதாவது ஒரு பிரயோஜனம்.” வடிவேலு சொல்ல, “போங்க அங்கிள்”என்று வெட்கப்பட்டுக்கொண்டு மணமேடையை நோக்கி நடந்தான் அரசு.
அரக்கு வண்ண பட்டுப்புடவையில் தேவதை போல், இராதா இல்ல பெண்களின் அரவணைப்போடு வந்த அறிவு மணமேடையில் அமர, ராஜ் சகோதரர்களின் ஆர்ப்பரிப்பு மற்றும் வடிவேலுவின் ஆனந்தக் கண்ணீர் நடுவே சீரும் சிறப்புமாக அரசுவின் திருமணம் இனிதாய் நடந்தேறியது.
திருமணம் முடிந்த கையோடு சம்பிராதயங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, மிச்ச வேலையை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என ராஜ் சகோதரர்கள் வசம் வேலையை ஒப்படைத்த அரசு கையோடு மனைவியைத் தேனிலவு அழைத்துச் சென்றுவிட்டான்.
“டேய் இந்த அரசுவை நான் என்னமோன்னு நினைச்சேன். சரியான கேடிடா அவன். கல்யாணம் முடிஞ்ச உடனே பொண்டாட்டியை நைஸா தள்ளிகிட்டு போயிட்டான் பார்த்தியா?” தெய்வா சிரிக்க,
“கல்யாணத்தை கிராண்டா பண்ண வேண்டாம். சிம்பிளா ஒரு ஐம்பது பேரை மட்டும் கூப்பிட்டு, நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு மண்டபத்திலே பண்ணிக்கலாம் னு அவன் சொல்லும் போது, ஏன் இவன் இப்படி எல்லாம் பண்றான்னு யோசிச்சேன்.
இப்ப தானே அவனோட நோக்கம் என்னன்னு முழுசாப் புரியுது. பிரம்ம முகூர்த்தத்தில் கல்யாணம் முடியவும், பேருக்கு மண்டபத்தில் கொஞ்ச நேரம் இருந்துட்டு, நாலு போட்டோஸ் எடுத்துட்டு, வீட்டுக்கு வந்துட்டான். இப்ப பாரு மணி சாயங்காலம் நாலு கூட ஆகல பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு கிளம்பிட்டான்.” சிரித்தான் நாகா.
“பின்ன அவன் வேற என்னடா பண்ணுவான். உங்களால் நான் பட்ட பாட்டை பக்கத்திலிருந்து பார்த்தான் இல்ல. அதுக்கப்புறமும் இங்கேயே இருக்க அவனுக்கு எப்படி தைரியம் வரும்.” நொந்து போய் பதில் வந்தது செல்வாவிடம் இருந்து. இதைக் கேட்டு மற்ற மூவரும் சிரிக்க, செல்வா மேலும் காண்டானான்.
வந்திருந்த சொந்தபந்தங்கள், அலுவலக நண்பர்கள் எல்லாம் சொல்லிவிட்டு கிளம்பி இருக்க இராதா இல்லத்திற்குள் இரு குடும்பங்கள் மட்டுமே மிஞ்சி இருந்தது.
பெண்கள் நால்வரும் வேலையை முடித்து விட்டு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று அவரவர் அறைக்குச் சென்று விட, ஆண்கள் நால்வரும் விளையாடலாம் என்று தோட்டத்திற்குச் சென்றனர்.
அறிவின் அம்மா அவருடைய கணவருக்கு கண் ஜாடை காட்ட அவர் மெதுவாக வடிவேலுவிடம் பேச்சை ஆரம்பித்தார் அவர்.
“சம்பந்தி நாங்க சொன்னபடி எங்க பொண்ணை முழு மனசோட உங்க வீட்டுப் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திட்டோம். ஆனால் நீங்க இன்னும் சொன்ன வாக்கை காப்பாத்தலையே.” தயக்கமாய் கேட்டார்.
“என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி. இதை உங்க கிட்ட முன்னாடியே சொல்ல நினைச்சேன். ஆனா அரசு என்னைச் சொல்ல விடாமல் தடுத்திட்டான். அவனுக்கு அந்த கம்பெனியை அவனோட பெயரில் எழுதி வைக்கிறதில் சுத்தமா விருப்பமில்லை. எந்த இடத்தில் இருந்தாலும் அவனோட சொந்த சம்பாத்தியத்தில் வாழ ஆசைப்படுகிறான்.” வடிவேலு தயக்கமாய் சொல்லி முடித்தவுடன், எங்கிருந்து வந்ததோ அறிவுடைய அப்பாவிற்கு அவ்வளவு கோபம்.
“எனக்குத் தெரியும் நீங்க கடைசியில் இப்படித்தான் சொல்லுவீங்கன்னு.” ஆத்திரமாகவே ஆரம்பித்தார்.
“இங்க பாருங்க உங்க சைடு இருக்கிற நியாயம் எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது. கல்யாணம் அன்னைக்கு எங்க அத்தனை பேரோட பரிசுன்னு சொல்லி அரசுவை கன்வின்ஸ் பண்ணி ரெஜிஸ்ட்ரேஷன் சைன் வாங்க நினைச்சோம்.
ஆனா அரசுவுக்கு இந்த உண்மை எப்படி தெரிய வந்ததுன்னு எனக்குத் தெரியல. அவன் காரியத்தைக் கெடுத்துட்டான். எங்க வீட்டில் இருக்கிற எல்லாரும் இதை அவன்கிட்ட இருந்து மறைச்சு தான் வைச்சிருந்தோம்.” என்றார் வடிவேலு.
“ஓகோ நீங்க மறைச்ச விஷயத்தை நாங்க சொல்லிட்டோம். அதனால் கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாதுன்னு சொல்ல வரீங்களா?” என்ற அறிவு அம்மாவின் கோபத்தில் சற்றே தன் கோபத்தை குறைத்த வடிவேலு,
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க. அரசுவோட பெயரில் எழுதி வைக்கிறதுக்கு அரசு ஒத்துக்கணும் இல்ல. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. அரசுவுக்கு நாங்க எழுதிக் கொடுக்கிறதா இருந்த நிர்வாகத்தை அறிவு பேருக்கு எழுதி தரோம். எப்படிப் பார்த்தாலும் இனி அரசு அறிவு இரண்டு பேருமே ஒன்னு தானே.” என்றார்.
“நீங்க யாருங்க எங்க பொண்ணுக்கு சொத்து எழுதி தருவதற்கு. எங்க பொண்ணு ஒன்னும் ஒன்னு இல்லாதவ கிடையாது.” என்றார் அறிவின் அம்மா.
“இல்ல சம்பந்தியம்மா நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. இந்த நேரத்தில் நான் எது பேசினாலும் உங்களுக்குத் தப்பா தான் தோணும். கொஞ்ச நாள் போகட்டும் எதுவாயிருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம்.” பிரச்சனையை ஆறப்போட்டால் மட்டும் தான் இது சரியாகும் என நினைத்து வடிவேலு சொல்ல அது இன்னமும் தான் கோபத்தைக் கிளப்பியது அவர்களுக்கு.
“சபாஷ் நல்லா இருக்கு சார் உங்க திட்டம். கொடுக்கிறதா சொல்லிட்டு இப்ப கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாம அப்புறமா கொடுக்கிறேன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. உங்களைச் சொல்லி என்ன ஆகப் போகுது. என் புத்திய செருப்பால அடிக்கணும். எவனாவது வீட்டில் வேலைக்காரனா வளர்ந்த ஒருத்தனுக்கு தன்னோட சொத்தை எழுதிக் கொடுப்பாரான்னு அப்பவே என் ப்ரண்ட்ஸ் கேட்டாங்க.
நான் தான், அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அந்த பையன் அந்த வீட்டில் ஒருத்தனா தான் இப்ப வரைக்கும் இருக்காருன்னு சொன்னேன். அது தப்புன்னு என் மூஞ்சில் கரியைப் பூசிட்டீங்க. சந்தோஷம் ரொம்ப சந்தோஷம்.” வடிவேலுவைப் பார்த்து கத்தி முடித்தவர், மனைவி பக்கம் திரும்பி,
“ஏய் என்னடி இன்னும் உட்காந்துகிட்டு இருக்க. எழுந்திரிடி, கடைசியில் ஒன்னுக்கும் உதவாத சொத்து பத்து ஏதுமில்லாத ஒரு பிச்சைக்காரனை தான் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்கோம்.
இந்தக் கல்யாணம் வேண்டாம் னு அவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னேன். ஆத்தாளும், மகளும் கேட்டீங்களா என் பேச்சை. நீ வேண்ணா பாரு, காலம் முழுக்க நாம தான் அந்த அநாதைக்கு கஞ்சி உத்தப் போறோம்.” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கண்டபடி பேசினார் அறிவின் அப்பா.
அந்த வார்த்தைகள் இத்தனை நாள்களாக உள்ளுக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டிருந்த அழுத்தத்தை வெளியே கொண்டு வந்துவிட, தன் முன்னிருந்த மேஜையில் இருந்த அழகு ஜாடி ஒன்றைத் தூக்கிப் போட்டு உடைத்தார் வடிவேலு.
அதில் சம்பந்திகள் இருவரும் அதிர்ந்து நிற்க, “இங்க பாருங்க. எப்ப யார்கிட்ட பேசினாலும் என்ன பேசுறோம், யாரைப் பத்தி பேசுறோம் னு தெரிஞ்சு பேசுங்க.
உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா என் முன்னாடி இருந்துகிட்டே அரசுவை அநாதைன்னு சொல்லுவீங்க. அவன் யாருன்னு தெரியுமா?
அரசு என்னோட சொந்த பையன். இந்த வீட்டோட கடைக்குட்டி, செல்ல பையன். அவன் பிறந்தப்ப, ரொம்ப கடுமையான சோகமான காலம். சில தனிப்பட்ட காரணத்துக்காக அவனை நான் என்னோட ப்ரண்டுக்கு தத்து கொடுக்க வேண்டிய நிலைமை. தத்து கொடுத்துட்டா அவன் எனக்கு பையன் இல்லையா என்ன?” உணர்ச்சி வேகத்தில் பேசி முடித்த பின்னரே தான் என்ன சொன்னோம் என்பது வடிவேலுவின் மூளையைச் சென்றடைந்தது.
ஒரு சில நொடி கோபத்தில் அத்தனை வருடமாகக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருந்த உண்மையை உடைத்து விட்டிருந்தார் அவர்.
“இங்க பாருங்க சம்பந்தி, ஒரு வேகத்தில் சொன்னாலும், நான் சொன்னது எல்லாம் உண்மை தான். இதைத் தெரிஞ்சுக்க வேண்டிய உரிமை உங்களுக்கு இருக்கு. ஆனா நான் உங்களைக் கெஞ்சி கேட்டுக்கிறேன். இந்த உண்மையை எந்தக் காரணத்துக்காகவும் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் அரசுகிட்ட சொல்லிடாதீங்க.
உங்களுக்கு என்ன உங்க பொண்ணு நிம்மதியா சந்தோஷமா, செல்வாக்கோட வாழனும் அவ்வளவு தானே. அப்படி ஒரு வாழ்க்கையை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு.
ஆனா தயவுசெஞ்சு இந்த உண்மையை அரசுவில் ஆரம்பிச்சு என்னோட எந்த பசங்ககிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் காரணம் இல்லாம இத்தனை நாளா இதை மறைச்சு வைக்கல.” உடைந்து போய் சொன்னார் வடிவேலு.
இனி தங்கள் பெண்ணிற்கு தாங்கள் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று நம்பிக்கை முழுமனதாக வந்து விட எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் அறிவின் பெற்றோர்.
வடிவேலு தன்னை நிதானப் படுத்திக் கொள்ள முயன்ற வேளையில் தான் அங்கே ஒரு ஓரமாக நின்றிருந்த தர்மாவை கண்டார்.
“தர்மா” என்று அவர் ஏதோ சொல்ல வர, அவருக்குப் பதில் சொல்வதை விட்டு விட்டு வேகமாக தோட்டத்தை நோக்கி ஓடியவன் மூச்சிறைப்பதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், தனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த தன்னுடைய சகோதரர்களிடம், தங்களின் இன்னொரு சகோதரனைப் பற்றி சொல்லி, அவர்களையும் அழைத்துக் கொண்டு வடிவேலு இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
“என்னப்பா தர்மா என்னன்னமோ சொல்றான். அதெல்லாம் உண்மையா? அரசு எங்க தம்பியா, எங்க கூடப்பிறந்தவனா? அது உண்மைன்னா எதுக்காக இத்தனை வருஷம் எங்ககிட்ட இந்த உண்மை மறைச்சீங்க.” கோபம் கலந்த வருத்தமாய் கேட்டான் செல்வா. அவனில் ஆரம்பித்து மற்ற அனைவருக்குமே அரசு அவர்களின் சகோதரன் என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சொல்ல முடியாத அளவு சந்தோஷம் தான். ஆனால் தங்களுடன் செல்வாக்கான வாழ்வு வாழ வேண்டியவன் உடமைப்பட்ட இடத்தில் வேலைக்காரனைப் போல் வாழ்ந்திருக்கிறானே என்னும் ஆதங்கத்தில் தான் தந்தையை நிற்க வைத்துக் கேள்வி எழுப்பினர்.
“இதுக்கு மேல உங்ககிட்ட இருந்து உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்.” என்று பெருமூச்சுவிட்ட வடிவேலு நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.
“என்னோட நண்பன் பேரு காமராஜ், அவனோட மனைவி பொற்கொடி. அவங்களுக்கு ரொம்ப வருஷமா குழந்தையே இல்லை. உங்களோட அம்மா ராதா இரண்டாவது பிரசவத்துக்காக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்த நேரம் அது.
நாகா, தர்மா பிறந்து இராதா இறந்துட்டான்னு தெரியவந்ததும் என் மொத்த உலகமும் அந்த இடத்தில் உறைஞ்சு போயிடுச்சு.
எனக்கு அப்ப இருந்த கவலையில் நான் யாரைப் பத்தியும் யோசிக்கல. உங்க அம்மாவோட இழப்பில் இருந்து வெளியே வர கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் ஆச்சு.
இந்த நேரத்தில் தான், காமராஜ் ஒரு பையனை தத்தெடுத்து இருக்கிறதா என்கிட்ட கொண்டு வந்து காட்டினான். அவன் தான் அரசு.” என்று நிறுத்த, ராஜ் சகோதரர்களுக்குக் கோபம் வந்தது. தெய்வா கை முஷ்டிகளை இறுக்கிக்கொண்டான்.
“அந்த நேரத்தில் காமராஜ் நம்ம வீட்டுப் பக்கத்தில் தான் இருந்தான். அதனால் அரசு முக்கால்வாசி நேரம் இங்க தான் இருப்பான். உங்களோட தான் விளையாடுவான். அது பிடிக்காம காமராஜ் வேலையை வேறு இடத்தில் தேடிக்கிட்டு தள்ளி போயிட்டான். இப்படியே சில வருஷம் போச்சு.
ஒருநாள் காமராஜ், பொற்கொடி இரண்டு பேருக்கும் விபத்து நடந்ததா கேள்விப்பட்டு அவங்களைப் பார்க்க போனேன். நான் போறதுக்கு முன்னாடியே பொற்கொடி இறந்து போயிட்டாங்க. காமராஜ் உயிரைக் கையில புடிச்சிகிட்டு இருந்தான்.
சாகுற நேரத்தில் தான் அரசு எப்படி அவங்க கிட்ட வந்தாங்கிற உண்மையை என்கிட்ட சொன்னான்.
எனக்குப் பயங்கர அதிர்ச்சி தான். இருந்தாலும் சாகுற நிலைமையில் இருக்கிற அவன் மேல கோவப்பட எனக்கு மனசு வரல.” என்க, சலிப்பாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் ராஜ் சகோதரர்கள்.
“வடிவேலு உனக்கு ரொம்ப பெரிய பாவம் பண்ணிட்டேன். அதுக்கு ஏத்த தண்டனையை கடவுள் எனக்கு கொடுத்துட்டான். இந்த நேரத்தில் இதை உன்கிட்ட கேட்கிறது தப்பு தான். ஆனா இதைத் தவிர எனக்கு வேற வழியில்லை. அரசுவை உன்னோட முழு மனசோட எனக்கு தத்துக் கொடுக்கிறியா.
அவன் எங்களோட பையனா எங்களுக்கு இறுதி காரியம் பண்ணனும். அது தான் எங்களோட கடைசி ஆசைன்னு சொன்னான்.” என்க, கோபத்தில் இரண்டடி முன்னால் வந்துவிட்டான் தெய்வா. அவனை இழுத்துப் பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான் செல்வா.
“ஒரு கண்ணில் சாவு பயத்தையும், இன்னொரு கண்ணில் குற்றவுணர்ச்சியும் நிறைஞ்சிருக்க அவன் என்கிட்ட அப்படிக் கேட்டப்ப என்னால் முடியாதுன்னு சொல்ல முடியல. நான் கஷ்டப்பட்ட காலத்தில் எத்தனையோ உதவிகள் செய்திருக்கான். அந்த நன்றிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை மன்னிக்கச் சொல்லி என்கிட்ட கேட்டுக்கிச்சு.
மனசை ஒருநிலைப்படுத்தி, ‘நீ குழந்தையை திருடினதா நினைக்காத, நான் இந்த நிமிஷம் என்னோட முழு சம்மதத்தோட என்னோட பையன் அரசுவை உனக்கு தத்துக் கொடுக்குறேன்னு’ சொன்னேன். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தோடவே இறந்தும் போயிட்டான்.
அதுக்கு அப்புறம் அரசு நம்ம வீட்டுக்கு வந்தான். என்னால அவன் மேல அளவுக்கு அதிகமா பாசம் வைக்க முடிஞ்சது. ஆனா அவனை என்னோட சொந்த பயனா ஆக்கிக்க முடியல. அதுக்கான முயற்சியும் நான் எடுக்கல. அவன் என் ப்ரெண்டோட பையனாகவே இருக்கட்டும் னு முடிவு பண்ணிட்டேன்.” என்று தன் பக்க கதையை சொல்லி முடித்தார் வடிவேலு.
“அப்பா நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க. நீங்க உங்க ப்ரண்டுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தீங்கன்னா அது அவர் உயிரோடு இருக்கும் போது. இப்ப தான் அப்படி ஒருத்தர் இல்லவே இல்லையே. கூடவே அவர் ஒன்னும் இந்த உண்மை அரசுவுக்குத் தெரியக்கூடாதுன்னும் சொல்லலையே.
இன்னும் நாம ஏன் அரசுவை யாரோ ஒருத்தர் மாதிரி நடத்தணும். அவன் நம்மளோட ரத்தம் பா. அவனைத் தனியா நிக்க வைச்சு பார்க்க உங்களுக்கு எப்படி மனசு வருது.” கோபமாய் கேட்டான் தெய்வா.
“நாங்க நாலு பேரும் ஒத்துமையை இருக்கும் போதே இவ்வளவு சந்தோஷமா இருக்கே. அரசுவும் எங்களோட சேர்ந்தா நினைச்சுப் பார்க்கவே ரொம்ப தித்திப்பா இருக்குப்பா. இந்த உண்மையை அரசுகிட்ட சொல்லலாம்.” என்றான் நாகா.
தேனிலவு வந்து கொண்டிருந்த நேரத்தில், “இந்த உண்மையை எப்பவும் அவங்க கிட்ட சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு அறிவு.” என்று மனைவியின் முன்னால் உள்ளங்கையை நீட்டிக்கொண்டிருந்தான் அரசு.
“நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறதால நான் உங்களுக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.
நீங்க அவங்களோட தம்பின்னு தெரியாமலேயே அந்த நாலு பேரும் உங்க மேல இவ்வளவு பாசமா இருக்காங்களே. உண்மை தெரிஞ்சா அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க.” நியாயமான கேள்வி எழுப்பினாள் அறிவு.
“அவங்க சந்தோஷப்படுவாங்க தான் நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அதே நேரத்தில் என்னோட அப்பா அம்மாவை தப்பா நினைப்பாங்களே.” சொன்ன அரசுவிற்கு தன் பக்க நியாயம் தன் மனைவிக்குப் புரியுமா என்கிற வேதனை இருந்தது உண்மை.
“அவங்க ஒன்னும் நிரபராதிகளை தப்பா நினைக்கப் போறதில்லையே. என்ன தான் இருந்தாலும் உங்களோட அப்பா, அம்மா அவங்க இப்போ தெய்வமாவே இருந்தாலும் அவங்க பண்ணது தப்பு தானே.” அறிவு கேட்டுவிட அரசுவிற்கு அவள் மேல் கோவப்படத் தோன்றவில்லை.
“எல்லாருடைய பாசத்திலும் ஒரு சுயநலம் இருக்கும். அந்த சுயநலம் தான் எனக்கும் இருக்கு. எப்பவுமே பெத்த பாசமா வளர்த்த பாசமான்னு போட்டி வைச்சா வளர்த்த பாசம் தான் ஜெயிக்கும். அதுக்காக பெத்தவங்க மேல பாசம் இல்லன்னு ஆகிடாது.” என்று நியாயம் பேசினான் அரசு.
“நீங்க சொல்றது எல்லாமே சரிதான். ஆனா என்னோட கேள்வி ஒன்னே ஒன்னு தான். இறந்தவங்களைப் பத்தி நினைச்சுகிட்டு வாழ்றவங்களை ஏன் காயப்படுத்தனும்.” கேட்டே விட்டாள் அறிவு.
“நீ கேட்கிற கேள்வி சரிதான். ஆனா செத்துப் போயிட்டாங்க என்பதற்காக அவங்களுக்குக் கொடுத்த சத்தியத்தை காப்பாத்த தேவையில்லைன்னு ஆகிடாதே.
அது மட்டும் இல்ல, எனக்குள்ள ஒரு சின்ன பயம் இருக்கு. இப்போ போய் நான் உங்க தம்பி அதனால தான் உங்களுக்கு இத்தனையும் பண்ணேன்னு சொன்னா என்னோட தரம் அங்க தாழ்ந்து போயிடாது.” அரசுவின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அறிவிற்குத் தெரியவில்லை.
ஆளாளுக்கு ஒவ்வொன்றை நினைத்துக்கொண்டு தவிப்பில் ஆழ்ந்திருந்தனர் இராதாவின் மைந்தர்கள் அனைவரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பரோ சூப்பர்.